தினம் ஒரு தகவல்



நம் உடலைப் பற்றிய உண்மைகள்
  • குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
  • நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
  • நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
  • நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
  • பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
  • நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
  • நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
  • நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
  • நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
  • முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
  • மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
  • ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
  • இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
  • மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
  • ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
  • நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
  • நமது மூளை 80% நீரால் ஆனது.
  • நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
  • நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடி தான்.
  • மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
  • பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
  • மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம், கண்கள் 31 நிமிடங்கள் | மூளை 10 நிமிடங்கள் | கால்கள் 4 மணி நேரம் | தசைகள் 5 நாட்கள் | இதயம் சில நிமிடங்கள்


                                     

                                             

               கொசுவை ஈசியா விரட்டலாம்!

“டெங்கு’ வைரசை பரப்புவது, “ஏடிஸ்’ வகை கொசுக்கள் தான். இந்த கொசுக்களை ஒழித்தாலே, டெங்குவை ஒழித்து விடலாம். இந்த வகை கொசுக்கள், சாக்கடையில் வளராது; அதற்கு தேவை, சுத்தமான நீர் தான். நல்ல நீரில் மட்டுமே வளரும் என்பதால், பிளாஸ்டிக் கன்டெய்னர், ட்ரெம், பயன்படுத்தப்பட்ட டயர்கள், செல்லப் பிராணிகளுக்கு உணவு வைக்க பயன்படுத்தப்படும் கிண்ணங்கள், குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் தேங்கும் நீர், வீட்டைச் சுற்றி பாலித்தீன் பைகளில் தேங்கும் நீர் இவையெல்லாம், ஏடிஸ் கொசுக்களுக்கு கொண்டாட்டம். எனவே, இங்கெல்லாம் தண்ணீர் தேங்க விடக்கூடாது.
கொசுவை ஒழிப்பதற்கு, இயற்கையான முறையிலேயே தீர்வு உள்ளது. நொச்சி இலை, துளசி, தும்பை செடி மற்றும் பூ இவற்றை மிக்சியில் அரைத்து, 50 மி.லி., தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, வடிகட்டி அதனுடன், வேப்ப எண்ணெயை கலந்து கை, கால்களில் தடவினால், கொசு கடிக்காது.ஒரு மண் சட்டியில், தீக்கனல் போட்டு, பச்சை வேப்பிலை அல்லது இலை சருகு போட்டு, அதன் மேல், மஞ்சள் தூள் தூவி விட்டால், அதிலிருந்து வெளியேறும் புகை மூட்டம், கொசு மட்டுமின்றி, மழைக் காலத்தில் வரக்கூடிய மற்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
இந்தப் புகை, குளிர் காலத்தில் நமக்கு வரக்கூடிய மூச்சுப் பாதை கோளாறை சரி செய்யும். சூழல் கேடு ஏற்படுத்தவே செய்யாது.
கொசு ஒழிப்பிற்கு, இது ஒரு நல்ல வழி. அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தால், இதுகுறித்து, அனைவரும் கூடிப் பேசி, பொது இடத்தில், இந்த புகை மூட்டம் வைத்தால் நல்ல பலன் கொடுக்கும். தோட்டம் இருந்தால், துளசி, திருநீற்று பச்சிலை செடியை நட்டு வைக்க, கொசுக்கள் வருவது குறையும். தவிர்க்க முடியாமல், வீட்டைச் சுற்றி நீர் தேங்கினால், அதில், ஒரு தேற்றான் கொட்டையை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு, ஒரு விதை வீதம் அரைத்து கலந்து விடலாம். மஞ்சள் கிழங்கையும் அரைத்து அதில் கலக்கி விட்டால், இயற்கையான கிருமி நாசினி இது தான்.





                           

   உப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி! 


    ”கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும்’ என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, லண்டனில் வெளியாகும், “டெய்லி எக்ஸ்பிரஸ்’ என்ற பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது: “அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள், எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன’ என்பது பற்றி, மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். எலி ஒன்றின் உடலில், அடிபட்ட இடத்தில், ஊசி மூலம், உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து, உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால், வீக்கம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின. உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு, சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன. இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை. சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட, இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். கை, கால் மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால், வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது, வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது. உப்பு நீரை, ஊசி மூலம் செலுத்துதல், உப்பு நீரில் ஊற வைத்த துணியால், பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல், போன்ற எல்லா முறைகளும் வலி, வீக்கத்தைக் குறைக்கின்றன.
கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர், இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று, குளித்து நிவாரணம் பெறுவதை, பல ஆண்டுகளாக, நாம் கண்டு வருகிறோம். உண்மையில், வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது. மருத்துவத்தில் பயன்படும், “ஹைபோடோனிக்’ கரைசலில், மிகவும் குறைந்தளவு உப்பே உள்ளது. இக்கரைசலை அடிபட்ட இடத்தில் பயன்படுத்தும் போது, கடுமையான எரிச்சல் ஏற்படுவதைக் கண்டறிந்தோம். அதே சமயம், அடர்த்தியான உப்பைக் கொண்ட, “ஹைபர்டோனிக்’ கரைசல், எரிச்சல் ஏற்படாமல் மட்டுப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. உடலில் நீர்ச்சத்து குறைந்து போய், பலவீனமாக இருப்போருக்கு, “ஹைபர்டோனிக்’ கரைசல் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும். கடுமையான மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இதே கரைசலை பயன்படுத்தலாம். இவ்வாறு ஆய்வு முடிவுகள், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, ஆறுதல் அளிக்கும் தீர்வை வெளிப்படுத்தி இருக்கின்றன...~




                                      

     கொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் !


தனியார் நிறுவனங்களில், கொள்ளை லாபத்துடன் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான துறை மருத்துவத்துறை. உலக வர்த்தக ஒப்பந்தம் என்கிற போர்வையில் அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் விலைகளுக்கு ஈடாக நம் நாட்டிலும் விற்று வருகிறார்கள். நடுத்தர குடும்பத்தினரே வாங்கிட தடுமாறும் நிலையில்,கடைநிலை மக்களின் நிலைமையை கேட்கவே வேண்டாம். இந்த லட்சணத்தில் இந்த மருந்து கம்பெனிகள் நடத்தும் ஆராய்ச்சிகளுக்கு நம் மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தும் கொடுமையும் நடந்து வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இம்மாதிரியான ஆராய்ச்சிகளுக்கு ஆகும் செலவும் நோயாளிகள் தலையில் தானே விழும்.
இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடும் மல்டிநேஷனல் கம்பெனிகளுக்கு Protectionism என்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் துனை போகிறது என்றால் மிகையில்லை தனியார் நிறுவனங்கள் இப்படி தன்னிச்சையாக மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ளையடிப்பது நமது அரசுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாமல் இத் தனியார் கொள்ளைக்கு அரசும் 
உடந்தையாக இருந்து வருவது கொடுமையான கொடுமை..



மருந்துகளின் உற்பத்திச் செலவு என்று பார்த்தால் மிகக் குறைவாகவே ஆகிறது.ஆனால் அதற்கு பின் நடக்கும் சந்தைப் படுத்தும் ஆடம்பரங்கள், ஆராய்ச்சிகள், லாப நோக்கு போன்ற காரணிகள் தான் விலையை உச்சானிக் கொம்பில் கொண்டு போய் விடுகிறது. சமீப ஆண்டுகளில் மருந்து கம்பெனிகளின் அதீத வளர்ச்சியும் அவர்கள் எடுக்கும் லாபமும் இதற்கு சான்று.
ஒரு உதாரணத்திற்கு உயர் இரத்த அழுத்தத்திற்கு பயன் படும் Atenolol என்ற மருந்து, தற்போது ஒரு அட்டை 20 அல்லது 25 ரூபாயில் மருந்து கடைகளில் கிடைக்கும். அதே மருந்தினை உலக சுகாதார மையத்தின் தரக்கட்டுப்பாடுகளின் படி தயாரித்து ரூபாய் 5 க்கு ஒரு நிறுவனம் தன்னால் இயன்ற வரை ஏழைகளுக்கு வழங்கி வருகிறது. இது எப்படி சாத்தியம்? யார் அவர்கள்? அவர்களின் பின்புலம் என்ன?, அதைப் பற்றி சொல்லவே இந்த பதிவு.
லோகாஸ்ட் (Low Cost Standard Therapeutics) என்ற அந்த தனியார் டிரஸ்ட் பரோடாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றை, மிக மிக குறைந்த விலையில் தயாரித்து விற்று வருகிறது. மருந்துகள் தயாரிப்பில் சில எளிய முறைகளை பின்பற்றி அதே உலக தரத்துடன் கூடிய மருந்துகளை விற்று வருகிறது. குஜராத், மத்தியபிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டும் இந்த மருந்துகள் விநியோகிப்படுகின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இந்த மருந்துகள் போய் சேருகின்றன. குஜராத், கர்நாடகா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் டிப்போக்கள் உள்ளன. கேள்விப்படாத கிராமங்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கும் இந்த மருந்துகள் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் மருந்து கடைகளில் இதை விற்க ஒப்புதல் பெற்று, மருத்துவர்களிடமும் ஏழை நோயாளிகளுக்கு இதையே பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டு அதில் வெற்றியும் கண்டனர். இதை ஒரு தவமாக செய்து வரும் இவர்கள், இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரியும் தொழிளார்களுக்கு நல்ல கூலியையும் வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்க ஒரு அம்சம். எல்லா செலவும் போக இவர்களுக்கு 10% நிகர லாபம் நிற்கிறதாம். அப்படி இருக்கையில் நம் தனியார் நிறுவனங்கள் பார்க்கும் லாபம்?………ம்ம்ம்ம்
இதைத்தவிர, சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் லோகாயத் மெடிக்கல் சென்டர் என்ற ஒரு ஆலோசனை மையத்தை புனேவில் நிறுவி இருக்கிறார்கள். இந்த மையத்தின் பணியை கேட்டால் இப்படி கூட நம் நாட்டில் நடக்கிறதா என்று ஆச்சிரியப் பட வைக்கிறது. மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரைக்கும் இயங்கும் இந்த மையம், மருந்து பரிந்துரைத் தாளுடன் வரும் நோயாளிகளுக்கு அவர்களின் நோய் பற்றிய ஆலோசனை வழங்கி, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பற்றியும், லோகாஸ்ட் மருந்துகள் பற்றிய தகவல்களையும் வழங்கி வருகிறது. மருந்துகளை நோயாளிகள் உட்கொள்ளும் முன்னர், நோய் பற்றியும், உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய தெளிவும் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மையம்.
மாஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சில இடங்களில் மொபைல் க்ளீனிக்குகள் அமைத்து 5 அல்லது 10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி லோகாஸ்ட் மருந்துகளை வழங்கி வருகிறார்கள். இந்தியா மீது படை எடுத்து வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் படிப்பறிவில்லாத பின் தங்கிய ஏழை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, சில உயிர்க்காக்கும் அத்தியாவசிய மருந்துகளை தயாரித்து வழங்கி வருவதில் அவர்களுக்கு வாழ்வாதரமாக இருந்து வருகிறதென்றால் மிகையில்லை.
இதைப் படிக்கும் தன்னார்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனத்தார் இவர்களின் சேவையினை தமிழகத்திலும் விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் இந்த பதிவினை இட்டதன் பலனை அடைந்ததாக நினைப்பேன்.





          மனைவியைப் புரிந்து கொள்ளுங்கள்


குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்க மனைவி சொல் அப்படியே கேட்க வேண்டும் என்பது பற்றி?
ஒரு மனைவி, தன் கணவனிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள்….? விதவிதமான பட்டுப்புடவைகளா? தங்கம், வைரம் என்று நகைக் குவியலா? பெரிய பங்களா, ஏ.சி.கார் என்று ஆடம்பர விஷயங்களா….? நிறைய சம்பளமும், ஏகப்பட்ட பேங்க் பேலன்ஸும் வேண்டுமென்றா? அல்லது தன் கணவன் மன்மதன் போல் அழகாக இருக்க வேண்டுமென்றா?
இல்லவே இல்லை…! மனைவியின் எதிர்பார்ப்பே வேறு விதமானது. அவள் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள் என்று கணவன் தெரிந்து கொண்டாலே அவர்களுடைய இல்லற வாழ்க்கை இன்னும் அன்னியோன்யம் கூடியதாக அமையும்!
கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள் இவை தான்
ஆண்களே… உங்கள் மனைவியைப் புரிந்துகொள்ள இதைப் படியுங்கள்….
  • அன்பாக பிரியமாக இருங்கள்… அதுவே ஆயிரக்கணக்கான மதிப்புள்ள புடவைகள் தராத மகிழ்ச்சியைத் தரும்!.
  • மனது புண்படும்படி பேசாதீர்கள். அது உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் உள்ள பிரியத்தைக் கூட சில சமயங்களில் குறைத்துவிடக் கூடும். அது போல அடிக்கடி கோபப்படவும் செய்யாதீர்கள்.
  • சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. பல கணவன்மார்கள் இதைத்தான் பெரிய கடமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். உப்பு அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், இன்னிக்கி சமையல் சூப்பரா இருக்கு என்று முதலில் பாராட்டிவிடுங்கள். அப்புறம் மெதுவாக கொஞ்சம் உப்பைக் குறைச்சு போட்டிருக்கலாம் என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் மனைவி விஷயத்தைப் புரிந்து கொண்டு அடுத்த முறை இன்னும் சூப்பராக சமைப்பார்!
  • எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்கொடுக்கக் கூடாது. பலர் முன்னிலையில் திட்டவோ, மரியாதைக் குறைவாகவோ பேசாதீர்கள். இது உங்கள் அன்யோன்யத்தைக் குறைத்துவிடும்.
  • உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு மனைவியுடன் செல்லுங்கள். அது மனைவிக்கு நீங்கள் மரியாதை கொடுப்பதாக தோன்றச் செய்யும்.
  • எந்த ஒரு விஷயத்தையும் மனைவியுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
  • மனைவி சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். காதுக்கு வைரத்தோடு வாங்கித் தருவதைவிட சந்தோஷம் தரும் விஷயம் இது.
  • மனைவியிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நிறைய விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
  • மனைவி வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசித்துப் பாராட்டுங்கள்.
  • மாதம் ஒரு முறையாவது வெளியில் கூட்டிக் கொண்டு போங்கள். உங்கள் பேரிலுள்ள கோபம்கூட ஓடி விடும்.
  • பிள்ளைகள் படிப்பில் அக்கறை கொண்டு உதவி செய்யுங்கள். அப்படிச் செய்தால் மனைவிக்கு இன்னும் உங்கள் மீதுள்ள காதலை அதிகப்படுத்தும்.
  • இரவு விழித்து அழும் குழந்தையைப் பார்ப்பதில் உங்களுக்கு இருக்கும் அதே கஷ்டம் போலத்தான் உங்கள் மனைவிக்கும் இருக்கும். எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும்.
  • மனைவி உடல்நலம் இல்லாமல் இருக்கும் பொழுது அக்கறையுடன் உடன் இருந்து கவனியுங்கள். அவளுடைய சின்னச்சின்ன தேவைகளைப் பூர்த்தி செய்து சிறு சிறு உதவிகள் செய்தாலே அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.
  • அம்மாவிடம் காட்டும் பாசத்தை மனைவியிடமும் காட்டுங்கள். தாயளவுக்கு தாரமும் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்தான்!
  • எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டே கிளம்புங்கள். குடும்பத்தில் பல குழப்பங்களைத் தடுக்க இது உதவும்.
  • மனைவியின் பிறந்த நாளை அவரைக் கேட்காமலேயே தெரிந்து வைத்துக் கொண்டு கட்டாயம் ஏதாவது சிறு பரிசாவது வாங்கிக் கொடுங்கள். அல்லது அவளுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதை இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தும் பரிசாகக் கொடுக்கலாம்.
  • ரொம்ப முக்கியமான விஷயம் இது… மனைவியிடம் பொய் பேசாமல் இருங்கள்.
  • கடைசியாக… கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் கணவனையே மனைவி கடவுள் தனக்குத் தந்த பெரும் வரமாக நினைப்பாள்.







                                              

                    ஞாபக சக்தியை அதிகரிக்க..




    ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
    கம்ப்யூட்டரில் இருப்பது போல மனிதனுக்கும் ‘மெமரி சிப்ஸ்’கள் உள்ளன. பெரும்பாலும் இந்த நினைவுக் காப்பங்களின் வலிமையும் எண்ணிக்கையும்
    பரப்பரைத்தன்மை உடலின் ஊட்டம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன. மாவுச்சத்து வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் தாது உப்புக்கள் முதலியவையே இந்த ஊட்டத்தை நிர்ணயிக்கவல்லவை.
    மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.
    ஒரு நாளைக்குப் பத்து இலட்சம் தடவைகளுக்கு மேல் நமது சிந்தனைகளை வகைப்படுத்தும் வேலையை மூளை செய்து கொண்டிருக்கிறது. தினசரி நம் உணவில் கிடைக்கும் (எரிக்கும்) மொத்தக் கலோரியல் முப்பது சதவிகிதத்தை மூளைதான் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே வயது வித்தியாசம் இன்றி மூளை நன்கு செயல்பட வேண்டும் எனில் இனிப்பு மற்றும் மாவுச்சத்துப் பொருட்களில் உள்ள குளுகோஸில் இருந்துதான் தேவையான சக்தி தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
    இந்தச் சத்துணவில் குறைவு ஏற்படும் போது ஞாபக சக்தியிலும் சிக்கல் வந்துவிடுகிறது.
    இது மட்டுமல்ல இரத்த ஓட்டம் தேவையான ஆக்ஸிஜனை மூளைக்கு விநியோகித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதும் முக்கியமானது. தேவையான சத்துணவு கிடைக்காத போது மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது குறைந்த ஞாபகசக்தியில் குறைபாடு ஏற்படுகிறது.
    இதைத் தடுக்க சிறந்த உணவு முறையையே மருந்தைப்போல் பயன்படுத்தினால் புத்திக்கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
    ஞாபக சக்தி குறைவாக இருப்பவர்கள் பைரிடாக்ஸின் என்ற வைட்டமின் அதிகம் உள்ள பாதாம் பருப்பு சோயா பீன்ஸ் முதலியவற்றை நன்கு உணவில் சேர்க்க வேண்டும். இது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய உப்பு வகைகளை சமன் செய்து உடலை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இத்துடன் பி12 வைட்டமினை உடல் ஏற்றக் கொள்ளவும் உதவுகிறது.
    தேவையான அளவு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட பாலிக் அமிலம் அதிகம் உள்ள தண்டுக்கீரை கொண்டைக்கடலை முதலியவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம்.
    பால், தயிர் மற்றும் அசைவ உணவு வகைகளால் பி12 கிடைப்பதால் சோம்பேறித்தனம் குறையும். சைவ உணவுக்காரர்கள் பி12ஐ ஊசியாகப் போட்டுக் கொள்ளவும்.
    அரிசி கோதுமை கேழ்வரகு மேற்கண்ட உணவு வகைகளுடன் இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரிச்சம்பழம் பட்டாணி முதலியவற்றையும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் நரம்புமண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இது சிந்தித்து செயல்படுவதில் அக்கறை காட்டத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த உண்மைகளை போஸ்டனின் டப்டஸ் பல்கலைக் கழகமும் வேல்ஸின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழகமும் பல ஆண் பெண்களையும் பரிசோதனை செய்து கண்டுபிடித்தன.
    எல்லா வயதுக்காரர்களும் கூர்மையாகச் சிந்திக்க அரிசி, பருப்பு மற்றும் பழவகைகளைத் தவிர்த்துவிடாமல் உணவில் சேருங்கள்.
    ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
    ஆரஞ்சு கொய்யா திராட்சை ஆப்பிள் வாழைப்பழம் முலாம்பழம் பேரீச்சம்பழம் காரட் அன்னாசி காலிபிளவர் முட்டைக்கோஸ் பசலைக்கீரை கொத்துமல்லி, முருங்கைக்கீரை பச்சைப் பட்டாணி பால் தயிர் ஈரல் போன்ற உணவு வகைகளில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் சி இரும்புச்சத்து முதலியன ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லவை.
    இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதால் அசிட்டியல்சோலைன் என்ற பொருளை மூளை நரம்புகள் வெளியேற்றுகின்றன. இதனால் ஞாபசக்தி அதிகரிக்கிறது.
    குளுகோஸ் சாப்பிடுவது நன்று. இல்லையெனில் மாதம் ஒரு நாள் கோதுமை அல்வா சாப்பிடலாம். இதில் சோலைன் அதிகம் இருக்கிறது. ஆனால் முடிந்தவரை இயற்கை இனிப்புகளையே விரும்புங்கள். செயற்கை இனிப்புத் தேவை இல்லை. ஆக ஞாபகச் சக்தியையும் சிந்தனைத் தெளிவையும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவின் மூலம் எளிதில் அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.







       
                        


















                                                                     நேர்மை தூங்கும் நேரம்…...
       


    நாம் 62-வது குடியரசு தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடிய நேரத்தில், தேசமெங்கும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறந்த நேரத்தில், மகாராஷ்டிர மாநிலத்தில் மன்மாட் என்கிற நகரத்தில் ஒரு குடும்பம் கண்ணீரும் கம்பலையுமாக
    வருங்காலம் என்னவாகப் போகிறது என்று தெரியாமல் தங்களது விதியை நொந்து கதறிக் கொண்டிருந்தது. அது சாதாரணக் கண்ணீர் அல்ல, ஆற்றாது அழுத கண்ணீர்…
    அந்தக் குடும்பத்தின் தலைவராக இருந்த யஷ்வந்த் சோனாவானே யார் தெரியுமா? கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். அவர் செய்த தவறு என்ன தெரியுமா? நேர்மையாளராக இருந்தது. தவறைத் தட்டிக் கேட்டது. திகைக்காதீர்கள்.
    இந்திய அரசுப் பணியிலும் நிர்வாகத்திலும் நேர்மையாளராக இருந்தால் இப்படி ஒரு சோதனையை எதிர்கொள்ள நேரும் என்று சொன்னால், இந்திய ஜனநாயகம் செத்துவிட்டது என்று அரைக்கம்பத்தில் மூவர்ணப் பதாகையைப் பறக்க விட்டுவிடலாமே…
    தனது அலுவலக ஜீப்பில் பணி நிமித்தம் ஒரு உதவியாளருடனும், ஓட்டுநருடனும் பயணித்துக் கொண்டிருந்தார் கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்த யஷ்வந்த் சோனாவானே. நெடுஞ்சாலையில் ஒரு மண்ணெண்ணெய் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருப்பதையும், அதிலிருந்து சிலர் மண்ணெண்ணெயைத் திருடுவதையும் பார்த்த அவர் தனது ஜீப்பை நிறுத்தித் திருடுபவர்களைத் தனது செல்பேசியில் படம்பிடித்தார். திருட்டுக் கும்பல் ஓடி மறைந்தது.
    தனது ஜீப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் சோனாவானே. ஐந்தாறு மோட்டார் சைக்கிள்களில் சிலர் திடீரென்று விரைந்து வந்தனர். அவர்கள் வந்த வேகத்தைப் பார்த்துப் பயந்து சோனாவானேவின் உதவியாளரும், ஓட்டுநரும் ஓட்டம் பிடித்தனர். வருபவர்கள் யார் என்று அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ? அகப்பட்டுக்கொண்ட சோனாவானே அடித்துத் துவைக்கப்பட்டார். டேங்கர் லாரியிலிருந்த மண்ணெண்ணெய் அவர்மீது ஊற்றப்பட்டது. அந்த நேர்மையான கூடுதல் ஆட்சியர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.
    இப்படி நேர்மைக்குத் தண்டனை வழங்கி எக்காளமிட்டது யார் தெரியுமா? பொப்பட் ஷிண்டே என்று காவல்துறையால் அடையாளம் கண்டு இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர். இந்தக் கைதுகூட எதனால் நடந்தது தெரியுமா? மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 80,000-க்கும் அதிகமான கெஜட்டட் அதிகாரிகள் யஷ்வந்த் சோனாவானேயின் கொலைக்குக் காரணமானவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரி வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டதால்தான்.
    பொப்பட் ஷிண்டே மீதான முதல் குற்றச்சாட்டு அல்ல இது. பல ஆண்டுகளாகவே இதுபோன்ற பெட்ரோல், மண்ணெண்ணெய் திருட்டுகள் மன்மாட் பகுதியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சமூக விரோதிகளின் கைப்பாவைகளாக காவல்துறை மட்டுமல்ல, உள்ளூர் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் என்று எல்லோருமே இயங்கி வரும் சூழ்நிலை. இந்தச் சமூகவிரோதக் கும்பலுடன் ஒத்துழைக்காத காவல்துறை அதிகாரிகள் நடுத்தெருவில் நாயை அடிப்பதுபோல அடிக்கப்பட்ட சம்பவங்கள் இப்போது பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.
    பெட்ரோல், மண்ணெண்ணெய் கடத்தல், திருடுதல், கலப்படம் செய்தல் என்பது மகாராஷ்டிரத்தில் மட்டும் நடப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளனவோ, எங்கெல்லாம் எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இது நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஈடுபடும் சமூக விரோதிகள் இப்போது கோடீஸ்வரர்கள் என்பது மட்டுமல்ல, தொண்டு நிறுவனத் தலைவர்களாகவும், கல்வி நிறுவனங்களின் தலைவர்களாகவும் தங்களுக்கு யோக்கிய முலாம் பூசிக்கொண்டு உலா வருகிறார்கள் என்பதும் நிஜம்.
    நமது தமிழகத்திலேயே, சென்னையில், பெட்ரோலியக் கலப்படத்துக்காகக் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டு, சிபிஐ வழக்குப் பதிவு செய்தும்கூட எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. பெட்ரோலிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளில் சிலரே இந்தக் கடத்தல் கலப்பட சமூக விரோதக் கும்பலுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக இருக்கும்போது, யார் இதைத் தடுப்பது? இதனால் ஏற்படும் இழப்புக்கு சாதாரண பொதுஜனம் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் அதிக விலை கொடுத்து ஈடுகட்டுவதைத் தவிர, வேறு வழிதான் என்ன?
    மன்மாட் நகரில் நேர்மைக்காக உயிர்த் தியாகம் செய்திருக்கும் யஷ்வந்த் சோனாவானேயைப்போல பலர் ரத்தம் சிந்தியும்கூட, சமூகவிரோதிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லையே. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரியான சத்யேந்திர துபே 2003-ல் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதற்காக பிகாரில் கொல்லப்பட்டார். உத்தரப் பிரதேசத்தில் கலப்படப் பெட்ரோல் விற்றதற்காக இரண்டு பெட்ரோல் பங்குகளை சீல் வைக்கச் செய்தமஞ்சுநாத் என்கிற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி 2005-ல் கொல்லப்பட்டார்.
    நமது தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், ஏ.ஆர். வெங்கடேசன், ஜி. புண்ணியகோடி என்ற இரண்டு தாசில்தார்களும், ஆர். சண்முக சுந்தரம் என்கிற வருவாய் ஆய்வாளரும் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றபோது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொல்லப்படவில்லையா? நாங்குநேரியில் தாசில்தார் எஸ். நடராஜன், மணல் கடத்தி வந்த லாரியைத் தடுக்க முயன்றபோது, லாரியால் மோதப்பட்டு இப்போது சக்கர நாற்காலியில் தள்ளப்பட்டிருக்கும் அவலம் அரங்கேறவில்லையா?
    நேர்மையாளர்களையும், ஊழலுக்கும் அநீதிக்கும் எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் காப்பாற்ற வேண்டிய, காவல்துறையும் அரசும், சமூகவிரோதிகளுடன் கைகோத்துக் கொண்டு செயல்படும் இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்திய ஜனநாயகத்துக்கே முற்றுப்புள்ளி விழுந்துவிடும்!
    நன்றி: தினமணி



Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!