அலட்சியமாக கருதப்படும் பாவங்கள்!

ஓர் உயிரினத்தைக் கொலை செய்தல் பாவம்.
ஓர் உயிரினத்தைக் கொடுமைப்படுத்துதல் பாவம்.
ஒருவன் மற்றொருவனுக்குத் தீங்கிழைத்தல் பாவம்.
உலகவாழ் மக்கள் பாவம் என்பதற்கு மேற்கண்டவாறு விளக்கம் அளிக்கின்றனர்.

பாவச்செயல் என்பதற்கு உலகிலுள்ள பெரும்பாலும் மற்ற மதங்கள் கொடுக்கும் விளக்கமும் இவ்வாறே உள்ளது.
ஒரு மனிதனுக்கோ அல்லது மற்ற உயிரினங்களுக்கோ தீங்கிழைத்தல் பாவம் என்பதை மற்ற மதங்கள் கூறுவதை விட இஸ்லாம் மிகத்தெளிவாகவே கூறி இருக்கிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், நான் கேட்டதற்கு, ''நல்ல ஒழுக்கமே நன்மை எனப்படும். பாவம் என்பது உன்னுடைய மனம் அச்சுறுத்துவதும், மக்களிடம் அதை வெளியாக்குவதை நீ வெறுப்பதுமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு ஸம்ஆன்(ரலி) நூல்: முஸ்லிம்

மேலும் இது மட்டுமே பாவம் என்று கூறிமுடித்துக் கொள்ளாமல், மனிதனுடைய அறிவை மழுங்கடிக்கக் கூடிய, மனிதனுடைய அறிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைச் செயல்கள் அனைத்தையும் பாவம் என்றே இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் இறைவன் வெறுக்கின்ற அனைத்துச் செயல்களும் பாவம்
என்பதே இஸ்லாமியத் தீர்வு.
 "பொய்"
பொய் மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் தீமை.பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு பொய் மனித குலத்தால் கடைபிடிக்கப்படுகின்றது. வியாபாரத்தில், அமானிதத்தைப் பேணுவதில், வாக்குறுதியை காப்பாற்றுவதில், தன்னை மிகைப்படுத்திக் கொள்வதில், ஆற்ற வேண்டிய காரியத்தில் பொய்கள் தாராளமாக பேசப்பட்டு வருகின்றன இஸ்லாமும் மற்றைய எல்லா மதங்களும் பொய்ப் பேசுவது தவறு என்று அறிவுரை வழங்கிய போதும் பேசப்பழகிய குழந்தைகள் முதல் இறப்பின் விளிம்பில் இருக்கும் வயோதிகர் வரை பொய் பேசுகிறார்கள். வாய்மை பேசுபவரைக் கண்டால் இவருக்கு என்ன பெரிய அரிச்சந்திரன் என்ற நினைப்போ என்று ஏளனம் செய்யும் அளவிற்கு மனித சமூகம் சென்றுவிட்டது.
இஸ்லாத்தை கொள்கையாகக் கொண்ட முஸ்லிம்களும் இந்த தீமைக்கு விதி விலக்கல்ல.
இஸ்லாம் பொய் பேசுபவர்களுக்கு செய்யும் எச்சரிக்கையும் உண்மை பேசுவதற்கு மனித குலத்திற்கு செய்யும் அறிவுரையும் கீழே காண்போம்!

.                                      يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مع  الصادقين 
 நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் இன்னும் நீங்கள் உண்மை பேசக்கூடியவர்களாக ஆகிவிடுங்கள்.(அல்குர்ஆன் 9:119)

                                                  فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
அன்றைய தினம் பொய்யர்களுக்கு கேடுதான்(52:11)

فعن عبد الله بن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال :
(إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي
إِلَى الْجَنَّةِ ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ
صِدِّيقًا . وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ ، وَإِنَّ
الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ
حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا) رواه البخاري (6094) ومسلم
(2607) .

நீங்கள் உண்மையைக் கடைபிடியுங்கள் ஏனெனில் உண்மையானது நன்மையின் பக்கம் இட்டுச் செல்கிறது. நன்மையோ சுவர்க்கத்தின்பால் இட்டுச் செல்லக் கூடியதாயிருக்கிறது. ஒருவர் உண்மை பேசிக்கொண்டும், உண்மைக்காகப் பெரும் முயற்சி செய்துகொண்டும் இருப்பார். அதன் பயனாக அல்லாஹ்விடம் சித்தீக் சிறந்த வாய்மையாளர் என்று பதிவு செய்யப்பட்டுவிடுகிறார். மேலும் உங்களுக்கு பொய்யை எச்சரிக்கிறேன். ஏனெனில் பொய்யானது பாவத்தின் பக்கம் இட்டுச் செல்கிறது. பாவமோ நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லக்கூடியதாயிருக்கிறது. ஒருவன் பொய் பேசிக்கொண்டும் அதற்காக பிரயத்தனை செய்து கொண்டுமிருந்து இறுதியாக அல்லாஹ்விடம் பொய்யன் என்பதாக பதிவு செய்யப்பட்டு விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு மஸ்வூத்(ரழி) புகாரி,முஸ்லிம்)

قال النبي صلى الله عليه وسلم: "وإيّاكم والكذِبَ، فإنّ الكَذِبَ يَهْدِي
إلَى الفُجُورِ، وإِنّ الفُجُورَ يَهْدِي إِلَى النّارِ وَمَا يزَالُ
العبْدُ يَكْذِبُ وَيَتَحَرّى الكَذِبَ حَتّى يُكْتَبَ عِنْدَ الله
كَذّابا".[رواه البخاري ومسلم].
குழந்தைகளிடம் கூட பொய் சொல்லக்கூடாது:
இன்று நம்மில் பலர் சர்வ சாதாரணமாக குழந்தைகளிடம் விளையாட்டாகப் பொய் பேசுகிறோம். நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் இரு வானவர்களால் பதிவு செய்யப் படுகிறது என்பதை மறந்து விடுகிறோம். இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் நாம் குழந்தைகளிடம் விளையாடுவதற்காக பொய் கூறும்போது நம் வாயிலிருந்து வெளிவந்த வார்தைகளை பொய் என்று நம் நன்மை/தீமை பட்டியலிலே பதிக்கப்பட்டு விடுகிறது. இதை குறித்து நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஆமிர்( ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- ஒருநாள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வா' நான் உனக்கு ஒன்று தருகிறேன், என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன், என்று கூறினார்கள். (அதற்கு) நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள், என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிடப் படும், என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:அபூதாவூத்,
சம்பிரதாயத்திற்காக பொய் சொல்வதும், சம்பிரதாயத்திற்காக ஒருவரை
விருந்துக்கு அழைப்பதும் , சம்பிரதாயத்திற்காக அழைக்கப்பட்டவர்
மறுப்பதும் பொய் தான். இத்தகைய பொய்யையே இஸ்லாம்
அனுமதிக்கவில்லையென்றால் வியாபாராத்திலும் உத்தியோகத்திலும் இன்ன பிற கொடுக்கல் வாங்கலிலும் பொய் சொல்வதின் நிலை என்ன என்பதை முஸ்லிமாகிய நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

 ஒரு முறை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பால் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் எங்களிடம் சாப்பிடும்படி கூறினார்கள்.அதற்கு நாங்கள் எங்களுக்கு விருப்பமில்லை என்றோம்.அதற்கு அவர்கள் நீங்கள் பசியையும், பொய்யையும் சேர்த்துக் கூறாதீர்கள் என்றார்கள். (அஸ்மா பின்து யஜீத்(ரழியல்லாஹு அன்ஹு) இப்னு மாஜா)

விளையாட்டுக்காக நகைச்சுவைக்காகப்  பொய் யாரையும் பாதிக்காத வகையில் நண்பர்களுக்கிடையில் விளையாட்டாக பொய் பேசலாம் என்று நம்மில் சிலர் எண்ணுகின்றனர், ஆனால் இது தவறாகும், சத்திய
இஸ்லாத்தில் விளையாட்டுக்காக பொய் பேசுவது கூட தடைசெய்யப்பட்டுள்ளது. .

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
-'
يْلٌ لِلّذِي يُحَدّثُ فَيَكْذِبُ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ، وَيْلٌ
لَهُ، وَيْلٌ لَهُ". [رواه أحمد وأبو داود والترمذي وحسَّنه].
மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும்,
கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா ரழியல்லாஹு அன்ஹு
ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)

அடுத்தவனை மகிழ்விப்பற்காக பொய் சொல்பவன் அழிந்து போகட்டும்
என்றார்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள். -( திர்மிதீ,
அபூதாவூத், அஹ்மத்)
. உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள், விளையாட்டுக்காக பொய்
பேசுவதை நிறுத்தும் வரையில் உண்மையான ஈமான் (இறை நம்மிக்கை) ஏற்படாது.
ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா
 நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: – 'நான்
நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை'
என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
உமர் (ரழியல்லாஹு அன்ஹு) ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்)
அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக
பேசுகிறீர்களே' (என்று கூறினார்கள்) அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள் 'ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்' என்று
கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி;.

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘தான் உண்மையான
கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு
சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான்
பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக்
கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான்
பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு
சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்)
பொறுப்பேற்கின்றேன்.’ அறிவிப்பாளர் : அபூஉமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ
(அபூதாவூத்)
+பொய் பேசுவது நயவஞ்சகனின் குணம்:
فإن الكذب في الحديث من علامات النفاق: "آيَةُ المُنافِقِ ثَلاثٌ: إذَا
حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أخْلَفَ، وَإِذَا ائْتُمِنَ خانَ".
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: -
முனாபிஃக்கின் அடையாளம் மூன்று:
பேசினால் பொய் பேசுவான்,
வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான்
நம்பினால் மோசம் செய்வான்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.
فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَىٰ يَوْمِ يَلْقَوْنَهُ
بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ
அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள்
பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில்
தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.
(அல்-குர்ஆன் 9:77)

வியாபாரத்தில் பொய்:
 ஒருவர் உணவுப் பொருள் விற்றுக் கொண்டிருக்கும்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள் அவரிடம் சென்று நீர் எப்படி விற்கிறீர் என்று கேட்க
அதற்கு அவர்(சரியாக) விற்கிறேன் என்று பதில் கூறினார்.அப்போது அவர்
உணவுப் பொருளுக்குள் கையை ஓட்டிப் பார்க்கும்படி நபி(ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது. உடனே தமது கையை அதில்
ஓட்டிப்பார்த்தபோது , உள்ளே ஈரமாக இருந்தது. அப்போது நபி(ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம) அவர்கள் பிறருக்கு மோசடி செய்பவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல
என்றார்கள்.         (அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு) அபூதாவூத்)
 இறைத் தூதர்( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்'
'விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்
கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத்
தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்)
அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின்
வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!' (நூல் : புஹாரி).
    நாம் நினைப்பது போல் இல்லாமல் உண்மை பேசினால் வியாபாரத்தில்
அபிவிருத்தி உண்டாகும் என்பது நபி (ஸல்) அவர்களின் அன்றைய காலத்தில்
மட்டுமல்லாமல் இன்றைய நவீன காலத்திலும் நாம் காணும் உண்மை நிலை. இன்ன
கம்பெனியின் தயாரிப்பு என்றால் விலையைப் பற்றி கவலைப் படாமல்
வாங்கக்கூடிய மக்கள் ஏராளம் .அத்தகைய கம்பெனிகள் பல ஆண்டுகளுக்கு
செழித்து வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் வாங்கும் பொருட்களில்
ஏமாற்றியவனை அடப்பாவி ஏமாற்றி விட்டானே 1 ரூபாய் 2 ரூபாய் கூட
கேட்டிருந்தாலாவது கொடுத்திருப்பேனே! இப்படி தரம் கெட்ட பொருளை பொய்
சொல்லி நம் தலையில் கட்டி விட்டானே என்று வருந்தும் மக்கள் பலர்
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: தான் விரும்புவதை தன்னுடைய
சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவன் உண்மையுள்ள விசுவாசியாக ஆகமுடியாது.
               அனஸ் (ரழி) புகாரி,முஸ்லிம்)
மூவர் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டார்கள்:
மூவரிடம் கியாமத் நாளையில் அல்லாஹ் பேசமாட்டான் அவர்களின் பக்கம்
கிருபையோடு பார்க்கவும் மாட்டான். அவர்களை பரிசுத்தப் படுத்தவும்
மாட்டான். மேலும் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு என்று
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்(ரலி) அவர்கள்
(அப்படியாயின்) நாசமடைந்து மோசம் போய் விடுவார்கள் என்று
கூறிவிட்டு,அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யாவர்? என்று கேட்டார்கள்.
1.இடுப்பில் அணியும் வேஷ்டி, கால்சட்டை முதலியவற்றை பெருமை என்ற
அடிப்படையில் கரண்டை மொழிக்கும் கீழ் பூமியில் இழுபடும் வகையில் அணிந்து
கொண்டிருப்பவர்.
2, தாம் கொடுத்த தானத்தைப் பிறரிடம்சொல்லிக் காட்டுவர்,
3, பொய் சத்தியம் செய்து தமது வியாபாரப் பொருள்களை விநியோகிப்பவர் என்று
கூறினார்கள். (அபூதர்(ரலி), முஸ்லிம்)
ஆக முஸ்லிம் சமுதாயம் வாய்மைமிக்க சமுதாயமாக விளங்க வேண்டும் என்று
அல்லாஹ்வாலும் அவன் அனுப்பிய தூதர் முஹம்மத் நபி  (ஸல்) அவர்களாலும்
விரும்பப்படுகின்றது. ஆனால் இன்று வாய்மை எல்லா துறைகளிலும்
புறக்கணிக்கப்படுகின்றது. அது வியாபாரம், அலுவலகம்,ஆட்சி அதிகாரத்திலும்
மட்டுமல்லாமல் மார்க்கத்துறையிலும் புறக்கணிக்கப்படுகின்றது

புகழ்வதில் பொய்:
கஞ்சனை பிரபு என்றும் சில்லரை தர்மம் செய்தவனை சீதக்காதி என்றும் கோழையை
வீரன் என்றெல்லாம் புகழ்வது. ஆட்சியில் உள்ளவர்களை புகழ்வதைப்பற்றி
சொல்லத் தேவையில்லை. மாண்பில்லாத மானமில்லாத அரசியல்வாதிகளை மாண்புமிகு
என்று அடைமொழி இட்டு அழைக்காதவர்கள் இல்லை. இதுதான் அவர்களை புகழ்வதில்
மிகவும் சாதாரண தரம்.
  பணக்காரர்களை புகழ்வதிலும் எல்லை இல்லை. பணக்காரர்கள் அவர்களின் கடமையை
நிறைவேற்றும் வகையில் ஏழைகளுக்கு உதவ அவர்களை அவர்கள் முன்னிலையிலேயே
உங்களை விட்டால் இப்படிப்பட்ட உதவி செய்ய உலகில்யாரும் இலர் நீங்கள் தான்
இறை இல்லக் கொடை வள்ளல் என்றெல்லாம் நல்ல காரியம் செய்பவர்களை
அளவுக்கதிகமாக புகழ்வதால் அவர்களையும் அறியாமல் அவர்களிடம் ஆணவம்
வந்துவிட நாம்தான் காரணமாகி விடுகின்றோம். அதனால்தான் நபி (…ல்) அவர்கள்
கூறினார்கள்:
  ஒரு ஸஹாபி இன்னொரு ஸஹாபியை புகழ்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் நீர்
உம்முடைய சகோதரரின் தலையைக் கொய்துவிட்டீர் என்றார்கள். நேரடியாக
அளவுக்கதிகமாக புகழ்வது அவனை கொலை செய்வதற்கு சமம்
.(அபூபக்ரா ரலி புகாரி,முஸ்லிம்)
  மேலும் யாராவது உங்களை புகழ்ந்தால் அவன் முகத்தில் மண்ணை அள்ளி
வீசுங்கள் என்றார்கள் நபி(ஸல்) அவர்கள்.(மிக்காத்பின் அஸ்வத்-முஸ்லிம்)
    ஆக தவரான புகழ்ச்சி மனிதனை அழித்துவிடும். புகழும்போது நிதானம் தேவை
உள்ளதைச் சொல்ல வேண்டும். அந்த மனிதரையும் அவருக்கு இந்த நல்ல மனதை தந்த
இறைவனையும் புகழ்வதுதான் நபிவழியாகும்.
   சாட்சி சொல்வதிலும் பொய்:
    ஈமான் கொண்டவர்களே நீதியை நிலை நிருத்துவதில் இறைவனுக்கு உறுதியான
சாட்சியாக இருங்கள்- அது உங்களுக்கோ பெற்றோருக்கோ உறவினர்கோ
பிடித்தவர்களுக்கோ எதிராக இருந்தாலும் சரியே.(4:135)
   இறைவன் கூறுகிறான். நீங்கள் ஊண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்.
உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.(2:42)
 ஒரு விஷயத்தில் ஒருவருடைய சாட்சி தேவை ஆனால் அவரோ நமக்கேன் வம்பு என்று
மௌனமாக இருப்பதோ அல்லது நமக்கு வேண்டப்பட்டவராயிற்றே அவருக்கு எதிராக
சொல்ல வேண்டிவரும் என்பதால் மௌனமாக இருப்பதும் பொய் தான். பொய்யான
சாட்சியைப் போன்று உண்மை சாட்சியை மறைப்பதும் தவறுதான். ஏனெனில்
நிரபராதி தண்டிக்கப்பட்டு குற்றவாளி விடுதலை ஆக்கப்படுவதற்கும் நாம் தான்
காரணமாக இருக்கின்றோம்.அது போன்றே நமக்கு பிடிக்காதவர்களுக்கு எதிராகப்
பொய் சாட்சி சொல்வது அநீதி .ஆக ஒரு முஸ்லிம் எந்த ஒரு முஸ்லிம்
எந்தவொரு விஷயத்திலும் உண்மையைத்தான் உரைக்கவேண்டும் நீதிக்குத்தான்
துணை போக வேண்டும். முஸ்லிமிடம் எல்லா விஷயங்களுக்கும் இஸ்லாம்
வாய்மையைத்தான் எதிர்ப்பார்க்கிறது.
பொய் சத்தியம் செய்தல்
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! பெரும்
பாவங்கள் எவை?" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், "இறைவனுக்கு இணை
கற்பிப்பது" என்றார்கள். அவர், "பிறகு எது?" என்றார். நபி(ஸல்) அவர்கள்,
"பிறகு தாய் தந்தையரின் மனத்தைப் புண்படுத்துவது" என்றார்கள். அவர்,
"பிறகு எது?" எனக் கேட்க நபி(ஸல்) அவர்கள், "பொய் சத்தியம் என்றால்
என்ன?" என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், "பொய் சொல்லி ஒரு முஸ்லிமான
மனிதரின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகச் சத்தியம் செய்வது" என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) (நூல்கள் - புகாரி 6920,
திர்மிதீ, நஸயீ, அஹ்மத், தாரிமீ).
கனவுகளில் பொய் கூறுவது: –
தாம் காணாத கணவை கண்டதாக பொய்க் கூறுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
قال عنه النبي صلى الله عليه وسلم كما في البخاري : " من تحلم بحلم لم
يره، كلف أن يعقد بين شعيرتين ولن يفعل ."
“ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர்
(மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து)
முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால்
ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும்
வேதனையும் நிற்காது.) ‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது
‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக்
காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி
ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர்
கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால்,
அவரால் உயிர் கொடுக்க முடியாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
கேட்பதையெல்லாம் கூறபவன் பொய்யன்
 நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள் 'கேட்பதையெல்லாம்
பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்'. அறிவிப்பவர்: ஹாஃபிஸ்
இப்னு ஆஸிம்( ரழியல்லாஹு அன்ஹு) ஆதாரம்:முஸ்லிம்
இங்கு முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், நம்முடைய
சகோதரர்களில் பலர் இன்றைய நவீன கால கருத்துப்பரிமாற்றுச் சாதனமான இமெயில்
வழியாக ஒரு தகவல் பெற்றால் அதன் உண்மை நிலையை அறியாமல் ஆர்வக் கோளாறினால்
அதை அப்படியே தமது நண்பர்களுக்கும், உறவினற்களுக்கும் அனுப்பி
விடுகின்றனர். இதுபோல் நமக்கு அனுப்பியவரிடம், செய்தி தவறானவையாக
இருக்கிறதே என்று கேட்டால், உடனே அவர்கள், மன்னிக்கவும், நான் இன்னும்
படிக்கவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு அனுப்பி விட்டேன் என்று
கூறுகிறார்கள்.
நம்முடைய சகோதர சகோதரிகளிடம் உல்ள இத்தகைய ஆர்வக் கோளாறுகள் மூலம்
பொய்யான செய்தி ஒன்றைப் பரப்ப முயற்சிக்கும் பொய்யன் ஒருவனுக்கு
நம்மையறியாமல் நாமும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக்
கூடாது.
பொய் பேசுபவருடைய கண்ணங்களின் சதைகள் கிழிக்கப்படும்
. சமுரா இப்னு ஜுன்தப்( ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்:-
இறைத்தூதர்( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெரும்பாலும் தம்
தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று
கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட
கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின்
தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத்
தொழுகைக்குப் பின்) நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம) அவர்கள் எங்களிடம்
(பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி,
'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள்
ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு
அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர்
(படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின்
முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத்
துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் –
பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில்
செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள்
அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப்
பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத்
திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?'
என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்'
என்றனர்.
நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக்
கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள்
என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள்
தெரிவிக்கிறோம்.
தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை
கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே!
அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச்
சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.
     அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்( ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம் :
புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
பொய் பேசுபவருடைய முகங்கள் கருத்துவிடும்:

وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ
وُجُوهُهُم مُّسْوَدَّةٌ ۚ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى
لِّلْمُتَكَبِّرِينَ
அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள்
கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர். பெருமையடித்துக்
கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
(அல்-குர்ஆன் 39:60)
பொய் பேசுவதினால் அடையும் கேடுகள்:
நெருப்பு விறகைத் திண்பது போல பொய் ஈமானை தின்று விடும் என்று நபிகளார்
எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
ஒருவன் பொய் பேசினால் அவனை விட்டும் வானவர்கள் ஒரு மைல்தூரம் விலகிச்
சென்றுவிடுகின்றனர்..அந்த பொய்யின் துர்வாடை காரணமாக.!''__( நபி (ஸல்).
கூறினார்கள்.
عن عائشة رضي الله عنها قالت : (مَا كَانَ خُلُقٌ أَبْغَضَ إِلَى
أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْكَذِبِ
 رواه أحمد في "المسند" (42/101) وصحح إسناده المحققون
முஃமின் பொய் சொல்ல மாட்டான்
'யாரசூலல்லாஹ்  ஒரு முஃமின் விபச்சாரம் செய்வானா? என்று சஹாபாக்களில்
ஒருவர் கேட்ட போது, 'செய்ய மாட்டான்' என்று சொல்லிய நபிகளார், 'ஒருவேளை
ஷைத்தானுடைய கலைப்பினால் செய்து விடுவான்' என்று கூறினார்கள். பின்பு ஒரு
முஃமின் மது அருந்துவானா? என்று கேட்ட போது, 'அருந்த மாட்டான்' என்று
சொல்லி விட்டு, ஷைத்தானுடைய ஊசாட்டத்தினால் அருந்திடுவான் என்றார்கள்.
பின்பு ஒரு முஃமின் திருடுவானா? என்று கேட்டதற்கும் அவ்விதமே பதில்
சொன்னார்கள். அதன் பிறகு ஒரு முஃமின் பொய் சொல்வானா? என்று கேட்டபோது,
சொல்ல மாட்டான், சொல்ல மாட்டான், சொல்ல மாட்டான் என்று இறைத்தூதர்(
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்
  'ஒரு முஃமினிடம் எல்லாத்தீமைகளும் இருக்கலாம். ஆனால் அவனிடம் பொய்யும்,
நேர்மையின்மையையும் இருக்கக் கூடாது. (நூல்: அஹ்மத்)
நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா? என்று நாங்கள் நபி صلى الله عليه
وسلم அவர்களை வினவினோம். அதற்கு ஆம் என்றனர். கஞ்சனாக இருக்க இயலுமா?
என்று வினவினோம். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் ஆம் என்று
பதிலளித்தனர். பொய்யனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு
அவர்கள், இல்லை (இருக்க இயலாது) என்று பதிலளித்தார்கள்.
             அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் رَضِيَ اللَّهُ عَنْهُ
ஆதாரம்: முஅத்தா
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ‘நீர் உம்
சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று
கருதிக்கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும்
நம்பிக்கைத் துரோகமாகும்.’ அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ
رَضِيَ اللَّهُ عَنْهُ  (அபூதாவூத்)
பொய் பற்றி அல்குர்ஆன்:
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقً
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது- நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும்.(17:81
وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنتُمْ
تَعْلَمُونَ
 நீங்கள் உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும்
செய்யாதீர்கள்.(2:42)
قُلْ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ لَا يُفْلِحُونَ
'அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக
வெற்றி பெற மாட்டார்கள்' என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)
அனுமதிக்கப்பட்ட பொய்கள்: -
அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து
விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில்
அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, எந்த மனிதனுக்கும் ஏதாவது
ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்
பொய் அனுமதிக்கப் பட்டதாகும்.
நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அஸ்மா பிந்த் யஜித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்: –
سمعت رسول الله يرخص فى شئ من الكذب إلا قى ثلاث: الرجل يقول القول يريد
به الصلاح، والرجل يقول القول فى الحرب، والرجل يحدث امرأته، والمرأة
تحدث زوجها
மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது
யுத்தத்தின் போது
மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக! (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)
وقال العز بن عبد السلام رحمه الله :الكذب مفسدة محرمة إلا أن يكون فيه
جلب مصلحة أو درء مفسدة , فيجوز تارة ويجب أخرى
இஹ்யாவில் கூறப்பட்டுள்ளது ஒரு நல்ல காரியம் நிறைவேறுவது பொய்யைக்
கொண்டும் ஆகலாம் உண்மையைக் கொண்டும் ஆகலாம் என்றிருந்தால், அந்த இடத்தில்
பொய் சொல்வது ஹராமாகும். பொய் சொல்வது கொண்டு மட்டுமே அதனை நல்லதாக்க
முடியும் என்றிருந்து அந்தக் கருமமும் நன்மையானதாக இருந்தால் அப்பொழுது
பொய் சொல்வது ஆகும்.
பொய் சொல்வது ஹராம்தான். ஆனால் சிலசமயங்களில் பொய் சொல்வது வாஜிபாகவும்
ஆகிவிடும். நம்மிடமுள்ள அமானிதப் பொருளை அநியாயக்காரன் ஒருவன்
அபகரிப்பதற்காகக் கேட்கிறான். அப்பொழுது அதை வைத்துக் கொண்டு இல்லையென்று
பொய் சொல்வது வாஜிபாகும். அதற்காக சத்தியம் செய்வதும் வாஜிப்.
அல்லாஹ்வும் அவனது ரசூலும் தடுத்துள்ள மறுமையில் வெற்றியைத் தராத பொய்யை
விட்டும் நாம் தவிர்த்திருப்போம். அல்லாஹ் தௌபீக் செய்வானாக! ஆமீன்.

Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!