இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு)

அன்பிற்குரிய ஆலிம் பெருமக்களே! நமது வாட்ஸ்ஆப் வெள்ளி மேடை குருப்பில் மௌலான பரகத் பாகவி ஹழ்ரத் அவர்கள்  வெளியிட்ட  இந்த வார கட்டுரை.

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
இஸ்லாத்தின் இந்த வளர்ச்சியால் கதிகலங்கிப் போன மேற்கத்திய உலகம்
இஸ்லாத்தின் எந்தக் கொள்கையையும், கோட்பாட்டையும் குறை காண முடியவில்லை.

அவர்கள் ஏற்றிப் போற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் விட இஸ்லாம் சிறந்து
விளங்குவதால் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க முடியவில்லை. 

இஸ்லாத்தைவிமர்சித்து அதன் வளர்ச்சியைத் தடுத்திட இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கீழ்க்காணும் குற்றச்சாட்டுகளைத் தான் முன் வைக்கின்றனர்.

.இஸ்லாம் தீவிரவாதிகளை உருவாக்குகிறது.
இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது.
ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள அனுமதிக்கிறது.
மனைவியைப் பிடிக்காவிட்டால் சர்வ சாதாரணமக விவகரத்துச் செய்ய இஸ்லாம் ஆண்களூக்கு உரிமை வழங்கியுள்ளது.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதையும் இஸ்லாம் மறுக்கிறது.
பெண்களை ஹிஜாப் எனும் ஆடையால் போர்த்தி அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறது.
வாரிசுரிமைச் சட்டத்தில் ஆன்களூக்கு இரு மடங்கும் பெண்களூக்கு ஒரு
மடங்கும் என பாரபட்சம் காட்டுகிறது.
இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமானது என்று
பாரபட்சம் காட்டுகிறது.
கணவன் இறந்து விட்டால் இத்தா என்ற பெயரில் குறிபிட்ட காலம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைகிறது 
பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறி பெண்களின் அரசியல் அதிகாரத்தைலப் பறிக்கிறது.
முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில்லை.
முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதில்லை.
என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் பெண்கள் தொடர்பாக எடுத்து வைக்கப்படுகின்றன.

இவைகள் எல்லாம் பொய்யான விமர்சனங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்ற பிரச்சாரம்
தீவிரமடைந்துள்ள நிலையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.

உலகில் இன்று கூட பெண்களுக்கு வழங்க முடியாத உரிமைகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளில் ஒரு சிலவற்றை இங்கு பார்க்கலாம் பலதார மணத்தை அனுமதிப்பதற்கான காரணங்கள்
பலதார மணத்தை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியவில்லை. அப்படியே
தடுத்தாலும் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் தடுக்க முடியவில்லை
என்பதால் மட்டும் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை. மாறாக பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்திருப்பதற்கு இன்னும் பல காரணங்களும், நியாயங்களும் உள்ளன
1. பெண்களின் பிறப்பு விகிதம் குறைவு:-
இல்லற வாழ்வு மூலம் பெறப்படும் உடல் சுகம் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆண், பெண் இரு பாலருக்குமே இது இன்றியமையாத தேவையாகும். மற்ற சுகங்களைக் கூடத் தியாகம் செய்து விடுபவன் இந்த உடல் சுகத்தை எளிதில் தியாகம் செய்வதில்லை. இந்த சுகத்தைத் தரும் ஒரு பெண்ணுக்காக ஒரு ஆண் எதுவும் செய்யத் தயாராகி விடுகிறான். உற்றார் உறவினரையும், பெற்றோரையும் கூட உதறி எறிந்து விடத் துணிந்து விடுகிறான். இந்த சுகத்தைத் தருகின்ற ஆணுக்காக ஒரு பெண் எந்த
தியாகத்தையும் செய்கிறாள். சிலர் இந்த சுகத்தை அடைவதற்காக எத்தகைய இழி செயலையும் செய்யத் துணிந்து விடுவதையும் நாம் காண்கிறோம். இதை அடைவதற்கு யாராவது குறுக்கே நின்றால் அவரைக் கொலை செய்தாவது அடைய முயற்சிக்கின்றனர். உணர்வுகள் பொங்கி எழும் பருவத்தில் இந்த உடல் சுகம் கிடைக்கவில்லையானால் அத்தகையோர் மன நோயிக்கு ஆளாகி விடுவதை இரு பாலரிடமும் நாம் காண முடிகின்றது. மன நோய் நிபுணர்களும் இதை உறுதி செய்கின்றனர். மனித வாழ்வில் மிகவும் அவசியமான இந்தச் சுகம் எந்த மனிதனுக்கும் மறுக்கப்படக்
கூடாது என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இந்தச் சுகம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமானால் உலகில் ஆண்களும்,
பெண்களும் சம அளவில் பிறக்க வேண்டும். அப்போது தான் இரு பாலரும் இந்தச் சுகத்தைப் பெற இயலும். ஆனால் இந்த நிலை உலகில் இருக்கின்றதா? என்றால் பல நூற்றாண்டுகளாகவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் பிறக்கின்றார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகள் வேண்டுமானால் சில கால கட்டங்களில் இதிலிருந்து விலக்குப் பெறலாம். ஆனால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பெண்களின் பிறப்பு விகிதமே அதிகம் என்பதை எவரும் மறுக்க முடியாது. உலகில் ஆண்களின் எண்ணிக்கைக்கும், பெண்களின் எண்ணிக்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லையே! சிறிய அளவில் தானே பெண்கள் அதிகமாகவுள்ளனர் என்று நினைக்கலாம். ஆனால் திருமணத்துக்குரிய தகுதி பெற்றவர்கள் என்ற அடிப்படையையும் நாம்
சேர்த்துக் கணக்கிட வேண்டும். ஆண்கள் 25 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்யும் நிலையை அடைகிறார்கள். பெண்களோ பதினைந்து வயதிலேயே திருமணம் செய்விக்கப்படுகிறார்கள். (சட்டப்படி 18 வயது என்பதெல்லாம் ஏட்டில் உள்ளதே தவிர நாட்டில் இல்லை).
அதாவது திருமணம் செய்யும் தகுதி பெற்றவர்கள் என்று எடுத்துக் கொண்டால் பெண்களை விட ஆண்கள் பத்து வருடங்கள் பின் தங்கியுள்ளனர்.
ஒரு ஊரில் ஒரு நாளில் 25 ஆண் குழந்தைகள், 25 பெண் குழந்தைகள்
பிறக்கின்றன' என வைத்துக் கொள்வோம். பதினைந்து வருடங்கள் நிறைவடையும் போது 25 பெண்களும் திருமணத்துக்குத் தயாராக நிற்பார்கள். 25 ஆண் குழந்தைகளில் ஒருவனும் திருமணத்துக்குத் தயாராகியிருக்க மாட்டான். உடற்கூறு ரீதியாக சீக்கிரமே பெண்கள் முதிர்ச்சியடைவதால் திருமணம் செய்யும் வயதுடைய ஆண்கள், திருமணம் செய்யும் வயதுடைய பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆண்களை விடப் பெண்கள் மிக அதிகமாகவே உள்ளனர் என்பதை அறியலாம். பெண்கள் அதிகமாகவும், ஆண்கள் குறைவாகவும் உள்ள சூழ்நிலையில் கனிசமான பெண்களுக்கு இந்தச் சுகம் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது.
நொண்டி, முடம், கூன், குருடு போன்ற உடல் ஊனமுற்ற ஆண்களுக்கும், மது,
சூது, விபச்சாரம் போன்ற தீமைகளில் ஈடுபட்டு உள்ளம் ஊனமுற்ற ஆண்களுக்கும் சர்வ சாதாரணமாக மனைவியர் கிடைத்து விடுகின்றனர். அழகும், நல்லொழுக்கமும் உள்ள மங்கையர் பலர் இந்தச் சுகத்தை அடைய முடியாத நிலையில் உள்ளனர். இது பெண்களின் விகிதாச்சாரம் எந்தளவுக்கு அதிகமாகியுள்ளது என்பதற்கு நிதர்சனமான சான்று ஆகும். இந்த ஏற்றத் தாழ்வை சமன் செய்ய என்ன செய்வது?
ஆண்களும், பெண்களும் சம அளவில் பிறக்க வேண்டும். நடைமுறையில் அவ்வாறு இல்லை. சம வயதில் இருவரும் திருமணத்துக்கு உடல் ரீதியாக தயாராக வேண்டும். இது சாத்தியமில்லை. அல்லது அன்றைய அறியாமைக் கால மக்கள் செய்தது போல் உயிருடன் பெண்களைப் புதைத்து பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். மனசாட்சி உள்ள எவரும் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இதற்கு ஏதேனும் பரிகாரம் கண்டே ஆக வேண்டும். பரிகாரம் காணத் தவறினால் பல தீய விளைவுகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
மண வாழ்வை அடைய முடியாத பெண்கள் மன நோயிக்கு ஆளாவது,
அல்லது தவறான வழிகளிலேனும் அந்தச் சுகத்தை அடைந்திடத் துணிவது,
வசதியுள்ளவர்கள் தங்கள் பெண்களுக்காக மாப்பிள்ளைகளை அதிக விலை கொடுத்து வாங்குவது போன்ற பல தீய விளைவுகள் ஏற்படும்.
இந்த நிலைகளை உலகம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது.
ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் மன நோய்க்கு ஆளாவதையும், இயல்பிலேயே வெட்க உணர்வு அதிகம் பெற்றிருக்கின்ற பெண்கள் தெருவில் நின்று கொண்டு வெட்கத்தைத் துறந்து ஆண்களை அழைப்பதையும் நாம் காண்கிறோம். எனவே சில ஆண்களாவது பலதார மணம் புரிவதில் தான் மணவாழ்வு கிடைக்காமல் பெருமளவு தேங்கி நிற்கும் பெண்களுக்கு மறுவாழ்வு இருக்கிறது. பெண்களுக்கு மறுவாழ்வு இருக்கிறது.

2. ஆண்களின் இறப்பு விகிதம் அதிகம்
போர்க் களங்களும் போராட்டங்களும்!
பிறப்பு விகிதத்தைப் பொறுத்த வரை பெண்களே மிகைத்து நிற்கிறார்கள் என்றால் இறப்பு விகிதத்திலும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. இயற்கையின் சீற்றம், நோய், முதுமை போன்ற காணரங்களால் ஏற்படும் மரணத்தைப் பொறுத்த வரை சமமாகவே இறக்கின்றனர். ஆயினும் வேறு சில வழிகளில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இறப்பெய்துகின்றனர்.
மனித சமுதாயம் தோன்றியதிலிருந்து இன்று வரை பல போர்களை உலகம்
சந்தித்துள்ளது. மனிதனின் போர்க்குணம் உலகம் அழியும் வரை மாறுவதாகத்
தெரியவில்லை. இன்னும் சொல்வதென்றால் கடந்த காலத்தை விடப் போர் செய்து மனித சமுதாயத்தை அழித்தொழிப்பதில் மனிதன் மிகவும் முன்னேறியே இருக்கிறான். வாள், வேல் போன்ற ஆயுதங்களால் மட்டுமே போர் செய்து குறைந்த எண்ணிக்கையில் எதிரிகளை அழிக்கத் தெரிந்திருந்த மனிதன் இன்று ஒரு நொடிப் பொழுதில் பல்லாயிரம் எதிரிகளை அழிக்க வல்ல அணு ஆயுதங்களைத் தயார் செய்து விட்டான். கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கக் கூடிய நவீன ரக ஏவுகணைகளைக் கண்டு
பிடித்து விட்டான்.  ஒவ்வொன்றையும் அணுகுவதற்கு ஒரு நியாயமான முறை உண்டு. இந்த விஷயத்தில் உணர்வுகளுக்கு ஆளானவர்களையே நாம் கவனிக்க வேண்டும். பெண்களின் உடற்கூற்றை அறியாதவர்கள், இருவருக்கு முள்ள வித்தியாசத்தை உணராதவர்கள் தான், பலதார மணத்தைப் பாவமெனக் கருதுவர். வித்தியாசங்களை உணர்ந்து கொண்ட எவரும் இதை மறுக்கவே இயலாது. உண்மையாகவே தேவைப்படுவோருக்கு அதை அனுமதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. மாதம் தோறும் அவர்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய்க் காலத்தில் இந்த உறவை அவர்களால் விரும்ப முடியாது. அப்படியே சில பெண்களின் உள்ளம் அதை விரும்பினாலும் அந்த நேரத்தில் அவர்களின் உடல் அதற்கு ஏற்றதாக இராது. உடலும், உள்ளமும் ஏற்றதாக இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது போன்ற ஒரு 
அருவருப்பான சூழ்நிலையில் ஒரு ஆண் கிளர்ச்சியடையவும் முடியாது. அதுவும் ஏற்பட்டு விடும் என்று வைத்துக் கொண்டாலும் மருத்துவ ரீதியாகக் கூடப் பல விளைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவனது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டு அந்த உபாதையினால் அவளுடன் அவனால் உறவு கொள்ள இயலவில்லை என்றால் அவனது நிலை என்ன? சில பெண்கள் 15 நாட்கள் வரை கூட மாதவிடாய்த் தொல்லைக்கு ஆளாகி விடுவதுண்டு. இது போன்ற காலக் கட்டத்தில் மாதா மாதம் இப்படி ஒரு நிலையை அவன் எதிர்
கொள்ளும் போது அவன் என்ன செய்வான்? இத்தகையோர் குறைந்த எண்ணிக்கையினர் தானே என்று அலட்சியப் படுத்துவதா?
இவர்களைப் போன்றவர்கள் தாம் அதிக அளவில் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அழகும், இளமையும் கொண்ட மனைவியர் வீட்டிலிருந்தும் விபச்சாரத்தைச் சிலர் நாடிச் செல்லக் காரணம் இது தான். இயற்கையாக அவர்களுக்கு அமைந்திருக்கும் உணர்வுகளுக்குப் போதிய வடிகால் இல்லை. விபச்சாரத்தில் ஈடுபட்டுத் தங்கள் மனதையும், உடலையும் கெடுத்துக் கொள்வதை விட முறையாக இன்னுமொரு மனைவியை மணந்து அந்த இன்பத்தை அடைவதில் என்ன தவறு இருக்க முடியும்?
பலதார மணத்தை இவர்களைப் போன்றவர்களுக்கு அனுமதிப்பது இவர்களை மட்டும் செம்மைப்படுத்தவில்லை; இவர்களை நம்பியே தங்களின் தொழிலை நடத்துகின்ற ஒழுக்கம் கெட்ட பெண்களும் செம்மைப் படுத்தப்படுகிறார்கள். மாதவிடாய் மட்டுமின்றிக் கர்ப்ப காலம், பிரசவ காலம், மற்றும் பாலூட்டும் காலங்களில் இந்த உறவை நாடாத பெண்களும் உள்ளனர். இத்தகையவர்களை மனைவியாக அடைந்தவன் பல மாதங்கள் இந்த உறவுக்காக ஏங்கும் நிலைமையை அடைகிறான். எத்தனை மாதங்கள்
ஆனாலும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வோர் இருக்கத் தான்
செய்கிறார்கள். எனினும் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவர்களும்
இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இவ்வளவு நியாயமான காரணங்களினால் தான் பலதார மணத்தை ஆண்களுக்கு மட்டும்
இஸ்லாம் அனுமதித்திருக்கின்றது. இஸ்லாம் அகில உலகுக்கும் பொதுவான
வாழ்க்கைத் திட்டமாகவும், எல்லாத் தரப்பு மக்களுக்கும் சரியான தீர்வைக்
காட்டும் பரந்த கண்ணோட்டமுடைய மார்க்கமாகவும் இருப்பதால் எல்லாக்
காலத்திற்கும், எல்லாப் பகுதிகளுக்கும் ஏற்ற வகையில் சட்டங்களை
வழங்கியுள்ளது.

3.விவகரத்து உரிமை தலாக்!
ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை
பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சிலர் பிரச்சாரம் செய்து
வருகின்றனர். ஷாபானு வழக்குக்குப் பிறகு இந்தப் பிரச்சாரம் மேலும்
தீவிரமடைந்துள்ளதை நாம் காண்கிறோம்.

ஆணும், பெண்ணும் இல்லற இன்பத்தை அனுபவித்து, இரண்டறக் கலந்து விட்டுத் திடீரென ஆண்கள் தம் மனைவியை விவாகரத்துச் செய்து விடும் போது பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கண்கூடு. கன்னிப் பெண்களுக்கே மண வாழ்வு கிடைக்காத நிலையில் விவாக விலக்குச் செய்யப்பட்டவளுக்கு மறு வாழ்வு எப்படிக் கிடைக்கும்? அதிலும் அவள் சில குழந்தைகளைப் பெற்று அழகையும் இளமையையும் இழந்தவள் என்றால் மறு வாழ்வுக்கு வாய்ப்பே இல்லை. இது தான் தலாக் சட்டத்தை விமர்சனம் செய்வதற்குக் காரணம்.
தலாக் கூறுவதனால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதில்
எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியானால் ஏன் இதை அனுமதிக்க வேண்டும் அனுமதிக்காமலேயே இருக்கலாமே? என்ற கேள்விகள் நியாயமானவையே. அதை விட அதற்கான விடைகள் நேர்மையானவை.
தலாக்கை அனுமதிப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை? அதற்கு அனுமதி
மறுப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை? என்று இரண்டையும் எடை போட்டுப் பார்க்கும் போது, அனுமதிப்பதால் ஏற்படும் விளைவுகளை விட அதிமோசமான விளைவுகள் அனுமதிக்காவிட்டால் ஏற்பட்டு விடுகின்றன.
அனுமதிப்பதிலும் கேடுகள் உள்ளன; அனுமதி மறுப்பதிலும் கேடுகள் உள்ளன;
இரண்டில் எதைச் செய்தாலும் விளைவுகள் மோசமானவை என்ற நிலையில் எது குறைந்த தீங்குடையதோ அதை அனுமதிப்பது தான் அறிவுடைமையாகும். இந்த அறிவுப் பூர்வமான முடிவையே இஸ்லாம் உலகுக்கு வழங்கியுள்ளது.
தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஏற்படும் குறைந்த அளவிலான கேடுகளைப் பெரிதுபடுத்திப் பிரச்சாரம் செய்வோர் அந்த அதிகாரம் ஆண்களிடம் வழங்கப்படாவிட்டால் எவ்வளவு மோசமான விளைவுகள்
ஏற்படும்; ஏற்படுகின்றன என்பதைக் கவனிப்பதில்லை. இதை விரிவாகவே நாம் விளக்குவோம். ஒரு கணவனுக்குத் தன் மனைவியை ஏதோ ஒரு காரணத்துக்காகப் பிடிக்காமல் போய் விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இஸ்லாம் கூறுவது போன்ற தலாக் உரிமை வழங்கப்படாத நாட்டிலும், சமுதாயத்திலும் கணவன் தன் மனைவியிடமிருந்து
விவாக விலக்குப் பெற வேண்டுமானால் நீதிமன்றம் எனும் மூன்றாம் தரப்பை
நாடிச் சென்று அந்த மன்றம் அனுமதித்தாலே விவாக விலக்குப் பெற முடியும். நமது நாட்டிலும், மற்றும் சில நாடுகளிலும் இத்தகைய சட்டம் தான்
இருக்கிறது. நீதி மன்றத்தை அணுகித் தான் விவாகரத்துப் பெற முடியும்
என்றால் நீதிபதி நியாயம் என்று கருதக் கூடிய காரணங்களை கணவன் சொல்லியாக வேண்டும். அப்போது தான் நீதிபதி விவாகரத்துக்கு அனுமதி வழங்குவார். வாழா வெட்டியாக இருக்கும் நிலை மனைவியைப் பிடிக்காத நிலையில் 'விவாகரத்துப் பெறுவதற்காகக் காலத்தையும்,
நேரத்தையும், பொருளாதாரத்தையும் ஏன் வீணாக்க வேண்டும்' என்று எண்ணுகின்ற ஒருவன், அவனுக்குப் பிடித்தமான மற்றொருத்தியைச் சின்ன வீடாக அமைத்துக் கொள்கிறான். கட்டிய மனைவியுடன் இல் வாழ்வைத் தொடர்வதுமில்லை. அவளைப் பராமரிப்பதுமில்லை. இவன் மாத்திரம் தகாத வழியில் தன் உணர்வுகளுக்குத் தீனி போட்டுக் கொள்கிறான்.
இவள் பெயரளவுக்கு மனைவி என்று இருக்கலாமே தவிர, பிடிக்காத கணவனிடமிருந்து இல்லற சுகம் அவளுக்குக் கிடைக்காது. வாழ்க்கைச் செலவினங்களும் கூட மறுக்கப்படும். இவை மிகையான கற்பனை இல்லை. நாட்டிலே நடக்கும் உண்மை நிகழ்ச்சிகள் தாம். மனைவி என்ற உரிமையோடு இதைத் தட்டிக் கேட்டால் அடி உதைகள்! இத்தகைய அபலங்கள் ஏராளம்!
பெயரளவுக்கு மனைவி என்று இருந்து கொண்டு அவளது உணர்வுக்கும்,
தன்மானத்துக்கும், பெண்மைக்கும் சவால் விடக் கூடிய வறட்டு வாழ்க்கையை வழங்கி, அவளைச் சித்திரவதை செய்வதை விட அவனிடமிருந்து உடனடியாக விலகி சுதந்திரமாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்வது எந்த வகையில் தாழ்ந்தது? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
தலாக் அதிகாரம் இருந்தால் இந்தக் கொடூர எண்ணம் கொண்ட ஆண் அவளை விடுவித்து விடுவான். அவளுக்கும் நிம்மதி; அவள் விரும்பும் மறு வாழ்வையும் தேடிக் கொள்ளலாம். பெண்களின் மறுமணத்தை ஆதரிக்காதவர்கள் வேண்டுமானால் இந்த நிலையை எதிர்கொள்ளத் தயங்கலாம். இஸ்லாமியப் பெண் அவனிடமிருந்து விடுதலை
பெற்ற உடனேயே மறு வாழ்வை அமைத்துக் கொண்டு மகிழ்வுடன் வாழ முடியும்.

பெண்களின் விவாகரத்து உரிமை!
ஆண்களுக்கு இருப்பது போல் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு
இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிமல்லாதார் தவறாகக் கருதிக் கொண்டுள்ளனர். பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை அறியாததால் தான் அவர்கள் இவ்வாறு கருதுகின்றனர். விவாகரத்துச் செய்யும் முறையில் தான் இருவருக்குமிடையே வித்தியாசங்கள் உள்ளனவே தவிர உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் என்பாரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி 'சரி' என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம்
'தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'
என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 5273, 5277

மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.
ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு
கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிக சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து
விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.
பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழி எங்குமே காண
முடியாததாகும். இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.


4. ஹிஜாப்!
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம்
கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும்
முக்கியமானதாகத் திகழ்கின்றது.

'ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!' என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.
ஹிஜாப்' என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல.

இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக்
கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம்.ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன்
பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத்
திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம். ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும். அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண்
விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம்.

தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது. இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப்
பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற்
காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக
அனுபவித்து விட முடியாது. இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால்அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை
அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை. அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.
ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.
பெண்கள் முகத்தை மூட தேவையில்லை என்று கூறுபவர்கள் இதை சற்று பொறுமையாக படிக்கவும் ::::
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அபூ பக்கர் (ரலி) அவர்களுடைய மகள் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். "நாம் எமது முகத்தை ஆண்களை விட்டும் மூடக்கூடியவர்களாக இருந்தோம். அதற்கு
முன்பதாக இஹ்ராம் அணிந்திருக்கும் பொழுது தலையை சீவக்கூடியவர்கலாக இருந்தோம்.
(ஆதாரம் : ஹாகிம் - 1:454, இப்னு குஸைமா)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹு தஆலா முஹர்ஜிரான பெண்களுக்கு ரஹ்மத் செய்வானாக. (அவர்கள் அவர்களுடைய ஹிமார்களை கொண்டு அவர்களுடைய கழுத்திலிருந்து நெஞ்சுவரை நீளமான பகுதியின் மீது போட்டு கொள்ளட்டும்) என்ற ஆயத்தை அல்லாஹ் இறக்கியவுடன், அவர்களுடைய (மேலதிகமான) ஆடையைக் கிழித்து அதை கொண்டு முகத்தை மூடிக்கொண்டார்கள். (ஆதாரம் : புஹாரி -4758)

இப்னு மஸ்வூத்  (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸூல் (ஸல்) அவர்கள்
சொன்னார்கள். "பெண் என்றாலே அவரத்து தான் (அதாவது முழுமையாக மறைக்க பட வேண்டியவள் தான்). அவள் (வீட்டை விட்டு) வெளியானால் ஷைத்தான் அவளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்து விடுகிறான். அந்த பெண் தனது ரப்புடைய ரஹ்மத்திற்கு மிக நேருக்க மாக இருப்பதெல்லாம், அவளோ வீட்டின் மறைவான உட்பகுதியில் இருக்கும் போதுதான்.
(ஆதாரம் : திர்மிதி 1173, இப்னு ஹிப்பான் 7:446 - 5570, இப்னு குஸைமா -
1686, 1687, தபரானி - 10:122 - 10115)

உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். பெருநாள் தொழுகை
தொளுமிடத்துக்கு பெண்களையும் அனுப்பும்படி நபியவர்கள் கூறிய பொழுது,
பெண்கள் கேட்டார்கள் "யா ரசூலல்லாஹ்! எங்களின் ஜில்பாப் இல்லாதவள்..?"
(என்ன செய்வது?). அதற்கு நபியவர்கள் சொன்னார்கள், "தன் சகோதரி அவளின் ஜில்பாபை அவர்களுக்கு உடுப்பட்டட்டும்". (அதில் ஜில்பாப் என்று
வருகின்றது (ஆதாரம் : புகாரி - 351. முஸ்லிம் - 2056)முகமூடியைத்தான் நபி
அவர்களின் காலத்தில் ஜில்பாப் என்று சொல்லி இருக்கின்றார்கள்
என்பதற்குதான் ஆயிஷா நாயகி அவர்களின் கூற்றை ஆதாரமாக முன்வைத்தேன் .ஜில்பாப் என்றால் முகமூடி என்பது என்னுடைய சொந்த கருத்து இல்லை.மாறாக ஆயிஷா (ரழி) அவர்களின் கருத்து

புகாரியில் வரக்கூடிய ஆயிஷா (ரழி) அவர்களின் விடயத்தில்
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்.

அதில் அவர்களே சொல்கின்றார்கள்
فبينا أنا جالسة في منزلي غلبتني عيني فنمت، وكان صفوان بن المعطل السلمي
ثم الذكواني من وراء الجيش فأدلج فأصبح عند منزلي، فرأى سواد إنسان نائم،
فأتاني فعرفني حين رآني، وكان يراني قبل الحجاب، فاستيقظت باسترجاعه حين
عرفني، فخمرت وجهي بجلبابي،
 இதன் தமிழ் மொழி பெயர்ப்பு :-

ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமீ அத் தக்வானீ என்பவர் அங்கு இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் (அங்கே) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்தார்.
பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப்
பார்த்திருந்தார். எனவே, என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்து
கொண்டார். அவர், என்னை அறிந்து கொண்டு, 'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண்
விழித்தேன். உடனே என்னுடைய முகத்திரையால் என் முகத்தை மறைத்துக்
கொண்டேன்.இதில் இந்த வார்த்தையை கவனியுங்கள் . ஜில்பாப் என்றால் முகமூடி என்று அவர்களே சொல்கின்றார்கள் فخمرت وجهي بجلبابي - உடனே என்னுடைய முகத்திரையால் என் முகத்தை மறைத்துக் கொண்டேன்.
இது ஜில்பாப் என்றால் முகமூடி என்பதற்கான பலமான ஆதாரமாகும்.
(இதில் ஹிஜாப் என்றால் என்ன என்றும் தெளிவாகின்றது.
ஹிஜாப் என்றாலும் முகமூடிதான்.)
ஜில்பாப் (முகமூடி ) அணியுமாறு அல்லாஹ் கட்டளை இடும் குர்ஆன் வசனம்

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﻗُﻞ ﻟِّﺄَﺯْﻭَﺍﺟِﻚَ ﻭَﺑَﻨَﺎﺗِﻚَ
ﻭَﻧِﺴَﺎﺀِﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳُﺪْﻧِﻴﻦَ ﻋَﻠَﻴْﻬِﻦَّ ﻣِﻦ ﺟَﻠَﺎﺑِﻴﺒِﻬِﻦَّ ۚ
ﺫَٰﻟِﻚَﺃَﺩْﻧَﻰٰ ﺃَﻥ ﻳُﻌْﺮَﻓْﻦَ ﻓَﻠَﺎ ﻳُﺆْﺫَﻳْﻦَ ۗ ﻭَﻛَﺎﻥَ
ﺍﻟﻠَّﻪُﻏَﻔُﻮﺭًﺍ ﺭَّﺣِﻴﻤًﺎ

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம்பெண்மக்களுக்கும் ஈமான்கொண்டவர்களின் பெண்களுக்கும்,அவர்கள் தங்கள் முகமூடிகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்;மிக்க அன்புடையவன்.
இந்த வசனம் குர்ஆனில் சூரத்துல் அஹ்ஸாப் எனும் அத்தியாயத்தில் உள்ளது.

5. பாகப்பிரிவினை!
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்.
பலமுடையவர்களாகவும், பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம்பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும் பலவீனர்களாகவும், பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் நிலையில் - இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது என்ற நிலையில் - ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும்.
இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது.
இஸ்லாம் மார்க்கத்துக்கு முன் உலகில் பெண்களுக்கு சொத்துரிமை
இருந்ததில்லை. பெற்றோர்களின் சொத்துக்களிலிருந்தோ ஏனைய உறவினர்களின் சொத்துக்களிலிருந்தோ பெண்கள் வாரிசுரிமை பெறுவதுமில்லை. இஸ்லாம் மார்க்கம் தான் முதலில் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியது.
இஸ்லாம் மார்க்கம் வந்த பின்பு கூட பல நூற்றாண்டுகளாக முஸ்லிமல்லாத
சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததில்லை.
பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளது என்று சமீப காலத்தில் தான் நமது
நாட்டில் சில பகுதிகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழக அரசு பெற்றோர்களின் சொத்துக்களில் ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் சம அளவிலான உரிமை உண்டு என்று கருணாநிதி ஆட்சியின் போது சட்டமியற்றியது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது.
அறிவுப்பூர்வமான, நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் ஆண்களுக்கு இரு மடங்குகளும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாகப்பிரிவினைச் சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களுக்கே கூடுதல் சுமை.
இஸ்லாமியச் சமூக அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது கூடுதலான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு ஆண் தனது மனைவிக்கு உணவும், உடையும், உறைவிடமும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறான். ஒரு பெண் தன் கணவனுக்காக இதைச் செய்ய வேண்டியதில்லை.

ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக்
கடமைப்பட்டுள்ளான். குழந்தையின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும்
கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச்
செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள்.

தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் தூரத்து, நெருங்கிய
உறவினர்கள் ஆகியோர் சிரம தசையிலிருக்கும் போது அவர்களையும் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது. பெண்களைப் பொறுத்த வரை இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

இஸ்லாமிய சமூக அமைப்பில் மட்டுமின்றி ஏனைய சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் காணலாம். இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை குறை கூறக் கூடியவர்கள். யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும் யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும் வழங்குவது எந்த விதத்தில் அநீதியாகும்? ஒரு ஆண், வாரிசுரிமை மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது கடமைகள் உள்ளன. ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது.
தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பது தெளிவு!

சொத்தைப் பெருக்குவதில் ஆண்களின் பங்கு அதிகம்.
பெரும்பாலும் சொத்துக்களைப் பெருக்குவதில் ஆண்களே உறுதுணையாக உள்ளனர். ஒரு தந்தைக்கு ஒரு மகனும் மகளும் இருந்தால் அந்தத் தந்தைக்குச் சொந்தமான நிறுவனங்களில் தந்தைக்கு உறுதுணையாக ஆண்களே இருக்கின்றனர். சொத்து பெருகுவதில் ஆண்களுக்கே அதிக உழைப்பு உண்டு என்பதும் பாரபட்சம் காட்டப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும். பெரும்பாலும் பெண்கள் தந்தையின் சொத்து வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதில்லை. யார் சொத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாக பாகங்கள் வழங்குவதை அநியாயம் என்று எப்படிக் கூற முடியும்?

தந்தையிடமிருந்து அதிகம் பெறுவது பெண்களே.
உணவு, உடை போன்ற செலவினங்கள் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் சம அளவில் செய்யப்பட்டாலும் இதர வகையில் பெண்களுக்கென்று ஆண்களை விடக் கூடுதலாக செலவு செய்யப்படுகின்றது.
ஒரு தந்தைக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தால் அந்த மகளுக்காக அந்தத் தந்தை ஆபரணங்கள், நகைகள் என்று செய்து போட்டு அழகு பார்க்கிறார். இவை வெறும் அழகு சாதனங்கள் மட்டுமல்ல. பெரும் சொத்துக்களாகவும் உள்ளன. வசதி படைத்தவர்கள் தங்கள் பெண்களுக்காக இலட்சக் கணக்கிலும் வசதியே இல்லாதவர்கள் பல ஆயிரங்களுக்கும் நகைகள் செய்து போடுகின்றனர். 
இது அந்தப்பெண்களின் சொத்தாகவே ஆகி விடுகின்றது. இது தவிர திருமணத்தின் போது மகளுக்காகச் சீர் என்று பல சாதனங்களையும் தந்தை வழங்குகின்றார். தந்தையின் சொத்தில் ஆண்கள் அனுபவிப்பதை விடக் கூடுதலாக பெண்கள்அனுபவிக்கிறார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு எஞ்சியுள்ள சொத்துக்களில் தான் இரண்டுக்கு ஒன்று' என்ற விகிதாச்சாரம்
பேணப்படுகின்றதேயன்றி தந்தை உயிருடனிருக்கும் போது பெண்களே அதிக அளவில் பெற்றுக் கொள்கிறார்கள்.
இது போன்ற நியாயமான காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளதை நாம் உணரலாம்.

6.பெண்கள் சாட்சி இயற்கையாக அமைந்த பலவீனம்!
பெண்கள் ஆண்களைப் போன்ற உடலமைப்புக் கொண்டவர்களல்லர்.
பலவீனமானவர்களாகவும் இயற்கையில் மாதாந்திர உதிரப் போக்கு என்ற உபாதைக்கு ஆளாகுபவர்களாகவும் உள்ளனர். இந்த மாதாந்திர உபாதை மனநிலையில் பாதிப்பையும், தடுமாற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என மருத்துவவியலாரும், மனோதத்துவ இயலாரும், உடற்கூறு வல்லுனர்களும் கூறுவது அனைவரும் அறிந்ததே!
ஒரு சம்பவத்திற்கு சாட்சியாக அழைக்கப்படும் பெண், மாதாந்திர
உபாதையுடனிருக்கும் போது அச்சம்பவத்தைப் பார்த்திருந்தாலோ, அல்லது
சாட்சியத்திற்கு அழைக்கப்படும் போது அவ்வுபாதையுடனிருந்தாலோ அவள்
அளிக்கும் சாட்சியத்தில் அவளது உடல் நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மனநிலை பிரதிபலிப்பதால், சாட்சியம் முழுமையடையாது.
உள்ளதை உள்ளபடி கூறாமல் குழம்பிய நிலையில் அளிக்கப்படும் சாட்சியத்தால் நீதி வழங்குவதிலும் குறைபாடு ஏற்படும். இது இரண்டாவது காரணம், இவ்விடத்தில் மற்றொரு கேள்வி எழலாம். மாதவிடாய் நின்று போன பெண்ணையாவது ஒரு ஆணுக்கு நிகரான சாட்சியாக ஏற்கலாமல்லவா என்று வினவலாம். ஆனால் இத்தகைய பெண்களுக்கு வேறு விதமான மனநிலைக் குழப்பம் ஏற்படுவதையும் மருத்துவ விஞ்ஞானம் உறுதி செய்வதால் இவ்வினா அர்த்தமற்றுப் போகிறது!

மிரட்டலுக்கு அஞ்சுதல்!

பொதுவாக சாட்சி கூறும் போது இரு தரப்பில் ஒரு தரப்புக்கு பாதகமாகத் தான்
அமையும். யார் பாதிக்கப்படுகிறானோ அவன் தனக்கு எதிராகச் சாட்சி
கூறும்பெண்ணை மிரட்டலாம். அவளையோ, அவளது குடும்பத்தில் ஒருவரையோ கொன்று விடுவதாகக் கூறினால் போதும், சாட்சியத்தை மாற்றிக் கூறி விடக் கூடியவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர். இந்தப் பலவீனத்தின் காரணமாகவும், இவ்வாறு வேறுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

இயல்பிலே அமைந்த இரக்க குணம்
மேலும், பெண்கள் இயல்பிலேயே இரக்கமும், பச்சாதாபமும் கொண்டுள்ளனர்.இந்நிலையில் அவர்களின் தாய்மையுணர்வின் காரணமாகக் குற்றவாளியின் மீது இரக்கப்பட்டு, சாட்சியத்தில் ஒளிவு மறைவு செய்யலாம் என்பதாலும், ஒரு ஆணுக்கு நிகராக இரு பெண்கள் சாட்சியத்திற்குத் தேவைப்படுகின்றனர். நிச்சயமாக இரு பெண்கள் ஒரு சம்பவத்தை ஒரே மாதிரியாகக் கூறுவதில்லை என்பதை
முதலாவது சொன்ன காரணம் உறுதிப்படுத்துகின்றது.
எனவே ஒரு ஆண் சாட்சிக்கு நிகராக இரு பெண் சாட்சிகள் தேவை என்று இஸ்லாம் வகுத்துள்ள சட்டம் அறிவுக்குப் பொருத்தமானதும் நியாயமானதும் ஆகும் என்பது தெளிவாகிறது.
ஒவ்வொரு விஷயத்துக்கும் தேவையான தகுதிகளை எடைபோட்டு அதனடிப்படையில் ஆண் - பெண்ணிடையே இஸ்லாம் சில வித்தியாசங்களை ஏற்படுத்தியுள்ளது. நடுநிலை உணர்வுடன் இதைச் சிந்திக்கும் எவரும் இதிலுள்ள நியாயத்தை உணரலாம்.
மேலும் ஒரு பெண் சாட்சியமளிப்பதோ அளிக்காமல் இருப்பதோ அவளது உரிமையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

7.பெண்கள் கல்வி கற்கக் கூடாது.
பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாகவும் அவதூறு கூறுகின்றனர். கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை.கல்வி கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது.
ஆயினும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பயிலும் முறையை மட்டும் தான்
இஸ்லாம் எதிர்க்கிறது.
புகழ்ச்சியில் மயங்கி தம்மை இழப்பவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர்.
கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே அவர்களை வஞ்சித்து அனுபவிக்கும்
செய்திகளும், சக மாணவர்களால் ஏமாற்றப்படும் செய்திகளும் அன்றாடச்
செய்திகளாகி விட்டன. இவ்வாறு சேர்ந்து படிப்பதால் தான் ஆண்களின் கவனமும் சிதறடிக்கப்படுகிறது. பெண்கள் தனியாகப் படித்தால் படிப்பு ஏறாது என்று கூற முடியாது. எதில் பாதுகாப்பு அதிகமோ அந்த வழியில் நின்று பெண்களுக்கே உரிய கல்லூரியில் பெண்கள் பயிலுவது தான் அவர்களுக்கும் பாதுகாப்பானது என இஸ்லாம் கூறுகிறது.
பேருந்துகளில் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பேருந்துகளில்
விடப் படுகின்றன. ஒரே பேருந்து விடப்படும் இடங்களில் இருவருக்கும் தனித்தனி வழியும் இடமும் ஒதுக்கப்படுகிறது.
சிறிது நேரப் பயணத்தின் போதே இவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கை என்றால்
காலமெல்லாம் ஆண்களுடனே பெண்களை விட்டால் என்னவாகும்?
ஏமாற்றப்படும் அபலைகள் எண்ணிக்கை பெருகி வருவதைக் கண்கூடாகக் கண்ட பின் இதை யாரும் குறை கூற மாட்டார்கள். முஸ்லிமல்லாத பெண்களும் கூட பெண்களுக்கே உள்ள கல்லூரிகளில் படிப்பதே பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்.
ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பதால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டு
வருகின்றன? இதனால் பெண்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
என்பதைத் தனி நூலாகவே எழுதலாம்.
ஏமாற்றப்படும் அபலைகள் பற்றிய செய்தி செய்தித்தாள்களில் அன்றாடம் இடம் பிடித்து வருவதே இதைப் புரிந்து கொள்ள போதுமானதாகும்.

7. இத்தா!
'கணவன் இறந்தவுடன் மனைவியர் உடனே திருமணம் செய்யக் கூடாது; மாறாக சில காலம் கழித்தே திருமணம் செய்ய வேண்டும்; ஆண்களுக்கு இந்தச் சட்டம் கிடையாது; மனைவி இறந்த தினத்தில் கூட மறு மணம் செய்யலாம்' என்று இஸ்லாம் கூறுகிறது. இதுவும் பெண்களுக்கு எதிரானதாக உள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
கணவன் இறக்கும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது.
கணவன் இறக்கும் போது அவள் கர்ப்பினியாக இல்லா விட்டால் நான்கு மாதம் பத்து நாட்கள் கழித்துத் தான் மறுமணம் செய்ய வேண்டுமே தவிர உடனடியாக மறுமணம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். 
இவ்வாறு திருமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம் இத்தா' எனப்படுகிறது. இது பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் தோற்றமளித்தாலும் அதற்கான காரணங்களை அறிந்து கொண்டால் இது பெண்களுக்கு நன்மை பயக்கக் கூடியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
கணவன் இறந்தவுடன் மனைவி அவனது கருவைச் சுமந்திருக்கலாம். அந்த நிலையில் அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அதில் பல அநீதிகள் ஏற்பட்டு விடும். இறந்து போன கணவனின் குழந்தையைப் புதிய கணவனின் தலையில் சுமத்தும் நிலை ஏற்படும்.
பிறக்கும் குழந்தை தன்னைப் போன்ற தோற்றத்தில் இல்லா விட்டால் தன்னை ஏமாற்றி விட்டதாக இரண்டாம் கணவன் கருதுவான். தனது குழந்தை என்று ஒப்புக் கொள்ள மறுப்பான். குழந்தையின் உண்மையான தந்தையாகிய முதல் கணவனிடமிருந்தும் குழந்தைக்கு எந்தச் சொத்துரிமையும் கிடைக்காமல் போய் விடும்.
தன்னுடைய கருவில் முதல் கணவனின் வாரிசு உருவாகவில்லை என்பதை நிரூபித்து விட்டு திருமணம் செய்வது தான் அவளுக்கும், அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பானது.

'ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா அல்லவா என்பதைக் கண்டுபிடிக்க நான்கு
மாதமும் பத்து நாட்களும் தேவையில்லையே? அதை விடக் குறைவான காலத்திலேயே இது தெரிந்து விடுமே? முதல் மாதமே மாதவிடாய் வந்து விட்டால் அவள் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாமே?' என்றெல்லாம் சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.
இது முற்றிலும் உண்மை தான். கருவில் குழந்தை இல்லை என்பதை முதல்
மாதத்திலேயே தெரிந்து கொள்ள முடியும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
ஆனால் அவளுக்கு மாத விடாய் வருகிறதா என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க விஷயம். மாத விடாய் நின்ற பிறகும் கூட திருமணத்திற்கு
அவசரப்பட்டு அவள் மாத விடாய் வழக்கமாக வந்து கொண்டிருக்கிறது என்று பொய் கூறலாம்.
இதற்காக அந்தரங்கச் சோதனையெல்லாம் மேற் கொள்வது அவளை
அவமானப்படுத்துவதாகவே முடியும்.
அவளுக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வேண்டுமானால் நான்கு மாதங்களுக்கு மேல் அவகாசம் தேவைப்படும்.
நான்கு மாதமும், பத்து நாட்களும் கழிந்த பிறகும் அவளது வயிறு
வெளிப்படையாக பெரிதாகாவிட்டால் அவள் கருவில் குழந்தை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகி விடும். இப்படி அனைவருக்கும் தெரியும் வகையில் நிரூபிப்பதற்கு சில நியாயங்களும் உள்ளன.
கணவன் இறந்த பின் ஒரு பெண்ணுக்கு வழக்கமான மாதவிடாய் ஏற்பட்டு, கருவில் குழந்தை இல்லை என்பதைக் காரணம் காட்டி, மறு மாதமே திருமணம் செய்து விடுகிறாள் என்று வைத்துக் கொள்வோம்.
இந்த நிலையில் இரண்டாம் கணவன் மூலம் அவள் கருவுற்று விடுகிறாள். அந்தக் கரு வளர்ந்து பத்தாவது மாதம் குழந்தையை அவள் பெற்றெடுத்தால் பிரச்சினை ஏதும் ஏற்படாது. ஆனால் குறைப் பிரசவமாக எட்டாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தால் இரண்டாம் கணவனால் பிரச்சினை ஏற்படும்.
இது தனக்குப் பிறந்தததாக இருக்காது. முதல் கணவனுக்குப் பிறந்ததாகத் தான் இருக்க வேண்டும். இரண்டு மாதக் கருவைச் சுமந்து கொண்டு தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டாள் என்று நினைப்பான். அவனது குடும்பத்தினரும் அவ்வாறே நினைப்பார்கள்.
ஊரறிய நிரூபித்த பின்னர் இரண்டாம் திருமணம் செய்து, குறைப் பிரசவமாக அவள் குழந்தையைப் பெற்றாலும் அது தனது குழந்தை இல்லை என்று இரண்டாம் கணவன் கூற மாட்டான். சந்தேகப்படவும் மாட்டான். முதல் கணவனின் குந்தையாக இருந்திருந்தால் நான்கு மாதங்கள் வரை அவளது வயிறு பெரிதாகாமல் இருக்காது என்பது அவனுக்குத் தெரியும்.
எனவே பெண்களின் இரண்டாம் திருமணத்தின் மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக
இருக்கவும், பெற்றெடுக்கும் குழந்தைக்குச் சட்டப் பூர்வமான உரிமையைப்
பெற்றுத் தரவும் இந்த ஏற்பாடுமிகவும் அவசியமே. இது பெண் குலத்துக்கு
நன்மை பயக்கக் கூடியதே என்பதை இதன் மூலம் அறியலாம்.
கணவன் இறந்து விட்டால் கணவனின் சொத்தில் மனைவிக்கு உரிமை இருப்பது போலவே அவனால் அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் உரிமை உள்ளது. எனவே அவசரப்பட்டு திருமணம் செய்தவள் பிரசவித்தால் முதல் கணவனின் குடும்பத்தினர் தமது குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை இல்லை என்று வாதிடுவார்கள். அக்குழந்தைக்குச் சேர வேண்டிய சொத்துரிமை இல்லாமல் போய் விடும். இரண்டாம் கணவனும் தமது குழந்தை இல்லை என்று மறுப்பான். இது போன்ற நியாயமான காரணங்களால் தான் பெண்கள் மீது இத்தா எனும் கடமையை இஸ்லாம் விதியாக்கியுள்ளது.

அறிவைப் பெருக்குவதில் உரிமை!
ஆண் குழந்தைக்கு வழங்குவது போன்றே சற்றும் பாரபட்சமில்லாமல் பெண்ணுக்கும் கல்வியறிவை வழங்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
 நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் வழக்கறிஞர்களுக்கு ஈடான அறிவு ஞானம் பெற்றிருந்தது இதற்கு ஒரு சான்று.
பெண்கள் கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது, திறம்பட நிர்வாகிப்பது,
பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக, மருத்துவர்களாக, பொறியியல் வல்லுனர்களாக இப்படி அனைத்துத் துறையிலும் பிரகாசிப்பதையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களுடன் போர்க் களத்தில் பல பெண்மணிகள் உதவி செய்து பணியாற்றி உள்ளார்கள் என்பதே இதற்குச் சான்று.
அதேவேளை, தான் ஒரு பெண் என்பதை மறந்து எல்லையைத் தாண்டி விடுவதைத்தான் இஸ்லாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இறைவன் ஆணையும் பெண்ணையும் மனித இனமாகவே படைத்திருந்தாலும் பெண்ணின் இயல்பான உடலமைப்பு, ஆண்களைக்
கவரக்கூடியதாகவே அமைந்துள்ளது. சட்டென சபலத்திற்குள்ளாகும் ஆண்களது மனதைப் போல் அல்லாஹ் பெண்ணுக்குப் படைக்க வில்லை என்பதே யதார்த்தம். அதே போல் பெண்ணுக்கு உரிய உடல், மன பலவீனங்களை ஆணுக்கு இறைவன் கொடுக்கவில்லை.
அதனாலேயே ஆண்களும் பெண்களும் இரண்டறக் கலந்து பணியாற்றும் சூழலை இஸ்லாம் தடுக்கிறது.

8.திருணத்தில் உரிமை!
"ஆயிரம் காலத்துப் பயிர்" என்றும் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது"
என்றும் பேசும் பிற மதத் திருமணக் கோட்பாடுகளை முற்றிலும் உடைத்துத்
தகர்க்கும் இஸ்லாம், திருமணத்தை "ஒரு வாழ்க்கை ஒப்பந்தம்" என்ற எளிய
சித்தாந்தமாக உலகிற்கு அறிமுகப் படுத்தியது! திருமணத்திற்கு
நிச்சயிக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணின் சம்மதம் என்பதை, திருமணத்திற்குரிய
முக்கிய சாராம்சமாக நபி(ஸல்) அவர்கள் ஆக்கியுள்ளார்கள். மணம் பேசப்படும் பெண் நாணமுற்று பதிலளிக்காமல் போகும் நேரங்களில் மட்டும் அவளது சம்மதம் கிட்டியதாக எடுத்துக்கொள்ளச் சொல்லியுள்ளார்களே தவிர மணப்பெண்ணின் சம்மதமின்றி ஒரு திருமணம் இஸ்லாத்தில் ஆகுமானதாகவே ஆக்கப்படவில்லை.
அத்துடன் பெண்ணுரிமை பேசும் பிற மதங்களில் நிலவும் வரதட்சணை என்ற
கைக்கூலியைப் பெறுவது இஸ்லாத்தில் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மனைவி மீதான கணவனின் முக்கியக் கடமையாக உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்வழங்க வேண்டுமென்று இஸ்லாம் கட்டளை இடுகிறது. அதே போல் பெண்ணின் கடமை கணவனின் உடமைகளையும் குழந்தைகளையும் தனது கற்பையும் பாதுகாத்து குடும்பத்தைச் சிறப்பாக நடத்திச் செல்வது. இந்த அற்புதமான ஏற்பாடுகளைப் பற்றி அறிவிலிகள் சிலர், "பெண்களை இஸ்லாம் வீட்டினுள் அடைத்து வைத்து 
 கொடுமைப்படுத்துகிறது" என்று கூக்குரலிடுகின்றனர்.

கட்டாயத் திருமணம்!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ يَحِلُّ لَكُمْ أَن تَرِثُواْ
النِّسَاء كَرْهًا وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُواْ بِبَعْضِ مَا
آتَيْتُمُوهُنَّ إِلاَّ أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن
تَكْرَهُواْ شَيْئًا وَيَجْعَلَ اللّهُ فِيهِ خَيْرًا كَثِيراً
    'நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு
வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.
 அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்! அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்' (அல்குர்ஆன் 4:19)

பெண்களின் உரிமைகள் குறித்து மூன்று கட்டளைகள் இவ்வசனத்தில்
அடங்கியுள்ளன. இம்மூன்று கட்டளைகளையும் இக்கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட காரணத்தையும் அறிந்து கொண்டால் பெண்களின் உரிமையைக் காப்பதில் இஸ்லாம் காட்டும் அக்கறையைப் புரிந்து கொள்ளலாம்.
 முதலாவது கட்டளைக்குள் இரு செய்திகள் அடங்கியுள்ளன. இதன் நேரடியான பொருளைப் பார்க்கும் போது பெண்களைக் கட்டாயப்படுத்தி மணந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை அது கூறுகிறது. இவ்வசனம் எந்த சந்தர்ப்பத்தில் அருளப்பட்டது என்பதைப் பார்க்கும் போது மற்றொரு செய்தியையும் சேர்த்துச்சொல்கிறது. எந்த ஒரு வசனமாக இருந்தாலும் அதன் நேரடியான பொருளையும் எது குறித்து அருளப்பட்டதோ அந்தக் கருத்தையும் அவ்வசனம் சேர்த்துக் கூறுவதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வசனம் அருளப்பட்டது என்பதைப் பார்க்கும்
முன் இதன் நேரடியான பொருளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
இஸ்லாம் மார்க்கம் அருளப்படுவதற்கு முன்னால் உலகில் எந்தச்
சமுதாயத்திலும் எந்தப் பகுதியிலும் திருமணத்தின் போது பெண்களின்
விருப்பம் கேட்கப்படுவதில்லை. கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இந்த நாகரீக உலகில் கூட பல பகுதிகளில் பெண்களின் சம்மதம் பெறப்படாமல் கட்டாயக் கல்யாணம் நடத்தி வைக்கப்படுவதைக் காண்கிறோம்.
இருபதாம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கு இந்த உரிமை வழங்கப்படவில்லை என்றால் ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாததாகத் தான் இருந்திருக்கும். இத்தகைய காலகட்டத்தில் பெண்களைக் கட்டாயப்படுத்தி மணந்து கொள்வது ஹலால் இல்லை. அனுமதி இல்லை என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது.
இவ்வாறு பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று பெண்கள் தரப்பிலிருந்து
கோரிக்கையோ போராட்டமோ நடத்தப்படாத கால கட்டத்தில் இஸ்லாம் தன்னிச்சையாக  உலகிலேயே முதன் முறையாக - இந்த உரிமையை வழங்குகிறது.
  திருமறைக் குர்ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் இந்த உரிமையை வலிமையுடன் வற்புறுத்தும் வகையில் அமைந்துள்ளன.
 விதவைப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும். கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத், தாரிமி, தாரகுத்னீ, தப்ரானீ) புகாரியின் மற்றொரு அறிவிப்பில் 'அல்லாஹ்வின் தூதரே! கன்னிப்
பெண்ணிடம் எவ்வாறு அனுமதி பெறுவது? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவளது மௌனமே சம்மதமாகும் என விடையளித்தார்கள்.கன்னிப் பெண் தனது சம்மதத்தைத் தெரிவிக்க வெட்கப்படுவாள். அதே சமயம் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைச் சொல்வதற்கு வெட்கப்படமாட்டாள்.
பெண்களின் இந்த இயல்பைக் கவனத்தில் கொண்டுதான் கன்னிப் பெண்ணின்
மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.
  பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா என்று விவாதம் நடத்திக் கொண்டிருந்த
காலத்தில் தான் இந்தப் புரட்சியை இஸ்லாம் நிகழ்த்திக் காட்டியது.
இதைவிடவும் வலிமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதைக் கவனியுங்கள்!
  'கணவன் இல்லாதவள் (திருமணம் ஆகாதவள், கணவனால் விவாகரத்துச்
செய்யப்பட்டவள், கணவனை இழந்தவள் ஆகிய மூவரையும் இவ்வார்த்தை உள்ளடக்கும்) தனது பொறுப்பாளனை விட தன் விஷயமாக முடிவு செய்ய அதிக உரிமை படைத்தவளாவாள். கன்னிப் பெண்ணிடமும் சம்மதம் பெறப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம்    
ஒவ்வொரு பெண்ணும் தனது விஷயத்தில் தானே அதிக உரிமை படைத்தவள். பெற்றவர்களை விட அவளே தன் விஷயமாக முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவள் என்று இருபதாம் நூற்றாண்டில் கூட சொல்ல முடியவில்லை - என்பதை நினைத்துப் பார்க்கும் போது முஸ்லிம் பெண்களின் உரிமை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் தறுதலைப் பெண்டிரின் தீய நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இதை விடவும் வலிமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உரிமையை எப்படி வலியுறுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்.
 'அவள் மறந்து விட்டால் அவள் மீது வரம்பு மீறுதல் யாருக்கும்
கிடையாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: அபூதாவூத்)
ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லாதவருடன் அவரது பெற்றோர் மணமுடித்து
வைத்து விட்டால் அந்தத் திருமணம் செல்லாது என்று உலகின் முதன் முதலாகப் பிரகடனம் செய்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
கன்ஸா என்ற விதவைப் பெண்ணை அவரது தந்தை கிதாம் என்பாருக்கு
மணமுடித்து வைத்தார். ஆனால் கன்ஸாவுக்கு இதில் விருப்பமில்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரது திருமணத்தை ரத்துச் செய்தார்கள். (அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான், நூல்:புகாரி)
 என்னிடம் ஒரு இளம் பெண் வந்தார். 'என் தந்தை தனது சகோதரர் மகனுக்கு
என்னை மணமுடித்து விட்டார். அதில் எனக்கு விருப்பமில்லை' என்று என்னிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் வரும் வரை இங்கேயே அமர்வாயாக என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அவரது தந்தையை அழைத்து வரச் செய்தார்கள். (விசாரித்த பின்) அந்தப் பெண்ணிடமே முடிவெடுக்கும் அதிகாரத்தை அளித்தார்கள். (அதாவது உனக்கு விருப்பமிருந்தால் அவருடன் வாழலாம். விருப்பமில்லா விட்டால் திருமணம் ரத்தாகிவிடும் என்றார்கள்.) அதற்கு அப்பெண் 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையின் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெண்களுக்கு இந்த விஷயத்தில் அதிகாரம் உள்ளது என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கவே நான் வந்தேன் என அப்பெண் கூறினார்.
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ)
இந்தச் சான்றுகளிலிருந்து இரண்டு செய்திகளை நாம் அறிந்து கொள்ளலாம்.
பெற்றோர்கள் தங்கள் மக்களை ஒரு உணர்வற்ற பொருளாகக் கருதக் கூடாது.
அவர்கள் இஸ்லாமிய வட்டத்துக்கு உட்பட்டு எந்த மணமகனை விரும்பினாலும் அவருடன் மண முடித்து வைக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது.
பிடிக்காதவனுடன் வாழ்க்கை நடத்துவதால் மகிழ்ச்சியும் தொலைந்து
போய்விடும். பெண்கள் வழி தவறிச் செல்லவும் இது பாதையை ஏற்படுத்தும்
என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் வழங்கியுள்ள
உரிமையைப் பறிக்கும் அதிகாரம் தங்களுக்குக் கிடையாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
விருப்பமில்லாதவனுக்கு ஒரு பெண் முடிக்கப்பட்டால் அவள் சமுதாயப்
பெரியவர்களிடம் ஊர் ஜமாஅத்துகளிடம் அதை தெரிவிக்கும் நிலைமை
ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி நடந்த திருமணத்தை
ரத்துச் செய்து உத்தரவிட வேண்டும். பெண்களின் உரிமையைப் பெற்றோர்
பறிக்கும் போது சமுதாயம் அதை மீட்டுக் கொடுக்க வேண்டும்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தைப் பெண்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
யார் தனக்கு வாழ்க்கைத் துணைவனாக வர வேண்டும் என்பதையும் யார்
வரக்கூடாது என்பதையும் முடிவு செய்யும் அதிகாரத்தை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கினாலும் தாமாக ஓடிப்போய் மணந்து கொள்ளக் கூடாது. அந்த உரிமையைப் பெற்றோர் வழியாகவும் அவர்கள் மறுத்தால் பெரியோர்கள், சமுதாய இயக்கம் வழியாகத் தான் பெற வேண்டும்.
ஏனெனில் பொறுப்பாளர் இன்றி ஒரு பெண் திருமணம் செய்யக் கூடாது என்றும்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். 
பெண்களை மணந்து கொள்வதாக ஏமாற்றி அனுபவித்து விட்டு வீதியில் வீசி
எறிந்து விட்டு செல்லக்கூடிய மனநிலை தான் பெரும்பாலான ஆண்களுடையது. பொருப்பாளர் முன்னிலையில் அவர் நின்று நடத்தும் போது ஏமாற்றி விடாமல் இருக்க தக்க ஏற்பாடுகளைச் செய்து கொள்வார். இது பெண்களின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பாக அமையும். இதைக் கவனத்தில் கொள்ளாது வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்ட அபலைகள் ஏராளம் உள்ளனர் என்பதைப் பெண்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
பெண்களைக் கட்டாயப் படுத்தி அவர்களுக்கு வாரிசாகுவது ஹலால் இல்லை
என்ற ஒற்றை வரியில் இவ்வளவு செய்திகள் அடங்கியுள்ளன.
இவ்வசனம் எந்தச் சமயத்தில் அருளப்பட்டது என்பதை அறிந்து கொண்டால்
இந்த வரியில் அடங்கியுள்ள மற்றொரு அறிவுரையையும் நாம் விளங்கிக்
கொள்ளலாம்.
ஒருவர் மரணித்து விட்டால் இறந்தவரின் குடும்பத்தார் தான் அவரது மனைவி விஷயத்தில் அதிகாரம் படைத்தவர்களாக இருந்து வந்தனர். கணவனின் உறவினர்கள் விரும்பினால் தாமே அவளை (வலுக்கட்டாயமாக) மணந்து கொள்வர். விருப்பமில்லா
விட்டால் அவளுக்கு வேறு யாரையும் மணமுடிக்க மாட்டார்கள். அவளது
குடும்பத்தினரை விட கணவனின் குடும்பத்தினரே பெண் விஷயத்தில் உரிமை படைத்தவர்கள் என்ற நிலை இருந்தது. இதை மாற்றவே இவ்விசனம் அருளப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (அறிவிப்பவர்: இக்ரிமா, நூல்: புகாரி)
கணவன் இறந்த பிறகு கூட பெண் கணவனின் உடமையாகத் தான் அன்று
கருதப்பட்டாள். அவள் அழகானவளாக இருந்தால் கணவனின் உறவினரில் யாராவது அவளை அவளது சம்மதமின்றி மணந்து கொள்ளலாம். அவள் அழகில்லாதவளாக இருந்து  விட்டால் அவளை வேறு யாருக்கும் மணமுடித்து வைக்க மாட்டார்கள். வீட்டிலேயே அடைத்து வைப்பார்கள்.
இவ்வாறு செய்வதற்குக் காரணம் கணவன் மனைவிக்கு மஹர் கொடுக்கும்
வழக்கம் அந்த அறியாமைக் காலத்திலும் இருந்து வந்தது.
 மஹராகப் பெற்ற அந்தச் சொத்து அவளுக்கே உரிமையாக இருந்து வந்தது.
கணவன் இறந்த பின் அவன் கொடுத்த மஹரைத் திரும்பிப் பெறுவதற்காக கணவனின் குடும்பத்தார் அவளை அடைத்து வைத்துக் கொள்வார்கள். அவனது மஹரைத் திருப்பிக் கொடுத்தால் அவளை விட்டு விடுவார்கள். அவள் மஹரைத் திருப்பிக் கொடுக்கா விட்டால் அவள் மரணிக்கும் வரை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டு அவள் இறந்ததும் அந்தச் சொத்தை தமதாக்கிக் கொள்வார்கள்.
(அந்த விபரங்கள் அபூதாவூத் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
இந்தக் கொடிய வழக்கம் முழுவதையும் அடியோடு தடை செய்யவே இவ்வசனம் அருளப்பட்டது.
ஒருவன் இறந்த பின் அவனது மனைவியும் அவளது உடைமைகளும் கணவனின் குடும்பத்தாரைச் சேரமாட்டார்கள். அந்தப் பெண் தனது சொத்துக்களை எடுத்துக் கொண்டு தனது குடும்பத்தாரிடம் செல்லலாம். 
கணவன் இறந்து விட்ட காரணத்தினால் அவனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மணந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அந்தப் பெண் தனக்குப் பிடித்தமான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யலாம்.
கணவன் திருமணத்தின் போது தோட்டத்தையோ நகையையோ, பெரும் தொகையையோ மஹராகக் கொடுத்திருக்கலாம். கணவன் இறந்து விட்டால் அந்தச் சொத்துக்கு மனைவி தான் உரிமையானவளே தவிர கணவனின் குடும்பத்தாருக்கு அதில் முழு அளவுக்கோ, சிறு அளவுக்கோ உரிமை கிடையாது.இவை யாவும் மேற்கண்ட வசனத்திலிருந்து பெறப்படும் வழி காட்டுதலாகும்.
இது இருபதாம் நூற்றாண்டுக்கும் தேவையான இஸ்லாத்தின் போதனையாகும்.
பெண்ணுரிமை என்று காட்டுக் கூச்சல் போட்டு இஸ்லாத்தைக்
கொச்சைப்படுத்த விரும்புவோர் கூட இன்னும் பெற முடியாத உரிமைகளை இஸ்லாம் எந்தக் கூச்சலும் போடாமலேயே பெண்களுக்கு அளித்துள்ளது என்பதை உணர வேண்டும்.
 முஸ்லிம் பெற்றோர்களும் முஸ்லிம் ஜமாத்துகளும் இத்தகைய
விமர்சனத்திற்கு இடமளிக்காமல் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும்
பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை அப்படியே வழங்க வேண்டும்.

இப்படி எல்லா விஷயங்களிலும் இஸ்லாம் மட்டும் தான் பெண்களுக்கு பாதுகாப்போடு  முழு உரிமையையும் வழங்குகிறது என்பதை நாமும் விளங்கி பிற மக்களுக்கும் எடுத்து சொல்வோம்.

 ரப்புல் ஆலமீன் நம் பெண்களை பாதுகாத்து பூரணமான உரிமைகளை வழங்கும்  நல்ல மக்களாக நம் அனைவரையும் ஆக்குவானாக  ஆமீன்  







Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!