ரமலானையும் ரமலானில் செய்யும் அமல்களையும் பாதுகாப்போம்!

                                   

                يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.(2:183)

ரப்புல் ஆலமீன் நம்மீது நிறைய கிருபைகள்  செய்திருக்கிறான்  அதன் காரணமாகத்தான் நாம் நல் அமல்களை அதிகம் செய்கிறோம், அமல்களின் மீது ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறோம். அல்லாஹ்வினுடைய அன்பை பெற்று தரும் காரியங்களில் அதிகம் ஈடுபடுகிறோம்.

இது போன்ற சந்தர்பங்களை அல்லாஹ் எல்லோருக்கும் கொடுத்துவிடுவதில்லை. நம்முடைய செல்வங்களை வைத்தோ, ஆற்றல்களை வைத்தோ, திறமைகளை வைத்தோ இது போன்ற நல் அமல்களை செய்யவும் முடியாது.

அல்லாஹ் யாரின் மீது நலவை நாடுவானோ அவர்களுக்கு மட்டும் தான் இது போன்ற பாக்கியங்களை தருவான்.

நாம் எந்த அமலை செய்வதாக இருந்தாலும் அதற்கு அல்லாஹ்வின் தவ்ஃபீக் தேவை. அந்த தவ்ஃபீகை அல்லாஹ் யாருக்கு விரும்புகிறானோ அவர்களுக்கு கொடுக்கிறான்.
நாம் அமல்கள் செய்வதற்கு அல்லாஹ்வின் தவ்ஃபீகும் தேவை  அதே போல நம்முடைய ஆர்வமும் தேவை. நமக்கு ஆர்வமில்லாவிட்டால் அல்லாஹ்வே வழிய வந்து யாருக்கும் கொடுப்பதில்லை.

உதாரணமாக நமது தாய் திருநாட்டை 800 வருடங்கள் முகலாயர்கள் ஆண்டார்கள். மிக நுட்பமான கட்டிடங்களை எல்லாம் கட்டியிருக்கிறார்கள் ஆனால் அவர்களில் அநேகர்களுக்கு அல்லாஹ் ஹஜ்ஜுடைய நஸீபை தரவில்லை ஏன்? அவர்களுக்கு ஆர்வமில்லை.

இன்றும் கூட ஹஜ்ஜுடைய காலங்களில் யமனிலிருந்து 2000 கிலோமீட்டர் துளைவிலுள்ள மீனாவிற்கு ஆடுகளை விற்க வருகிறார்கள் ஆனால் அவர்கள் ஹஜ் செய்வதில்லை.
எனவே நமக்கு அமல்களின் மீது ஆர்வத்தையும், தேட்டத்தையும் ஏற்படுத்தியதற்காக நாம் முதலில் அல்லாஹ்விற்கு அதிகம் நன்றி செலுத்த வேண்டும்.

அல்லாஹ் மனிதர்களின் மீது அதிகம் இறக்கம் உள்ளவன் நாம் எந்தளவுக்கு பாவங்களில் மூழ்கி அல்லாஹ்வையே மறந்து வாழ்ந்தாலும் அல்லாஹ் நம்மை மறப்பது கிடையாது. நமக்கு நிறைய சந்தர்பங்களை தருகிறான்,வாய்ப்புகளை கொடுக்கிறான். எப்படியாவது நம்மை பாவங்களிலிருந்து மீட்டெடுக்க எல்லா வழிகளையும் அல்லாஹ் திறந்து விடுகிறான். 

நம்மை மன்னிப்பதற்காக நேரங்களில் தஹஜ்ஜுத் நேரத்தையும்,நாட்களில் ஜும்ஆ தினத்தையும், இரவுகளில் பராஅத் இரவையும் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான். இப்படிபட்ட நேரங்களில் மனிதனை முற்றிலும் மன்னித்து தூய்மை படுத்துவது தான் அல்லாஹ்வின் நோக்கம்.

அந்த அடிப்படையில் தான் அல்லாஹ் புனிதமிகு ராமலான் மாதத்தை நமக்கு பெரும் அருளாக தந்திருக்கிறான். இந்த மாதத்தின் பெயரே ரமலான். ரமலான் என்றாலே எரிக்குதல் என்று தான் பொருள் நம் பாவங்களை முழுமையாக எரித்து விடுவதற்காக தான் இந்த புனிதமிகு மாதம் வருகிறது. மற்ற மாதங்களை விட அல்லாஹ்விடத்தில் மிக கண்ணியமான மாதம் ரமலான் தான். அதில் தான் அல்லாஹ் தன்னுடைய எல்லா வேதங்களையும்,(சுஹுஃபுகள்) என்று சொல்லப்படும் ஏடுகளையும் இறக்கி வைத்தான். 

 இந்த மாதத்தின் விசேஷமான அமல் நோன்பு. 

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.(2:183)

இந்த வசனத்தின் கருத்து படி  நமக்கு இறை அச்சம் வருவதற்காக வேண்டி தான் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட உன்னதமான நோன்பை சரிவர நோற்று நம்மிடத்தில் இறை அச்சம் வர முயற்சிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நோன்பின் கூலியாக அல்லாஹ்வே ஆகிவிடுவதாக நமது நாயகம் சொல்லியிருக்கிரார்கள். ஏன்? மற்ற அமல்களுக்கு மலக்குமார்களை வைத்து கூலி கொடுத்து விட்டு நோன்புக்கு மட்டும் ஆல்லாஹ்வே கூளியாகிறான். அல்லாஹ் சொன்னதற்காக நாம் பகல் முழுக்க பட்டினி இருக்கிறோம், நமக்கு ஹலாலான மனைவி அருகில் இருந்தும் நம் இச்சையை அடக்கிகொல்வதனால் தான் நமக்கு இத்தகைய உயர்வு கிடைக்கிறது. அதை வீணாக்கி விடாமல் பயன் அடைபவர்கள் அறிவாளிகள்.

அதுமட்டுமல்லாமல் அமல்களுக்கு சொந்தமான இந்த மாதம் தான் இஸ்லாமியர்களுக்கு வெற்றிகளையும் பெற்று தந்தது. 
(பதுர், மக்காஹ் வெற்றி, சிலுவையுத்தம் வெற்றி, ஹிஜ்ரி 92 டில் தாரிக் பின் ஜியாத் (ரஹ்) அவர்கள் ஸ்பெய்னை வெற்றிகொண்டதும் இந்த புனிதமிகு ரமளானுடைய மாதத்தில் தான்.
 
எனவே இந்த புனிதமிகு ரமளானுடைய மாதத்தில் அமல்களும் அதிகம் செய்ய வேண்டும். அதே நேரத்தில்  நாம் சிரமப்பட்டு செய்த அமல்களை பாதுகாக்கவும் வேண்டும். சில அமல்களை செய்வது லேசு ஆனால் அதை பாதுகாப்பது கடினம். ஏன் என்றால்? நாம் நோன்பு நோற்பது  சில மணிநேரங்கள் தான் அது நமக்கு சிரமமல்ல அந்த நோன்பில் பாவமான காரியங்களை செய்யாமல் இருப்பது தான் மிக கவனுக்க வேண்டிய விஷயம். நோன்பு நோற்றுக்கொண்டு செய்யக்கூடாத செயல்களை செய்தால் நோன்பின் மூலம் நாம் எந்த பலனை அடைய வேண்டுமோ அதை அடைய முடியாது. 

எத்தனையோ மனிதர்கள் நோன்பு நோற்கிறார்கள் ஆனால் அவர்கள் பசித்திருந்ததையும்,தாகித்திருந்ததையும் தவிர வேறு எதையும்  பெற்று கொள்ளமாட்டார்கள். அதேபோல எத்தனையோ மனிதர்கள் இரவு நின்று வணங்குகிறார்கள் ஆனால் இரவு விளித்ததை தவிர வேறு எதையும் பெற்று கொள்ளமாட்டார்கள். என்று நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் சொல்லி இருக்கிறார்கள். 

ஒருவர் நோன்பு வைத்து கொண்டு பாவமான பேச்சையும் செயலையும் விட வில்லை என்றால் அவரின் சாப்பாட்டையும் குடிப்பையும் விடுவதில் அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை என்று நாயகம் சொன்னதாக ஹழ்ரத் அபு ஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புஹாரியில் இடம் பெற்றிருக்கிறது.

எனவே மிக கவனமாக நம் அமல்களை பாதுகாக்க வேண்டும்.
நமக்கு மற்ற காலங்களில் ஹலாலான சில விஷயங்கள் ரமலானில்  நாம் நோன்பு நோற்கும் நேரத்தில் ஹராமாக ஆகிவிடுகிறது.உதாரணமாக: (உண்பது,குடிப்பது,மனைவி யோடு உடலுறவு கொள்வது,) ஆனால் மற்ற காலங்களிலேயே ஹராமான விஷயங்கள் ரமலானில்   பெரும் தண்டனை குரிய விஷயமாக ஆகிவிடுகிறது. உதாரணமாக: பொய் பேசுவது,புறம் பேசுவது, அடுத்தவர்களை கேலி செய்வது, வீண் தர்கத்தில் ஈடுபடுவது இது போன்றவைகளும் பெரும் பாவமான செயல்கள் தான்  இவைகளை விட்டும் முழுமையாக நாம் விலகி இருப்பது மிக அவசியமாகும். 

அடுத்து ஹராமானவைகளை பார்ப்பது,கேட்பது இதுவும் பெரும் குற்றமான செயல்கள். பிறை பார்க்கும் முன் அந்த முஸீபத்துகளை நம் இல்லைத்தை விட்டு அகற்றி விட வேண்டும்.இப்போது புதிதாக நம் தஹஜ்ஜுத் தொழுகையையும் துஆவையும் கெடுப்பதற்காக ஷைத்தான் ஒரு செயலை நமக்கு நல்லதாக காட்டுகிறான் (சஹர் நேர பயான்கள்) இதுவும் கூடாத செயல்கள். நாம் ரமலானில் தினமும் தராவீஹ் தொழுகைக்கு பிறகு கேட்கும் பயான்கள் நமக்கு போதுமானது அதை விடுத்து சஹர் சிந்தனை என்றும், மார்க்க விளக்க கேள்வி பதில்கள்  என்றும், எந்த கோணத்தில் எத்தனை பெரிய தளப்பாகாரர்கள் வந்தாலும் அது பாவமான செயல்கள் தான். அதிலும் வேடிக்கையான விஷயம் என்ன வென்றால்   அவர்களே அந்த நிகழ்சிகளை கூடாது என்று சொல்லிக்கொண்டு பேசவும் செய்கிறார்கள். இது கொடுமையிலும் கொடுமை. எனவே புனிதமிகு ரமளானுடைய மாதத்தில் சஹருடைய இன்னும் இஃப்தாருடைய  நேரங்கள் உட்பட எல்லா நேரங்களும் பரகத் பொருந்தி நேரங்கள் அவைகளை முன்பே சரியாக திட்டமிட்டு நாம் நல் அமல்களை அதிகம் செய்து அவைகளை பாதுகாத்து கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதே போல நோன்பின் சட்டங்களை நமது முஹல்லா இமாமிடம் கேட்டு விளக்கம் பெற்று கொள்ளவேண்டும். சஹருடைய முடிவிழும் இஃப்தாருடைய நேரத்திலும் நமக்கு கவன குறைவு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது.சஹருடைய உணவை பாங்கு சொல்லும் வரை சாப்பிடுவது குற்றமான செயல். சில பள்ளி வாசல்களில் வக்து வந்து 10, அல்லது 15 நிமிடங்களுக்கு பிறகு தான் பாங்கு சொல்கிறார்கள் எனவே சஹருடைய  நேரம் முடிந்தும் நாம் சாப்பிடுவது போல் ஆகிவிடும். அதேபோல சூரியன் மறையும் முன்பே சில அறிவு ஜீவிகள் நோன்பை திறந்து விடுகிறார்கள். இது பகல் முழுக்க நாம் பட்டினி இருந்ததற்கு அர்த்தம் இல்லாமல் ஆகிவிடும் அதிலும் கவனமாக செயல் பட வேண்டும் நமது பள்ளியின் இமாம் அவர்கள் எந்த நேரத்தை சொல்கிறார்களோ அதிலே சஹர் உணவை சாப்பிட்டு நோன்பு திறப்பது நாம் சிரமப்பட்டு வைக்கும் நோன்பை பாதுகாக்கும் செயல் ஆகும்.   

நமது நாயகம் சஹர் செய்து விட்டு சுமார் 50 வசனங்கள் ஓதும் நேரத்திற்கு பின் பாங்கு சொல்லப்படும் என்று புஹாரியில் பதிவாகி இருக்கிறது. 

இரவு வந்து விட்டால், பகல் சென்று விட்டால், சூரியன் மறைந்து விட்டால் திட்டாமாக நோன்பாளி நோன்பு திறப்பார் (முஸ்லிம்) இந்த இரு ஹதீஸ் களின் படி நாம் நோன்பை நோற்று நோன்பை திறக்க வேண்டும். 

அடுத்து நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்வது. இது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் சுன்னத்தான செயல். 

யாராவது ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க வைத்தால் அவருடைய எல்லா பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, நரக நெருப்பில் இருந்து அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான். நோன்பாளிக்கு என்ன நன்மை கிடைக்குமோ அதே அளவு நன்மையை அல்லாஹ் இவருக்கும் கொடுக்கிறான் என்று நாயகம் சஹாபாக்களிடத்தில் சொன்ன போது சஹாபாக்களில் சிலர் யா ரஸூலுல்லாஹ் நாங்கள் எப்படி நோன்பாளிகளுக்கு உணவளிப்பது எங்களிடம் அதிகமான வசதிகள் இல்லையே என்றார்கள். உடனே நாயகம் உங்களிடம் ஒரு மிடறு பால் இலையா?ஒரு பேரித்தபழம் துண்டு இல்லையா? அதை கொடுத்து நோன்பு திறக்க செய்தாலும் அல்லாஹ் முழுமையான கூலியை தருவான். எனவே அந்த அமலிலும் கவனம் செலுத்த வேண்டும். இப்படி பெருமானார் சொல்லிகொடுத்த எல்லா ஒழுக்க முறைகளை பேணி வருகிற புனிதமிகு ரமலான் மாதத்தை  குர்ஆன் ஓதுவதிலும், திக்ர் செய்வதிலும்,துஆ கேட்பதிலும், நஃபிலான தொழுகைகள் தொழுவதிலும்,மார்க்க விஷயங்களை நமது பகுதியின் இமாம் களிடத்தில் கேட்டு தெரிந்து கொள்வதிலும், கழித்து வெற்றி பெற்ற மேன்மக்களில் நாமும் ஆக முயற்சிகள் செய்வோம். 

வல்லோன் அல்லாஹ் நம்முடைய ரமளானின் அமல்களை அவனது பொருத்தம் பெற்ற மக்களின் அமல்களை எப்படி அங்கீகரித்து கூலி வழங்கினானோ அது போன்று அங்கீகரிப்பானாக ஆமீன்.
தங்களின் ரமளானுடைய துஆக்களில் இந்த பாவியையும்    சேர்த்து கொள்ளுமாறு மிக பணிவன்போடு கேட்டு கொள்கிறேன்.















Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!