நாம் செய்யும் அமல்களை பாதுகாப்போம்!

                                     بسم الله الرحمن الرحيم 

                                   وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் காவல் தேடுகிறேன்.(113:5)

இன்று முழு உலகத்திலும் குறிப்பாக நமது பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் அமல்கள் செய்வதில் ஆர்வம் அதிகமாகி இருக்கிறது அல்ஹம்து லில்லாஹ். 

கடமையான  தொழுகை முதல் கொண்டு  மற்றெல்லா வணக்கங்களிலும் முஸ்லிம்கள் அதிக ஆர்வம் காட்டுவது போற்றக்கூடியது.  

பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நாம் செய்யக்கூடிய இந்த அமல்களை பாதுகாப்பதும் மிக மிக அவசியமான செயல் என்பதை நாம் விளங்கி கொள்ளவேண்டும்.


ஏனென்றால் நாம் சிரமப்பட்டு செய்யும் அமல்களை பாதுகாக்காவிட்டால் நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன் நிற்கும் போது அமலே செய்யாதவனை போல ஆகும் நிலைமை ஏற்பட்டுவிடும். 

நாம் உலகின் சில விஷயங்களை பாதுகாக்க என்னென்னே முயற்சிகளை எல்லாம் செய்கிறோம். 
நம் செல்வங்களை வங்கியில் வைத்து பாதுகாக்கிறோம்,நம்முடைய வியாபார பொருட்களை அதற்குரிய தகுந்த ஏற்பாடு செய்து பாதுகாக்கிறோம், நம் கடைகளிலுள்ள பொருட்களை யாரும் திருடிவிடக் கூடாதென்பதற்காக கண்காணிப்பு கேமராக்களை வைக்கிறோம், ஏன் நாம் பயன் படுத்தும் கணினியில் வைரஸ் வராமளிருக்க எத்தனை ஏற்பாடுகள் செய்கிறோம். அதேபோல நாம் செய்யும் அமல்களையும் மிக கவனமாக பாதுகாக்க வேண்டும்.

எனவே பெருமானார் (ஸல்) அவர்கள் நம் அமல்களை பாதுகாக்க சில விஷயங்களை சொல்லி கொடுத்தார்கள் அவைகளை நாம் நடைமுறை படுத்தினால் மட்டும் தான் நம் அமல்களை பாதுகாக்க முடியும்.

என்ன அந்த விஷயங்கள்?
நாம் சில பாவங்களின் பக்கம் அறவே செல்லாமல் இருக்கவேண்டும்.

அதிலே முதல் தரத்தில் உள்ளது தான் (பொறாமையும், முகஸ்துதியும் ).

நாயகம் ஒரு ஹதீஸிலே!விறகை எப்படி நெருப்பு எரித்து விடுகிறதோ அதேபோல பொறாமை நாம் செய்யும் எல்லா அமல்களையும் முழுமையாக எரித்து நாசமாகிவிடும் என்று சொன்னார்கள்.

இன்னுமொரு ஹதீஸிலே! உங்களுக்கு முன்னாள் வாழ்ந்த சமூகத்தாரிடமிருந்த ஒரு நோய் உங்களிடமும் வந்துவிடும் என்றார்கள். உடனே சஹாபாக்கள் யாரசூலுல்லாஹ் அது என்ன நோய்? என்று கேட்க அது தான் பொறாமையும்,குரோதமும் அது உங்களுடைய தீனை மொட்டை அடித்துவிடும் என்று நான் பயப்படுகிறேன் என்று சொன்னார்கள்.

ஆனால் இன்று நம்மில் அனேகமானோர் இந்த நோயினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

யாராவது ஒருவர் ஒரு துறையில் சிறு முன்னேற்றம் அடைந்தால் நாம் அவறின் மீது பொறாமை கொள்கிறோம். இதிலே யாருமே தப்புவது கிடையாது மார்க்க அறிஞர்கள் உட்பட எல்லோரிடமும் இந்த நோய் இருக்கிறது.

இதனால் நம்முடைய மொத்த அமல்களும் அழிந்துவிடும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்த பொறாமையை ரப்புல் ஆலமீன் சூனியத்தோடு அல்லாஹ் ஒப்பிட்டு குர்ஆனிலே கூறுகிறான்.

                                     وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் காவல் தேடுகிறேன்.(113:5)

இன்னும் சொல்லப்போனால் அந்த சூனியமும் பொறாமையால் தான் ஏற்படுகிறது. 

அதேப்போல நம் சமூகத்தில் ஒருவர் முன்னேறினால்  நம்மால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை அவருடைய வளர்ச்சியை எப்படியாவது தடுக்க நம்மாலான எல்லா முயற்சியையும் செய்கிறோம். அவரின் முன்னேற்றம் நம் சமூகத்தின் முன்னெற்றமாயிற்றெ இதனால் நம் இஸ்லாமிய சமூகம் இன்னும் மேம்படுமே என்ற எண்ணமெல்லாம் நமக்கு வருவதே இல்லை.இதனால் நம் சமூகம் இன்னமும் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது  
எனவே நிறைய அமல்கள் செய்வது பெரும் விஷயமல்ல நாம் செய்த அமல்களை பாதுகாப்பது தான் மிக மிக கடினம்.

பெருமானார் நற்குணங்களை தான் ஆர்வமூட்டினார்கள். தன்னுடைய தோழர்கள் யாரிடத்திலாவது நற்குணங்களை பார்த்தால் அந்த குணம் எல்லோரிடத்திலும் வருவதற்காக ஆர்வமூட்டுவார்கள். 

முஸ்னத் அஹ்மதில் பதிவான சம்பவம் ஒருமுறை பெருமானார் மஸ்ஜிதுன் நபவியில் சஹாபாக்களோடு அமர்ந்திருந்த சமயம் சஹாபாக்களிடம் இப்போது ஒருவர் வருவார் அவர் சுவர்க்கவாசி என்று நாயகம் சொன்னார்கள். அப்போது ஹழ்ரத் சஃத் இப்னு மாலிக் (ரலி)அவர்கள் ஒழு செய்த தண்ணீர் சொட்ட சொட்ட தன் செருப்பை இடது கையில் எடுத்துக்கொண்டு மஸ்ஜிதுன் நபவிக்குள் நுழைந்தார்கள்.நாயகம் மூன்று நாட்கள் இப்படியே சொல்ல மூன்று நாட்களும் அவர்கள் தான் வந்தார்கள். சபை களைந்த பிறகு ஹழ்ரத் சஃத் இப்னு மாலிக் (ரலி)அவர்கள் சுவர்க்கம் செல்லக்கூடிய விசேஷமான அமல் எது என்று கண்டறிய  ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் ஒரு திட்டம் தீட்டினார்கள். ஹழ்ரத் சஃத் இப்னு மாலிக் (ரலி)அவர்களின்  விட்டுக்கு சென்று நான் என் தந்தையிடம் சண்டையிட்டு விட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவந்து விட்டேன் எனவே தங்களின் இல்லத்தில்  தங்கிகொள்ள எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்க ஹழ்ரத் சஃத் (ரலி) அவர்களும் அனுமதித்தார்கள். மூன்று நாட்கள் கண்காணித்த பிறகு அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் நடந்ததை ஹழ்ரத் சஃத் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடத்தில் சொல்லி  எனக்கும் ஏன் தந்தையிக்கும் சண்டையெல்லாம் ஒன்றுமில்லை நாயகம் மூன்றுநாட்கள் சொல்லும் போதும் நீங்கள் தான் வந்தீர்கள் எனவே தாங்கள் செய்யும் சிறப்பான அமலை தெரிந்து கொள்ளத்தான் வந்தேன் ஆனால் அந்தளவுக்கு ஒன்றும் எனக்கு தெரியவில்லை என்று சொல்கிறார்கள். உடனே ஹழ்ரத் சஃத் இப்னு மாலிக் (ரலி)அவர்கள் நண்பரே நான் பெரிய பெரிய அமல்கள் ஒன்றும் செய்யவில்லை ஆனாலும் என் உள்ளத்தில் யாரைப்பற்றியும் தவறான எண்ணம் கொள்ளமாட்டேன் அதேபோல பிறரின் வளர்ச்சியை பார்த்து பொறாமை அடையமாட்டேன் என்று சொன்னார்கள்.  உங்களை இந்தளவுக்கு உயர்த்தியது இந்த குணம் தான். அமல் செய்வது மிக லேசு ஆனால் நம் உள்ளத்தை தூய்மையாக வைத்திருப்பது தாம் மிக கடினம் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

இந்த சம்பவத்தின் மூலம் நமக்கு பாடம் என்னவென்றால்? யாரின் மீதும் பொறாமை படக்கூடாது.அப்படி வாழ்ந்தால் குறைவாக அமல் செய்தாலும் சுவர்க்கம் சென்றுவிடலாம். ஆனால் பிறரின் மீதுள்ள பொறாமை நம் வெற்றியிக்கும் தடையாக இருப்பாதோடு நாம் மிக சிரமப்பட்டு செய்த அமல்களை அழித்துவிடும். 

எனவே தான் குர்ஆனிலே மிக அற்புதமான ஒரு துஆவை அல்லாஹ் நமக்கு கற்றுத்தருகிறான். 

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ
எங்கள் இறைவனே! எங்களுக்கும் ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக. அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக. எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்.கிருபை மிக்கவன்.(59:10)

ஹழ்ரத் அபு துஜான (ரலி) அவர்கள் மரணிக்கும்  நேரத்தில் மிக சந்தோஷமாக இருந்தார்கள்.நீங்கள் இவ்வளவு சந்தோஷமாக இருக்க காரணம் என்ன என்று சுற்றியிருந்தவர்கள் கேட்க? என்னுடைய இரண்டு அமல்கள் எனக்கு வெற்றியை தரும் என்றார்கள்.ஒன்று நான் தேவையில்லாமல் பேசியதே கிடையாது. இரண்டாவது முஸ்லிம்களின் விஷயத்தில் என் உள்ளம் மிக தூய்மையாக இருந்தது இந்த இரண்டு அமல்களையும் அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்று சொன்னார்கள்.

எனவே பொறமை நம் அமல்களை இல்லாமல் ஆக்கிவிடும். 

அடுத்து நாம் செய்யும் அமல்களை சொல்லிகாட்டுவது இதன் மூலமும் நம் அமல்கள் அழிந்துவிடும். நான் இத்தனை ஹஜ் செய்தேன்,இத்தனை உம்ரா செய்தேன், ஒரு நாளையிக்கு ஐந்து ஜுஸ் குர்ஆன் ஒதிவிடுவென். இப்படி நாம் செய்யும் அமல்களை சொல்லிக்காட்டினால் ஒரு நன்மை கூட கிடைக்காது. ரப்புல் ஆலமீன் ஒரு வசனத்தில் சொல்கிறான்.

وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَن يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا ۚ وَسَنَجْزِي الشَّاكِرِينَ

எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால் நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம். இன்னும் எவர் மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். நன்றி உடையோருக்கு அதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம்.
(3:145)

ஒருவர் அடுத்தவருக்கு காட்டுவதற்காக தொழுதால் அவர் ஷிர்க் வைத்து விட்டார், அடுத்தவருக்கு காட்டுவதற்காக நோன்பு பிடித்தால் அவர் ஷிர்க் வைத்து விட்டார்,  
அடுத்தவருக்கு காட்டுவதற்காக ஸதகா கொடுத்தால் அவர் ஷிர்க் வைத்து விட்டார், என்று நாயகம் சொன்னாரகள்.

ஹழ்ரத் முஹம்மத் (ரஹ்) அவர்களின் இறுதி நேரத்தில் என்னிடத்தில் வலது,இடது புறத்தில் இருக்கும் மலக்குமார்கள் கூட இல்லாமலிருந்தால் மிக நல்லது. ஏனென்றால் அவர்களுக்கு கூட நான் செய்யும் அமல்கள் தெரியக்கூடாது என்று நான் ஆசிக்கிறேன் என்று சொன்னார்கள். 

ஹழ்ரத் அலி (ரலி)அவர்களின் பேரர் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் மரணித்த பிறகு அவர்களை குளிப்பாட்டியவர்கள் அவர்களின் மனைவியிடத்தில்  ஹழ்ரத்தின் முதுகில் நிறைய தழும்புகள் இருந்ததை நான் பார்த்தேன் அது எவ்வாறு ஏற்பட்டது என்று கேட்க ஹழ்ரத் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் இரவு நேரங்களில் தன் முதுகில் கோதுமை மூட்டைகளை சுமந்து சென்று யாருக்குமே தெரியாமல் தேவையான மக்களுக்கு கொடுத்துவருவார்கள் அதனால் தான் இப்படி நிறைய தழும்புகள் ஆகிவிட்டது என்றார்கள். 

இப்படி நிறைய மக்கள் அல்லாஹ்விற்காக அமல் செய்திருக்கிறார்கள்.  

யார் புகழுக்காக அமல் செய்கிறார்களோ அவர்களை நாளை மறுமையில் கோடானக்கோடி மக்களுக்கு முன்னால் இவன் ஒரு புகழ் விரும்பி என்று அல்லாஹ் இழிவுபடுத்தி விடுவான் என்று நாயகம் (ஸல்) சொன்னார்கள்.

எனவே நாம் செய்யும் அமல்களை பொறாமையை விட்டும் முகஸ்துதியை விட்டும் பாதுகாக்க வேண்டும். நாம் செய்யும் அமல்கள் அல்லாஹ்விற்காக மட்டும் இருக்கவேண்டும்.   எல்லா விதத்திலும் மிக பரிசுத்தமான அமல்களை செய்யும் பாக்கியத்தை வல்லோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக அமீன்.   






































Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!