நாயகம் சொல்லி தந்த முறையில் துஆ செய்வோம்!

                                   بسم الله الرحمن الرحيم  

                    ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ

முஃமின்களே! உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.(7:55 )

 துஆ கபூல் ஆகுவதற்கு பெருமானார் சில விதிமுறைகளை கற்று தந்தார்கள் அவைகளை நாம் கடைபிடித்தால் இன்ஷா அல்லாஹ் நாமும் இறைவனால் ஒப்பு   கொள்ளப்பட்ட துஆ செய்பவர்களின் பட்டியலில் சேர்ந்து விடுவோம்.

முதலில் நாம் மிக கவனிக்க வேண்டியது துஆ கபூலாகும் என்று உறுதியான நம்பிக்கையோடு துஆ செய்ய வேண்டும். 


அல்லாமா முஹம்மது இப்னு சீரீன் (ரஹ்)அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும் போது ஒருவர் யாஅல்லாஹ் என்னை மன்னித்து விடு ஆனால் நீ என்னை மன்னிக்க மாட்டாய் என்று எனக்கு தெரியும் என்று துஆ செய்து கொண்டே  தவாஃப் செய்து கொண்டிருந்தார் இதை செவியுற்ற அல்லாமா முஹம்மத்  இப்னு சீரீன் (ரஹ்)அவர்கள் இப்படி துஆ செய்வது கூடாது அல்லாஹ் நம் துஆவை  ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியான நம்பிக்கையோடு துஆ செய்யவேண்டும் என்று சொல்லி யாஅல்லாஹ் நீ என்னை மன்னிப்பவனாக இருக்கிறாய் என்னை மன்னித்து விடு என்று கேட்க கற்றுக்கொடுத்தார்கள்.


எனவே நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது நம் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதியான நம்பிக்கையோடு துஆ செய்ய வேண்டும். 

அடுத்து ஹராமை விட்டு முழுமையாக விலகி  இருக்க வேண்டும்.

திருமிதியில் பதிவான ஆதாரபூர்வமான செய்தி ஹழ்ரத் சஃத் இப்னு அபிவக்காஸ் ரலி அவர்கள் நமது நபியிடத்தில்  நாயகமே நான் இறைவனிடத்தில் துஆ கேட்டால் தடையில்லாமல் கபூல் ஆக எனக்கு துஆ செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்ட போது பெருமானார் (ஸல்)அவர்கள் நீங்கள் ஹராமை உண்ணுவதை விட்டு விலகி இருந்தால் உங்கள் துஆ மறுக்கப்படாது என்று உபதேசம் செய்தார்கள் அதை நடைமுறை படுத்தி அக்காலத்தின் முஸ்தஜா புத்துஆவாக ஹழ்ரத் சஃத் இப்னு அபிவக்காஸ் ரலி அவர்கள் திகழ்ந்தார்கள் என்பது வரலாறு.


எனவே ஹராம் என்பது நம்முடைய மொத்த அமல்களையும் வீணாக்கிவிடும் என்பதை நன்கு உணர்ந்து எல்லா ஹராம்களை விட்டும் முழுமையாக ஒதுங்கி விட வேண்டும்.


ஹராமான வியாபாராம்,ஹராமான செயல்கள் போன்றவைகளை விட்டு முஸ்லிம்களாகிய நாம் மிக உஷாராக இருக்க வேண்டும்.


நாமும் ஹராமை உண்ணக்கூடாது பிறருக்கும் உன்ன கொடுக்க கொடாது. 


அல்லாமா முஹம்மது இப்னு சீரீன் (ரஹ்)அவர்கள் ஒரு மாநாட்டிற்கு தலைமை தாங்கி கொண்டிருக்கும் போது ஒருவர் அந்த மாநாட்டை கிழித்து கொண்டு வந்து அல்லாமா முஹம்மது இப்னு சீரீன் (ரஹ்)அவர்களிடத்தில் எனக்கு  நீங்கள் 2 தீனார் கடன் தரவேண்டும் என்று தகராறு செய்தார் ஆனால் அல்லாமா முஹம்மது இப்னு சீரீன் (ரஹ்)அவர்கள் நான் இதற்கு முன் உன்னை பார்த்ததே கிடையாது என்று அவனிடம் சொல்ல அந்த மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டுவிட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு  அந்த கடன் கேட்டு வந்த மனிதர் நீங்கள் என்னிடம் பணம் வாங்க வில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யுங்கள் என்று சொல்ல அல்லாமா முஹம்மது இப்னு சீரீன் (ரஹ்)அவர்களும் சத்தியம் செய்தார்கள்.சபை களைந்த பிறகு ஹழ்ரத் அவர்களின் சீடர்கள் 2 தீனாருக்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டுமா?அவன் கேட்ட 2 தீனாரை கொடுத்திருக்கலாமே என்று கேட்க அப்போது ஹழ்ரத் அவர்கள் என்னுடைய பணம் யாருக்கும் ஹராமாகி விடக்கூடாதென்று நான் பயப்படுகிறேன் என்று சொன்னார்கள்.

இந்தளவு தானும் ஹராமை விட்டு விலகி இருந்ததோடு தன்  மூலம் யாரும் ஹராமை செய்து விடக்கூடாதென்பதில் மிக கவனமாக இருந்தார்கள்.
எனவே நாமும் ஹராமை விட்டு முழுமையாக விலகி விட வேண்டும். 

அடுத்து துஆ மறுக்கப்படாத சில மனிதர்கள்:

திருமிதியிளும், அபு தாவூதிலும் பதிவான ஹதீஸ் மூன்று நபர்களின் துஆ மறுக்க படுவதில்லை 

1.ஒரு பெற்றோர் தன் பிள்ளைகளுக்காக செய்யும் துஆ.
2.நீதமான அரசன் கேட்கும் துஆ.
3.அநீதம் இளைக்கப்பட்டவரின் துஆ என்று நாயகம் சொன்னார்கள்.

இன்னொரு ஹதீஸில் பிரயாணம் செய்யும் ஒருவர் அவரின் பிரயாணம் முடியும் வரை அவர் கேட்கும் துஆவை அல்லாஹ் ஏற்று கொள்கிறான் என்றார்கள். 


இன்னொரு ஹதீஸில் ஒரு ஹாஜி ஹஜ்ஜை முடித்து விட்டு தன்னுடைய வீட்டிற்கு செல்லும் வரை அவரின் துஆ அங்கீகரிக்க படும் என்று நாயகம் சொன்னார்கள்.


அதேபோல நம் தேவைகளை அல்லாஹ்விடத்தில் கேட்பதற்கு முன் அல்லாஹ்வை அதிகம் புகழவேண்டும், பிறகு நாயகத்தின் மீது சலவாத்து சொல்லிக்கொள்ள வேண்டும், அஸ்மாவுள் ஹுஸ்னாக்களை அதிகம் ஓதி கொள்ளவேண்டும்.

துஆ அங்கீகரிக்க படும் நேரங்கள்:  

1.ஒவ்வொரு ஃபர்லான தொழுகைக்கு பிறகு
2.தஹஜ்ஜதுடைய நேரத்தில் 
3.மஃரிபுடைய அதானுக்கு முன்னாள் 
4.அதானுக்கும் இகாமத்திற்கும் மத்தியிலுள்ள நேரம் 
5.ஜும்மாவுடைய இரு குதுபாக்களுக்கு மத்தியில் இமாம் அமரும்போது 
6.ஜும்மா நாளின் அசாருக்கு பின்னால் 
7.குர்ஆனை ஓதி முடித்த பிறகு 
8.ஆழ்ந்த தூங்கி கொண்டிருக்கும் போது பயம் ஏற்பட்டு முழித்த நேரத்தில் 
9.கடுமையான கஷ்டத்தில் மனம் வாடும் போது 
10.நற்காரியங்கள்,தான தர்மம் செய்து விட்டு பிறகு 
இது போன்ற நேரங்களில் துஆ கேட்டால் நம் துஆ அங்கீகரிக்கப்படும் என்று நாயகம் சொன்னார்கள். 
                                                   நூல்:மிஷ்காத் 

இன்று துஆவை வேண்டி கொள்பவர்கள் அதிகம் அனால் துஆவை பெறுபவர்கள் குறைவு.

யாரை பார்த்தாலும் நம்முடைய தேவைகளை அவரிடத்தில் கொட்டி நமக்காக துஆ செய்ய சொல்கிறோம் அனால் நாம் கேட்காமலேயே மற்றவர்கள் நமக்காக துஆ செய்வது போல்  நாம் நடந்து கொள்வதில்லை.

நாயகத்தின் துஆவை பெற்ற மூன்று அப்துல்லாஹ்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)அவர்கள் நாயகத்தின் துஆவை பெற்றதால் இமாமுல் ஃபுகஹாவாக ஆனார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் நாயகத்தின் துஆவை பெற்றதால் இமாமுல் முஃபஸ்ஸிரீன் ஆனார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)அவர்கள் நாயகத்தின் துஆவை பெற்றதால் இமாமுல் முஹத்திஸீன் ஆனார்கள்.

எனவே நாமும் பிறரின் துஆவை பெறுபவர்களாக ஆக வேண்டும்.

எப்படி துஆவை பெறுவது பாக்கியமோ அதுபோல் நம் பெற்றோர்கள்  மற்றும் நல்லோர்களின்  சாபத்தை விட்டும் பாதுகாப்பாக இருப்பதும் அவசியம்.

நாம் அல்லாஹ்விடத்தில் கையேந்தும் பொழுது நமது கையை அல்லாஹ் வெறுங்கையாக ஆக்க கூடாதென்றால் நம்மிடத்தில் பிறர் கேட்கும் போது நாம் இல்லை என்று சொல்லக்கூடாது.

எனவே இது போன்ற விஷயங்களை கவனித்து நாம் துஆ கேட்கும் பொழுது நம் துஆ இன்ஷா அல்லாஹ் ஏற்றுக்கொள்ளப்படும்.

இஸ்லாமிய சமூகம் இன்று நிறைய தேவைகளோடு சுற்றி திரிகிறது ஆனால் அந்த தேவைகளை யார் நிறைவேற்றுவானோ அவனை விட்டு விட்டு மற்ற எல்லோரிடமும் கேட்டுக்கொண்டு திரிகிறது.இந்த நிலை மாறி நம்முடைய தேவையை நிறைவேற்றும் ரப்பிடத்தில் கேட்போம்.

நாயகம் எப்படி கேட்டால் அல்லாஹ் தருவான் என்று சொன்னார்களோ அப்படி அல்லாஹ்விடத்தில் கேட்போம் 

வல்லோன் அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம் துஆகளை ஏற்று கொள்வானாக,முஸ்லிம்கள் இழந்த கண்ணியத்தை மீட்டு தருவானாக மற்றவர்கள் மத்தியில் முஸ்லிம்களை சிறப்பொடு வாழவைப்பானாக ஆமீன் 











Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!