பெருமானாரின் வாழ்க்கை வரலாறு
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)
இவ்வருடத்தின் புனிதமிக்க ரபீஉல் அவ்வல் மாதத்தின் முதல் ஜும்மாவை அல்லாஹ்வின் அருளால் நாம் அடைந்திருக்கிறோம்.இன்ஷா அல்லாஹ் இம்மாதம் முழுக்க பெருமானாரின் பிறப்பு முதல் இறப்பு வரை முழு வாழ்க்கை வரலாறை பார்க்க போகிறோம்..
ஏன்? இம்மாதத்தில் மட்டும் தான் நாயகத்தின் வாழ்கையை பற்றி பேசவேண்டுமா? மற்ற காலங்களில் பேசக்கூடாதா? என்று நம்மில் சிலருக்கு எண்ணம் தோன்றலாம்! மனிதர்களின் இயற்கையே ஒரு நிகழ்வு நடக்கும் தருணம் அந்த நிகழ்வை பற்றி பேசினால் தான் நம் உள்ளத்தில் ஆழமாக பதியும்.இது மனிதர்களின் பழக்கம்.எனவே தான் மற்ற காலங்களில் பெருமானாரை பற்றி பேசுவதை விட அவர்கள் இப்பூவுலகிற்கு ஓளியாய் உதித்த இந்த மாதத்தில் பேசுவது நமக்கு மிக பொருத்தமாக இருக்கும்.
எனவே இன்ஷா அல்லாஹ் இந்த ஜும்மா முதல் நாம் பெருமானாரின் முழு வாழ்கையை பார்க்கலாம். பிறப்பு :
அகிலத்தின் அருட்கொடை, இறைத்தூதர்களின்
தலைவர் மக்காவில் பனூ ஹாஷிம்
பள்ளத்தாக்கில் ரபீவுல் அவ்வல் மாதம், 9ஆம்
நாள் திங்கட்கிழமை (கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20
அல்லது 22ம் தேதி) அதிகாலையில் பிறந்தார்கள்.
அது யானைச் சம்பவம் நடைபெற்ற முதலாவது
ஆண்டு. மேலும் ‘அனூ ஷேர்வான்’ என்ற
கிஸ்ராவின் ஆட்சி முடிவுக்கு வந்த நாற்பதாம்
ஆண்டு. இக்கருத்தையே அறிஞர் முஹம்மது
ஸுலைமான் உறுதிப்படுத்துகிறார்.
{ரஹ்மத்துல்லில் ஆலமீன்}
குழந்தையைப் பெற்றெடுத்ததும் ஆமினா அந்த
நற்செய்தியை அப்துல் முத்தலிபுக்குத்
தெரிவித்தார். அவர் மகிழ்ச்சியுடன் தனது
பேரரை கஅபாவுக்கு தூக்கிச் சென்று
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவருக்காக
பிரார்த்தித்தார். மேலும் அக்குழந்தைக்கு “முஹம்மது” எனப் பெயரிட்டார். இப்பெயர்
எவருக்கும் இதற்கு முன் சூட்டப்படவில்லை.
அரபியர்களின் வழக்கப்படி ஏழாம் நாள் நபி
ஸல்) அவர்களுக்கு கத்னா செய்யப்பட்டது. {தல்கீஹ், இப்னு ஹிஷாம்}
ஆமினாவிற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து நபி
(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டிய முதல் பெண்
அபூலஹப் உடைய அடிமைப் பெண்
ஸுவைபிய்யா ஆவார். (இத்ஹாஃபுல் வரா)
அப்போது ஸுவைபிய்யாவுக்கு ‘மஸ்ரூஹ்’
எனும் ஆண் குழந்தை பிறந்திருந்தது. நபி (ஸல்)
அவர்களுக்கு முன் ஹம்ஜா அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூ ஸலமா இப்னு
அப்துல் அஸதுக்கும் அவர் பாலூட்டியுள்ளார்.
{ஸஹீஹுல் புகாரி}
நகர்ப்புற அரபியர்கள் தங்களது
குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்காகக்
கிராமப்புற செவிலியர்களைத் தேர்ந்தெடுக்கும்
வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
குழந்தைகளுக்கு நகரத்திலுள்ள நோய்
தொற்றிவிடாமலிருக்கவும், உடல் உறுதி பெற்று மொழியை திறம்படக் கற்றுக் கொள்ளவும் இந்த
நடைமுறையைக் கையாண்டு வந்தனர். தனது
பேரருக்குரிய செவிலித் தாயை அப்துல்
முத்தலிப் தேடினார். இறுதியாக ஸஅத் இப்னு
பக்ர் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த ‘ஹலீமா
பின்த் அபூ துவைப் அப்துல்லாஹ் இப்னுல்
ஹாரிஸ்’ என்ற பெண்ணிடம் ஒப்படைத்தார்.
எங்களுடன் ஒரு கிழப்பெண் ஒட்டகம் இருந்தது.
அதில் ஒரு சொட்டு பால் கூட கறக்க முடியாது.
எங்களது குழந்தை பசியால் அழுது
கொண்டிருந்ததால் இரவு முழுவதும் எங்களால்
உறங்க முடியவில்லை. எனது மார்பில்
அக்குழந்தையின் பசி தீர்க்கும் அளவு பாலும்
இல்லை. எங்களது ஒட்டகையிலும் பாலில்லை.
எனினும், அல்லாஹ்வின் புறத்திலிருந்து என்
சிரமத்திற்கான விடிவையும் அவனது
அருளையும் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன்.
நான் வாகனித்த பெண் கழுதை மிகுந்த
பலவீனத்துடன் மெதுவாகவே சென்றது. இது
என்னுடன் வந்த குழுவினருக்கு பெரும்
சிரமத்தை அளித்தது. ஒரு வழியாக மக்காவை
அடைந்து பால்குடிக் குழந்தைகளைத் தேடி
அலைந்தோம். எங்களுடன் சென்ற அனைத்துப்
பெண்களிடமும் அல்லாஹ்வின் தூதரை
காட்டப்பட்டது. எனினும், அக்குழந்தை அனாதை
என்று கூறப்பட்டதால் அனைவரும் அதனை
பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.
ஏனெனில், குழந்தையின் தந்தையிடமிருந்தே
நாங்கள் ஊதியம் பெறமுடியும். இவர்கள்
அநாதை என்பதால் தாய் அல்லது பாட்டனார்
எங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? என
எங்களுக்குள் பேசிக் கொண்டோம். எனவே,
அல்லாஹ்வின் தூதரை எடுத்துச் செல்ல
எங்களில் எவரும் விரும்பவில்லை. என்னைத்
தவிர என்னுடன் வந்த அனைத்துப்
பெண்களுக்கும் குழந்தைகள் கிடைத்தனர்.
அனைவரும் திரும்பிச் செல்லத்
தொடங்கியபோது நான் எனது கணவரிடம் “அனைவரும் குழந்தையுடன் திரும்புகையில்
நான் வெறுங்கையுடன் செல்வதில் எனக்குச்
சிறிதும் சம்மதமில்லை. அல்லாஹ்வின்
கூறியதற்கு அவர் “தாராளமாகச் செய்யலாமே!
அக்குழந்தையின் மூலம் அல்லாஹ் நமக்கு (பரக்கத் செய்யலாம்) வளம் தரலாம்” என்றார்.
நான் அங்கு சென்று குழந்தையை வாங்கி
வந்தேன். எனக்கு வேறு எந்தக் குழந்தையும்
கிட்டவில்லை என்ற காரணத்தால் மட்டுமே
நான் அக்குழந்தையை வாங்கிக்கொண்டேன்.
அக்குழந்தையை எனது மடியில் வைத்தவுடன்
எனது மார்புகளில் பால் சுரந்தது. அக்குழந்தை
வயிறு நிரம்ப பால் அருந்தியது. அதன்
சகோதரராகிய (எனது குழந்தையும்)
பாலருந்தியது. பிறகு இருவரும்
உறங்கிவிட்டனர். அதற்கு முன் நாங்கள் எங்கள்
குளுந்தையுடன் உறங்க முடிந்ததே இல்லை.
என் கணவர் எங்கள் கிழ ஒட்டகையை நோக்கிச்
சென்றார். அதன் மடி பாலால் நிரம்பியிருந்தது.
அதை கறந்து நானும் எனது கணவரும் பசிதீரக்
குடித்தோம்.
அன்றிரவை நிம்மதியாகக் கழித்தோம்.
காலையில் எனது கணவர்: ‘ஹலீமாவே
அல்லாஹ்வின் மீதாணையாக! நீ மிகவும்
பரக்கத் (வளம்) பொருந்திய ஒரு குழந்தையை
அடைந்திருக்கிறாய்’ என்றார். அதற்கு நான்
‘அப்படித்தான் நானும் நம்புகிறேன்’ என்றேன்.
பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
எனது பெண் கழுதையில் அக்குழந்தையையும்
அமர்த்திக் கொண்டேன். எனது பெண் கழுதை
அப்பெண்கள் என்னை நோக்கி “அபூ துவைபின்
மகளே! உனக்கு என்ன நேர்ந்தது. எங்களுடன்
மெதுவாகச் செல்! நீ வரும்போது வாகனித்து
வந்த கழுதைதானா இது?” என்றனர். “நான்
அல்லாஹ்வின் மீதாணையாக! அதுதான் இது”
என்றேன். அவர்கள் “நிச்சயமாக என்னவோ
நேர்ந்துவிட்டது” என்றனர்.எங்களது ஊருக்குத்
திரும்பினோம்.
திரும்பும்போது கொழுத்து மடி சுரந்து திரும்பும்.
அதை கறந்து அருந்துவோம். எங்களைத் தவிர
வேறு எவரும் தங்களது ஆடுகளில் ஒரு துளிப்
பால் கூட கறக்க முடியாது. அவர்களது
ஆடுகளின் மடிகள் வரண்டிருந்தன. எங்கள்
சமூகத்தில் அனைவரும் தங்களது
இடையர்களிடம் ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?
நீங்கள் ஹலீமாவின் இடையர் மேய்க்கும்
பகுதிகளுக்குச் சென்று மேய்த்து வாருங்கள்!’
என்று சொல்வார்கள். இருப்பினும் எனது ஆடு
வயிறு நிரம்பி மடி சுரந்து வரும்போது
அவர்களுடைய ஆடுகள் வயிறுகள் ஒட்டிப்
போய் காய்ந்த மடியுடன் திரும்பி வந்தன.
இவ்வாறு அக்குழந்தைக்கு பால்குடி
மறக்கடிக்கும் வரையிலான இரண்டு வருடங்கள்
வரை அல்லாஹ்விடமிருந்து பல
நன்மைகளையும் வளங்களையும் அனுபவித்துக்
கொண்டிருந்தோம். இரண்டு வயதில் ஏனைய
நெஞ்சு திறக்கப்படுதல்:
இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் மீண்டும் ஸஅத்
கிளையாரிடம் அழைத்து வரப்பட்டார்கள்.
சில மாதங்களுக்குப் பின் அவர்களது நெஞ்சு
திறக்கப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றதென இப்னு
இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். (மற்ற
வரலாற்றாசியர்கள் நபி (ஸல்) அவர்களின்
நான்காவது வயதில் தான் அந்த நிகழ்ச்சி
நடைபெற்றது என்பர்.)
அந்த நிகழ்ச்சி குறித்து அனஸ் (ரழி)
கூறுவதாவது: நபி (ஸல்) அவர்கள்
சிறுவர்களுடன் விளையாடிக்
கொண்டிருந்தபோது வானவர் ஜிப்ரயீல் (அலை)
அவர்கள் வருகைத்தந்து நபி (ஸல்)அவர்களை
மயக்க முற செய்து நெஞ்சை திறந்து
இதயத்தை வெளியே எடுத்தார். அதில்
ஒட்டியிருந்த ஒரு துண்டை அகற்றிவிட்டு ‘இது
உம்மிடமிருந்த ஷைத்தானின் பங்காகும் என்று
கூறி, தங்கத் தட்டில் இதயத்தை வைத்து அதில்
ஜம்ஜம் தண்ணீரை ஊற்றிக் கழுவினார். பிறகு
அந்த இதயப் பகுதிகளை ஒன்றிணைத்து
நெஞ்சினுள் திரும்பப் பதித்துவிட்டார்.
இதைக்கண்ட சிறுவர்கள் ஹலீமாவிடம்
ஓடோடி வந்து “முஹம்மது கொலை
செய்யப்பட்டார்” என்றனர். நபி (ஸல்) அவர்களை
நோக்கி அனைவரும் விரைந்தனர். அவர் நிறம்
மாறிக் காட்சியளித்தார்.
அனஸ் (ரழி) கூறினார்கள்: “நபி (ஸல்)
அவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்டதற்கான
அடையாளத்தை நான் கண்டேன்.”
இந்நிகழ்ச்சியால் அதிர்ந்துபோன ஹலீமா நபி
(ஸல்) அவர்களை அவரது தாயாரிடம்
ஒப்படைத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்
ஆறு வயது வரை தாயாரிடமே வளர்ந்தார்கள்.
ஆமினா, மதீனாவில் மரணமடைந்த தனது
அன்புக் கணவரின் கப்ரைக் கண்டுவர விரும்பினார். தனது குழந்தை முஹம்மது ஸல்
அவர்கையும்,ஊழியப் பெண் உம்மு அய்மன்
மற்றும் பொறுப்பாளர் அப்துல் முத்தலிப்
ஆகியோருடன் மக்காவிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதீனாவிற்கு பயணம் மேற்கொண்டார்.
மன அமைதிக்காக ஒரு மாதம் அங்கு
தங்கிவிட்டு மக்காவுக்கே மீண்டும்
பயணமானார். வழியில் ஆமினா நோய்
வாய்ப்பட்டார்.
பிறகு நோய் அதிகமாகி மக்காவுக்கும்
மதீனாவுக்குமிடையே அப்வா என்ற இடத்தில்
மரணமடைந்தார்.
நபி (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிப்
மக்காவுக்கு அழைத்து வந்தார். அவர்
அனாதையான தன் பேரர் மீது அன்பையும்
பாசத்தையும் ஊட்டி வளர்த்தார். பிறக்கும் முன்
தந்தையை இழந்த சோகம் ஒரு புறம்
வருத்திக்கொண்டிருக்க, தற்போது தாயையும்
இழந்து அந்த சோகம் இரட்டிப்பாகி விட்டது.
தனது பிள்ளைகளை விட பேரர் மீது மிகுந்த
நபி (ஸல்) அவர்களுக்கு 8 ஆண்டு இரண்டு
மாதங்கள் பத்து நாள்கள் ஆனபோது பாட்டனார்
அப்துல் முத்தலிப் மக்காவில் மரணமடைந்தார்.
தனது மரணத்திற்கு முன்பே சிறுவரை அவரது
தந்தை அப்துல்லாஹ்வின் உடன்பிறந்த
சகோதரர் அபூதாலிப் பராமரிக்க வேண்டுமென
விரும்பினார். (இப்னு ஹிஷாம்)
பிரியமான பெரியதந்தையிடம்
சகோதரன் மகனைப் பராமரிக்கும் பொறுப்பை
அபூதாலிப் மிகச் சிறப்பான முறையில்
நிறைவேற்றினார். தனது பிள்ளைகளில்
ஒருவராக அவரை ஆக்கிக் கொண்டார்.
அவருக்கு மிகுந்த முக்கியத்துவமும்
கண்ணியமும் அளித்து வந்தார். ஏறத்தாழ
நாற்பது ஆண்டுகள் பாதுகாத்து அரவணைத்தார்.
நபி (ஸல்) அவர்களுக்காகவே பிறரின்
நட்பையும் வெறுப்பையும் சம்பாதித்துக்
கொண்டார். இதன் விவரங்களை உரிய
இடங்களில் காண்போம்.
மாநபிக்காக மழைபொழிதல்
ஜல்ஹுமா இப்னு உர்ஃபுதா கூறுகிறார்: கடும்
பஞ்ச காலத்தில் நான் மக்கா சென்றேன்.
“கணவாய்கள் வரண்டுவிட்டன.
பிள்ளைக்குட்டிகள் வாடுகின்றனர். வாருங்கள்!
மழை வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று
குறைஷியர்கள் அபூதாலிபிடம் கூறினர். அவர்
வெளியேறி வந்தார். அவருடன் மேகம்
மறைக்காத சூரியனின் பிரகாசமுடைய ஒரு
சிறுவரும் இருந்தார். மேலும், சிறுவர்கள் பலர்
அபூதாலிபைச் சுற்றிலும் இருந்தனர். அபூதாலிப்
அச்சிறுவரை தூக்கி அவரின் முதுகை
சேர்த்துவைத்து பிரார்த்தித்தார். அபூதாலிபின்
தோள் புஜத்தை அச்சிறுவர் பற்றிக் கொண்டார்.
மேகமற்றுக் கிடந்த வானத்தில் அங்கும்
இங்குமிருந்து மேகங்கள் ஒன்று திரண்டன.
பெரும் மழையால் கணவாய்களில் வெள்ளம்
கரை புரண்டோடியது. மக்கா நகரும் அதன்
சுற்றுப்புறங்களும் பசுமையாக மாறின. இதை
சுட்டிக்காட்டும் விதமாக அபூதாலிப் கூறினார்.
துறவி பஹீரா
நபி (ஸல்) அவர்களுக்கு 12 வயதாகும் போது
அபூதாலிப் வியாபாரத்திற்காக ’ஷாம்’ தேசம்
சென்றார். அப்போது நபியவர்களையும்
தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம்
நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தனர். அங்கு ‘பஹீரா’ என்ற பிரபலமான துறவி ஒருவர்
இருந்தார். அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்’ என்று
சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில்
செல்ல மாட்டார். எனினும், இந்த வியாபாரக்
கூட்டம் புஸ்ரா சென்றதும் அவர்களை சந்திக்க
வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு
வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின்
கரத்தைப் பற்றிக்கொண்டு “இதோ உலகத்தாரின்
தலைவர்! இதோ உலகத்தாரின் இறைவனுடைய
தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு
அருட்கொடையாக அனுப்புவான்” என்று
கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப்
பெரியவர்களும் “இது எப்படி உமக்குத் தெரியும்?”
என வினவினர். அவர் “நீங்கள் கணவாய்
வழியாக வந்தபோது கற்களும் மரங்களும் சிரம்
பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர
வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா. மேலும்,
அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப்
போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக்
கொண்டும் நான் அவரை அறிவேன். எங்களது
வேதங்களில் அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது”
என்று கூறினார். பிறகு அவர்களுக்கு
விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை
ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள
ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு
ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை
இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள்
என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார்.
அதற்கினங்க அபூதாலிப் நபி ஸல் அவர்களை
சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி
வைத்தார். (ஸுனனுத் திர்மிதி, தபரீ, முஸன்னஃப்
அபீஷைபா, இப்னு ஹிஷாம், பைஹகீ)
பெருமானார் (ஸல்)சிறுவயதிலேயே தன தன்
பெரிய தந்தையின் ஆடுகளை மேய்ப்பது
வழக்கம். பெரிய தந்தைக்கு தாம் ஒரு சுமையாக
இருக்க கூடாது என்பதற்காக மற்றவர்களின்
ஆடுகளைகூலிக்கும் மேய்த்து வந்தார்கள்.ஆடுகளை மக்காவுக்கு வெலெயே உள்ள கராரீத்
என்னும் மைதானத்தில் மேய விட்டு ஆழ்ந்த
சிந்தனையில் மூழ்கியிருப்பார்கள்.
சிறுவர்கள் விளையாட அழைத்தாலும் ஏதாவது
தத்துவார்த்தமான பதிலை சொல்லி ஒதிங்கி
கொள்ளவார்கள்.

பால் குடிக்காலங்களில் ஹலீமா நபி (ஸல்)
அவர்களிடம் பல அதிசய நிகழ்வுகளைக்
கண்டார். அதை அவர்களே சொல்கிறார்கள்.
“நான் எனது கணவர் மற்றும் கைக்
குழந்தையுடன் ஸஅத் கிளையைச் சேர்ந்த சில
பெண்களோடு பால் குடிக்கும் குழந்தைகளைத்
தேடி வெளியில் புறப்பட்டோம். அது
கடுமையான பஞ்ச காலம். நான் எனது
அவர்களிடம் பல அதிசய நிகழ்வுகளைக்
கண்டார். அதை அவர்களே சொல்கிறார்கள்.
“நான் எனது கணவர் மற்றும் கைக்
குழந்தையுடன் ஸஅத் கிளையைச் சேர்ந்த சில
பெண்களோடு பால் குடிக்கும் குழந்தைகளைத்
தேடி வெளியில் புறப்பட்டோம். அது
கடுமையான பஞ்ச காலம். நான் எனது
வெள்ளைக் கழுதையில் அமர்ந்து பயணித்தேன்.
எங்களுடன் ஒரு கிழப்பெண் ஒட்டகம் இருந்தது.
அதில் ஒரு சொட்டு பால் கூட கறக்க முடியாது.
எங்களது குழந்தை பசியால் அழுது
கொண்டிருந்ததால் இரவு முழுவதும் எங்களால்
உறங்க முடியவில்லை. எனது மார்பில்
அக்குழந்தையின் பசி தீர்க்கும் அளவு பாலும்
இல்லை. எங்களது ஒட்டகையிலும் பாலில்லை.
எனினும், அல்லாஹ்வின் புறத்திலிருந்து என்
சிரமத்திற்கான விடிவையும் அவனது
அருளையும் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன்.
நான் வாகனித்த பெண் கழுதை மிகுந்த
பலவீனத்துடன் மெதுவாகவே சென்றது. இது
என்னுடன் வந்த குழுவினருக்கு பெரும்
சிரமத்தை அளித்தது. ஒரு வழியாக மக்காவை
அடைந்து பால்குடிக் குழந்தைகளைத் தேடி
அலைந்தோம். எங்களுடன் சென்ற அனைத்துப்
பெண்களிடமும் அல்லாஹ்வின் தூதரை
காட்டப்பட்டது. எனினும், அக்குழந்தை அனாதை
என்று கூறப்பட்டதால் அனைவரும் அதனை
பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.
ஏனெனில், குழந்தையின் தந்தையிடமிருந்தே
நாங்கள் ஊதியம் பெறமுடியும். இவர்கள்
அநாதை என்பதால் தாய் அல்லது பாட்டனார்
எங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? என
எங்களுக்குள் பேசிக் கொண்டோம். எனவே,
அல்லாஹ்வின் தூதரை எடுத்துச் செல்ல
எங்களில் எவரும் விரும்பவில்லை. என்னைத்
தவிர என்னுடன் வந்த அனைத்துப்
பெண்களுக்கும் குழந்தைகள் கிடைத்தனர்.
அனைவரும் திரும்பிச் செல்லத்
தொடங்கியபோது நான் எனது கணவரிடம் “அனைவரும் குழந்தையுடன் திரும்புகையில்
நான் வெறுங்கையுடன் செல்வதில் எனக்குச்
சிறிதும் சம்மதமில்லை. அல்லாஹ்வின்
குழந்தையை பெற்று வருகிறேன்” என்று
கூறியதற்கு அவர் “தாராளமாகச் செய்யலாமே!
அக்குழந்தையின் மூலம் அல்லாஹ் நமக்கு (பரக்கத் செய்யலாம்) வளம் தரலாம்” என்றார்.
நான் அங்கு சென்று குழந்தையை வாங்கி
வந்தேன். எனக்கு வேறு எந்தக் குழந்தையும்
கிட்டவில்லை என்ற காரணத்தால் மட்டுமே
நான் அக்குழந்தையை வாங்கிக்கொண்டேன்.
அக்குழந்தையை எனது மடியில் வைத்தவுடன்
எனது மார்புகளில் பால் சுரந்தது. அக்குழந்தை
வயிறு நிரம்ப பால் அருந்தியது. அதன்
சகோதரராகிய (எனது குழந்தையும்)
பாலருந்தியது. பிறகு இருவரும்
உறங்கிவிட்டனர். அதற்கு முன் நாங்கள் எங்கள்
குளுந்தையுடன் உறங்க முடிந்ததே இல்லை.
என் கணவர் எங்கள் கிழ ஒட்டகையை நோக்கிச்
சென்றார். அதன் மடி பாலால் நிரம்பியிருந்தது.
அதை கறந்து நானும் எனது கணவரும் பசிதீரக்
குடித்தோம்.
அன்றிரவை நிம்மதியாகக் கழித்தோம்.
காலையில் எனது கணவர்: ‘ஹலீமாவே
அல்லாஹ்வின் மீதாணையாக! நீ மிகவும்
பரக்கத் (வளம்) பொருந்திய ஒரு குழந்தையை
அடைந்திருக்கிறாய்’ என்றார். அதற்கு நான்
‘அப்படித்தான் நானும் நம்புகிறேன்’ என்றேன்.
பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
எனது பெண் கழுதையில் அக்குழந்தையையும்
அமர்த்திக் கொண்டேன். எனது பெண் கழுதை
என்னுடன் வந்த குழுவினர் அனைவரின்
கழுதைகளையும் முந்திக் கொண்டு சென்றது.
அப்பெண்கள் என்னை நோக்கி “அபூ துவைபின்
மகளே! உனக்கு என்ன நேர்ந்தது. எங்களுடன்
மெதுவாகச் செல்! நீ வரும்போது வாகனித்து
வந்த கழுதைதானா இது?” என்றனர். “நான்
அல்லாஹ்வின் மீதாணையாக! அதுதான் இது”
என்றேன். அவர்கள் “நிச்சயமாக என்னவோ
நேர்ந்துவிட்டது” என்றனர்.எங்களது ஊருக்குத்
திரும்பினோம்.
அல்லாஹ்வின் பூமியில் எங்களது பகுதியைப்
போன்றதொரு வறண்ட பூமியை நான்
கண்டதில்லை. ஆனால், மேய்ச்சலுக்கு
செல்லும் எனது ஆடுகள் மாலையில் வீடு
போன்றதொரு வறண்ட பூமியை நான்
கண்டதில்லை. ஆனால், மேய்ச்சலுக்கு
செல்லும் எனது ஆடுகள் மாலையில் வீடு
திரும்பும்போது கொழுத்து மடி சுரந்து திரும்பும்.
அதை கறந்து அருந்துவோம். எங்களைத் தவிர
வேறு எவரும் தங்களது ஆடுகளில் ஒரு துளிப்
பால் கூட கறக்க முடியாது. அவர்களது
ஆடுகளின் மடிகள் வரண்டிருந்தன. எங்கள்
சமூகத்தில் அனைவரும் தங்களது
இடையர்களிடம் ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?
நீங்கள் ஹலீமாவின் இடையர் மேய்க்கும்
பகுதிகளுக்குச் சென்று மேய்த்து வாருங்கள்!’
என்று சொல்வார்கள். இருப்பினும் எனது ஆடு
வயிறு நிரம்பி மடி சுரந்து வரும்போது
அவர்களுடைய ஆடுகள் வயிறுகள் ஒட்டிப்
போய் காய்ந்த மடியுடன் திரும்பி வந்தன.
இவ்வாறு அக்குழந்தைக்கு பால்குடி
மறக்கடிக்கும் வரையிலான இரண்டு வருடங்கள்
வரை அல்லாஹ்விடமிருந்து பல
நன்மைகளையும் வளங்களையும் அனுபவித்துக்
கொண்டிருந்தோம். இரண்டு வயதில் ஏனைய
குழந்தைகளைவிட மிக உறுதியாகவும் வலிமையாகவும் அக்குழந்தை வளர்ந்திருந்தது.
அவரிடமிருந்து ஏராளமாக நன்மைகளை
நாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்ததால்
அவரை எங்களுடன் தங்க வைத்துக் கொள்ள
மிகுந்த ஆவல் கொண்டோம். எனினும், தவணை
முடிந்து விட்டமையால் அவரது தாயாரிடம்
அழைத்துச் சென்றோம். அவரது தாயாரிடம்
‘இந்த அருமைக் குழந்தை இன்னும்
திடகாத்திரமாக வளரும் வரை என்னிடமே
விட்டுவிடுங்கள். மக்காவில் ஏதேனும் நோய்
அவரைப் பீடித்து விடுமென நான் அஞ்சுகிறேன்’
என்று கூறினேன். எனது தொடர்ச்சியான
வற்புறுத்தலால் குழந்தையை என்னிடமே
ஒப்படைத்து விட்டார்.” (இப்னு ஹிஷாம்)
அவரிடமிருந்து ஏராளமாக நன்மைகளை
நாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்ததால்
அவரை எங்களுடன் தங்க வைத்துக் கொள்ள
மிகுந்த ஆவல் கொண்டோம். எனினும், தவணை
முடிந்து விட்டமையால் அவரது தாயாரிடம்
அழைத்துச் சென்றோம். அவரது தாயாரிடம்
‘இந்த அருமைக் குழந்தை இன்னும்
திடகாத்திரமாக வளரும் வரை என்னிடமே
விட்டுவிடுங்கள். மக்காவில் ஏதேனும் நோய்
அவரைப் பீடித்து விடுமென நான் அஞ்சுகிறேன்’
என்று கூறினேன். எனது தொடர்ச்சியான
வற்புறுத்தலால் குழந்தையை என்னிடமே
ஒப்படைத்து விட்டார்.” (இப்னு ஹிஷாம்)
நெஞ்சு திறக்கப்படுதல்:
இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் மீண்டும் ஸஅத்
கிளையாரிடம் அழைத்து வரப்பட்டார்கள்.
சில மாதங்களுக்குப் பின் அவர்களது நெஞ்சு
திறக்கப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றதென இப்னு
இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். (மற்ற
வரலாற்றாசியர்கள் நபி (ஸல்) அவர்களின்
நான்காவது வயதில் தான் அந்த நிகழ்ச்சி
நடைபெற்றது என்பர்.)
அந்த நிகழ்ச்சி குறித்து அனஸ் (ரழி)
கூறுவதாவது: நபி (ஸல்) அவர்கள்
சிறுவர்களுடன் விளையாடிக்
கொண்டிருந்தபோது வானவர் ஜிப்ரயீல் (அலை)
அவர்கள் வருகைத்தந்து நபி (ஸல்)அவர்களை
மயக்க முற செய்து நெஞ்சை திறந்து
இதயத்தை வெளியே எடுத்தார். அதில்
ஒட்டியிருந்த ஒரு துண்டை அகற்றிவிட்டு ‘இது
உம்மிடமிருந்த ஷைத்தானின் பங்காகும் என்று
கூறி, தங்கத் தட்டில் இதயத்தை வைத்து அதில்
ஜம்ஜம் தண்ணீரை ஊற்றிக் கழுவினார். பிறகு
அந்த இதயப் பகுதிகளை ஒன்றிணைத்து
நெஞ்சினுள் திரும்பப் பதித்துவிட்டார்.
இதைக்கண்ட சிறுவர்கள் ஹலீமாவிடம்
ஓடோடி வந்து “முஹம்மது கொலை
செய்யப்பட்டார்” என்றனர். நபி (ஸல்) அவர்களை
நோக்கி அனைவரும் விரைந்தனர். அவர் நிறம்
மாறிக் காட்சியளித்தார்.
அனஸ் (ரழி) கூறினார்கள்: “நபி (ஸல்)
அவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்டதற்கான
அடையாளத்தை நான் கண்டேன்.”
இந்நிகழ்ச்சியால் அதிர்ந்துபோன ஹலீமா நபி
(ஸல்) அவர்களை அவரது தாயாரிடம்
ஒப்படைத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்
ஆறு வயது வரை தாயாரிடமே வளர்ந்தார்கள்.
ஆமினா, மதீனாவில் மரணமடைந்த தனது
அன்புக் கணவரின் கப்ரைக் கண்டுவர விரும்பினார். தனது குழந்தை முஹம்மது ஸல்
அவர்கையும்,ஊழியப் பெண் உம்மு அய்மன்
மற்றும் பொறுப்பாளர் அப்துல் முத்தலிப்
ஆகியோருடன் மக்காவிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதீனாவிற்கு பயணம் மேற்கொண்டார்.
மன அமைதிக்காக ஒரு மாதம் அங்கு
தங்கிவிட்டு மக்காவுக்கே மீண்டும்
பயணமானார். வழியில் ஆமினா நோய்
வாய்ப்பட்டார்.
பிறகு நோய் அதிகமாகி மக்காவுக்கும்
மதீனாவுக்குமிடையே அப்வா என்ற இடத்தில்
மரணமடைந்தார்.
(இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிப்
மக்காவுக்கு அழைத்து வந்தார். அவர்
அனாதையான தன் பேரர் மீது அன்பையும்
பாசத்தையும் ஊட்டி வளர்த்தார். பிறக்கும் முன்
தந்தையை இழந்த சோகம் ஒரு புறம்
வருத்திக்கொண்டிருக்க, தற்போது தாயையும்
இழந்து அந்த சோகம் இரட்டிப்பாகி விட்டது.
தனது பிள்ளைகளை விட பேரர் மீது மிகுந்த
அன்பு செலுத்தினார். அவரை தனிமையில்
விட்டுவிடாமல் எல்லா நிலையிலும் தன்னுடன்
வைத்து தனது பிள்ளைகள் அனைவரையும்விட
அவருக்கு முன்னுமை அளித்து வந்தார்.
வைத்து தனது பிள்ளைகள் அனைவரையும்விட
அவருக்கு முன்னுமை அளித்து வந்தார்.
புனித கஅபாவின் நிழலில் அப்துல்
முத்தலிபுக்கென ஓர் விரிப்பு
விரிக்கப்பட்டிருக்கும். அவர் வரும்வரை அவரது
பிள்ளைகள் அந்த விரிப்பைச் சுற்றி
அமர்ந்திருப்பர். அவருக்கு மரியாதை செய்யும்
விதமாக எவரும் அதில் அமரமாட்டார்கள்.
சிறுவரான நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து
விரிப்பில் அமர்வார்கள். அவரை அதிலிருந்து
அப்துல் முத்தலிபின் பிள்ளைகள் அகற்றிவிட
முயல்வார்கள். இதை அப்துல் முத்தலிப்
பார்த்துவிட்டால் “எனது அருமைப் பேரரை
விட்டுவிடுங்கள்! அல்லாஹ்வின் மீது
ஆணையாக! அவருக்கென ஒரு தனித் தன்மை
இருக்கிறது” என்று கூறி, தன்னுடன் விரிப்பில்
அமர்த்தி அவரது முதுகை தடவிக் கொடுப்பார்.
அவரது செயல்களையும் அசைவுகளையும்
கண்டு களிப்படைவார். (இப்னு ஹிஷாம்)
முத்தலிபுக்கென ஓர் விரிப்பு
விரிக்கப்பட்டிருக்கும். அவர் வரும்வரை அவரது
பிள்ளைகள் அந்த விரிப்பைச் சுற்றி
அமர்ந்திருப்பர். அவருக்கு மரியாதை செய்யும்
விதமாக எவரும் அதில் அமரமாட்டார்கள்.
சிறுவரான நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து
விரிப்பில் அமர்வார்கள். அவரை அதிலிருந்து
அப்துல் முத்தலிபின் பிள்ளைகள் அகற்றிவிட
முயல்வார்கள். இதை அப்துல் முத்தலிப்
பார்த்துவிட்டால் “எனது அருமைப் பேரரை
விட்டுவிடுங்கள்! அல்லாஹ்வின் மீது
ஆணையாக! அவருக்கென ஒரு தனித் தன்மை
இருக்கிறது” என்று கூறி, தன்னுடன் விரிப்பில்
அமர்த்தி அவரது முதுகை தடவிக் கொடுப்பார்.
அவரது செயல்களையும் அசைவுகளையும்
கண்டு களிப்படைவார். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்களுக்கு 8 ஆண்டு இரண்டு
மாதங்கள் பத்து நாள்கள் ஆனபோது பாட்டனார்
அப்துல் முத்தலிப் மக்காவில் மரணமடைந்தார்.
தனது மரணத்திற்கு முன்பே சிறுவரை அவரது
தந்தை அப்துல்லாஹ்வின் உடன்பிறந்த
சகோதரர் அபூதாலிப் பராமரிக்க வேண்டுமென
விரும்பினார். (இப்னு ஹிஷாம்)
பிரியமான பெரியதந்தையிடம்
சகோதரன் மகனைப் பராமரிக்கும் பொறுப்பை
அபூதாலிப் மிகச் சிறப்பான முறையில்
நிறைவேற்றினார். தனது பிள்ளைகளில்
ஒருவராக அவரை ஆக்கிக் கொண்டார்.
அவருக்கு மிகுந்த முக்கியத்துவமும்
கண்ணியமும் அளித்து வந்தார். ஏறத்தாழ
நாற்பது ஆண்டுகள் பாதுகாத்து அரவணைத்தார்.
நபி (ஸல்) அவர்களுக்காகவே பிறரின்
நட்பையும் வெறுப்பையும் சம்பாதித்துக்
கொண்டார். இதன் விவரங்களை உரிய
இடங்களில் காண்போம்.
மாநபிக்காக மழைபொழிதல்
ஜல்ஹுமா இப்னு உர்ஃபுதா கூறுகிறார்: கடும்
பஞ்ச காலத்தில் நான் மக்கா சென்றேன்.
“கணவாய்கள் வரண்டுவிட்டன.
பிள்ளைக்குட்டிகள் வாடுகின்றனர். வாருங்கள்!
மழை வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று
குறைஷியர்கள் அபூதாலிபிடம் கூறினர். அவர்
வெளியேறி வந்தார். அவருடன் மேகம்
மறைக்காத சூரியனின் பிரகாசமுடைய ஒரு
சிறுவரும் இருந்தார். மேலும், சிறுவர்கள் பலர்
அபூதாலிபைச் சுற்றிலும் இருந்தனர். அபூதாலிப்
அச்சிறுவரை தூக்கி அவரின் முதுகை
சேர்த்துவைத்து பிரார்த்தித்தார். அபூதாலிபின்
தோள் புஜத்தை அச்சிறுவர் பற்றிக் கொண்டார்.
மேகமற்றுக் கிடந்த வானத்தில் அங்கும்
இங்குமிருந்து மேகங்கள் ஒன்று திரண்டன.
பெரும் மழையால் கணவாய்களில் வெள்ளம்
கரை புரண்டோடியது. மக்கா நகரும் அதன்
சுற்றுப்புறங்களும் பசுமையாக மாறின. இதை
சுட்டிக்காட்டும் விதமாக அபூதாலிப் கூறினார்.
அவர் அழகரல்லவேர்
அவரை முன்னிறுத்தி நாங்கள் மழை
வேண்டுவோம்;
அவர் அநாதைகளின் அரணல்லவேர்
கைம்பெண்களின் காவலரல்லவோ.
(மஜ்மவுஜ்ஜவாயித்)
வேண்டுவோம்;
அவர் அநாதைகளின் அரணல்லவேர்
கைம்பெண்களின் காவலரல்லவோ.
(மஜ்மவுஜ்ஜவாயித்)
துறவி பஹீரா
நபி (ஸல்) அவர்களுக்கு 12 வயதாகும் போது
அபூதாலிப் வியாபாரத்திற்காக ’ஷாம்’ தேசம்
சென்றார். அப்போது நபியவர்களையும்
தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம்
நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தனர். அங்கு ‘பஹீரா’ என்ற பிரபலமான துறவி ஒருவர்
இருந்தார். அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்’ என்று
சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில்
செல்ல மாட்டார். எனினும், இந்த வியாபாரக்
கூட்டம் புஸ்ரா சென்றதும் அவர்களை சந்திக்க
வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு
வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின்
கரத்தைப் பற்றிக்கொண்டு “இதோ உலகத்தாரின்
தலைவர்! இதோ உலகத்தாரின் இறைவனுடைய
தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு
அருட்கொடையாக அனுப்புவான்” என்று
கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப்
பெரியவர்களும் “இது எப்படி உமக்குத் தெரியும்?”
என வினவினர். அவர் “நீங்கள் கணவாய்
வழியாக வந்தபோது கற்களும் மரங்களும் சிரம்
பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர
வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா. மேலும்,
அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப்
போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக்
கொண்டும் நான் அவரை அறிவேன். எங்களது
வேதங்களில் அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது”
என்று கூறினார். பிறகு அவர்களுக்கு
விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை
ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள
ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு
ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை
இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள்
என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார்.
அதற்கினங்க அபூதாலிப் நபி ஸல் அவர்களை
சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி
வைத்தார். (ஸுனனுத் திர்மிதி, தபரீ, முஸன்னஃப்
அபீஷைபா, இப்னு ஹிஷாம், பைஹகீ)
பெருமானார் (ஸல்)சிறுவயதிலேயே தன தன்
பெரிய தந்தையின் ஆடுகளை மேய்ப்பது
வழக்கம். பெரிய தந்தைக்கு தாம் ஒரு சுமையாக
இருக்க கூடாது என்பதற்காக மற்றவர்களின்
ஆடுகளைகூலிக்கும் மேய்த்து வந்தார்கள்.ஆடுகளை மக்காவுக்கு வெலெயே உள்ள கராரீத்
என்னும் மைதானத்தில் மேய விட்டு ஆழ்ந்த
சிந்தனையில் மூழ்கியிருப்பார்கள்.
சிறுவர்கள் விளையாட அழைத்தாலும் ஏதாவது
தத்துவார்த்தமான பதிலை சொல்லி ஒதிங்கி
கொள்ளவார்கள்.
சிறு பருவத்திலேயே எல்லோருக்கும்
உதவுபவர்களாக திகழ்ந்தார்கள்.மக்காவிலுள்ள
எல்லோருக்குமே பிடித்த சிறுவராக
விளங்கினார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு இறைத்தூதர் எனும் கௌரவம் அருளப்பட்டதற்குப் பிறகுள்ள வாழ்க்கையை இரண்டு வகைப்படுத்தலாம். அவை ஒன்றுக்கொன்று தன்மையால் மாறுபடுகிறது.
1. மக்காவில் வாழ்ந்த காலம். இது ஏறத்தாழ 13 ஆண்டுகள்.
2. மதீனாவில் வாழ்ந்த காலம். இது முழுமையாக 10 ஆண்டுகள்.
இவ்விரு வாழ்க்கையும் மாறுபட்ட பல நிலைகளைக் கொண்டிருக்கிறது. அவை ஒவ்வொன்றுக்கும் பல தனித்தன்மைகள் உண்டு. நபி (ஸல்) அழைப்புப் பணியில் கடந்து வந்த பாதைகளை ஆழ்ந்து கவனிக்கும்போது இதனை நாம் அறிகிறோம்.
மக்கா வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1) மறைமுக அழைப்பு: இது மூன்று ஆண்டுகள் வரை நீடித்தது.
2) மக்காவாசிகளுக்கு பகிரங்க அழைப்பு: இது நான்காம் ஆண்டிலிருந்து ஹிஜ்ரத்” வரை தொடர்ந்தது.
3) மக்காவுக்கு வெளியே அழைப்புப் பணி: இது பத்தாம் ஆண்டின் இறுதியிலிருந்து நபி (ஸல்) அவர்களின் இறுதிக்காலம் வரைத் தொடர்ந்தது.
இவற்றைச் சுருக்கமாக பார்த்துவிட்டு மதீனா வாழ்க்கை நிலைகளை பின்னர் காண்போம்.
பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயது நிறைவானபோது (பல நபிமார்களுக்கு நாற்பதாவது வயதில்தான் நபித்துவம் (நுபுவ்வத்) அருளப்பட்டது என்று சொல்லப்படுகிறது), நபித்துவ அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.
அவற்றில் சில: மக்காவிலிருந்த கல் ஒன்று அவர்களுக்கு ஸலாம் கூறி வந்தது உண்மையான கனவுகளைக் கண்டார்கள்; அவை அதிகாலையின் விடியலைப் போன்று நிதர்சனமாக நடந்து விடும்; இந்த நிலையில் ஆறு மாதங்கள் கழிந்தன நபித்துவ பணியாற்றியதோ 23 ஆண்டுகள், உண்மைக் கனவுகள் நபித்துவத்தின் 46 பங்குகளில் ஒரு பங்காகும்.
அது ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமழான் மாதம். அல்லாஹ் அகிலத்தாருக்கு தனது கருணையைப் பொழிய நாடினான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவத்தை வழங்கி சிறப்பிப்பதற்காக மேன்மைமிகு குர்ஆனின் சில வசனங்களுடன் வானவர் ஜிப்ரீலை அவர்களிடம் அனுப்பி வைக்கிறான்.
தெளிவான சான்றுகளை ஆராயும்போது அது ரமழான் 21வது பிறை திங்கட்கிழமை என்ற முடிவுக்கு வரலாம். (கி.பி. 610 ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி) அந்நாளில் அவர்களது வயது பிறை கணக்குப்படி மிகச் சரியாக 40 ஆண்டுகள், 6 மாதங்கள், 12 நாள்களாகும். சூரிய கணக்குப்படி 39 ஆண்டுகள், 3 மாதங்கள் 20 நாள்களாகும்.
இறை நிராகரிப்பு, வழிகேடு போன்ற அனைத்து இருள்களையும் அழித்து வாழ்க்கைக்கு ஒளிமிக்க பாதையை அமைத்துத் தந்த நபித்துவத்தின் இந்த முக்கிய நிகழ்ச்சியைப் பற்றி அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறக் கேட்போம்:
“நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹி (இறைச்செய்தி) தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளாகவே ஆரம்பத்தில் இருந்தது. அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அதிகாலையின் விடியலைப் போன்று அவை தெளிவாக அப்படியே நடக்கும். பின்னர் தனிமையை விரும்பினார்கள். ஹிரா குகையில் தனித்திருந்து பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். பிறகு தனது குடும்பத்தாரிடம் திரும்பி வருவார்கள். இதற்காக உணவையும் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். உணவு தீர்ந்தவுடன் கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து மீண்டும் உணவை எடுத்துச் செல்வார்கள். இந்த நிலையில்தான் ஹிரா குகையில் அவர்களுக்கு வஹி வந்தது. வானவர் நபியவர்களிடம் வந்து, “ஓதுவீராக!” என்றார். அதற்கவர்கள் “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்நிலையைப் பற்றி பின்வருமாறு விவரித்தார்கள்: பிறகு அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவுக்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். மீண்டும் என்னை இறுகக் கட்டியணைத்துவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்துவிட்டு,
(நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். (நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன்தான் மகா பெரும் கொடையாளி! (அல்குர்ஆன் 96 : 1-6) என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்.
பிறகு அந்த வசனங்களுடன் இதயம் நடுங்க (தமது துணைவியார்) கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்றார்கள். கதீஜா (ரழி) நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜாவிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் அஞ்சுவதாகக் கூறினார்கள். அதற்கு கதீஜா (ரழி) “அவ்வாறு கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளை சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (சிக்குண்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்” என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன் பிறந்தவரான ‘நவ்ஃபல்’ என்பவன் மகன் ‘வரகா“விடம் அழைத்துச் சென்றார்கள்.
வரகா கிருஸ்துவராக இருந்தார். அவர் இப்ரானி (ஹிப்ரூ) மொழியை அறிந்தவர்; இன்ஜீல் வேதத்தைக் கற்றவர்; வயது முதிர்ந்தவர்; கண்பார்வையற்றவர்; அவரிடம் கதீஜா (ரழி) “என் சகோதரரே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்!” என்றார். “என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்!” என வரகா கேட்க, நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். அதற்கு வரகா “இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார்” என்று கூறிவிட்டு, உங்களது சமூகத்தார் உங்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருக்க வேண்டுமே என்று அங்கலாய்த்தார். நபி (ஸல்) அவர்கள் “மக்கள் என்னையா வெளியேற்றுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர் “ஆம்! நீங்கள் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீங்கள் வெளியேற்றப்படும்) அந்நாளில் நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு பலமான உதவி செய்வேன்” என்று கூறினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் வரகா குறுகிய காலத்தில் இறந்துவிட்டார். இத்துடன் வஹி சிறிது காலம் நின்றுவிட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இது குறித்த பல கருத்துகள் நிலவினாலும் அந்த இடைவெளிக் காலம் சில நாட்கள் என்பதே உறுதியான கருத்தாகும். இதையே இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வாயிலாக இப்னு ஸஅது (ரஹ்) அறிவிக்கிறார்கள். வஹியின் இடைவெளிக்காலம் மூன்று அல்லது இரண்டரை ஆண்டு என்று கூறுவது சரியானதல்ல.
அறிஞர்களின் பல்வேறு கருத்துகளை ஆய்வு செய்ததில் எனக்கு ஒன்று புலப்பட்டது. அதாவது, நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமழான் மாதத்தில் மட்டுமே ஹிராவில் தனித்திருந்துவிட்டு ஷவ்வால் முதல் பிறையின் காலையில் வெளியேறி வீட்டுக்கு வருவார்கள். இவ்வாறு நபித்துவத்துக்கு முன் மூன்று ஆண்டுகள் தங்கினார்கள். அந்த மூன்றாவது ஆண்டின் ரமழானில் நபித்துவம் அருளப்பட்டது. புகாரி, முஸ்லிமுடைய ஹதீஸின்படி நபி (ஸல்) அவர்கள் ஹிராவில் தங்கி ரமழானை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது இரண்டாவது வஹி அருளப்பட்டது. இதில் என் கருத்து என்னவென்றால், நபித்துவம் கிடைக்கப் பெற்ற ரமழான் முடிந்த பிறகு ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையில்தான் இரண்டாவது வஹி இறங்கியது. அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் ஹிராவுக்கு செல்லவில்லை. உறுதியான சான்றுகளின்படி ரமழான் பிறை 21 திங்கள் இரவில் முதல் வஹி அருளப்பட்டது. இரண்டாவது வஹி ஷவ்வாலின் முதல் பிறை வியாழன் காலை அருளப்பட்டது. ஆகவே, இக்கருத்தின்படி வஹியின் இடைவெளிக்காலம் 10 நாட்கள் மட்டுமே! இதுவே ரமழானின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பதற்கும் ஷவ்வால் முதல் பிறை பெருநாளாக இருப்பதற்கும் காரணமாக இருக்கலாம். (அல்லாஹ்வே நன்கறிந்தவன்!)
வஹியின் இடைவெளிக் காலத்தில் நபி (ஸல்) அவர்கள் திடுக்கமும் கவலையும் நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள். இதுபற்றி ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது:
இரண்டாவது வஹி வருவதற்கு சிறிது காலதாமதமானது. அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். மலை உச்சியிலிருந்து கீழே குதித்துவிட பலமுறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே குதித்து விடுவதற்காக ஏதேனும் மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் ஜிப்ரீல் (அலை) தோன்றி “முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறுவார்கள். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்களின் பதற்றம் தணிந்து மனம் சாந்தி பெறும். பிறகு (மலை உச்சியிலிருந்து) திரும்பி விடுவார்கள். வஹி வருவது தாமதமாகும் போதெல்லாம் அவ்வாறே செய்யத் துணிவார்கள். அவர்கள் முன் ஜிப்ரீல் (அலை) தோன்றி முன்னர் போலவே கூறுவார்கள்.
இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களுக்கு அச்சம் நீங்கி வஹியின் மீது ஆர்வம் ஏற்படுத்துவதற்காகவே வஹியின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. அவ்வாறே அச்சம் நீங்கி ஆர்வம் ஏற்பட்டதும் வஹியை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். அல்லாஹ் இரண்டாவது முறையாக வஹியை இறக்கி அவர்களைச் சிறப்பித்தான். (ஃபத்ஹுல் பாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா குகையில் ஒரு மாதம் தங்கியிருந்து பிறகு திரும்பினேன். நான் பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கும்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு வலப்பக்கம் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. இடப்பக்கம் பார்த்தேன், எதையும் நான் காணவில்லை. ஆகவே, என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு நான் ஒன்றைக் கண்டேன். ஹிரா குகையில் என்னிடம் வந்த வானவர் ஜிப்ரீல் (அலை) வானுக்கும் பூமிக்குமிடையே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் கதீஜாவிடம் சென்று “என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்; குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்” என்று கூறினேன். அவர்கள் என்னைப் போர்த்தி குளிர்ந்த நீரை என்மீது ஊற்றினார்கள். அப்போது இவ்வசனங்கள் அருளப்பட்டன.
(வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்! உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5)
இந்த நிகழ்ச்சி தொழுகை கடமையாவதற்கு முன் நடந்தது. இதைத் தொடர்ந்து வஹி வருவது அதிகரித்தது. (ஸஹீஹுல் புகாரி)
இவ்வசனங்கள்தான் நபித்துவத்தின் தொடக்கமாகும். இவற்றில் இருவகையான சட்டங்கள் உள்ளன.
முதலாவது வகை:
“நீங்கள் எழுந்து சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்”
என்ற வசனத்தின் மூலம் இறைத்தூதை எடுத்தியம்ப வேண்டும்; ஏற்காதவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டுமென்று நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வசனத்தின் பொருள்: வழிகேடு, அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவது, அல்லாஹ்வுக்கு இணைவைப்பது ஆகிய குற்றச் செயல்களிலிருந்து இம்மக்கள் விலகவில்லையெனில் அவர்களுக்கு அல்லாஹ்வின் வேதனை உண்டென நபியே! நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள்.
இரண்டாவது வகை: அல்லாஹ்வின் கட்டளைகளை முழுமையாகப் பேணிப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும்; அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்பவர்களுக்கு நீங்கள் அழகிய முன்மாதியாகத் திகழ முடியும் என்று கட்டளையிடப்படுகிறது.
“உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்”
அதாவது அல்லாஹ்வை மட்டுமே மகிமைப்படுத்துங்கள்! அதில் எவரையும் இணையாக்காதீர்கள்.
“உங்களது ஆடைகளை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள்”
அல்லாஹ்வை மகிமைப்படுத்தி அவன் முன் நிற்பவர் அருவருப்பான தோற்றமின்றி அசுத்தமின்றி உடலையும் உடையையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் ஆடையில் தூய்மையை இவ்வளவு வலியுறுத்தும்போது கெட்ட செயல், தீய சிந்தனையிலிருந்து நாம் எவ்வளவு தூய்மை பெற்றிருக்க வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை.
“அசுத்தங்களை வெறுத்திடுங்கள்”
அதாவது, அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு மாறுசெய்வதைத் தவிர்த்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தூரமாகிவிடுங்கள்.
“நீங்கள் பிரதிபலன் தேடியவராக எவருக்கும் உதவி ஒத்தாசை புரியாதீர்கள்”
அதாவது, பிறருக்கு உதவி செய்யும்போது அதற்குச் சமமான அல்லது அதைவிட அதிகமான பலனை எதிர்பார்க்காதீர்கள்.
“உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள்”
நபி (ஸல்) அவர்கள் தங்களது கூட்டத்தாரை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து அவனது தண்டனைகளைக் கூறி எச்சரிக்கை செய்கையில் அவர்களால் துன்பங்கள் நிகழலாம், அவற்றை அல்லாஹ்வுக்காக சகித்துக்கொள்ள வேண்டும் என்று இந்த இறுதி வசனத்தில் உணர்த்தப்படுகிறது.
ஆரம்பமாக அல்லாஹ்வின் அழைப்பு நபி (ஸல்) அவர்களை ஓய்வு உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி, உடலை வருத்திக்கொள்ளவும், அனல் பறக்கும் போருக்கு ஆயத்தமாகவும், எதிர்காலத்தில் சமுதாயப் புரட்சிக்கு ஈடுகொடுக்கவும், எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என ஒரு ராணுவ உத்வேகத்திற்கு நபி (ஸல்) அவர்களை தூண்டுகிறது. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுக! அச்சமூட்டி எச்சரிக்கை செய்க! என அழைப்பது எங்ஙனம் உள்ளது என்றால்... ஓ!... தனக்காக வாழும் ஒரு சுயநலவாதிதானே சாய்வு கட்டிலில் ஓய்வு தேடுவார். தாங்கள் அப்படிப்பட்டவரல்லவே! தாங்கள் உயர்ந்த ஒரு பணிக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளதே! எதிர்காலத்தில் பெரும் சமுதாயச் சுமையை தாங்கள் சுமக்க நேரிடுமே! இந்தப் போர்வை சுகத்திற்காகவா புவியில் பிறந்தீர்கள்? தங்களின் உறக்கம் உசிதமானதா? மன நிம்மதியை உள்ளம் விரும்பலாமா? சுகம் தேடலாமா? கூடாது! கூடாது! கூடவே கூடாது! உங்களை மகத்தான பொறுப்பு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. உம்! எழுங்கள்! உங்களுடைய பாரத்தைத் தாங்கிக் கொள்ளத் தயாராகுங்கள். சிரமத்தையும் தியாகத்தையும் ஏற்றுக்கொள்ள எழுந்து வாருங்கள்! ஓய்வெடுக்க வேண்டிய காலம் ஓடிவிட்டது. இனி கண் துஞ்சாது விழித்து போராடவேண்டும். நீங்கள் அர்ப்பணிப்புக்கு ஆயத்தமாகுங்கள்! தயாராகுங்கள்!
உண்மையில் அல்லாஹ்வின் இந்த வசனம் மிக அச்சுறுத்தலானது. இது நபி (ஸல்) அவர்களை இல்லத்தில் நிம்மதியாக படுத்துறங்குவதிலிருந்து வெளியேற்றி முழு வாழ்க்கையிலும் அழைப்புப் பணியின் சிரமங்களைச் சந்திக்கத் தயார்படுத்தியது.
அல்லாஹ்வின் இக்கட்டளையை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்! அன்று எழுந்தவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக ஓய்வு பெறவேயில்லை. தனக்காகவோ தமது குடும்பத்தினருக்காகவோ இல்லாமல் அல்லாஹ்வினால் ஒப்படைக்கப்பட்ட மாபெரும் பொறுப்பின் சுமையை தனது தோளில் சுமந்து இறையழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள். அவர்கள் சுமந்தது ஏகத்துவப் போராட்டத்தின் சுமையாகும். அல்லாஹ்வினால் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை செவியேற்றதிலிருந்து 20 வருடங்களுக்கு மேலாக ஓய்வு உறக்கமின்றி மாபெரும் தியாக வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.
அவர்களுக்கு நம் சார்பாகவும் மனித குலத்தின் சார்பாகவும் சிறந்த நற்கூலியை அல்லாஹ் நல்குவானாக!
நபி (ஸல்) அவர்களின் நீண்ட தியாக வாழ்க்கையின் சில பகுதியைத்தான் நாம் பின்வரும் பக்கங்களில் காண இருக்கிறோம்.
நபி (ஸல்) அவர்களின் நுபுவத்திற்குப் பிந்திய வாழ்வைப்பற்றி பேசுமுன் வஹியின் (இறைச்செய்தியின்) வகைகளைப் பற்றி காண்பது சிறந்தது. வஹியின் வகைகள் பற்றி இப்னுல் கய்” (ரஹ்) ‘ஜாதுல் மஆது’ என்ற தனது நூலில் கூறுவதாவது:
1) உண்மையான கனவு. இதுதான் வஹியின் தொடக்கமாக இருந்தது.
2) வானவர், நபி (ஸல்) அவர்களின் கண்முன் தோன்றாமல் உள்ளத்தில் இறை செய்தியைப் போட்டுவிடுவது. எ.கா. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரூஹுல் குத்ஸ் (ஜிப்ரீல்) எனது உள்ளத்தில் ஊதினார். அதாவது, தனது உணவை முழுமையாக முடித்துக் கொள்ளும்வரை எவரும் மரணிக்க மாட்டார். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! உணவைத் தேடுவதில் அழகிய வழியை தேர்ந்தெடுங்கள். உணவு தாமதமாகுவதால் நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து அதைத் தேட வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்விடம் உள்ளதை அவனுக்கு வழிப்படுவதன் மூலமே தவிர வேறு வகையில் அடைய முடியாது.”
3) வானவர் ஓர் ஆடவன் உருவில் தோன்றி நபி (ஸல்) அவர்களிடம் பேசுவார். அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் நிறுத்திக் கொள்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் வானவரை சில நபித்தோழர்கள் கண்டிருக்கிறார்கள்.
4) வானவர் மணியோசையைப் போன்று வருவார். இந்த வகையே நபி (ஸல்) அவர்களுக்கு சுமையாக இருக்கும். நபி (ஸல்) அவர்களை வானவர் தன்னுடன் இணைத்துக் கொள்வார். கடுங்குளிரிலும் நபி (ஸல்) அவர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்து ஓடும். அவர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்தால் வஹியின் சுமை தாங்காது அந்த வாகனம் அப்படியே தரையில் அமர்ந்துவிடும். ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் கால் ஜைது இப்னு ஸாபித் (ரழி) அவர்களின் கால்மீது இருந்த நிலையில் வஹி வந்தது. அதன் சுமை அவர்களது காலைத் துண்டித்து விடும் அளவுக்கு மிகக் கடினமாக இருந்தது.
5) வானவர், அல்லாஹ் படைத்த அதே உருவத்தில் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றுவார். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் செய்திகளை அறிவிப்பார். இவ்வாறு இரண்டு முறை நடந்துள்ளது. இதைப்பற்றி குர்ஆனில் ‘அந்நஜ்ம்’ என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
6) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் அழைத்து பேசுவது. நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜில்” தொழுகை கடமையாக்கப்பட்டது போன்று!
7) வானவரின்றி நேரடியாக அல்லாஹ் பேசுவது. மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் பேசியது போல! மூஸா நபிக்கு இந்த சிறப்பு கிடைத்தது பற்றி குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கும் இந்த சிறப்பு கிடைத்தது என மிஃராஜ் தொடர்பான ஹதீஸ்களின் மூலம் தெளிவாகிறது. (ஜாதுல் மஆது)
தொழுகை மட்டுமே முஸ்லிம்களுக்குக் கடமையாக்கப்பட்டிருந்தது. அதைத் தவிர வேறு வணக்க வழிபாடுகளோ, ஏவல் விலக்கலோ இருந்ததாகத் தெரியவில்லை. அக்கால கட்டத்தில் அவர்களுக்கு ஏகத்துவ விளக்கங்களைக் கற்றுக் கொடுத்து, நற்பண்புகளில் ஆர்வமூட்டி, அவர்களது இதயங்களைத் தூய்மைப்படுத்தும் இறைவசனங்கள் அருளப்பட்டன. மேலும், அவ்வசனங்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் அவர்கள் கண்முன் காண்பதுபோல் வர்ணித்தன. எழுச்சிமிகு உபதேசங்களால் இதயங்களைத் திறந்து ஆன்மாவுக்கு வலுவூட்டி அக்கால மக்கள் அதுவரை அறிந்திராத ஒரு புதிய நாகரீக வாழ்வுக்கு இறைமறை அவர்களை அழைத்துச் சென்றது.
சகோதரத்துவம் பேணுதல், உதவி ஒத்தாசை புரிதல் போன்ற நற்பண்புகளுடன் தூதுத்துவத்தைச் சுமந்து அதை எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்ற முஸ்லிம்களின் ஒரு கூட்டம் தயாரானபோது இஸ்லாமிய அழைப்பை பகிரங்கப்படுத்தி, தீமையை நன்மையால் எதிர்கொள்ள வேண்டுமென்று நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக முதலாவதாக,
“நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.” (அல்குர்ஆன் 26:214)
என்ற வசனம் அருளப்பட்டது. இத்திருவசனத்தின் முன்தொடல் நபி மூஸா (அலை) அவர்களுக்கு இறைத்தூது கிடைத்ததிலிருந்து இஸ்ரவேலர்களுடன் அவர்கள் ஹிஜ்ரா செய்தது வரையிலான நிகழ்வுகளும், ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தாரிடமிருந்து இஸ்ரவேலர் களுக்குக் கிடைத்த வெற்றியும், ஃபிர்அவ்ன் தனது கூட்டத்தாருடன் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களும் விவரிக்கப்படுகிறது. மேலும், ஃபிர்அவ்னை ஏகத்துவத்தின் பக்கம் அழைத்தபோது நபி மூஸா (அலை) கடந்து சென்ற அனைத்து நிலைமைகளும் விவரமாகக் கூறப்பட்டன.
இஸ்லாமிய அழைப்பை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கட்டளையுடன் மேற்கூறப்பட்ட விவரங்களை கொண்டு வந்ததற்கான காரணம்: மக்களை அழைக்கும்போது அவர்களிடமிருந்து பொய்ப்பித்தல், அத்துமீறல், கொடுமைப்படுத்துதல் போன்றவற்றைச் சந்திக்க நேரிடும்; அவற்றைத் தாங்கியே தீரவேண்டும். எனவே, தொடக்கத்திலிருந்தே தங்களது செயல்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக நபி (ஸல்) அவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் முன்சென்ற நபிமார்கள் மற்றும் சமுதாயத்தவர்களின் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டப்பட்டது.
இம்மார்க்கத்தைப் பொய்யாக்குபவர்கள் தங்களது நிலையில் தொடர்ந்தால், அவர்களுக்கு ஏற்படும் இழிவான முடிவையும் அல்லாஹ்வின் தண்டனையையும் தெரிந்துகொள்ள வேண்டும்; அழகிய முடிவு தங்களுக்குத்தான் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக இந்த அத்தியாயத்தில் நூஹ், இப்றாஹீம், லூத், ஹூது, ஸாலிஹ் (அலை) ஆகிய நபிமார்களின் சமுதாயத்தினர், “அஸ்ஹாபுல் அய்கா’ (தோட்டக்காரர்கள்) என இறைத்தூதர்களைப் பொய்யாக்கியவர்களின் முடிவுகள் கூறப்பட்டுள்ளன.
இவ்வசனம் அருளப்பட்டதும் நபி (ஸல்) தங்களது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையாரை அழைத்தார்கள். அவர்களுடன் முத்தலிபின் வமிசத்தில் சிலரும் சேர்ந்து மொத்தம் 45 ஆண்கள் வந்தனர். நபி (ஸல்) பேசத் தொடங்கியபோது அபூ லஹப் முந்திக்கொண்டு “இவர்கள் உமது தந்தையின் சகோதரர்களும் அவர்களுடைய பிள்ளைகளுமாவர். அதை நினைவில் கொண்டு பேசு! மதம் மாறியவர்களைப் பற்றி இங்கு பேசாதே. அறிந்துகொள்! அரபியர்களில் உன்னுடைய கூட்டத்தாருக்கு எந்தவொரு வலிமையுமில்லை. உன்னை தண்டிப்பதற்கு நானே மிகத் தகுதியானவன். நீ கூறும் இந்த ஏகத்துவத்தில் நீ உறுதியாக இருந்தால், அது அரபிகளின் துணையுடன் குறைஷி குடும்பத்தினர் உன்மீது பாய்வதற்கு ஏதுவாகிவிடும். தனது தந்தையின் சொந்தக்காரர்களுக்கு உன்னைப் போல தீங்கிழைத்த எவரையும் நான் கண்டதில்லை” என்று கூறினான். இதனால் நபி (ஸல்) அச்சபையில் பேசாமல் இருந்துவிட்டார்கள்.
இரண்டாவது முறையாகவும் ஹாஷிம் கிளையாரை அழைத்து “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே புகழ்கிறேன். அவனிடமே உதவி தேடுகிறேன். அவன்மீது நம்பிக்கை வைக்கிறேன். அவனிடமே பொறுப்பு ஒப்படைக்கிறேன். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவனுமில்லை. அவனுக்கு இணை யாருமில்லை என்று சாட்சி சொல்கிறேன்” எனக் கூறித் தொடர்ந்தார்கள்; “நிச்சயமாக “ராம்த்’ (போருக்கு செல்லும் வீரர்கள் தங்குவதற்கு ஏற்ற இடங்களையும், நீர்நிலைகளையும் அறிந்து வருவதற்காக அனுப்பப்படும் தூதர்) பொய்யுரைக்கமாட்டார். எந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லையோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக நான் குறிப்பாக உங்களுக்கும், பொதுவாக ஏனைய மக்களுக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் உறங்குவது போன்றே மரணிப்பீர்கள். நீங்கள் விழிப்பது போன்றே எழுப்பப்படுவீர்கள். உங்களது செயல்கள் குறித்து விசாரணை செய்யப்படுவீர்கள். நிச்சயமாக அது நிரந்தர சொர்க்கமாக அல்லது நிரந்தர நரகமாக இருக்கும்” என்று உரையாற்றி முடித்தார்கள்.
அப்போது அபூ தாலிப் கூறினார்: “உனக்கு உதவி செய்வது எங்களுக்கு மிகவும் விருப்பமானதே, உனது உபதேசத்தை ஏற்பதும் எங்களுக்குப் பிரியமானதே, உனது பேச்சை மிக உறுதியாக உண்மைப்படுத்துகிறோம். இதோ! உனது பாட்டனாரின் குடும்பத்தார்! நானும் அவர்களில் ஒருவன்தான். எனினும், நீ விரும்புவதை அவர்களைவிட நான் விரைவாக ஏற்றுக் கொள்வேன். எனவே, உனக்கிடப்பட்ட கட்டளையை நீ நிறைவேற்றுவதில் நீ உறுதியாக இரு. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உன்னைச் சூழ்ந்து நின்று பாதுகாப்பேன். எனினும், எனது மனம் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை விட்டுப் பிரிய விரும்பவில்லை” என்றார்.
அப்போது அபூ லஹப் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது (இந்த அழைப்பு) மிக இழிவானது. இவரை மற்றவர்கள் தண்டிக்கும் முன் நீங்களே தடுத்துவிடுங்கள்” என்றான். அதற்கு அபூதாலிப் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் இருக்கும்வரை அவரைப் பாதுகாப்போம்” என்று கூறிவிட்டார். (அல்காமில்)
அபூதாலிப் தனக்கு பாதுகாப்பளிப்பார் என்று நபி (ஸல்) உறுதியாக அறிந்தபின் இறை மார்க்கத்தை எடுத்துரைப்பதற்காக ஸஃபா மலை உச்சியில் ஏறி நின்று “யா ஸபாஹா! யா ஸபாஹா!!” என்று சப்தமிட்டார்கள். (பெரும் படையொன்று சூழ்ந்துகொண்டதை அல்லது ஏதேனும் பேராபத்து வந்துவிட்டதை அறிவிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்.)
பிறகு குறைஷி வமிசத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்தார்கள்: ஃபஹ்ர் குடும்பத்தாரே! அதீ குடும்பத்தாரே! அப்து முனாஃபின் குடும்பத்தாரே! அப்துல் முத்தலிபின் குடும்பத்தாரே! என்று அழைத்தார்கள்.
அவர்களது அழைப்பைச் செவியேற்று இவ்வாறு அழைப்பவர் யார்? என வினவ சிலர் “முஹம்மது” என்று கூறினர். உடனே குறைஷியர்களில், அபூலஹப் மற்றும் பலரும் அங்கு குழுமினர். வர இயலாதவர்கள் தங்கள் சார்பாக ஒருவரை அவர் சொல்வதைக் கேட்டு வருமாறு கூறியனுப்பினார்கள்.
அனைவரும் ஒன்று கூடியபோது நபி (ஸல்) “இம்மலைக்குப் பின்னாலுள்ள கணவாயில் உங்களைத் தாக்குவதற்காக குதிரை வீரர்கள் காத்திருக்கிறார்கள் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மக்கள் “ஆம்! உங்களை நம்புவோம்; உங்களை உண்மையாளராகவே கண்டிருக்கிறோம்; பொய்யுரைத்துக் கண்டதில்லை” என்றனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையான வேதனை வருமுன் நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன். எனக்கும் உங்களுக்கும் உள்ள உதாரணம், ஒருவர் எதிரிகளைப் பார்த்து அவர்கள் தன்னை முந்திச் சென்று தனது கூட்டத்தினரைத் திடீரெனத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக மலை உச்சியில் ஏறி “யா ஸபாஹா!” என்று அழைத்தவரைப் போன்றாவேன்.
பிறகு, நபி (ஸல்) அவர்கள் அம்மக்களை சத்தியத்தின் பக்கம் அழைத்து அல்லாஹ்வின் வேதனை குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள். ஒவ்வொரு கூட்டத்தாரின் பெயர்களைத் தனித்தனியாகவும், பொதுவாகவும் குறிப்பிட்டுக் கூறினார்கள்.
“குறைஷியரே! அல்லாஹ்விடமிருந்து உங்களது ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.
கஅபு இப்னு லுவய்யின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மை தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது.
முர்ரா இப்னு கஅபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
குஸைய்யின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மை தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது.
அப்துல் முனாஃபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.
அப்து ஷம்ஸ் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ஹாஷிம் கிளையாரே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அப்துல் முத்தலிபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது.
அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது. அல்லாஹ்வுடைய தூதரின் மாமியான அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது..
அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! எனது செல்வத்திலிருந்து விரும்பியதை கேட்டு பெற்றுக்கொள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் உங்களது நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை விட்டு உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.
எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உறவு இருக்கிறது. உரிய முறையில் இரத்தப் பந்தத்திற்கானக் கடமைகளை நிறைவேற்றுவேன்” என்று கூறி முடித்தார்கள்.
இந்த எச்சரிக்கை முடிந்ததும் மக்கள் எதுவும் கூறாமல் கலைந்து சென்றார்கள். ஆனால், அபூ லஹப் மட்டும் குரோதத்துடன் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டான். “நாள் முழுவதும் உனக்கு நாசமுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களைக் கூட்டினாயா?” என்று கூறினான். அவனைக் கண்டித்து “அழியட்டும் அபூ லஹபின் இரு கரங்கள்; அவனும் அழியட்டும்...” என்ற 111வது அல்குர்ஆன் அத்தியாயம் இறங்கியது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத்திர்மிதி, ஃபத்ஹுல் பாரி)
இவ்வாறாக ஏகத்துவக் குரல் ஓங்கியது. நபி (ஸல்) தங்களது நெருங்கிய உறவினர்களிடம் நீங்கள் இத்தூதுத்துவத்தை (நான் அல்லாஹ்வின் தூதர் என்பதை) ஏற்றால்தான் நம்மிடையே உறவு நீடிக்கும். இதைத்தவிர அரபுகள் கொண்டிருக்கும் குடும்ப உறவுகளெல்லாம் அல்லாஹ்வின் எச்சரிக்கையின் முன்னால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்று கூறித் தங்களது நிலையை மிகத் தெளிவாக அறிவித்துவிட்டார்கள்.
இவ்வாறே அழைப்புப் பணியின் குரல் மக்காவின் நாலாதிசைகளிலும் எதிரொலித்தது.
“ஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் (அவர்களுக்கு) விவரித்து அறிவித்துவிடுங்கள். மேலும், இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்து விடுங்கள்” (அல்குர்ஆன் 15:94)
என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான். அதைத் தொடர்ந்து நபி (ஸல்) நிராகரிப்பவர்களின் சபைகளில் துணிந்து நின்று அல்லாஹ்வின் பக்கம் அழைக்கத் தொடங்கினார்கள். முன் சென்ற நபிமார்கள் தங்களது சமுதாயத்தினருக்குக் கூறி வந்த,
நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (அல்குர்ஆன் 7:59)
என்ற வசனத்தை அவர்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள். நிராகரிப்பவர்களின் கண் முன்னே கஅபாவின் முற்றத்தில் பட்டப்பகலில் பகிரங்கமாக அல்லாஹ்வை வணங்கத் தொடங்கினார்கள்.
நபி (ஸல்) ஏகத்துவ அழைப்புக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்தது. ஒருவர் பின் ஒருவராக அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தழுவினார்கள். அதனால் இஸ்லாமை ஏற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தில் இஸ்லாமை ஏற்காதவர்களுக்குமிடையே சண்டை சச்சரவுகள் தோன்றின. நாளுக்கு நாள் இஸ்லாமின் வளர்ச்சியைக் கண்ட குறைஷிகள் கடுங்கோபத்தில் மூழ்கினர்.
இக்காலகட்டத்தில் குறைஷியருக்கு மற்றொரு கவலையும் ஏற்பட்டது. அதாவது, பகிரங்க இஸ்லாமிய அழைப்புப் பணி தொடங்கிய சில நாட்களிலேயே ஹஜ்ஜின் காலம் நெருங்கி வந்தது. ஹஜ்ஜுக்கு வரும் அரபுக் கூட்டத்தினர் முஹம்மதின் அழைப்பினால் மனம் மாறிவிடலாம். எனவே, ஹாஜிகளை சந்தித்து முஹம்மதைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக குறைஷியர்கள் வலீத் இப்னு முகீராவிடம் ஒன்று கூடினர். குறைஷிகளிடம் அவன் “இவ்விஷயத்தில் நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கூறுங்கள். இல்லையென்றால் ஒருவன் கூற்றுக்கு மற்றவன் கூற்று மறுப்பாகி ஒருவர் மற்றவரை பொய்யராக்கிக் கொள்வீர்கள்” என்று கூறினான். அம்மக்கள் “நீயே ஓர் ஆலோசனையைக் கூறிவிடு. நாங்கள் அதற்கேற்ப நடந்து கொள்கிறோம்” என்றனர். அவன் “இல்லை! நீங்கள் கூறுங்கள், அதைக் கேட்டு நான் ஒரு முடிவு செய்கிறேன்” என்றான்.
குறைஷியர்கள்: அவரை (முஹம்மதை) ஜோசியக்காரர் என்று கூறலாமா?
வலீத்: “இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஜோதிடர் அல்லர். ஏனெனில் நாம் ஜோதிடர் பலரைக் கண்டிருக்கிறோம். ஆனால் இவரது பேச்சு ஜோதிடனின் உளறல்களாகவோ பேச்சுகளாகவோ இல்லை.”
குறைஷியர்கள்: அவரைப் பைத்தியக்காரர் என்று கூறலாமா?
வலீத்: அவர் பைத்தியக்காரர் அல்லர். ஏனெனில், பைத்தியக்காரன் எப்படியிருப்பான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவரிடம் பைத்தியத்தின் எந்த அடையாளமும் இல்லை.
குறைஷியர்கள்: அவரைக் கவிஞர் எனக் கூறலாமா?
வலீத்: அவர் கவிஞரல்ல. ஏனெனில், நமக்கு கவியின் அனைத்து வகைகளும் தெரியும். ஆனால் அவரது பேச்சு கவியாக இல்லை.
குறைஷியர்கள்: அவரை சூனியக்காரர் என்று கூறலாமா?
வலீத்: நாம் சூனியக்காரர்களையும் அவர்களது சூனியத்தையும் நன்கறிந்திருக்கிறோம். ஆனால் அவரது பேச்சு சூனியக்காரர்களின் ஊதுதலாகவோ முடிச்சுகளாகவோ நமக்குத் தோன்றவில்லை.
குறைஷியர்கள்: பின்னர் நாம் எதைத்தான் கூறுவது?
வலீத்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரது பேச்சில் ஒரு தனித்துவமான இனிமையும் மிகுந்த கவர்ச்சியும் இருக்கிறது. அதன் தொடக்கம் பழக்குலையாகவும் அதன் இறுதி பறிக்கப்பட்ட கனியாகவும் இருக்கிறது. நீங்கள் முன்பு கூறியதில் எதைக் கூறினாலும் அது பொய்தான் என்று தெரிந்து விடும். உங்களது கூற்றில் மிக ஏற்றது அவரை சூனியக்காரர் என்று கூறுவதுதான். அவர் ஒரு சூனியத்தைக் கொண்டு வந்து அதன்மூலம் தந்தை-மகன், கணவன்-மனைவி, சகோதரர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறார் என்றே கூறுங்கள் என்று வலீத் கூறினான். அதை ஏற்று மக்கள் திருப்தியுடன் கலைந்தனர். (இப்னு ஹிஷாம்)
குறைஷியர்கள் வலீதிடம் பிரச்சனையற்ற ஒரு நல்ல ஆலோசனையைத் தங்களுக்கு கூறும்படி கேட்க அதற்கு வலீத் “அது குறித்து சிந்திக்க எனக்கு அவகாசமளியுங்கள்” என்று கூறி மிக நீண்ட நேரம் யோசித்தபின் மேற்கண்ட தனது கருத்தைக் கூறினான் என சில அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலீதின் இச்செயல் குறித்து அல்முத்தஸ்ஸிர் என்ற அத்தியாயத்தில் 11 முதல் 26 வரையிலான 16 வசனங்களை அல்லாஹ் இறக்கி வைத்து அவ்வசனங்களுக்கிடையில் அவன் யோசித்த விதங்களைப் பற்றி அல்லாஹ் மிக அழகாகக் குறிப்பிடுகிறான்.
நிச்சயமாக அவன் (இந்தக் குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான். அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்! பின்னும் அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்! (ஒன்றுமில்லை.) பின்னும் (அதனைப் பற்றிக்) கவனித்தான். பின்னர் (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான். பின்னர் புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான். ஆகவே “இது மயக்கக்கூடிய சூனியமேயன்றி வேறில்லை” என்றும், “இது மனிதர்களுடைய சொல்லேயன்றி வேறில்லை” என்றும் கூறினான். (அல்குர்ஆன் 74:18-25)
இந்த முடிவுக்கு சபையினர் உடன்பட்டதும் அதை நிறைவேற்றத் தயாரானார்கள். மக்கள் ஹஜ்ஜுக்கு வரும் வழிகளில் அமர்ந்து கொண்டு தங்களைக் கடந்து செல்பவர்களிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி எச்சரித்து தாங்கள் முடிவு செய்திருந்ததைக் கூறினார்கள்.
ஆனால், அதை இலட்சியம் செய்யாத நபி (ஸல்) ஹாஜிகளின் தங்குமிடங்களிலும் பிரபலமான உக்காள், மஜன்னா, துல்மஜாஸ் ஆகிய சந்தைகளிலும் மக்களைத் தேடிச் சென்று அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அபூலஹப் நின்றுகொண்டு “இவர் சொல்வதை ஏற்காதீர்கள். நிச்சயமாக இவர் மதம் மாறியவர்; பொய்யர்” என்று கூறினான்.
இவர்களின் இவ்வாறான செயல்கள் அரபியர்களிடம் மென்மேலும் இஸ்லாம் பரவக் காரணமாக அமைந்தன. ஹஜ்ஜை முடித்துச் சென்ற அரபியர்கள் நபி (ஸல்) அவர்களையும் அவர்கள் எடுத்துரைத்த இஸ்லாமையும் தங்களது நாடுகளில் எடுத்துரைத்தார்கள்.
ஹஜ் காலம் முடிந்தது. இறையழைப்புப் பணியை அதன் ஆரம்ப நிலையிலேயே கருவறுத்திட வேண்டுமென குறைஷியர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:
1) பரிகசித்தல், இழிவுபடுத்துதல், பொய்ப்பித்தல், எள்ளி நகையாடுதல்:
இதுபோன்ற இழிசெயல்களால் முஸ்லிம்களை மனதளவில் பலவீனப்படுத்த எண்ணினர். அற்பமான வசைச்சொற்களால் நபி (ஸல்) அவர்களை ஏசினர். சில வேளைகளில் பைத்தியக்காரர் என்றனர்.
(நமது நபியாகிய உங்களை நோக்கி) “வேதம் அருளப்பட்டதாகக் கூறும் நீங்கள் நிச்சயமாகப் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 15:6)
சில வேளைகளில் நபி (ஸல்) அவர்களை “சூனியக்காரர்’ என்றும் “பொய்யர்’ என்றும் கூறினர்.
(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீங்கள்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சயப்பட்டு, “இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உங்களைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 38:4)
வஞ்சகத்தனத்தையும் சுட்டெரிக்கும் பார்வைகளையும் நபி (ஸல்) அவர்கள் மீது வீசினர்.
(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும்போதெல்லாம், அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உங்களை வீழ்த்தி விடுபவர்களைப் போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். அன்றி, (உங்களைப் பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 68:51)
நபி (ஸல்) அவர்கள் தங்களது எளிய தோழர்களுடன் அமர்ந்திருக்கும்போது அவர்களைக் கேலி செய்வார்கள்.
(நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் “எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்?” என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனல்லவா? (அல்குர்ஆன் 6:53)
அதற்கு அல்லாஹ் அந்த வசனத்தின் இறுதியிலேயே பதிலளித்தான். மேலும், இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து எவ்வாறெல்லாம் பரிகசித்தார்கள் என்பதையும் விவரிக்கிறான்.
நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர். (அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தாரிடம் சென்று விட்டபோதிலும், (பின்னும்) இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர். (வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) “நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்” என்றும் கூறுகின்றனர். (நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே! (அல்குர்ஆன் 83:29-33)
இவ்வாறு ஒவ்வொரு நாளும் கேலி, கிண்டல், குத்திப்பேசுதல் போன்ற இடையூறுகளை அதிகரித்துக் கொண்டே சென்றனர். இது நபி (ஸல்) அவர்களின் மனதைப் பெரிதும் பாதித்தது. இது குறித்து அல்குர்ஆனில் இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான்:
(நபியே! உங்களைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை, உங்கள் உள்ளத்தை நெருக்குகிறதென்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீங்கள் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்கள்.)
பிறகு அவர்களது மன நெருக்கடியை அகற்றும் வழியைக் கூறி அவர்களை உறுதிப்படுத்துகிறான்.
நீங்கள் உங்கள் இறைவனைத் துதி செய்து புகழ்ந்து, அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குங்கள். உமக்கு “யக்கீன்’ (என்னும் மரணம்) ஏற்படும் வரையில் (இவ்வாறே) உங்கள் இறைவனை வணங்கிக் கொண்டிருங்கள். (அல்குர்ஆன் 16:97)
மேலும் பரிகசிப்பவர்களின் தீங்கிலிருந்து நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதாக அல்லாஹ் உறுதியளிக்கிறான்.
பரிகாசம் செய்யும் (இவர்களுடைய தீங்கைத் தடை செய்வதற்கு) நிச்சயமாக நாமே உங்களுக்குப் போதுமாயிருக்கிறோம். இவர்கள் (உங்களைப் பரிகசிப்பது மட்டுமா?) அல்லாஹ்வுக்கு மற்றொரு (பொய்த்) தெய்வத்தைக் கூட்டாக்குகிறார்கள். (இதன் பலனை) பின்னர் இவர்கள் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 16:95, 96)
அதுமட்டுமின்றி அவர்களது தீய செயல்கள் அவர்களுக்கு எதிராகவே முடியும் என்பதையும் அல்லாஹ் முன்னறிவிப்புச் செய்தான்.
(நபியே!) உங்களுக்கு முன்னர் வந்த (நம்முடைய மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில் அவர்கள் (எந்த வேதனையைப்) பரிகசித்துக் கொண்டிருந்த(னரோ அ)து அவர்களை வந்து சூழ்ந்துகொண்டது. (அல்குர்ஆன் 6:10)
2) சந்தேகங்களை கிளறுவதும் பொய்ப்பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதும்
ஏகத்துவ அழைப்பை மக்கள் செவியேற்று சிந்திக்க முடியாத வகையில் பல வகையான பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். குர்ஆனைப் பற்றி இவ்வாறு கூறினர்:
இவை சிதறிய சிந்தனையால் ஏற்பட்ட வாக்கியங்கள்; நபி (ஸல்) அவர்கள் தாமே இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஒரு கவிஞர்தான்; தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை; இரவில் பொய்யான கனவுகளைக் கண்டு பகலில் அதை வசனமாக ஓதிக் காட்டுகிறார்; நபி (ஸல்) அவர்கள் தாமாகவே அதைப் புனைந்து கொள்கிறார்; குர்ஆனை இவருக்கு கற்றுத் தருவது ஒரு மனிதர்தான்; குர்ஆனாகிய இது பொய்யாக அவர் கற்பனை செய்துகொண்டதே தவிர வேறில்லை இதைக் கற்பனை செய்வதில் வேறு மக்களும் அவருக்கு உதவி புரிகின்றனர்; இது முன்னோர்களின் கட்டுக்கதையே; காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது அதனை இவர் மற்றொருவரின் உதவியைக் கொண்டு எழுதி வைக்கும்படி செய்கின்றார் இவ்வாறெல்லாம் அந்த நிராகரிப்பவர்கள் சூழ்நிலைகளுக்கேற்ப பிரச்சாரம் செய்து வந்தனர். (பார்க்க அல்குர்ஆன் வசனங்கள் 21:5, 16:103, 25:4, 5)
சில வேளைகளில் குறி சொல்பவர்களுக்கு ஜின், ஷைத்தான் இறங்கி செய்தி சொல்வது போல நபி (ஸல்) அவர்கள் மீதும் ஜின், ஷைத்தான் இறங்கி செய்தி சொல்கின்றன என்றனர். இதை மறுத்தே பின்வரும் வசனம் அருளப்பட்டது.
(நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே! (அல்குர்ஆன் 26:221-223)
அதாவது மக்களே! பாவத்தில் உழலும் பொய்யான பாவியின் மீதுதான் ஷைத்தான்கள் இறங்குகிறார்கள். நான் பொய்யுரைத்தோ பாவம் செய்தோ நீங்கள் கண்டதில்லை. அப்படியிருக்க இந்தக் குர்ஆனை ஷைத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தான் என்று எப்படிக் கூறுகிறீர்கள்.
சில வேளைகளில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து “இவருக்கு ஒருவகையான பைத்தியம் பிடித்துள்ளது. நல்ல கருத்துகளை இவரே சிந்தித்து அதை அழகிய மொழிநடையில் கவிஞர்களைப் போன்று கூறுகிறார். எனவே இவர் கவிஞர்; இவரது வார்த்தைகள் கவிகளே” என்றனர். அல்லாஹ் இவர்களுக்கு மறுப்பு தெரிவித்து, கவிஞர்களிடமுள்ள மூன்று தன்மைகளைக் குறிப்பிட்டு அதில் ஒன்றுகூட நபி (ஸல்) அவர்களிடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினான்.
கவிஞர்களை வழிகெட்டவர்கள்தாம் பின்பற்றுகின்றனர். நிச்சயமாக, அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 26:224-226)
1) நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்கள் மார்க்கத்திலும் நற்பண்புகளிலும் சிறந்து விளங்கி, இறையச்சத்துடன் நேர்வழியையும் அடைந்தவர்களாவர். வழிகேட்டிற்கான எந்த அடையாளமும் அவர்களிடமில்லை.
2) கவிஞர்கள் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு உளறுவதைப் போன்று நபி (ஸல்) முன்னுக்குப் பின் முரணாக உளறவில்லை. மாறாக, அவர்கள் ஒரே இறைவன்; ஒரே மார்க்கம் என்ற கொள்கையின் பக்கம் எப்போதும் அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
3) தாங்கள் செய்ததையே பிறரிடம் நபி (ஸல்) எடுத்துரைத்தார்கள். பிறரிடம் எடுத்துரைத்ததையே தங்களது வாழ்வில் நடைமுறைப்படுத்தினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுக்கும் கவிஞர்களுக்கும், குர்ஆனுக்கும் கவிதைக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை பிறகு எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள்?
இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கும் குர்ஆனுக்கும் எதிராக நிராகரிப்போர் எழுப்பிய ஒவ்வொரு சந்தேகத்துக்கும் தெளிவான, ஆணித்தரமான பதில்களை அல்லாஹ் இறக்கி அருளினான். நிராகரிப்பவர்களின் பெரும்பாலான சந்தேகங்கள் ஓரிறைக் கொள்கை, தூதுத்துவம், மரணித்தவர் மறுமையில் எழுப்பப்படுவது ஆகிய மூன்றைப் பற்றியே இருந்தது. ஏகத்துவம் தொடர்பான அவர்களது அனைத்து சந்தேகங்களுக்கும் குர்ஆன் உறுதியான பதிலளித்து அவர்களது கற்பனைக் கடவுள்கள் எவ்வளவு பலவீனமானவை என்பதையும் தெளிவுபடுத்தியது. குர்ஆனின் ஆணித்தரமான விளக்கங்கள் குறைஷியரின் கோபத்தையே அதிகரிக்கச் செய்தது.
அவர்கள் நபி (ஸல்) அவர்களை உண்மையாளர்; நம்பிக்கைக்குரியவர்; இறையச்சமிக்க ஒழுக்க சீலர் என்று உறுதி கொண்டிருந்த அதே நேரத்தில், அவர் அல்லாஹ்வின் உண்மையான தூதூர்தானா? என சந்தேகித்தனர். ஏனெனில், “நபித்துவம்’ என்பது மிக உயர்ந்த ஒன்று! அதை சாதாரண மனிதர்களால் பெற முடியாது என அவர்கள் உறுதியாக நம்பியிருந்தனர். எனவே, அல்லாஹ் தனக்களித்த நபித்துவத்தைப் பற்றி அறிவித்து அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்களென நபி (ஸல்) அவர்கள் அழைப்பு விடுத்தபோது இணைவைப்பவர்கள் திகைத்துப்போய் பின்வாங்கினர். இவர்களின் இக்கூற்றுகள் பற்றியே அல்லாஹ் இந்த வசனங்களை இறக்கினான்.
(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: “இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு வானவர் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்து கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே! (அல்குர்ஆன் 25:7)
மேலும் “முஹம்மது மனிதராயிற்றே!
மனிதர் எவருக்கும் (வேதத்தில்) யாதொன்றையும் அல்லாஹ் அருளவேயில்லை” என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 6:91)
அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து அல்லாஹ் (அதே வசனத்தில்) கூறுகிறான்:
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: “மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய (“தவ்றாத்’ என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? (அல்குர்ஆன் 6:91)
மூஸா (அலை) மனிதர்தாம் என்று அவர்கள் நன்கு விளங்கியிருந்தனர். அப்படியிருக்க முஹம்மது (ஸல்) மனிதராக இருப்பதுடன் அல்லாஹ்வின் தூதராக ஏன் இருக்கக்கூடாது?
ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களின் தூதுத்துவத்தை மறுத்து இவ்வாறுதான் கூறினர்.
அதற்கவர்கள், “நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 14:10)
இவர்களின் இக்கூற்றுக்குப் பதிலாக இறைத்தூதர்கள் கூறினார்கள்.
நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எனினும், அல்லாஹ் தன் அடியார் களில் தான் விரும்பியவர்கள் மீது அருள் புரிகிறான். (அல்குர்ஆன் 14:11)
ஆகவே, இறைத்தூதர்களும் மனிதர்கள்தான். எனவே, மனிதராக இருப்பது நபித்துவத்திற்கு எந்த வகையிலும் முரண்பாடானது அல்ல என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்தின.
இப்றாஹீம், இஸ்மாயீல், மூஸா (அலை) ஆகிய அனைவரும் மனிதர்களாக இருந்து அல்லாஹ்வின் தூதராகவும் இருந்தார்கள் என்பதை மக்காவாசிகள் ஏற்றிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் மீதான இந்த வாதத்தை விரைவிலேயே கைவிட்டு விட்டு மற்றொரு சந்தேகத்தைக் கிளற ஆரம்பித்தனர். அதாவது, மிகவும் மகத்துவம் வாய்ந்த தூதுத்துவத்தைக் கொடுக்க இந்த அனாதையைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வுக்கு கிடைக்கவில்லையா? மக்கா, தாயிஃப் நகரத்திலுள்ள செல்வமும் செல்வாக்கும் மிக்க பல தலைவர்கள் இருக்க அவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஆதரவற்றவரான இவரை அல்லாஹ் ஒருபோதும் தூதராக்க மாட்டான் என்று வாதிக்கத் தொடங்கினர். அவர்களின் இக்கூற்றை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
அன்றி (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள யாதொரு பெரியமனிதன் மீது இந்தக் குர்ஆன் இறக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வாறாயின் நாங்கள் அதனை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர்.(அல்குர்ஆன் 43:31)
இவர்களின் இக்கூற்றுக்கு பதிலுரைத்து இந்த வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.
(நபியே!) உங்கள் இறைவனின் அருளைப் பங்கிடுபவர்கள் இவர்கள்தாமா? (அல்குர்ஆன் 43:32)
அதாவது தூதுத்துவம், வஹி (இறைச்செய்தி) இரண்டும் அல்லாஹ்வின் கருணையாகும். அதை, தான் விரும்பியவர்களுக்குக் கொடுக்கும் முழு உரிமையும் அவனுக்குரியதே! அவ்வாறின்றி இவர்கள் விரும்பிய நபர்களுக்குத்தான் கிடைக்க வேண்டுமென்று இந்த நிராகரிப்பாளர்கள் எண்ணுவது எந்த வகையில் நியாயம்? என அல்லாஹ் வினா தொடுத்து, தூதுத்துவத்தை யாருக்கு கொடுப்பது என்பதை அவனே நன்கு அறிந்தவன் என அடுத்து வரும் வசனத்தில் கூறுகிறான்:
அவர்களிடம் யாதொரு வசனம் வந்தால் “அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படும் வரையில் நாங்கள் (அதனை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். (அல்குர்ஆன் 6:124)
இதற்கும் உரிய பதில்கள் கிடைக்கவே, மற்றொரு சந்தேகத்தைக் கிளறினர். உலகில் அரசர்கள் படை, பட்டாளம் சூழ மிகக்கம்பீரமாக, செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்க தன்னை அல்லாஹ்வின் தூதரென வாதிக்கும் முஹம்மதோ சில கவள உணவுக்காக வாழ்க்கையில் இப்படியெல்லாம் சிரமப்படுகிறாரே? என்றனர்.
(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: “இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு வானவர் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்து கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே! அல்லது அவருக்கு யாதொரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய யாதொரு சோலை அவருக்கு இருக்க வேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) அன்றி, இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்” என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25:7, 8)
நிராகரிப்பவர்களின் மேற்கூறிய கூற்றுக்குரிய பதிலை அல்லாஹ் அதைத் தொடர்ந்துள்ள 9, 10, 11 வசனங்களில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
ஆகவே, (நபியே!) உங்களைப் பற்றி (இந்த) அக்கிரமக்காரர்கள் என்னென்ன வர்ணிப்புகள் கூறுகின்றார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். ஆகவே, இவர்கள் (முற்றிலும்) வழிகெட்டு விட்டார்கள்; நேரான வழியை அடைய இவர்களால் முடியாது.
(நபியே! உங்களது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) அவற்றைச் சொந்தமாக்கி மிக்க மேலான சொர்க்கத்தை உங்களுக்குத் தரக்கூடியவன். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உங்களுக்குப் பல மாட மாளிகைகளையும் அமைத்து விடுவான்.
உண்மையில் இவர்கள் விசாரணைக் காலத்தையே பொய்யாக்குகின்றனர். எவர்கள் விசாரணைக் காலத்தைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கடுமையாக பற்றி எயும் நரகத்தையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன் 25:9, 10, 11)
அதாவது, சிறியவர்-பெரியவர், பலவீனர்-வலியவர், மதிப்புடையவர்-மதிப்பற்றவர், சுதந்திரமானவர்-அடிமை, ஏழை-பணக்காரர் என்ற அனைத்துத் தரப்பினருக்கும் தூதுத்துவத்தை எடுத்துரைப்பதே முஹம்மது (ஸல்) அவர்களது பணி! எனவே அரசாங்க தூதர்களைப் போல படை பட்டாளம், பாதுகாவலர், பணியாட்கள் ஆகியோர் சூழ முஹம்மது (ஸல்) இருந்தால் மக்களில் பெரும்பான்மையாக இருக்கும் சாதாரணமான மனிதர்களும் ஏழை எளியோரும் எவ்வாறு அவரைச் சந்தித்து பயன்பெற முடியும்? எனவே அரசர்களைப் போன்று ஆடம்பரமாக வாழ்ந்தால் நபித்துவத்தின் நோக்கமே அடிபட்டுவிடும் என்றும் அல்லாஹ் தெளிவுபடுத்தினான்.
அடுத்து, மரணத்துக்குப் பின் எழுப்பப்படுவதை அவர்கள் மறுத்து வந்தார்கள். அது அறிவுக்கு எட்டாததாகவும் ஆச்சரியமானதாகவும் அவர்களுக்குத் தென்பட்டது. அவர்களின் இக்கூற்றை பற்றி இதோ அல்குர்ஆன் விவரிக்கிறது:
“நாம் இறந்து (உக்கி) எலும்பாகவும் மண்ணாகவும் போன பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா? (என்றும்) (அவ்வாறே) நம்முடைய மூதாதைகளுமா? (எழுப்பப்படுவார்கள்” என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 37:16, 17)
(அன்றி, “இத்தூதர் கூறுகின்றபடி) நாம் இறந்து உக்கி மண்ணாகப்போனதன் பின்னரா (உயிர்கொடுத்து மீளவைக்கப்படுவோம்?) இவ்வாறு மீளுவது வெகு(தூர) தூரம். (மீளப்போவதே இல்லை” என்றும் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 50:3)
எனினும், எவர்கள் நிராகரிக்கின்றவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) “நீங்கள் (இறந்து மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடியதொரு மனிதனை நாம் உங்களுக்கு அறிவிக்கவா” என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அன்றி, (இம்மனிதர்) “அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கொண்டாரோ அல்லது அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ” என்று (அவரிடம் கூறுகின்றனர்.) அவ்வாறன்று! எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள்தாம் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர்.(அல்குர்ஆன் 34:7, 8)
மரணத்திற்கு பிறகு எழுப்படுவதை பரிகாசம் செய்து அவர்கள் கவிதையும் பாடினர்,
“மரணமா? பிறகு எழுப்புதலா? பிறகு ஒன்று சேர்த்தலா? உம்மு அம்ரே இது என்னே கற்பனை கதை?”
உலகில் நடைபெறும் நிகழ்வுகளை அல்லாஹ் அவர்களது சிந்தனைக்கு உணர்த்தி, அவர்களது கூற்றுக்கு மறுப்புரைத்தான். அதாவது, அநீதமிழைத்தவன் அதற்குரிய தண்டனையை அனுபவிக்காமலும், அநீதத்திற்குள்ளானவன் அதற்குரிய பரிகாரத்தைப் பெறாமலும் மரணித்து விடுகிறான். அவ்வாறே, நன்மை செய்தவன் அதற்குரிய நற்பலனையும், தீமை செய்தவன் அதற்குரிய தண்டனையையும் அனுபவிக்காது மரணமடைகின்றான். மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கையும் அங்கு ஒவ்வொரு செயலுக்குமான தகுந்த கூலியும் என்ற நியதி இல்லாதிருந்தால், இந்த இரு வகையினரும் சமமாகி விடுவார்கள். அதுமட்டுமின்றி பாவியும் அநீதமிழைத்தவனும் நல்லவரை விடவும் அநீதமிழைக்கப்பட்டவனை விடவும் பாக்கியத்திற்குரியவர்களாக ஆகி விடுவார்கள். ஆனால், நீதமானவனான அல்லாஹ் தனது படைப்பினங்களை இத்தகைய முரண்பாட்டில் வைத்துவிடுவான் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும். இதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் விவரிக்கிறான்.
(நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பளிக்கின்றீர்கள்? (அல்குர்ஆன் 68:35, 36)
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைப் பூமியில் விஷமம் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது இறை அச்சமுடைய வர்களை (பயமற்று குற்றம் புரியும்) பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? (அல்குர்ஆன் 38:28)
எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் தாம் ஆகிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே! அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்துகொண்ட முடிவு மகா கெட்டது. (அல்குர்ஆன் 45:21)
மறுமுறை எழுப்புவது அல்லாஹ்விற்கு முடியுமா? என்ற அவர்களின் சந்தேகத்திற்கு இதோ அல்லாஹ் பதில் அளிக்கின்றான்.
(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அந்த வானத்தைப் படைத்தான். (அல்குர்ஆன் 79:27)
வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமுமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றலுடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 46:33)
முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கின்றீர்கள். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.) (அல்குர்ஆன் 56:62)
அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர்கொடுத்து) அவற்றை மீள வைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (உதாரணமும் பரிசுத்தத்) தன்மை(யும்)தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 30:27)
எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீளவைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம். (அல்குர்ஆன் 21:104)
(படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமர் (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குக் கஷ்டமெனக் கூறுவதற்கு?) எனினும் (மீண்டும் இவர்களைப்) புதிதாக படைக்கும் விஷயத்தில் இவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 50:15)
இவ்வாறு அவர்களது அனைத்து சந்தேகங்களுக்கும் அறிவார்ந்த விளக்கத்தை அல்லாஹ் அளித்தான். எனினும், அந்தக் நிராகரிப்பவர்கள் ஆணவத்தால் சிந்திக்க மறுத்து தங்களது கருத்தையே மக்களிடம் திணித்துக் கொண்டிருந்தனர்.
3) முன்னோர்களின் கட்டுக்கதைகளைக் கூறி திருமறையை செவியேற்காதவாறு மக்களைத் தடுப்பது
நிராகரிப்பவர்கள் மேற்கண்ட சந்தேகங்களுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. மக்கள் குர்ஆனை செவியேற்கவோ இஸ்லாமிய அழைப்புக்கு பதில் தரவோ இயலாதவாறு அவர்களிடையே புகுந்து தங்களால் இயன்றவரை தடைகளை ஏற்படுத்தினார்கள். இஸ்லாமிய அழைப்பைக் கேட்கும் மக்களிடையே நுழைந்து கூச்சல், குழப்பங்களையும், சலசலப்பையும் ஏற்படுத்தி அவர்கள் குழுமியுள்ள அந்த இடங்களிலிருந்து அவர்களை மிரண்டு ஓடவைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அழைப்பு விடுப்பதற்கு அல்லது தொழுவதற்கு அல்லது குர்ஆன் ஓதுவதற்கு தயாரானால் பாட்டுப்பாடி ஆட்டம் போடுவார்கள். இது குறித்து அடுத்து வரும் வசனம் அருளப்பட்டது:
நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) “நீங்கள் இந்த குர்ஆனை செவிமடுக்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதினாலும்) நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு அதில் கூச்சல், குழப்பம் உண்டுபண்ணுங்கள். அதனால் நீங்கள் (முஸ்லிம்களை) வென்றுவிடலாம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 41:26)
இத்தகைய இடையூறுகளால் நபி (ஸல்) அவர்களுக்கு மக்கள் மன்றங்களிலும் பொதுச் சபைகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதும் குர்ஆனை ஓதிக் காண்பிப்பதும் மிகச் சிரமமாக இருந்தது. எனவே, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மக்கள் முன்னிலையில் தோன்றி சொல்லவேண்டிய விஷயத்தை எடுத்துச்சொல்லி, ஓதிக்காட்ட வேண்டியதை ஓதிக்காட்டி விடுவார்கள். கடினமான இந்நிலை நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டு இறுதிவரை நீடித்தது.
குறைஷியர்களில் ஒருவனான “நள்ரு இப்னு ஹாரிஸ்’ ஒரு முறை “ஹீரா’ சென்றிருந்தபோது அங்கிருந்து பாரசீக அரசர்கள் மற்றும் ருஸ்தும், இஸ்ஃபுந்தியார் ஆகியோரின் கதைகளை கற்று வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு சபையில் உபதேசம் செய்யவோ, அல்லாஹ்வைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவோ தொடங்கினால், அவர்களுக்குப் பின் “நழ்ரு’ நின்று கொண்டு “குறைஷியரே! முஹம்மதை விட நான் அழகாகப் பேசுவேன்” என்று கூறி, தான் கற்று வந்த கதைகளைக் கூறி முடித்தபின் “என்னை விட முஹம்மது அழகாகப் பேசிட முடியுமா?” என்று கேட்பான். (இப்னு ஹிஷாம்)
இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: இனிமையாக பாட்டுப் பாடும் ஓர் அடிமைப் பெண்ணை நழ்ரு விலைக்கு வாங்கியிருந்தான். இஸ்லாமை ஏற்க எவரேனும் விரும்பினால் அவரிடம் தனது பாடகியை அழைத்துச் சென்று “இவருக்கு உணவளித்து, மதுவைப் புகட்டி, இனிமையாக பாட்டுப் பாடு” என்று அவளிடம் கூறுவான். பிறகு, அம்மனிதரிடம் “முஹம்மது உன்னை அழைக்கும் காரியத்தைவிட இது மிகச் சிறந்தது” என்று கூறுவான். இது குறித்து பின்வரும் வசனம் அருளப்பட்டது. (துர்ருல் மன்ஸுர்)
(இவர்களைத் தவிர) மனிதல் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் மற்றும்) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (அல்குர்ஆன் 31:6)
நபி (ஸல்) அவர்களின் பகிரங்க அழைப்பைத் தொடர்ந்து பல மாதங்கள் எதிரிகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. தாங்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்று அவர்களின் அறிவுக்கு மெதுவாக உரைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர். அதாவது, ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள், அடிமைகள்- இவர்களில் யாராவது இஸ்லாமைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
தலைவர்களுடன் அவர்களது எடுபிடிகளும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக, சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும். அவற்றை சொல்லி மாளாது.
செல்வமும் செல்வாக்குமுள்ள ஒருவர் இஸ்லாமைத் தழுவினால் அவரிடம் அபூஜஹ்ல் நேரே சென்று “உன் செல்வத்தையும் செல்வாக்கையும் ஒன்றுமில்லாமலாக்கி விடுவேன்” என்று மிரட்டுவான். அவர் கொஞ்சம் பலமில்லாதவராக இருந்தால் அடித்துத் துன்புறுத்துவான். (இப்னு ஹிஷாம்)
உஸ்மான் (ரழி) அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாவி முஸ்லிம்களை பேரீத்தங்கீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)
தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் பெரும் துன்பத்தை அனுபவித்தார். பசி, பட்டினி என்ற வறண்ட வாழ்க்கையினால் அவர்களது மேனியின் தோல் சுருங்க ஆரம்பித்தது. (அஸதுல் காபா)
ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) நினைவிழக்கும் வரை கடுமையாக தாக்கப்படுவார். (அஸதுல் காபா)
பிலால் (ரழி) அவர்கள் உமய்யா இப்னு கலஃபுடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர்கள் அவரை மக்காவின் கரடு முரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார்கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும். அவர்கள் “அஹத்! அஹத்!“” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமையா பிலாலை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத் தாக்குவான். பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான். உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின்மீது பாறாங்கல்லைத் தூக்கி வைப்பான். அப்போது பிலாலை நோக்கி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீ சாக வேண்டும். அல்லது முஹம்மதின் மார்க்கத்தை நிராகரித்து லாத், உஜ்ஜாவை வணங்க வேண்டும். அதுவரை நீ இப்படியேதான் இருப்பாய். உன்னை விடவே மாட்டேன்” என்பான். அதற்கு பிலால் (ரழி) அஹத்! அஹத்! என்று சொல்லிக் கொண்டே, “இந்த “அஹத்’ என்ற வார்த்தையைவிட உனக்கு ஆவேசத்தை உண்டு பண்ணும் வேறொரு வார்த்தை எனக்குத் தெரிந்தால் நான் அதையே கூறுவேன்” என்பார்கள்.
ஒரு நாள் பிலால் (ரழி) சித்திரவதைக்குள்ளாகி இருக்கும்போது அவர்களைக் கடந்து சென்ற அபூபக்ர் (ரழி) அவர்கள் ஒரு ஹபஷி அடிமையை கிரயமாகக் கொடுத்து பிலால் (ரழி) அவர்களை வாங்கி உரிமை விட்டார்கள். சிலர் “ஐந்து அல்லது ஏழு ஊகியா வெள்ளிக்குப் பகரமாக வாங்கி உரிமை விட்டார்கள்” என்று கூறுகின்றனர். (இப்னு ஹிஷாம்)
அம்மார் இப்னு யாஸிர் (ரழி), அவர்களது தகப்பனார் யாஸிர், தாயார் ஸுமய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹுதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர். இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் “அப்தஹ்’ என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடு மணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர். இதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “யாஸின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது” என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவர்களின் வேதனையாலேயே யாஸிர் (ரழி) இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்து இயலாதவராக இருந்த அம்மான் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். இவரே இஸ்லாமிற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியாவார்.
அவர்களது மகனாரான அம்மாரை பாலைவனச் சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தும், நினைவிழக்கும் வரை தண்ணீல் மூழ்கடித்தும் சித்திரவதை செய்தனர். “முஹம்மதை திட்ட வேண்டும் அல்லது லாத், உஜ்ஜாவைப் புகழ வேண்டும். அப்போதுதான் உன்னை இத்தண்டனையிலிருந்து விடுவிப்போம்” என்றும் கூறினர். வேதனை தாளாத அம்மார் (ரழி) அவர்கள் நிராகரிப்பவர்களின் கட்டளைக்கு இணங்கி விட்டார். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அழுது மன்னிப்புக் கோரினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கியருளினான். (இப்னு ஹிஷாம்)
(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றிக் கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவனுடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 16:106)
அஃப்லஹ் அபூ ஃபுகைஹா (ரழி) அவர்கள் அப்து தார் கிளையைச் சார்ந்த ஒருவருடைய அடிமையாக இருந்தார். இவரது இரு கால்களையும் சங்கிலியால் பிணைத்து, ஆடைகளைக் கழற்றிவிட்டு சுடுமணலில் குப்புறக் கிடத்தி அசையாமலிருக்க பெரும் பாறையை முதுகின் மீது வைத்து, சுய நினைவை இழக்கும்வரை அவரை அதே நிலையில் விட்டுவிடுவார்கள். இவ்வாறான கொடுமைகள் தொடர்ந்தன. ஒருமுறை அவரது கால்களைக் கயிற்றால் பிணைத்துச் சுடுமணலில் கிடத்தி கழுத்தை நெறித்தார்கள். அவர் சுயநினைவை இழந்தவுடன் இறந்துவிட்டாரென எண்ணி விட்டுவிட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த அபூபக்ர் (ரழி) அஃப்லஹை விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். (அஸதுல் காபா)
கப்பாப் இப்னு அரத் (ரழி) அவர்கள் உம்மு அன்மார் என்ற பெண்ணின் அடிமையாகவும், கொல்லர் பணி செய்பவராகவும் இருந்தார்கள். அவர் இஸ்லாமைத் தழுவியதை அறிந்த எஜமானி பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பால் அவர்களது தலையிலும் முதுகிலும் சூடிட்டு “முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடு” என்று கூறுவாள். ஆனால் இவ்வாறான வேதனைகளால் அவர்களது ஈமானும்” மன உறுதியுமே அதிகரித்தது. உம்மு அன்மார் மட்டுமின்றி ஏனைய நிராகரிப்பவர்களும் அவரது முடியைப் பிடித்திழுப்பார்கள்; கழுத்தை நெறிப்பார்கள். நெருப்புக் கங்குகளின் மீது அவரைப் படுக்க வைப்பார்கள். அந்த நெருப்பு அவரது உடலைப் பொசுக்க, அப்போது இடுப்பிலிருந்து கொழுப்பு உருகி ஓடி, நெருப்பை அணைத்து விடும்.(அஸதுல் காபா)
ரோம் நாட்டைச் சேர்ந்த அடிமையான ஜின்னீரா (ரழி) என்ற பெண்மணி இஸ்லாமை ஏற்றதற்காக பலவிதமான கொடுமைக்கு ஆளானார். அப்போது கண்ணில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பார்வையை இழந்தார். “இவரது கண்ணை லாத், உஜ்ஜா பறித்துவிட்டன” என்று நிராகரிப்பவர்கள் கூறினர். அதற்கு ஜின்னீரா, “நிச்சயமாக இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. அவன் நாடினால் எனக்கு நிவாரணமளிப்பான்” என்று கூறினார். மறுநாள் அவர்களது பார்வையை அல்லாஹ் சசெய்தான். அதைக் கண்ட குறைஷியர்கள் “இது முஹம்மதின் சூனியத்தில் ஒன்று” எனக் கூறினர். (இப்னு ஹிஷாம்)
உம்மு உபைஸ் (ரழி) என்ற பெண்மணி அஸ்வத் இப்னு அப்து யகூஸ் என்பவனின் அடிமையாக இருந்தார். இவன் நபி (ஸல்) அவர்களின் கொடும் விரோதியாகவும் நபியவர்களை பரிகசிப்பவனாகவும் இருந்தான். அவன் உம்மு உபைஸை கொயூரமாக வேதனை செய்தான். (இஸாபா)
அம்ர் இப்னு அதீ என்பவனின் அடிமைப் பெண்ணும் இஸ்லாமை ஏற்றார். அவரை (அப்போது இஸ்லாமை ஏற்காதிருந்த) உமர் (ரழி), தான் களைப்படையும் வரை சாட்டையால் அடித்துவிட்டு “நீ மரணிக்கும்வரை உன்னை நான் விடமாட்டேன்” என்று கூறுவார். அதற்கு அப்பெண்மணி “அப்படியே உமது இறைவனும் உம்மைத் தண்டிப்பான்” என்று கூறுவார். (இப்னு ஹிஷாம்)
இஸ்லாமை ஏற்றதற்காக கொடுமை செய்யப்பட்ட அடிமைப்பெண்களில் நஹ்திய்யா (ரழி) என்பவரும் அவரது மகளும் அடங்குவர். இவ்விருவரும் அப்துத்தான் கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அடிமையாக இருந்தனர். (இப்னு ஹிஷாம்)
இஸ்லாமை ஏற்றதற்காகக் கொடுமை செய்யப்பட்ட ஆண் அடிமைகளில் ஆமிர் இப்னு புஹைரா (ரழி) என்பவரும் ஒருவர். நினைவிழந்து சித்தப் பிரமை பிடிக்குமளவு அவரை கொடுமைப்படுத்தினார்கள். (இப்னு ஹிஷாம்)
இம்மூவரையும் அபூபக்ர் (ரழி) விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். இதைக் கண்ட அவர்களது தந்தையான அபூ குஹாஃபா “நீ பலவீனமான அடிமைகளை விலைக்கு வாங்கி உரிமை விடுகிறாய். திடகாத்திரமான ஆண் அடிமைகளை வாங்கி உரிமையளித்தால் அவர்கள் உனக்கு பக்கபலமாக இருப்பார்களே!” என்றார்.
அதைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் திருப்தியை நாடியே செய்கிறேன்” என்றார்கள். அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்தும் இஸ்லாமின் எதிரிகளை இகழ்ந்தும் அடுத்துள்ள வசனங்களை இறக்கினான்.
(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெயும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன். மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்ல மாட்டான். அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான். (அல்குர்ஆன் 92:14-16)
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள துர்பாக்கியமுடையவன் உமைய்யாவும் அவனுடைய வழியில் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தியவர்களுமாவர்.
இறையச்சமுள்ளவர்தான் அதிலிருந்து தப்பித்துக் கொள்வார். (அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்ளும் பொருட்டுத் தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார். அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும், மிக்க மேலான தன் இறைவனின் முகத்தை விரும்பியே தானம் கொடுப்பார். (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார். (அல்குர்ஆன் 92:17-21)
இவ்வசனத்தில் இறையச்சமுள்ளவர் என குறிப்பிடப்படுபவர் அபூபக்ர் (ரழி) அவர்களாவார். (இப்னு ஹிஷாம்)
அபூபக்ர் (ரழி) அவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள். நவ்ஃபல் இப்னு குவைலித் என்பவன் அபூபக்ர் (ரழி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) இருவரையும் தொழக்கூடாது என்பதற்காக ஒரே கயிற்றில் இருவரையும் பிணைத்துவிட்டான். ஆனால், கட்டவிழ்ந்து அவ்விருவரும் தொழுவதைக் கண்ட நவ்ஃபல் அஞ்சி நடுங்கினான். இருவரும் ஒரே கயிற்றில் பிணைக்கப் பட்டதால் அவர்களை “கரீனைன் - இணைந்த இருவர்” என்று கூறப்படுகிறது. சிலர் இருவரையும் கட்டியது நவ்ஃபல் அல்ல, தல்ஹாவின் சகோதரன் உஸ்மான் இப்னு உபைதுல்லாஹ்தான் என்று கூறுகின்றனர்.
(மேற்கூறிய சம்பவங்கள் மக்கா முஸ்லிம்கள் பட்ட இன்னல்களுக்கு எடுத்துக் காட்டாகும்.) இஸ்லாமைத் தழுவிய எவரையும் அவர்கள் துன்புறுத்தாமல் விட்டதில்லை. எளிய முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்காகப் பழிவாங்கவும் எவருமில்லை என்பதால் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பது நிராகரிப்பவர்களுக்கு மிக எளிதாக இருந்தது. அடிமைகளாக இருந்தவர்களை அவர்களது எஜமானர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் கொடுமைப் படுத்தினர். இஸ்லாமைத் தழுவியவர் செல்வமும் செல்வாக்கும் உடையவராக இருந்தால், அவர்களுக்கு அவர்களது கூட்டத்தார் பாதுகாவலாக இருந்தனர். சில வேளைகளில் குரோதத்தின் காரணமாக அவர்களது கூட்டத்தினரே அவர்களை கொடுமை செய்தனர்.
நபி (ஸல்) அவர்கள் கம்பீரமாகவும் தனித்தன்மையுடனும் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களை காண்பவர் நண்பரானாலும் விரோதியானாலும் அவரது மனதில் நபி (ஸல்) அவர்கள் பற்றிய உயர்வான எண்ணமும் மதிப்பும் மரியாதையும் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. இழி மக்களே நபி (ஸல்) அவர்களிடம் அற்பமாக நடந்துகொள்ளத் துணிவர். மேலும், குறைஷியரின் மிக மதிக்கத்தக்க தலைவராக கருதப்பட்ட அபூதாலிபின் பாதுகாப்பிலிருந்த நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்துவது குறைஷியர்களுக்கு சிரமமாக இருந்தது. இந்நிலை குறைஷியர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தங்களுக்கு எவ்விதத் துன்பமும் ஏற்படாமல் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்பினர். நபி (ஸல்) அவர்களின் காப்பாளரான அபூதாலிபிடம் நுட்பமான முறையிலும் அச்சுறுத்தும் தொனியிலும் பேச்சுவார்த்தை நடத்தி அவரை தங்களது கோரிக்கை களுக்கு இணங்க வைக்க முடிவெடுத்தனர்.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: சில குறைஷித் தலைவர்கள் அபூதாலிபிடம் சென்று “அபூதாலிபே! நிச்சயமாக உமது சகோதரர் மகன் எங்களது கடவுளர்களை ஏசி, எங்களது மார்க்கத்தையும் குறை கூறுகிறார். எங்களில் உள்ள அறிஞர்களை மூடர்களாக்கி எங்களது மூதாதையர்களை வழிகெட்டவர்களாக்கி விட்டார். நீரும் அவருக்கு எதிரான எங்களது மார்க்கத்தில் இருப்பதால் இவ்வாறான செயல்களிலிருந்து அவரை நீரே தடுத்துவிடும். அல்லது எங்களிடம் ஒப்படைத்துவிடும். அவரை என்ன செய்வதென நாங்கள் முடிவெடுத்துக் கொள்கிறோம்” என்றனர். அபூதாலிப் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். (இப்னு ஹிஷாம்)
இந்த சந்திப்புக் குறித்து அபூதாலிப் நபி (ஸல்) அவர்களிடம் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. வழக்கம்போல் நபி (ஸல்) அவர்கள் தங்களது அழைப்புப் பணியைச் செய்தார்கள். இதைக் கண்ட குறைஷியர்கள் கோபமுற்று மறுமுறை அபூதாலிபை சந்திக்க நாடினர். இம்முறை மிக வன்மையாகக் கண்டித்துப் பேச வேண்டுமென முடிவு செய்தனர்.
குறைஷித் தலைவர்கள் அபூதாலிபை சந்தித்து “அபூதாலிபே! நீர் வயது முதிர்ந்தவர். எங்களது மதிப்பைப் பெற்றவர். நாங்கள் உமது சகோதரர் மகனைத் தடுத்து நிறுத்தக் கூறியும் நீர் அவரைத் தடுக்கவில்லை. அவர் எங்களது மூதாதையர்களைத் திட்டுவதையும் எங்களது அறிஞர்களை மூடர்களாக்குவதையும் எங்களது கடவுளர்களைக் குறை கூறுவதையும் கண்டு நாங்கள் பொறுமை காக்க முடியாது. நீரே அவரை சரிசெய்துவிடும். இல்லையெனில் நமது இரு கூட்டத்தால் ஒரு கூட்டம் அழியும் வரை உம்முடனும் அவருடனும் நாங்கள் போர் செய்வோம்” என்றனர்.
இந்த எச்சரிக்கையும் அச்சுறுத்தலும் அபூதாலிபுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச்செய்து நடந்ததைக் கூறி “எனது சகோதரர் மகனே! உமது கூட்டத்தார் என்னிடம் இவ்வாறெல்லாம் கூறிச் சென்றார்கள். எனவே, நீ என்மீது கருணை காட்டு! பலவீனமான என்னை தாங்கவியலா துன்பத்தில் ஆழ்த்திவிடாதே” என்றார். அபூதாலிப் மனம் தளர்ந்து தன்னைக் கைவிட்டு விட்டார் என்று கருதிய நபி (ஸல்) அவர்கள் “என் பெரியதந்தையே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது ஏகத்துவ அழைப்புப் பணியை விடுவதற்காக அவர்கள் சூரியனை எனது வலக்கரத்திலும், சந்திரனை எனது இடக்கரத்தில் வைத்தாலும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்யும்வரை அல்லது நான் அழியும்வரை இதை விடமாட்டேன்” என்று கூறிவிட்டு கண் கலங்கியவர்களாக அங்கிருந்து வெளியேறினார்கள். அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை அழைத்து “என் சகோதரர் மகனே! நீ விரும்பியதைச் செய்துகொள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! எந்த நிலையிலும் எவரிடமும் உம்மை ஒப்படைக்க மாட்டேன்” என்று கூறி சில கவிதைகளையும் பாடினார்.
“அல்லாஹ்வின் மீது சத்தியம்! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் உன்னை நெருங்க முடியாது. நான் மண்ணில் தலைவைக்கும் வரை! உனது விஷயத்தை வெளிப்படையாக சொல். உன்மீது குற்றமில்லை. கண்குளிர்ந்து மகிழ்ச்சி கொள்!...” (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) தங்களது ஏகத்துவ அழைப்பை நிறுத்தாமல் தொடர்வதைக் கண்ட குறைஷியர்கள், அபூதாலிப் முஹம்மதை கைவிட மறுத்து நம்மைப் பிரியவும் விரோதித்துக் கொள்ளவும் துணிந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டனர். அவர்கள் வலீதின் மகன் அமாராவை அழைத்துக் கொண்டு அபூதாலிபிடம் வந்தனர். “அபூதாலிபே! இவ்வாலிபர் குறைஷியரில் சிறப்பாக வளர்க்கப்பட்ட அழகிய வாலிபர். அவரது சகல உரிமைகளும் உமக்குரியது. இவரை உமது மகனாக வைத்துக் கொண்டு, உமது மார்க்கத்திற்கும் உமது மூதாதையர்களின் மார்க்கத்திற்கும் முரண்பட்டு, உமது கூட்டத்தாரிடையே பிளவை ஏற்படுத்தி, அவர்களின் அறிஞர்களை மூடர்களாக்கிய உமது சகோதரர் மகனை எங்களிடம் ஒப்படைத்துவிடும். ஒருவருக்கு ஒருவர் என சரியாகி விடும். நாங்கள் அவரைக் கொன்று விடுகிறோம்” என்றனர். அவர்களிடம் அபூதாலிப் மிகுந்த கோபத்துடன் “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களது பேரம் மிக மோசமானது. உங்கள் பிள்ளையை என்னிடம் ஒப்படைப்பீர்கள். அதை நான் ஊட்டி வளர்க்க வேண்டும்! எனது மகனை உங்களிடம் நான் ஒப்படைப்பேன். நீங்கள் அவரைக் கொலை செய்வீர்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! இது ஒருபோதும் நடக்காது” என்று கூறினார். அதற்கு முத்இம் இப்னு அதீ (அப்து மனாஃபின் கொள்ளுப்பேரர்) “அபூதாலிபே! உமது கூட்டத்தினர் உமக்கு நீதமான தீர்வைக் கூறி நெருக்கடியிலிருந்து உம்மை விடுவிக்க முயன்றனர். ஆனால் நீர் அதில் எதையும் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லையே!” என்றார். அதற்கு அபூதாலிப் “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் நீதம் காட்டவில்லை. (முத்இமே) நீ என்னைக் கைவிட்டு விட்டு எனக்கு எதிராக இக்கூட்டத்தினரைத் தூண்டிவிடுகிறாய்; அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறாய். நீ விரும்பியதைச் செய்துகொள்” என்று கோபமாகக் கூறினார். (இப்னு ஹிஷாம்)
அபூதாலிபின் மூலமாக நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை முடக்கிவிட வேண்டுமென்ற தங்களது திட்டத்தில் தோல்வியுற்ற குறைஷியர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூதாலிப் தானாக விலகிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கத் திட்டமிட்டனர்.
நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டு அழைப்புப் பணியைத் தொடங்கும் வரை குறைஷியர்கள் அவர்களை தங்களில் மதிக்கத்தக்க நபராகவே கருதி வந்தனர். அழைப்புப் பணியைத் தொடங்கியதும் அவர்கள் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நபி (ஸல்) அவர்கள் மீது அத்துமீறாதிருந்தனர். தற்பெருமையும் ஆணவமும் கொண்டிருந்த அவர்களால் நபி (ஸல்) அவர்களின் செயல்பாடுகளை நீண்ட நாள் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. குறைஷித் தலைவர்களில் ஒருவனான அபூ லஹப் அழைப்புப் பணியின் முதல் நாளிலிருந்தே நபி (ஸல்) அவர்களிடம் கடும் பகைமையைக் காட்டி வந்தான் என்பதை ஹாஷிம் கிளையாரின் சபையிலும் ஸஃபா மலை நிகழ்ச்சியிலும் நாம் அறிந்திருக்கிறோம்.
நபித்துவத்துக்கு முன் நபி (ஸல்) அவர்கள் தங்களின் மகள்கள் ருகையா, உம்மு குல்ஸும் (ரழி) அவர்களை அபூலஹபின் மகன்களான உத்பா, உதைபாவுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தொடங்கியதும் அபூ லஹப் தனது மகன்களை நிர்ப்பந்தித்து விவாகரத்துச் செய்ய வைத்துவிட்டான். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது மகனாரான அப்துல்லாஹ் சிறு வயதில் மரணமடைந்த போது அபூலஹப் மட்டில்லா மகிழ்ச்சியுடன் தனது தோழர்களிடம் “முஹம்மது சந்ததியற்றவராகி விட்டார்” என்ற சுபச் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)
ஹஜ்ஜுடைய காலங்களிலும் கடைத்தெருக்களிலும் அபூலஹப் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் சுற்றி வந்து அவர்களைப் “பொய்யர்” என்று கூறுவான். அது மட்டுமல்லாமல் ரத்தம் கொட்டும்வரை அவர்களது பிடரியில் பொடிக்கற்களால் அடித்துக்கொண்டே இருப்பான். (கன்ஜுல் உம்மால்)
அபூ லஹபின் மனைவியும் அபூ ஸுஃப்யானின் சகோதரியுமான உம்மு ஜமீல் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை கொடுப்பதில் தனது கணவனைவிட குறைந்தவளும் அல்ல! சளைத்தவளும் அல்ல! முட்களை நபி (ஸல்) செல்லும் பாதையிலும் அவர்களது வீட்டின் வாசலிலும் வைத்து விடுவாள். மிகக் கெட்டவளான இவள் எந்நேரமும் நபி (ஸல்) அவர்களை ஏசிப் பேசிக்கொண்டிருந்தாள். பல பொய்களைப் பரப்பிக் கொண்டே இருப்பாள். நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவித்துக் கொண்டும், பிரச்சினையின் நெருப்பை மூட்டிவிட்டுக் கொண்டும் இருப்பாள். இதனால்தான் அல்குர்ஆன் அவளை “ஹம்மாலதல் ஹத்தப்” விறகை சுமப்பவள் என்று வர்ணிக்கிறது.
தன்னைப் பற்றியும் தனது கணவனைப் பற்றியும் குர்ஆனின் வசனம் இறங்கியதை அறிந்து அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் (ரழி) கஅபத்துல்லாஹ்விற்கு அருகில் உட்கார்ந்திருந்தார்கள். அவளது கையில் குழவிக் கல் இருந்தது. இருவருக்கும் அருகில் அவள் வந்தவுடன் அவளது பார்வையை நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியாமல் அல்லாஹ் பறித்து விட்டான்.
அபூபக்ரைப் பார்க்க முடிந்த அவளால் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியவில்லை. “அபூபக்ரே உமது தோழர் எங்கே? அவர் என்னை கவிதைகளில் ஏசுகிறார் என்று எனக்கு தெரிய வந்துள்ளது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை நான் பார்த்தால் இக்குழவிக் கல்லால் அவரது வாயிலேயே அடிப்பேன். அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கும் நன்றாகக் கவி பாடத்தெரியும்” என்று கூறிய பின் அடுத்து வரும் கவிதையைப் படித்தாள்.
“இழிவுக்குரியவரைத்தான் நாங்கள் ஏற்க மறுத்தோம்; அவரது கட்டளையை புறக்கணித்தோம்; அவருடைய மார்க்கத்தையும் வெறுத்தோம்.”
பிறகு அவள் திரும்பிச் சென்றுவிட்டாள். அப்போது அபூபக்ர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களைப் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லையா?” என வினவ “அவள் என்னைப் பார்க்கவில்லை. அல்லாஹ் என்னை பார்க்க முடியாமல் அவளது பார்வையை மறைத்து விட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
இச்சம்பவம் பற்றி “முஸ்னத் பஜ்ஜார்’ எனும் நூலின் அறிவிப்பில் வருவதாவது: அவள் அபூபக்ரிடம் வந்து “அபூபக்ரே! உங்கள் தோழர் என்னை கவிதையில் திட்டுகிறார்” என்றாள். அதற்கு அபூபக்ர் (ரழி) “இந்த வீட்டின் இறைவனின் மீது சத்தியமாக! அவருக்கு கவிதை பாடத் தெரியாது” என்று கூறினார்கள். “ஆம்! நீங்கள் சரியாகத்தான் கூறினீர்கள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரனாகவும் நபி (ஸல்) அவர்களின் அண்டை வீட்டுக்காரனாகவும் இருந்த அபூலஹபும் இவ்வாறே செய்து கொண்டிருந்தான். அவனது வீடு நபி (ஸல்) அவர்களின் வீட்டுடன் இணைந்திருந்தது. அவனும் அவனைப் போன்ற நபி (ஸல்) அவர்களின் மற்ற அண்டை வீட்டார்களும் நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள் இருக்கும்போது நோவினை அளித்துக் கொண்டே இருப்பார்கள்.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) வீட்டினுள் இருக்கும்போது நபி (ஸல்) அவர்களின் அண்டை வீட்டார்களான அபூலஹப், ஹகம் இப்னு அபுல்ஆஸ் இப்னு உமைய்யா, உக்பா இப்னு அபீமுயீத், அதீ இப்னு ஹம்ராஃ ஸகஃபீ, இப்னுல் அஸ்தா ஆகியோர் எப்போதும் நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த நோவினை அளித்து வந்தனர். இவர்களில் ஹகம் இப்னு அபுல் ஆஸைத் தவிர வேறு யாரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. தொழுது கொண்டிருக்கும் போது ஆட்டின் குடலை நபி (ஸல்) அவர்களை நோக்கி வீசுவார்கள். நபி (ஸல்) அவர்கள் வீட்டில் சமைப்பதற்காக சட்டியை வைக்கும்போது அதில் ஆட்டுக்குடலை போடுவார்கள். இதற்காகவே இவர்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்காக ஒரு சுவரை ஏற்படுத்திக் கொண்டார்கள். இவர்கள் அசுத்தங்களை தூக்கி எறியும்போது அதைக் குச்சியில் வெளியே எடுத்து வந்து தனது வீட்டு வாசலில் நின்றவண்ணம் “அப்து மனாஃபின் குடும்பத்தினரே! இதுதான் அண்டை வீட்டாருடன் மேற்கொள்ளும் ஒழுக்கமா?” என்று கேட்டு, அதை ஓர் ஓரத்தில் தூக்கி வீசுவார்கள். (இப்னு ஹிஷாம்)
உக்பா இப்னு அபூமுயீத் விஷமத்தனத்தில் எல்லை மீறி நடந்து கொண்டான். இதைப் பற்றி ஒரு சம்பவத்தை இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கஅபாவுக்கு அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அபூஜஹ்லும் அவனது கூட்டாளிகளும் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் “நம்மில் ஒருவர் இன்ன குடும்பத்தாரின் ஒட்டகங்கள் அறுக்குமிடத்திற்குச் சென்று அங்குள்ள குடலை எடுத்து வந்து முஹம்மது சுஜூதிற்கு” சென்ற பின் அவரது முதுகில் வைக்கவேண்டும். யார் அதனை செய்வது?” என்று கேட்டனர். அக்கூட்டத்திலே மிகவும் திமிர் கொண்டவனான உக்பா எழுந்து சென்று குடலை எடுத்து வந்து நபி (ஸல்) அவர்கள் சுஜூதிற்குச் சென்றவுடன் அவர்களது இரு புஜங்களுக்கு இடையில் முதுகின் மீது வைத்து விட்டான். இதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு தடுக்கும் சக்தி இருந்திருக்க வேண்டுமே! அவர்கள் தங்களுக்குள் மமதையாகவும், ஏளனமாகவும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து விழுந்து விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்த முடியாமல் சுஜூதிலேயே இருந்தார்கள். அங்கு வந்த ஃபாத்திமா (ரழி) அதை அகற்றியபோதுதான் நபி (ஸல்) அவர்கள் தலையைத் தூக்கினார்கள்.
பிறகு, “அல்லாஹ்வே! நீ குறைஷிகளைத் தண்டிப்பாயாக!” என்று மூன்று முறை கூறினார்கள். இது குறைஷிகளுக்கு மிகவும் பாரமாகத் தெரிந்தது. மக்காவில் செய்யப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். பிறகு, பெயர் கூறி குறிப்பிட்டு “அல்லாஹ்வே! அபூ ஜஹ்லை தண்டிப்பாயாக! உக்பா இப்னு ரபீஆவையும், ஷைபா இப்னு ரபீஆவையும், வலீத் இப்னு உக்பாவையும், உமைய்யா இப்னு கலஃபையும், உக்பா இப்னு அபூ முயீதையும் நீ தண்டிப்பாயாக!” ஏழாவது ஒருவன் பெயரையும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் எனக்கு அது நினைவில் இல்லை. என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிட்ட நபர்கள் அனைவரும் கொல்லப்பட்டு பத்ரு கிணற்றில் தூக்கி எறியப்பட்டதை நான் பார்த்தேன். (ஸஹீஹுல் புகாரி)
உமையா இப்னு கலஃப் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களை பார்க்கும்போதெல்லாம் பகிரங்கமாக ஏசிக்கொண்டும், மக்களிடம் அவர்களைப்பற்றி இரகசியமாகக் குறை பேசிக்கொண்டும் இருப்பான். இவன் விஷயமாக சூரத்துல் ஹுமஜாவின் முதல் வசனம் இறங்கியது.
குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)
இப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகிறார்: “ஹுமஜா’ என்றால் பகிரங்கமாக ஒருவரை ஏசுபவன். கண் சாடையில் குத்தலாக பேசுபவன். யிலுமஜா’ என்றால் மக்களைப்பற்றி இரகசியமாக குறைகளை பேசுபவன். (இப்னு ஹிஷாம்)
உமையாவின் சகோதரன் உபை இப்னு கலஃபும் உக்பாவும் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையளிப்பதில் ஒரே அணியில் இருந்தனர். ஒருமுறை உக்பா நபி (ஸல்) அவர்களுக்கருகில் அமர்ந்து அவர்கள் ஓதும் சிலவற்றைச் செவிமடுத்தான். இது உபைம்க்குத் தெரிய வந்தபோது உக்பாவைக் கடுமையாகக் கண்டித்தான். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களது முகத்தில் எச்சிலைத் துப்பி வருமாறு அனுப்ப அவனும் சென்று துப்பி வந்தான். உபை இப்னு கலஃப் ஒருமுறை மக்கிப்போன எலும்புகளை நொறுக்கி, பொடியாக்கி நபி (ஸல்) அவர்களை நோக்கி காற்றில் ஊதிவிட்டான்.(இப்னு ஹிஷாம்)
அக்னஸ் இப்னு ஷரீக் என்பவனும் நபி (ஸல்) அவர்களை நோவினை செய்தவர்களில் ஒருவனாவான். இவனைப் பற்றி குர்ஆனில் இவனிடமிருந்த ஒன்பது குணங்களுடன் கூறப்பட்டுள்ளது.
(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீங்கள் வழிப்படாதீர்கள். (அவன்) எப்பொழுதும் (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக் கொண்டுத் திரிபவன். (அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி. கடின சுபாவமுள்ளவன். இதற்கு மேலாக அவன் மக்களிலும் ஈனன். (அல்குர்ஆன் 68:10-13)
அபூஜஹ்ல் சில சமயம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து திருமறையின் வசனங்களை செவிமடுத்துச் செல்வான். ஆனால், நம்பிக்கை கொள்ளவோ, அடிபணியவோ மாட்டான். ஒழுக்கத்துடனோ, அச்சத்துடனோ நடந்து கொள்ளவும் மாட்டான். தனது சொல்லால் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை அளிப்பதுடன் அல்லாஹ்வின் வழியிலிருந்து பிறரைத் தடுத்தும் வந்தான். தனது இச்செயலை புகழ்ந்து பேசுவதற்குரிய நற்காரியம் என்றெண்ணி அகந்தையுடனும் மமதையுடனும் நடந்து செல்வான். இவனைப் பற்றியே பின்வரும் திருமறை வசனங்கள் இறங்கின.
(அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை தொழவு மில்லை. ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான். பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்றுவிட்டான். (அல்குர்ஆன் 75:31-33)
நபி (ஸல்) அவர்களை கண்ணியமிகு பள்ளியில் தொழுதவர்களாகப் பார்த்த தினத்திலிருந்தே அங்கு தொழுவதிலிருந்து நபி (ஸல்) அவர்களைத் தடுத்து வந்தான். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் மகாம் இப்றாஹீமிற்கு” அருகில் தொழுததைப் பார்த்த அவன் “முஹம்மதே! நான் உன்னை இதிலிருந்து தடுத்திருக்க வில்லையா?” என்று கூறிக் கடுமையாக எச்சரித்தான். அதற்கு நபி (ஸல்) அவர்களும் தக்க பதில் கூறி அவனை அதட்டினார்கள். அதற்கு அவன் “முஹம்மதே! எந்த தைரியத்தில் நீ என்னை மிரட்டுகிறாய்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்வோடையில் வசிப்போரில் நானே பெரியசபையுடையவன் (ஆதரவாளர்களைக் கொண்டவன்) என்பது உனக்குத் தெரியாதா?” என்றான். அப்போது,
ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.. (அல்குர்ஆன் 96:17, 18)
ஆகிய வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.
மற்றுமொரு அறிவிப்பில் வந்திருப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் அவனது கழுத்தைப் பிடித்து உலுக்கி, உனக்குக் கேடுதான்; கேடுதான்! உனக்குக் கேட்டிற்கு மேல் கேடுதான்!! (அல்குர்ஆன் 75:34, 35)
என்ற வசனத்தை கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் விரோதியாகிய அவன் “முஹம்மதே! என்னையா நீ எச்சரிக்கிறாய்? நீயும் உனது இறைவனும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. மக்காவில் இரு மலைகளுக்குமிடையில் நடந்து செல்பவர்களில் நானே மிகப்பெரும் பலசாலி” என்று கூறினான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)
இவ்வாறு கண்டித்ததற்குப் பிறகும் கூட அபூஜஹ்ல் தனது மடமையிலிருந்து சுதாரித்துக் கொள்ளாமல் தனது கெட்ட செயலை தீவிரமாக்கிக் கொண்டேயிருந்தான். இதைப் பற்றி ஒரு சம்பவத்தை அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் வாயிலாக இமாம் முஸ்லிம் (ரஹ்) அறிவிக்கிறார்கள்:
“முஹம்மது உங்களுக்கு முன்னிலையில் தனது முகத்தை மண்ணில் வைத்து தேய்க்கிறாராமே” என்று அபூஜஹ்ல் கேட்டான். குழுமியிருந்தவர்கள் “ஆம்!” என்றனர். அதற்கவன் “லாத், உஜ்ஜாவின் மீது சத்தியமாக! நான் அவரைப் பார்த்தால் அவரது பிடரியின் மீது கால் வைத்து அழுத்தி அவரது முகத்தை மண்ணோடு மண்ணாக ஆக்கி விடுவேன்” என்று கூறினான். சிறிது நேரத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்தான். நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவன் நபி (ஸல்) அவர்களின் பிடரியை மிதிக்க முயன்றபோதெல்லாம் பின்னோக்கி விழுந்து தன் கைகளால் சமாளித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். மக்கள் “அபூ ஜஹ்லே! என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர். அதற்கு அவன் “எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழியையும், மிகப்பெரியபயங்கரத்தையும், பல இறக்கைகளையும் பார்த்தேன்” என்று கூறினான். பிறகு நபி (ஸல்) அவர்கள் “அவன் எனக்கருகில் நெருங்கியிருந்தால் வானவர்கள் அவனுடைய ஒவ்வொரு உறுப்பையும் இறாவியிருப்பார்கள் (பிய்த்து எறிந்திருப்பார்கள்)” என்று கூறினார்கள்.
இதற்கு முன் நாம் கூறியதெல்லாம் தங்களை அல்லாஹ்வின் சொந்தக்காரர்கள், அவனது புனித பூமியில் வசிப்பவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் இணைவைப்பவர்களின் கரங்களால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட அநியாயம் மற்றும் கொடுமையின் ஒரு சிறிய தகவல்தான். இத்தகைய இக்கட்டான கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனையையும், வேதனையையும் முடிந்த அளவு இலகுவாக்கி அவற்றிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க மதி நுட்பமான ஒரு திட்டத்தைத் தீட்ட வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்கள். இதற்காக இரண்டு திட்டங்களை நபி (ஸல்) அவர்கள் வகுத்தார்கள். அவ்விரு திட்டங்களால் அழைப்புப் பணியை வழி நடத்துவதிலும், இலட்சியத்தை அடைவதிலும் பற்பல பலன்கள் கிட்டின. அவையாவன:
1) அழைப்புப் பணிக்கு மையமாகவும், ஒழுக்க போதனைக்கு உறைவிடமாகவும் “அர்கம் இப்னு அபுல் அர்கம் மக்ஜூமி’ என்பவன் வீட்டை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
2) முஸ்லிம்களை ஹபஷாவிற்கு (எதியோபியா) குடிபெயருமாறு கட்டளையிட்டார்கள்.
இந்த வீடு ஸஃபா மலையின் கீழே, அந்த அநியாயக்காரர்களின் கண் பார்வைக்கும் அவர்களது சபைக்கும் தூரமாக இருந்தது. முஸ்லிம்கள் இரகசியமாக ஒன்றுகூட அவ்வீட்டை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வீட்டில் முஸ்லிம்களுக்குக் குர்ஆனை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு அதன் பண்புகளையும் சட்ட ஞானங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார்கள். அங்கு முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டு மார்க்க கல்வியும் கற்று வந்தார்கள். புதிதாக இஸ்லாமிற்கு வர விரும்புபவர் அவ்விடத்தில் வந்து இஸ்லாமைத் தழுவுவார். இது வரம்பு மீறிய அந்த அநியாயக்காரர்களுக்குத் தெரியாததால் முஸ்லிம்கள் ஓரளவு நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் அங்கு இருந்து வந்தனர்.
முஸ்லிம்களையும் நபி (ஸல்) அவர்களையும் ஒருசேர ஓரிடத்தில் இணைவைப்பவர்கள் கண்டுவிட்டால், நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்குக் கற்றுத்தரும் ஒழுக்கப் பணிகளையும், குர்ஆனையும், மார்க்கத்தையும் நிச்சயம் தங்களது சக்திக்கு மீறிய குறுக்கு வழிகளைக் கொண்டு தடுப்பார்கள். அதனால், இரு கூட்டத்தார்களுக்கிடையில் கைகலப்பு கூட நிகழ்ந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் மலைக் கணவாய்களுக்கிடையில் இரகசியமாகத் தொழுது வருவார்கள். ஒருமுறை அதனைப் பார்த்துவிட்ட குறைஷி நிராகரிப்பவர்கள் அவர்களை வாய்க்கு வந்தபடி ஏசிபேசி அவர்களுடன் சண்டையிட்டனர். அச்சண்டையில் ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) ஒருவனை வெட்டி சாய்த்து விட்டார்கள். இதுதான் இஸ்லாமுக்காக செய்யப்பட்ட முதல் கொலை.
இவ்வாறு கைகலப்பு தொடர்ந்தால் முஸ்லிம்கள் அழிக்கப்படலாம். ஆகவே, இரகசியமாக பணிகளைத் தொடர்வதுதான் சரியான முறையாகப்பட்டது. பொதுவாக நபித்தோழர்கள் தாங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களது வணக்க வழிபாடுகளை மறைமுகமாகச் செய்து வந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் மட்டும் குறைஷிகளுக்கு முன்னிலையிலும் தங்களது வணக்க வழிபாடுகளையும் அழைப்புப் பணியையும் பகிரங்கமாக செய்து வந்தார்கள். எதற்கும் அவர்கள் அஞ்சிடவில்லை. ஆனால், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நன்மையைக் கருதியே முஸ்லிம்களை இரகசியமாக சந்தித்து வந்தார்கள்.
நபித்துவத்தின் நான்காம் ஆண்டு நடுவில் அல்லது இறுதியில் முஸ்லிம்கள் மீது நிராகரிப்பவர்கள் வரம்பு மீற ஆரம்பித்தனர். தொடக்கத்தில் குறைவாகத் தென்பட்ட துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றன. ஐந்தாம் ஆண்டின் நடுவில் சோதனைகள் மலையாக உருவெடுக்கவே அதிலிருந்து விடுதலைபெற வழி என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். இச்சூழ்நிலையில்தான் “அல்லாஹ்வுடைய பூமி நெருக்கடியானதல்ல. எனவே (இடம்பெயரும்) ஹிஜ்ராவின் வழியை தேர்ந்தெடுங்கள்” என்று சுட்டிக் காட்டப்பட்ட அத்தியாயம் ஜுமல் உள்ள 10வது வசனம் இறங்கியது.
இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக, பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 39:10)
ஹபஷாவின் மன்னராக இருந்த “அஸ்மஹா நஜ்ஜாஷி’ நீதமானவர். அவர் யாருக்கும் அநியாயம் இழைக்கமாட்டார் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே, உயிரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்யுமாறு முஸ்லிம்களை நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நபித்தோழர்களின் ஒரு குழுவினர் முதலாவதாக ஹபஷாவிற்கு நாடு துறந்து செல்ல இருந்தார்கள். இதனை குறைஷிகள் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக இரவின் நடுநிசியில் புறப்பட்டு “ஷுஅய்பா’ துறைமுகத்தை அடைந்தனர். வியாபாரக் கப்பல்கள் இரண்டு அங்கு முகாமிட்டிருந்தன. எப்படியோ மோப்பம் பிடித்த குறைஷிகள், இவர்களைத் தேடி அந்த துறைமுகத்திற்கு வந்துவிட்டார்கள். அதற்குள் முஸ்லிம்கள் வியாபாரக் கப்பல்களில் ஏறி ஹபஷாவுக்கு புறப்பட்டு விட்டார்கள். இதனால் குறைஷிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நாடு துறந்து சென்ற குழுவில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்கு தலைவராக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) இருந்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி (ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும் (ரழி) உடன் இருந்தார்கள். நபி இப்றாஹீம் (அலை), நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா செய்த முதல் குடும்பம் இதுதான்” என்று இவ்விருவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் ஹபஷாவில் வாழ்வை நிம்மதியாகக் கழித்தார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டின் ரஜப் மாதத்தில் நடைபெற்றது. (ஜாதுல் மஆது)
அந்த ஆண்டு ரமளான் மாதம் ஓர் இரவு நபி (ஸல்) அவர்கள் புனித பள்ளிக்குச் சென்றார்கள். அங்கு குறைஷியரும் அவர்களது தலைவர்களும் கொண்ட பெருங்கூட்டமொன்று குழுமியிருந்தது. திடீரென அவர்களுக்கு முன் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அத்தியாயம் அந்நஜ்மை ஓதினார்கள். நிராகரிப்பவர்கள் இதற்கு முன் குர்ஆன் வசனங்களைக் கேட்டதில்லை. அதற்குக் காரணம், “குர்ஆனை நீங்கள் கேட்காதீர்கள்; அது ஓதப்படும்போது வீண்செயல்களில் ஈடுபடுங்கள்’ என்று அவர்களில் ஒருவர் மற்றவருக்கு கூறி வந்ததுதான். நிராகரிப்பவர்களின் இந்தக் கூற்றைப் பற்றி,
நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் “இந்தக் குர்ஆனை (உங்கள் காதாலும்) கேட்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டுபண்ணினால் நீங்கள் வென்று விடுவீர்கள்” என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன் 41:26)
என்ற வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை திடீரென ஓத, இனிமையான இறைவசனங்கள் அவர்களது காதுகளை வருடின. இதுவரை கேட்டவற்றில் இத்துணை மதுரமான, செவிக்கு இன்பத்தைத் தரும் சொற்றொடர்களை அவர்கள் இதற்கு முன் கேட்டதில்லை. அல்லாஹ்வின் அந்த வசனங்கள் அவர்களை மிகவும் கவர்ந்தன. அவர்களது உணர்வுகளை அவ்வசனங்கள் முழுமையாக ஆட்கொண்டன. நபி (ஸல்) ஓதுவதை அவர்கள் மெய்மறந்து கேட்டனர். நஜ்ம் அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் கேட்போரின் உள்ளத்தைக் கிடுகிடுக்கச் செய்யும் கோடை இடியாக விளங்குகிறது. இறுதியில், “அல்லாஹ்வுக்கு தலைசாயுங்கள், அவனை வணங்குங்கள்’ என்ற வசனத்தை ஓதி நபி (ஸல்) அவர்கள் சிரம் பணிந்தார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் இறை வசனங்களால் கவரப்பட்டு தங்களை கட்டுப்படுத்த முடியாமல் தாம் என்ன செய்கிறோம் என்பதையும் உணராமல் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து சுஜூதில் வீழ்ந்தனர்.
எதார்த்தத்தில் சத்தியத்தின் ஈர்ப்பு, பெருமை கொண்ட அவர்களின் உள்ளங்களில் உள்ள பிடிவாதத்தைத் தவிடு பொடியாக்கியது. எனவேதான், தங்களை கட்டுப்படுத்த இயலாமல் அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் சுஜூதில் வீழ்ந்தார்கள்.
அல்லாஹ்வுடைய வசனத்தின் மகிமை அவர்களது கடிவாளத்தை திருப்பி விட்டதை உணர்ந்த அவர்கள் மிகவும் கைசேதமடைந்தனர். அவ்வுணர்வை அழிப்பதற்கு உண்டான முழு முயற்சியை செய்தனர். இச்சம்பவத்தில் கலந்துகொள்ளாத இணைவைப்பவர்கள் நாலாபுறங்களில் இருந்தும் அச்செயலைக் கண்டித்ததுடன் பழித்தும் பேசினர். இதனால் சிரம் பணிந்த இணை வைப்பவர்கள் தங்களின் இச்செயலை நியாயப்படுத்துவதற்காக நபி (ஸல்) அவர்கள் மீது ஒரு கதையைக் கட்டிவிட்டனர். அதாவது நபி (ஸல்) அவர்கள் நமது சிலைகளை கண்ணியப்படுத்தும் விதமாக நாம் எப்போதும் கூறி வரும் “தில்க்கள் கரானிக்குல் உலா, வஇன்ன ஷஃபாஅத்த ஹுன்ன லதுர்தஜா” என்பதை ஓதினார்கள். அதனால்தான் நாங்கள் சுஜூது செய்தோம் என்று கதை கட்டினார்கள். (அதன் பொருளாவது: இவைகளெல்லாம் எங்களின் உயர்ந்த சிலைகள். அவைகளின் சிபாரிசு நிச்சயமாக ஆதரவு வைக்கப்படும்.) பொய் சொல்வதை தொழிலாகவும் சூழ்ச்சி செய்வதை வழக்கமாகவும் கொண்ட அக்கூட்டம் இவ்வாறு செய்தது ஓர் ஆச்சரியமான விஷயமல்ல!
இணைவைப்பவர்கள் சுஜூது செய்த விஷயம், ஹபஷாவில் இருந்த முஸ்லிம்களுக்குக் “குறைஷிகள் முஸ்லிமாகிவிட்டனர்’ என்று, உண்மைக்கு புறம்பான தகவலாய் சென்றடைந்தது. அதனால் அதே ஆண்டு ஷவ்வால் மாதத்தில் அந்த முஸ்லிம்கள் மக்காவிற்குத் திரும்பினர். மக்காவிற்கு சற்று முன்னதாகவே உண்மை நிலவரம் முஸ்லிம்களுக்குத் தெரிய வந்தவுடன் சிலர் ஹபஷாவிற்கே திரும்பிவிட்டனர். சிலர் எவருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் சென்றுவிட்டனர். மற்றும் சிலர் குறைஷிகள் சிலர் பாதுகாப்பில் மக்காவிற்குள் நுழைந்தனர்.
மெல்ல மெல்ல குறைஷிகள் இவர்களையும் மற்ற முஸ்லிம்களையும் கடுமையாக வேதனை செய்தனர். அவர்களது நெருங்கிய உறவினர்களும் கூட அவர்களுக்குக் கொடுமை செய்தனர். இந்நிலையில் மறுமுறையும் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்லுங்கள் என தங்களது தோழர்களுக்கு ஆலோசனை கூற வேண்டிய கட்டாயம் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது.
முஸ்லிம்கள் பெருமளவில் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் இந்த இரண்டாவது ஹிஜ்ரா முந்திய ஹிஜ்ராவை விட மிக சிரமமாகவே இருந்தது. முஸ்லிம்களின் இப்பயணத்தை குறைஷிகள் அறிந்து கொண்டதால் அத்திட்டத்தை அழிக்க வேண்டுமென்பதற்காக தீவிரமான முயற்சியில் இறங்கினர். ஆனால், அல்லாஹ்வின் அருளால் பயணம் அவர்களுக்குச் சாதகமாகி, நிராகரிப்பவர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாகவே பயணத்தைத் துதப்படுத்தி ஹபஷா மன்னர் நஜ்ஜாஷியை அடைந்தனர்.
இம்முறை 83 ஆண்களும் 18 அல்லது 19 பெண்களும் ஹபஷா சென்றனர். (சிலர் அம்மார் (ரழி) இப்பயணத்தில் செல்லவில்லை. எனவே, ஆண்களில் 82 நபர்கள்தான் என்றும் கூறுகின்றனர்.) (ஜாதுல் மஆது)
முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும் மார்க்கத்திற்கும் பாதுகாப்புள்ள இடமான ஹபஷாவில் நிம்மதியாக வசிப்பது இணைவைப்பவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர்களில் நுண்ணறிவும், வீரமுமிக்க அம்ரு இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபூரபீஆ ஆகிய இருவரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் நஜ்ஜாஷியையும் அவரது மத குருக்களையும் சந்தித்துப் பேசி, முஸ்லிம்களை நாடு கடத்தும்படி வேண்டுகோள் வைக்கும்போது அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு மதிப்புமிக்க வெகுமதிகளுடன் ஹபஷா அனுப்பி வைத்தனர்.
முதலில் அவ்விருவரும் மத குருக்களிடம் சென்று அவர்களுக்குரிய அன்பளிப்புகளை கொடுத்து முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக தகுந்த காரணங்களைக் கூறினர். அந்த மத குருக்களும் அதனை ஏற்று, முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு நஜ்ஜாஷியிடம் ஆலோசனை கூறுவோம் என்று ஒப்புக் கொண்டனர். பிறகு அவ்விருவரும் நஜ்ஜாஷியிடம் வந்து அவருக்குரிய அன்பளிப்புகளைச் சமர்ப்பித்து அவரிடம் இது குறித்து பேசினர்.
“அரசே! தங்கள் நாட்டுக்கு சில அறிவற்ற வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களது இனத்தவர்களின் மார்க்கத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். உங்களது மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் உங்களுக்கும் நமக்கும் தெரியாத ஒரு புதிய மார்க்கத்தை பின்பற்றுகின்றனர். இவர்களது இனத்திலுள்ளவர்கள் அதாவது இவ்வாலிபர்களின் பெற்றோர்கள், பெற்றோர்களின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இவர்களை அழைத்து வருவதற்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் இவர்களை நன்கு கண்காணிப்பார்கள்; பாதுகாப்பார்கள். அவர்களைப் பற்றி இவர்கள் கூறிய குறைகளை, நிந்தனைகளை அவர்களே நன்கறிந்தவர்கள். ஆகவே, நீங்கள் அவர்களை எங்களுடன் திருப்பி அனுப்பிவிடுங்கள்!” என்று கூறினர். உடனே அங்கிருந்த மத குருக்களும் “அரசே! இவ்விருவரும் உண்மைதான் கூறுகின்றனர். அவர்களை இவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களது இனத்தவர்களிடம் இவர்கள் அவர்களை அழைத்து செல்வார்கள்” என்றனர்.
ஆனால், பிரச்சனையைத் தீர விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து நஜ்ஜாஷி முஸ்லிம்களை அவைக்கு வரவழைத்தார். எதுவாக இருப்பினும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற ஒரே முடிவில் முஸ்லிம்கள் அங்கு சென்றனர். முஸ்லிம்களிடம் “உங்களது இனத்தை விட்டுப் பிரிந்து எனது மார்க்கத்தையும் மற்றவர்களின் மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் புதுமையான மார்க்கத்தை ஏற்றிருக்கிறீர்களே! அது என்ன மார்க்கம்?” என்று நஜ்ஜாஷி கேட்டார்.
முஸ்லிம்களின் பேச்சாளராக இருந்த ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) பதில் கூறினார்கள்: “அரசே! நாங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தோம்; சிலைகளை வணங்கினோம்; இறந்த பிராணிகளைச் சாப்பிட்டோம்; மானக்கேடான காரியங்களைச் செய்தோம்; உறவுகளைத் துண்டித்து அண்டை வீட்டாருக்கு கெடுதிகள் விளைவித்து வந்தோம்; எங்களிலுள்ள எளியோரை வலியோர் விழுங்கி வந்தனர் (அழித்து வந்தனர்.) இப்படியே நாங்கள் வாழ்ந்து வரும்போதுதான் எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான். அவன் வமிசத்தையும், அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும்; உண்மையே உரைக்க வேண்டும்; அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும்; உறவினர்களோடு சேர்ந்து வாழவேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினியான பெண்கள்மீது அவதூறு போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; அவனுக்கு இணைவைக்கக் கூடாது தொழ வேண்டும்; ஏழை வரி (ஜகாத்து) கொடுக்க வேண்டும்; நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார் (ஜஅஃபர் இன்னும் பல இஸ்லாமிய கடமைகளைப் பற்றிய விவரங்களை கூறினார்.) நாங்கள் அவரை உண்மையாளராக நம்பினோம்; அவரை விசுவாசித்தோம்; அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றினோம்; அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறினர்; எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும். முன்பு போலவே கெட்டவைகளைச் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்து எங்களை எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயற்சித்தனர். எங்களை அடக்கி அநியாயம் செய்து நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மார்க்க(மத) சுதந்திரத்துக்கும் அவர்கள் தடையானபோது உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே! எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்” என இவ்வாறு ஜஅஃபர் (ரழி) கூறி முடித்தார்.
“அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர் கொண்டு வந்த ஏதாவது உம்மிடம் இருக்கிறதா?” என்று ஜஅஃபடம் நஜ்ஜாஷி வினவினார். அதற்கு ஜஅஃபர் “ஆம்! இருக்கின்றது” என்றார். நஜ்ஜாஷி, “எங்கே எனக்கு அதை காட்டு” என்றார். காஃப்-ஹா-யா-ஐன்-ஸாத் எனத் தொடங்கும் “மர்யம்’ எனும் அத்தியாயத்தின் முற்பகுதியை ஜஅஃபர் (ரழி) ஓதிக் காண்பித்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாடி நனையும் அளவு நஜ்ஜாஷி அழுதார். அவையில் உள்ளவர்களும் ஜஅஃபர் (ரழி) ஓதியதைக் கேட்டு தங்களின் கையிலுள்ள ஏடுகள் நனையுமளவு அழுதனர். பிறகு நஜ்ஜாஷி, இதுவும் நபி ஈஸா (அலை) கொண்டு வந்த மார்க்கமும் ஒரே மாடத்திலிருந்து வெளியானது (முஸ்லிம்களை அழைக்க வந்த இருவரையும் நோக்கி) “நீங்கள் இருவரும் சென்று விடுங்கள்; உங்களிடம் நான் இவர்களை ஒப்படைக்கமாட்டேன்” என்று கூறினார். அவையில் இருந்த எவரும் அவ்விருவரிடமும் பேசுவதற்குத் தயாராகவில்லை.
அவ்விருவரும் வெளியேறி வந்தவுடன் அம்ர் இப்னு ஆஸ் தமது நண்பர் அப்துல்லாஹ் இப்னு அபூரபீஆவிடம் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர்களை அடியோடு வேரறுப்பதற்குண்டான வேலையை நான் நாளை செய்வேன்” என்று கூறினார். “ஆனால் அப்படி செய்துவிடாதே! அவர்கள் நமக்கு மாறு செய்தாலும் நமது இரத்த பந்தங்களே ஆவார்கள்” என்று அப்துல்லாஹ் கூறினார். ஆனால், அம்ரு தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
மறுநாள் அம்ரு நஜ்ஜாஷியிடம் வந்து “அரசே! இவர்கள் ஈஸாவின் விஷயத்தில் அபாண்டமான வார்த்தையை கூறுகிறார்கள்” என்று கூறினார். “அப்படியா! அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார் நஜ்ஜாஷி. இதை அறிந்தவுடன் சற்று பயமேற்பட்டாலும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற முடிவுடன் முஸ்லிம்கள் அவைக்கு வந்தனர். நஜ்ஜாஷி அவர்களிடம் அது பற்றி விசாரணை செய்தார்.
“எங்களது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறியதைத்தான் நாம் அவர் விஷயத்தில் கூறுகிறோம்: அவர் அல்லாஹ்வின் அடிமை அவனது தூதர்; அவனால் உயிர் ஊதப்பட்டவர்; கண்ணியமிக்க கன்னிப்பெண் மர்யமுக்கு அல்லாஹ்வின் சொல்லால் பிறந்தவர்” என்று ஜஅஃபர் (ரழி) கூறினார்.
நஜ்ஜாஷி கீழேயிருந்து ஒரு குச்சியை எடுத்து “அல்லாஹ்வின் மீது ஆணையாக! மர்யமின் மகன் ஈஸா (அலை) இக்குச்சியின் அளவுகூட நீ கூறியதைவிட அதிகமாக கூறியதில்லை” என்றார். இதைக் கேட்ட அவரது மத குருமார்கள் முகம் சுழித்தனர். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் முகம் சுழித்தாலும் இதுவே உண்மை” என்று நஜ்ஜாஷி கூறிவிட்டார்.
பிறகு நஜ்ஜாஷி முஸ்லிம்களை நோக்கி “நீங்கள் செல்லலாம்! எனது பூமியில் நீங்கள் முழு பாதுகாப்புப் பெற்றவர்கள். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். தங்கத்தின் மலையை எனக்கு கொடுத்தாலும் உங்களைத் துன்புறுத்த நான் விரும்பமாட்டேன்” என்று கூறினார். தனது அவையில் உள்ளவர்களிடம் அவ்விருவர்கள் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர்களிடமே திரும்ப கொடுத்து விடுங்கள். எனக்கு அதில் எவ்வித தேவையும் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் முன்னர் பறிபோன எனது ஆட்சியை எனக்கு மீட்டுத் தந்தபோது என்னிடமிருந்து அவன் லஞ்சம் வாங்கவில்லை. எனவே, நான் அவன் விஷயத்தில் லஞ்சம் வாங்குவேனா? எனக்கு எதிராக அல்லாஹ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவாதபோது அவனுக்கு எதிராக நான் பிரச்சனையாளர்களுக்கு உதவுவேனா? (எனக்கு எதிராக என் எதிரிகளுக்கு அவன் உதவி செய்யாதபோது அவனுக்கு எதிராக நான் அவனது எதிரிகளுக்கு உதவி செய்வேனா?)” என்று கூறினார்.
இச்சம்பவத்தை அறிவிக்கும் உம்மு ஸலமா (ரழி) கூறுவதாவது: அவ்விருவரும் அங்கிருந்து கேவலப்பட்டு வெளியேறினர். அவர்களது அன்பளிப்புகளும் திரும்ப கொடுக்கப்பட்டன. நாங்கள் சிறந்த நாட்டில் சிறந்த தோழமையில் அவரிடம் தங்கியிருந்தோம். (இப்னு ஹிஷாம்)
ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்த முஸ்லிம்களைத் திரும்பக் கொண்டு வருவதில் தோல்வியுற்ற இணைவைப்பவர்கள் கடுங்கோபத்தாலும் குரோதத்தாலும் பொங்கி எழுந்தனர். மக்காவில் மீதமிருந்த முஸ்லிம்களின் மீது தங்களது அட்யூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டதுடன் நபி (ஸல்) அவர்களுக்கும் கெடுதிகள் பல செய்யத் துவங்கினர். அவர்களின் செயல்பாடுகளைக் கவனிக்கும்போது அவர்களின் எண்ணப்படி இக்குழப்பத்திற்கு வேராக இருந்த நபி (ஸல்) அவர்களை ஒழித்துக் கட்டவே அவர்கள் முயற்சி செய்தனர் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஹிஜ்ரா செய்தவர்கள் போக மக்காவில் முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே எஞ்சி இருந்தார்கள். அவர்களில் சிலர் சரியான பக்க பலத்துடனும் கோத்திர பாதுகாப்புடனும் இருந்தார்கள். மற்றும் சில முஸ்லிம்கள் சிலன் அடைக்கலத்திலும் பாதுகாப்பிலும் இருந்தனர். ஆனால், எவரும் தங்களது இஸ்லாமை வெளிப்படுத்த துணிவின்றி மறைத்தும், வம்பர்களின் கண்களிலிருந்து முடிந்த அளவு மறைந்தும் ஒதுங்கியும் வாழ்ந்தனர். இவர்கள் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்த போதிலும் நிராகரிப்பவர்களின் தொந்தரவிலிருந்து முழுமையாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எப்போதும் அந்த அக்கிரமக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவே தொழுது வந்தார்கள். வெளிப்படையாகவும் இரகசியமாகவும் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து வந்தார்கள். இதை யாராலும் தடுக்க முடியவில்லை. எந்த ஒன்றும் நபி (ஸல்) அவர்களை இப்பணியிலிருந்து திருப்பி விடவும் முடியவில்லை. ஏனெனில், அல்லாஹ் அவர்களுக்கு,
ஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் அவர்களுக்கு தெளிவாக அறிவித்து விடுங்கள். மேலும், இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (அல்குர்ஆன் 15:94)
என்று கட்டளையிட்டிருந்தான்.
ஆகவே, இணைவைப்பவர்கள் நாடும்போதெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு இடையூறு அளித்து வந்தனர். நபி (ஸல்) அவர்கள் மீது அவர்களுக்கு இயற்கையாக இருந்த பயமும் அபூதாலிப் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்து வந்த பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றால் வெளிப்படையாக நபி (ஸல்) அவர்களை இம்சிக்க அவர்களால் முடியவில்லை. மேலும், ஹாஷிம் கிளையார்கள் தங்களுக்கு எதிராக ஒன்றுகூடி விடுவார்கள் என்பதையும் அவர்கள் பயந்தனர்.
ஆனால், நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி இணைவைப்போரின் மத தலைமைத்துவத்தையும் சிலை வணக்கக் கலாச்சாரத்தையும் தவிடுபொடியாக்கியது. இதன் காரணத்தால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையூறுகள் பல செய்யத் தொடங்கினர்.
இக்காலகட்டத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பதை ஹதீஸ் மற்றும் வரலாற்று நூல்களிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம். அவற்றிள் ஒன்று:
1) அபூலஹபின் மகன் உதைபா நபி (ஸல்) அவர்களிடம் வந்து அத்தியாயம் அந்நஜ்மை ஓதிக் காண்பித்து “இதை நான் மறுக்கிறேன்” என்று கூறி நபி (ஸல்) அவர்கள் மீது பாய்ந்து அவர்களது சட்டையைக் கிழித்து அவர்களது முகத்தில் எச்சிலை துப்பினான். ஆனால், எச்சில் நபி (ஸல்) அவர்கள் மீது விழவில்லை. அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வே! உனது மிருகங்களிலிருந்து ஒரு மிருகத்தை அவன் மீது சாட்டுவாயாக!” என்று அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களின் இந்த வேண்டுதலை அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான். இச்சம்பவத்திற்கு பிறகு உதைபா குறைஷியர்கள் சிலருடன் மக்காவிலிருந்து பயணமானான். ஷாம் நாட்டின் “ஜர்க்கா’ என்ற இடத்தில் தங்கியபோது அன்றிரவு ஒரு சிங்கம் அவர்களைச் சுற்றிச்சுற்றி வந்தது. அப்போது உதைபா “எனது சகோதரனின் நாசமே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹம்மது எனக்கு எதிராக வேண்டிக் கொண்டதுபோல் இந்த சிங்கம் என்னைத் தின்றே முடிக்கும். நானோ ஷாமில் இருக்கின்றேன். அவர் மக்காவில் இருந்து கொண்டே என்னைக் கொன்றுவிட்டார்” என்று கூச்சலிட்டான். பிறகு அவனை தங்களுக்கு நடுவில் ஆக்கிக்கொண்டு மற்றவர்கள் அவனைச் சுற்றி தூங்கினார்கள். ஆனால், இரவில் அந்த சிங்கம் அவர்களைத் தாண்டிச் சென்று உதைபாவின் கழுத்தை கடித்துக் குதறிக் கொன்றுவிட்டது. (தலாயிலுந்நுபுவ்வா)
2) நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் இருக்கும்போது அவர்களுடைய பிடரியின் மீது உக்பா இப்னு அபூ முஈத் மிக அழுத்தமாக மிதித்தான். இதனால் நபி (ஸல்) அவர்களின் விழிகள் பிதுங்கிற்று!
நபி (ஸல்) அவர்களை அந்த வம்பர்கள் கொல்லவேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்தனர் என்பதற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அறிவிக்கும் சம்பவத்தை சான்றாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கூறுவதாவது:
குறைஷிகள் ஹஜருல் அஸ்வதிற்கு அருகில் குழுமியிருந்தனர். நானும் அங்கு இருந்தேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி, “இவர் விஷயத்தில் நாம் பொறுமை காத்ததுபோன்று வேறு எதற்கும் நாம் பொறுமை காத்ததில்லை. இவர் விஷயத்தில் நாம் எல்லைமீறி சகித்து விட்டோம்” என்று பேசிக் கொண்டிருந்தனர். இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் அவ்விடத்திற்கு வருகை தந்து ஹஜருல் அஸ்வதைத் தொட்டுவிட்டு தவாஃபை” தொடங்கினார்கள். கஅபாவைச் சுற்றி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளுக்கு அருகில் நடந்தபோது குறைஷிகள் நபி (ஸல்) அவர்களை குத்தலாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் முகத்தில் அதன் மாற்றத்தை நான் பார்த்தேன். இரண்டாவது முறையாக அவர்களுக்கு அருகில் வந்தபோது மீண்டும் அவ்வாறே குத்தலாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் நின்றுவிட்டார்கள். “குறைஷிகளே! நான் சொல்வதை நீங்கள் (கொஞ்சம்) கேட்டுக் கொள்கிறீர்களா? எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! திட்டவட்டமாக நான் உங்களிடத்தில் உங்களைப் பலியிட்டு விடும் முடிவைக் கொண்டு வந்துள்ளேன். (அதிவிரைவில் உங்களது கதை முடிந்து விடும்)” என்று கூறினார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் திடுக்கிட்டனர். தங்களுக்கு மிகப்பெரியஆபத்தொன்று நிச்சயம் நிகழும் என்பதை உணர்ந்தனர். இதனால் நபி (ஸல்) அவர்களிடத்தில் கொடூரமாக நடந்தவர் கூட நபி (ஸல்) அவர்களை மிக அழகிய முறையில் சாந்தப்படுத்தினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அறிவீனர் அல்லர்! அபுல் காசிமே நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்” என்று கூறி, சாமாதானப்படுத்தினர்.
மறுநாளும் அவ்வாறே ஒன்று சேர்ந்து நபி (ஸல்) அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அங்கு நபி (ஸல்) அவர்கள் தோன்றினார்கள். அவர்கள் அனைவரும் ஒரே பாய்ச்சலாக நபி (ஸல்) அவர்கள் மீது பாய்ந்தனர். அவர்களில் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் போர்வையை பிடித்து இழுத்தான். அவனிடமிருந்து நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றிய அபூபக்ர் (ரழி) “தனது இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதற்காகவா ஒருவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார்கள். பிறகு அனைவரையும் அங்கிருந்து விலக்கி விட்டார்கள். இதுதான் நான் பார்த்ததில் குறைஷிகள் நபி (ஸல்) அவர்களைத் தாக்கிய மிகக் கொடூரமான நிகழ்ச்சி என்று இந்த நிகழ்ச்சியை அறிவிக்கும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) கூறுகிறார்கள்.
ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது: உர்வா இப்னு ஜுபைர் (ரழி) கூறுகிறார்:
நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்களிடம் இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் அரக்கத்தனமாக நடந்து கொண்டவற்றில் மிகக் கொயூரமான ஒன்றை எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கவர் “நபி (ஸல்) அவர்கள் கஅபாவில் ஹஜருல் அஸ்வதிற்கு அருகில் தொழுது கொண்டிருந்தபோது உக்பா இப்னு அபூமுஈத் அங்கு வந்து தனது மேலாடையை நபி (ஸல்) அவர்களின் கழுத்தில் போட்டு மிகக் கடினமாக இறுக்கினான். அபூபக்ர் (ரழி) விரைந்து வந்து அவனது புஜத்தைப் பிடித்துத் தள்ளி நபி (ஸல்) அவர்களை விட்டும் அவனை விலக்கிவிட்டு “தனது இறைவன் அல்லாஹ் என்று கூறியதற்காகவா ஒருவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
இச்சம்பவத்தை அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களை உக்பா இவ்வாறு கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தபோது உங்கள் தோழரை காப்பாற்றுங்கள் என்று ஒருவர் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் வந்து கூறினார். அபூபக்ர் (ரழி) எங்களைவிட்டு வேகமாகப் புறப்பட்டார்கள். அவர்கள் தங்களது தலையில் நான்கு சடை பின்னி இருந்தார்கள். “தனது இறைவன் அல்லாஹ் என்று கூறியதற்காகவா ஒருவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கூறிக்கொண்டே சென்று, நபி (ஸல்) அவர்களை விடுவித்தார்கள். அம்மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு தங்களதுக் கோபத்தை அபூபக்ர் (ரழி) மீது திருப்பினர். நிராகரிப்பவர்களின் கடும் தாக்குதலுக்கு ஆளாகிய பிறகு அபூபக்ர் (ரழி) எங்களிடம் திரும்பி வந்தார். அவருடைய சடையில் நாங்கள் எங்கு தொட்டாலும் அதிலிருந்து முடிகள் கையுடனேயே வந்துவிட்டன. (முக்தஸருஸ்ஸீரா)
அநியாயங்களும் கொடுமைகளும் நிறைந்து காணப்பட்ட அக்காலச் சூழ்நிலையில் முஸ்லிம்களின் பாதையை ஒளிமயமாக்கும் ஒரு மின்னல் வெட்டியது. அதுதான் ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சி. ஆம்! நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு இறுதியில் துல்ஹஜ் மாதத்தில் அவர்கள் இஸ்லாமைத் தழுவினார்கள்.
ஹம்ஜா (ரழி) முஸ்லிமானதற்குரிய காரணம்: ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக்கருகில் அமர்ந்திருந்தபோது அவ்வழியாக வந்த அபூ ஜஹ்ல் நபி (ஸல்) அவர்களை சுடும் வார்த்தைகளால் இம்சித்தான். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு எவ்வித பதிலும் கூறாமல் வாய்மூடி மௌனமாகவே இருந்தார்கள். பிறகு அபூஜஹ்ல் ஒரு கல்லால் நபி (ஸல்) அவர்களின் மண்டையில் அடித்து காயப்படுத்திவிட்டு கஅபாவிற்கு அருகில் அமர்ந்திருந்த குறைஷிகளின் சபையில் போய் அமர்ந்து கொண்டான். நபி (ஸல்) அவர்களின் தலையிலிருந்து இரத்தம் கசிந்தது. ஸஃபா மலையில் இருந்த தனது வீட்டில் இருந்துகொண்டு இக்காட்சியை அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆனின் அடிமைப் பெண் பார்த்து, வேட்டையிலிருந்து வில்லுடன் வந்து கொண்டிருந்த ஹம்ஜாவிடம் இச்சம்பவத்தைக் கூறினார். (ஹம்ஜா (ரழி) குறைஷிகளில் மிகவும் வலிமைமிக்க வாலிபராக இருந்தார்.) ஹம்ஜா (ரழி) சினம்கொண்டு எழுந்தார்.
அபூஜஹ்லை தேடி பள்ளிக்குள் நுழைந்து “ஏ கோழையே! எனது சகோதரன் மகனையா திட்டிக் காயப்படுத்தினாய்! நானும் அவரது மார்க்கத்தில்தான் இருக்கிறேன்” என்று கூறி தனது வில்லால் அவனது தலையில் அடித்து பெரும் காயத்தை ஏற்படுத்தினார். அபூஜஹ்லின் குடும்பமான பனூ மக்ஜுமில் உள்ள ஆண்கள் கொதித்தெழுந்தனர். ஹம்ஜாவிற்கு ஆதரவாக ஹாஷிம் கிளையார்களும் கொதித்தெழுந்தனர். இதனைக் கண்ட அபூஜஹ்ல் “அபூ உமாரா (ஹம்ஜா)வை விட்டுவிடுங்கள். நான் அவரது சகோதரனின் மகனை மிகக் கொச்சையாக ஏசி விட்டேன்” (அதுதான் என்னை அவர் தாக்குவதற்குக் காரணம்) என்று கூறினான். (இப்னு ஹிஷாம்)
தனது குடும்பத்தைச் சேர்ந்த பாசத்திற்குரிய ஒருவர் இழிவாக்கப்படுவதைப் பொறுக்கமுடியாத ரோஷத்தில்தான் ஹம்ஜா (ரழி) முதலில் இஸ்லாமை ஏற்றார். பிறகு அல்லாஹ்வின் அருளால் இஸ்லாமைப் புரிந்து கொண்டு, வலிமை வாய்ந்த இஸ்லாம் எனும் வளையத்தை அவர் உறுதியாகப் பற்றிக் கொண்டார். ஹம்ஜா (ரழி) இஸ்லாமைத் தழுவிய பின் முஸ்லிம்களின் மதிப்பு உயர்ந்தது.
அநியாயங்கள், அடக்குமுறைகள் எனும் மேகங்கள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில் முஸ்லிம்களின் வழிக்கு ஒளிகாட்ட மற்றொரு மின்னல். ஆம்! இம்மின்னல் முந்திய மின்னலை (ஹம்ஜா (ரழி) முஸ்லிமானதை) விட பன்மடங்காக ஒளி வீசியது. அதுதான் உமர் இப்னு கத்தாப் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது.
நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் ஹம்ஜா (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவி மூன்று நாட்கள் கழித்து உமர் இஸ்லாமைத் தழுவினார். நபி (ஸல்) அவர்கள் உமர் இஸ்லாமை தழுவ வேண்டுமென இறைவனிடம் வேண்டியிருந்தார்கள்.
“அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமராக இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை நாம் ஆய்வு செய்து பார்க்கும்போது உமரின் உள்ளத்தில் இஸ்லாம் படிப்படியாகத்தான் வேரூன்றியது என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த அறிவிப்புகளைச் சுருக்கமாக நாம் பார்ப்பதற்கு முன் உமரிடம் இருந்த உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் முதலில் பார்ப்போம்.
உமர் நல்ல வலிமையும் கம்பீரமான இயல்பும் உடையவர். அவரால் முஸ்லிம்கள் பல வகையான தொந்தரவுகளை, எண்ணற்ற இன்னல்களை நீண்ட காலமாக அனுபவித்து வந்தனர். எனினும், அவரது உள்ளத்தில் பல மாறுபட்ட உணர்ச்சிகளின் போராட்டம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருபுறம் தங்களது மூதாதையர்கள் கடைபிடித்து வந்த சடங்குகளைப் பின்பற்றி அவற்றுக்காக வீறுகொண்டு எழுந்தார். மற்றொருபுறம், கொள்கையில் முஸ்லிம்களுக்கு இருந்த உறுதியையும் அதற்காக சோதனைகள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்வதையும் பார்த்து ஆச்சரியமடைந்தார். மேலும், ஒரு நல்ல பகுத்தறிவுவாதிக்கு வரும் சந்தேகங்கள் அவருடைய உள்ளத்திலும் அவ்வப்போது தோன்றி மறைந்தன. ஒரு வேளை இஸ்லாமிய போதனை மற்றவைகளைவிட தூய்மையானதாக, சரியானதாக இருக்கலாமோ என யோசிப்பார். அதனால்தான் அவருக்கு இஸ்லாமின்மீது கோபம் பொங்கி எழும்போதெல்லாம் உடனடியாக அடங்கியும் விட்டது.
உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை முறையாக இங்கு நாம் பார்ப்போம். ஓர் இரவில் தனது வீட்டுக்கு வெளியில் தூங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. நேராக ஹரமுக்கு வந்து கஅபாவின் திரைக்குள் நுழைந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு தொழுது கொண்டிருந்தார்கள். தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் அத்தியாயம் அல்ஹாக்கா ஓத, அதன் வசன அமைப்புகளை ரசித்து உமர் ஓதுதலைச் செவிமடுத்தார். இதைத் தொடர்ந்து உமர் கூறுகிறார்:
நபி (ஸல்) அவர்கள் ஓதுவதை கேட்டுக் கொண்டிருந்த நான் எனது எண்ணத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் கவிஞராக இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் கூற,
இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடி) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும். இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அல்குர்ஆன் 69:40, 41)
என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்
அடுத்து இவர் ஜோசியக்காரராக இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் நான் கூற,
(இது) ஒரு ஜோசியக்காரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதனைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள். உலகத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 69:42, 43)
என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.
அது சமயம் எனது உள்ளத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
இது உமர் இதயத்தில் விழுந்த இஸ்லாமின் முதல் விதையாகும். எனினும், அறியாமைக் கால எண்ணங்களும் மூட பழக்க வழக்கங்களின் பிடிவாதமும், மூதாதையர்களின் மார்க்கத்தை உயர்வாக கருதி வந்ததும், அவரது உள்ளம் ஒத்துக் கொண்டிருந்த மகத்தான உண்மையை மறைத்திருந்தது. தனது உள்ளத்தில் பொதிந்து கிடந்த உணர்வைப் பொருட்படுத்தாமல் இஸ்லாமுக்கு எதிராக செயல்படுவதிலேயே தீவிரம் காட்டி வந்தார்.
நபி (ஸல்) அவர்களின் மீது அவருக்கிருந்த, அளவுமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி (ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வழியில் அவரை சந்தித்து “உமரே நீ எங்கு செல்கிறாய்?” என்று கேட்க “நான் முஹம்மதை கொல்லச் செல்கிறேன்.” என்றார். அதற்கு நுஅய்ம் “நீ முஹம்மதை கொலை செய்துவிட்டு ஹாஷிம், ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து பயமின்றி தப்பித்து வாழ்வது எங்ஙனம்?” என்று அச்சுறுத்தினார். அவரை நோக்கி “நீ உனது மார்க்கத்தை விட்டுவிட்டு அவரது மார்க்கத்திற்கு சென்று விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது” என்று உமர் கூறினார். அதற்கு நுஅய்ம் “உமரே! ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?. உனது சகோதரியும் (அவரது கணவர்) உனது மச்சானும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்துக்குச் சென்று விட்டனர்” என்று கூறியதுதான் தாமதம். அவ்விருவரையும் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை நோக்கி உமர் விரைந்தார்.
அப்போது அங்கு கப்பாப் (ரழி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனது ஏட்டிலுள்ள “தாஹா’ எனத் தொடங்கும் அத்தியாயம் தாஹாவின் வசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் வருவதை அறிந்த கப்பாப் (ரழி) வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் சகோதரியும் அந்த ஏட்டை மறைத்து விட்டார்கள். எனினும், உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரழி) கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார். வீட்டினுள் நுழைந்த உமர் “உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன?” என்று கேட்டதற்கு “நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லை” என்று அவ்விருவரும் கூறினார்கள். அப்போது உமர் “நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவரது மச்சான் “உமரே! சத்தியம். உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் இருந்தால் உன் கருத்து என்ன?” என்று கேட்க, உமர் கடுஞ்சினம் கொண்டு தனது மச்சானின் மீது பாய்ந்து அவரை பலமாகத் தாக்கி மிதிக்கவும் செய்தார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரை விலக்கினார். உமர் கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்து அவரது முகத்தை ரத்தக் காயப்படுத்தினார்.
கோபம் கொண்ட உமரின் சகோதரி உமது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமா? (அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.) “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று உரக்கக் கூறினார். தனது கோபம் பலனற்றுப் போனதைக் கண்டு உமர் நிராசை அடைந்தார். தனது சகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும், வெட்கமும் ஏற்பட்டது. உங்களிடமுள்ள இப்புத்தகத்தை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு அவரது சகோதரி “நீ அசுத்தமானவர். நீர் எழுந்து குளித்து வாரும்” என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார். பிறகு குளித்து வந்தவுடன் திருமறையை கையிலேந்தி “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்” (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று ஓதியவுடன் “ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்” என்று கூறி, தொடர்ந்து “தாஹா’ என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதி முடித்துவிட்டு “இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்! எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள்!” என்று கேட்டுக் கொண்டார். உமரின் பேச்சைக் கேட்ட கப்பாப் (ரழி) வெளியேறி வந்து “உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு, “அல்லாஹ்வே! உமர் அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில் நம்புகிறேன்” என்றுரைத்தார்.
நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையில் உள்ள இல்லத்தில் இருந்தார்கள். உமர் தனது வாளை அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களின் வீட்டை நோக்கி வந்தார். உமர் கதவைத் தட்டியபோது ஒருவர் கதவின் இடுக்கின் வழியாக உமரை வாள் அணிந்த நிலையில் பார்த்து நபி (ஸல்) அவர்களுக்கு அச்செய்தியைக் கூறினார். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டார்கள். மக்கள் “உமர் வந்திருக்கிறார்” என்று கூறினார்கள். “ஓ! உமரா! (வந்திருக்கிறார்?) அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!” என்று ஹம்ஜா (ரழி) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வீட்டின் உள்பகுதியில் வஹி (இறைச்செய்தி) வந்த நிலையில் இருந்தார்கள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு உமரை சந்தித்த நபி (ஸல்) அவர்கள் உமரின் சட்டையையும் வாளையும் பிடித்து அவரைக் குலுக்கி “உமரே! நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப் போன்ற கேவலத்தையும், தண்டனையும் அல்லாஹ் உனக்கு இறக்க வேண்டுமா? அல்லாஹ்வே! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். அல்லாஹ்வே! உமரால் இஸ்லாமிற்கு உயர்வைக்கொடு!” என்று கூறினார்கள். உமர் (ரழி) “அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸுலுல்லாஹ்” என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன் என்பதே இதன் பொருளாகும்.) இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் தக்பீர் (அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெயரிவன் என்று) முழங்கினர். அந்த சப்தத்தைப் பள்ளியில் உள்ளவர்களும் கேட்டார்கள்.
யாராலும் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு உமர் (ரழி) வலிமை மிக்கவராக இருந்தார். அவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது இணைவைப்பவர்களுக்கிடையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், இனி தங்களுக்கு இழிவும் பலவீனமும்தான் என்பதை அவர்களுக்கு உணர வைத்தது. உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியது முஸ்லிம்களுக்குக் கண்ணியத்தையும், சிறப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் இஸ்லாமைத் தழுவியபோது மக்காவாசிகளில் நபி (ஸல்) அவர்களுக்கு மிகக் கடுமையான எதிரி யார்? என்று யோசித்தேன். அபூ ஜஹ்ல்தான் அந்த எதிரி என்று கூறிக்கொண்டு நான் அவனிடம் வந்து அவனது வீட்டுக் கதவைத் தட்டினேன். என்னைப் பார்த்த அவன் “வருக! வருக! நீங்கள் வந்ததற்குரிய காரணம் என்ன?” என்று வினவினான். “நான் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நம்பிக்கை கொண்டேன். அவர் கொண்டு வந்த மார்க்கத்தை உண்மை என்று நம்புகிறேன்” என்று கூறினேன். அதற்கவன் “அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக! நீ கொண்டு வந்ததையும் கேவப்படுத்துவானாக!” என்று கூறி என் முகத்தில் கதவை அறைந்து சாத்தி விட்டான்.” (இப்னு ஹிஷாம்)
உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அக்காலத்தில் ஒருவர் முஸ்லிமாகிவிட்டார் என்று தெரியவந்தால் அனைவரும் அவரைப் பிடித்து அடிப்பார்கள்; சண்டை செய்வார்கள். நானும் முஸ்லிமாகி எனது தாய்மாமா “ஆஸி இப்னு ஹாஷிமிடம்’ வந்து அதைக் கூறியவுடன் அவர் என்னை ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார். அவ்வாறே குறைஷிப் பெரியோர்களில் ஒரு முக்கியமானவரிடம் சென்று கூறினேன். அவரும் என்னை ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவிய செய்தி குறைஷிகள் எவருக்கும் தெரியவில்லை. இதனால், செய்திகளை மக்களிடத்தில் மிக அதிகம் பரப்புபவர் யார்? என்று உமர் (ரழி) விசாரித்தார். அதற்கு ஜமீல் இப்னு முஅம்மர் அல் ஜும என்று பதில் கூறப்பட்டவுடன் அவரிடம் சென்றார்கள். நானும் உடன் இருந்தேன். அப்போது எனக்கு பார்ப்பதையும், கேட்பதையும் நன்கு புரிந்து கொள்ளக்கூடிய வயதுதான். உமர் (ரழி) அவரிடம் சென்று “ஓ ஜமீல்! நான் முஸ்லிமாகி விட்டேன்” என்று கூறியவுடன், அவர் மறுபேச்சு பேசாமல் நேராகப் பள்ளிக்குச் சென்று உரத்த குரலில் “ஓ குறைஷிகளே! கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டான்” என்று கத்தினான். அவனுக்கு பின்னால் உமர் (ரழி) நின்றுகொண்டு “இவன் பொய் கூறுகிறான். நான் மதம் மாறவில்லை. மாறாக முஸ்லிமாகி விட்டேன்! அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன்! அவனது தூதரை உண்மை என்று மெய்ப்பித்தேன்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட மக்கள் ஒன்று கூடி உமரின் மீது பாயத் தொடங்கினார்கள். அவர்கள் உமரிடம் சண்டையிட உமரும் அவர்களிடம் சண்டையிட்டார். சூரிய வெப்பம் அதிகரித்தபோது களைத்துவிட்ட உமர் (ரழி) கீழே உட்கார்ந்து விட்டார். மக்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டார்கள். உங்களுக்கு என்ன விருப்பமோ! அதை செய்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் சத்தியமாக கூறுகிறேன். நாங்கள் குறைந்தது 300 நபர்களாக பெருகிவிட்டால் ஒன்று மக்கா(வின் ஆதிக்கம்) உங்களுக்கு அல்லது எங்களுக்காகி விடும்” என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
இதற்குப் பிறகு உமரை கொலை செய்யக் கருதி இணைவைப்பவர்கள் உமரின் வீட்டுக்கு படையெடுத்தனர். உமர் (ரழி) வீட்டில் பயந்த நிலையில் இருந்தபோது அபூ அம்ர் ஆஸ் இப்னு வாயில் என்பவர் வந்தார். அவர் யமன் நாட்டு போர்வையும் கை ஓரம் பட்டினால் அலங்கரிக்கப்பட்ட சட்டையும் அணிந்திருந்தார். அறியாமை காலத்தில் அவரது கிளையார்களான பனூ ஸஹம் எங்களுடைய நட்புக்குரிய கிளையார்களாக இருந்தார்கள். அவர் உமரிடம் “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று வினவினார். உமர் (ரழி) “நான் முஸ்லிமானதற்காக என்னை உமது கூட்டம் கொலை செய்ய முனைகிறார்கள்” என்று கூறினார். அதற்கு அவர் “அப்படி ஒருக்காலும் நடக்காது” என்று கூறினார். அவர் இந்தச் சொல்லை கூறியதற்கு பிறகு உமர் நிம்மதியடைந்தார். இதற்கு பிறகு ஆஸ் வெளியேறி வந்து பார்த்தபோது அங்கு மக்களின் பெரும் கூட்டம் ஒன்று இருந்தது. அவர்களைக் கண்ட ஆஸ் “எங்கே வந்தீர்கள்?” என்று கேட்டதற்கு “இதோ கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டார். அவரிடம்தான் வந்துள்ளோம்” என்று கூறினார்கள். அதற்கு ஆஸ் “அவரை ஒருக்காலும் நீங்கள் நெருங்க முடியாது” என்று கூறவே அனைவரும் திரும்பிச் சென்றுவிட்டனர். (ஸஹீஹுல் புகாரி)
இதுவரை கூறிய நிகழ்ச்சிகள் இணைவைப்பவர்களைக் கவனித்துக் கூறப்பட்டது. முஸ்லிம்களை கவனித்துப் பார்க்கும்போது உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியது வித்தியாசமான ஒன்றாகவே இருந்தது. இதைப்பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்:
உமரிடம் “உங்களுக்கு “ஃபாரூக்’ என்ற பெயர் வரக் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கவர் “எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஹம்ஜா (ரழி) முஸ்லிமானார். பிறகு நான் முஸ்லிமானேன்” என்று தான் முஸ்லிமான சம்பவத்தைக் கூறினார்கள். அதன் இறுதியில் அவர்கள் கூறியதாவது: நான் முஸ்லிமானபோது “அல்லாஹ்வின் தூதரே! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தானே இருக்கிறோம்” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்! எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தான் இருக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான் “அப்போது ஏன் மறைவாக செயல்பட வேண்டும். உங்களைச் சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையாக சத்தியத்தைக் கூறியே ஆக வேண்டும்” என்று கூறி முஸ்லிம்களை இரண்டு அணிகளாக ஆக்கி, ஓர் அணியில் நானும் மற்றொரு அணியில் ஹம்ஜாவும் இருந்துகொண்டு நபி (ஸல்) அவர்களை இரு அணிகளுக்கு நடுவில் ஆக்கிக் கொண்டோம். திருகையிலிருந்து மாவுத் தூள்கள் பறப்பது போன்று எங்களது அணிகளில் இருந்து புழுதிகள் பறந்தன. நாங்கள் பள்ளிக்குள் நுழைந்தவுடன் என்னையும் ஹம்ஜாவையும் பார்த்த குறைஷிகளுக்கு இதுவரை ஏற்பட்டிராத கைசேதமும் துக்கமும் ஏற்பட்டது. அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் எனக்கு “அல் ஃபாரூக்“” எனப் பெயரிட்டார்கள். (தாரீக் உமர்)
உமர் (ரழி) முஸ்லிமாகும் வரை நாங்கள் கஅபாவுக்கு அருகில் தொழக்கூட முடியாதவர்களாகவே இருந்தோம்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (முக்தஸருஸ்ஸீரா)
“உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியபோதுதான் இஸ்லாம் வெளி உலகுக்குத் தெரியவந்தது. பகிரங்கமாக இஸ்லாமிய அழைப்பு விடப்பட்டது. கஅபாவைச் சுற்றி கூட்டமாக நாங்கள் அமர்ந்தோம். மேலும், எங்களுக்கு கஅபாவை தவாஃப் செய்ய முடிந்தது. எங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடம் அவர்கள் செய்யும் கொடுமைகளில் சிலவற்றுக்காவது நாங்கள் பதிலடி கொடுத்தோம்” என்று ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) கூறுகிறார்கள்.(தாரீக் உமர்)
“உமர் (ரழி) முஸ்லிமானதற்கு பிறகே நாங்கள் பலமிக்கவர்களாக ஆனோம்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (ஸஹீஹுல் புகாரி)
ஹம்ஜா, உமர் (ரழி) ஆகிய இரு வீரர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு இணைவைப்பவர்கள் முஸ்லிம்களை வேதனை செய்வதிலிருந்து சற்று பின்வாங்கினர். நபி (ஸல்) அவர்களுடனும் முஸ்லிம்களுடனும் உண்டான தங்களது நடவடிக்கைகளை மாற்றத் தொடங்கினர். அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை விரும்பி முஸ்லிம்களுக்கு ஆசாபாசங்களையும் ஆசைகளையும் காட்டினர். அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும், அழைப்புப் பணிக்கும் முன்னால் உலகமனைத்தையும் கொட்டிக் கொடுத்தாலும் அது முஃமின்களுக்கு கொசுவின் இறக்கை அளவிற்குக் கூட சமமாகாது என்பது இந்த அறிவீனர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. ஆகவே, இவர்கள் தங்களது முயற்சியில் படுதோல்வி கண்டனர்.
ஹம்ஜாவும் (ரழி) இஸ்லாமைத் தழுவி, நாளுக்குநாள் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகிய சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது நாம் பார்ப்போம்: ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தனியாக அமர்ந்திருந்தார்கள். உத்பா இப்னு ரபீஆ குறைஷிகளிடம் “குறைஷிகளே! நான் முஹம்மதிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலவற்றை அவருக்குக் கூறுகிறேன். அவற்றை அவர் ஏற்றுக்கொண்டால் நாம் அவருக்கு அவற்றைக் கொடுத்து விடுவோம். அவர் நம்மைவிட்டு விலகிக் கொள்ளலாம்” என்று கூறினான். அப்போது குறைஷிகள் “அப்படியே ஆகட்டும் அபுல் வலீதே! நீ சென்று அவரிடம் பேசிவா” என்றனர்.
உத்பா, நபி (ஸல்) அவர்களிடம் சென்று “எனது சகோதரனின் மகனே! நீ எங்களில் குடும்பத்தாலும் வமிசத்தாலும் கண்ணியமிக்கவர். ஆனால், நீ உன் சமுதாயத்தவரிடம் ஆபத்தான ஒரு மார்க்கத்தை கொண்டு வந்திருக்கிறாய்! அதன் மூலம் உமது சமுதாயத்தவன் ஒற்றுமையை குலைத்து விட்டாய்! அறிஞர்களை முட்டாளாக்கி விட்டாய்! அவர்களின் சிலைகளையும், மார்க்கத்தையும் குறை கூறிவிட்டாய்! முன் சென்ற உன் முன்னோரை காஃபிர் (நிராகரித்தவர்) என்று கூறிவிட்டாய்! நான் உனக்கு முன்பு சில விஷயங்களை எடுத்து வைக்கிறேன். அதை நன்கு யோசித்து ஒரு முடிவைச் சொல். அதில் ஏதாவதொன்று உனக்கு விருப்பமானதாக இருக்கலாம்” என நயமாக பேசினான்.
இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “அபுல் வலீதே! சொல்! நான் கேட்கிறேன்” என்றார்கள். அவன் “எனது சகோதரனின் மகனே! நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேகரிப்பதை விரும்பி, நீ எங்களில் மிகப் பெரியசெல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை இருப்பின், நாங்கள் எங்கள் செல்வங்களைச் சேர்த்து உன்னிடம் கொடுத்து விடுகிறோம். இல்லை உனக்கு ஆட்சி வேண்டுமென்றால் உன்னை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம். அல்லது உனக்கு ஏதேனும் ஜின்களின்” தொல்லை இருந்து அதை உன்னால் தடுக்க முடியவில்லையென்றால், உன்னை நாங்கள் குணப்படுத்துவதற்காக எங்களின் செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்து உனக்கு நாங்கள் வைத்தியம் பார்க்கின்றோம். ஏனெனில், சில நேரங்களில் ஜின்களின் சேட்டை மிகைத்து வைத்தியம் பார்க்கும் அவசியம் ஏற்படலாம்” என்று கூறினான்.
உத்பா அவனது பேச்சை முடித்த பிறகு “அபுல் வலீதே! நீ உனது பேச்சை முடித்துக் கொண்டாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க அவன் “ஆம்!” என்றான். “இப்போது நான் சொல்வதைக் கேள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற “அவ்வாறே செய்கிறேன்” என்று அவன் பதிலளித்தான். பிறகு நபி (ஸல்) அவர்கள் “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ என்று ஆரம்பித்து அத்தியாயம் ஃபுஸ்ஸிலத்தை ஓதிக் காட்டினார்கள். முதுகுக்குப்பின் தன்னுடைய கைகளை ஊன்றி சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் ஓதுவதை மிகக் கவனமாகக் கேட்டான். பிறகு ஸஜ்தாவுடைய ஆயத்தை ஓதி ஸஜ்தா செய்து முடித்தார்கள். பின்னர் “அபுல் வலீதே! நீ செவியேற்க வேண்டியதையெல்லாம் செவியேற்று விட்டாய். நீயே இப்பொழுது முடிவு செய்துகொள்!” என்று மொழிந்தார்கள்.
அதற்குப் பிறகு உத்பா அவனது நண்பர்களிடம் திரும்பி வந்தபோது அவர்கள் தங்களுக்குள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அபுல் வலீத் முகம் மாறியவனாக வந்திருக்கின்றான்” என்று பேசிக் கொண்டனர். உத்பா வந்தவுடன் “நீ என்ன செய்தியை கொண்டு வந்திருக்கின்றாய்” என வினவினர். “இதுவரை கேட்டிராத பேச்சையல்லவா நான் கேட்டேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கவிதையும் அல்ல! சூனியமும் அல்ல! ஜோசியமும் அல்ல! குறைஷிகளே! நான் சொல்வதைக் கேளுங்கள். இவரை விட்டு ஒதுங்கி விடுங்கள். இவருக்கும் இவரது பணிக்குமிடையில் குறுக்கிடாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவடமிருந்து நான் கேட்டு வந்த பேச்சுக்கு மகத்தான ஆற்றல் இருக்கிறது. மற்ற அரபியர்கள் அவரை அழித்துவிட்டால் அதுவே நமக்குப் போதும். நமது நோக்கமும் அதுவே! மாறாக, மற்ற அரபுகளை இவர் வெற்றி கொண்டால் அவருக்குக் கிடைக்கும் ஆட்சி உங்களுடைய ஆட்சியே! அவருக்குக் கிடைக்கும் கண்ணியம் உங்களுடைய கண்ணியமே! அவர் மூலமாக கிடைக்கும் அனைத்து பாக்கியங்களுக்கும் நீங்களும் முழு உரிமை பெற்றவர்கள்” என்று கூறினான். இதனைக் கேட்ட அவர்கள் “அபுல் வலீதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் தன்னுடைய நாவன்மையால் உன்னை வசியப்படுத்தி விட்டார்” என்றனர். “அவரைப் பற்றி எனது கருத்து இதுதான். இனி உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி நீங்கள் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டான். (இப்னு ஹிஷாம்)
மற்றும் சில அறிவிப்புகளில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் 13ம் வசனத்தை ஓதியபோது “முஹம்மதே போதும்! போதும்!! என்று கூறி தனது கையை நபி (ஸல்) அவர்களின் வாயின் மீது வைத்து, இரத்த உறவின் பொருட்டால் நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினான். அதற்குக் காரணம், அல்லாஹ்வின் எச்சரிக்கை உண்மையில் நிகழ்ந்துவிடும் என்று அவன் பயந்ததுதான். பிறகு எழுந்து சென்று தனது கூட்டத்தாரிடம் இதற்கு முன் கூறப்பட்டது போன்று செய்திகளை கூறினான். (இப்னு கஸீர்)
உத்பாவிற்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்த பதிலால் குறைஷிகள் முற்றிலும் நிராசை அடைந்து விடவில்லை. ஏனெனில், உத்பாவிற்கு நபி (ஸல்) அவர்கள் சில வசனங்களை ஓதிக் காட்டினார்கள். அது கோரிக்கையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பதாக ஆகமுடியாது. எனவே, மிகுந்த ஆராய்ச்சியுடனும் சிந்தனையுடனும் பிரச்சனையின் பல கோணங்களை அலசியப் பின், ஆலோசனை செய்வதற்காக சூரியன் மறைந்ததும் கஅபாவின் பின்புறம் குறைஷித் தலைவர்கள் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச் செய்தனர். ஏதோ நன்மையை இவர்கள் நாடிவிட்டார்கள் என்ற பேராவலில் நபி (ஸல்) அவர்கள் விரைந்து வந்து அவர்களருகில் அமர்ந்தபோது உத்பா கூறியதையே குறைஷித் தலைவர்கள் கூறினர். அதாவது உத்பா மட்டும் கூறியதால் நபி (ஸல்) அவர்கள் இதை நம்பவில்லை. நாம் அனைவரும் சேர்ந்து கூறினால் நம்மை நம்பி ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்வார் என்று அவர்கள் எண்ணினார்கள் போலும்!
நபி (ஸஸ்) அவர்கள் அந்த குறைஷிகளுக்குக் கூறிய பதிலாவது: “நீங்கள் கூறுவது எதுவும் என்னிடமில்லை. உங்களின் பொருளை அல்லது உங்களிடம் சிறப்பை அல்லது உங்கள் மீது ஆட்சி செய்வதைத் தேடி நான் இம்மார்க்கத்தை கொண்டு வரவில்லை. எனினும், அல்லாஹ் என்னை உங்களிடம் தூதராக அனுப்பி என்மீது ஒரு வேதத்தையும் இறக்கியிருக்கின்றான். உங்களுக்கு நற்செய்தி சொல்பவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் நான் இருக்க வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். எனது இறைவனின் தூதுத்துவத்தை நான் உங்களுக்கு முன் வைத்துவிட்டேன். உங்களுக்கு நல்லுபதேசம் செய்துவிட்டேன்; நான் உங்களிடம் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் என்னிடமிருந்து ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கு ஈருலக பாக்கியமாகும். நீங்கள் அதை மறுத்தால் அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் வரை அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் பொறுத்திருப்பேன்.”
இத்திட்டம் நிறைவேறாததால் மற்றொரு திட்டத்திற்குச் சென்றனர். அதாவது “நீங்கள் உங்களது இறைவனிடம் கூறி இம்மலைகளை இடம்பெயரச் செய்ய வேண்டும்; இவ்வூர்களை செழிப்பாக்க வேண்டும்; அவற்றின் நதிகளை ஓடவைக்க வேண்டும்; இறந்துவிட்ட முன்னோர்களைக் குறிப்பாக, குஸை இப்னு கிலாஃபை உயிர்ப்பிக்க வேண்டும்; மரணித்தவர்கள் எழுந்து நீங்கள் கூறுவது உண்மை என்று கூறினால் நாங்கள் உங்கள் கூற்றை நம்பிக்கைக் கொள்வோம்” என்று கூறினார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் முன் கூறிய பதிலையே கூறினார்கள்.
மற்றொரு திட்டத்தையும் முன் வைத்தனர். “அதாவது நீங்கள் உங்களைக் காப்பதற்கு உங்களுடைய இறைவனிடம் ஒரு மலக்கை (வானவரை) அனுப்பும்படி கோருங்கள். நாங்கள் அவருடன் பேசித் தெரிந்துகொள்வோம். உங்களுக்காகப் பல தோட்டங்களையும், மாட மாளிகைகளையும் தங்கம், வெள்ளியினாலான கஜானாக்களையும் அருளும்படி கோருங்கள்” என்றனர். இதற்கும் நபி (ஸல்) முன் கூறிய பதிலையே கூறினார்கள்.
அடுத்து மற்றொரு திட்டத்திற்கு சென்றனர். “அதாவது எங்களுக்கு வேதனையை இறக்குங்கள்; வானத்தை உடைத்து எங்கள் மீது போடுங்கள்; நீங்கள் எச்சரிப்பவற்றை இப்போதே எங்களுக்குக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அது அல்லாஹ்வின் நாட்டம். அவன் நாடினால் அதைச் செய்வான்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த இணைவைப்பவர்கள் “நாங்கள் உங்களுடன் உட்கார்ந்து உங்களிடம் பல கேள்விகளைக் கேட்போம்; பல கோரிக்கைகளை விடுப்போம் என்பது உங்களது இறைவனுக்குத் தெரியாதா? நீங்கள் எங்களுக்கு பதில் சொல்வதற்குத் தேவையானதை உங்களுக்கு இறைவன் கற்றுத் தரவில்லையா? நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அவன் எங்களிடம் எப்படி நடந்து கொள்வான் என்பதை உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டனர்.
இறுதியாக, நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உங்களை அழிக்கும் வரை அல்லது நீங்கள் எங்களை அழிக்கும்வரை நீங்கள் எங்களுக்கு இழைத்த அநீதத்திற்காக நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம்” என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து எழுந்து தனது குடும்பத்தினர்களிடம் வந்தார்கள். தான் விரும்பியபடி தமது சமூகத்தினர் இஸ்லாமை ஏற்காததால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள்.(இப்னு ஹிஷாம்)
கூட்டத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றவுடன் அபூஜஹ்ல் அகந்தையுடன் “குறைஷிக் கூட்டமே! நமது மார்க்கத்தை இகழ்வது நமது முன்னோர்களை ஏசுவது நம்முடைய அறிஞர்களை முட்டாளாக்குவது நம்முடைய சிலைகளைத் திட்டுவது - இவற்றைத் தவிர வேறெதனையும் செய்ய மாட்டேன் என்று முஹம்மது கூறிவிட்டார். ஆகவே, அவர் தொழுகையில் ஸஜ்தா செய்யும்போது மிகப்பெரிய ஒரு கல்லால் அவர் தலையை நசுக்குவேன் என்று அல்லாஹ்விடம் நான் உடன்படிக்கை செய்கிறேன். அவ்வாறு செய்தபின் நீங்கள் என்னை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தாலும் சரி அல்லது அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றினாலும் சரி. அப்து மனாஃப் குடும்பத்தினர் தாங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளட்டும்” என்றான். அதற்கு அக்கூட்டத்தினர் “ஒருக்காலும் நாம் உம்மை கைவிட்டு விட மாட்டோம்; நீ விரும்பியபடியே செய்!” என்றனர்.
அன்று காலையில் அபூஜஹ்ல் தான் கூறியதைப் போன்று ஒரு கல்லுடன் நபி (ஸல்) அவர்களின் வருகைக்காக எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். வழக்கம்போல் நபி (ஸல்) அவர்கள் காலையில் வந்து தொழ நின்றார்கள். குறைஷிகள் அபூஜஹ்ல் செய்வதை வேடிக்கை பார்க்க தங்களது சபைகளில் வந்து அமர்ந்து கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்தபோது அபூஜஹ்ல் கல்லை சுமந்தவனாக நபியவர்களை நோக்கிச் சென்றான். நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் பயந்து நிறம்மாறி திடுக்கிட்டவனாக திரும்பினான். அவனது இரு கைகளும் கல்லின்மீது ஒட்டிக் கொண்டன. வெகு சிரமத்துடன் கல்லை கையிலிருந்து வீசினான். அதைப் பார்த்த குறைஷிகள் ஒரே குரலில் “அபுல் ஹிகமே! என்ன நேர்ந்தது?” என்று விசாரித்தனர். அதற்கு “நான் உங்களுக்கு நேற்று கூறியதை நிறைவேற்றுவதற்கு அவருக்கு அருகில் சென்றபோது மிகப்பெரிய ஆண் வாலிப ஒட்டகம் ஒன்று எனக்குத் தென்பட்டது. அதனுடைய தலையைப் போல, அதனுடைய கோரைப் பற்களைப் போல, வேறெந்த ஒட்டகத்தையும் நான் பார்க்கவில்லை. அது என்னைக் கடிக்க வந்தது” என்றான்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம், “அப்படித் தோற்றமளித்தவர் வானவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவன் நெருங்கியிருந்தால் அவர் அவனை அழித்திருப்பார்” என்று கூறினார்கள்.
குறைஷிகள் நபி (ஸல்) அவர்களுக்கு முதலில் உலக ஆசை காட்டினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மசியாததால் அடுத்து நபியவர்களை எச்சரித்தனர், அச்சுறுத்தினர். அதற்கும் நபியவர்கள் அஞ்சாததால் குறைஷிகள் மாற்று வழியைத் தேடினர். நபி (ஸல்) அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள் என அவர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை. அதாவது, நபி (ஸல்) அவர்களுடைய மார்க்கம் உண்மையானதா? அல்லது பொய்யானதா? என்று பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்திருந்தனர்.
நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் அவர்கள் ஆழ்ந்து கிடக்கின்றனர். (அல்குர்ஆன் 42:14)
என்று அல்லாஹ் அவர்களைப்பற்றி கூறியதுபோலவே அவர்கள் இருந்தனர்.
அடுத்த கட்ட முயற்சியாக, மார்க்க விஷயங்களில் கொஞ்சம் இவர்கள் விட்டுத் தருவது, கொஞ்சம் நபி (ஸல்) அவர்கள் விட்டுக் கொடுப்பது என்று நபி (ஸல்) அவர்களுடன் பேரம் பேசிப் பார்க்கலாம் என முடிவெடுத்தனர். இதன்மூலம் நபி (ஸல்) அழைப்பது உண்மையானதாக இருந்தால் தாங்களும் அந்த உண்மையை அடைந்தவர்களாகலாம் என்று கருதினர்.
நபி (ஸல்) அவர்கள் கஅபாவை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும்போது அவர்களை அஸ்வத் இப்னு அல் முத்தலிப், வலீத் இப்னு முகீரா, உமைய்யா இப்னு கலஃப், ஆஸ் இப்னு வாயில் ஆகியோர் சந்தித்தனர். இவர்கள் தங்களது கோத்திரத்தில் மிக மதிப்பு மிக்கவர்களாக விளங்கினார்கள். இவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “முஹம்மதே! வாருங்கள்! நீங்கள் வணங்குவதை நாங்களும் வணங்குகிறோம்; நாங்கள் வணங்குவதை நீங்களும் வணங்குங்கள்; நாம் அனைவரும் இவ்விஷயத்தில் கூட்டாக இருப்போம். அதாவது, நீங்கள் வணங்குவது நாங்கள் வணங்குவதை விட நன்மையாக இருப்பின் எங்களுக்கும் அதில் ஒரு பங்கு கிடைத்துவிடும். நாங்கள் வணங்குவது நீங்கள் வணங்குவதை விட நன்மையானதாக இருப்பின் அதில் உங்களுக்கும் ஒரு பங்கு கிடைத்துவிடும்” என்று கூறினார்கள்.
இவர்களின் கூற்றுக்கு மறுப்பாக,
(நபியே! நிராகரிக்கும் மக்காவாசிகளை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: நிராகரிப்பவர்களே! நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர். உங்களுடைய (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என்னுடைய (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்). (அல்குர்ஆன் 109:1-6)
என்ற அத்தியாயம் அல் காஃபிரூனை முழுமையாக அல்லாஹு தஆலா இறக்கி வைத்தான். (இப்னு ஹிஷாம்)
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்: குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் எங்கள் கடவுள்களைத் தொட்டால் போதும், நாங்கள் உங்களது கடவுளை முழுமையாக வணங்குகிறோம்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் அத்தியாயம் அல் காஃபிரூனை இறக்கி வைத்தான். (அத்துர்ருல் மன்ஸுர்)
தஃப்ஸீர் இப்னு ஜரீல் வருவதாவது: குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “எங்களது கடவுளை நீங்கள் ஓர் ஆண்டு வணங்குங்கள். உங்களது கடவுளை நாங்கள் ஓர் ஆண்டு வணங்குகிறோம்” என்று கூறினார்கள். அப்போது,
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: மூடர்களே! அல்லாஹ் அல்லாதவற்றையா வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகின்றீர்கள்?
என்ற அத்தியாயம் ஜுமன் 64 வது வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.
இவ்வாறான அற்பத்தனமிக்க பேச்சுவார்த்தைகளைத் தீர்க்கமான முடிவைக்கொண்டு அல்லாஹ் முறியடித்தும் குறைஷிகள் முழுமையாக நிராசையாகவில்லை. மாறாக, மேலும் சற்று இறங்கி நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனின் போதனைகளில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்ற அடுத்த கோரிக்கையை முன்வைத்தனர். இதோ இவர்களின் கூற்றைப்பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
இவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உங்களை நோக்கி,) “இது அல்லாத வேறொரு குர்ஆனை நீங்கள் கொண்டுவாருங்கள். அல்லது (எங்கள் இஷ்டப்படி) இதனை மாற்றிவிடுங்கள்” என்று கூறுகின்றனர்.
அவர்களின் இக்கூற்றுக்கு என்ன பதில் சொல்லவேண்டுமோ அதை அல்லாஹ் தொடர்ந்து கூறுகிறான்:
(அதற்கு அவர்களை நோக்கி “உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதனை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹி மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என்னுடைய இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (அல்குர்ஆன் 10:15)
மேலும், இவ்வாறு செய்வது எவ்வளவு ஆபத்தானது என்றும் அல்லாஹ் மிகத் தெளிவாக எச்சரிக்கை செய்தான்.
நாம் உங்களுக்கு வஹி மூலம் அறிவித்ததை நீங்கள் விட்டு (விட்டு) அது அல்லாததை நம்மீது நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உங்களை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீங்கள் செய்திருந்தால்) உங்களை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். உங்களை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீங்கள் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடக் கூடுமாயிருந்தது. (அவ்வாறு நீங்கள் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீங்கள் உயிராக இருக்கும்போதும் நீங்கள் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.(அல்குர்ஆன் 17:73-75)
எல்லா பேச்சுவார்த்தைகளிலும், பேரங்களிலும், அனுசரித்தலிலும் குறைஷிகள் தோல்வியடைந்து என்னசெய்வது என்று புரியாமல் திகைத்திருந்தபோது அவர்களில் ஒரு ஷைத்தான் “நழ்ர் இப்னு அல் ஹாரிஸ்’ என்பவன் ஓர் ஆலோசனையைக் கூறினான். “குறைஷியர்களே! உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வையும் உங்களால் கொண்டுவர முடியவில்லை. முஹம்மது உங்களில் வாலிபராக இருந்தபோது உங்களின் அன்பிற்குரியவராகவும், பேச்சில் உங்களில் உண்மையாளராகவும், அமானிதத்தை அதிகம் பேணுபவராகவும் இருந்தார். ஆனால், அவர் முதிர்ச்சி அடைந்து இம்மார்க்கத்தை அவர் கொண்டு வந்தபோது நீங்கள் அவரை “சூனியக்காரர்” என்று கூறினீர்கள். ஆனால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் சூனியக்காரராக இருக்க முடியாது. சூனியக்காரர்களைப் பற்றியும் அவர்களின் ஊதுதல், முடிச்சுகளைப் பற்றியும் நாம் நன்கறிவோம். பிறகு அவரை “ஜோசியர்” என்று கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஜோசியரும் அல்லர். ஏனெனில் ஜோசியக்காரர்களையும் அவர்களது பொய்யாகப் புனையப்பட்ட புளுகுகளையும் நாம் நன்கறிவோம். அடுத்து அவரை “கவிஞர்” என்பதாகக் கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் கவிஞரும் அல்லர். ஏனெனில், கவியையும் அதன் பல வகைகளையும் நாம் பார்த்திருக்கிறோம். நீங்கள் அவரை “பைத்தியக்காரர்” என்று கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் பைத்தியக்காரரும் அல்லர். பைத்தியத்தை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இவருக்கு பைத்தியத்தின் எந்தக் குழப்பமும், ஊசலாட்டமும் இல்லை. குறைஷிகளே! உங்களது நிலையை நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கு ஏதோ மிகப்பெரியசிக்கல் ஏற்பட்டிருக்கிறது” என்று அவன் கூறி முடித்தான்.
எல்லா எதிர்ப்புகளுக்கும், சவால்களுக்கும் அசைந்து கொடுக்காமல் நபி (ஸல்) அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அனைத்து ஆசாபாசங்களையும் தூக்கி எறிந்தார்கள். எந்நிலையிலும் தடுமாறவில்லை. மேலும், அவர்களிடம் உண்மை, ஒழுக்கம், பேணுதல், சிறந்த நற்பண்புகள் ஆழமாகக் குடிகொண்டிருந்தன. இதைக் கண்ட இணைவைப்பவர்களுக்கு முஹம்மது உண்மையில் தூதராக இருப்பாரோ? என்ற சந்தேகம் வலுத்தது. எனவே, யூதர்களுடன் தொடர்பு கொண்டு முஹம்மதைப் பற்றி உறுதியாக தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். நழ்ர் இப்னு ஹாரிஸ் அவர்களுக்கு ஏற்கனவே மேற்கூறியவாறு உபதேசம் செய்திருந்தான். அவனையே மற்ற ஓருவருடன் சேர்த்து மதீனாவில் உள்ள யூதர்களிடம் அனுப்ப முடிவு செய்தனர்.
நழ்ர் இப்னு ஹாரிஸ் மதீனா சென்று அங்குள்ள யூத அறிஞர்களைச் சந்தித்து நபி (ஸல்) அவர்கள் குறித்து விவாதித்தான். அவர்கள், நீங்கள் அவரிடம்
“1) முன்னொரு காலத்தில் வாழ்ந்த குறிப்பிட்ட வாலிபர்களைப் பற்றி ஏதாவது செய்தி தெரியுமா? ஏனெனில் அவர்களைப் பற்றி ஓர் ஆச்சரியமான செய்தி இருக்கிறது. அவர்கள் என்னவானார்கள்?
2) பூமியின் கிழக்கு மேற்கு பகுதிகளையெல்லாம் சுற்றி வந்த ஒருத்தரைப் பற்றிய செய்தி தெரியுமா?
3) ரூஹ் (உயிர்) என்றால் என்ன?
இந்த மூன்று கேள்விகளைக் கேளுங்கள். அவர் இவற்றுக்கு சரியான பதில் கூறினால் அவர் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட (நபி) தூதராவார். அவ்வாறு கூறவில்லையெனில் அவர் தானாக கதை கட்டி பேசுபவரே என அறிந்துகொள்ளலாம்” என்றனர்.
நழ்ர் மக்காவிற்கு வந்து “குறைஷிகளே! உங்களுக்கும் முஹம்மதுக்கும் இடையிலுள்ள பிரச்சனைக்குச் சரியான தீர்வைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறி யூதர்கள் கூறியதை அவர்களுக்கு அறிவித்தான். குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அம்மூன்று கேள்விகளையும் கேட்டனர். அவர்கள் கேட்ட சில நாட்களுக்குப் பிறகு “கஹ்ஃப்’ என்ற அத்தியாயம் அருளப்பட்டது. அதில் குகைவாசிகளாகிய அவ்வாலிபர்களின் வரலாறும், பூமியை சுற்றி வந்த துல்கர்னைன் என்பவன் சத்திரமும் தெளிவாக விவரிக்கப்பட்டது. ரூஹைப் பற்றிய பதில் குர்ஆனில் “இஸ்ரா’ என்ற அத்தியாயத்தில் இறங்கியது. இதைத் தொடர்ந்து குறைஷிகள் நபி (ஸல்) அவர்கள் “உண்மையாளரே, சத்தியத்தில் உள்ளவரே’ என்பதையும் தெளிவாக தெரிந்து கொண்டனர். ஆனாலும் அநியாயக்காரர்கள் ஏற்க மறுத்தனர். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணிக்கு இணைவைப்பவர்கள் செய்த எதிர்ப்பின் ஒரு சிறு பகுதியே இதுவரை நாம் கூறியது. பல வகைகளில் முயன்றனர். படிப்படியாக பல வழிகளை இதுவல்லாமல் மாற்றிக் கொண்டே இருந்தனர். வன்மையை அடுத்து மென்மை, மென்மையை அடுத்து வன்மை; சர்ச்சையை அடுத்து சமரசம்; சமரசத்தை அடுத்து சர்ச்சை; எச்சரித்தல், பிறகு ஆசையூட்டுதல்; ஆசையூட்டுதல், பிறகு எச்சரித்தல்; ஊளையிடுதல், பிறகு அடங்குதல்; தர்க்கித்தல், பிறகு நயமாக பேசுதல்; நபி (ஸல்) அவர்களை விட்டுக் கொடுக்க வேண்டுதல்; பிறகு தாங்களே விட்டுக் கொடுத்தல்; இவ்வாறு கொஞ்சம் முன்னேறுதல்; உடனே பின்வாங்குதல் என்று என்ன செய்வதென்றே புரியாமல் நிலை தடுமாறி நின்றனர். ஆனால், நபி (ஸல்) அவர்களின் வழியில் குறுக்கிடாமல் ஒதுங்கிக் கொள்வதும் அவர்களுக்குக் கசப்பாக இருந்தது. அவர்களின் நோக்கமே இஸ்லாமிய அழைப்பை அழிப்பதும் இறைநிராகரிப்பை வளர்ப்பதும்தான். பல வழிகளில் இவர்கள் முயன்றும் பல தந்திரங்களைக் கையாண்டும் அனைத்திலும் இவர்கள் தோல்வியையே கண்டனர். இறுதியாக, வாளெடுப்பதைத் தவிர அவர்களுக்கு முன் வேறுவழி தோன்றவில்லை. ஆயினும், வாளேந்துவதால் பிரிவினை அதிகமாகலாம்; உயிர்ப்பலிகள் ஏற்படலாம் என்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் பெரும் குழப்பத்தில் தத்தளித்தனர்.
குறைஷிகள் நபி (ஸல்) அவர்களைக் கொன்று விடுவதற்காக தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய அதே சமயத்தில் உக்பா, அபூஜஹ்ல், போன்றவர்களின் செயல்கள் மூலம் அந்த எண்ணம் அவர்களிடம் உறுதியாக இருக்கிறது என்பதை அபூதாலிப் நன்கு உணர்ந்து கொண்டார். எனவே, ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையினர்களை ஒன்று சேர்த்து அவர்களிடம் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவ்விரு கிளையிலுமுள்ள முஸ்லிம்கள் மற்றும் நிராகரிப்பவர்கள் என பாகுபாடின்றி அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். இதற்காக அனைவரும் கஅபாவில் ஒன்றுகூடி ஒப்பந்தம் செய்தனர். ஆனால், அபூதாலிபின் சகோதரன் அபூலஹப் இதற்கு உடன்படாமல் அவர்களை விட்டுப் பிரிந்து மற்ற குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டான். (இப்னு ஹிஷாம்)
முழுமையாக ஒதுக்கி வைத்தல்
மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போனதால் இணைவைப்பவர்களிடையே குழப்பம் மேன்மேலும் வலுத்தது. ஹாஷிம் கிளையாரும், முத்தலிப் கிளையாரும் நிலைமை எதுவாம்னும் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்ததைக் கண்ட இணைவைப்பவர்கள் அனைவரும் “முஹஸ்ஸப்’ என்ற பள்ளத்தாக்கிலுள்ள கினானா கிளையாரின் இடத்தில் ஒன்றுகூடி ஆலோசித்து, பல தீர்மானங்களைப் போட்டனர்.
அவையாவன: ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையாரிடம் திருமண உறவு, கொடுக்கல் வாங்கல், அவர்களுடன் அமர்வது, அவர்களுடன் பழகுவது, அவர்களது வீட்டுக்குச் செல்வது, அவர்களிடம் பேசுவது, அவர்களுக்குக் கருணை காட்டுவது, ஹாஷிம் கிளையார்களின் சமரச பேச்சை ஏற்பது போன்ற எந்த செயலும் செய்யக் கூடாது. முஹம்மதை அவர்கள் நம்மிடம் ஒப்படைக்கும் வரை நாம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் எழுதினர். இவ்வுடன்படிக்கையை “பகீழ் இப்னு ஆமிர் இப்னு ஹாஷிம்’ என்பவன் எழுதினான். நபி (ஸல்) அவர்களின் சாபத்திற்கு ஆளான இவனது கை சூம்பிவிட்டது. (ஸஹீஹுல் புகாரி)
இந்த உடன்படிக்கை எழுதப்பட்டு கஅபாவில் தொங்க விடப்பட்டது. ஹாஷிம், முத்தலிபின் கிளையால் அபூலஹபைத் தவிர ஏனைய நிராகரிப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் “அபூதாலிப் கணவாயில்’ ஒதுக்கி வைக்கப்பட்டனர். இது நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு முஹர்ரம் மாதம் தலைப்பிறையில் நடந்தது.
இக்காலக்கட்டத்தில் அவர்களிடம் இருப்பிலிருந்த உணவுகளும், தானியங்களும் முடிந்து விட்டன. இணைவைப்பவர்கள் மக்காவுக்கு வரும் உணவுகளையெல்லாம் முந்திச் சென்று வாங்கிக் கொள்வார்கள். இவர்கள் உண்ணுவதற்கு ஏதுமின்றி இலைகளையும், தோல்களையும் சாப்பிடும் இக்கட்டுக்கு ஆளாயினர். பசியினால் பெண்களும், சிறுவர்களும் அழும் குரல்கள் கணவாய்க்கு வெளியிலும் கேட்கும். மிக இரகசியமாகவே தவிர எந்த உதவியும் அவர்களுக்குக் கிடைக்காது. மதிப்புமிக்க மாதங்களில்தான் தங்களின் தேவைகளுக்குரிய சாமான்களை வாங்கிக்கொள்ள முடிந்தது. மக்காவுக்கு வரும் வியாபாரக் கூட்டங்களிடமிருந்து மக்காவிற்கு வெளியில்தான் அவர்களால் பொருட்கள் வாங்க முடிந்தது. இருந்தும் இவர்களால் வாங்க முடியாத அளவிற்கு மக்காவாசிகள் அப்பொருட்களின் விலைகளை உயர்த்தினர்.
சில சமயம் ஹகீம் இப்னுஹிஸாம் தனது மாமி (தந்தையின் சகோதரி) கதீஜாவிற்காக கோதுமை மாவை எடுத்துச் செல்வார். ஒருமுறை அபூஜஹ்ல் வழிமறித்து, அவர் எடுத்துச் செல்வதைத் தடுத்துக் கொண்டிருந்தான், அபூபுக்த தலையிட்டு அபூஜஹ்லிடமிருந்து அவரைக் காப்பாற்றினார்.
நபி (ஸல்) அவர்களின் மீது அபூதாலிபுக்கு எப்போதும் எதிரிகளைப் பற்றிய அச்சம் இருந்தது. அதற்காக நபி (ஸல்) அவர்களைத் தனது விரிப்பில் தூங்கச் சொல்வார். அனைவரும் தூங்கியதற்குப் பின், தனது பிள்ளைகள் அல்லது சகோதரர்கள் அல்லது தனது சிறிய, பெரியதந்தையின் பிள்ளைகள் ஆகியோல் யாரையாவது ஒருவரை நபியவர்களைப் படுக்க வைத்த தனது விரிப்பில் மாற்றி உறங்க வைத்துவிட்டு, நபி (ஸல்) அவர்களை வேறு விரிப்பில் படுக்கவைத்து விடுவார்கள். மக்கள் தூங்குவதற்கு முன் கொலைகாரர் யாராவது நபி (ஸல்) அவர்களைக் கண்காணித்தால், அவர்களைத் திசை திருப்புவதற்காக இவ்வாறு செய்வார்கள்.
இந்நிலையிலும் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ஹஜ்ஜுடைய காலங்களில் வெளியே புறப்பட்டு, மக்களைச் சந்தித்து, அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைப்பார்கள். இந்நேரத்தில் அபூலஹப் செய்து வந்த செயல்கள் பற்றி முன்பே நாம் கூறியிருக்கின்றோம்.
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இப்படியே உருண்டோடின. குறைஷிகள் இந்த ஒப்பந்தத்தை எழுதினாலும் அவர்களில் சிலர் இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்து வெறுத்தே வந்தனர். இவ்வாறு வெறுத்தவர்கள்தான் இப்பத்திரத்தை கிழித்தெறிய முயற்சி எடுத்தனர். இம்முயற்சி நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடந்தேறியது.
ஹிஷாம் இப்னு அம்ர் என்பவர்தான் இதற்குக் காரணமாக இருந்தார். அவர் இரவில் மறைமுகமாக ஹாஷிம் கிளையாருக்கு உணவு வழங்கி வந்தார். ஒரு நாள் அவர் ஸுஹைர் இப்னு அபூ உமைய்யா மக்ஜூமீ என்பவரிடம் வந்தார். இவரது தாய் அப்துல் முத்தலிபின் மகள் ஆத்திகாவாகும். ஹிஷாம், “ஜுஹைரே! நீ சாப்பிடுகிறாய், குடிக்கிறாய். உனது தாய்மாமன்கள் எவ்வாறு கஷ்டத்திலிருக்கிறார்கள் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். இது உனக்கு சந்தோஷமாக இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு ஜுஹைர் “நான் ஒருவன் என்ன செய்ய?” என்று கூறினார். அதற்கு ஹிஷாம் “உனக்கு உதவ ஒருவர் இருக்கிறார்” என்று கூற, “யார் அவர்?” என்று வினவினார். “அது நான்தான்” என்று கூறினார். அதற்கு ஜுஹைர் “நீ மூன்றாவது ஒருவரைத் தேடு” என்று கூறினார்.
முத்இம் இப்னு அதீ என்பவரிடம் ஹிஷாம் சென்று அப்து மனாஃபின் மக்களான ஹாஷிம், முத்தலிப் இவ்விருவரின் குடும்ப உறவுகளை (இரத்த பந்தங்களை) நினைவூட்டி “இவர்களுக்கு அநியாயம் செய்யக் குறைஷிகளுக்கு நீ உடந்தையாக இருக்கிறாயே” என பழித்துக் கூறியவுடன் “நான் ஒருவனாக இருந்து என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். அதற்கு ஹிஷாம் “உன்னுடன் இரண்டாமவரும் இருக்கிறார்” என்று கூற, அதற்கு “அவர் யார்?” என்று கேட்டார். அதற்கு ஹிஷாம் “நான்தான்” என்று கூறினார். முத்இம் “மூன்றாவது ஒருவரும் நமக்கு வேண்டும்” என்று கூற, ஹிஷாம் “ஆம்! மூன்றாமவரும் இருக்கிறார். அவர்தான் ஜுஹைர் இப்னு அபூ உமைய்யா” என்று கூறினார். உடனே முத்இம் ஷாமிடம் “நான்காம் ஒருவரையும் தேடுங்கள்” என்றார்.
ஹிஷாம், அபுல் புக்தயிடம் வந்து முத்இமிடம் பேசியது போன்றே பேசவே “இதற்கு யாராவது உதவிக்கு இருக்கிறார்களா?” என்று அவர் வினவினார். அப்போது “ஹிஷாம் ஆம்! ஜுஹைர், முத்இம், நான் ஆகியோர் உம்முடன் இருக்கிறோம்” என்றார்.
ஹிஷாம், ஸம்ஆவிடம் வந்தார். அவருக்கும் ஹாஷிம் குடும்பத்திற்கும் உள்ள உறவுகளையும், உரிமைகளையும் பற்றி அவரிடம் கூறவே “நீர் அழைக்கும் இக்காரியத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்க, ஹிஷாம் “ஆம்!” என்ற கூறி அனைவரது பெயர்களையும் கூறினார்.
இவர்கள் அனைவரும் ஹஜுனுக்கு அருகில் ஒன்றுகூடினர். பிறகு, ஒப்பந்தப் பத்திரத்தை கிழிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது “இதை நானே முதலில் செய்வேன். இதைப் பற்றி நான்தான் முதலில் பேசுவேன்” என்றார் ஜுஹைர்.
காலையில் விடிந்தவுடன் அனைவரும் தங்களது சபைக்கு வந்தனர். ஜுஹைர் ஒரு முழு ஆடையை அணிந்து வந்திருந்தார். அவர் கஅபாவை ஏழு முறை வலம் வந்துவிட்டு மக்களை நோக்கி “மக்காவாசிகளே! நாம் சாப்பிடுகிறோம். ஆடைகளை அணிந்து கொள்கிறோம். ஹாஷிமின் குடும்பமோ அழிந்து கொண்டிருக்கிறது. அவர்களிடம் யாரும் விற்பதும் கிடையாது, வாங்குவதும் கிடையாது. இது தகுமான செயலா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உறவை துண்டிக்கும்படியான, அநியாயமான, இந்த ஒப்பந்தப் பத்திரம் கிழித்தெறியப்படும் வரை நான் உட்கார மாட்டேன்” என்று கூறினார். பள்ளியின் ஓரத்தில் அமர்ந்திருந்த அபூஜஹ்ல் “நீ பொய்யுரைக்கிறாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கிழிக்கப்படாது” என்றான். ஸம்ஆ, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீதான் மிகப்பெரியபொய்யன். நீ இதை எழுதியபோதே அதில் எங்களுக்கு விருப்பமில்லை” என்று கூறினார். அபுல் புக்த “ஆம்! ஸம்ஆ உண்மையைத்தான் கூறுகிறார். அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களும் எங்களுக்கு விருப்பமானதில்லை. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை” என்று கூறினார். முத்இம், “ஆம்! நீங்கள் இருவரும் உண்மையைத் தான் கூறுகிறீர்கள். இதைத் தவிர யார் என்ன கூறினாலும் அவர் பொய்யரே! இந்த ஒப்பந்தப் பத்திரத்திலிருந்தும் அதில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்தும் அல்லாஹ்வுக்காக நாங்கள் விலகிக் கொள்கிறோம்” என்று கூறினார். ஷாமும் இதுபோன்றே கூறி முடித்தார். இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக கூறியதும் இதைக் கேட்டுக் கொண்டிருந்த அபூஜஹ்ல் “இது இரவிலேயே பேசி முடிவு செய்யப்பட்டது. வேறு எங்கோ இதைப் பற்றி ஓர் ஆலோசனை நடந்திருக்கிறது” என்று கூறினான். பள்ளியின் ஓரத்தில் அபூதாலிப் அமர்ந்து இக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பத்திரத்தில் அல்லாஹ்வின் பெயரைத் தவிர அதில் எழுதப்பட்ட அனைத்தையும் கரையான் தின்று அழித்துவிட்டது. இதை அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்திருந்தான். நபி (ஸல்) அவர்களும் முன் கூட்டியே அதை அபூதாலிபிடம் கூறியிருந்தார்கள். அபூதாலிப் குறைஷிகளிடம் “எனது சகோதரனின் மகன் இப்படியெல்லாம் கூறியிருக்கிறார். அவர் பொய்யராக இருந்தால் அவருக்கும் உங்களுக்குமிடையில் நாங்கள் வழிவிட்டு விடுகிறோம். அவர் உண்மையாளராக இருந்தால் நீங்கள் எங்களுக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் எங்களது உறவுகளைத் துண்டிப்பதிலிருந்தும் விலகிட வேண்டும்” என்று கூறினார். அதற்கவர்கள், “நிச்சயமாக நீர் ஒரு நீதமான விஷயத்தை முன் வைத்தீர்” என்று கூறினர்.
அபூஜஹ்லுக்கும் மற்ற கூட்டத்தார்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை முடிந்தபோது முத்இம் கஅபாவிற்குள் அதைக் கிழிப்பதற்காகச் சென்று பார்த்தபோது “பிஸ்மிக்கல்லாஹும்ம’ என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்ததையும், “அல்லாஹ்’ என்று எழுதப்பட்ட இடங்களையும் தவிர மற்ற அனைத்தையும் கரையான் அத்துவிட்டிருந்தது.
பிறகு முழுவதுமாக அப்பத்திரம் கிழித்தெறியப்பட்டது. நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் கணவாயிலிருந்து வெளியேறி வந்தனர். இணைவைப்பவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தின் மிகப்பெரியஅத்தாட்சியைப் பார்த்தனர். ஆனால் அவர்களது இதயமோ...
அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதனைப்) புறக்கணித்து, “இது சகஜமான சூனியம் தான்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 54:2)
என்று அல்லாஹ் கூறியதைப் போன்றே இருந்தது. அதாவது, அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் புறக்கணித்து இவர்கள் நிராகரிப்பைத்தான் அதிகமாக்கிக் கொண்டனர். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆத்)
தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கணவாயிலிருந்து வெளியேறிய நபி (ஸல்) முன்னர் போலவே அழைப்புப் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். குறைஷிகள் உறவுகளைத் துண்டிப்பதை விட்டுவிட்டாலும், முஸ்லிம்களுக்குத் தொந்தரவு தருவது, அல்லாஹ்வின் வழியை விட்டு மக்களைத் தடுப்பது என்ற தங்களது பழைய பாட்டையிலேயே நடந்து கொண்டிருந்தனர். அபூதாலிப் எண்பது வயதை கடந்தும் தன்னால் முடிந்த அளவு நபி (ஸல்) அவர்களை பாதுகாத்து வந்தார். கடினமான சோதனைகளால் குறிப்பாக, ஒதுக்கி வைக்கப்பட்ட காலத்தில் ஏற்பட்ட இன்னல்களால் மிகவும் வலுவிழந்து தளர்ந்திருந்தார். கணவாயிலிருந்து வெளியேறிய சில மாதங்களிலேயே கடினமான நோய்வாய்பட்டார்.
இதைக் கண்ட இணைவைப்பவர்கள், அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு அவரது சகோதரன் மகனான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஊறு விளைவிப்பது தங்களுக்கு அரபிகளின் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்று பயந்து தங்களுக்கு விருப்ப மில்லையெனினும் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளில் சிலவற்றை ஒப்புக்கொண்டு அபூதாலிபின் முன்னிலையில் நபி (ஸல்) அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பதற்காக ஒரு குழுவை தயார் செய்தனர். அபூதாலிபிடம் வந்த இறுதி குழு இதுதான்.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்கள்: அபூதாலிப் நோய்வாய்ப்பட்ட போது குறைஷிகள் தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொண்டனர்: “ஹம்ஜா, உமர் இஸ்லாமைத் தழுவிவிட்டனர். முஹம்மதைப் பற்றி அனைத்து குறைஷி குலத்தவருக்கும் தெரிந்துவிட்டது. நாம் அபூதாலிபிடம் செல்வோம்; தனது தம்பி மகனை அவர் கட்டுப்படுத்தட்டும்; நம்மிடமும் அவருக்காக ஏதாவது ஒப்பந்தத்தை வாங்கிக் கொள்ளட்டும். இல்லையெனில், மக்கள் நமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் இல்லாமல் மீறி விடுவார்கள் என நாம் அஞ்சவேண்டியுள்ளது”
மற்றொரு அறிவிப்பில் வருவதாவது: இந்தக் கிழவர் இறந்த பின் அவருக்கு (முஹம்மதுக்கு) ஏதாவது ஆகிவிட்டால் அரபுகள் “முஹம்மதுடைய பெரியதந்தை இறந்தப் பின் முஹம்மதுக்குக் கெடுதிகள் செய்கின்றனர். அவர் உயிருடன் இருக்கும்போது இவரை விட்டுவிட்டார்கள்” என்று குறை கூறுவார்களோ என நாம் அஞ்சவேண்டியுள்ளது என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
உத்பா, ஷைபா, அபூஜஹ்ல், உமைய்யா, அபூசுஃப்யான் இப்னு ஹர்ஃப் போன்ற குறைஷித் தலைவர்களில் சிலர் தங்களது கூட்டங்களில் உள்ள இருபத்தைந்து நபர்களைச் சேர்த்துக்கொண்டு அபூதாலிபிடம் பேசுவதற்காக வந்தனர். அவர்கள் “அபூதாலிபே! நீங்கள் எங்களிடம் மதிப்புமிக்கவர்; உங்களுக்கு ஏற்பட்டுள்ள (நோயின்) நிலை உங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என நாங்கள் பயப்படுகிறோம். மேலும், எங்களுக்கும், உங்களது சகோதரன் மகனுக்கும் மத்தியிலுள்ள நிலை உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆதலால், அவரை இப்போது அழைத்து அவரிடமிருந்து எங்களுக்குச் சில வாக்குறுதிகளை வாங்கிக் கொடுங்கள். எங்களிடமிருந்தும் அவருக்குச் சில வாக்குறுதிகளை வாங்கிக் கொடுங்கள். எங்களை எங்களது மார்க்கத்தில் விட்டு விடட்டும். அவரை அவரது மார்க்கத்தில் விட்டு விடுகிறோம். எங்களது மார்க்கத்தை அவர் குறை கூறாமல் இருக்கட்டும்” எனக் கூறினார்கள்.
அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச்செய்து “எனது சகோதரன் மகனே! இதோ இவர்கள் உனது கூட்டத்தில் சிறப்புமிக்கவர்கள். உனக்காகவே இங்கு ஒன்றுகூடி இருக்கிறார்கள். அவர்கள் உனக்கு சில வாக்குறுதிகளைத் தருவார்கள். உன்னிடம் சில வாக்குறுதிகளைக் கேட்கிறார்கள். உங்களில் யாரும் எவருக்கும் இடையூறு தரக்கூடாது” என்று அவர்கள் கூறியதை அப்படியே கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நான் இவர்களுக்கு ஒரு சொல்லை முன்வைக்கிறேன். அதை இவர்கள் மொழிந்தால் இவர்கள் அரபியர்களை ஆட்சி செய்யலாம். அரபி அல்லாதவர்களும் இவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்” என்று கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில்: அபூதாலிபை நோக்கி “நான் இவர்களை ஒரே வார்த்தையில் இணைக்க விரும்புகிறேன். அதை இவர்கள் கூறும்போது அரபிகள் இவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்; அரபி அல்லாதவர்கள் இவர்களுக்கு வரி செலுத்துவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில் வருவதாவது: “எனது தந்தையின் சகோதரரே! அவர்களுக்கு ஏற்றமான ஒன்றை நோக்கி அவர்களை நான் அழைக்க வேண்டாமா?” என்று நபி (ஸல்) கேட்க, “நீ அவர்களை எதன் பக்கம் அழைக்கிறாய்?” என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவர்கள் ஒரு வாக்கியத்தைச் சொல்ல வேண்டும் என்றுதான் அழைக்கிறேன். அந்த வாக்கியத்தால் அரபியர்கள் அவர்களுக்குப் பணிவார்கள்; அரபி அல்லாதவர்களையும் அவர்கள் ஆட்சி செய்யலாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் வருவதாவது: “ஒரே ஒரு சொல்லை அவர்கள் சொல்லட்டும். அதனால் அவர்கள் அரபியர்களை ஆட்சி செய்யலாம்; அரபி அல்லாதவர்களும் அவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். இதை கூறி முடித்தவுடன் இவ்வளவு பயன்தரும் சொல்லை எப்படி மறுப்பது? என்ன பதில் கூறுவது? என்று தெரியாமல் அனைவரும் திகைத்து அமைதி காத்தனர். பிறகு அபூஜஹ்ல் “அது என்ன சொல்? உமது தந்தையின் மீது சத்தியமாக! நாங்கள் அதையும் கூறுகிறோம். அதுபோன்று பத்து சொற்களையும் கூறுகிறோம்” என்று கூறினான். அப்போது நபி (ஸல்) அவர்கள் “லாயிலாஹஇல்லல்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் அனைத்தையும் விட்டு விலகிவிட வேண்டும்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் தங்கள் கைகளைத் தட்டிக் கொண்டு “முஹம்மதே! என்ன? கடவுள்களை எல்லாம் ஒரே கடவுளாக ஆக்கப் பார்க்கிறாயா? உனது பேச்சு மிக ஆச்சரியமாக இருக்கின்றதே!” என்றார்கள்.
பிறகு அவர்களில் சிலர் சிலரிடம் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயம் (வாக்குறுதிகளில்) நீங்கள் விரும்பும் எதையும் இவர் உங்களுக்குக் கொடுக்க மாட்டார்; நீங்கள் எழுந்து செல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கும் அவருக்கும் மத்தியில் தீர்ப்பு அளிக்கும் வரை உங்களது மூதாதையரின் மார்க்கத்திலேயே நிலைத்திருங்கள்” என்று கூறினார்கள். அதற்குப் பின் அனைவரும் பிரிந்து சென்றுவிட்டனர்.
இவர்கள் விஷயத்தில்தான் இந்த வசனங்கள் அருளப்பட்டன:
“ஸாத் - நல்லுபதேசங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனின் மீது சத்தியமாக! (இது நம்மால்தான் அருளப்பட்டது. இதனை) நிராகரிப்பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர்.
இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கின்றோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாக இருக்கவில்லை.
(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர் (ஆகிய நீங்கள்) அவர்களிலிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சயப்பட்டு, “இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உங்களைப் பற்றி) அந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.
“என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்” (என்று கூறி,) அவர்களிலுள்ள தலைவர்கள், (மற்றவர்களை நோக்கி, “இவரை விட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாக இருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இவ்விஷயத்தில் ஏதோ (சுயநலந்தான்) கருதப்படுகின்றது” என்று கூறிக் கொண்டே சென்றுவிட்டனர்.
“முன்னுள்ள வகுப்பாலும், இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே அன்றி வேறில்லை” என்றும், “நம்மைவிட்டு இவருக்கு மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டு விட்டது” என்றும் (கூறினார்கள்). (அல்குர்ஆன் 38:1-8) (இப்னு ஹிஷாம், திர்மிதி, முஸ்னது அபீ யஃலா, இப்னு ஜரீர்)
அபூதாலிப் நோய் அதிகமாகி நபித்துவத்தின் பத்தாவது வருடம் ரஜப் மாதத்தில் கணவாயிலிருந்து வெளியேறி சரியாக ஆறு மாதத்திற்குப் பின் மரணம் எய்தினார். (அல்முக்தஸர்)
சிலர் ரமழான் மாதத்தில் அன்னை கதீஜாவின் மரணத்திற்கு மூன்று நாள்களுக்கு முன் மரணமானார் என்றும் கூறுகின்றனர்.
அபூதாலிபுக்கு மரணம் சமீபமானபோது நபி (ஸல்) அவரிடம் சென்றார்கள். அப்போது அங்கு அபூஜஹ்லும் இருந்தான். அபூதாலிபிடம் நபி (ஸல்) அவர்கள் “எனது தந்தையின் சகோதரரே! நீங்கள் “லாஇலாஹஇல்லல்லாஹ்’ என்று கூறுங்கள். நான் அல்லாஹ்விடம் இவ்வார்த்தையின் பொருட்டால் உங்களுக்காக வாதிடுவேன்” என்று கூறினார்கள். ஆனால், அங்கிருந்த அபூஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபூ உமய்யாவும் “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா நீர் புறக்கணிக்கப் போகின்றீர்?” என்று தொடர்ந்து அவரிடம் இதையே கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில் அபூதாலிப் “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில்தான் (இருக்கிறேன்)” என்று கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எனக்கு தடை வராமல் இருக்கும்வரை அல்லாஹ்விடம் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள். ஆனால்,
“இணைவைத்து வணங்குபர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல் அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?) (அல்குர்ஆன் 9:113)
(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்!” (அல்குர்ஆன் 28:56) (ஸஹீஹுல் புகாரி)
என்ற இரு வசனங்களை அல்லாஹ் இறக்கி இணைவைப்பவர்களுக்காக பாவ மன்னிப்புக் கோருவதைத் தடை செய்துவிட்டான். (ஸஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்களுக்கு அபூதாலிப் கொடுத்து வந்த பாதுகாப்பு மற்றும் உதவியைப் பற்றி நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. காரணம், அவர் குறைஷித் தலைவர்கள் மற்றும் மூடர்களின் தாக்குதல்களிலிருந்து இஸ்லாமிய அழைப்புப் பணியைப் பாதுகாத்து, அதற்கு ஓர் அரணாக விளங்கினார். ஆனாலும் தங்களது மூதாதையரின் மார்க்கத்திலேயே அவர் நிலைத்திருந்து விட்டதால் மறுமையின் வெற்றியை அடையவில்லை.
ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்களது பெரியதந்தை அபூதாலிபிற்கு என்ன பயனளிப்பீர்கள். அவர் உங்களைப் பாதுகாத்தார். உங்களுக்காகக் கோபம் கொண்டார்” என்று அப்பாஸ் (ரழி) கேட்டபோது, “அவர் நரகத்தின் குறைந்த ஆழமுள்ள பகுதியில் இருப்பார். நான் இல்லை என்றால் நரகத்தின் அடித்தளத்தில் சென்றிருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) கூற தான் கேட்டதாக அபூ ஸஈது அல்குத் (ரழி) அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களிடம் அவர்களது பெரியதந்தை அபூதாலிபைப் பற்றி பேசப்பட்டபோது “மறுமையில் அவருக்கு எனது சிபாரிசு பலனளிக்கலாம். அதனால் அவரது கரண்டைக்கால் வரையுள்ள நெருப்பின் ஆழத்தில் அவர் வைக்கப்படுவார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
அபூதாலிபின் மரணத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பின் துணைவி கதீஜா (ரழி) மரணமானார்கள். இவர்களது மரணம் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில், அவர்களின் 65வது வயதில் நிகழ்ந்தது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பது. (தல்கீஹ்)
அபூதாலிபின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்குப் பின் கதீஜா (ரழி) மரணமானார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மிகப்பெரியஅருளாக கதீஜா (ரழி) விளங்கினார்கள். நபி (ஸல்) அவர்களுடன் கால் நூற்றாண்டுக் காலம் வாழ்ந்த நமது அன்னை கதீஜா (ரழி), நபியவர்களின் துக்க நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலாக, சிரமமான நேரத்தில் உறுதுணையாக இருந்து, அவர்களின் தூதுத்துவத்தை எடுத்துக் கூறுவதற்கு பலவகையில் தியாகம் செய்தார்கள். மேலும், அறப்போரின் கஷ்டங்களில் பங்கெடுத்து தனது உம்ராலும் பொருளாலும் உதவி ஒத்தாசை செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: “மக்கள் என்னை நிராகரித்த போது, கதீஜா என்னை நம்பினார். மக்கள் என்னை பொய்ப்பித்த போது, அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் என்னை ஒதுக்கிய போது, அவர் என்னைத் தனது பொருளில் சேர்த்துக் கொண்டார். அல்லாஹ் அவர் மூலமாகத்தான் எனக்குக் குழந்தைகளைக் கொடுத்தான். அவரல்லாத மற்ற மனைவிகள் மூலம் குழந்தைகள் இல்லாமல் செய்துவிட்டான்.” (முஸ்னது அஹ்மது)
அபூஹுரைரா (ரழி) அறிவிப்பதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் உணவு எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் ஸலாம் கூறி சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காணமுடியாத முத்து மாளிகை ஒன்று அவருக்கு கிடைக்க இருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி)
சில நாட்களுக்குள் துக்கம் தரும் இவ்விரு நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்தன. நபி (ஸல்) அவர்களின் உள்ளம் வேதனையால் துடிதுடித்தது. தொடர்ந்து சமுதாயத்தவர்களும் துன்பங்களைத் தந்தனர். அபூதாலிபின் மரணத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்களுக்குத் துயரத்திற்கு மேல் துயரம் அதிகரித்தது. முற்றிலும் நிராசையாகி “தாயிஃப்’ நகர மக்களாவது அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஆதரவு அளிப்பார்கள் என்று தாம்ஃபை நோக்கி பயணமானார்கள். ஆனால், அங்கு அவர்களுக்கு ஆதரவளிப்பவரோ உதவி செய்பவரோ இல்லை. மாறாக, அம்மக்கள் நபி (ஸல்) அவர்களின் கூட்டத்தார் கொடுக்காத நோவினைகளை அவர்களுக்குக் கொடுத்தனர். கல் நெஞ்சம் கொண்ட அம்மக்கள் நபியவர்களை அடித்து துன்புறுத்தினர்.
மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களைக் கொடுமைப்படுத்தியது போன்றே அவர்களது தோழர்களையும் கொடுமைப்படுத்தினர். நபி (ஸல்) அவர்களின் நெருக்கமான தோழரான அபூ பக்ருக்கும் இக்கொடுமைகள் நிகழ்ந்தன. இதனால் அவரும் மக்காவை விட்டு ஹபஷாவிற்கு செல்ல வேண்டுமென முடிவு செய்தார். மக்காவை விட்டு வெளியேறி “பர்குல் கிமாத்’ என்ற இடத்தை அடைந்த போது அவரை “இப்னு துகுன்னா’ என்பவர் சந்தித்து தனது பாதுகாப்பில் மீண்டும் அவரை மக்காவிற்கு அழைத்து வந்தார். (ஸஹீஹுல் புகாரி)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு அவன் வாழ்நாளில் கொடுக்க முடியாத வேதனைகளைக் குறைஷிகள் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து வந்தனர். ஒருமுறை குறைஷி மடையர்களில் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் தலை மீது மண்ணை வாரி இறைத்தான். வீட்டுக்குள் நுழைந்த நபியவர்களின் தலை மீது மண் இருப்பதைக் கண்ட அவர்களின் மகளால் ஒருவர் அழுதவராக அதனை அகற்றினார்கள். “எனது அருமை மகளே! அழாதே! நிச்சயமாக அல்லாஹ் உனது தந்தையைப் பாதுகாப்பான். அபூதாலிப் மரணிக்கும் வரை நான் அதிகம் வெறுக்கும் ஒன்றை குறைஷிகள் எனக்கு செய்ததில்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
இவ்வாறு இந்த ஆண்டில் துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருந்ததால் வரலாற்றில் “ஆமுல் ஹுஸ்ன்’ துயர ஆண்டு என்று இந்த ஆண்டைக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் நபி (ஸல்), ஸவ்தா (ரழி) அவர்களை திருமணம் செய்தார்கள். இவர் அழைப்புப் பணியின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாமைத் தழுவியவர். முஸ்லிம்கள் இரண்டாவது முறையாக ஹபஷாவிற்கு ஹிஜ்ரா சென்றபோது இவரும் தனது கணவருடன் சென்றிருந்தார். இவர் கணவர் ஹபஷாவில் மரணித்துவிட்டார். அதற்குப் பின் இவர் மக்கா வந்தவுடன் இவருடைய இத்தா”வுடைய காலம் முடிவுறவே நபி (ஸல்) அவர்கள் இவரை பெண் பேசி திருமணம் முடித்துக் கொண்டார்கள். கதீஜா (ரழி) அவர்களின் மரணத்திற்குப் பின் இவர்களைத்தான் முதலில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இறுதி காலத்தில் நபி (ஸல்) அவர்கள் தனக்கு ஒதுக்கியிருந்த நாட்களையும் ஆயிஷாவிற்குக் கொடுத்து விட்டார்கள்.
இங்குதான் சிறந்த அறிவாளியும் திகைத்து நிற்கின்றான். அறிஞர்களுக்கும் ஒரு கேள்வி தோன்றுகிறது. முஸ்லிம்களிடம் இவ்வளவு பொறுமையும், உறுதியும், நிலைகுலையாமையும் இருப்பதற்குரிய காரணங்கள் என்னவாக இருக்க முடியும்? கேட்கும்போதே உடல் சிலிர்த்து உள்ளங்களில் நடுக்கம் ஏற்படும்படியான அநியாயங்களையும், அடக்குமுறைகளையும் இவர்கள் எப்படி சகித்து கொண்டார்கள்? உள்ளத்தில் ஊசலாடும் இந்தக் கேள்வியை முன்னிட்டே இதற்குரிய காரணங்களையும் தூண்டுகோல்களையும் சுருக்கமாகக் கூறிவிட வேண்டும் என்று நாம் கருதுகிறோம்.
இவை அனைத்திற்கும் தலையாயக் காரணம், அல்லாஹ் ஒருவனையே நம்புவதும் அவனை முறையாக அறிந்துகொள்வதும் ஆகும். உறுதிமிக்க இறைநம்பிக்கை எவன் உள்ளத்தில் ஊடுருவி விட்டதோ அவர், உலகத்தின் சோதனைகள் எவ்வளவுதான் அதிகமாக, பெரியதாக, கடுமையாக இருப்பினும் அவற்றை தனது இறைநம்பிக்கைக்கு முன் மாபெரும் வெள்ளப் பெருக்கின்மேல் வரும் ஒன்றுமில்லா நுரையாகவே பார்ப்பார். தான் உணரும் இறைநம்பிக்கையின் சுவைக்கு முன்னால் உலகத்தின் எவ்வளவு பெரியகஷ்டமானாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்.
இறைநம்பிக்கை உறுதியாக உள்ளத்தில் ஊடுருவி விட்டால் அது மலைகளையும் எடை போட்டுவிடும் அளவுக்கு வலுமிக்கதாக இருக்கும். இதைத்தான் அல்லாஹ் அழகாக குறிப்பிடுகிறான்:
“அவன்தான் மேகத்திலிருந்து மழையைப் பொழிவிக்கிறான். (அது பொழிகின்ற) நீருக்குத் தக்கவாறு (சிறிய பெரிய) ஓடைகளாக ஓடுகிறது. (அவ்வோடைகளில்) வெள்ளம் நுரைகளை மேல் சுமந்து செல்கிறது. இவ்வாறே ஆபரணங்களுக் காகவோ அல்லது மற்ற சாமான்களுக்காகவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும்பொழுதும் அதைப்போன்ற (அழுக்கு) நுரை மிதக்கிறது. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் இதனை உதாரணமாகக் கூறுகிறான். ஏனெனில், (அழுக்கு) நுரையோ பயனற்றதாக (இருப்பதால்) அழிந்து (மறைந்து) விடுகிறது. மனிதனுக்குப் பயனளிக்கக் கூடியவையோ பூமியில் (சேர்த்து வைக்கப்பட்டு) நிலையாக இருக்கின்றன. இவ்வாறே (நம்பிக்கை அற்றவர்களை அழுக்கு நுரைக்கும், நம்பிக்கையாளர்களை பூமியில் சேர்த்து வைக்கப்படும் பயன்தரும் பொருள்களுக்கும் ஒப்பிட்டு) அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். (அல்குர்ஆன் 13:17)
இந்த ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டு நிலை குலையாமை, பொறுமை, சகிப்பு, மன அமைதி ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற மற்ற காரணங்கள் உருவாகின்றன.
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல், முழு மனித குலத்திற்கும் மிக உயர்ந்த வழிகாட்டும் தலைவராக இருந்தார்கள். அழகிய குணங்களும், உயர்ந்த பண்புகளும், சிறந்த பழக்க வழக்கங்களும், பெருந்தன்மையும் அவர்களின் இயற்கைக் குணமாக இருந்தது. இதனால் அவர்களின் பக்கம் உள்ளங்கள் ஈர்க்கப்பட்டன. அவர்களுக்காக பல உயிர்கள் தியாகங்கள் செய்யத் துணிந்தன. அவர்களிடம் இருந்த உயர்ந்த நற்பண்புகளைப் போன்று வேறு எவரும் பெற்றிருக்கவில்லை. சிறப்பு, உயர்வு, கண்ணியம், மதிப்பு, பெருந்தன்மை, வாய்மை, நன்னடத்தை, பணிவு ஆகியவற்றில் எதிரிகள்கூட சந்தேகிக்க முடியவில்லை எனும்போது அவர்களது அன்பர்கள், நண்பர்கள் பற்றி என்ன கூற முடியும். நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு வார்த்தையை செவிமடுத்தாலும் அதை உண்மை என்றே அவர்கள் உறுதிகொள்வர்.
குறைஷிகளில் மூவர் ஓரிடத்தில் ஒன்று கூடினர். இவர்கள் ஒவ்வொருவரும் பிறருக்குத் தெரியாமல் இரகசியமாகக் குர்ஆனை செவிமடுத்து இருந்தார்கள். ஆனால், பிறகு இவர்களது இரகசியம் வெளியாகிவிட்டது. மூவரில் ஒருவன் அவர்களில் இரண்டாமவனான அபூஜஹ்லிடம் “முஹம்மதிடம் நீ கேட்பதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான். அதற்கவன் “நான் என்ன கேட்டு விட்டேன். எங்களுக்கும் அப்து மனாஃப் குடும்பத்திற்கும் சிறப்பு விஷயத்தில் போட்டி வந்தபோது அவர்கள் ஏழைகளுக்கு உணவளித்தார்கள்; நாங்களும் உணவளித்தோம்; அவர்கள் வாகனமற்றவர்களுக்கு வாகனங்களை வழங்கினார்கள்; நாங்களும் வழங்கினோம்; தர்மம் செய்தார்கள்; நாங்களும் தர்மம் செய்தோம். இவ்வாறு நாங்கள் நன்மையான விஷயத்தில் பந்தய குதிரைகளைப் போன்று ஆகிவிட்டோம். அப்போது அப்து மனாஃபின் குடும்பத்தார்கள் எங்களுக்கு இறைத்தூதர் இருக்கிறார், அவருக்கு வானத்திலிருந்து வஹி (இறைச்செய்தி) வருகிறது” என்று கூறினார்கள். அதற்கு அபூஜஹ்ல் “இந்தச் சிறப்பை எப்பொழுதும் நாங்கள் அடைந்து கொள்ளவே முடியாது” என்று பொறாமையுடன் கூறி, நீங்கள் கூறும் இந்த நபியை ஒருக்காலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது உண்மைப்படுத்தவும் முடியாது என்று கூறிவிட்டான். (இப்னு ஹிஷாம்)
“முஹம்மதே! நாங்கள் உம்மை பொய்ப்பிக்கவில்லை. நீ கொண்டு வந்த மார்க்கத்தைத்தான் பொய்ப்பிக்கின்றோம்” என்று அபூஜஹ்ல் எப்போதும் கூறி வந்தான். அதையே இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது: (ஸுனனுத் திர்மிதி)
(நபியே! உங்களைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உங்களுக்குக் கவலையைத் தருகின்றது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர். (அல்குர்ஆன் 6:33)
ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை நிராகரிப்பவர்கள் மும்முறை எல்லைமீறி குத்தலாகப் பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “குறைஷி கூட்டமே! திட்டவட்டமாக நான் உங்களிடத்தில் உங்களைப் பலியிட்டுவிடும் முடிவைக் கொண்டு வந்துள்ளேன். (இதே நிலையில் நீங்கள் நீடித்தால் அதிவிரைவில் உங்களது கதை முடிந்துவிடும்)” என்று எச்சரித்தார்கள். இவ்வார்த்தை அவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. நபி (ஸல்) அவர்களுக்கு கடும் எதிரியாக இருந்தவர் கூட அவர்களை மிக அழகிய முறையில் சமாதானப்படுத்தினார்.
ஒருமுறை அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் குடல்களை ஸஜ்தாவில் இருக்கும்போது நபி (ஸல்) அவர்களின் மீது அவர்கள் போட்டனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் நபியவர்கள் கையேந்திய போது எதிரிகளின் சிரிப்பு மறைந்து கவலையும், துக்கமும் அவர்களைப் பீடித்துக் கொண்டது. நிச்சயமாக தங்களுக்கு நாசம்தான் என்பதை உறுதியாக விளங்கிக் கொண்டனர்.
அபூலஹபின் மகன் உத்பாவிற்கு எதிராக நபி (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தனக்கு எதிராக செய்த பிரார்த்தனையின் பலனை சந்தித்தே ஆக வேண்டும் என்று அவன் உறுதியாக நம்பியிருந்தான். அவன் பயணத்தில் ஓரிடத்தில் தங்கியிருந்தபோது சிங்கத்தைப் பார்த்துவிட்டு, “மக்காவில் இருந்து கொண்டே முஹம்மது என்னைக் கொலை செய்துவிட்டார்” என்று கத்தினான்.
உபை இப்னு கலஃப், நபி (ஸல்) அவர்களை கொன்று விடுவேன் என்று மிரட்டி வந்தான். நபி (ஸல்) “இன்ஷா அல்லாஹ்! நான்தான் உன்னைக் கொல்வேன்” என்று கூறினார்கள். உஹுத் போரில் நபி (ஸல்) அவர்கள் அவன்மீது ஈட்டியை எய்து சிறிய காயத்தை ஏற்படுத்தியபோது, “இந்த முஹம்மது மக்காவில் இருக்கும்போதே என்னைக் கொல்வேன் என்று சொல்லியிருந்தார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்மீது துப்பியிருந்தாலும் அவர் என்னை கொன்றிருப்பார்” என்றான் உபை. (இதன் விவரம் பின்னால் வருகிறது). (இப்னு ஹிஷாம்)
மக்காவில் இருக்கும்போது ஸஅத் இப்னு முஆத் (ரழி) அவர்கள் உமய்யாவைப் பார்த்து “முஸ்லிம்கள் உன்னை நிச்சயம் கொலை செய்து விடுவார்கள் என்று நபி (ஸல்) கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள். இதைத் கேட்ட உமய்யாவுக்கு மரண பயம் ஏற்பட்டு மக்காவை விட்டு வெளியேறவே மாட்டேன் என்று தனக்குத் தானே உறுதி செய்து கொண்டான். பத்ர் போர் அன்று அபூஜஹ்ல் தன்னுடன் வந்தே ஆக வேண்டும் என்று அவனை நிர்ப்பந்தித்த போது போரிலிருந்து தப்பிப்பதற்கு வசதியாக மக்காவில் உள்ள ஒட்டகங்களில் மிகச் சிறந்ததை வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டான். அவனுடைய மனைவி “ஏ! அபூஸஃப்வான். மதீனாவில் உள்ள சகோதரர் உனக்கு கூறியதை நீ மறந்துவிட்டாயா?” என்று கேட்டாள். அவன் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவர்களுடன் சிறிது தூரம்தான் செல்ல நாடுகிறேன்” என்று கூறினான். (ஸஹீஹுல் புகாரி)
இவ்வாறே நபி (ஸல்) அவர்களது எதிரிகளின் நிலை இருந்தது. நபி (ஸல்) அவர்களது தோழர்களின் நிலை எவ்வாறு இருந்ததெனில், நபி (ஸல்) அவர்களைத் தங்களது உயிரினும் மேலாக அவர்கள் மதித்தார்கள். பள்ளத்தை நோக்கி தண்ணீர் விரைந்து வருவதுபோல நபி (ஸல்) அவர்களை நோக்கி அவர்களது உள்ளத்தில் உண்மையான பிரியம் விரைந்து வந்தது காந்தத்தை நோக்கி இரும்பு ஈர்க்கப்படுவதுபோல உள்ளங்கள் ஈர்க்கப்பட்டன.
நபி (ஸல்) அவர்கள் மீது தோழர்கள் உள்ளத்தில் இருந்த அர்ப்பணிக்கும் ஆசை அளவிட முடியாதது நபியவர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அன்பும் பிரியமும் அப்படித்தான். எனவே, அவர்களுக்காகத் தங்களது கழுத்து துண்டிக்கப்படுவதையும் அவர்கள் பொருட்படுத்தியதில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்களின் நகத்திற்கு ஒரு சேதம் ஏற்படுவதையோ, அவர்களுக்கு ஒரு முள் தைப்பதைக் கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
ஒருமுறை அபூபக்ர் (ரழி) கல் நெஞ்சக்காரர்களால் கடுமையாக மிதிக்கப்பட்டார்கள்; வன்மையாக அடிக்கப்பட்டார்கள். அந்நேரத்தில் அங்கு வந்த உத்பா, ஆபூபக்ரை செருப்பால் அடித்தது மட்டுமல்ல, அவர்களது முகத்தை செருப்பால் தேய்க்கவும் செய்தான். அவர்களது வயிற்றின் மீது ஏறி மிதித்தான். அவர்களது மூக்கு சிதைக்கப்பட்டதால் மூக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு ஆகிவிட்டது. “தைம்’ கிளையினர் அன்னாரை ஒரு துணியில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் வைத்தார்கள். அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்றே எண்ணி இருந்தார்கள்.
அன்று பகலின் இறுதியில் அவர்கள் பேசத் தொடங்கியபோது “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்” என்றுதான் கேட்டார்கள். இதைக் கேட்ட தைம் கிளையினர் அவரைக் குறை கூறிவிட்டு “அன்னாரது தாயார் உம்முல் கைடம் இவருக்கு உணவளியுங்கள்; ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; அவரை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு எழுந்துச் சென்றனர்.
அன்னாரது தாய் அனைவரும் சென்றபின் உணவு சாப்பிட அவரை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் அபூபக்ரோ “அல்லாஹ்வின் தூதர் என்னவானார்கள்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அன்னாரது தாய் “உனது தோழரைப் பற்றி அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒன்றுமே எனக்குத் தெரியாது” என்று கூறினார். “நீங்கள் கத்தாபின் மகள் உம்மு ஜமீல் (உமரின் சகோதரி) இடம் சென்று நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்து வாருங்கள்” என்று அபூபக்ர் (ரழி) கூறினார்கள். தாயார் உம்மு ஜமீலிடம் வந்து “அபூபக்ர் (ரழி) உன்னிடம் முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வைப் பற்றி விசாரித்து வர என்னை அனுப்பினார்” என்று கூற, அவர் “எனக்கு அபூபக்ரையும் தெரியாது, முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வையும் தெரியாது. நீங்கள் விரும்பினால் உங்களுடன் உங்கள் மகனைப் பார்க்க நான் வருகிறேன்” என்று கூறினார். அவர் “சரி” எனக் கூறவே, உம்மு ஜமீல் அவருடன் அபூபக்ரைப் பார்க்கப் புறப்பட்டார்.
உம்மு ஜமீல் அபூபக்ரை மயக்கமுற்று மரணித்தவரைப் போன்று பார்த்தவுடன் கூச்சலிட்டு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! கல் நெஞ்சம் கொண்ட இறைநிராகரிப்போரும் பாவிகளும் உங்களை இவ்வாறு செய்துவிட்டார்கள். அல்லாஹ் உங்களுக்காக அவர்களிடம் பழிவாங்க வேண்டுமென நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார். அவரிடம் அபூபக்ர் (ரழி), “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்” என்று கேட்டதற்கு “இதோ உமது தாய் (நமது பேச்சை) கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறவே அவரைப் பற்றி பரவாயில்லை என்று கூறியவுடன் “நபி (ஸல்) நல்ல விதமாக பாதுகாப்புடன் இருக்கிறார்கள்” என்று உம்மு ஜமீல் கூறினார். “அவர்கள் எங்கிருக்கிறார்” என்று அபூபக்ர் (ரழி) கேட்கவே “அவர்கள் தாருல் அர்கமில் இருக்கிறார்கள்” என்றவுடன் “அல்லாஹ்வின் தூதரைச் சென்று பார்க்காமல் நான் உண்ணவுமாட்டேன், குடிக்கவுமாட்டேன். இது அல்லாஹ்விற்காக என்மீது கடமையாகும்” என்று நேர்ச்சை செய்து கொண்டார்கள்.
அன்னாரது தாயாரும் உம்மு ஜமீலும் ஆள் நடமாட்டங்கள் குறைந்து மக்களின் ஆரவாரங்கள் அமைதியாகும் வரை சற்று தாமதித்து நபி (ஸல்) அவர்களிடம் அவரை அழைத்துச் சென்றார்கள். அபூபக்ர் (ரழி) நடக்க இயலாமல் அவர்கள் இருவர் மீதும் சாய்ந்து நடந்து சென்றார்கள். (அல்பிதாயா வந்நிஹாயா)
இந்த நூலின் பல இடங்களில் நபி (ஸல்) அவர்களின் மீது நபித்தோழர்கள் வைத்திருந்த அன்பை விவரிக்கும் அற்புதமான சம்பவங்களையெல்லாம் நாம் கூறுவோம். குறிப்பாக உஹுத் போரில் நடந்த நிகழ்ச்சிகள், “குபைப்“, இன்னும் அவர் போன்ற நபித்தோழர்கள் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நாம் பின்னால் பார்ப்போம்.
நபித்தோழர்கள் தங்களின் மீது இறைவனால் சுமத்தப்பட்டுள்ள மாபெரும் பொறுப்பை முழுமையாக உணர்ந்திருந்தார்கள். “எந்த நிலையிலும் இப்பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. இப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் விலகிக்கொள்ளும் போது ஏற்படக்கூடிய மிக மோசமான முடிவை விட இவ்வுலகத்தின் சிரமங்களை தாங்கிக்கொள்வதே மேல். இப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லையெனில் தங்களுக்கும் மனித சமுதாயத்துக்கும் ஏற்படும் நஷ்டத்தை இப்பொறுப்பினை சுமந்துகொள்ளும் போது சந்திக்கும் சிரமங்களுடன் ஒருக்காலும் ஒப்பிட முடியாது” என்று நபித்தோழர்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர்.
மறுமையின் மீதுண்டான நம்பிக்கை, மேன்மேலும் கடமை உணர்வை பலப்படுத்தியது. அகிலத்தைப் படைத்து, வளர்த்து, காக்கும் இறைவனுக்கு முன்னால் நிற்க வேண்டும்; சிறிய பெரியஒவ்வொரு செயல்களுக்கும் அவனிடத்தில் விசாரணை உண்டு; அதற்குப் பின் நிரந்தர இன்பம் அல்லது நிரந்தர வேதனை நிச்சயம் உண்டு. இவ்வாறு உறுதியான நம்பிக்கையை நபித்தோழர்கள் கொண்டிருந்தனர். தங்களின் வாழ்க்கையை அச்சத்திலும் ஆதரவிலும் கழித்தனர். அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைப்பதுடன், அவனது வேதனையைப் பயந்தும் வந்தனர். அடுத்து வரும் வசனம் இதையே சுட்டிக்காட்டுகிறது.
அவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரையில் தானம் கொடுக்கின்றனர். அத்துடன், நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனிடம் செல்ல வேண்டும் என்பதை அவர்களது உள்ளங்கள் பயப்படுகின்றன... (அல்குர்ஆன் 23:60)
இவ்வுலகம், அதிலுள்ள இன்ப துன்பங்கள் யாவும் மறுமைக்கு முன் கொசுவின் இறக்கை அளவுக்குக் கூட சமமாகாது என்பதை நபித்தோழர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தனர். இதனால்தான் உலகத்தின் கஷ்டங்களும் சிரமங்களும் எவ்வளவுதான் பெரியதாக இருப்பினும் அதை அறவே பொருட்படுத்தாமல் துச்சமாக மதித்தனர்.
முஸ்லிம்கள் எந்த அடிப்படைக்கு மக்களை அழைக்கின்றார்களோ அந்த அடிப்படை, உண்மைதான் என்பதை குர்ஆன் வசனங்கள் தக்க சான்றுகளாலும், தெளிவான எடுத்துக் காட்டுகளாலும் மெய்ப்பித்துக் காட்டின. மேலும், மிக உயர்ந்த மனித சமூகமான இஸ்லாமிய சமூகம் அமைய வேண்டிய அடிப்படைகளை மேன்மைமிகு குர்ஆன் சுட்டிக்காட்டியது. இதில் நேரிடும் இன்னல்களைச் சகித்துக்கொள்ள வேண்டும். எதிர்ப்புகள் தலைதூக்கும் போது துணிவுடன் இருக்க வேண்டும்; என்பதை முன் சென்ற சமுதாயங்களை எடுத்துக்காட்டாக தந்து அவர்களை பற்றிய செய்திகளில் நல்ல படிப்பினைகளையும் ஞானங்களையும் வழங்கியது.
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) “அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)” என்று கேட்டதற்கு “அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது” என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 2:214)
அலிஃப்; லாம்; மீம். மனிதர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதனைப் பற்றி) அவர்கள் சோதிக்கப் படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?
இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கின்றோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறும்) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான். (அல்குர்ஆன் 29:1,2,3)
மேலும், குர்ஆன் வசனங்கள் அல்லாஹ்வை மறுத்தவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகத்திற்கும் முற்றிலும் தெளிவான பதில்களைத் தந்ததுடன், இதே வழிகேட்டில் அவர்கள் நிலைத்திருந்தால் அவர்களுக்கு ஏற்படும் கெட்ட முடிவைப் பற்றியும் எச்சரித்தன. இதற்கு ஆதாரமாக அல்லாஹ் தனது நேசர்கள் மற்றும் எதிரிகள் ஆகியோருடன் நடந்துகொண்ட வரலாற்று சம்பவங்களைத் தெளிவாகக் குர்ஆன் வசனங்கள் எடுத்துக் கூறின. சில நேரங்களில் மிகவும் மிருதுவாக அவர்கள் இருந்த வழிகேட்டை உணர்த்தி விளக்கமளிக்க வேண்டிய கடமையையும் குர்ஆன் வசனங்கள் செய்தன.
குர்ஆன் முஸ்லிம்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது. இப்பிரபஞ்சத்தில் உள்ள அல்லாஹ்வின் அற்புத படைப்புகளையும் அவன் அவற்றை அழகிய முறையில் நிர்வகிப்பதையும் அதன் மூலம் அவனே வணங்குவதற்குத் தகுதியானவன் என்பதையும் அவனை வணங்கும்போது அவன் பொழியும் அன்பு, அருள், பொருத்தம் எவ்வளவு மகத்துவமிக்கது, எவ்வளவு பாக்கியம் பெற்றது என்பதையும் குர்ஆன் முஸ்லிம்களுக்கு விளங்கவைத்தது. இதன் மூலம் முஸ்லிம்கள் அடைந்த மன திருப்திக்கும், மன அமைதிக்கும் எதுவும் சமமாக முடியாது.
இவ்வகையான வசனங்களில் முஸ்லிம்களிடம் நேரடியாக அழைத்துப் பேசிய வசனங்களும் உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாகும்:
அவர்களது இறைவன் தன்னுடைய அன்பையும், பொருத்தத்தையும் அளித்து சொர்க்கங்களையும் தருவதாக அவர்களுக்கு நற்செய்தி கூறுகின்றான். அவர்களுக்கு அவற்றில் என்றென்றும் நிலையான இன்பம் உண்டு. (அல்குர்ஆன் 9:21)
தங்களுக்கு அநீதமிழைத்து, தங்கள் மீது வரம்பு மீறி கொடுமை புரிந்த இறைமறுப்பாளர்களான தங்களின் எதிரிகளின் நிலை, நாளை மறுமையில் எவ்வாறு இருக்கும் என்று முஸ்லிம்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர்களுக்கு அதையும் குர்ஆன் தெளிவுபடுத்தியது.
இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி “(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் சுவைத்துப் பாருங்கள்” என்று கூறப்படும். (அல்குர்ஆன் 54:48)
அந்த நிராகரிப்பவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் விசாரணை செய்யப்பட்டு கைதிகளாக விலங்கிடப்பட்ட நிலையில் முகம் குப்புற நரகில் வீசி எறியப்படுவார்கள். இதோ (ஸகர்) நரகத்தின் வேதனையை சுவைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு கூறப்படும்.
கொடுமைகளையும் துன்பங்களையும் சந்தித்த அன்றும் அதற்கு முன்பும் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதென்பது சோதனைகளையும், மரணங்களையும் சந்திப்பது மட்டுமல்ல என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருந்தனர். மாறாக, இஸ்லாமிய அழைப்பின் நோக்கம் முற்றிலும் அறியாமையால் நிரம்பிய கொள்கைகளையும் அதன் அநியாயமான சடங்குகளையும் அடியோடு ஒழித்துவிடுவதே ஆகும். இதன்மூலம் பூமி அனைத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உலகிலுள்ள அனைத்து அரசியல் அமைப்புகளையும் வெற்றிகண்டு முழு மனித சமுதாயத்திற்கும் அல்லாஹ்வின் பொருத்தத்தின்பால் வழிகாட்டுகிறது. மேலும், படைப்பினங்களை மனிதர்கள் வணங்குவதிலிருந்து வெளியேற்றி படைத்த அல்லாஹ்வை வணங்கும் வழிக்கு இஸ்லாம் அழைத்துச் செல்கிறது என்று அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
இதுபோன்ற நற்செய்திகளை சில நேரங்களில் மிகத் தெளிவாகவும் சில நேரங்களில் சூசகமாகவும் முஸ்லிம்களுக்கு குர்ஆன் விளக்கிக் கொண்டே இருந்தது. அக்காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருந்தார்கள். அவர்களது வாழ்க்கையே முற்றிலும் அழிந்துவிடும்படியான சோதனைகளும் நிகழ்ந்தன. அப்போது முன்சென்ற வசனங்கள் இறங்கின. அந்த வசனங்களின் கருத்துக்கள் முற்றிலும் மக்கா முஸ்லிம்களின் நிலைமைகளுக்கும் நிராகரிப்பவர்களின் நிலைமைகளுக்கும் மிகப் பொருத்தமாக இருந்தன. மேலும், அந்த வசனங்களில், நிராகரிப்பவர்கள் மற்றும் அநியாயக்காரர்களின் முடிவு அழிவுதான் என்றும் நல்லோர்கள்தான் இப்பூமியில் நிலைப்பார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆக, குர்ஆனில் கூறப்பட்ட சத்திரங்களில் “வெகு விரைவில் மக்காவாசிகள் தோல்வியுறுவார்கள். இஸ்லாமும் முஸ்லிம்களும் வெற்றி பெறுவார்கள்” என்று தெளிவான முன் அறிவிப்புகள் இருந்தன.
இறைநம்பிக்கையாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்ற நற்செய்தி கூறும் பல வசனங்களும் இக்கால கட்டத்தில்தான் இறங்கின. அல்லாஹ் கூறுகிறான்:
“நம்முடைய தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம்முடைய வாக்கு நிச்சயமாக முந்தி விட்டது. ஆதலால், நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள்.
நிச்சயமாக நம்முடைய படையினர்(களாகிய நம்பிக்கையாளர்கள்)தாம் வெற்றி பெறுவார்கள். ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரையில் (அல்லாஹ்வை நிராகரிக்கும்) இவர்களிலிருந்து நீங்கள் விலகி இருங்கள். (இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
அதிசீக்கிரத்தில் அவர்களும் அதனைக் கண்டு கொள்வார்கள். (என்னே!) நம்முடைய வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்? (நம்முடைய வேதனை) அவர்கள் மத்தியில் இறங்கும்போது, அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியற்காலை மகா கெட்டதாகிவிடும்.” (அல்குர்ஆன் 37:171-177)
“வெகு விரைவில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள்.” (அல்குர்ஆன் 54:45)
“இவர்களுடைய கூட்டத்தினர் (எம்மாத்திரம்?) மற்ற கூட்டத்தினர்களைப் போலவே இவர்களும் முறியடிக்கப்படுவார்கள்.” (அல்குர்ஆன் 38:11)
ஹபஷாவிற்குச் சென்று குடியேறிய முஸ்லிம்களைப் பற்றி இந்த வசனம் இறங்கியது:
(நம்பிக்கையாளர்களே! உங்களில்) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு பின்னர் அல்லாஹ்வுக்காக(த் தங்கள் ஊரைவிட்டு)ப் புறப்பட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகிலும் நல்ல இருப்பிடத்தையே தருவோம்; மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரிது. (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே? (அல்குர்ஆன் 16:41)
நபி யூசுஃப் (அலை) அவர்களின் வரலாற்றை விசாரித்த அந்த மக்களுக்கு பதில் கூறும்போது அதில்,
(நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சத்திரத்தைப் பற்றி வினவுகின்ற(இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 12:7)
என்றும் அல்லாஹ் கூறினான்.
அதாவது, நபி யூசுஃப் (அலை) அவர்களின் வரலாற்றை விசாரித்த மக்காவாசிகளே அவர்களின் சகோதரர்களுக்கு ஏற்பட்ட தோல்வியைப் போன்றே நீங்களும் தோல்வியை சந்திக்க இருக்கிறீர்கள். அவர்கள் அடிபணிந்தது போன்றே நீங்களும் வெகு விரைவில் அடிபணிவீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.
இறைத்தூதர்களை நினைவுகூர்ந்து அல்லாஹ் கூறுகிறான்:
“தங்களிடம் வந்த (நம்முடைய) தூதர்களை நிராகரித்தவர்கள் அவர்களை நோக்கி, “நிச்சயமாக நீங்கள் நம்முடைய மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்களுடைய ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர்களுடைய இறைவன் (அந்த தூதர்களை நோக்கி) “நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்” என்றும், “உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்” என்றும் வஹி மூலம் அறிவித்து “இது எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கின்றாரோ அவருக்கு ஒரு சன்மானமாகும்” என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.” (அல்குர்ஆன் 14:13,14)
பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் மிகக் கடுமையான போர் கொழுந்துவிட்டு எந்து கொண்டிருந்த நேரத்தில் மக்காவாசிகள் இணைவைப்பவர்களாகிய பாரசீகர்களே வெற்றிபெற வேண்டும் என்று விரும்பினர். ஆனால், முஸ்லிம்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்ற ரோமர்களே வெற்றிபெற வேண்டும் என்று விரும்பினர். அப்போது அப்போல் பாரசீகர்கள்தான் வலுப்பெற்று முன்னேறியும் வந்த நேரத்தில் இன்னும் சில ஆண்டுகளில் ரோமர்கள் பாரசீகர்களை வீழ்த்தி விடுவார்கள் என்ற நற்செய்தியை அல்லாஹ் இறக்கி வைத்தான். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மற்றொரு நற்செய்தியையும் கூறினான். அதுதான், முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் உதவி வெகு விரைவில் உண்டு என்பது!
(நமக்குச்) சமீபமான பூமியிலுள்ள “ரூம்“வாசிகள் தோல்வியடைந்தனர். அவர்கள் (இன்று) தோல்வி அடைந்துவிட்டபோதிலும் அதிசீக்கிரத்தில் வெற்றி அடைவார்கள். (அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (வெற்றி அடைவார்கள். வெற்றி தோல்வி என்ற) விஷயம் இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அவர்கள் வெற்றியடையும்) அந்நாளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு உதவி புரிகிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 30:2-5)
நபி (ஸல்) அவர்களும் அவ்வப்போது இதுபோன்று நற்செய்திகளை மக்களுக்குக் கூறி வந்தார்கள். ஹஜ்ஜுடைய காலங்களில் உக்காள், மஜன்னா, தில் மஜாஸ் என்ற இடங்களில் தூதுத்துவத்தை எடுத்து கூறுவதற்காக மக்களை சந்திக்கும்போது சொர்க்கத்தின் நற்செய்தி மட்டுமல்லாது இவ்வுலக வாழ்க்கையின் வெற்றியைக் கொண்டும் நற்செய்தி கூறி வந்தார்கள். “மக்களே! “லாஇலாஹஇல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை) என்று கூறுங்கள் வெற்றி அடைவீர்கள்! அதன் மூலம் அரபியர்களை நீங்கள் ஆட்சி செய்யலாம். அரபியல்லாதவர்களும் உங்களுக்கு பணிந்து நடப்பார்கள். நீங்கள் இறந்துவிட்டாலும் சொர்க்கத்தில் மன்னர்களாகவே இருப்பீர்கள்.” (இப்னு ஸஅது)
உத்பா இப்னு ரபிஆ உலக ஆசாபாசங்களைக் காட்டி நபி (ஸல்) அவர்களிடம் பேரம் பேசி, அவர்களை பணிய வைக்க முயன்றபோது, நபி (ஸல்) அவர்கள் அவனுக்குக் கூறிய பதிலையும், அந்த பதிலில் இருந்து இஸ்லாம் நிச்சயம் மிகைத்தே தீரும் என்று உத்பா விளங்கிக் கொண்டதையும் இதற்கு முன் நாம் கூறியிருக்கிறோம்.
இவ்வாறே அபூதாலிபிடம் வந்த கடைசி குழுவினருக்குக் கூறிய பதிலையும் நாம் முன்பே பார்த்திருக்கின்றோம். அந்த பதிலில் “ஒரே ஒரு வார்த்தையைத்தான் நான் உங்களிடத்தில் எதிர்பார்க்கிறேன். அவ்வார்த்தையினால் அரபியர் உங்களுக்குப் பணிவார்கள்; அரபியர் அல்லாதவர்களையும் நீங்கள் ஆட்சி செய்யலாம்” என்று மிகத் தெளிவாக அம்மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
கப்பாப் இப்னு அரத் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) கஅபாவின் நிழலில் தங்களது போர்வையைத் தலையணையாக வைத்து படுத்திருந்தபோது நான் அவர்களிடம் வந்தேன். அப்போது இணைவைப்பவர்கள் புறத்திலிருந்து பல சிரமங்களை நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்விடத்தில் அநியாயக்காரர்களுக்கு எதிராக பிரார்த்திக்க மாட்டீர்களா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்களின் முகம் சிவந்துவிட்டது. படுத்திருந்தவர்கள் எழுந்து அமர்ந்து “உங்களுக்கு முன்னிருந்த மக்களில் ஒருவர் (இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்காக) அவன் எலும்பு, சதை, நரம்புகளை ரம்பத்தால் அறுக்கப்பட்டன. ஆனால், அத்தகைய துன்பமும் கூட அவரை மார்க்கத்திலிருந்து திருப்பவில்லை. நிச்சயமாக அல்லாஹ் இம்மார்க்கத்தை முழுமையாக்கியேத் தீருவான். அப்போது (யமன் நாட்டில் உள்ள) ஸன்ஆ நகலிருந்து ஹளரமவுத் நகரம் வரை அல்லாஹ்வின் அச்சத்தைத் தவிர வேறு எந்த வித அச்சமுமின்றி பயணம் செய்பவர் பயணிக்கலாம். ஆனால், நீங்கள் (அல்லாஹ்வின் உதவி) விரைவாக கிடைக்க வேண்டும் என்று அவசரப்படுகிறீர்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இதுபோன்ற நற்செய்திகளை மறைமுகமாகவோ, அந்நியர்களுக்குத் தெரியாமல் இரகசியமாகவோ நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக, முஸ்லிம்கள் இந்த நற்செய்தியை தெரிந்து வைத்திருந்தது போலவே, நிராகரிப்பவர்களும் தெரிந்து வைத்திருந்தனர். அஸ்வத் இப்னு முத்தலிபும் அவனது கூட்டாளிகளும் நபித்தோழர்களை எப்போது பார்த்தாலும் இடித்துரைப்பதும் கிண்டல் செய்வதுமாகவே இருந்தனர். மேலும், இதோ பாருங்கள் “கிஸ்ரா கைஸன் நாடுகளுக்கு வாரிசுகளாக ஆகப்போகும் அரசர்கள் உங்களைக் கடந்து செல்கிறார்கள்” என்று நபித்தோழர்களைக் குத்திக் காண்பித்து, விசில் அடித்து கைதட்டி கேலி செய்வார்கள்.
இவ்வுலகில் அதிவிரைவில் ஒளிமயமான சிறப்புமிக்க எதிர்காலம் உண்டு என்று கூறப்பட்ட நற்செய்திகளால் எல்லாப் புறத்திலிருந்தும் தங்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளையும் அநியாயங்களையும் கோடை காலத்தில் வெகு விரைவில் களைந்துவிடும் மேகமூட்டமாகவே நபித்தோழர்கள் கருதினார்கள். மேலும், இந்த நற்செய்திகள் உலக வெற்றியை மட்டும் குறிப்பிடாமல் அழியாத மறுமையில் நிலையான சுவர்க்கம் முஸ்லிம்களுக்கு உண்டு என்று கூறியன. இது நபித்தோழர்களுக்கு மிகுந்த ஆறுதலையும் ஆதரவையும் கொடுத்தது.
இதுமட்டுமல்லாமல் முஸ்லிம்களின் ஆன்மாவிற்கு நபி (ஸல்) இறைநம்பிக்கை எனும் பயிற்சி மூலம் வலுவூட்டி வந்தார்கள். அவர்களைக் குர்ஆன் மற்றும் நல்லுபதேசங்களால் பரிசுத்தமாக்கினார்கள்; உலகப் பொருட்களுக்கும் அற்ப சுகங்களுக்கும் அடிமையாவதிலிருந்து விடுவித்து உளத்தூய்மை, நற்பண்பு, உயரிய குணங்கள் என மிக உயர்ந்த தரத்திற்கு தங்களது தோழர்களை மேம்படுத்தினார்கள். அகிலங்களைப் படைத்த அல்லாஹ்வின் பக்கம் அவர்களின் கவனங்களைத் திருப்பினார்கள். “வழிகேடு’ என்ற இருள் அகற்றி “இஸ்லாம்’ என்ற ஒளியில் அவர்களை நிறுத்தினார்கள். துன்பங்களையும் துயரங்களையும் பொறுத்து, சகித்து, துன்பம் இழைத்தவர்களைப் பழிவாங்காமல் உள்ளத்தை அடக்கி அழகிய முறையில் மன்னிக்கும் பண்பாட்டை நபி (ஸல்) தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதனால் நபித்தோழர்களிடம் மார்க்க உறுதி, ஆசாபாசங்களை விட்டு விலகி வாழ்வது, இறை திருப்திக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வது, சுவர்க்கத்தை விரும்புவது, மார்க்கக் கல்வியின் மீது பேராசை கொள்வது, மார்க்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்வது ஆகிய அனைத்தும் காணப்பட்டன. மேலும், மன ஊசலாட்டங்களுக்கு கடிவாளமிட்டு, அற்ப உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடாமல் மனக் குழப்பங்களைக் கட்டுப்படுத்தி பொறுமை, நிதானம், கண்ணியம் ஒழுக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து சிறந்த நன்மக்களாக விளங்கினார்கள்.
நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொலைவிலுள்ள தாம்ஃபிற்குச் சென்றார்கள். (இது கி.பி. 619 மே மாதம் இறுதி அல்லது ஜுன் மாத ஆரம்பத்தில் ஆகும்). நபி (ஸல்) அவர்கள் தங்களது அடிமை ஜைது இப்னு ஹாஸாவுடன் கால்நடையாகச் சென்றார்கள். திரும்பும்போதும் கால்நடையாகவே திரும்பினார்கள். வழியிலிருந்த ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் இஸ்லாமிய அழைப்பு கொடுக்கப்பட்டும், அக்கூட்டத்தால் எவரும் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தாம்ஃபிற்குச் சென்றடைந்தபோது அங்கு வசித்து வந்த ஸகீஃப் கூட்டத்தாரின் தலைவர்களும் ‘அம்ர் இப்னு உமைர் அஸ்ஸகபி’ என்பவனின் பிள்ளைகளுமான 1) அப்து யாலில், 2) மஸ்ஊது, 3) ஹபீப் என்ற மூன்று சகோதரர்களிடம் சென்றார்கள். அவர்களிடம் இஸ்லாமைப் பரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரினார்கள். ஆனால், அவர்களில் ஒருவன் “உன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியது உண்மையென்றால் நான் கஅபாவின் திரைகளைக் கிழித்து விடுவேன்” என்று கூறினான். மற்றொருவன் “அல்லாஹ்வுக்கு உன்னைத் தவிர நபியாக அனுப்ப வேறொருவர் கிடைக்கவில்லையா?” என்று கேட்டான்.
மூன்றாமவன், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன். நீ உண்மையில் தூதராக இருந்தால் உனது பேச்சை மறுப்பது எனக்கு மிக ஆபத்தானதாகும். நீ அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவராக இருந்தால் உன்னிடம் பேசுவதே எனக்குத் தகுதியல்ல” என்று கூறினான். அப்போது நபி (ஸல்) “இதுதான் உங்கள் முடிவாக இருந்தால் நமது இந்த சந்திப்பை (மக்களுக்கு வெளிப்படுத்தாமல்) மறைத்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) தாம்ஃபில் பத்து நாட்கள் தங்கி அங்குள்ள மற்ற எல்லா தலைவர்கள், பிரமுகர்களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். ஆனால், அவர்களில் எவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாததுடன் தங்களது ஊரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் கூறி, நபி (ஸல்) அவர்கள் மீது வம்பர்களை ஏவிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் ஊரைவிட்டு வெளியே செல்ல முயன்றபோது அங்குள்ள வம்பர்களும் அடிமைகளும் ஒன்றுகூடி அவர்களை ஏசிப்பேசினர்.
இறுதியில் மக்களின் கூட்டம் அதிகமாகி அவர்கள் அனைவரும் இரு அணிகளாக நின்று கொண்டு, நபி (ஸல்) அவர்களின் மீது கற்களை எறிந்தனர். அதிகமான கற்களை நபி (ஸல்) அவர்களின் குதிகால் நரம்பை நோக்கி எறியவே அவர்களது பாதணிகளும் இரத்தக் கறைகளாயின. நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களது அடிமை ஜைது இப்னு ஹாஸா நபியவர்களைக் காப்பதற்காக தங்களையே கேடயமாக்கிக் கொண்டார்கள். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தாம்ஃபிலிருந்து மூன்று மைல்கள் தொலைவிலுள்ள ரபிஆவுடைய மகன்களான உத்பா, ஷைபா என்ற இருவருக்குச் சொந்தமான தோட்டம் வரை நபி (ஸல்) அவர்களை அடித்துக் கொண்டே வந்தனர். நபி (ஸல்) அந்த தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள திராட்சை தோட்ட பந்தலின் நிழலில் அமர்ந்தார்கள். அப்போதுதான் மிகப் பிரபலமான அந்த பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். இதனால் நபி (ஸல்) அவர்களின் உள்ளம் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளினால் எவ்வளவு வேதனை அடைந்திருந்தது என்பதையும் தாயிஃப் மக்கள் இஸ்லாமை ஏற்காததினால் எவ்வளவு துக்கத்திற்கு ஆளானார்கள் என்பதையும் இந்த பிரார்த்தனையிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
இதோ நபி (ஸல்) கேட்ட பிரார்த்தனை:
“அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் எனது திறமைக் குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன். கருணையாளர்களிலெல்லாம் மிகப்பெரியகருணையாளனே! நீதான் எளியோர்களைக் காப்பவன் நீதான் என்னைக் காப்பவன். நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா? அல்லது என்னுடைய காயத்தை நீ உரிமையாக்கிக் கொடுத்திடும் பகைவனிடமா? உனக்கு என்மீது கோபம் இல்லையானால் (இந்த கஷ்டங்களையெல்லாம்) நான் பொருட்படுத்தவே மாட்டேன். எனினும், நீ வழங்கும் சுகத்தையே நான் எதிர்பார்க்கிறேன். அதுவே எனக்கு மிக விசாலமானது. உனது திருமுகத்தின் ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம் அடைந்தன் இம்மை மறுமையின் காரியங்கள் சீர்பெற்றன. அத்தகைய உனது திருமுகத்தின் ஒளியின் பொருட்டால் உனது கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது அதிருப்தி என்மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். அல்லாஹ்வே! நீயே பொருத்தத்திற்குரியவன். நீ பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருள் இல்லாமல் முடியாது.”
நபி (ஸல்) அவர்களை இந்த நிலைமையில் பார்த்ததும் ரபிஆவின் மகன்களுக்கு இரக்கம் வந்தது. தங்களது கிறிஸ்துவ அடிமை அத்தாஸை அழைத்துத் “திராட்சைக் குலையை அவருக்குச் சென்று கொடு” என்று கூறினர். திராட்சைக் குலைகளை அத்தாஸ் நபி (ஸல்) அவர்களுக்கு முன் வைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி சாப்பிட்டார்கள்.
இதைக் கண்ட அத்தாஸ் “இந்தப் பேச்சு இவ்வூர் மக்கள் பேசும் பேச்சல்லNவ் உங்களுக்கு இது எப்படித் தெரியும்?” என்று கேட்டார். அதற்கு, “உனக்கு எந்த ஊர்? உனது மார்க்கம் என்ன?” என்று அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, அதற்கு அவர் “நீனவாவைச் சேர்ந்த கிறிஸ்துவன் நான்” என்றார். “நல்லவரான யூனுஸ் இப்னு மத்தாவின் ஊரைச் சேர்ந்தவர்தானே?” என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டதற்கு அவர் ஆச்சயத்துடன் “யூனுஸ் இப்னு மத்தாவைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்” என்றார். “அவர் எனது சகோதரர் அவரும் ஓர் இறைத்தூதராக இருந்தார் நானும் இறைத்தூதர் தான்” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறியவுடன், அத்தாஸ் நபி (ஸல்) அவர்களின் தலை, கை மற்றும் கால்களை முத்தமிட்டார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரபிஆவின் மகன்களில் ஒருவர் மற்றவரிடம் “இதோ உனது அடிமையை அவர் குழப்பிவிட்டார்” என்று கூறினான். அத்தாஸ் திரும்பி வந்தவுடன் “உனக்கு என்ன கேடு நேர்ந்தது?” என்று அவ்விருவரும் இடித்துரைத்தனர். அதற்கு அத்தாஸ், “எனது எஜமானர்களே! இவரை விடச் சிறந்த எவரும் இப்பூமியில் இல்லை. இவர் எனக்கு ஒரு விஷயத்தை மிக உறுதியாகக் கூறினார். அதனை இறைத்தூதரைத் தவிர வேறெவரும் அறிந்திருக்க முடியாது” என்றார். அதற்கு அவ்விருவரும் “அத்தாஸே! உனக்கென்ன கேடு. இவர் உம்மை உமது மார்க்கத்திலிருந்து திருப்பிவிடாமல் இருக்கட்டும். உமது மார்க்கம்தான் இவன் மார்க்கத்தைவிட சிறந்தது” என்று கூறினர். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோட்டத்திலிருந்து வெளியேறி மிகவும் கவலையுடன் உள்ளம் உடைந்தவர்களாக மக்கா நோக்கி திரும்பும் வழியில் ‘கர்னுல் மனாஜில்’ என்ற இடத்தை அடைந்த போது அல்லாஹ் அவர்களிடம் ஜிப்ரீலையும், (மலைகளின் வானவர்) மலக்குல் ஜிபாலையும் அனுப்பினான். மலக்குல் ஜிபால் தாயிஃப்வாசிகளாகிய இம்மக்களை இரு மலைகளையும் ஒன்று சேர்த்து நசுக்கி அழித்துவிடவா”? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
ஆயிஷா (ரழி) இச்சம்பவத்தின் விவரத்தைக் கூறுகின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் “உஹுத் போரைவிடக் கடுமையான நாள் எதுவும் உங்களது வாழ்க்கையில் வந்துள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு “உனது கூட்டத்தாரின் மூலம் நான் பல துன்பங்களைச் சந்தித்துள்ளேன். அவற்றில் நான் சந்தித்த துன்பங்களில் மிகக் கடுமையானது ‘யவ்முல் அகபா’ என்ற தினத்தில் எனக்கு ஏற்பட்ட வேதனையே ஆகும். நான் அப்து யாலிலின் மகனிடம் என்னை அறிமுகப்படுத்தினேன். ஆனால், அவன் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் கவலையுடன் திரும்ப மக்காவை நோக்கி பயணமாகி ‘கர்னுல் மனாஜில்’ என்ற பெயருள்ள ‘கர்னு ஸஆலிப்’ என்ற இடத்தில் வந்து தங்கிய போதுதான் எனக்கு முழுமையான நினைவே திரும்பியது. நான் தலையைத் தூக்கிப் பார்த்தபோது என் தலைக்கு மேல் ஒரு மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அந்த மேகத்தில் ஜிப்ரீல் இருந்தார். அவர் என்னை அழைத்து ‘நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் உங்களது கூட்டத்தாரிடம் பேசியதையும் அவர்கள் உங்களுக்குக் கூறிய பதிலையும் கேட்டுக் கொண்டான். இம்மக்கள் விஷயத்தில் நீங்கள் விரும்பியதை மலக்குல் ஜிபாலுக்கு ஏவ வேண்டும் என்பதற்காக அவரை உங்களிடம் அனுப்பி இருக்கின்றான்’ என்று கூறினார். மலக்குல் ஜிபால் என்னை அழைத்து எனக்கு ஸலாம் கூறி “முஹம்மதே! ஜிப்ரீல் கூறியவாறே அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் இவர்களை இரண்டு மலைகளையும் கொண்டு நசுக்கி விடுகிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) “அதை ஒருக்காலும் நான் விரும்ப மாட்டேன். மாறாக, அவர்களிலிருந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு இணை வைக்காதவர்களை அவன் உருவாக்குவான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இந்த பதிலின் மூலம் நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மை தெரியவருவதுடன், அவர்கள் எத்தகைய மகத்தான பண்புள்ளவர்கள் என்பதையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
ஏழு வானங்களுக்கு மேலிருந்து அல்லாஹ் அருளிய இம்மறைவான உதவியைப் பார்த்து நபி (ஸல்) அவர்களின் மனம் மிகவும் நிம்மதியடைந்தது. தொடர்ந்து மக்காவை நோக்கி பயணமாகும்போது ‘நக்லா’ என்ற பள்ளத்தாக்கில் சில நாட்கள் தங்கினார்கள். வாதி நக்லாவில் தங்குவதற்கு வசதியான தண்ணீரும் செழிப்புமுள்ள அஸ்ஸய்லுல் கபீர், ஜைமா என்ற இரு இடங்கள் இருந்தன. இவ்விரு இடங்களில் குறிப்பாக எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கினார்கள் என்பதற்கு சரியான ஆதாரம் நமக்குக் கிடைக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் இவ்விடத்தில் தங்கியிருக்கும்போது சில ஜின்களை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தான். (ஸஹீஹுல் புகாரி)
இந்த ஜின்களைப் பற்றி குர்ஆனில் இரண்டு இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஒன்று ‘அஹ்காஃப்’ எனும் அத்தியாயத்தில்:
“(நபியே!) இந்தக் குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உங்களிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) “நீங்கள் வாய்பொத்தி (இதனைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்” என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.
(அவர்களை நோக்கி) “எங்களுடைய இனத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கின்றது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகின்றது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகின்றது. எங்களுடைய இனத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுடைய பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுவான்.” (அல்குர்ஆன் 46:29, 30, 31)
மற்றொன்று ‘ஜின்’ எனும் அத்தியாயத்தில்:
“(நபியே!) நீங்கள் கூறுங்கள்: “வஹி மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று(த் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி) “நிச்சயமாக, நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம் அது நேரான வழியை அறிவிக்கின்றது. ஆகவே, அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் இணையாக்க மாட்டோம்...” (அல்குர்ஆன் 72:1-15)
ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து குர்ஆனை கேட்டுச் சென்றன. இதனை இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ் அறிவித்தப் பிறகு தான் நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள். அதற்கு முன்பு இது அவர்களுக்குத் தெரியாது. இதுதான் ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்த முதல் முறையாகும் என்பது நமக்குத் தெரியவருகிறது. மேலும், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் பலமுறை வந்திருக்கிறார்கள் என்பதும் வேறு சில அறிவிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.
இது உண்மையில் அல்லாஹ்வின் மறைவான பொக்கிஷத்திலிருந்து அருளப்பட்ட மகத்தான உதவியாகும். தன்னைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ள முடியாத அவனுடைய படையைக் கொண்டு, அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு உதவி செய்தான். மேலும், இது தொடர்பாக இறங்கிய வசனங்களில் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி வெற்றியடையும் என்ற நற்செய்திகளும் இருந்தன. இப்பிரபஞ்சத்தின் எந்தவொரு சக்தியும் அவர்களின் அழைப்புப் பணி வெற்றியடைவதை தடுத்திட முடியாது என்று அவ்வசனங்கள் மிக உறுதியாக அறிவித்தன.
“எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடியபோதிலும் அல்லாஹ்வை தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வை அன்றி, பாதுகாப்பவர் அவனுக்கு ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இத்தகையவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருப்பர்”
“நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்துகொண்டோம்.” (அல்குர்ஆன் 72:12)
அல்லாஹ்வின் இந்த மாபெரும் உதவியாலும் மகத்தான நற்செய்திகளாலும் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்திலிருந்து கவலை நீங்கியது துக்கம் அகன்றது மக்காவிற்கு திரும்பச் சென்று இஸ்லாமைப் பரப்புவதிலும் நிரந்தரமான அல்லாஹ்வின் தூதுத்துவத்தை எடுத்துரைப்பதிலும் தனது முந்திய திட்டத்தையே புதிய உற்சாகத்துடனும், துணிவுடனும், வீரத்துடனும் செய்ய வேண்டும் என்று உறுதிகொண்டார்கள்.
அப்பொழுது ஜைது இப்னு ஹாஸா “நபியே! குறைஷிகள் உங்களை மக்காவிலிருந்து வெளியேற்றி இருக்க, நீங்கள் இப்பொழுது எப்படி அங்கு செல்ல முடியும்?” என்றார். அதற்கு “ஜைதே! நீங்கள் பார்க்கும் இந்த துன்பங்களுக்கு ஒரு முடிவையும் நல்ல மகிழ்ச்சி தரும் மாற்றத்தையும் நிச்சயம் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான். நிச்சயமாக, அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கு உதவி செய்வான் அவனது நபிக்கு வெற்றியைத் தருவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிறகு தனது பயணத்தைத் தொடர்ந்து மக்கா அருகே வந்தவுடன் “ரா குகையில் தங்கிக் கொண்டு குஜாஆ கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அக்னஸ் இப்னு ஷுரைக்கிடம் அவர் தனக்கு அடைக்கலம் தர வேண்டும்” எனக் கூறி தூது அனுப்பினார்கள். ஆனால், “தான் மக்காவாசிகளுடன் நட்பு கொண்டவராக இருப்பதால், அவர்கள் விரும்பாதவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது” என்று அக்னஸ் கூறிவிட்டார். பிறகு சுஹைல் இப்னு அயிடம் நபி (ஸல்) அவர்கள் தூதனுப்பினார்கள். அதற்கு “தான், ஆமிர் கிளையைச் சேர்ந்தவன். எனவே, கஅப் கிளையாருக்கு எதிராக என்னால் அடைக்கலம் கொடுக்க முடியாது” என்று அவர் மறுத்துவிட்டார்
அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் முத்இமிடம் தூது அனுப்பினார்கள். முத்இம் “ஆம்! நான் அடைக்கலம் தருவேன்” என்று கூறி, தானும் ஆயுதங்களை அணிந்துகொண்டு தனது ஆண் பிள்ளைகள் மற்றும் கூட்டத்தாரையும் ஆயுதம் அணியச் செய்து, கஅபாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நான்கு மூலைகளிலும் அவர்களை நிற்கவைத்து, “நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன். அதனால்தான் உங்களை இங்கு அழைத்து வந்தேன்” என்று அவர்களுக்கு அறிவித்தார்.
பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துவர ஒருவரை அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் ஜைது இப்னு ஹாஸாவுடன் மஸ்ஜிதுல் ஹராமிற்கு வந்தார்கள். முத்இம் தனது ஒட்டகத்தின் மீதேறி அமர்ந்துகொண்டு “குறைஷிகளே! நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன். உங்களில் எவரும் முஹம்மதை பழிக்கக் கூடாது” என்று அறிவிப்புச் செய்தார். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்டு, கஅபாவை வலம் வந்து, இரண்டு ரகஅத்துகள் தொழுதுவிட்டு தனது வீட்டிற்குச் சென்றார்கள். அது வரையிலும் முத்இமும் அவரது மக்களும் ஆயுதமேந்தி பாதுகாப்பிற்காக நபி (ஸல்) அவர்களைச் சுற்றி நின்று இருந்தனர்.
அபூஜஹ்ல் “நீ அடைக்கலம் (மட்டும்) அளித்துள்ளாயா? அல்லது முஸ்லிமாகி விட்டாயா?” என்று முத்இமிடம் கேட்டான். அதற்கு “இல்லை. நான் அடைக்கலம்தான் அளித்துள்ளேன்” என்று முத்இம் கூறவே, “சரி! நீ அடைக்கலம் கொடுத்தவருக்கு நாங்களும் அடைக்கலம் கொடுக்கிறோம்” என்று கூறினான். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
முத்இமின் இந்த செயலை நபி (ஸல்) நினைவு வைத்திருந்தார்கள். “பத்ர் போரில் எதிரிகள் பலர் கைதிகளாக்கப்பட்டபோது, முத்இம் உயிருடன் இருந்து, இந்த துர்நாற்றம் பிடித்தவர்களின் உரிமைக்காக என்னிடம் பேசியிருந்தால் அவருக்காக இவர்கள் அனைவரையுமே நான் விடுதலை செய்திருப்பேன்”
இமாம் ஜுஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் பல கோத்திரத்தாரிடம் சென்று இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் பெயர்களாவன:
ஆமிர் இப்னு ஸஃஸஆ கிளையினர்: முஹாப்னு கஸ்ஃபஹ், ஃபஜாரா, கஸ்ஸான், முர்ரா, ஹனீஃபா, ஸுலைம், அப்ஸ், பனூ நஸ்ர், பனூ பக்கா, கிந்தா, கல்ப், ஹாரிஸ் இப்னு கஅப், உத்ரா, ஹழாமா ஆகிய கோத்திரத்தாருக்கு ஓரிறைக் கொள்கையை இதமாக எடுத்துரைத்தும் அவர்களில் எவரும் அழைப்பை ஏற்கவில்லை. (இப்னு ஸஅத்)
மேற்கண்ட அனைத்து கோத்திரத்தாரையும் ஒரே ஆண்டுக்குள் அல்லது ஒரே ஹஜ் காலத்திலேயே அழைத்திடவில்லை. நபித்துவத்தின் நான்காம் ஆண்டு மெல்ல மெல்லத் தொடங்கிய இந்த பகிரங்க அழைப்புப் பணி நபி (ஸல்) அவர்கள் மதீனா செல்லும்வரை நீடித்தது. எனவே, இன்ன கோத்திரத்தாரை இன்ன ஆண்டுதான் அழைத்தார்கள் என்று குறிப்பிட்டுக் கூறிட முடியாது. என்றாலும் பெரும்பாலான கோத்திரத்தாரை நபித்துவத்தின் பத்தாம் ஆண்டுதான் அழைத்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் அழைப்பை இந்த கோத்திரத்தார் எவ்வாறு எடுத்துக் கொண்டனர் என்பதைக் குறித்து இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதை சுருக்கமாகக் காண்போம்:
1) ‘கல்ப்’ கிளையினர்: நபி (ஸல்) அவர்கள் இவர்களின் உட்பிவான அப்துல்லாஹ் உடைய குடும்பத்தாரை, “அப்துல்லாஹ்வின் மக்களே! அல்லாஹ் உங்கள் தந்தைக்கு எத்துணை அழகிய பெயரை வழங்கியிருக்கின்றான்” என்றெல்லாம் நயமாக கூறி அழைத்துப் பார்த்தார்கள். எதற்கும் அவர்கள் அசையவில்லை.
2) ‘ஹனீஃபா’ கிளையினர்: இம்மக்களின் வீடு வீடாகச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அழைத்துப் பார்த்தார்கள். ஆனால், அவர்கள் அதை ஏற்காதது மட்டுமின்றி, நபி (ஸல்) அவர்களிடம் முரட்டுத்தனமாகவும் நடந்துகொண்டனர்.
3) ‘ஆமிர் இப்னு ஸஃஸஆ’ கிளையினர்: நபி (ஸல்) அவர்கள் இவர்களிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். அவர்களில் பைஹரா இப்னு ஃபிராஸ் என்பவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் இந்த குறைஷி வாலிபரை பிடித்து என்னிடம் வைத்துக் கொண்டால் இவர் மூலம் முழு அரபியர்களையும் நான் வெற்றி கொள்வேன்” என்று கூறினார். மேலும், நபி (ஸல்) அவர்களை சந்தித்து, “உங்களது மார்க்கத்தில் சேர்ந்து நாங்கள் உங்களிடம் ஒப்பந்தம் செய்து கொடுக்கிறோம். பிறகு உங்களுக்கு மாறு செய்யும் சமுதாயத்திற்கு எதிராக அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தந்தால், உங்களுடைய மறைவுக்குப் பின் எங்களுக்கு அதிகாரம் கிடைக்குமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியன. அவன் விரும்பிய கூட்டத்திற்கு அதைக் கொடுப்பான்” என்று பதிலளித்தார்கள். அதற்கு பைஹரா “உங்கள் முன்னிலையில் அரபியர்களுக்கு எதிராக நாங்கள் போரிட்டு அவர்களின் அம்புகளுக்கு எங்கள் கழுத்துக்களை இலக்காக்கிக் கொள்ள, அல்லாஹ் உங்களுக்கு வெற்றி கொடுத்தப்பின் நிர்வாக அதிகாரம் எங்களுக்கு இல்லாமல் மற்றவர்களுக்கா? இதெப்படி நேர்மையாகும்? அப்படிப்பட்ட உங்கள் மார்க்கம் எங்களுக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டான். அதற்குப்பின் அந்த கிளையினரும் இஸ்லாமை ஏற்க மறுத்துவிட்டனர். (இப்னு ஹிஷாம்)
ஆமிர் கிளையினர் ஹஜ்ஜை முடித்துக்கொண்டு தங்களது ஊருக்குத் திரும்பியபோது ஹஜ்ஜில் கலந்துகொள்ள இயலாத ஒரு முதியவரிடம் சென்று, “அப்துல் முத்தலிபின் கிளையிலுள்ள குறைஷி வாலிபர் ஒருவர் எங்களிடம் தன்னை ‘நபி’ என்று அறிமுகப்படுத்தினார். அவருக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் அவரை நமது ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று எங்களிடம் கூறினார்” என்றார்கள். இதைக் கேட்ட அந்த வயோதிகர் “கைவிட்டுப் போய்விட்டதே! அவரை விட்டுவிட்டீர்களே! எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் பொய் கூறமாட்டார்கள். நிச்சயம் அவர் கூறியது உண்மைதான். உங்களது அறிவு உங்களை விட்டு எங்கே போனது?” என்று கடிந்துரைத்து மிகுந்த கைசேதத்தை வெளிப்படுத்தினார்.
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமை பல குலத்தாருக்கும் கோத்திரத்தாருக்கும் குழுக்களுக்கும் அறிமுகப்படுத்தியது போன்றே தனி நபர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்கள். அவர்களில் சிலரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் நல்ல பதில்களை பெற்றார்கள். ஹஜ் முடிந்து சில காலங்களிலேயே அவர்களில் பலர் இஸ்லாமைத் தழுவினர். அவர்களில் சிலரை இங்கு பார்ப்போம்:
நபித்துவத்தின் பதினோறாவது ஆண்டு கி.பி. 620 ஜூலை ஹஜ்ஜுடைய காலத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணி சில புதிய நல்ல இளஞ்செடிகளைக் கண்டது. அந்த இளஞ்செடிகள் வெகு விரைவில் நிழல் தரும் அடர்த்தியான மரங்களாக மாறின. அதன் நிழல்களின் கீழ் முஸ்லிம்கள் அநியாயம் மற்றும் கொடுமைகளின் அனலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இவ்வாறே சிறிது சிறிதாக வரலாற்றுப் பாட்டை மாறிக்கொண்டே சென்றது.
மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களை பொய்ப்பித்து வந்ததாலும் அல்லாஹ்வின் வழியிலிருந்து மக்களைத் தடுத்து வந்ததாலும் நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பகலில் சந்திக்காமல் இரவில் சந்தித்து வந்தார்கள்.
ஓரவு அபூபக்ர், அலீ (ரழி) ஆகியோருடன் மக்களை சந்திப்பதற்காக வெளியே சென்ற நபி (ஸல்) அவர்கள் துஹல், ஷைபான் ஆகியோர் தங்கியிருக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களிடத்தில் இஸ்லாமைப் பற்றி பேசினார்கள். அப்போது அபூபக்ருக்கும் துஹல் கிளையைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் மிக அழகிய உரையாடலும், அற்புதமான கேள்வி பதில்களும் நடைபெற்றன. ஷைபான் கிளையினர் நல்ல ஆதரவான பதில்களை கூறியபோதும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. (ஸீரத்துர் ரஸூல்)
அடுத்து நபி (ஸல்) மினாவில் ‘அகபா’ என்ற இடத்திற்கு சென்றபோது அங்கு சில ஆண்களின் பேச்சுக் குரல் கேட்டவுடன் அவர்களிடம் சென்று பேச விரும்பினார்கள். அவர்கள் கஸ்ரஜ் கிளையாரைச் சேர்ந்த மதீனாவில் உள்ள ஆறு இளைஞர்களாவர்.
அவர்கள்,
1) அஸ்அது இப்னு ஜுராரா (நஜ்ஜார் குடும்பம்)
2) அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (நஜ்ஜார் குடும்பம்)
3) ராஃபிஃ இப்னு மாலிக் (ஜுரைக் குடும்பம்)
4) குத்பா இப்னு ஆமிர் இப்னு ஹதீதா (ஸலமா குடும்பம்)
5) உக்பா இப்னு ஆமிர் இப்னு நாபி (ஹராம் இப்னு கஅப் குடும்பம்)
6) ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆப் (உபைத் இப்னு கனம் குடும்பம்)
மதீனாவாசிகளுக்கும் யூதர்களுக்கும் சண்டை மூளும்போது “கடைசி காலத்தில் ஒரு நபி வருவார். அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம்” என்று அந்த யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள். இவ்வாறு யூதர்கள் கூறுவதை பலமுறை மதீனாவாசிகள் கேட்டிருந்தனர். எனவே, இப்போது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தியபோது அவர்களை அறிந்து கொள்வது மதீனாவாசிகளுக்கு மிக எளிதாக இருந்தது. (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்கள் அந்த வாலிபர்களிடம் சென்று “நீங்கள் யார்?” என்று வினவ அவர்கள் “நாங்கள் கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “யூதர்களின் நண்பர்களா?” என்று கேட்க, அவர்கள் “ஆம்!” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் “என்னுடன் சற்று அமரமாட்டீர்களா? நான் உங்களிடம் பேச வேண்டும்” என்று கூற அவர்கள் “சரி! பேசலாம்” என்று கூறி, நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்தார்கள். அவர்களுக்கு இஸ்லாமின் உண்மையையும் அதன் அழைப்பையும் விரிவாக எடுத்துக் கூறி, அல்லாஹ்வின் பக்கம் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆனையும் ஓதிக் காண்பித்தார்கள். அதற்கு அவர்களில் சிலர் சிலரிடம் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த நபியை வைத்தே யூதர்கள் உங்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தனர். எனவே, அவர்களுக்கு முன்னதாக இவன் அழைப்பை ஏற்று நீங்கள் முஸ்லிமாகி விடுங்கள்” என்று கூறினார்கள்.
இஸ்லாமைத் தழுவிய இந்த வாலிபர்கள் மதீனாவின் அறிஞர்களாக விளங்கினர். பொதுவாக மதீனாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போர்களால் மதீனாவாசிகள் மிகவும் நலிந்து போயிருந்தனர். நபி (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று மனங்கள் ஒன்றிணைந்தால் ஒருக்கால் இப்போர் முடிவுக்கு வரலாம் என்று அவர்கள் ஆசைப்பட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் “எங்களது கூட்டங்களில் இருக்கும் பகைமை மற்றும் தீமையைப் போன்று வேறு எந்தக் கூட்டத்திலும் இருக்காது. அல்லாஹ் உங்கள் மூலமாக அவர்களை ஒன்று சேர்ப்பான். நாங்கள் அவர்களிடம் சென்று உங்கள் மார்க்கத்திற்கு அவர்களை அழைப்போம். நாங்கள் ஏற்றுக் கொண்ட உங்கள் மார்க்கத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவோம். அல்லாஹ் உங்கள் முன்னிலையில் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து விட்டால் அவர்களிடம் உங்களைவிட கண்ணியத்திற்குரியவர் எவரும் இருக்க முடியாது” என்றனர்.
இவர்கள் மதீனாவுக்கு இஸ்லாமிய அழைப்பை எடுத்துச் சென்றார்கள். அங்கு மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபி (ஸல்) அவர்கள் பற்றியே பேசப்பட்டது. (இப்னு ஹிஷாம்)
(இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மதீனாவாசிகளை அன்சாரிகள் (உதவியாளர்கள், ஆதரவாளர்கள்) என்று குர்ஆனிலும் நபிமொழியிலும் கூறப்படுகிறது.)
ஆயிஷாவை மணமுடித்தல்
மிஃராஜ்
மேற்கூறிய சூழ்நிலையில் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒருபுறம் வெற்றி, மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்று கொண்டிருந்தது. நம்பிக்கை நட்சத்திரங்கள் வெகு தூரத்தில் மின்னத் துவங்கின. அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயணம் நடைபெற்றது. இதையே இஸ்லாமிய வரலாற்றில் “மிஃராஜ்” என அறியப்படுகிறது.
மிஃராஜின் நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பதில் பல கருத்துகள் உள்ளன.
1) நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் தப்ரி ஆமோதிக்கிறார்கள்)
2) நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் நவவியும் இமாம் குர்துபீயும் உறுதிப்படுத்துகிறார்கள்)
3) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27வது இரவில் நடைபெற்றது.
4) ஹிஜ்ராவிற்கு 16 மாதங்களுக்கு முன், அதாவது நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்றது.
5) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டு, இரண்டரை மாதங்களுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.
6) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் நடைபெற்றது.
இந்த கருத்துகளில் முதல் மூன்று கருத்துகள் சரியல்ல. ஏனெனில், அன்னை கதீஜா (ரழி) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில்தான் இறந்தார்கள். அன்னார் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன் மரணித்து விட்டார்கள். தொழுகை மிஃராஜில்தான் கடமையாக்கப்பட்டது. ஆகவே, மேற்கூறப்பட்ட முதல் மூன்று கருத்துகள் சரியானவையாக இருக்க முடியாது. அடுத்த மூன்று கருத்துகளில் எந்த கருத்து மிக ஏற்றமானது என்பதற்குரிய சரியான சான்றுகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அத்தியாயம் “இஸ்ரா”வின் கருத்துகளை நன்கு ஆய்வு செய்யும்போது ‘மிஃராஜ்’ சம்பவம் மக்கா வாழ்க்கையின் மிக இறுதியில்தான் நடைபெற்றது என்பது தெரியவருகிறது.
இந்நிகழ்ச்சியின் விளக்கங்களை ஹதீஸ் (நபிமொழி) கலையின் வல்லுனர்கள் விரிவாகக் கூறியிருப்பதை இங்கு நாம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்:
இப்னுல் கய்” (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை “புராக்” என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். ‘புராக்’ எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.
பிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல்க தவைத் திறக்கக் கோரவே அவர்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார்கள். அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில் நல்லோர்களின் உயிர்களை நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பித்தான். அவ்வாறே கெட்டவர்களின் உயிர்களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான். பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.
அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி வரவேற்றார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார்கள். “நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவன் சமுதாயத்தில் சொர்க்கம் செல்பவர்கள் எனது உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு இப்றாஹீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
பிறகு ‘ஸித்ரதுல் முன்தஹா“”விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பழங்கள் ஹஜர் நாட்டு பானைகளைப் போன்றும், அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன. பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும், பிரகாசமும், பல நிறங்களும் சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது. அல்லாஹ்வின் படைப்பினங்களில் எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து பைத்துல் மஃமூருக்கும்” அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார்கள். ஒருமுறை நுழைந்தவர்கள் மீண்டும் அங்கு வருவதில்லை.
பிறகு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர்க்கத்தின் மண் கஸ்தூயாக இருந்தது. பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார்கள்.
பிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார்கள். (சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர்கள் நெருங்கினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குப் பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கினான்.
அவர்கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர்களை சந்தித்தார்கள். மூஸா (அலை) “தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்” என்று கேட்க நபி (ஸல்) “ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்” என்று கூறினார்கள். மூஸா (அலை) “நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார்த்தார்கள். ஜிப்ரீல் “நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார்கள். அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக் குறைத்தான்.
திரும்பும்போது மூஸா (அலை) அவர்களைச் சந்திக்கவே அவர்கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற, நபி (ஸல்), அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான். மூஸா (ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்) அவர்களுமோ “நான் எனது இறைவனிடம் திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன். என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்று விடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து “நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு இலகுவாகும் ஆக்கிவிட்டீர்கள்” என்று கூறினான். (ஜாதுல் மஆது)
உதவுபவர்களாக திகழ்ந்தார்கள்.மக்காவிலுள்ள
எல்லோருக்குமே பிடித்த சிறுவராக
விளங்கினார்கள்.
இறைத்தூதராகுதல் மற்றும் அழைப்பு பணி
மக்கா வாழ்க்கை
நபி (ஸல்) அவர்களுக்கு இறைத்தூதர் எனும் கௌரவம் அருளப்பட்டதற்குப் பிறகுள்ள வாழ்க்கையை இரண்டு வகைப்படுத்தலாம். அவை ஒன்றுக்கொன்று தன்மையால் மாறுபடுகிறது.
1. மக்காவில் வாழ்ந்த காலம். இது ஏறத்தாழ 13 ஆண்டுகள்.
2. மதீனாவில் வாழ்ந்த காலம். இது முழுமையாக 10 ஆண்டுகள்.
இவ்விரு வாழ்க்கையும் மாறுபட்ட பல நிலைகளைக் கொண்டிருக்கிறது. அவை ஒவ்வொன்றுக்கும் பல தனித்தன்மைகள் உண்டு. நபி (ஸல்) அழைப்புப் பணியில் கடந்து வந்த பாதைகளை ஆழ்ந்து கவனிக்கும்போது இதனை நாம் அறிகிறோம்.
மக்கா வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1) மறைமுக அழைப்பு: இது மூன்று ஆண்டுகள் வரை நீடித்தது.
2) மக்காவாசிகளுக்கு பகிரங்க அழைப்பு: இது நான்காம் ஆண்டிலிருந்து ஹிஜ்ரத்” வரை தொடர்ந்தது.
3) மக்காவுக்கு வெளியே அழைப்புப் பணி: இது பத்தாம் ஆண்டின் இறுதியிலிருந்து நபி (ஸல்) அவர்களின் இறுதிக்காலம் வரைத் தொடர்ந்தது.
இவற்றைச் சுருக்கமாக பார்த்துவிட்டு மதீனா வாழ்க்கை நிலைகளை பின்னர் காண்போம்.
நபித்துவ நிழலில்
ஹிரா குகையில்
நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயது நெருங்கியது. அவர்களது ஆழிய சிந்தனை, தனிமையை விரும்பியது. சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நூர் மலையின் ஹிரா குகைக்குச் செல்வார்கள். அக்குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது. ரமழான் மாதத்தில் அங்கு தங்கி வணக்க வழிபாடுகளிலும், இப்புவியையும் அதைத் தாண்டிய பிரபஞ்சத்தையும் இயக்கும் அபார சக்தியைப்பற்றி சிந்திப்பதிலும் ஈடுபடுவார்கள். சமுதாயம் கொண்டிருந்த இணைவைக்கும் இழிவான கொள்கையையும், பலவீனமான அதன் கற்பனைகளையும் அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் மனதிருப்தியுடன் வாழ்க்கையைத் தொடர தெளிவான, நடுநிலையான வாழ்க்கைப் பாதையும் அவர்களுக்கு முன் இருக்கவில்லை.
தனிமையின் மீதான அவர்களது விருப்பம் அல்லாஹ்வின் ஏற்பாடு என்று சொல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதற்கு முன் உலக அலுவல்களில் ஈடுபட்டு வந்தார்கள்; வியாபாரம் செய்து வந்தார்கள். இப்போது அவை அனைத்தையும் விட்டு தனிமையை நாடுகிறார்கள். ஏனெனில், மாபெரும் பொறுப்பைச் சுமக்க அவர்கள் தயாராக வேண்டும்; உலக வரலாற்றை மாற்றி மக்களுக்கு நேரிய பாதையைக் காட்ட ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு நபித்துவம் வழங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனிமையின் மீதான விருப்பத்தை அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்தினான். ஆக மாதத்தின் பெரும் பகுதியை நபி (ஸல்) அவர்கள் தனிமையில் கழித்து வந்தார்கள். தனிமையை விசாலமான மனஅமைதியுடன் கழித்தது மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்தை இயக்கி வரும் மறைபொருள் பற்றி ஆழமாக சிந்தித்தார்கள். ஆம்! அல்லாஹ்வின் நாட்டப்படி அம்மறைபொருளுடன் தொடர்பு கொள்ள இதோ நேரம் நெருங்கிவிட்டது. (இது குறித்து மேல் விவரங்களை ஸஹீஹுல் புகாரி, தாரீக் இப்னு ஹிஷாம் மற்றும் வரலாற்று நூல்களில் காணலாம். முதன்முதலாக அப்துல் முத்தலிப் ஹிரா குகையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார். ரமழானில் அங்கு சென்று தங்குவார். ஏழை எளியோருக்கு உணவளிப்பார். (இப்னு கஸீர்)
ஜிப்ரீல் வருகை
பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயது நிறைவானபோது (பல நபிமார்களுக்கு நாற்பதாவது வயதில்தான் நபித்துவம் (நுபுவ்வத்) அருளப்பட்டது என்று சொல்லப்படுகிறது), நபித்துவ அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.
அவற்றில் சில: மக்காவிலிருந்த கல் ஒன்று அவர்களுக்கு ஸலாம் கூறி வந்தது உண்மையான கனவுகளைக் கண்டார்கள்; அவை அதிகாலையின் விடியலைப் போன்று நிதர்சனமாக நடந்து விடும்; இந்த நிலையில் ஆறு மாதங்கள் கழிந்தன நபித்துவ பணியாற்றியதோ 23 ஆண்டுகள், உண்மைக் கனவுகள் நபித்துவத்தின் 46 பங்குகளில் ஒரு பங்காகும்.
அது ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமழான் மாதம். அல்லாஹ் அகிலத்தாருக்கு தனது கருணையைப் பொழிய நாடினான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவத்தை வழங்கி சிறப்பிப்பதற்காக மேன்மைமிகு குர்ஆனின் சில வசனங்களுடன் வானவர் ஜிப்ரீலை அவர்களிடம் அனுப்பி வைக்கிறான்.
தெளிவான சான்றுகளை ஆராயும்போது அது ரமழான் 21வது பிறை திங்கட்கிழமை என்ற முடிவுக்கு வரலாம். (கி.பி. 610 ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி) அந்நாளில் அவர்களது வயது பிறை கணக்குப்படி மிகச் சரியாக 40 ஆண்டுகள், 6 மாதங்கள், 12 நாள்களாகும். சூரிய கணக்குப்படி 39 ஆண்டுகள், 3 மாதங்கள் 20 நாள்களாகும்.
இறை நிராகரிப்பு, வழிகேடு போன்ற அனைத்து இருள்களையும் அழித்து வாழ்க்கைக்கு ஒளிமிக்க பாதையை அமைத்துத் தந்த நபித்துவத்தின் இந்த முக்கிய நிகழ்ச்சியைப் பற்றி அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறக் கேட்போம்:
“நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹி (இறைச்செய்தி) தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளாகவே ஆரம்பத்தில் இருந்தது. அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அதிகாலையின் விடியலைப் போன்று அவை தெளிவாக அப்படியே நடக்கும். பின்னர் தனிமையை விரும்பினார்கள். ஹிரா குகையில் தனித்திருந்து பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். பிறகு தனது குடும்பத்தாரிடம் திரும்பி வருவார்கள். இதற்காக உணவையும் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். உணவு தீர்ந்தவுடன் கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து மீண்டும் உணவை எடுத்துச் செல்வார்கள். இந்த நிலையில்தான் ஹிரா குகையில் அவர்களுக்கு வஹி வந்தது. வானவர் நபியவர்களிடம் வந்து, “ஓதுவீராக!” என்றார். அதற்கவர்கள் “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்நிலையைப் பற்றி பின்வருமாறு விவரித்தார்கள்: பிறகு அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவுக்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். மீண்டும் என்னை இறுகக் கட்டியணைத்துவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்துவிட்டு,
(நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். (நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன்தான் மகா பெரும் கொடையாளி! (அல்குர்ஆன் 96 : 1-6) என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்.
பிறகு அந்த வசனங்களுடன் இதயம் நடுங்க (தமது துணைவியார்) கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்றார்கள். கதீஜா (ரழி) நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜாவிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் அஞ்சுவதாகக் கூறினார்கள். அதற்கு கதீஜா (ரழி) “அவ்வாறு கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளை சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (சிக்குண்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்” என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன் பிறந்தவரான ‘நவ்ஃபல்’ என்பவன் மகன் ‘வரகா“விடம் அழைத்துச் சென்றார்கள்.
வரகா கிருஸ்துவராக இருந்தார். அவர் இப்ரானி (ஹிப்ரூ) மொழியை அறிந்தவர்; இன்ஜீல் வேதத்தைக் கற்றவர்; வயது முதிர்ந்தவர்; கண்பார்வையற்றவர்; அவரிடம் கதீஜா (ரழி) “என் சகோதரரே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்!” என்றார். “என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்!” என வரகா கேட்க, நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். அதற்கு வரகா “இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார்” என்று கூறிவிட்டு, உங்களது சமூகத்தார் உங்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருக்க வேண்டுமே என்று அங்கலாய்த்தார். நபி (ஸல்) அவர்கள் “மக்கள் என்னையா வெளியேற்றுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர் “ஆம்! நீங்கள் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீங்கள் வெளியேற்றப்படும்) அந்நாளில் நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு பலமான உதவி செய்வேன்” என்று கூறினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் வரகா குறுகிய காலத்தில் இறந்துவிட்டார். இத்துடன் வஹி சிறிது காலம் நின்றுவிட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இறைச் செய்தி தாமதம்!
இது குறித்த பல கருத்துகள் நிலவினாலும் அந்த இடைவெளிக் காலம் சில நாட்கள் என்பதே உறுதியான கருத்தாகும். இதையே இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வாயிலாக இப்னு ஸஅது (ரஹ்) அறிவிக்கிறார்கள். வஹியின் இடைவெளிக்காலம் மூன்று அல்லது இரண்டரை ஆண்டு என்று கூறுவது சரியானதல்ல.
அறிஞர்களின் பல்வேறு கருத்துகளை ஆய்வு செய்ததில் எனக்கு ஒன்று புலப்பட்டது. அதாவது, நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமழான் மாதத்தில் மட்டுமே ஹிராவில் தனித்திருந்துவிட்டு ஷவ்வால் முதல் பிறையின் காலையில் வெளியேறி வீட்டுக்கு வருவார்கள். இவ்வாறு நபித்துவத்துக்கு முன் மூன்று ஆண்டுகள் தங்கினார்கள். அந்த மூன்றாவது ஆண்டின் ரமழானில் நபித்துவம் அருளப்பட்டது. புகாரி, முஸ்லிமுடைய ஹதீஸின்படி நபி (ஸல்) அவர்கள் ஹிராவில் தங்கி ரமழானை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது இரண்டாவது வஹி அருளப்பட்டது. இதில் என் கருத்து என்னவென்றால், நபித்துவம் கிடைக்கப் பெற்ற ரமழான் முடிந்த பிறகு ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையில்தான் இரண்டாவது வஹி இறங்கியது. அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் ஹிராவுக்கு செல்லவில்லை. உறுதியான சான்றுகளின்படி ரமழான் பிறை 21 திங்கள் இரவில் முதல் வஹி அருளப்பட்டது. இரண்டாவது வஹி ஷவ்வாலின் முதல் பிறை வியாழன் காலை அருளப்பட்டது. ஆகவே, இக்கருத்தின்படி வஹியின் இடைவெளிக்காலம் 10 நாட்கள் மட்டுமே! இதுவே ரமழானின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பதற்கும் ஷவ்வால் முதல் பிறை பெருநாளாக இருப்பதற்கும் காரணமாக இருக்கலாம். (அல்லாஹ்வே நன்கறிந்தவன்!)
வஹியின் இடைவெளிக் காலத்தில் நபி (ஸல்) அவர்கள் திடுக்கமும் கவலையும் நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள். இதுபற்றி ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது:
இரண்டாவது வஹி வருவதற்கு சிறிது காலதாமதமானது. அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். மலை உச்சியிலிருந்து கீழே குதித்துவிட பலமுறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே குதித்து விடுவதற்காக ஏதேனும் மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் ஜிப்ரீல் (அலை) தோன்றி “முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறுவார்கள். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்களின் பதற்றம் தணிந்து மனம் சாந்தி பெறும். பிறகு (மலை உச்சியிலிருந்து) திரும்பி விடுவார்கள். வஹி வருவது தாமதமாகும் போதெல்லாம் அவ்வாறே செய்யத் துணிவார்கள். அவர்கள் முன் ஜிப்ரீல் (அலை) தோன்றி முன்னர் போலவே கூறுவார்கள்.
மீண்டும் ஜிப்ரீல்
இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களுக்கு அச்சம் நீங்கி வஹியின் மீது ஆர்வம் ஏற்படுத்துவதற்காகவே வஹியின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. அவ்வாறே அச்சம் நீங்கி ஆர்வம் ஏற்பட்டதும் வஹியை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். அல்லாஹ் இரண்டாவது முறையாக வஹியை இறக்கி அவர்களைச் சிறப்பித்தான். (ஃபத்ஹுல் பாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா குகையில் ஒரு மாதம் தங்கியிருந்து பிறகு திரும்பினேன். நான் பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கும்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு வலப்பக்கம் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. இடப்பக்கம் பார்த்தேன், எதையும் நான் காணவில்லை. ஆகவே, என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு நான் ஒன்றைக் கண்டேன். ஹிரா குகையில் என்னிடம் வந்த வானவர் ஜிப்ரீல் (அலை) வானுக்கும் பூமிக்குமிடையே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் கதீஜாவிடம் சென்று “என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்; குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்” என்று கூறினேன். அவர்கள் என்னைப் போர்த்தி குளிர்ந்த நீரை என்மீது ஊற்றினார்கள். அப்போது இவ்வசனங்கள் அருளப்பட்டன.
(வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்! உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5)
இந்த நிகழ்ச்சி தொழுகை கடமையாவதற்கு முன் நடந்தது. இதைத் தொடர்ந்து வஹி வருவது அதிகரித்தது. (ஸஹீஹுல் புகாரி)
இவ்வசனங்கள்தான் நபித்துவத்தின் தொடக்கமாகும். இவற்றில் இருவகையான சட்டங்கள் உள்ளன.
முதலாவது வகை:
“நீங்கள் எழுந்து சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்”
என்ற வசனத்தின் மூலம் இறைத்தூதை எடுத்தியம்ப வேண்டும்; ஏற்காதவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டுமென்று நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வசனத்தின் பொருள்: வழிகேடு, அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவது, அல்லாஹ்வுக்கு இணைவைப்பது ஆகிய குற்றச் செயல்களிலிருந்து இம்மக்கள் விலகவில்லையெனில் அவர்களுக்கு அல்லாஹ்வின் வேதனை உண்டென நபியே! நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள்.
இரண்டாவது வகை: அல்லாஹ்வின் கட்டளைகளை முழுமையாகப் பேணிப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும்; அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்பவர்களுக்கு நீங்கள் அழகிய முன்மாதியாகத் திகழ முடியும் என்று கட்டளையிடப்படுகிறது.
“உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்”
அதாவது அல்லாஹ்வை மட்டுமே மகிமைப்படுத்துங்கள்! அதில் எவரையும் இணையாக்காதீர்கள்.
“உங்களது ஆடைகளை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள்”
அல்லாஹ்வை மகிமைப்படுத்தி அவன் முன் நிற்பவர் அருவருப்பான தோற்றமின்றி அசுத்தமின்றி உடலையும் உடையையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் ஆடையில் தூய்மையை இவ்வளவு வலியுறுத்தும்போது கெட்ட செயல், தீய சிந்தனையிலிருந்து நாம் எவ்வளவு தூய்மை பெற்றிருக்க வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை.
“அசுத்தங்களை வெறுத்திடுங்கள்”
அதாவது, அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு மாறுசெய்வதைத் தவிர்த்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தூரமாகிவிடுங்கள்.
“நீங்கள் பிரதிபலன் தேடியவராக எவருக்கும் உதவி ஒத்தாசை புரியாதீர்கள்”
அதாவது, பிறருக்கு உதவி செய்யும்போது அதற்குச் சமமான அல்லது அதைவிட அதிகமான பலனை எதிர்பார்க்காதீர்கள்.
“உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள்”
நபி (ஸல்) அவர்கள் தங்களது கூட்டத்தாரை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து அவனது தண்டனைகளைக் கூறி எச்சரிக்கை செய்கையில் அவர்களால் துன்பங்கள் நிகழலாம், அவற்றை அல்லாஹ்வுக்காக சகித்துக்கொள்ள வேண்டும் என்று இந்த இறுதி வசனத்தில் உணர்த்தப்படுகிறது.
ஆரம்பமாக அல்லாஹ்வின் அழைப்பு நபி (ஸல்) அவர்களை ஓய்வு உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி, உடலை வருத்திக்கொள்ளவும், அனல் பறக்கும் போருக்கு ஆயத்தமாகவும், எதிர்காலத்தில் சமுதாயப் புரட்சிக்கு ஈடுகொடுக்கவும், எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என ஒரு ராணுவ உத்வேகத்திற்கு நபி (ஸல்) அவர்களை தூண்டுகிறது. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுக! அச்சமூட்டி எச்சரிக்கை செய்க! என அழைப்பது எங்ஙனம் உள்ளது என்றால்... ஓ!... தனக்காக வாழும் ஒரு சுயநலவாதிதானே சாய்வு கட்டிலில் ஓய்வு தேடுவார். தாங்கள் அப்படிப்பட்டவரல்லவே! தாங்கள் உயர்ந்த ஒரு பணிக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளதே! எதிர்காலத்தில் பெரும் சமுதாயச் சுமையை தாங்கள் சுமக்க நேரிடுமே! இந்தப் போர்வை சுகத்திற்காகவா புவியில் பிறந்தீர்கள்? தங்களின் உறக்கம் உசிதமானதா? மன நிம்மதியை உள்ளம் விரும்பலாமா? சுகம் தேடலாமா? கூடாது! கூடாது! கூடவே கூடாது! உங்களை மகத்தான பொறுப்பு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. உம்! எழுங்கள்! உங்களுடைய பாரத்தைத் தாங்கிக் கொள்ளத் தயாராகுங்கள். சிரமத்தையும் தியாகத்தையும் ஏற்றுக்கொள்ள எழுந்து வாருங்கள்! ஓய்வெடுக்க வேண்டிய காலம் ஓடிவிட்டது. இனி கண் துஞ்சாது விழித்து போராடவேண்டும். நீங்கள் அர்ப்பணிப்புக்கு ஆயத்தமாகுங்கள்! தயாராகுங்கள்!
உண்மையில் அல்லாஹ்வின் இந்த வசனம் மிக அச்சுறுத்தலானது. இது நபி (ஸல்) அவர்களை இல்லத்தில் நிம்மதியாக படுத்துறங்குவதிலிருந்து வெளியேற்றி முழு வாழ்க்கையிலும் அழைப்புப் பணியின் சிரமங்களைச் சந்திக்கத் தயார்படுத்தியது.
அல்லாஹ்வின் இக்கட்டளையை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்! அன்று எழுந்தவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக ஓய்வு பெறவேயில்லை. தனக்காகவோ தமது குடும்பத்தினருக்காகவோ இல்லாமல் அல்லாஹ்வினால் ஒப்படைக்கப்பட்ட மாபெரும் பொறுப்பின் சுமையை தனது தோளில் சுமந்து இறையழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள். அவர்கள் சுமந்தது ஏகத்துவப் போராட்டத்தின் சுமையாகும். அல்லாஹ்வினால் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை செவியேற்றதிலிருந்து 20 வருடங்களுக்கு மேலாக ஓய்வு உறக்கமின்றி மாபெரும் தியாக வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.
அவர்களுக்கு நம் சார்பாகவும் மனித குலத்தின் சார்பாகவும் சிறந்த நற்கூலியை அல்லாஹ் நல்குவானாக!
நபி (ஸல்) அவர்களின் நீண்ட தியாக வாழ்க்கையின் சில பகுதியைத்தான் நாம் பின்வரும் பக்கங்களில் காண இருக்கிறோம்.
வஹ்யின் வகைகள்
நபி (ஸல்) அவர்களின் நுபுவத்திற்குப் பிந்திய வாழ்வைப்பற்றி பேசுமுன் வஹியின் (இறைச்செய்தியின்) வகைகளைப் பற்றி காண்பது சிறந்தது. வஹியின் வகைகள் பற்றி இப்னுல் கய்” (ரஹ்) ‘ஜாதுல் மஆது’ என்ற தனது நூலில் கூறுவதாவது:
1) உண்மையான கனவு. இதுதான் வஹியின் தொடக்கமாக இருந்தது.
2) வானவர், நபி (ஸல்) அவர்களின் கண்முன் தோன்றாமல் உள்ளத்தில் இறை செய்தியைப் போட்டுவிடுவது. எ.கா. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரூஹுல் குத்ஸ் (ஜிப்ரீல்) எனது உள்ளத்தில் ஊதினார். அதாவது, தனது உணவை முழுமையாக முடித்துக் கொள்ளும்வரை எவரும் மரணிக்க மாட்டார். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! உணவைத் தேடுவதில் அழகிய வழியை தேர்ந்தெடுங்கள். உணவு தாமதமாகுவதால் நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து அதைத் தேட வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்விடம் உள்ளதை அவனுக்கு வழிப்படுவதன் மூலமே தவிர வேறு வகையில் அடைய முடியாது.”
3) வானவர் ஓர் ஆடவன் உருவில் தோன்றி நபி (ஸல்) அவர்களிடம் பேசுவார். அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் நிறுத்திக் கொள்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் வானவரை சில நபித்தோழர்கள் கண்டிருக்கிறார்கள்.
4) வானவர் மணியோசையைப் போன்று வருவார். இந்த வகையே நபி (ஸல்) அவர்களுக்கு சுமையாக இருக்கும். நபி (ஸல்) அவர்களை வானவர் தன்னுடன் இணைத்துக் கொள்வார். கடுங்குளிரிலும் நபி (ஸல்) அவர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்து ஓடும். அவர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்தால் வஹியின் சுமை தாங்காது அந்த வாகனம் அப்படியே தரையில் அமர்ந்துவிடும். ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் கால் ஜைது இப்னு ஸாபித் (ரழி) அவர்களின் கால்மீது இருந்த நிலையில் வஹி வந்தது. அதன் சுமை அவர்களது காலைத் துண்டித்து விடும் அளவுக்கு மிகக் கடினமாக இருந்தது.
5) வானவர், அல்லாஹ் படைத்த அதே உருவத்தில் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றுவார். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் செய்திகளை அறிவிப்பார். இவ்வாறு இரண்டு முறை நடந்துள்ளது. இதைப்பற்றி குர்ஆனில் ‘அந்நஜ்ம்’ என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
6) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் அழைத்து பேசுவது. நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜில்” தொழுகை கடமையாக்கப்பட்டது போன்று!
முதல் கால கட்டம் - அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்
இரகசிய அழைப்பு - மூன்று ஆண்டுகள்!
இரகசிய அழைப்பு - மூன்று ஆண்டுகள்!
“சூரா” முத்தஸ்ஸின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டதும் ஏகத்துவ அழைப்புக்கு நபி (ஸல்) அவர்கள் தயாரானார்கள். அக்கால மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். தங்களது முன்னோர்களை சிலை வணங்கிகளாகக் கண்டார்கள் என்பதைத் தவிர சிலை வணக்கத்திற்காக வேறெந்த ஆதாரமும் அவர்களிடமில்லை. பிடிவாதமும் அகம்பாவமும் அவர்களது இயல்பாக இருந்தன. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வாள் முனைதான் என்றும், அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமைக்கு தாங்களே மிகத் தகுதியுடையோர் என்றும் நம்பியிருந்தனர். அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமையிடமான மக்காவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதை அப்படியே பாதுகாப்பது தங்களது பொறுப்பெனக் கருதினர். இப்பொழுது அவர்களது உணர்வில் ஊறிக் கிடந்த கொள்கைகளைத் தகர்க்கும் முயற்சியை திடீரென செய்தால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, அழைப்புப் பணியை இரகசியமாகத் தொடங்குவதுதான் விவேகமான செயலாக இருந்தது.
முந்தியவர்கள்!
நபி (ஸல்) அவர்கள் ஆரம்பமாகக் குடும்பத்தார் மற்றும் நண்பர்களில் தனது நம்பிக்கைக்குரியவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள். உண்மையை நேசிப்பவர், நல்லவர் என தான் எண்ணியவர்களுக்கும் ஏகத்துவ அழைப்பு விடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களை எந்த வகையிலும் சந்தேகிக்காத ஒரு கூட்டம் அவர்களின் அழைப்பை ஏற்றது. இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள் “அஸ்ஸாபிக்கூனல் அவ்வலூன்” (முந்தியவர்கள்! முதலாமவர்கள்!) என்று அறியப்படுகின்றனர். இவர்களில் முதன்மையானவர் நபி (ஸல்) அவர்களின் துணைவியரான அன்னை கதீஜா (ரழி) ஆவார். பின்னர் நபி (ஸல்) அவர்களின் அடிமை ஜைது இப்னு ஹாஸா (ரழி), நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பிலிருந்த சிறுவர் அலீ (ரழி), உற்ற தோழரான அபூபக்ர் (ரழி) ஆகிய அனைவரும் அழைப்புப் பணியின் முதல் நாளிலேயே இஸ்லாமைத் தழுவினார்கள். பிறகு இறை அழைப்புப் பணிக்காக அபூபக்ர் (ரழி) ஆயத்தமானார்கள். அவர்கள் அனைவரின் நேசத்திற்குரியவராக, மென்மையானவராக, நற்குணமுடையவராக, உபகாரியாக இருந்தார்கள். அவர்களது அறிவு, வணிகத் தொடர்பு, இனிய பேச்சு ஆகியவற்றை மக்கள் மிகவும் நேசித்தனர். அவர்களில் தனக்கு மிக நம்பிக்கைக்கு உயவர்களை முதலில் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்களது அழைப்பை ஏற்று உஸ்மான் இப்னு அஃப்பான், ஜுபைர் இப்னு அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகிய எட்டு நபர்கள் இஸ்லாமை முதன்முதலாக ஏற்றுக் கொண்டனர்.
இவர்களையடுத்து இச்சமுதாயத்தின் நம்பிக்கையாளர் (அமீன்) என்று பெயர் சூட்டப்பட்ட அபூ உபைதா ஆமிர் இப்னு ஜர்ராஹ், அபூ ஸலாமா இப்னு அப்துல் அஸத், அவரது மனைவி உம்மு ஸலமா, அர்கம் இப்னு அபுல் அர்கம், உஸ்மான் இப்னு மள்வூன், அவரது இரு சகோதரர்கள் குதாமா, அப்துல்லாஹ், உபைதா இப்னு ஹாரிஸ், ஸயீது இப்னு ஜைது, அவரது மனைவி ஃபாத்திமா பின்த் கத்தாப் (உமர் அவர்களின் சகோதரி) கப்பாப் இப்னு அரத், ஜஃபர் இப்னு அபூதாலிப். அவரது மனைவி அஸ்மா பின்த் உமைஸ், காலித் இப்னு ஸயீது இப்னு ஆஸ், அவரது மனைவி உமைனா பின்த் கலஃப், அம்ரு இப்னு ஸயீது இப்னு ஆஸ், ஹாதிப் இப்னு ஹாரிஸ், அவரது மனைவி ஃபாத்திமா பின்த் முஜல்லில், கத்தாப் இப்னு அல் ஹாரிஸ், அவரது மனைவி ஃபுகைஹா பின்த் யஸார், மஃமர் இப்னு அல்ஹாரிஸ், முத்தலிப் இப்னு அஜ்ஹர், ரமலா பின்த் அபூ அவ்ஃப், நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி அன்ஹும்) ஆகிய இவர்கள் அனைவரும் குறைஷி கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் முதன்மையானவர்களாவர்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், மஸ்வூத் இப்னு ரபீஆ, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ். அபூ அஹ்மத் இப்னு ஜஹ்ஷ், பிலால் இப்னு ரபாஹ் ஹபஷி, ஸுஹைப் இப்னு ஸினான், அம்மார் இப்னு யாஸிர், யாஸிர், அவரது மனைவி சுமைய்யா, ஆமிர் இப்னு ஃபுஹைரா (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் மற்ற கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் முதன்மையானவர்களாவர்.
பெண்களில் மேற்கூறப்பட்டவர்களைத் தவிர மற்றும் பலர் இஸ்லாமை ஏற்றனர். அவர்கள்: உம்மு அய்மன் பரகா ஹபஷியா, அப்பாஸின் மனைவி உம்முல் ஃபழ்ல் லுபாபஹ், அஸ்மா பின்த் அபூபக்ர். (அல்லாஹ் இவர்கள் அனைவரையும் திருப்தி கொள்வானாக!) (இப்னு ஹிஷாம்)
“அஸ்ஸாபிகூனல் அவ்வலூன் - முந்தியவர்கள் முதலாமவர்கள்” என்று குர்ஆனில் அல்லாஹ் இவர்களை போற்றுகின்றான்.
இஸ்லாமை ஆரம்பமாக ஏற்றுக் கொண்ட ஆண், பெண்களின் எண்ணிக்கை 130 ஆகும். எனினும், இவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்கள் மறைமுகமாக அழைப்பு விடுத்த காலத்தில் இஸ்லாமை ஏற்றார்களா? அல்லது அவர்களில் சிலர் அதற்குப்பின் இஸ்லாமை ஏற்றார்களா? என்று உறுதியாக கூறமுடியாது.
தொழுகை
இஸ்லாமிய மார்க்கத்தில் தொழுகையே முதலாவதாக கடமையாக்கப்பட்டது. இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: மிஃராஜுக்கு முன்பே நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் தொழுது வந்தார்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால், ஐவேளைத் தொழுகை கடமையாவதற்கு முன் ஏதேனும் தொழுகைகள் கடமையாக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் “சூரிய உதயத்திற்கு முன்பும் மறைவதற்கு முன்பும் தொழுது கொள்வது கடமையாக இருந்தது” என்று கூறுகின்றனர்.
இப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் கணவாய்களுக்குச் சென்று இரகசியமாகத் தொழுது வந்தார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்களும் அலீ (ரழி) அவர்களும் தொழும்போது அபூதாலிப் பார்த்து அதுபற்றி விசாரித்தார். அவ்விருவரும் நற்செயலையே செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டதும் அதில் நிலைத்திருங்கள் என்று கூறினார்.
தொழுகை மட்டுமே முஸ்லிம்களுக்குக் கடமையாக்கப்பட்டிருந்தது. அதைத் தவிர வேறு வணக்க வழிபாடுகளோ, ஏவல் விலக்கலோ இருந்ததாகத் தெரியவில்லை. அக்கால கட்டத்தில் அவர்களுக்கு ஏகத்துவ விளக்கங்களைக் கற்றுக் கொடுத்து, நற்பண்புகளில் ஆர்வமூட்டி, அவர்களது இதயங்களைத் தூய்மைப்படுத்தும் இறைவசனங்கள் அருளப்பட்டன. மேலும், அவ்வசனங்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் அவர்கள் கண்முன் காண்பதுபோல் வர்ணித்தன. எழுச்சிமிகு உபதேசங்களால் இதயங்களைத் திறந்து ஆன்மாவுக்கு வலுவூட்டி அக்கால மக்கள் அதுவரை அறிந்திராத ஒரு புதிய நாகரீக வாழ்வுக்கு இறைமறை அவர்களை அழைத்துச் சென்றது.
இவ்வாறே மூன்று ஆண்டுகள் கடந்தன. நபி (ஸல்) அவர்கள் அழைப்பை பகிரங்கப் படுத்தாமல் தனி நபர்களுக்கே அழைப்பு விடுத்தார்கள். குறைஷிகள் மட்டும் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை அறிந்திருந்தனர். மக்காவில் இஸ்லாம் குறித்த சர்ச்சை எழுந்து மக்களும் அதுபற்றி பேசத் தொடங்கினர். இதைப் பிடிக்காத சிலர் முஸ்லிம்களை இம்சித்தனர். எனினும், நபி (ஸல்) அவர்கள் அம்மக்களின் மார்க்கத்தையும் சிலைகளையும் விமர்சிக்காததால் நபி (ஸல்) அவர்களின் அழைப்பை மக்காவாசிகள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
இரண்டாம் கால கட்டம் பகிரங்க அழைப்பு!
இரண்டாம் கால கட்டம் பகிரங்க அழைப்பு!
சகோதரத்துவம் பேணுதல், உதவி ஒத்தாசை புரிதல் போன்ற நற்பண்புகளுடன் தூதுத்துவத்தைச் சுமந்து அதை எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்ற முஸ்லிம்களின் ஒரு கூட்டம் தயாரானபோது இஸ்லாமிய அழைப்பை பகிரங்கப்படுத்தி, தீமையை நன்மையால் எதிர்கொள்ள வேண்டுமென்று நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக முதலாவதாக,
“நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.” (அல்குர்ஆன் 26:214)
என்ற வசனம் அருளப்பட்டது. இத்திருவசனத்தின் முன்தொடல் நபி மூஸா (அலை) அவர்களுக்கு இறைத்தூது கிடைத்ததிலிருந்து இஸ்ரவேலர்களுடன் அவர்கள் ஹிஜ்ரா செய்தது வரையிலான நிகழ்வுகளும், ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தாரிடமிருந்து இஸ்ரவேலர் களுக்குக் கிடைத்த வெற்றியும், ஃபிர்அவ்ன் தனது கூட்டத்தாருடன் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களும் விவரிக்கப்படுகிறது. மேலும், ஃபிர்அவ்னை ஏகத்துவத்தின் பக்கம் அழைத்தபோது நபி மூஸா (அலை) கடந்து சென்ற அனைத்து நிலைமைகளும் விவரமாகக் கூறப்பட்டன.
இஸ்லாமிய அழைப்பை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கட்டளையுடன் மேற்கூறப்பட்ட விவரங்களை கொண்டு வந்ததற்கான காரணம்: மக்களை அழைக்கும்போது அவர்களிடமிருந்து பொய்ப்பித்தல், அத்துமீறல், கொடுமைப்படுத்துதல் போன்றவற்றைச் சந்திக்க நேரிடும்; அவற்றைத் தாங்கியே தீரவேண்டும். எனவே, தொடக்கத்திலிருந்தே தங்களது செயல்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக நபி (ஸல்) அவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் முன்சென்ற நபிமார்கள் மற்றும் சமுதாயத்தவர்களின் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டப்பட்டது.
இம்மார்க்கத்தைப் பொய்யாக்குபவர்கள் தங்களது நிலையில் தொடர்ந்தால், அவர்களுக்கு ஏற்படும் இழிவான முடிவையும் அல்லாஹ்வின் தண்டனையையும் தெரிந்துகொள்ள வேண்டும்; அழகிய முடிவு தங்களுக்குத்தான் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக இந்த அத்தியாயத்தில் நூஹ், இப்றாஹீம், லூத், ஹூது, ஸாலிஹ் (அலை) ஆகிய நபிமார்களின் சமுதாயத்தினர், “அஸ்ஹாபுல் அய்கா’ (தோட்டக்காரர்கள்) என இறைத்தூதர்களைப் பொய்யாக்கியவர்களின் முடிவுகள் கூறப்பட்டுள்ளன.
நெருங்கிய உறவினர்களை நேர்வழிக்கு அழைத்தல்
இவ்வசனம் அருளப்பட்டதும் நபி (ஸல்) தங்களது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையாரை அழைத்தார்கள். அவர்களுடன் முத்தலிபின் வமிசத்தில் சிலரும் சேர்ந்து மொத்தம் 45 ஆண்கள் வந்தனர். நபி (ஸல்) பேசத் தொடங்கியபோது அபூ லஹப் முந்திக்கொண்டு “இவர்கள் உமது தந்தையின் சகோதரர்களும் அவர்களுடைய பிள்ளைகளுமாவர். அதை நினைவில் கொண்டு பேசு! மதம் மாறியவர்களைப் பற்றி இங்கு பேசாதே. அறிந்துகொள்! அரபியர்களில் உன்னுடைய கூட்டத்தாருக்கு எந்தவொரு வலிமையுமில்லை. உன்னை தண்டிப்பதற்கு நானே மிகத் தகுதியானவன். நீ கூறும் இந்த ஏகத்துவத்தில் நீ உறுதியாக இருந்தால், அது அரபிகளின் துணையுடன் குறைஷி குடும்பத்தினர் உன்மீது பாய்வதற்கு ஏதுவாகிவிடும். தனது தந்தையின் சொந்தக்காரர்களுக்கு உன்னைப் போல தீங்கிழைத்த எவரையும் நான் கண்டதில்லை” என்று கூறினான். இதனால் நபி (ஸல்) அச்சபையில் பேசாமல் இருந்துவிட்டார்கள்.
இரண்டாவது முறையாகவும் ஹாஷிம் கிளையாரை அழைத்து “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே புகழ்கிறேன். அவனிடமே உதவி தேடுகிறேன். அவன்மீது நம்பிக்கை வைக்கிறேன். அவனிடமே பொறுப்பு ஒப்படைக்கிறேன். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவனுமில்லை. அவனுக்கு இணை யாருமில்லை என்று சாட்சி சொல்கிறேன்” எனக் கூறித் தொடர்ந்தார்கள்; “நிச்சயமாக “ராம்த்’ (போருக்கு செல்லும் வீரர்கள் தங்குவதற்கு ஏற்ற இடங்களையும், நீர்நிலைகளையும் அறிந்து வருவதற்காக அனுப்பப்படும் தூதர்) பொய்யுரைக்கமாட்டார். எந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லையோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக நான் குறிப்பாக உங்களுக்கும், பொதுவாக ஏனைய மக்களுக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் உறங்குவது போன்றே மரணிப்பீர்கள். நீங்கள் விழிப்பது போன்றே எழுப்பப்படுவீர்கள். உங்களது செயல்கள் குறித்து விசாரணை செய்யப்படுவீர்கள். நிச்சயமாக அது நிரந்தர சொர்க்கமாக அல்லது நிரந்தர நரகமாக இருக்கும்” என்று உரையாற்றி முடித்தார்கள்.
அப்போது அபூ தாலிப் கூறினார்: “உனக்கு உதவி செய்வது எங்களுக்கு மிகவும் விருப்பமானதே, உனது உபதேசத்தை ஏற்பதும் எங்களுக்குப் பிரியமானதே, உனது பேச்சை மிக உறுதியாக உண்மைப்படுத்துகிறோம். இதோ! உனது பாட்டனாரின் குடும்பத்தார்! நானும் அவர்களில் ஒருவன்தான். எனினும், நீ விரும்புவதை அவர்களைவிட நான் விரைவாக ஏற்றுக் கொள்வேன். எனவே, உனக்கிடப்பட்ட கட்டளையை நீ நிறைவேற்றுவதில் நீ உறுதியாக இரு. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உன்னைச் சூழ்ந்து நின்று பாதுகாப்பேன். எனினும், எனது மனம் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை விட்டுப் பிரிய விரும்பவில்லை” என்றார்.
அப்போது அபூ லஹப் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது (இந்த அழைப்பு) மிக இழிவானது. இவரை மற்றவர்கள் தண்டிக்கும் முன் நீங்களே தடுத்துவிடுங்கள்” என்றான். அதற்கு அபூதாலிப் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் இருக்கும்வரை அவரைப் பாதுகாப்போம்” என்று கூறிவிட்டார். (அல்காமில்)
ஸஃபா மலை மீது...
அபூதாலிப் தனக்கு பாதுகாப்பளிப்பார் என்று நபி (ஸல்) உறுதியாக அறிந்தபின் இறை மார்க்கத்தை எடுத்துரைப்பதற்காக ஸஃபா மலை உச்சியில் ஏறி நின்று “யா ஸபாஹா! யா ஸபாஹா!!” என்று சப்தமிட்டார்கள். (பெரும் படையொன்று சூழ்ந்துகொண்டதை அல்லது ஏதேனும் பேராபத்து வந்துவிட்டதை அறிவிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்.)
பிறகு குறைஷி வமிசத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்தார்கள்: ஃபஹ்ர் குடும்பத்தாரே! அதீ குடும்பத்தாரே! அப்து முனாஃபின் குடும்பத்தாரே! அப்துல் முத்தலிபின் குடும்பத்தாரே! என்று அழைத்தார்கள்.
அவர்களது அழைப்பைச் செவியேற்று இவ்வாறு அழைப்பவர் யார்? என வினவ சிலர் “முஹம்மது” என்று கூறினர். உடனே குறைஷியர்களில், அபூலஹப் மற்றும் பலரும் அங்கு குழுமினர். வர இயலாதவர்கள் தங்கள் சார்பாக ஒருவரை அவர் சொல்வதைக் கேட்டு வருமாறு கூறியனுப்பினார்கள்.
அனைவரும் ஒன்று கூடியபோது நபி (ஸல்) “இம்மலைக்குப் பின்னாலுள்ள கணவாயில் உங்களைத் தாக்குவதற்காக குதிரை வீரர்கள் காத்திருக்கிறார்கள் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மக்கள் “ஆம்! உங்களை நம்புவோம்; உங்களை உண்மையாளராகவே கண்டிருக்கிறோம்; பொய்யுரைத்துக் கண்டதில்லை” என்றனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையான வேதனை வருமுன் நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன். எனக்கும் உங்களுக்கும் உள்ள உதாரணம், ஒருவர் எதிரிகளைப் பார்த்து அவர்கள் தன்னை முந்திச் சென்று தனது கூட்டத்தினரைத் திடீரெனத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக மலை உச்சியில் ஏறி “யா ஸபாஹா!” என்று அழைத்தவரைப் போன்றாவேன்.
பிறகு, நபி (ஸல்) அவர்கள் அம்மக்களை சத்தியத்தின் பக்கம் அழைத்து அல்லாஹ்வின் வேதனை குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள். ஒவ்வொரு கூட்டத்தாரின் பெயர்களைத் தனித்தனியாகவும், பொதுவாகவும் குறிப்பிட்டுக் கூறினார்கள்.
“குறைஷியரே! அல்லாஹ்விடமிருந்து உங்களது ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.
கஅபு இப்னு லுவய்யின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மை தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது.
முர்ரா இப்னு கஅபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
குஸைய்யின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மை தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது.
அப்துல் முனாஃபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.
அப்து ஷம்ஸ் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ஹாஷிம் கிளையாரே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அப்துல் முத்தலிபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது.
அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது. அல்லாஹ்வுடைய தூதரின் மாமியான அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது..
அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! எனது செல்வத்திலிருந்து விரும்பியதை கேட்டு பெற்றுக்கொள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் உங்களது நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை விட்டு உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.
எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உறவு இருக்கிறது. உரிய முறையில் இரத்தப் பந்தத்திற்கானக் கடமைகளை நிறைவேற்றுவேன்” என்று கூறி முடித்தார்கள்.
இந்த எச்சரிக்கை முடிந்ததும் மக்கள் எதுவும் கூறாமல் கலைந்து சென்றார்கள். ஆனால், அபூ லஹப் மட்டும் குரோதத்துடன் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டான். “நாள் முழுவதும் உனக்கு நாசமுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களைக் கூட்டினாயா?” என்று கூறினான். அவனைக் கண்டித்து “அழியட்டும் அபூ லஹபின் இரு கரங்கள்; அவனும் அழியட்டும்...” என்ற 111வது அல்குர்ஆன் அத்தியாயம் இறங்கியது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத்திர்மிதி, ஃபத்ஹுல் பாரி)
இவ்வாறாக ஏகத்துவக் குரல் ஓங்கியது. நபி (ஸல்) தங்களது நெருங்கிய உறவினர்களிடம் நீங்கள் இத்தூதுத்துவத்தை (நான் அல்லாஹ்வின் தூதர் என்பதை) ஏற்றால்தான் நம்மிடையே உறவு நீடிக்கும். இதைத்தவிர அரபுகள் கொண்டிருக்கும் குடும்ப உறவுகளெல்லாம் அல்லாஹ்வின் எச்சரிக்கையின் முன்னால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்று கூறித் தங்களது நிலையை மிகத் தெளிவாக அறிவித்துவிட்டார்கள்.
இவ்வாறே அழைப்புப் பணியின் குரல் மக்காவின் நாலாதிசைகளிலும் எதிரொலித்தது.
“ஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் (அவர்களுக்கு) விவரித்து அறிவித்துவிடுங்கள். மேலும், இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்து விடுங்கள்” (அல்குர்ஆன் 15:94)
என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான். அதைத் தொடர்ந்து நபி (ஸல்) நிராகரிப்பவர்களின் சபைகளில் துணிந்து நின்று அல்லாஹ்வின் பக்கம் அழைக்கத் தொடங்கினார்கள். முன் சென்ற நபிமார்கள் தங்களது சமுதாயத்தினருக்குக் கூறி வந்த,
நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (அல்குர்ஆன் 7:59)
என்ற வசனத்தை அவர்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள். நிராகரிப்பவர்களின் கண் முன்னே கஅபாவின் முற்றத்தில் பட்டப்பகலில் பகிரங்கமாக அல்லாஹ்வை வணங்கத் தொடங்கினார்கள்.
நபி (ஸல்) ஏகத்துவ அழைப்புக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்தது. ஒருவர் பின் ஒருவராக அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தழுவினார்கள். அதனால் இஸ்லாமை ஏற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தில் இஸ்லாமை ஏற்காதவர்களுக்குமிடையே சண்டை சச்சரவுகள் தோன்றின. நாளுக்கு நாள் இஸ்லாமின் வளர்ச்சியைக் கண்ட குறைஷிகள் கடுங்கோபத்தில் மூழ்கினர்.
ஹாஜிகளைத் தடுத்தல்
இக்காலகட்டத்தில் குறைஷியருக்கு மற்றொரு கவலையும் ஏற்பட்டது. அதாவது, பகிரங்க இஸ்லாமிய அழைப்புப் பணி தொடங்கிய சில நாட்களிலேயே ஹஜ்ஜின் காலம் நெருங்கி வந்தது. ஹஜ்ஜுக்கு வரும் அரபுக் கூட்டத்தினர் முஹம்மதின் அழைப்பினால் மனம் மாறிவிடலாம். எனவே, ஹாஜிகளை சந்தித்து முஹம்மதைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக குறைஷியர்கள் வலீத் இப்னு முகீராவிடம் ஒன்று கூடினர். குறைஷிகளிடம் அவன் “இவ்விஷயத்தில் நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கூறுங்கள். இல்லையென்றால் ஒருவன் கூற்றுக்கு மற்றவன் கூற்று மறுப்பாகி ஒருவர் மற்றவரை பொய்யராக்கிக் கொள்வீர்கள்” என்று கூறினான். அம்மக்கள் “நீயே ஓர் ஆலோசனையைக் கூறிவிடு. நாங்கள் அதற்கேற்ப நடந்து கொள்கிறோம்” என்றனர். அவன் “இல்லை! நீங்கள் கூறுங்கள், அதைக் கேட்டு நான் ஒரு முடிவு செய்கிறேன்” என்றான்.
குறைஷியர்கள்: அவரை (முஹம்மதை) ஜோசியக்காரர் என்று கூறலாமா?
வலீத்: “இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஜோதிடர் அல்லர். ஏனெனில் நாம் ஜோதிடர் பலரைக் கண்டிருக்கிறோம். ஆனால் இவரது பேச்சு ஜோதிடனின் உளறல்களாகவோ பேச்சுகளாகவோ இல்லை.”
குறைஷியர்கள்: அவரைப் பைத்தியக்காரர் என்று கூறலாமா?
வலீத்: அவர் பைத்தியக்காரர் அல்லர். ஏனெனில், பைத்தியக்காரன் எப்படியிருப்பான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவரிடம் பைத்தியத்தின் எந்த அடையாளமும் இல்லை.
குறைஷியர்கள்: அவரைக் கவிஞர் எனக் கூறலாமா?
வலீத்: அவர் கவிஞரல்ல. ஏனெனில், நமக்கு கவியின் அனைத்து வகைகளும் தெரியும். ஆனால் அவரது பேச்சு கவியாக இல்லை.
குறைஷியர்கள்: அவரை சூனியக்காரர் என்று கூறலாமா?
வலீத்: நாம் சூனியக்காரர்களையும் அவர்களது சூனியத்தையும் நன்கறிந்திருக்கிறோம். ஆனால் அவரது பேச்சு சூனியக்காரர்களின் ஊதுதலாகவோ முடிச்சுகளாகவோ நமக்குத் தோன்றவில்லை.
குறைஷியர்கள்: பின்னர் நாம் எதைத்தான் கூறுவது?
வலீத்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரது பேச்சில் ஒரு தனித்துவமான இனிமையும் மிகுந்த கவர்ச்சியும் இருக்கிறது. அதன் தொடக்கம் பழக்குலையாகவும் அதன் இறுதி பறிக்கப்பட்ட கனியாகவும் இருக்கிறது. நீங்கள் முன்பு கூறியதில் எதைக் கூறினாலும் அது பொய்தான் என்று தெரிந்து விடும். உங்களது கூற்றில் மிக ஏற்றது அவரை சூனியக்காரர் என்று கூறுவதுதான். அவர் ஒரு சூனியத்தைக் கொண்டு வந்து அதன்மூலம் தந்தை-மகன், கணவன்-மனைவி, சகோதரர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறார் என்றே கூறுங்கள் என்று வலீத் கூறினான். அதை ஏற்று மக்கள் திருப்தியுடன் கலைந்தனர். (இப்னு ஹிஷாம்)
குறைஷியர்கள் வலீதிடம் பிரச்சனையற்ற ஒரு நல்ல ஆலோசனையைத் தங்களுக்கு கூறும்படி கேட்க அதற்கு வலீத் “அது குறித்து சிந்திக்க எனக்கு அவகாசமளியுங்கள்” என்று கூறி மிக நீண்ட நேரம் யோசித்தபின் மேற்கண்ட தனது கருத்தைக் கூறினான் என சில அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலீதின் இச்செயல் குறித்து அல்முத்தஸ்ஸிர் என்ற அத்தியாயத்தில் 11 முதல் 26 வரையிலான 16 வசனங்களை அல்லாஹ் இறக்கி வைத்து அவ்வசனங்களுக்கிடையில் அவன் யோசித்த விதங்களைப் பற்றி அல்லாஹ் மிக அழகாகக் குறிப்பிடுகிறான்.
நிச்சயமாக அவன் (இந்தக் குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான். அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்! பின்னும் அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்! (ஒன்றுமில்லை.) பின்னும் (அதனைப் பற்றிக்) கவனித்தான். பின்னர் (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான். பின்னர் புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான். ஆகவே “இது மயக்கக்கூடிய சூனியமேயன்றி வேறில்லை” என்றும், “இது மனிதர்களுடைய சொல்லேயன்றி வேறில்லை” என்றும் கூறினான். (அல்குர்ஆன் 74:18-25)
இந்த முடிவுக்கு சபையினர் உடன்பட்டதும் அதை நிறைவேற்றத் தயாரானார்கள். மக்கள் ஹஜ்ஜுக்கு வரும் வழிகளில் அமர்ந்து கொண்டு தங்களைக் கடந்து செல்பவர்களிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி எச்சரித்து தாங்கள் முடிவு செய்திருந்ததைக் கூறினார்கள்.
ஆனால், அதை இலட்சியம் செய்யாத நபி (ஸல்) ஹாஜிகளின் தங்குமிடங்களிலும் பிரபலமான உக்காள், மஜன்னா, துல்மஜாஸ் ஆகிய சந்தைகளிலும் மக்களைத் தேடிச் சென்று அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அபூலஹப் நின்றுகொண்டு “இவர் சொல்வதை ஏற்காதீர்கள். நிச்சயமாக இவர் மதம் மாறியவர்; பொய்யர்” என்று கூறினான்.
இவர்களின் இவ்வாறான செயல்கள் அரபியர்களிடம் மென்மேலும் இஸ்லாம் பரவக் காரணமாக அமைந்தன. ஹஜ்ஜை முடித்துச் சென்ற அரபியர்கள் நபி (ஸல்) அவர்களையும் அவர்கள் எடுத்துரைத்த இஸ்லாமையும் தங்களது நாடுகளில் எடுத்துரைத்தார்கள்.
அழைப்புப் பணியில் இடையூறுகள்
ஹஜ் காலம் முடிந்தது. இறையழைப்புப் பணியை அதன் ஆரம்ப நிலையிலேயே கருவறுத்திட வேண்டுமென குறைஷியர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:
1) பரிகசித்தல், இழிவுபடுத்துதல், பொய்ப்பித்தல், எள்ளி நகையாடுதல்:
இதுபோன்ற இழிசெயல்களால் முஸ்லிம்களை மனதளவில் பலவீனப்படுத்த எண்ணினர். அற்பமான வசைச்சொற்களால் நபி (ஸல்) அவர்களை ஏசினர். சில வேளைகளில் பைத்தியக்காரர் என்றனர்.
(நமது நபியாகிய உங்களை நோக்கி) “வேதம் அருளப்பட்டதாகக் கூறும் நீங்கள் நிச்சயமாகப் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 15:6)
சில வேளைகளில் நபி (ஸல்) அவர்களை “சூனியக்காரர்’ என்றும் “பொய்யர்’ என்றும் கூறினர்.
(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீங்கள்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சயப்பட்டு, “இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உங்களைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 38:4)
வஞ்சகத்தனத்தையும் சுட்டெரிக்கும் பார்வைகளையும் நபி (ஸல்) அவர்கள் மீது வீசினர்.
(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும்போதெல்லாம், அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உங்களை வீழ்த்தி விடுபவர்களைப் போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். அன்றி, (உங்களைப் பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 68:51)
நபி (ஸல்) அவர்கள் தங்களது எளிய தோழர்களுடன் அமர்ந்திருக்கும்போது அவர்களைக் கேலி செய்வார்கள்.
(நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் “எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்?” என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனல்லவா? (அல்குர்ஆன் 6:53)
அதற்கு அல்லாஹ் அந்த வசனத்தின் இறுதியிலேயே பதிலளித்தான். மேலும், இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து எவ்வாறெல்லாம் பரிகசித்தார்கள் என்பதையும் விவரிக்கிறான்.
நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர். (அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தாரிடம் சென்று விட்டபோதிலும், (பின்னும்) இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர். (வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) “நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்” என்றும் கூறுகின்றனர். (நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே! (அல்குர்ஆன் 83:29-33)
இவ்வாறு ஒவ்வொரு நாளும் கேலி, கிண்டல், குத்திப்பேசுதல் போன்ற இடையூறுகளை அதிகரித்துக் கொண்டே சென்றனர். இது நபி (ஸல்) அவர்களின் மனதைப் பெரிதும் பாதித்தது. இது குறித்து அல்குர்ஆனில் இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான்:
(நபியே! உங்களைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை, உங்கள் உள்ளத்தை நெருக்குகிறதென்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீங்கள் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்கள்.)
பிறகு அவர்களது மன நெருக்கடியை அகற்றும் வழியைக் கூறி அவர்களை உறுதிப்படுத்துகிறான்.
நீங்கள் உங்கள் இறைவனைத் துதி செய்து புகழ்ந்து, அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குங்கள். உமக்கு “யக்கீன்’ (என்னும் மரணம்) ஏற்படும் வரையில் (இவ்வாறே) உங்கள் இறைவனை வணங்கிக் கொண்டிருங்கள். (அல்குர்ஆன் 16:97)
மேலும் பரிகசிப்பவர்களின் தீங்கிலிருந்து நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதாக அல்லாஹ் உறுதியளிக்கிறான்.
பரிகாசம் செய்யும் (இவர்களுடைய தீங்கைத் தடை செய்வதற்கு) நிச்சயமாக நாமே உங்களுக்குப் போதுமாயிருக்கிறோம். இவர்கள் (உங்களைப் பரிகசிப்பது மட்டுமா?) அல்லாஹ்வுக்கு மற்றொரு (பொய்த்) தெய்வத்தைக் கூட்டாக்குகிறார்கள். (இதன் பலனை) பின்னர் இவர்கள் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 16:95, 96)
அதுமட்டுமின்றி அவர்களது தீய செயல்கள் அவர்களுக்கு எதிராகவே முடியும் என்பதையும் அல்லாஹ் முன்னறிவிப்புச் செய்தான்.
(நபியே!) உங்களுக்கு முன்னர் வந்த (நம்முடைய மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில் அவர்கள் (எந்த வேதனையைப்) பரிகசித்துக் கொண்டிருந்த(னரோ அ)து அவர்களை வந்து சூழ்ந்துகொண்டது. (அல்குர்ஆன் 6:10)
2) சந்தேகங்களை கிளறுவதும் பொய்ப்பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதும்
ஏகத்துவ அழைப்பை மக்கள் செவியேற்று சிந்திக்க முடியாத வகையில் பல வகையான பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். குர்ஆனைப் பற்றி இவ்வாறு கூறினர்:
இவை சிதறிய சிந்தனையால் ஏற்பட்ட வாக்கியங்கள்; நபி (ஸல்) அவர்கள் தாமே இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஒரு கவிஞர்தான்; தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை; இரவில் பொய்யான கனவுகளைக் கண்டு பகலில் அதை வசனமாக ஓதிக் காட்டுகிறார்; நபி (ஸல்) அவர்கள் தாமாகவே அதைப் புனைந்து கொள்கிறார்; குர்ஆனை இவருக்கு கற்றுத் தருவது ஒரு மனிதர்தான்; குர்ஆனாகிய இது பொய்யாக அவர் கற்பனை செய்துகொண்டதே தவிர வேறில்லை இதைக் கற்பனை செய்வதில் வேறு மக்களும் அவருக்கு உதவி புரிகின்றனர்; இது முன்னோர்களின் கட்டுக்கதையே; காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது அதனை இவர் மற்றொருவரின் உதவியைக் கொண்டு எழுதி வைக்கும்படி செய்கின்றார் இவ்வாறெல்லாம் அந்த நிராகரிப்பவர்கள் சூழ்நிலைகளுக்கேற்ப பிரச்சாரம் செய்து வந்தனர். (பார்க்க அல்குர்ஆன் வசனங்கள் 21:5, 16:103, 25:4, 5)
சில வேளைகளில் குறி சொல்பவர்களுக்கு ஜின், ஷைத்தான் இறங்கி செய்தி சொல்வது போல நபி (ஸல்) அவர்கள் மீதும் ஜின், ஷைத்தான் இறங்கி செய்தி சொல்கின்றன என்றனர். இதை மறுத்தே பின்வரும் வசனம் அருளப்பட்டது.
(நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே! (அல்குர்ஆன் 26:221-223)
அதாவது மக்களே! பாவத்தில் உழலும் பொய்யான பாவியின் மீதுதான் ஷைத்தான்கள் இறங்குகிறார்கள். நான் பொய்யுரைத்தோ பாவம் செய்தோ நீங்கள் கண்டதில்லை. அப்படியிருக்க இந்தக் குர்ஆனை ஷைத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தான் என்று எப்படிக் கூறுகிறீர்கள்.
சில வேளைகளில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து “இவருக்கு ஒருவகையான பைத்தியம் பிடித்துள்ளது. நல்ல கருத்துகளை இவரே சிந்தித்து அதை அழகிய மொழிநடையில் கவிஞர்களைப் போன்று கூறுகிறார். எனவே இவர் கவிஞர்; இவரது வார்த்தைகள் கவிகளே” என்றனர். அல்லாஹ் இவர்களுக்கு மறுப்பு தெரிவித்து, கவிஞர்களிடமுள்ள மூன்று தன்மைகளைக் குறிப்பிட்டு அதில் ஒன்றுகூட நபி (ஸல்) அவர்களிடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினான்.
கவிஞர்களை வழிகெட்டவர்கள்தாம் பின்பற்றுகின்றனர். நிச்சயமாக, அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 26:224-226)
1) நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்கள் மார்க்கத்திலும் நற்பண்புகளிலும் சிறந்து விளங்கி, இறையச்சத்துடன் நேர்வழியையும் அடைந்தவர்களாவர். வழிகேட்டிற்கான எந்த அடையாளமும் அவர்களிடமில்லை.
2) கவிஞர்கள் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு உளறுவதைப் போன்று நபி (ஸல்) முன்னுக்குப் பின் முரணாக உளறவில்லை. மாறாக, அவர்கள் ஒரே இறைவன்; ஒரே மார்க்கம் என்ற கொள்கையின் பக்கம் எப்போதும் அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
3) தாங்கள் செய்ததையே பிறரிடம் நபி (ஸல்) எடுத்துரைத்தார்கள். பிறரிடம் எடுத்துரைத்ததையே தங்களது வாழ்வில் நடைமுறைப்படுத்தினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுக்கும் கவிஞர்களுக்கும், குர்ஆனுக்கும் கவிதைக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை பிறகு எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள்?
இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கும் குர்ஆனுக்கும் எதிராக நிராகரிப்போர் எழுப்பிய ஒவ்வொரு சந்தேகத்துக்கும் தெளிவான, ஆணித்தரமான பதில்களை அல்லாஹ் இறக்கி அருளினான். நிராகரிப்பவர்களின் பெரும்பாலான சந்தேகங்கள் ஓரிறைக் கொள்கை, தூதுத்துவம், மரணித்தவர் மறுமையில் எழுப்பப்படுவது ஆகிய மூன்றைப் பற்றியே இருந்தது. ஏகத்துவம் தொடர்பான அவர்களது அனைத்து சந்தேகங்களுக்கும் குர்ஆன் உறுதியான பதிலளித்து அவர்களது கற்பனைக் கடவுள்கள் எவ்வளவு பலவீனமானவை என்பதையும் தெளிவுபடுத்தியது. குர்ஆனின் ஆணித்தரமான விளக்கங்கள் குறைஷியரின் கோபத்தையே அதிகரிக்கச் செய்தது.
அவர்கள் நபி (ஸல்) அவர்களை உண்மையாளர்; நம்பிக்கைக்குரியவர்; இறையச்சமிக்க ஒழுக்க சீலர் என்று உறுதி கொண்டிருந்த அதே நேரத்தில், அவர் அல்லாஹ்வின் உண்மையான தூதூர்தானா? என சந்தேகித்தனர். ஏனெனில், “நபித்துவம்’ என்பது மிக உயர்ந்த ஒன்று! அதை சாதாரண மனிதர்களால் பெற முடியாது என அவர்கள் உறுதியாக நம்பியிருந்தனர். எனவே, அல்லாஹ் தனக்களித்த நபித்துவத்தைப் பற்றி அறிவித்து அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்களென நபி (ஸல்) அவர்கள் அழைப்பு விடுத்தபோது இணைவைப்பவர்கள் திகைத்துப்போய் பின்வாங்கினர். இவர்களின் இக்கூற்றுகள் பற்றியே அல்லாஹ் இந்த வசனங்களை இறக்கினான்.
(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: “இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு வானவர் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்து கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே! (அல்குர்ஆன் 25:7)
மேலும் “முஹம்மது மனிதராயிற்றே!
மனிதர் எவருக்கும் (வேதத்தில்) யாதொன்றையும் அல்லாஹ் அருளவேயில்லை” என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 6:91)
அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து அல்லாஹ் (அதே வசனத்தில்) கூறுகிறான்:
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: “மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய (“தவ்றாத்’ என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? (அல்குர்ஆன் 6:91)
மூஸா (அலை) மனிதர்தாம் என்று அவர்கள் நன்கு விளங்கியிருந்தனர். அப்படியிருக்க முஹம்மது (ஸல்) மனிதராக இருப்பதுடன் அல்லாஹ்வின் தூதராக ஏன் இருக்கக்கூடாது?
ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களின் தூதுத்துவத்தை மறுத்து இவ்வாறுதான் கூறினர்.
அதற்கவர்கள், “நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 14:10)
இவர்களின் இக்கூற்றுக்குப் பதிலாக இறைத்தூதர்கள் கூறினார்கள்.
நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எனினும், அல்லாஹ் தன் அடியார் களில் தான் விரும்பியவர்கள் மீது அருள் புரிகிறான். (அல்குர்ஆன் 14:11)
ஆகவே, இறைத்தூதர்களும் மனிதர்கள்தான். எனவே, மனிதராக இருப்பது நபித்துவத்திற்கு எந்த வகையிலும் முரண்பாடானது அல்ல என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்தின.
இப்றாஹீம், இஸ்மாயீல், மூஸா (அலை) ஆகிய அனைவரும் மனிதர்களாக இருந்து அல்லாஹ்வின் தூதராகவும் இருந்தார்கள் என்பதை மக்காவாசிகள் ஏற்றிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் மீதான இந்த வாதத்தை விரைவிலேயே கைவிட்டு விட்டு மற்றொரு சந்தேகத்தைக் கிளற ஆரம்பித்தனர். அதாவது, மிகவும் மகத்துவம் வாய்ந்த தூதுத்துவத்தைக் கொடுக்க இந்த அனாதையைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வுக்கு கிடைக்கவில்லையா? மக்கா, தாயிஃப் நகரத்திலுள்ள செல்வமும் செல்வாக்கும் மிக்க பல தலைவர்கள் இருக்க அவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஆதரவற்றவரான இவரை அல்லாஹ் ஒருபோதும் தூதராக்க மாட்டான் என்று வாதிக்கத் தொடங்கினர். அவர்களின் இக்கூற்றை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
அன்றி (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள யாதொரு பெரியமனிதன் மீது இந்தக் குர்ஆன் இறக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வாறாயின் நாங்கள் அதனை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர்.(அல்குர்ஆன் 43:31)
இவர்களின் இக்கூற்றுக்கு பதிலுரைத்து இந்த வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.
(நபியே!) உங்கள் இறைவனின் அருளைப் பங்கிடுபவர்கள் இவர்கள்தாமா? (அல்குர்ஆன் 43:32)
அதாவது தூதுத்துவம், வஹி (இறைச்செய்தி) இரண்டும் அல்லாஹ்வின் கருணையாகும். அதை, தான் விரும்பியவர்களுக்குக் கொடுக்கும் முழு உரிமையும் அவனுக்குரியதே! அவ்வாறின்றி இவர்கள் விரும்பிய நபர்களுக்குத்தான் கிடைக்க வேண்டுமென்று இந்த நிராகரிப்பாளர்கள் எண்ணுவது எந்த வகையில் நியாயம்? என அல்லாஹ் வினா தொடுத்து, தூதுத்துவத்தை யாருக்கு கொடுப்பது என்பதை அவனே நன்கு அறிந்தவன் என அடுத்து வரும் வசனத்தில் கூறுகிறான்:
அவர்களிடம் யாதொரு வசனம் வந்தால் “அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படும் வரையில் நாங்கள் (அதனை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். (அல்குர்ஆன் 6:124)
இதற்கும் உரிய பதில்கள் கிடைக்கவே, மற்றொரு சந்தேகத்தைக் கிளறினர். உலகில் அரசர்கள் படை, பட்டாளம் சூழ மிகக்கம்பீரமாக, செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்க தன்னை அல்லாஹ்வின் தூதரென வாதிக்கும் முஹம்மதோ சில கவள உணவுக்காக வாழ்க்கையில் இப்படியெல்லாம் சிரமப்படுகிறாரே? என்றனர்.
(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: “இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு வானவர் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்து கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே! அல்லது அவருக்கு யாதொரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய யாதொரு சோலை அவருக்கு இருக்க வேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) அன்றி, இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்” என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25:7, 8)
நிராகரிப்பவர்களின் மேற்கூறிய கூற்றுக்குரிய பதிலை அல்லாஹ் அதைத் தொடர்ந்துள்ள 9, 10, 11 வசனங்களில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
ஆகவே, (நபியே!) உங்களைப் பற்றி (இந்த) அக்கிரமக்காரர்கள் என்னென்ன வர்ணிப்புகள் கூறுகின்றார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். ஆகவே, இவர்கள் (முற்றிலும்) வழிகெட்டு விட்டார்கள்; நேரான வழியை அடைய இவர்களால் முடியாது.
(நபியே! உங்களது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) அவற்றைச் சொந்தமாக்கி மிக்க மேலான சொர்க்கத்தை உங்களுக்குத் தரக்கூடியவன். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உங்களுக்குப் பல மாட மாளிகைகளையும் அமைத்து விடுவான்.
உண்மையில் இவர்கள் விசாரணைக் காலத்தையே பொய்யாக்குகின்றனர். எவர்கள் விசாரணைக் காலத்தைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கடுமையாக பற்றி எயும் நரகத்தையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன் 25:9, 10, 11)
அதாவது, சிறியவர்-பெரியவர், பலவீனர்-வலியவர், மதிப்புடையவர்-மதிப்பற்றவர், சுதந்திரமானவர்-அடிமை, ஏழை-பணக்காரர் என்ற அனைத்துத் தரப்பினருக்கும் தூதுத்துவத்தை எடுத்துரைப்பதே முஹம்மது (ஸல்) அவர்களது பணி! எனவே அரசாங்க தூதர்களைப் போல படை பட்டாளம், பாதுகாவலர், பணியாட்கள் ஆகியோர் சூழ முஹம்மது (ஸல்) இருந்தால் மக்களில் பெரும்பான்மையாக இருக்கும் சாதாரணமான மனிதர்களும் ஏழை எளியோரும் எவ்வாறு அவரைச் சந்தித்து பயன்பெற முடியும்? எனவே அரசர்களைப் போன்று ஆடம்பரமாக வாழ்ந்தால் நபித்துவத்தின் நோக்கமே அடிபட்டுவிடும் என்றும் அல்லாஹ் தெளிவுபடுத்தினான்.
அடுத்து, மரணத்துக்குப் பின் எழுப்பப்படுவதை அவர்கள் மறுத்து வந்தார்கள். அது அறிவுக்கு எட்டாததாகவும் ஆச்சரியமானதாகவும் அவர்களுக்குத் தென்பட்டது. அவர்களின் இக்கூற்றை பற்றி இதோ அல்குர்ஆன் விவரிக்கிறது:
“நாம் இறந்து (உக்கி) எலும்பாகவும் மண்ணாகவும் போன பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா? (என்றும்) (அவ்வாறே) நம்முடைய மூதாதைகளுமா? (எழுப்பப்படுவார்கள்” என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 37:16, 17)
(அன்றி, “இத்தூதர் கூறுகின்றபடி) நாம் இறந்து உக்கி மண்ணாகப்போனதன் பின்னரா (உயிர்கொடுத்து மீளவைக்கப்படுவோம்?) இவ்வாறு மீளுவது வெகு(தூர) தூரம். (மீளப்போவதே இல்லை” என்றும் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 50:3)
எனினும், எவர்கள் நிராகரிக்கின்றவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) “நீங்கள் (இறந்து மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடியதொரு மனிதனை நாம் உங்களுக்கு அறிவிக்கவா” என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அன்றி, (இம்மனிதர்) “அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கொண்டாரோ அல்லது அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ” என்று (அவரிடம் கூறுகின்றனர்.) அவ்வாறன்று! எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள்தாம் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர்.(அல்குர்ஆன் 34:7, 8)
மரணத்திற்கு பிறகு எழுப்படுவதை பரிகாசம் செய்து அவர்கள் கவிதையும் பாடினர்,
“மரணமா? பிறகு எழுப்புதலா? பிறகு ஒன்று சேர்த்தலா? உம்மு அம்ரே இது என்னே கற்பனை கதை?”
உலகில் நடைபெறும் நிகழ்வுகளை அல்லாஹ் அவர்களது சிந்தனைக்கு உணர்த்தி, அவர்களது கூற்றுக்கு மறுப்புரைத்தான். அதாவது, அநீதமிழைத்தவன் அதற்குரிய தண்டனையை அனுபவிக்காமலும், அநீதத்திற்குள்ளானவன் அதற்குரிய பரிகாரத்தைப் பெறாமலும் மரணித்து விடுகிறான். அவ்வாறே, நன்மை செய்தவன் அதற்குரிய நற்பலனையும், தீமை செய்தவன் அதற்குரிய தண்டனையையும் அனுபவிக்காது மரணமடைகின்றான். மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கையும் அங்கு ஒவ்வொரு செயலுக்குமான தகுந்த கூலியும் என்ற நியதி இல்லாதிருந்தால், இந்த இரு வகையினரும் சமமாகி விடுவார்கள். அதுமட்டுமின்றி பாவியும் அநீதமிழைத்தவனும் நல்லவரை விடவும் அநீதமிழைக்கப்பட்டவனை விடவும் பாக்கியத்திற்குரியவர்களாக ஆகி விடுவார்கள். ஆனால், நீதமானவனான அல்லாஹ் தனது படைப்பினங்களை இத்தகைய முரண்பாட்டில் வைத்துவிடுவான் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும். இதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் விவரிக்கிறான்.
(நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பளிக்கின்றீர்கள்? (அல்குர்ஆன் 68:35, 36)
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைப் பூமியில் விஷமம் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது இறை அச்சமுடைய வர்களை (பயமற்று குற்றம் புரியும்) பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? (அல்குர்ஆன் 38:28)
எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் தாம் ஆகிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே! அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்துகொண்ட முடிவு மகா கெட்டது. (அல்குர்ஆன் 45:21)
மறுமுறை எழுப்புவது அல்லாஹ்விற்கு முடியுமா? என்ற அவர்களின் சந்தேகத்திற்கு இதோ அல்லாஹ் பதில் அளிக்கின்றான்.
(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அந்த வானத்தைப் படைத்தான். (அல்குர்ஆன் 79:27)
வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமுமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றலுடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 46:33)
முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கின்றீர்கள். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.) (அல்குர்ஆன் 56:62)
அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர்கொடுத்து) அவற்றை மீள வைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (உதாரணமும் பரிசுத்தத்) தன்மை(யும்)தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 30:27)
எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீளவைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம். (அல்குர்ஆன் 21:104)
(படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமர் (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குக் கஷ்டமெனக் கூறுவதற்கு?) எனினும் (மீண்டும் இவர்களைப்) புதிதாக படைக்கும் விஷயத்தில் இவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 50:15)
இவ்வாறு அவர்களது அனைத்து சந்தேகங்களுக்கும் அறிவார்ந்த விளக்கத்தை அல்லாஹ் அளித்தான். எனினும், அந்தக் நிராகரிப்பவர்கள் ஆணவத்தால் சிந்திக்க மறுத்து தங்களது கருத்தையே மக்களிடம் திணித்துக் கொண்டிருந்தனர்.
3) முன்னோர்களின் கட்டுக்கதைகளைக் கூறி திருமறையை செவியேற்காதவாறு மக்களைத் தடுப்பது
நிராகரிப்பவர்கள் மேற்கண்ட சந்தேகங்களுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. மக்கள் குர்ஆனை செவியேற்கவோ இஸ்லாமிய அழைப்புக்கு பதில் தரவோ இயலாதவாறு அவர்களிடையே புகுந்து தங்களால் இயன்றவரை தடைகளை ஏற்படுத்தினார்கள். இஸ்லாமிய அழைப்பைக் கேட்கும் மக்களிடையே நுழைந்து கூச்சல், குழப்பங்களையும், சலசலப்பையும் ஏற்படுத்தி அவர்கள் குழுமியுள்ள அந்த இடங்களிலிருந்து அவர்களை மிரண்டு ஓடவைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அழைப்பு விடுப்பதற்கு அல்லது தொழுவதற்கு அல்லது குர்ஆன் ஓதுவதற்கு தயாரானால் பாட்டுப்பாடி ஆட்டம் போடுவார்கள். இது குறித்து அடுத்து வரும் வசனம் அருளப்பட்டது:
நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) “நீங்கள் இந்த குர்ஆனை செவிமடுக்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதினாலும்) நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு அதில் கூச்சல், குழப்பம் உண்டுபண்ணுங்கள். அதனால் நீங்கள் (முஸ்லிம்களை) வென்றுவிடலாம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 41:26)
இத்தகைய இடையூறுகளால் நபி (ஸல்) அவர்களுக்கு மக்கள் மன்றங்களிலும் பொதுச் சபைகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதும் குர்ஆனை ஓதிக் காண்பிப்பதும் மிகச் சிரமமாக இருந்தது. எனவே, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மக்கள் முன்னிலையில் தோன்றி சொல்லவேண்டிய விஷயத்தை எடுத்துச்சொல்லி, ஓதிக்காட்ட வேண்டியதை ஓதிக்காட்டி விடுவார்கள். கடினமான இந்நிலை நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டு இறுதிவரை நீடித்தது.
குறைஷியர்களில் ஒருவனான “நள்ரு இப்னு ஹாரிஸ்’ ஒரு முறை “ஹீரா’ சென்றிருந்தபோது அங்கிருந்து பாரசீக அரசர்கள் மற்றும் ருஸ்தும், இஸ்ஃபுந்தியார் ஆகியோரின் கதைகளை கற்று வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு சபையில் உபதேசம் செய்யவோ, அல்லாஹ்வைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவோ தொடங்கினால், அவர்களுக்குப் பின் “நழ்ரு’ நின்று கொண்டு “குறைஷியரே! முஹம்மதை விட நான் அழகாகப் பேசுவேன்” என்று கூறி, தான் கற்று வந்த கதைகளைக் கூறி முடித்தபின் “என்னை விட முஹம்மது அழகாகப் பேசிட முடியுமா?” என்று கேட்பான். (இப்னு ஹிஷாம்)
இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: இனிமையாக பாட்டுப் பாடும் ஓர் அடிமைப் பெண்ணை நழ்ரு விலைக்கு வாங்கியிருந்தான். இஸ்லாமை ஏற்க எவரேனும் விரும்பினால் அவரிடம் தனது பாடகியை அழைத்துச் சென்று “இவருக்கு உணவளித்து, மதுவைப் புகட்டி, இனிமையாக பாட்டுப் பாடு” என்று அவளிடம் கூறுவான். பிறகு, அம்மனிதரிடம் “முஹம்மது உன்னை அழைக்கும் காரியத்தைவிட இது மிகச் சிறந்தது” என்று கூறுவான். இது குறித்து பின்வரும் வசனம் அருளப்பட்டது. (துர்ருல் மன்ஸுர்)
(இவர்களைத் தவிர) மனிதல் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் மற்றும்) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (அல்குர்ஆன் 31:6)
துன்புறுத்துதல்
நபி (ஸல்) அவர்களின் பகிரங்க அழைப்பைத் தொடர்ந்து பல மாதங்கள் எதிரிகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. தாங்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்று அவர்களின் அறிவுக்கு மெதுவாக உரைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர். அதாவது, ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள், அடிமைகள்- இவர்களில் யாராவது இஸ்லாமைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
தலைவர்களுடன் அவர்களது எடுபிடிகளும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக, சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும். அவற்றை சொல்லி மாளாது.
செல்வமும் செல்வாக்குமுள்ள ஒருவர் இஸ்லாமைத் தழுவினால் அவரிடம் அபூஜஹ்ல் நேரே சென்று “உன் செல்வத்தையும் செல்வாக்கையும் ஒன்றுமில்லாமலாக்கி விடுவேன்” என்று மிரட்டுவான். அவர் கொஞ்சம் பலமில்லாதவராக இருந்தால் அடித்துத் துன்புறுத்துவான். (இப்னு ஹிஷாம்)
உஸ்மான் (ரழி) அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாவி முஸ்லிம்களை பேரீத்தங்கீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)
தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் பெரும் துன்பத்தை அனுபவித்தார். பசி, பட்டினி என்ற வறண்ட வாழ்க்கையினால் அவர்களது மேனியின் தோல் சுருங்க ஆரம்பித்தது. (அஸதுல் காபா)
ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) நினைவிழக்கும் வரை கடுமையாக தாக்கப்படுவார். (அஸதுல் காபா)
பிலால் (ரழி) அவர்கள் உமய்யா இப்னு கலஃபுடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர்கள் அவரை மக்காவின் கரடு முரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார்கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும். அவர்கள் “அஹத்! அஹத்!“” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமையா பிலாலை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத் தாக்குவான். பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான். உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின்மீது பாறாங்கல்லைத் தூக்கி வைப்பான். அப்போது பிலாலை நோக்கி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீ சாக வேண்டும். அல்லது முஹம்மதின் மார்க்கத்தை நிராகரித்து லாத், உஜ்ஜாவை வணங்க வேண்டும். அதுவரை நீ இப்படியேதான் இருப்பாய். உன்னை விடவே மாட்டேன்” என்பான். அதற்கு பிலால் (ரழி) அஹத்! அஹத்! என்று சொல்லிக் கொண்டே, “இந்த “அஹத்’ என்ற வார்த்தையைவிட உனக்கு ஆவேசத்தை உண்டு பண்ணும் வேறொரு வார்த்தை எனக்குத் தெரிந்தால் நான் அதையே கூறுவேன்” என்பார்கள்.
ஒரு நாள் பிலால் (ரழி) சித்திரவதைக்குள்ளாகி இருக்கும்போது அவர்களைக் கடந்து சென்ற அபூபக்ர் (ரழி) அவர்கள் ஒரு ஹபஷி அடிமையை கிரயமாகக் கொடுத்து பிலால் (ரழி) அவர்களை வாங்கி உரிமை விட்டார்கள். சிலர் “ஐந்து அல்லது ஏழு ஊகியா வெள்ளிக்குப் பகரமாக வாங்கி உரிமை விட்டார்கள்” என்று கூறுகின்றனர். (இப்னு ஹிஷாம்)
அம்மார் இப்னு யாஸிர் (ரழி), அவர்களது தகப்பனார் யாஸிர், தாயார் ஸுமய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹுதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர். இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் “அப்தஹ்’ என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடு மணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர். இதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “யாஸின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது” என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவர்களின் வேதனையாலேயே யாஸிர் (ரழி) இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்து இயலாதவராக இருந்த அம்மான் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். இவரே இஸ்லாமிற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியாவார்.
அவர்களது மகனாரான அம்மாரை பாலைவனச் சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தும், நினைவிழக்கும் வரை தண்ணீல் மூழ்கடித்தும் சித்திரவதை செய்தனர். “முஹம்மதை திட்ட வேண்டும் அல்லது லாத், உஜ்ஜாவைப் புகழ வேண்டும். அப்போதுதான் உன்னை இத்தண்டனையிலிருந்து விடுவிப்போம்” என்றும் கூறினர். வேதனை தாளாத அம்மார் (ரழி) அவர்கள் நிராகரிப்பவர்களின் கட்டளைக்கு இணங்கி விட்டார். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அழுது மன்னிப்புக் கோரினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கியருளினான். (இப்னு ஹிஷாம்)
(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றிக் கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவனுடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 16:106)
அஃப்லஹ் அபூ ஃபுகைஹா (ரழி) அவர்கள் அப்து தார் கிளையைச் சார்ந்த ஒருவருடைய அடிமையாக இருந்தார். இவரது இரு கால்களையும் சங்கிலியால் பிணைத்து, ஆடைகளைக் கழற்றிவிட்டு சுடுமணலில் குப்புறக் கிடத்தி அசையாமலிருக்க பெரும் பாறையை முதுகின் மீது வைத்து, சுய நினைவை இழக்கும்வரை அவரை அதே நிலையில் விட்டுவிடுவார்கள். இவ்வாறான கொடுமைகள் தொடர்ந்தன. ஒருமுறை அவரது கால்களைக் கயிற்றால் பிணைத்துச் சுடுமணலில் கிடத்தி கழுத்தை நெறித்தார்கள். அவர் சுயநினைவை இழந்தவுடன் இறந்துவிட்டாரென எண்ணி விட்டுவிட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த அபூபக்ர் (ரழி) அஃப்லஹை விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். (அஸதுல் காபா)
கப்பாப் இப்னு அரத் (ரழி) அவர்கள் உம்மு அன்மார் என்ற பெண்ணின் அடிமையாகவும், கொல்லர் பணி செய்பவராகவும் இருந்தார்கள். அவர் இஸ்லாமைத் தழுவியதை அறிந்த எஜமானி பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பால் அவர்களது தலையிலும் முதுகிலும் சூடிட்டு “முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடு” என்று கூறுவாள். ஆனால் இவ்வாறான வேதனைகளால் அவர்களது ஈமானும்” மன உறுதியுமே அதிகரித்தது. உம்மு அன்மார் மட்டுமின்றி ஏனைய நிராகரிப்பவர்களும் அவரது முடியைப் பிடித்திழுப்பார்கள்; கழுத்தை நெறிப்பார்கள். நெருப்புக் கங்குகளின் மீது அவரைப் படுக்க வைப்பார்கள். அந்த நெருப்பு அவரது உடலைப் பொசுக்க, அப்போது இடுப்பிலிருந்து கொழுப்பு உருகி ஓடி, நெருப்பை அணைத்து விடும்.(அஸதுல் காபா)
ரோம் நாட்டைச் சேர்ந்த அடிமையான ஜின்னீரா (ரழி) என்ற பெண்மணி இஸ்லாமை ஏற்றதற்காக பலவிதமான கொடுமைக்கு ஆளானார். அப்போது கண்ணில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பார்வையை இழந்தார். “இவரது கண்ணை லாத், உஜ்ஜா பறித்துவிட்டன” என்று நிராகரிப்பவர்கள் கூறினர். அதற்கு ஜின்னீரா, “நிச்சயமாக இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. அவன் நாடினால் எனக்கு நிவாரணமளிப்பான்” என்று கூறினார். மறுநாள் அவர்களது பார்வையை அல்லாஹ் சசெய்தான். அதைக் கண்ட குறைஷியர்கள் “இது முஹம்மதின் சூனியத்தில் ஒன்று” எனக் கூறினர். (இப்னு ஹிஷாம்)
உம்மு உபைஸ் (ரழி) என்ற பெண்மணி அஸ்வத் இப்னு அப்து யகூஸ் என்பவனின் அடிமையாக இருந்தார். இவன் நபி (ஸல்) அவர்களின் கொடும் விரோதியாகவும் நபியவர்களை பரிகசிப்பவனாகவும் இருந்தான். அவன் உம்மு உபைஸை கொயூரமாக வேதனை செய்தான். (இஸாபா)
அம்ர் இப்னு அதீ என்பவனின் அடிமைப் பெண்ணும் இஸ்லாமை ஏற்றார். அவரை (அப்போது இஸ்லாமை ஏற்காதிருந்த) உமர் (ரழி), தான் களைப்படையும் வரை சாட்டையால் அடித்துவிட்டு “நீ மரணிக்கும்வரை உன்னை நான் விடமாட்டேன்” என்று கூறுவார். அதற்கு அப்பெண்மணி “அப்படியே உமது இறைவனும் உம்மைத் தண்டிப்பான்” என்று கூறுவார். (இப்னு ஹிஷாம்)
இஸ்லாமை ஏற்றதற்காக கொடுமை செய்யப்பட்ட அடிமைப்பெண்களில் நஹ்திய்யா (ரழி) என்பவரும் அவரது மகளும் அடங்குவர். இவ்விருவரும் அப்துத்தான் கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அடிமையாக இருந்தனர். (இப்னு ஹிஷாம்)
இஸ்லாமை ஏற்றதற்காகக் கொடுமை செய்யப்பட்ட ஆண் அடிமைகளில் ஆமிர் இப்னு புஹைரா (ரழி) என்பவரும் ஒருவர். நினைவிழந்து சித்தப் பிரமை பிடிக்குமளவு அவரை கொடுமைப்படுத்தினார்கள். (இப்னு ஹிஷாம்)
இம்மூவரையும் அபூபக்ர் (ரழி) விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். இதைக் கண்ட அவர்களது தந்தையான அபூ குஹாஃபா “நீ பலவீனமான அடிமைகளை விலைக்கு வாங்கி உரிமை விடுகிறாய். திடகாத்திரமான ஆண் அடிமைகளை வாங்கி உரிமையளித்தால் அவர்கள் உனக்கு பக்கபலமாக இருப்பார்களே!” என்றார்.
அதைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் திருப்தியை நாடியே செய்கிறேன்” என்றார்கள். அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்தும் இஸ்லாமின் எதிரிகளை இகழ்ந்தும் அடுத்துள்ள வசனங்களை இறக்கினான்.
(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெயும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன். மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்ல மாட்டான். அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான். (அல்குர்ஆன் 92:14-16)
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள துர்பாக்கியமுடையவன் உமைய்யாவும் அவனுடைய வழியில் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தியவர்களுமாவர்.
இறையச்சமுள்ளவர்தான் அதிலிருந்து தப்பித்துக் கொள்வார். (அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்ளும் பொருட்டுத் தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார். அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும், மிக்க மேலான தன் இறைவனின் முகத்தை விரும்பியே தானம் கொடுப்பார். (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார். (அல்குர்ஆன் 92:17-21)
இவ்வசனத்தில் இறையச்சமுள்ளவர் என குறிப்பிடப்படுபவர் அபூபக்ர் (ரழி) அவர்களாவார். (இப்னு ஹிஷாம்)
அபூபக்ர் (ரழி) அவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள். நவ்ஃபல் இப்னு குவைலித் என்பவன் அபூபக்ர் (ரழி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) இருவரையும் தொழக்கூடாது என்பதற்காக ஒரே கயிற்றில் இருவரையும் பிணைத்துவிட்டான். ஆனால், கட்டவிழ்ந்து அவ்விருவரும் தொழுவதைக் கண்ட நவ்ஃபல் அஞ்சி நடுங்கினான். இருவரும் ஒரே கயிற்றில் பிணைக்கப் பட்டதால் அவர்களை “கரீனைன் - இணைந்த இருவர்” என்று கூறப்படுகிறது. சிலர் இருவரையும் கட்டியது நவ்ஃபல் அல்ல, தல்ஹாவின் சகோதரன் உஸ்மான் இப்னு உபைதுல்லாஹ்தான் என்று கூறுகின்றனர்.
(மேற்கூறிய சம்பவங்கள் மக்கா முஸ்லிம்கள் பட்ட இன்னல்களுக்கு எடுத்துக் காட்டாகும்.) இஸ்லாமைத் தழுவிய எவரையும் அவர்கள் துன்புறுத்தாமல் விட்டதில்லை. எளிய முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்காகப் பழிவாங்கவும் எவருமில்லை என்பதால் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பது நிராகரிப்பவர்களுக்கு மிக எளிதாக இருந்தது. அடிமைகளாக இருந்தவர்களை அவர்களது எஜமானர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் கொடுமைப் படுத்தினர். இஸ்லாமைத் தழுவியவர் செல்வமும் செல்வாக்கும் உடையவராக இருந்தால், அவர்களுக்கு அவர்களது கூட்டத்தார் பாதுகாவலாக இருந்தனர். சில வேளைகளில் குரோதத்தின் காரணமாக அவர்களது கூட்டத்தினரே அவர்களை கொடுமை செய்தனர்.
குறைஷிகளும் நபியவர்களும்...
நபி (ஸல்) அவர்கள் கம்பீரமாகவும் தனித்தன்மையுடனும் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களை காண்பவர் நண்பரானாலும் விரோதியானாலும் அவரது மனதில் நபி (ஸல்) அவர்கள் பற்றிய உயர்வான எண்ணமும் மதிப்பும் மரியாதையும் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. இழி மக்களே நபி (ஸல்) அவர்களிடம் அற்பமாக நடந்துகொள்ளத் துணிவர். மேலும், குறைஷியரின் மிக மதிக்கத்தக்க தலைவராக கருதப்பட்ட அபூதாலிபின் பாதுகாப்பிலிருந்த நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்துவது குறைஷியர்களுக்கு சிரமமாக இருந்தது. இந்நிலை குறைஷியர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தங்களுக்கு எவ்விதத் துன்பமும் ஏற்படாமல் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்பினர். நபி (ஸல்) அவர்களின் காப்பாளரான அபூதாலிபிடம் நுட்பமான முறையிலும் அச்சுறுத்தும் தொனியிலும் பேச்சுவார்த்தை நடத்தி அவரை தங்களது கோரிக்கை களுக்கு இணங்க வைக்க முடிவெடுத்தனர்.
குறைஷியர் குழுவும் அபூதாலிபும்
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: சில குறைஷித் தலைவர்கள் அபூதாலிபிடம் சென்று “அபூதாலிபே! நிச்சயமாக உமது சகோதரர் மகன் எங்களது கடவுளர்களை ஏசி, எங்களது மார்க்கத்தையும் குறை கூறுகிறார். எங்களில் உள்ள அறிஞர்களை மூடர்களாக்கி எங்களது மூதாதையர்களை வழிகெட்டவர்களாக்கி விட்டார். நீரும் அவருக்கு எதிரான எங்களது மார்க்கத்தில் இருப்பதால் இவ்வாறான செயல்களிலிருந்து அவரை நீரே தடுத்துவிடும். அல்லது எங்களிடம் ஒப்படைத்துவிடும். அவரை என்ன செய்வதென நாங்கள் முடிவெடுத்துக் கொள்கிறோம்” என்றனர். அபூதாலிப் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். (இப்னு ஹிஷாம்)
இந்த சந்திப்புக் குறித்து அபூதாலிப் நபி (ஸல்) அவர்களிடம் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. வழக்கம்போல் நபி (ஸல்) அவர்கள் தங்களது அழைப்புப் பணியைச் செய்தார்கள். இதைக் கண்ட குறைஷியர்கள் கோபமுற்று மறுமுறை அபூதாலிபை சந்திக்க நாடினர். இம்முறை மிக வன்மையாகக் கண்டித்துப் பேச வேண்டுமென முடிவு செய்தனர்.
அபூதாலிபை மிரட்டுதல்
குறைஷித் தலைவர்கள் அபூதாலிபை சந்தித்து “அபூதாலிபே! நீர் வயது முதிர்ந்தவர். எங்களது மதிப்பைப் பெற்றவர். நாங்கள் உமது சகோதரர் மகனைத் தடுத்து நிறுத்தக் கூறியும் நீர் அவரைத் தடுக்கவில்லை. அவர் எங்களது மூதாதையர்களைத் திட்டுவதையும் எங்களது அறிஞர்களை மூடர்களாக்குவதையும் எங்களது கடவுளர்களைக் குறை கூறுவதையும் கண்டு நாங்கள் பொறுமை காக்க முடியாது. நீரே அவரை சரிசெய்துவிடும். இல்லையெனில் நமது இரு கூட்டத்தால் ஒரு கூட்டம் அழியும் வரை உம்முடனும் அவருடனும் நாங்கள் போர் செய்வோம்” என்றனர்.
இந்த எச்சரிக்கையும் அச்சுறுத்தலும் அபூதாலிபுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச்செய்து நடந்ததைக் கூறி “எனது சகோதரர் மகனே! உமது கூட்டத்தார் என்னிடம் இவ்வாறெல்லாம் கூறிச் சென்றார்கள். எனவே, நீ என்மீது கருணை காட்டு! பலவீனமான என்னை தாங்கவியலா துன்பத்தில் ஆழ்த்திவிடாதே” என்றார். அபூதாலிப் மனம் தளர்ந்து தன்னைக் கைவிட்டு விட்டார் என்று கருதிய நபி (ஸல்) அவர்கள் “என் பெரியதந்தையே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது ஏகத்துவ அழைப்புப் பணியை விடுவதற்காக அவர்கள் சூரியனை எனது வலக்கரத்திலும், சந்திரனை எனது இடக்கரத்தில் வைத்தாலும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்யும்வரை அல்லது நான் அழியும்வரை இதை விடமாட்டேன்” என்று கூறிவிட்டு கண் கலங்கியவர்களாக அங்கிருந்து வெளியேறினார்கள். அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை அழைத்து “என் சகோதரர் மகனே! நீ விரும்பியதைச் செய்துகொள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! எந்த நிலையிலும் எவரிடமும் உம்மை ஒப்படைக்க மாட்டேன்” என்று கூறி சில கவிதைகளையும் பாடினார்.
“அல்லாஹ்வின் மீது சத்தியம்! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் உன்னை நெருங்க முடியாது. நான் மண்ணில் தலைவைக்கும் வரை! உனது விஷயத்தை வெளிப்படையாக சொல். உன்மீது குற்றமில்லை. கண்குளிர்ந்து மகிழ்ச்சி கொள்!...” (இப்னு ஹிஷாம்)
மீண்டும் குறைஷியர்கள்...
நபி (ஸல்) தங்களது ஏகத்துவ அழைப்பை நிறுத்தாமல் தொடர்வதைக் கண்ட குறைஷியர்கள், அபூதாலிப் முஹம்மதை கைவிட மறுத்து நம்மைப் பிரியவும் விரோதித்துக் கொள்ளவும் துணிந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டனர். அவர்கள் வலீதின் மகன் அமாராவை அழைத்துக் கொண்டு அபூதாலிபிடம் வந்தனர். “அபூதாலிபே! இவ்வாலிபர் குறைஷியரில் சிறப்பாக வளர்க்கப்பட்ட அழகிய வாலிபர். அவரது சகல உரிமைகளும் உமக்குரியது. இவரை உமது மகனாக வைத்துக் கொண்டு, உமது மார்க்கத்திற்கும் உமது மூதாதையர்களின் மார்க்கத்திற்கும் முரண்பட்டு, உமது கூட்டத்தாரிடையே பிளவை ஏற்படுத்தி, அவர்களின் அறிஞர்களை மூடர்களாக்கிய உமது சகோதரர் மகனை எங்களிடம் ஒப்படைத்துவிடும். ஒருவருக்கு ஒருவர் என சரியாகி விடும். நாங்கள் அவரைக் கொன்று விடுகிறோம்” என்றனர். அவர்களிடம் அபூதாலிப் மிகுந்த கோபத்துடன் “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களது பேரம் மிக மோசமானது. உங்கள் பிள்ளையை என்னிடம் ஒப்படைப்பீர்கள். அதை நான் ஊட்டி வளர்க்க வேண்டும்! எனது மகனை உங்களிடம் நான் ஒப்படைப்பேன். நீங்கள் அவரைக் கொலை செய்வீர்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! இது ஒருபோதும் நடக்காது” என்று கூறினார். அதற்கு முத்இம் இப்னு அதீ (அப்து மனாஃபின் கொள்ளுப்பேரர்) “அபூதாலிபே! உமது கூட்டத்தினர் உமக்கு நீதமான தீர்வைக் கூறி நெருக்கடியிலிருந்து உம்மை விடுவிக்க முயன்றனர். ஆனால் நீர் அதில் எதையும் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லையே!” என்றார். அதற்கு அபூதாலிப் “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் நீதம் காட்டவில்லை. (முத்இமே) நீ என்னைக் கைவிட்டு விட்டு எனக்கு எதிராக இக்கூட்டத்தினரைத் தூண்டிவிடுகிறாய்; அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறாய். நீ விரும்பியதைச் செய்துகொள்” என்று கோபமாகக் கூறினார். (இப்னு ஹிஷாம்)
அபூதாலிபின் மூலமாக நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை முடக்கிவிட வேண்டுமென்ற தங்களது திட்டத்தில் தோல்வியுற்ற குறைஷியர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூதாலிப் தானாக விலகிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கத் திட்டமிட்டனர்.
நபியவர்கள் மீது அத்துமீறல்
நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டு அழைப்புப் பணியைத் தொடங்கும் வரை குறைஷியர்கள் அவர்களை தங்களில் மதிக்கத்தக்க நபராகவே கருதி வந்தனர். அழைப்புப் பணியைத் தொடங்கியதும் அவர்கள் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நபி (ஸல்) அவர்கள் மீது அத்துமீறாதிருந்தனர். தற்பெருமையும் ஆணவமும் கொண்டிருந்த அவர்களால் நபி (ஸல்) அவர்களின் செயல்பாடுகளை நீண்ட நாள் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. குறைஷித் தலைவர்களில் ஒருவனான அபூ லஹப் அழைப்புப் பணியின் முதல் நாளிலிருந்தே நபி (ஸல்) அவர்களிடம் கடும் பகைமையைக் காட்டி வந்தான் என்பதை ஹாஷிம் கிளையாரின் சபையிலும் ஸஃபா மலை நிகழ்ச்சியிலும் நாம் அறிந்திருக்கிறோம்.
நபித்துவத்துக்கு முன் நபி (ஸல்) அவர்கள் தங்களின் மகள்கள் ருகையா, உம்மு குல்ஸும் (ரழி) அவர்களை அபூலஹபின் மகன்களான உத்பா, உதைபாவுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தொடங்கியதும் அபூ லஹப் தனது மகன்களை நிர்ப்பந்தித்து விவாகரத்துச் செய்ய வைத்துவிட்டான். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது மகனாரான அப்துல்லாஹ் சிறு வயதில் மரணமடைந்த போது அபூலஹப் மட்டில்லா மகிழ்ச்சியுடன் தனது தோழர்களிடம் “முஹம்மது சந்ததியற்றவராகி விட்டார்” என்ற சுபச் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)
ஹஜ்ஜுடைய காலங்களிலும் கடைத்தெருக்களிலும் அபூலஹப் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் சுற்றி வந்து அவர்களைப் “பொய்யர்” என்று கூறுவான். அது மட்டுமல்லாமல் ரத்தம் கொட்டும்வரை அவர்களது பிடரியில் பொடிக்கற்களால் அடித்துக்கொண்டே இருப்பான். (கன்ஜுல் உம்மால்)
அபூ லஹபின் மனைவியும் அபூ ஸுஃப்யானின் சகோதரியுமான உம்மு ஜமீல் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை கொடுப்பதில் தனது கணவனைவிட குறைந்தவளும் அல்ல! சளைத்தவளும் அல்ல! முட்களை நபி (ஸல்) செல்லும் பாதையிலும் அவர்களது வீட்டின் வாசலிலும் வைத்து விடுவாள். மிகக் கெட்டவளான இவள் எந்நேரமும் நபி (ஸல்) அவர்களை ஏசிப் பேசிக்கொண்டிருந்தாள். பல பொய்களைப் பரப்பிக் கொண்டே இருப்பாள். நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவித்துக் கொண்டும், பிரச்சினையின் நெருப்பை மூட்டிவிட்டுக் கொண்டும் இருப்பாள். இதனால்தான் அல்குர்ஆன் அவளை “ஹம்மாலதல் ஹத்தப்” விறகை சுமப்பவள் என்று வர்ணிக்கிறது.
தன்னைப் பற்றியும் தனது கணவனைப் பற்றியும் குர்ஆனின் வசனம் இறங்கியதை அறிந்து அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் (ரழி) கஅபத்துல்லாஹ்விற்கு அருகில் உட்கார்ந்திருந்தார்கள். அவளது கையில் குழவிக் கல் இருந்தது. இருவருக்கும் அருகில் அவள் வந்தவுடன் அவளது பார்வையை நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியாமல் அல்லாஹ் பறித்து விட்டான்.
அபூபக்ரைப் பார்க்க முடிந்த அவளால் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியவில்லை. “அபூபக்ரே உமது தோழர் எங்கே? அவர் என்னை கவிதைகளில் ஏசுகிறார் என்று எனக்கு தெரிய வந்துள்ளது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை நான் பார்த்தால் இக்குழவிக் கல்லால் அவரது வாயிலேயே அடிப்பேன். அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கும் நன்றாகக் கவி பாடத்தெரியும்” என்று கூறிய பின் அடுத்து வரும் கவிதையைப் படித்தாள்.
“இழிவுக்குரியவரைத்தான் நாங்கள் ஏற்க மறுத்தோம்; அவரது கட்டளையை புறக்கணித்தோம்; அவருடைய மார்க்கத்தையும் வெறுத்தோம்.”
பிறகு அவள் திரும்பிச் சென்றுவிட்டாள். அப்போது அபூபக்ர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களைப் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லையா?” என வினவ “அவள் என்னைப் பார்க்கவில்லை. அல்லாஹ் என்னை பார்க்க முடியாமல் அவளது பார்வையை மறைத்து விட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
இச்சம்பவம் பற்றி “முஸ்னத் பஜ்ஜார்’ எனும் நூலின் அறிவிப்பில் வருவதாவது: அவள் அபூபக்ரிடம் வந்து “அபூபக்ரே! உங்கள் தோழர் என்னை கவிதையில் திட்டுகிறார்” என்றாள். அதற்கு அபூபக்ர் (ரழி) “இந்த வீட்டின் இறைவனின் மீது சத்தியமாக! அவருக்கு கவிதை பாடத் தெரியாது” என்று கூறினார்கள். “ஆம்! நீங்கள் சரியாகத்தான் கூறினீர்கள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரனாகவும் நபி (ஸல்) அவர்களின் அண்டை வீட்டுக்காரனாகவும் இருந்த அபூலஹபும் இவ்வாறே செய்து கொண்டிருந்தான். அவனது வீடு நபி (ஸல்) அவர்களின் வீட்டுடன் இணைந்திருந்தது. அவனும் அவனைப் போன்ற நபி (ஸல்) அவர்களின் மற்ற அண்டை வீட்டார்களும் நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள் இருக்கும்போது நோவினை அளித்துக் கொண்டே இருப்பார்கள்.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) வீட்டினுள் இருக்கும்போது நபி (ஸல்) அவர்களின் அண்டை வீட்டார்களான அபூலஹப், ஹகம் இப்னு அபுல்ஆஸ் இப்னு உமைய்யா, உக்பா இப்னு அபீமுயீத், அதீ இப்னு ஹம்ராஃ ஸகஃபீ, இப்னுல் அஸ்தா ஆகியோர் எப்போதும் நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த நோவினை அளித்து வந்தனர். இவர்களில் ஹகம் இப்னு அபுல் ஆஸைத் தவிர வேறு யாரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. தொழுது கொண்டிருக்கும் போது ஆட்டின் குடலை நபி (ஸல்) அவர்களை நோக்கி வீசுவார்கள். நபி (ஸல்) அவர்கள் வீட்டில் சமைப்பதற்காக சட்டியை வைக்கும்போது அதில் ஆட்டுக்குடலை போடுவார்கள். இதற்காகவே இவர்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்காக ஒரு சுவரை ஏற்படுத்திக் கொண்டார்கள். இவர்கள் அசுத்தங்களை தூக்கி எறியும்போது அதைக் குச்சியில் வெளியே எடுத்து வந்து தனது வீட்டு வாசலில் நின்றவண்ணம் “அப்து மனாஃபின் குடும்பத்தினரே! இதுதான் அண்டை வீட்டாருடன் மேற்கொள்ளும் ஒழுக்கமா?” என்று கேட்டு, அதை ஓர் ஓரத்தில் தூக்கி வீசுவார்கள். (இப்னு ஹிஷாம்)
உக்பா இப்னு அபூமுயீத் விஷமத்தனத்தில் எல்லை மீறி நடந்து கொண்டான். இதைப் பற்றி ஒரு சம்பவத்தை இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கஅபாவுக்கு அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அபூஜஹ்லும் அவனது கூட்டாளிகளும் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் “நம்மில் ஒருவர் இன்ன குடும்பத்தாரின் ஒட்டகங்கள் அறுக்குமிடத்திற்குச் சென்று அங்குள்ள குடலை எடுத்து வந்து முஹம்மது சுஜூதிற்கு” சென்ற பின் அவரது முதுகில் வைக்கவேண்டும். யார் அதனை செய்வது?” என்று கேட்டனர். அக்கூட்டத்திலே மிகவும் திமிர் கொண்டவனான உக்பா எழுந்து சென்று குடலை எடுத்து வந்து நபி (ஸல்) அவர்கள் சுஜூதிற்குச் சென்றவுடன் அவர்களது இரு புஜங்களுக்கு இடையில் முதுகின் மீது வைத்து விட்டான். இதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு தடுக்கும் சக்தி இருந்திருக்க வேண்டுமே! அவர்கள் தங்களுக்குள் மமதையாகவும், ஏளனமாகவும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து விழுந்து விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்த முடியாமல் சுஜூதிலேயே இருந்தார்கள். அங்கு வந்த ஃபாத்திமா (ரழி) அதை அகற்றியபோதுதான் நபி (ஸல்) அவர்கள் தலையைத் தூக்கினார்கள்.
பிறகு, “அல்லாஹ்வே! நீ குறைஷிகளைத் தண்டிப்பாயாக!” என்று மூன்று முறை கூறினார்கள். இது குறைஷிகளுக்கு மிகவும் பாரமாகத் தெரிந்தது. மக்காவில் செய்யப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். பிறகு, பெயர் கூறி குறிப்பிட்டு “அல்லாஹ்வே! அபூ ஜஹ்லை தண்டிப்பாயாக! உக்பா இப்னு ரபீஆவையும், ஷைபா இப்னு ரபீஆவையும், வலீத் இப்னு உக்பாவையும், உமைய்யா இப்னு கலஃபையும், உக்பா இப்னு அபூ முயீதையும் நீ தண்டிப்பாயாக!” ஏழாவது ஒருவன் பெயரையும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் எனக்கு அது நினைவில் இல்லை. என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிட்ட நபர்கள் அனைவரும் கொல்லப்பட்டு பத்ரு கிணற்றில் தூக்கி எறியப்பட்டதை நான் பார்த்தேன். (ஸஹீஹுல் புகாரி)
உமையா இப்னு கலஃப் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களை பார்க்கும்போதெல்லாம் பகிரங்கமாக ஏசிக்கொண்டும், மக்களிடம் அவர்களைப்பற்றி இரகசியமாகக் குறை பேசிக்கொண்டும் இருப்பான். இவன் விஷயமாக சூரத்துல் ஹுமஜாவின் முதல் வசனம் இறங்கியது.
குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)
இப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகிறார்: “ஹுமஜா’ என்றால் பகிரங்கமாக ஒருவரை ஏசுபவன். கண் சாடையில் குத்தலாக பேசுபவன். யிலுமஜா’ என்றால் மக்களைப்பற்றி இரகசியமாக குறைகளை பேசுபவன். (இப்னு ஹிஷாம்)
உமையாவின் சகோதரன் உபை இப்னு கலஃபும் உக்பாவும் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையளிப்பதில் ஒரே அணியில் இருந்தனர். ஒருமுறை உக்பா நபி (ஸல்) அவர்களுக்கருகில் அமர்ந்து அவர்கள் ஓதும் சிலவற்றைச் செவிமடுத்தான். இது உபைம்க்குத் தெரிய வந்தபோது உக்பாவைக் கடுமையாகக் கண்டித்தான். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களது முகத்தில் எச்சிலைத் துப்பி வருமாறு அனுப்ப அவனும் சென்று துப்பி வந்தான். உபை இப்னு கலஃப் ஒருமுறை மக்கிப்போன எலும்புகளை நொறுக்கி, பொடியாக்கி நபி (ஸல்) அவர்களை நோக்கி காற்றில் ஊதிவிட்டான்.(இப்னு ஹிஷாம்)
அக்னஸ் இப்னு ஷரீக் என்பவனும் நபி (ஸல்) அவர்களை நோவினை செய்தவர்களில் ஒருவனாவான். இவனைப் பற்றி குர்ஆனில் இவனிடமிருந்த ஒன்பது குணங்களுடன் கூறப்பட்டுள்ளது.
(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீங்கள் வழிப்படாதீர்கள். (அவன்) எப்பொழுதும் (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக் கொண்டுத் திரிபவன். (அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி. கடின சுபாவமுள்ளவன். இதற்கு மேலாக அவன் மக்களிலும் ஈனன். (அல்குர்ஆன் 68:10-13)
அபூஜஹ்ல் சில சமயம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து திருமறையின் வசனங்களை செவிமடுத்துச் செல்வான். ஆனால், நம்பிக்கை கொள்ளவோ, அடிபணியவோ மாட்டான். ஒழுக்கத்துடனோ, அச்சத்துடனோ நடந்து கொள்ளவும் மாட்டான். தனது சொல்லால் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை அளிப்பதுடன் அல்லாஹ்வின் வழியிலிருந்து பிறரைத் தடுத்தும் வந்தான். தனது இச்செயலை புகழ்ந்து பேசுவதற்குரிய நற்காரியம் என்றெண்ணி அகந்தையுடனும் மமதையுடனும் நடந்து செல்வான். இவனைப் பற்றியே பின்வரும் திருமறை வசனங்கள் இறங்கின.
(அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை தொழவு மில்லை. ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான். பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்றுவிட்டான். (அல்குர்ஆன் 75:31-33)
நபி (ஸல்) அவர்களை கண்ணியமிகு பள்ளியில் தொழுதவர்களாகப் பார்த்த தினத்திலிருந்தே அங்கு தொழுவதிலிருந்து நபி (ஸல்) அவர்களைத் தடுத்து வந்தான். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் மகாம் இப்றாஹீமிற்கு” அருகில் தொழுததைப் பார்த்த அவன் “முஹம்மதே! நான் உன்னை இதிலிருந்து தடுத்திருக்க வில்லையா?” என்று கூறிக் கடுமையாக எச்சரித்தான். அதற்கு நபி (ஸல்) அவர்களும் தக்க பதில் கூறி அவனை அதட்டினார்கள். அதற்கு அவன் “முஹம்மதே! எந்த தைரியத்தில் நீ என்னை மிரட்டுகிறாய்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்வோடையில் வசிப்போரில் நானே பெரியசபையுடையவன் (ஆதரவாளர்களைக் கொண்டவன்) என்பது உனக்குத் தெரியாதா?” என்றான். அப்போது,
ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.. (அல்குர்ஆன் 96:17, 18)
ஆகிய வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.
மற்றுமொரு அறிவிப்பில் வந்திருப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் அவனது கழுத்தைப் பிடித்து உலுக்கி, உனக்குக் கேடுதான்; கேடுதான்! உனக்குக் கேட்டிற்கு மேல் கேடுதான்!! (அல்குர்ஆன் 75:34, 35)
என்ற வசனத்தை கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் விரோதியாகிய அவன் “முஹம்மதே! என்னையா நீ எச்சரிக்கிறாய்? நீயும் உனது இறைவனும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. மக்காவில் இரு மலைகளுக்குமிடையில் நடந்து செல்பவர்களில் நானே மிகப்பெரும் பலசாலி” என்று கூறினான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)
இவ்வாறு கண்டித்ததற்குப் பிறகும் கூட அபூஜஹ்ல் தனது மடமையிலிருந்து சுதாரித்துக் கொள்ளாமல் தனது கெட்ட செயலை தீவிரமாக்கிக் கொண்டேயிருந்தான். இதைப் பற்றி ஒரு சம்பவத்தை அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் வாயிலாக இமாம் முஸ்லிம் (ரஹ்) அறிவிக்கிறார்கள்:
“முஹம்மது உங்களுக்கு முன்னிலையில் தனது முகத்தை மண்ணில் வைத்து தேய்க்கிறாராமே” என்று அபூஜஹ்ல் கேட்டான். குழுமியிருந்தவர்கள் “ஆம்!” என்றனர். அதற்கவன் “லாத், உஜ்ஜாவின் மீது சத்தியமாக! நான் அவரைப் பார்த்தால் அவரது பிடரியின் மீது கால் வைத்து அழுத்தி அவரது முகத்தை மண்ணோடு மண்ணாக ஆக்கி விடுவேன்” என்று கூறினான். சிறிது நேரத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்தான். நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவன் நபி (ஸல்) அவர்களின் பிடரியை மிதிக்க முயன்றபோதெல்லாம் பின்னோக்கி விழுந்து தன் கைகளால் சமாளித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். மக்கள் “அபூ ஜஹ்லே! என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர். அதற்கு அவன் “எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழியையும், மிகப்பெரியபயங்கரத்தையும், பல இறக்கைகளையும் பார்த்தேன்” என்று கூறினான். பிறகு நபி (ஸல்) அவர்கள் “அவன் எனக்கருகில் நெருங்கியிருந்தால் வானவர்கள் அவனுடைய ஒவ்வொரு உறுப்பையும் இறாவியிருப்பார்கள் (பிய்த்து எறிந்திருப்பார்கள்)” என்று கூறினார்கள்.
இதற்கு முன் நாம் கூறியதெல்லாம் தங்களை அல்லாஹ்வின் சொந்தக்காரர்கள், அவனது புனித பூமியில் வசிப்பவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் இணைவைப்பவர்களின் கரங்களால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட அநியாயம் மற்றும் கொடுமையின் ஒரு சிறிய தகவல்தான். இத்தகைய இக்கட்டான கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனையையும், வேதனையையும் முடிந்த அளவு இலகுவாக்கி அவற்றிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க மதி நுட்பமான ஒரு திட்டத்தைத் தீட்ட வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்கள். இதற்காக இரண்டு திட்டங்களை நபி (ஸல்) அவர்கள் வகுத்தார்கள். அவ்விரு திட்டங்களால் அழைப்புப் பணியை வழி நடத்துவதிலும், இலட்சியத்தை அடைவதிலும் பற்பல பலன்கள் கிட்டின. அவையாவன:
1) அழைப்புப் பணிக்கு மையமாகவும், ஒழுக்க போதனைக்கு உறைவிடமாகவும் “அர்கம் இப்னு அபுல் அர்கம் மக்ஜூமி’ என்பவன் வீட்டை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
2) முஸ்லிம்களை ஹபஷாவிற்கு (எதியோபியா) குடிபெயருமாறு கட்டளையிட்டார்கள்.
அர்கமின் இல்லத்தில் அழைப்புப் பணி
இந்த வீடு ஸஃபா மலையின் கீழே, அந்த அநியாயக்காரர்களின் கண் பார்வைக்கும் அவர்களது சபைக்கும் தூரமாக இருந்தது. முஸ்லிம்கள் இரகசியமாக ஒன்றுகூட அவ்வீட்டை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வீட்டில் முஸ்லிம்களுக்குக் குர்ஆனை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு அதன் பண்புகளையும் சட்ட ஞானங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார்கள். அங்கு முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டு மார்க்க கல்வியும் கற்று வந்தார்கள். புதிதாக இஸ்லாமிற்கு வர விரும்புபவர் அவ்விடத்தில் வந்து இஸ்லாமைத் தழுவுவார். இது வரம்பு மீறிய அந்த அநியாயக்காரர்களுக்குத் தெரியாததால் முஸ்லிம்கள் ஓரளவு நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் அங்கு இருந்து வந்தனர்.
முஸ்லிம்களையும் நபி (ஸல்) அவர்களையும் ஒருசேர ஓரிடத்தில் இணைவைப்பவர்கள் கண்டுவிட்டால், நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்குக் கற்றுத்தரும் ஒழுக்கப் பணிகளையும், குர்ஆனையும், மார்க்கத்தையும் நிச்சயம் தங்களது சக்திக்கு மீறிய குறுக்கு வழிகளைக் கொண்டு தடுப்பார்கள். அதனால், இரு கூட்டத்தார்களுக்கிடையில் கைகலப்பு கூட நிகழ்ந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் மலைக் கணவாய்களுக்கிடையில் இரகசியமாகத் தொழுது வருவார்கள். ஒருமுறை அதனைப் பார்த்துவிட்ட குறைஷி நிராகரிப்பவர்கள் அவர்களை வாய்க்கு வந்தபடி ஏசிபேசி அவர்களுடன் சண்டையிட்டனர். அச்சண்டையில் ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) ஒருவனை வெட்டி சாய்த்து விட்டார்கள். இதுதான் இஸ்லாமுக்காக செய்யப்பட்ட முதல் கொலை.
இவ்வாறு கைகலப்பு தொடர்ந்தால் முஸ்லிம்கள் அழிக்கப்படலாம். ஆகவே, இரகசியமாக பணிகளைத் தொடர்வதுதான் சரியான முறையாகப்பட்டது. பொதுவாக நபித்தோழர்கள் தாங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களது வணக்க வழிபாடுகளை மறைமுகமாகச் செய்து வந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் மட்டும் குறைஷிகளுக்கு முன்னிலையிலும் தங்களது வணக்க வழிபாடுகளையும் அழைப்புப் பணியையும் பகிரங்கமாக செய்து வந்தார்கள். எதற்கும் அவர்கள் அஞ்சிடவில்லை. ஆனால், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நன்மையைக் கருதியே முஸ்லிம்களை இரகசியமாக சந்தித்து வந்தார்கள்.
ஹபஷாவில் அடைக்கலம்
நபித்துவத்தின் நான்காம் ஆண்டு நடுவில் அல்லது இறுதியில் முஸ்லிம்கள் மீது நிராகரிப்பவர்கள் வரம்பு மீற ஆரம்பித்தனர். தொடக்கத்தில் குறைவாகத் தென்பட்ட துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றன. ஐந்தாம் ஆண்டின் நடுவில் சோதனைகள் மலையாக உருவெடுக்கவே அதிலிருந்து விடுதலைபெற வழி என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். இச்சூழ்நிலையில்தான் “அல்லாஹ்வுடைய பூமி நெருக்கடியானதல்ல. எனவே (இடம்பெயரும்) ஹிஜ்ராவின் வழியை தேர்ந்தெடுங்கள்” என்று சுட்டிக் காட்டப்பட்ட அத்தியாயம் ஜுமல் உள்ள 10வது வசனம் இறங்கியது.
இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக, பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 39:10)
ஹபஷாவின் மன்னராக இருந்த “அஸ்மஹா நஜ்ஜாஷி’ நீதமானவர். அவர் யாருக்கும் அநியாயம் இழைக்கமாட்டார் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே, உயிரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்யுமாறு முஸ்லிம்களை நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நபித்தோழர்களின் ஒரு குழுவினர் முதலாவதாக ஹபஷாவிற்கு நாடு துறந்து செல்ல இருந்தார்கள். இதனை குறைஷிகள் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக இரவின் நடுநிசியில் புறப்பட்டு “ஷுஅய்பா’ துறைமுகத்தை அடைந்தனர். வியாபாரக் கப்பல்கள் இரண்டு அங்கு முகாமிட்டிருந்தன. எப்படியோ மோப்பம் பிடித்த குறைஷிகள், இவர்களைத் தேடி அந்த துறைமுகத்திற்கு வந்துவிட்டார்கள். அதற்குள் முஸ்லிம்கள் வியாபாரக் கப்பல்களில் ஏறி ஹபஷாவுக்கு புறப்பட்டு விட்டார்கள். இதனால் குறைஷிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நாடு துறந்து சென்ற குழுவில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்கு தலைவராக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) இருந்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி (ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும் (ரழி) உடன் இருந்தார்கள். நபி இப்றாஹீம் (அலை), நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா செய்த முதல் குடும்பம் இதுதான்” என்று இவ்விருவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் ஹபஷாவில் வாழ்வை நிம்மதியாகக் கழித்தார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டின் ரஜப் மாதத்தில் நடைபெற்றது. (ஜாதுல் மஆது)
இணைவைப்பவர்களும் சிரம் பணிந்தனர்
அந்த ஆண்டு ரமளான் மாதம் ஓர் இரவு நபி (ஸல்) அவர்கள் புனித பள்ளிக்குச் சென்றார்கள். அங்கு குறைஷியரும் அவர்களது தலைவர்களும் கொண்ட பெருங்கூட்டமொன்று குழுமியிருந்தது. திடீரென அவர்களுக்கு முன் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அத்தியாயம் அந்நஜ்மை ஓதினார்கள். நிராகரிப்பவர்கள் இதற்கு முன் குர்ஆன் வசனங்களைக் கேட்டதில்லை. அதற்குக் காரணம், “குர்ஆனை நீங்கள் கேட்காதீர்கள்; அது ஓதப்படும்போது வீண்செயல்களில் ஈடுபடுங்கள்’ என்று அவர்களில் ஒருவர் மற்றவருக்கு கூறி வந்ததுதான். நிராகரிப்பவர்களின் இந்தக் கூற்றைப் பற்றி,
நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் “இந்தக் குர்ஆனை (உங்கள் காதாலும்) கேட்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டுபண்ணினால் நீங்கள் வென்று விடுவீர்கள்” என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன் 41:26)
என்ற வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை திடீரென ஓத, இனிமையான இறைவசனங்கள் அவர்களது காதுகளை வருடின. இதுவரை கேட்டவற்றில் இத்துணை மதுரமான, செவிக்கு இன்பத்தைத் தரும் சொற்றொடர்களை அவர்கள் இதற்கு முன் கேட்டதில்லை. அல்லாஹ்வின் அந்த வசனங்கள் அவர்களை மிகவும் கவர்ந்தன. அவர்களது உணர்வுகளை அவ்வசனங்கள் முழுமையாக ஆட்கொண்டன. நபி (ஸல்) ஓதுவதை அவர்கள் மெய்மறந்து கேட்டனர். நஜ்ம் அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் கேட்போரின் உள்ளத்தைக் கிடுகிடுக்கச் செய்யும் கோடை இடியாக விளங்குகிறது. இறுதியில், “அல்லாஹ்வுக்கு தலைசாயுங்கள், அவனை வணங்குங்கள்’ என்ற வசனத்தை ஓதி நபி (ஸல்) அவர்கள் சிரம் பணிந்தார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் இறை வசனங்களால் கவரப்பட்டு தங்களை கட்டுப்படுத்த முடியாமல் தாம் என்ன செய்கிறோம் என்பதையும் உணராமல் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து சுஜூதில் வீழ்ந்தனர்.
எதார்த்தத்தில் சத்தியத்தின் ஈர்ப்பு, பெருமை கொண்ட அவர்களின் உள்ளங்களில் உள்ள பிடிவாதத்தைத் தவிடு பொடியாக்கியது. எனவேதான், தங்களை கட்டுப்படுத்த இயலாமல் அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் சுஜூதில் வீழ்ந்தார்கள்.
அல்லாஹ்வுடைய வசனத்தின் மகிமை அவர்களது கடிவாளத்தை திருப்பி விட்டதை உணர்ந்த அவர்கள் மிகவும் கைசேதமடைந்தனர். அவ்வுணர்வை அழிப்பதற்கு உண்டான முழு முயற்சியை செய்தனர். இச்சம்பவத்தில் கலந்துகொள்ளாத இணைவைப்பவர்கள் நாலாபுறங்களில் இருந்தும் அச்செயலைக் கண்டித்ததுடன் பழித்தும் பேசினர். இதனால் சிரம் பணிந்த இணை வைப்பவர்கள் தங்களின் இச்செயலை நியாயப்படுத்துவதற்காக நபி (ஸல்) அவர்கள் மீது ஒரு கதையைக் கட்டிவிட்டனர். அதாவது நபி (ஸல்) அவர்கள் நமது சிலைகளை கண்ணியப்படுத்தும் விதமாக நாம் எப்போதும் கூறி வரும் “தில்க்கள் கரானிக்குல் உலா, வஇன்ன ஷஃபாஅத்த ஹுன்ன லதுர்தஜா” என்பதை ஓதினார்கள். அதனால்தான் நாங்கள் சுஜூது செய்தோம் என்று கதை கட்டினார்கள். (அதன் பொருளாவது: இவைகளெல்லாம் எங்களின் உயர்ந்த சிலைகள். அவைகளின் சிபாரிசு நிச்சயமாக ஆதரவு வைக்கப்படும்.) பொய் சொல்வதை தொழிலாகவும் சூழ்ச்சி செய்வதை வழக்கமாகவும் கொண்ட அக்கூட்டம் இவ்வாறு செய்தது ஓர் ஆச்சரியமான விஷயமல்ல!
முஹாஜிர்கள் திரும்புதல்
இணைவைப்பவர்கள் சுஜூது செய்த விஷயம், ஹபஷாவில் இருந்த முஸ்லிம்களுக்குக் “குறைஷிகள் முஸ்லிமாகிவிட்டனர்’ என்று, உண்மைக்கு புறம்பான தகவலாய் சென்றடைந்தது. அதனால் அதே ஆண்டு ஷவ்வால் மாதத்தில் அந்த முஸ்லிம்கள் மக்காவிற்குத் திரும்பினர். மக்காவிற்கு சற்று முன்னதாகவே உண்மை நிலவரம் முஸ்லிம்களுக்குத் தெரிய வந்தவுடன் சிலர் ஹபஷாவிற்கே திரும்பிவிட்டனர். சிலர் எவருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் சென்றுவிட்டனர். மற்றும் சிலர் குறைஷிகள் சிலர் பாதுகாப்பில் மக்காவிற்குள் நுழைந்தனர்.
மெல்ல மெல்ல குறைஷிகள் இவர்களையும் மற்ற முஸ்லிம்களையும் கடுமையாக வேதனை செய்தனர். அவர்களது நெருங்கிய உறவினர்களும் கூட அவர்களுக்குக் கொடுமை செய்தனர். இந்நிலையில் மறுமுறையும் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்லுங்கள் என தங்களது தோழர்களுக்கு ஆலோசனை கூற வேண்டிய கட்டாயம் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது.
இரண்டாவது ஹிஜ்ரா
முஸ்லிம்கள் பெருமளவில் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் இந்த இரண்டாவது ஹிஜ்ரா முந்திய ஹிஜ்ராவை விட மிக சிரமமாகவே இருந்தது. முஸ்லிம்களின் இப்பயணத்தை குறைஷிகள் அறிந்து கொண்டதால் அத்திட்டத்தை அழிக்க வேண்டுமென்பதற்காக தீவிரமான முயற்சியில் இறங்கினர். ஆனால், அல்லாஹ்வின் அருளால் பயணம் அவர்களுக்குச் சாதகமாகி, நிராகரிப்பவர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாகவே பயணத்தைத் துதப்படுத்தி ஹபஷா மன்னர் நஜ்ஜாஷியை அடைந்தனர்.
இம்முறை 83 ஆண்களும் 18 அல்லது 19 பெண்களும் ஹபஷா சென்றனர். (சிலர் அம்மார் (ரழி) இப்பயணத்தில் செல்லவில்லை. எனவே, ஆண்களில் 82 நபர்கள்தான் என்றும் கூறுகின்றனர்.) (ஜாதுல் மஆது)
குறைஷியர்களின் சூழ்ச்சி
முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும் மார்க்கத்திற்கும் பாதுகாப்புள்ள இடமான ஹபஷாவில் நிம்மதியாக வசிப்பது இணைவைப்பவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர்களில் நுண்ணறிவும், வீரமுமிக்க அம்ரு இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபூரபீஆ ஆகிய இருவரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் நஜ்ஜாஷியையும் அவரது மத குருக்களையும் சந்தித்துப் பேசி, முஸ்லிம்களை நாடு கடத்தும்படி வேண்டுகோள் வைக்கும்போது அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு மதிப்புமிக்க வெகுமதிகளுடன் ஹபஷா அனுப்பி வைத்தனர்.
முதலில் அவ்விருவரும் மத குருக்களிடம் சென்று அவர்களுக்குரிய அன்பளிப்புகளை கொடுத்து முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக தகுந்த காரணங்களைக் கூறினர். அந்த மத குருக்களும் அதனை ஏற்று, முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு நஜ்ஜாஷியிடம் ஆலோசனை கூறுவோம் என்று ஒப்புக் கொண்டனர். பிறகு அவ்விருவரும் நஜ்ஜாஷியிடம் வந்து அவருக்குரிய அன்பளிப்புகளைச் சமர்ப்பித்து அவரிடம் இது குறித்து பேசினர்.
“அரசே! தங்கள் நாட்டுக்கு சில அறிவற்ற வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களது இனத்தவர்களின் மார்க்கத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். உங்களது மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் உங்களுக்கும் நமக்கும் தெரியாத ஒரு புதிய மார்க்கத்தை பின்பற்றுகின்றனர். இவர்களது இனத்திலுள்ளவர்கள் அதாவது இவ்வாலிபர்களின் பெற்றோர்கள், பெற்றோர்களின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இவர்களை அழைத்து வருவதற்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் இவர்களை நன்கு கண்காணிப்பார்கள்; பாதுகாப்பார்கள். அவர்களைப் பற்றி இவர்கள் கூறிய குறைகளை, நிந்தனைகளை அவர்களே நன்கறிந்தவர்கள். ஆகவே, நீங்கள் அவர்களை எங்களுடன் திருப்பி அனுப்பிவிடுங்கள்!” என்று கூறினர். உடனே அங்கிருந்த மத குருக்களும் “அரசே! இவ்விருவரும் உண்மைதான் கூறுகின்றனர். அவர்களை இவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களது இனத்தவர்களிடம் இவர்கள் அவர்களை அழைத்து செல்வார்கள்” என்றனர்.
ஆனால், பிரச்சனையைத் தீர விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து நஜ்ஜாஷி முஸ்லிம்களை அவைக்கு வரவழைத்தார். எதுவாக இருப்பினும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற ஒரே முடிவில் முஸ்லிம்கள் அங்கு சென்றனர். முஸ்லிம்களிடம் “உங்களது இனத்தை விட்டுப் பிரிந்து எனது மார்க்கத்தையும் மற்றவர்களின் மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் புதுமையான மார்க்கத்தை ஏற்றிருக்கிறீர்களே! அது என்ன மார்க்கம்?” என்று நஜ்ஜாஷி கேட்டார்.
முஸ்லிம்களின் பேச்சாளராக இருந்த ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) பதில் கூறினார்கள்: “அரசே! நாங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தோம்; சிலைகளை வணங்கினோம்; இறந்த பிராணிகளைச் சாப்பிட்டோம்; மானக்கேடான காரியங்களைச் செய்தோம்; உறவுகளைத் துண்டித்து அண்டை வீட்டாருக்கு கெடுதிகள் விளைவித்து வந்தோம்; எங்களிலுள்ள எளியோரை வலியோர் விழுங்கி வந்தனர் (அழித்து வந்தனர்.) இப்படியே நாங்கள் வாழ்ந்து வரும்போதுதான் எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான். அவன் வமிசத்தையும், அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும்; உண்மையே உரைக்க வேண்டும்; அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும்; உறவினர்களோடு சேர்ந்து வாழவேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினியான பெண்கள்மீது அவதூறு போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; அவனுக்கு இணைவைக்கக் கூடாது தொழ வேண்டும்; ஏழை வரி (ஜகாத்து) கொடுக்க வேண்டும்; நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார் (ஜஅஃபர் இன்னும் பல இஸ்லாமிய கடமைகளைப் பற்றிய விவரங்களை கூறினார்.) நாங்கள் அவரை உண்மையாளராக நம்பினோம்; அவரை விசுவாசித்தோம்; அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றினோம்; அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறினர்; எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும். முன்பு போலவே கெட்டவைகளைச் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்து எங்களை எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயற்சித்தனர். எங்களை அடக்கி அநியாயம் செய்து நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மார்க்க(மத) சுதந்திரத்துக்கும் அவர்கள் தடையானபோது உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே! எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்” என இவ்வாறு ஜஅஃபர் (ரழி) கூறி முடித்தார்.
“அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர் கொண்டு வந்த ஏதாவது உம்மிடம் இருக்கிறதா?” என்று ஜஅஃபடம் நஜ்ஜாஷி வினவினார். அதற்கு ஜஅஃபர் “ஆம்! இருக்கின்றது” என்றார். நஜ்ஜாஷி, “எங்கே எனக்கு அதை காட்டு” என்றார். காஃப்-ஹா-யா-ஐன்-ஸாத் எனத் தொடங்கும் “மர்யம்’ எனும் அத்தியாயத்தின் முற்பகுதியை ஜஅஃபர் (ரழி) ஓதிக் காண்பித்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாடி நனையும் அளவு நஜ்ஜாஷி அழுதார். அவையில் உள்ளவர்களும் ஜஅஃபர் (ரழி) ஓதியதைக் கேட்டு தங்களின் கையிலுள்ள ஏடுகள் நனையுமளவு அழுதனர். பிறகு நஜ்ஜாஷி, இதுவும் நபி ஈஸா (அலை) கொண்டு வந்த மார்க்கமும் ஒரே மாடத்திலிருந்து வெளியானது (முஸ்லிம்களை அழைக்க வந்த இருவரையும் நோக்கி) “நீங்கள் இருவரும் சென்று விடுங்கள்; உங்களிடம் நான் இவர்களை ஒப்படைக்கமாட்டேன்” என்று கூறினார். அவையில் இருந்த எவரும் அவ்விருவரிடமும் பேசுவதற்குத் தயாராகவில்லை.
அவ்விருவரும் வெளியேறி வந்தவுடன் அம்ர் இப்னு ஆஸ் தமது நண்பர் அப்துல்லாஹ் இப்னு அபூரபீஆவிடம் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர்களை அடியோடு வேரறுப்பதற்குண்டான வேலையை நான் நாளை செய்வேன்” என்று கூறினார். “ஆனால் அப்படி செய்துவிடாதே! அவர்கள் நமக்கு மாறு செய்தாலும் நமது இரத்த பந்தங்களே ஆவார்கள்” என்று அப்துல்லாஹ் கூறினார். ஆனால், அம்ரு தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
மறுநாள் அம்ரு நஜ்ஜாஷியிடம் வந்து “அரசே! இவர்கள் ஈஸாவின் விஷயத்தில் அபாண்டமான வார்த்தையை கூறுகிறார்கள்” என்று கூறினார். “அப்படியா! அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார் நஜ்ஜாஷி. இதை அறிந்தவுடன் சற்று பயமேற்பட்டாலும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற முடிவுடன் முஸ்லிம்கள் அவைக்கு வந்தனர். நஜ்ஜாஷி அவர்களிடம் அது பற்றி விசாரணை செய்தார்.
“எங்களது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறியதைத்தான் நாம் அவர் விஷயத்தில் கூறுகிறோம்: அவர் அல்லாஹ்வின் அடிமை அவனது தூதர்; அவனால் உயிர் ஊதப்பட்டவர்; கண்ணியமிக்க கன்னிப்பெண் மர்யமுக்கு அல்லாஹ்வின் சொல்லால் பிறந்தவர்” என்று ஜஅஃபர் (ரழி) கூறினார்.
நஜ்ஜாஷி கீழேயிருந்து ஒரு குச்சியை எடுத்து “அல்லாஹ்வின் மீது ஆணையாக! மர்யமின் மகன் ஈஸா (அலை) இக்குச்சியின் அளவுகூட நீ கூறியதைவிட அதிகமாக கூறியதில்லை” என்றார். இதைக் கேட்ட அவரது மத குருமார்கள் முகம் சுழித்தனர். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் முகம் சுழித்தாலும் இதுவே உண்மை” என்று நஜ்ஜாஷி கூறிவிட்டார்.
பிறகு நஜ்ஜாஷி முஸ்லிம்களை நோக்கி “நீங்கள் செல்லலாம்! எனது பூமியில் நீங்கள் முழு பாதுகாப்புப் பெற்றவர்கள். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். தங்கத்தின் மலையை எனக்கு கொடுத்தாலும் உங்களைத் துன்புறுத்த நான் விரும்பமாட்டேன்” என்று கூறினார். தனது அவையில் உள்ளவர்களிடம் அவ்விருவர்கள் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர்களிடமே திரும்ப கொடுத்து விடுங்கள். எனக்கு அதில் எவ்வித தேவையும் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் முன்னர் பறிபோன எனது ஆட்சியை எனக்கு மீட்டுத் தந்தபோது என்னிடமிருந்து அவன் லஞ்சம் வாங்கவில்லை. எனவே, நான் அவன் விஷயத்தில் லஞ்சம் வாங்குவேனா? எனக்கு எதிராக அல்லாஹ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவாதபோது அவனுக்கு எதிராக நான் பிரச்சனையாளர்களுக்கு உதவுவேனா? (எனக்கு எதிராக என் எதிரிகளுக்கு அவன் உதவி செய்யாதபோது அவனுக்கு எதிராக நான் அவனது எதிரிகளுக்கு உதவி செய்வேனா?)” என்று கூறினார்.
இச்சம்பவத்தை அறிவிக்கும் உம்மு ஸலமா (ரழி) கூறுவதாவது: அவ்விருவரும் அங்கிருந்து கேவலப்பட்டு வெளியேறினர். அவர்களது அன்பளிப்புகளும் திரும்ப கொடுக்கப்பட்டன. நாங்கள் சிறந்த நாட்டில் சிறந்த தோழமையில் அவரிடம் தங்கியிருந்தோம். (இப்னு ஹிஷாம்)
நபியவர்கள் மீது கொலை முயற்சி
ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்த முஸ்லிம்களைத் திரும்பக் கொண்டு வருவதில் தோல்வியுற்ற இணைவைப்பவர்கள் கடுங்கோபத்தாலும் குரோதத்தாலும் பொங்கி எழுந்தனர். மக்காவில் மீதமிருந்த முஸ்லிம்களின் மீது தங்களது அட்யூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டதுடன் நபி (ஸல்) அவர்களுக்கும் கெடுதிகள் பல செய்யத் துவங்கினர். அவர்களின் செயல்பாடுகளைக் கவனிக்கும்போது அவர்களின் எண்ணப்படி இக்குழப்பத்திற்கு வேராக இருந்த நபி (ஸல்) அவர்களை ஒழித்துக் கட்டவே அவர்கள் முயற்சி செய்தனர் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஹிஜ்ரா செய்தவர்கள் போக மக்காவில் முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே எஞ்சி இருந்தார்கள். அவர்களில் சிலர் சரியான பக்க பலத்துடனும் கோத்திர பாதுகாப்புடனும் இருந்தார்கள். மற்றும் சில முஸ்லிம்கள் சிலன் அடைக்கலத்திலும் பாதுகாப்பிலும் இருந்தனர். ஆனால், எவரும் தங்களது இஸ்லாமை வெளிப்படுத்த துணிவின்றி மறைத்தும், வம்பர்களின் கண்களிலிருந்து முடிந்த அளவு மறைந்தும் ஒதுங்கியும் வாழ்ந்தனர். இவர்கள் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்த போதிலும் நிராகரிப்பவர்களின் தொந்தரவிலிருந்து முழுமையாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எப்போதும் அந்த அக்கிரமக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவே தொழுது வந்தார்கள். வெளிப்படையாகவும் இரகசியமாகவும் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து வந்தார்கள். இதை யாராலும் தடுக்க முடியவில்லை. எந்த ஒன்றும் நபி (ஸல்) அவர்களை இப்பணியிலிருந்து திருப்பி விடவும் முடியவில்லை. ஏனெனில், அல்லாஹ் அவர்களுக்கு,
ஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் அவர்களுக்கு தெளிவாக அறிவித்து விடுங்கள். மேலும், இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (அல்குர்ஆன் 15:94)
என்று கட்டளையிட்டிருந்தான்.
ஆகவே, இணைவைப்பவர்கள் நாடும்போதெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு இடையூறு அளித்து வந்தனர். நபி (ஸல்) அவர்கள் மீது அவர்களுக்கு இயற்கையாக இருந்த பயமும் அபூதாலிப் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்து வந்த பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றால் வெளிப்படையாக நபி (ஸல்) அவர்களை இம்சிக்க அவர்களால் முடியவில்லை. மேலும், ஹாஷிம் கிளையார்கள் தங்களுக்கு எதிராக ஒன்றுகூடி விடுவார்கள் என்பதையும் அவர்கள் பயந்தனர்.
ஆனால், நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி இணைவைப்போரின் மத தலைமைத்துவத்தையும் சிலை வணக்கக் கலாச்சாரத்தையும் தவிடுபொடியாக்கியது. இதன் காரணத்தால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையூறுகள் பல செய்யத் தொடங்கினர்.
இக்காலகட்டத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பதை ஹதீஸ் மற்றும் வரலாற்று நூல்களிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம். அவற்றிள் ஒன்று:
1) அபூலஹபின் மகன் உதைபா நபி (ஸல்) அவர்களிடம் வந்து அத்தியாயம் அந்நஜ்மை ஓதிக் காண்பித்து “இதை நான் மறுக்கிறேன்” என்று கூறி நபி (ஸல்) அவர்கள் மீது பாய்ந்து அவர்களது சட்டையைக் கிழித்து அவர்களது முகத்தில் எச்சிலை துப்பினான். ஆனால், எச்சில் நபி (ஸல்) அவர்கள் மீது விழவில்லை. அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வே! உனது மிருகங்களிலிருந்து ஒரு மிருகத்தை அவன் மீது சாட்டுவாயாக!” என்று அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களின் இந்த வேண்டுதலை அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான். இச்சம்பவத்திற்கு பிறகு உதைபா குறைஷியர்கள் சிலருடன் மக்காவிலிருந்து பயணமானான். ஷாம் நாட்டின் “ஜர்க்கா’ என்ற இடத்தில் தங்கியபோது அன்றிரவு ஒரு சிங்கம் அவர்களைச் சுற்றிச்சுற்றி வந்தது. அப்போது உதைபா “எனது சகோதரனின் நாசமே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹம்மது எனக்கு எதிராக வேண்டிக் கொண்டதுபோல் இந்த சிங்கம் என்னைத் தின்றே முடிக்கும். நானோ ஷாமில் இருக்கின்றேன். அவர் மக்காவில் இருந்து கொண்டே என்னைக் கொன்றுவிட்டார்” என்று கூச்சலிட்டான். பிறகு அவனை தங்களுக்கு நடுவில் ஆக்கிக்கொண்டு மற்றவர்கள் அவனைச் சுற்றி தூங்கினார்கள். ஆனால், இரவில் அந்த சிங்கம் அவர்களைத் தாண்டிச் சென்று உதைபாவின் கழுத்தை கடித்துக் குதறிக் கொன்றுவிட்டது. (தலாயிலுந்நுபுவ்வா)
2) நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் இருக்கும்போது அவர்களுடைய பிடரியின் மீது உக்பா இப்னு அபூ முஈத் மிக அழுத்தமாக மிதித்தான். இதனால் நபி (ஸல்) அவர்களின் விழிகள் பிதுங்கிற்று!
நபி (ஸல்) அவர்களை அந்த வம்பர்கள் கொல்லவேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்தனர் என்பதற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அறிவிக்கும் சம்பவத்தை சான்றாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கூறுவதாவது:
குறைஷிகள் ஹஜருல் அஸ்வதிற்கு அருகில் குழுமியிருந்தனர். நானும் அங்கு இருந்தேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி, “இவர் விஷயத்தில் நாம் பொறுமை காத்ததுபோன்று வேறு எதற்கும் நாம் பொறுமை காத்ததில்லை. இவர் விஷயத்தில் நாம் எல்லைமீறி சகித்து விட்டோம்” என்று பேசிக் கொண்டிருந்தனர். இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் அவ்விடத்திற்கு வருகை தந்து ஹஜருல் அஸ்வதைத் தொட்டுவிட்டு தவாஃபை” தொடங்கினார்கள். கஅபாவைச் சுற்றி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளுக்கு அருகில் நடந்தபோது குறைஷிகள் நபி (ஸல்) அவர்களை குத்தலாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் முகத்தில் அதன் மாற்றத்தை நான் பார்த்தேன். இரண்டாவது முறையாக அவர்களுக்கு அருகில் வந்தபோது மீண்டும் அவ்வாறே குத்தலாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் நின்றுவிட்டார்கள். “குறைஷிகளே! நான் சொல்வதை நீங்கள் (கொஞ்சம்) கேட்டுக் கொள்கிறீர்களா? எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! திட்டவட்டமாக நான் உங்களிடத்தில் உங்களைப் பலியிட்டு விடும் முடிவைக் கொண்டு வந்துள்ளேன். (அதிவிரைவில் உங்களது கதை முடிந்து விடும்)” என்று கூறினார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் திடுக்கிட்டனர். தங்களுக்கு மிகப்பெரியஆபத்தொன்று நிச்சயம் நிகழும் என்பதை உணர்ந்தனர். இதனால் நபி (ஸல்) அவர்களிடத்தில் கொடூரமாக நடந்தவர் கூட நபி (ஸல்) அவர்களை மிக அழகிய முறையில் சாந்தப்படுத்தினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அறிவீனர் அல்லர்! அபுல் காசிமே நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்” என்று கூறி, சாமாதானப்படுத்தினர்.
மறுநாளும் அவ்வாறே ஒன்று சேர்ந்து நபி (ஸல்) அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அங்கு நபி (ஸல்) அவர்கள் தோன்றினார்கள். அவர்கள் அனைவரும் ஒரே பாய்ச்சலாக நபி (ஸல்) அவர்கள் மீது பாய்ந்தனர். அவர்களில் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் போர்வையை பிடித்து இழுத்தான். அவனிடமிருந்து நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றிய அபூபக்ர் (ரழி) “தனது இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதற்காகவா ஒருவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார்கள். பிறகு அனைவரையும் அங்கிருந்து விலக்கி விட்டார்கள். இதுதான் நான் பார்த்ததில் குறைஷிகள் நபி (ஸல்) அவர்களைத் தாக்கிய மிகக் கொடூரமான நிகழ்ச்சி என்று இந்த நிகழ்ச்சியை அறிவிக்கும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) கூறுகிறார்கள்.
ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது: உர்வா இப்னு ஜுபைர் (ரழி) கூறுகிறார்:
நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்களிடம் இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் அரக்கத்தனமாக நடந்து கொண்டவற்றில் மிகக் கொயூரமான ஒன்றை எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கவர் “நபி (ஸல்) அவர்கள் கஅபாவில் ஹஜருல் அஸ்வதிற்கு அருகில் தொழுது கொண்டிருந்தபோது உக்பா இப்னு அபூமுஈத் அங்கு வந்து தனது மேலாடையை நபி (ஸல்) அவர்களின் கழுத்தில் போட்டு மிகக் கடினமாக இறுக்கினான். அபூபக்ர் (ரழி) விரைந்து வந்து அவனது புஜத்தைப் பிடித்துத் தள்ளி நபி (ஸல்) அவர்களை விட்டும் அவனை விலக்கிவிட்டு “தனது இறைவன் அல்லாஹ் என்று கூறியதற்காகவா ஒருவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
இச்சம்பவத்தை அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களை உக்பா இவ்வாறு கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தபோது உங்கள் தோழரை காப்பாற்றுங்கள் என்று ஒருவர் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் வந்து கூறினார். அபூபக்ர் (ரழி) எங்களைவிட்டு வேகமாகப் புறப்பட்டார்கள். அவர்கள் தங்களது தலையில் நான்கு சடை பின்னி இருந்தார்கள். “தனது இறைவன் அல்லாஹ் என்று கூறியதற்காகவா ஒருவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கூறிக்கொண்டே சென்று, நபி (ஸல்) அவர்களை விடுவித்தார்கள். அம்மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு தங்களதுக் கோபத்தை அபூபக்ர் (ரழி) மீது திருப்பினர். நிராகரிப்பவர்களின் கடும் தாக்குதலுக்கு ஆளாகிய பிறகு அபூபக்ர் (ரழி) எங்களிடம் திரும்பி வந்தார். அவருடைய சடையில் நாங்கள் எங்கு தொட்டாலும் அதிலிருந்து முடிகள் கையுடனேயே வந்துவிட்டன. (முக்தஸருஸ்ஸீரா)
ஹம்ஜா இஸ்லாமை தழுவதல்
அநியாயங்களும் கொடுமைகளும் நிறைந்து காணப்பட்ட அக்காலச் சூழ்நிலையில் முஸ்லிம்களின் பாதையை ஒளிமயமாக்கும் ஒரு மின்னல் வெட்டியது. அதுதான் ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சி. ஆம்! நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு இறுதியில் துல்ஹஜ் மாதத்தில் அவர்கள் இஸ்லாமைத் தழுவினார்கள்.
ஹம்ஜா (ரழி) முஸ்லிமானதற்குரிய காரணம்: ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக்கருகில் அமர்ந்திருந்தபோது அவ்வழியாக வந்த அபூ ஜஹ்ல் நபி (ஸல்) அவர்களை சுடும் வார்த்தைகளால் இம்சித்தான். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு எவ்வித பதிலும் கூறாமல் வாய்மூடி மௌனமாகவே இருந்தார்கள். பிறகு அபூஜஹ்ல் ஒரு கல்லால் நபி (ஸல்) அவர்களின் மண்டையில் அடித்து காயப்படுத்திவிட்டு கஅபாவிற்கு அருகில் அமர்ந்திருந்த குறைஷிகளின் சபையில் போய் அமர்ந்து கொண்டான். நபி (ஸல்) அவர்களின் தலையிலிருந்து இரத்தம் கசிந்தது. ஸஃபா மலையில் இருந்த தனது வீட்டில் இருந்துகொண்டு இக்காட்சியை அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆனின் அடிமைப் பெண் பார்த்து, வேட்டையிலிருந்து வில்லுடன் வந்து கொண்டிருந்த ஹம்ஜாவிடம் இச்சம்பவத்தைக் கூறினார். (ஹம்ஜா (ரழி) குறைஷிகளில் மிகவும் வலிமைமிக்க வாலிபராக இருந்தார்.) ஹம்ஜா (ரழி) சினம்கொண்டு எழுந்தார்.
அபூஜஹ்லை தேடி பள்ளிக்குள் நுழைந்து “ஏ கோழையே! எனது சகோதரன் மகனையா திட்டிக் காயப்படுத்தினாய்! நானும் அவரது மார்க்கத்தில்தான் இருக்கிறேன்” என்று கூறி தனது வில்லால் அவனது தலையில் அடித்து பெரும் காயத்தை ஏற்படுத்தினார். அபூஜஹ்லின் குடும்பமான பனூ மக்ஜுமில் உள்ள ஆண்கள் கொதித்தெழுந்தனர். ஹம்ஜாவிற்கு ஆதரவாக ஹாஷிம் கிளையார்களும் கொதித்தெழுந்தனர். இதனைக் கண்ட அபூஜஹ்ல் “அபூ உமாரா (ஹம்ஜா)வை விட்டுவிடுங்கள். நான் அவரது சகோதரனின் மகனை மிகக் கொச்சையாக ஏசி விட்டேன்” (அதுதான் என்னை அவர் தாக்குவதற்குக் காரணம்) என்று கூறினான். (இப்னு ஹிஷாம்)
தனது குடும்பத்தைச் சேர்ந்த பாசத்திற்குரிய ஒருவர் இழிவாக்கப்படுவதைப் பொறுக்கமுடியாத ரோஷத்தில்தான் ஹம்ஜா (ரழி) முதலில் இஸ்லாமை ஏற்றார். பிறகு அல்லாஹ்வின் அருளால் இஸ்லாமைப் புரிந்து கொண்டு, வலிமை வாய்ந்த இஸ்லாம் எனும் வளையத்தை அவர் உறுதியாகப் பற்றிக் கொண்டார். ஹம்ஜா (ரழி) இஸ்லாமைத் தழுவிய பின் முஸ்லிம்களின் மதிப்பு உயர்ந்தது.
உமர் இஸ்லாமைத் தழுவுதல்
அநியாயங்கள், அடக்குமுறைகள் எனும் மேகங்கள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில் முஸ்லிம்களின் வழிக்கு ஒளிகாட்ட மற்றொரு மின்னல். ஆம்! இம்மின்னல் முந்திய மின்னலை (ஹம்ஜா (ரழி) முஸ்லிமானதை) விட பன்மடங்காக ஒளி வீசியது. அதுதான் உமர் இப்னு கத்தாப் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது.
நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் ஹம்ஜா (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவி மூன்று நாட்கள் கழித்து உமர் இஸ்லாமைத் தழுவினார். நபி (ஸல்) அவர்கள் உமர் இஸ்லாமை தழுவ வேண்டுமென இறைவனிடம் வேண்டியிருந்தார்கள்.
“அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமராக இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை நாம் ஆய்வு செய்து பார்க்கும்போது உமரின் உள்ளத்தில் இஸ்லாம் படிப்படியாகத்தான் வேரூன்றியது என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த அறிவிப்புகளைச் சுருக்கமாக நாம் பார்ப்பதற்கு முன் உமரிடம் இருந்த உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் முதலில் பார்ப்போம்.
உமர் நல்ல வலிமையும் கம்பீரமான இயல்பும் உடையவர். அவரால் முஸ்லிம்கள் பல வகையான தொந்தரவுகளை, எண்ணற்ற இன்னல்களை நீண்ட காலமாக அனுபவித்து வந்தனர். எனினும், அவரது உள்ளத்தில் பல மாறுபட்ட உணர்ச்சிகளின் போராட்டம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருபுறம் தங்களது மூதாதையர்கள் கடைபிடித்து வந்த சடங்குகளைப் பின்பற்றி அவற்றுக்காக வீறுகொண்டு எழுந்தார். மற்றொருபுறம், கொள்கையில் முஸ்லிம்களுக்கு இருந்த உறுதியையும் அதற்காக சோதனைகள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்வதையும் பார்த்து ஆச்சரியமடைந்தார். மேலும், ஒரு நல்ல பகுத்தறிவுவாதிக்கு வரும் சந்தேகங்கள் அவருடைய உள்ளத்திலும் அவ்வப்போது தோன்றி மறைந்தன. ஒரு வேளை இஸ்லாமிய போதனை மற்றவைகளைவிட தூய்மையானதாக, சரியானதாக இருக்கலாமோ என யோசிப்பார். அதனால்தான் அவருக்கு இஸ்லாமின்மீது கோபம் பொங்கி எழும்போதெல்லாம் உடனடியாக அடங்கியும் விட்டது.
உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை முறையாக இங்கு நாம் பார்ப்போம். ஓர் இரவில் தனது வீட்டுக்கு வெளியில் தூங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. நேராக ஹரமுக்கு வந்து கஅபாவின் திரைக்குள் நுழைந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு தொழுது கொண்டிருந்தார்கள். தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் அத்தியாயம் அல்ஹாக்கா ஓத, அதன் வசன அமைப்புகளை ரசித்து உமர் ஓதுதலைச் செவிமடுத்தார். இதைத் தொடர்ந்து உமர் கூறுகிறார்:
நபி (ஸல்) அவர்கள் ஓதுவதை கேட்டுக் கொண்டிருந்த நான் எனது எண்ணத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் கவிஞராக இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் கூற,
இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடி) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும். இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அல்குர்ஆன் 69:40, 41)
என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்
அடுத்து இவர் ஜோசியக்காரராக இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் நான் கூற,
(இது) ஒரு ஜோசியக்காரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதனைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள். உலகத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 69:42, 43)
என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.
அது சமயம் எனது உள்ளத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
இது உமர் இதயத்தில் விழுந்த இஸ்லாமின் முதல் விதையாகும். எனினும், அறியாமைக் கால எண்ணங்களும் மூட பழக்க வழக்கங்களின் பிடிவாதமும், மூதாதையர்களின் மார்க்கத்தை உயர்வாக கருதி வந்ததும், அவரது உள்ளம் ஒத்துக் கொண்டிருந்த மகத்தான உண்மையை மறைத்திருந்தது. தனது உள்ளத்தில் பொதிந்து கிடந்த உணர்வைப் பொருட்படுத்தாமல் இஸ்லாமுக்கு எதிராக செயல்படுவதிலேயே தீவிரம் காட்டி வந்தார்.
நபி (ஸல்) அவர்களின் மீது அவருக்கிருந்த, அளவுமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி (ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வழியில் அவரை சந்தித்து “உமரே நீ எங்கு செல்கிறாய்?” என்று கேட்க “நான் முஹம்மதை கொல்லச் செல்கிறேன்.” என்றார். அதற்கு நுஅய்ம் “நீ முஹம்மதை கொலை செய்துவிட்டு ஹாஷிம், ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து பயமின்றி தப்பித்து வாழ்வது எங்ஙனம்?” என்று அச்சுறுத்தினார். அவரை நோக்கி “நீ உனது மார்க்கத்தை விட்டுவிட்டு அவரது மார்க்கத்திற்கு சென்று விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது” என்று உமர் கூறினார். அதற்கு நுஅய்ம் “உமரே! ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?. உனது சகோதரியும் (அவரது கணவர்) உனது மச்சானும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்துக்குச் சென்று விட்டனர்” என்று கூறியதுதான் தாமதம். அவ்விருவரையும் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை நோக்கி உமர் விரைந்தார்.
அப்போது அங்கு கப்பாப் (ரழி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனது ஏட்டிலுள்ள “தாஹா’ எனத் தொடங்கும் அத்தியாயம் தாஹாவின் வசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் வருவதை அறிந்த கப்பாப் (ரழி) வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் சகோதரியும் அந்த ஏட்டை மறைத்து விட்டார்கள். எனினும், உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரழி) கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார். வீட்டினுள் நுழைந்த உமர் “உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன?” என்று கேட்டதற்கு “நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லை” என்று அவ்விருவரும் கூறினார்கள். அப்போது உமர் “நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவரது மச்சான் “உமரே! சத்தியம். உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் இருந்தால் உன் கருத்து என்ன?” என்று கேட்க, உமர் கடுஞ்சினம் கொண்டு தனது மச்சானின் மீது பாய்ந்து அவரை பலமாகத் தாக்கி மிதிக்கவும் செய்தார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரை விலக்கினார். உமர் கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்து அவரது முகத்தை ரத்தக் காயப்படுத்தினார்.
கோபம் கொண்ட உமரின் சகோதரி உமது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமா? (அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.) “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று உரக்கக் கூறினார். தனது கோபம் பலனற்றுப் போனதைக் கண்டு உமர் நிராசை அடைந்தார். தனது சகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும், வெட்கமும் ஏற்பட்டது. உங்களிடமுள்ள இப்புத்தகத்தை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு அவரது சகோதரி “நீ அசுத்தமானவர். நீர் எழுந்து குளித்து வாரும்” என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார். பிறகு குளித்து வந்தவுடன் திருமறையை கையிலேந்தி “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்” (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று ஓதியவுடன் “ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்” என்று கூறி, தொடர்ந்து “தாஹா’ என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதி முடித்துவிட்டு “இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்! எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள்!” என்று கேட்டுக் கொண்டார். உமரின் பேச்சைக் கேட்ட கப்பாப் (ரழி) வெளியேறி வந்து “உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு, “அல்லாஹ்வே! உமர் அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில் நம்புகிறேன்” என்றுரைத்தார்.
நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையில் உள்ள இல்லத்தில் இருந்தார்கள். உமர் தனது வாளை அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களின் வீட்டை நோக்கி வந்தார். உமர் கதவைத் தட்டியபோது ஒருவர் கதவின் இடுக்கின் வழியாக உமரை வாள் அணிந்த நிலையில் பார்த்து நபி (ஸல்) அவர்களுக்கு அச்செய்தியைக் கூறினார். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டார்கள். மக்கள் “உமர் வந்திருக்கிறார்” என்று கூறினார்கள். “ஓ! உமரா! (வந்திருக்கிறார்?) அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!” என்று ஹம்ஜா (ரழி) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வீட்டின் உள்பகுதியில் வஹி (இறைச்செய்தி) வந்த நிலையில் இருந்தார்கள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு உமரை சந்தித்த நபி (ஸல்) அவர்கள் உமரின் சட்டையையும் வாளையும் பிடித்து அவரைக் குலுக்கி “உமரே! நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப் போன்ற கேவலத்தையும், தண்டனையும் அல்லாஹ் உனக்கு இறக்க வேண்டுமா? அல்லாஹ்வே! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். அல்லாஹ்வே! உமரால் இஸ்லாமிற்கு உயர்வைக்கொடு!” என்று கூறினார்கள். உமர் (ரழி) “அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸுலுல்லாஹ்” என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன் என்பதே இதன் பொருளாகும்.) இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் தக்பீர் (அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெயரிவன் என்று) முழங்கினர். அந்த சப்தத்தைப் பள்ளியில் உள்ளவர்களும் கேட்டார்கள்.
யாராலும் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு உமர் (ரழி) வலிமை மிக்கவராக இருந்தார். அவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது இணைவைப்பவர்களுக்கிடையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், இனி தங்களுக்கு இழிவும் பலவீனமும்தான் என்பதை அவர்களுக்கு உணர வைத்தது. உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியது முஸ்லிம்களுக்குக் கண்ணியத்தையும், சிறப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் இஸ்லாமைத் தழுவியபோது மக்காவாசிகளில் நபி (ஸல்) அவர்களுக்கு மிகக் கடுமையான எதிரி யார்? என்று யோசித்தேன். அபூ ஜஹ்ல்தான் அந்த எதிரி என்று கூறிக்கொண்டு நான் அவனிடம் வந்து அவனது வீட்டுக் கதவைத் தட்டினேன். என்னைப் பார்த்த அவன் “வருக! வருக! நீங்கள் வந்ததற்குரிய காரணம் என்ன?” என்று வினவினான். “நான் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நம்பிக்கை கொண்டேன். அவர் கொண்டு வந்த மார்க்கத்தை உண்மை என்று நம்புகிறேன்” என்று கூறினேன். அதற்கவன் “அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக! நீ கொண்டு வந்ததையும் கேவப்படுத்துவானாக!” என்று கூறி என் முகத்தில் கதவை அறைந்து சாத்தி விட்டான்.” (இப்னு ஹிஷாம்)
உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அக்காலத்தில் ஒருவர் முஸ்லிமாகிவிட்டார் என்று தெரியவந்தால் அனைவரும் அவரைப் பிடித்து அடிப்பார்கள்; சண்டை செய்வார்கள். நானும் முஸ்லிமாகி எனது தாய்மாமா “ஆஸி இப்னு ஹாஷிமிடம்’ வந்து அதைக் கூறியவுடன் அவர் என்னை ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார். அவ்வாறே குறைஷிப் பெரியோர்களில் ஒரு முக்கியமானவரிடம் சென்று கூறினேன். அவரும் என்னை ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவிய செய்தி குறைஷிகள் எவருக்கும் தெரியவில்லை. இதனால், செய்திகளை மக்களிடத்தில் மிக அதிகம் பரப்புபவர் யார்? என்று உமர் (ரழி) விசாரித்தார். அதற்கு ஜமீல் இப்னு முஅம்மர் அல் ஜும என்று பதில் கூறப்பட்டவுடன் அவரிடம் சென்றார்கள். நானும் உடன் இருந்தேன். அப்போது எனக்கு பார்ப்பதையும், கேட்பதையும் நன்கு புரிந்து கொள்ளக்கூடிய வயதுதான். உமர் (ரழி) அவரிடம் சென்று “ஓ ஜமீல்! நான் முஸ்லிமாகி விட்டேன்” என்று கூறியவுடன், அவர் மறுபேச்சு பேசாமல் நேராகப் பள்ளிக்குச் சென்று உரத்த குரலில் “ஓ குறைஷிகளே! கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டான்” என்று கத்தினான். அவனுக்கு பின்னால் உமர் (ரழி) நின்றுகொண்டு “இவன் பொய் கூறுகிறான். நான் மதம் மாறவில்லை. மாறாக முஸ்லிமாகி விட்டேன்! அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன்! அவனது தூதரை உண்மை என்று மெய்ப்பித்தேன்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட மக்கள் ஒன்று கூடி உமரின் மீது பாயத் தொடங்கினார்கள். அவர்கள் உமரிடம் சண்டையிட உமரும் அவர்களிடம் சண்டையிட்டார். சூரிய வெப்பம் அதிகரித்தபோது களைத்துவிட்ட உமர் (ரழி) கீழே உட்கார்ந்து விட்டார். மக்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டார்கள். உங்களுக்கு என்ன விருப்பமோ! அதை செய்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் சத்தியமாக கூறுகிறேன். நாங்கள் குறைந்தது 300 நபர்களாக பெருகிவிட்டால் ஒன்று மக்கா(வின் ஆதிக்கம்) உங்களுக்கு அல்லது எங்களுக்காகி விடும்” என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
இதற்குப் பிறகு உமரை கொலை செய்யக் கருதி இணைவைப்பவர்கள் உமரின் வீட்டுக்கு படையெடுத்தனர். உமர் (ரழி) வீட்டில் பயந்த நிலையில் இருந்தபோது அபூ அம்ர் ஆஸ் இப்னு வாயில் என்பவர் வந்தார். அவர் யமன் நாட்டு போர்வையும் கை ஓரம் பட்டினால் அலங்கரிக்கப்பட்ட சட்டையும் அணிந்திருந்தார். அறியாமை காலத்தில் அவரது கிளையார்களான பனூ ஸஹம் எங்களுடைய நட்புக்குரிய கிளையார்களாக இருந்தார்கள். அவர் உமரிடம் “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று வினவினார். உமர் (ரழி) “நான் முஸ்லிமானதற்காக என்னை உமது கூட்டம் கொலை செய்ய முனைகிறார்கள்” என்று கூறினார். அதற்கு அவர் “அப்படி ஒருக்காலும் நடக்காது” என்று கூறினார். அவர் இந்தச் சொல்லை கூறியதற்கு பிறகு உமர் நிம்மதியடைந்தார். இதற்கு பிறகு ஆஸ் வெளியேறி வந்து பார்த்தபோது அங்கு மக்களின் பெரும் கூட்டம் ஒன்று இருந்தது. அவர்களைக் கண்ட ஆஸ் “எங்கே வந்தீர்கள்?” என்று கேட்டதற்கு “இதோ கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டார். அவரிடம்தான் வந்துள்ளோம்” என்று கூறினார்கள். அதற்கு ஆஸ் “அவரை ஒருக்காலும் நீங்கள் நெருங்க முடியாது” என்று கூறவே அனைவரும் திரும்பிச் சென்றுவிட்டனர். (ஸஹீஹுல் புகாரி)
இதுவரை கூறிய நிகழ்ச்சிகள் இணைவைப்பவர்களைக் கவனித்துக் கூறப்பட்டது. முஸ்லிம்களை கவனித்துப் பார்க்கும்போது உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியது வித்தியாசமான ஒன்றாகவே இருந்தது. இதைப்பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்:
உமரிடம் “உங்களுக்கு “ஃபாரூக்’ என்ற பெயர் வரக் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கவர் “எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஹம்ஜா (ரழி) முஸ்லிமானார். பிறகு நான் முஸ்லிமானேன்” என்று தான் முஸ்லிமான சம்பவத்தைக் கூறினார்கள். அதன் இறுதியில் அவர்கள் கூறியதாவது: நான் முஸ்லிமானபோது “அல்லாஹ்வின் தூதரே! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தானே இருக்கிறோம்” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்! எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தான் இருக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான் “அப்போது ஏன் மறைவாக செயல்பட வேண்டும். உங்களைச் சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையாக சத்தியத்தைக் கூறியே ஆக வேண்டும்” என்று கூறி முஸ்லிம்களை இரண்டு அணிகளாக ஆக்கி, ஓர் அணியில் நானும் மற்றொரு அணியில் ஹம்ஜாவும் இருந்துகொண்டு நபி (ஸல்) அவர்களை இரு அணிகளுக்கு நடுவில் ஆக்கிக் கொண்டோம். திருகையிலிருந்து மாவுத் தூள்கள் பறப்பது போன்று எங்களது அணிகளில் இருந்து புழுதிகள் பறந்தன. நாங்கள் பள்ளிக்குள் நுழைந்தவுடன் என்னையும் ஹம்ஜாவையும் பார்த்த குறைஷிகளுக்கு இதுவரை ஏற்பட்டிராத கைசேதமும் துக்கமும் ஏற்பட்டது. அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் எனக்கு “அல் ஃபாரூக்“” எனப் பெயரிட்டார்கள். (தாரீக் உமர்)
உமர் (ரழி) முஸ்லிமாகும் வரை நாங்கள் கஅபாவுக்கு அருகில் தொழக்கூட முடியாதவர்களாகவே இருந்தோம்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (முக்தஸருஸ்ஸீரா)
“உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியபோதுதான் இஸ்லாம் வெளி உலகுக்குத் தெரியவந்தது. பகிரங்கமாக இஸ்லாமிய அழைப்பு விடப்பட்டது. கஅபாவைச் சுற்றி கூட்டமாக நாங்கள் அமர்ந்தோம். மேலும், எங்களுக்கு கஅபாவை தவாஃப் செய்ய முடிந்தது. எங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடம் அவர்கள் செய்யும் கொடுமைகளில் சிலவற்றுக்காவது நாங்கள் பதிலடி கொடுத்தோம்” என்று ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) கூறுகிறார்கள்.(தாரீக் உமர்)
“உமர் (ரழி) முஸ்லிமானதற்கு பிறகே நாங்கள் பலமிக்கவர்களாக ஆனோம்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நபியவர்களுக்கு முன் உத்பா
ஹம்ஜா, உமர் (ரழி) ஆகிய இரு வீரர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு இணைவைப்பவர்கள் முஸ்லிம்களை வேதனை செய்வதிலிருந்து சற்று பின்வாங்கினர். நபி (ஸல்) அவர்களுடனும் முஸ்லிம்களுடனும் உண்டான தங்களது நடவடிக்கைகளை மாற்றத் தொடங்கினர். அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை விரும்பி முஸ்லிம்களுக்கு ஆசாபாசங்களையும் ஆசைகளையும் காட்டினர். அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும், அழைப்புப் பணிக்கும் முன்னால் உலகமனைத்தையும் கொட்டிக் கொடுத்தாலும் அது முஃமின்களுக்கு கொசுவின் இறக்கை அளவிற்குக் கூட சமமாகாது என்பது இந்த அறிவீனர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. ஆகவே, இவர்கள் தங்களது முயற்சியில் படுதோல்வி கண்டனர்.
ஹம்ஜாவும் (ரழி) இஸ்லாமைத் தழுவி, நாளுக்குநாள் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகிய சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது நாம் பார்ப்போம்: ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தனியாக அமர்ந்திருந்தார்கள். உத்பா இப்னு ரபீஆ குறைஷிகளிடம் “குறைஷிகளே! நான் முஹம்மதிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலவற்றை அவருக்குக் கூறுகிறேன். அவற்றை அவர் ஏற்றுக்கொண்டால் நாம் அவருக்கு அவற்றைக் கொடுத்து விடுவோம். அவர் நம்மைவிட்டு விலகிக் கொள்ளலாம்” என்று கூறினான். அப்போது குறைஷிகள் “அப்படியே ஆகட்டும் அபுல் வலீதே! நீ சென்று அவரிடம் பேசிவா” என்றனர்.
உத்பா, நபி (ஸல்) அவர்களிடம் சென்று “எனது சகோதரனின் மகனே! நீ எங்களில் குடும்பத்தாலும் வமிசத்தாலும் கண்ணியமிக்கவர். ஆனால், நீ உன் சமுதாயத்தவரிடம் ஆபத்தான ஒரு மார்க்கத்தை கொண்டு வந்திருக்கிறாய்! அதன் மூலம் உமது சமுதாயத்தவன் ஒற்றுமையை குலைத்து விட்டாய்! அறிஞர்களை முட்டாளாக்கி விட்டாய்! அவர்களின் சிலைகளையும், மார்க்கத்தையும் குறை கூறிவிட்டாய்! முன் சென்ற உன் முன்னோரை காஃபிர் (நிராகரித்தவர்) என்று கூறிவிட்டாய்! நான் உனக்கு முன்பு சில விஷயங்களை எடுத்து வைக்கிறேன். அதை நன்கு யோசித்து ஒரு முடிவைச் சொல். அதில் ஏதாவதொன்று உனக்கு விருப்பமானதாக இருக்கலாம்” என நயமாக பேசினான்.
இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “அபுல் வலீதே! சொல்! நான் கேட்கிறேன்” என்றார்கள். அவன் “எனது சகோதரனின் மகனே! நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேகரிப்பதை விரும்பி, நீ எங்களில் மிகப் பெரியசெல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை இருப்பின், நாங்கள் எங்கள் செல்வங்களைச் சேர்த்து உன்னிடம் கொடுத்து விடுகிறோம். இல்லை உனக்கு ஆட்சி வேண்டுமென்றால் உன்னை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம். அல்லது உனக்கு ஏதேனும் ஜின்களின்” தொல்லை இருந்து அதை உன்னால் தடுக்க முடியவில்லையென்றால், உன்னை நாங்கள் குணப்படுத்துவதற்காக எங்களின் செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்து உனக்கு நாங்கள் வைத்தியம் பார்க்கின்றோம். ஏனெனில், சில நேரங்களில் ஜின்களின் சேட்டை மிகைத்து வைத்தியம் பார்க்கும் அவசியம் ஏற்படலாம்” என்று கூறினான்.
உத்பா அவனது பேச்சை முடித்த பிறகு “அபுல் வலீதே! நீ உனது பேச்சை முடித்துக் கொண்டாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க அவன் “ஆம்!” என்றான். “இப்போது நான் சொல்வதைக் கேள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற “அவ்வாறே செய்கிறேன்” என்று அவன் பதிலளித்தான். பிறகு நபி (ஸல்) அவர்கள் “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ என்று ஆரம்பித்து அத்தியாயம் ஃபுஸ்ஸிலத்தை ஓதிக் காட்டினார்கள். முதுகுக்குப்பின் தன்னுடைய கைகளை ஊன்றி சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் ஓதுவதை மிகக் கவனமாகக் கேட்டான். பிறகு ஸஜ்தாவுடைய ஆயத்தை ஓதி ஸஜ்தா செய்து முடித்தார்கள். பின்னர் “அபுல் வலீதே! நீ செவியேற்க வேண்டியதையெல்லாம் செவியேற்று விட்டாய். நீயே இப்பொழுது முடிவு செய்துகொள்!” என்று மொழிந்தார்கள்.
அதற்குப் பிறகு உத்பா அவனது நண்பர்களிடம் திரும்பி வந்தபோது அவர்கள் தங்களுக்குள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அபுல் வலீத் முகம் மாறியவனாக வந்திருக்கின்றான்” என்று பேசிக் கொண்டனர். உத்பா வந்தவுடன் “நீ என்ன செய்தியை கொண்டு வந்திருக்கின்றாய்” என வினவினர். “இதுவரை கேட்டிராத பேச்சையல்லவா நான் கேட்டேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கவிதையும் அல்ல! சூனியமும் அல்ல! ஜோசியமும் அல்ல! குறைஷிகளே! நான் சொல்வதைக் கேளுங்கள். இவரை விட்டு ஒதுங்கி விடுங்கள். இவருக்கும் இவரது பணிக்குமிடையில் குறுக்கிடாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவடமிருந்து நான் கேட்டு வந்த பேச்சுக்கு மகத்தான ஆற்றல் இருக்கிறது. மற்ற அரபியர்கள் அவரை அழித்துவிட்டால் அதுவே நமக்குப் போதும். நமது நோக்கமும் அதுவே! மாறாக, மற்ற அரபுகளை இவர் வெற்றி கொண்டால் அவருக்குக் கிடைக்கும் ஆட்சி உங்களுடைய ஆட்சியே! அவருக்குக் கிடைக்கும் கண்ணியம் உங்களுடைய கண்ணியமே! அவர் மூலமாக கிடைக்கும் அனைத்து பாக்கியங்களுக்கும் நீங்களும் முழு உரிமை பெற்றவர்கள்” என்று கூறினான். இதனைக் கேட்ட அவர்கள் “அபுல் வலீதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் தன்னுடைய நாவன்மையால் உன்னை வசியப்படுத்தி விட்டார்” என்றனர். “அவரைப் பற்றி எனது கருத்து இதுதான். இனி உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி நீங்கள் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டான். (இப்னு ஹிஷாம்)
மற்றும் சில அறிவிப்புகளில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் 13ம் வசனத்தை ஓதியபோது “முஹம்மதே போதும்! போதும்!! என்று கூறி தனது கையை நபி (ஸல்) அவர்களின் வாயின் மீது வைத்து, இரத்த உறவின் பொருட்டால் நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினான். அதற்குக் காரணம், அல்லாஹ்வின் எச்சரிக்கை உண்மையில் நிகழ்ந்துவிடும் என்று அவன் பயந்ததுதான். பிறகு எழுந்து சென்று தனது கூட்டத்தாரிடம் இதற்கு முன் கூறப்பட்டது போன்று செய்திகளை கூறினான். (இப்னு கஸீர்)
பேரம் பேசும் தலைவர்கள்!
உத்பாவிற்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்த பதிலால் குறைஷிகள் முற்றிலும் நிராசை அடைந்து விடவில்லை. ஏனெனில், உத்பாவிற்கு நபி (ஸல்) அவர்கள் சில வசனங்களை ஓதிக் காட்டினார்கள். அது கோரிக்கையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பதாக ஆகமுடியாது. எனவே, மிகுந்த ஆராய்ச்சியுடனும் சிந்தனையுடனும் பிரச்சனையின் பல கோணங்களை அலசியப் பின், ஆலோசனை செய்வதற்காக சூரியன் மறைந்ததும் கஅபாவின் பின்புறம் குறைஷித் தலைவர்கள் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச் செய்தனர். ஏதோ நன்மையை இவர்கள் நாடிவிட்டார்கள் என்ற பேராவலில் நபி (ஸல்) அவர்கள் விரைந்து வந்து அவர்களருகில் அமர்ந்தபோது உத்பா கூறியதையே குறைஷித் தலைவர்கள் கூறினர். அதாவது உத்பா மட்டும் கூறியதால் நபி (ஸல்) அவர்கள் இதை நம்பவில்லை. நாம் அனைவரும் சேர்ந்து கூறினால் நம்மை நம்பி ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்வார் என்று அவர்கள் எண்ணினார்கள் போலும்!
நபி (ஸஸ்) அவர்கள் அந்த குறைஷிகளுக்குக் கூறிய பதிலாவது: “நீங்கள் கூறுவது எதுவும் என்னிடமில்லை. உங்களின் பொருளை அல்லது உங்களிடம் சிறப்பை அல்லது உங்கள் மீது ஆட்சி செய்வதைத் தேடி நான் இம்மார்க்கத்தை கொண்டு வரவில்லை. எனினும், அல்லாஹ் என்னை உங்களிடம் தூதராக அனுப்பி என்மீது ஒரு வேதத்தையும் இறக்கியிருக்கின்றான். உங்களுக்கு நற்செய்தி சொல்பவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் நான் இருக்க வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். எனது இறைவனின் தூதுத்துவத்தை நான் உங்களுக்கு முன் வைத்துவிட்டேன். உங்களுக்கு நல்லுபதேசம் செய்துவிட்டேன்; நான் உங்களிடம் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் என்னிடமிருந்து ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கு ஈருலக பாக்கியமாகும். நீங்கள் அதை மறுத்தால் அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் வரை அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் பொறுத்திருப்பேன்.”
இத்திட்டம் நிறைவேறாததால் மற்றொரு திட்டத்திற்குச் சென்றனர். அதாவது “நீங்கள் உங்களது இறைவனிடம் கூறி இம்மலைகளை இடம்பெயரச் செய்ய வேண்டும்; இவ்வூர்களை செழிப்பாக்க வேண்டும்; அவற்றின் நதிகளை ஓடவைக்க வேண்டும்; இறந்துவிட்ட முன்னோர்களைக் குறிப்பாக, குஸை இப்னு கிலாஃபை உயிர்ப்பிக்க வேண்டும்; மரணித்தவர்கள் எழுந்து நீங்கள் கூறுவது உண்மை என்று கூறினால் நாங்கள் உங்கள் கூற்றை நம்பிக்கைக் கொள்வோம்” என்று கூறினார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் முன் கூறிய பதிலையே கூறினார்கள்.
மற்றொரு திட்டத்தையும் முன் வைத்தனர். “அதாவது நீங்கள் உங்களைக் காப்பதற்கு உங்களுடைய இறைவனிடம் ஒரு மலக்கை (வானவரை) அனுப்பும்படி கோருங்கள். நாங்கள் அவருடன் பேசித் தெரிந்துகொள்வோம். உங்களுக்காகப் பல தோட்டங்களையும், மாட மாளிகைகளையும் தங்கம், வெள்ளியினாலான கஜானாக்களையும் அருளும்படி கோருங்கள்” என்றனர். இதற்கும் நபி (ஸல்) முன் கூறிய பதிலையே கூறினார்கள்.
அடுத்து மற்றொரு திட்டத்திற்கு சென்றனர். “அதாவது எங்களுக்கு வேதனையை இறக்குங்கள்; வானத்தை உடைத்து எங்கள் மீது போடுங்கள்; நீங்கள் எச்சரிப்பவற்றை இப்போதே எங்களுக்குக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அது அல்லாஹ்வின் நாட்டம். அவன் நாடினால் அதைச் செய்வான்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த இணைவைப்பவர்கள் “நாங்கள் உங்களுடன் உட்கார்ந்து உங்களிடம் பல கேள்விகளைக் கேட்போம்; பல கோரிக்கைகளை விடுப்போம் என்பது உங்களது இறைவனுக்குத் தெரியாதா? நீங்கள் எங்களுக்கு பதில் சொல்வதற்குத் தேவையானதை உங்களுக்கு இறைவன் கற்றுத் தரவில்லையா? நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அவன் எங்களிடம் எப்படி நடந்து கொள்வான் என்பதை உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டனர்.
இறுதியாக, நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உங்களை அழிக்கும் வரை அல்லது நீங்கள் எங்களை அழிக்கும்வரை நீங்கள் எங்களுக்கு இழைத்த அநீதத்திற்காக நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம்” என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து எழுந்து தனது குடும்பத்தினர்களிடம் வந்தார்கள். தான் விரும்பியபடி தமது சமூகத்தினர் இஸ்லாமை ஏற்காததால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள்.(இப்னு ஹிஷாம்)
அபூஜஹ்லின் கொலை முயற்சி
கூட்டத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றவுடன் அபூஜஹ்ல் அகந்தையுடன் “குறைஷிக் கூட்டமே! நமது மார்க்கத்தை இகழ்வது நமது முன்னோர்களை ஏசுவது நம்முடைய அறிஞர்களை முட்டாளாக்குவது நம்முடைய சிலைகளைத் திட்டுவது - இவற்றைத் தவிர வேறெதனையும் செய்ய மாட்டேன் என்று முஹம்மது கூறிவிட்டார். ஆகவே, அவர் தொழுகையில் ஸஜ்தா செய்யும்போது மிகப்பெரிய ஒரு கல்லால் அவர் தலையை நசுக்குவேன் என்று அல்லாஹ்விடம் நான் உடன்படிக்கை செய்கிறேன். அவ்வாறு செய்தபின் நீங்கள் என்னை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தாலும் சரி அல்லது அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றினாலும் சரி. அப்து மனாஃப் குடும்பத்தினர் தாங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளட்டும்” என்றான். அதற்கு அக்கூட்டத்தினர் “ஒருக்காலும் நாம் உம்மை கைவிட்டு விட மாட்டோம்; நீ விரும்பியபடியே செய்!” என்றனர்.
அன்று காலையில் அபூஜஹ்ல் தான் கூறியதைப் போன்று ஒரு கல்லுடன் நபி (ஸல்) அவர்களின் வருகைக்காக எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். வழக்கம்போல் நபி (ஸல்) அவர்கள் காலையில் வந்து தொழ நின்றார்கள். குறைஷிகள் அபூஜஹ்ல் செய்வதை வேடிக்கை பார்க்க தங்களது சபைகளில் வந்து அமர்ந்து கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்தபோது அபூஜஹ்ல் கல்லை சுமந்தவனாக நபியவர்களை நோக்கிச் சென்றான். நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் பயந்து நிறம்மாறி திடுக்கிட்டவனாக திரும்பினான். அவனது இரு கைகளும் கல்லின்மீது ஒட்டிக் கொண்டன. வெகு சிரமத்துடன் கல்லை கையிலிருந்து வீசினான். அதைப் பார்த்த குறைஷிகள் ஒரே குரலில் “அபுல் ஹிகமே! என்ன நேர்ந்தது?” என்று விசாரித்தனர். அதற்கு “நான் உங்களுக்கு நேற்று கூறியதை நிறைவேற்றுவதற்கு அவருக்கு அருகில் சென்றபோது மிகப்பெரிய ஆண் வாலிப ஒட்டகம் ஒன்று எனக்குத் தென்பட்டது. அதனுடைய தலையைப் போல, அதனுடைய கோரைப் பற்களைப் போல, வேறெந்த ஒட்டகத்தையும் நான் பார்க்கவில்லை. அது என்னைக் கடிக்க வந்தது” என்றான்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம், “அப்படித் தோற்றமளித்தவர் வானவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவன் நெருங்கியிருந்தால் அவர் அவனை அழித்திருப்பார்” என்று கூறினார்கள்.
சமரச முயற்சி
குறைஷிகள் நபி (ஸல்) அவர்களுக்கு முதலில் உலக ஆசை காட்டினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மசியாததால் அடுத்து நபியவர்களை எச்சரித்தனர், அச்சுறுத்தினர். அதற்கும் நபியவர்கள் அஞ்சாததால் குறைஷிகள் மாற்று வழியைத் தேடினர். நபி (ஸல்) அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள் என அவர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை. அதாவது, நபி (ஸல்) அவர்களுடைய மார்க்கம் உண்மையானதா? அல்லது பொய்யானதா? என்று பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்திருந்தனர்.
நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் அவர்கள் ஆழ்ந்து கிடக்கின்றனர். (அல்குர்ஆன் 42:14)
என்று அல்லாஹ் அவர்களைப்பற்றி கூறியதுபோலவே அவர்கள் இருந்தனர்.
அடுத்த கட்ட முயற்சியாக, மார்க்க விஷயங்களில் கொஞ்சம் இவர்கள் விட்டுத் தருவது, கொஞ்சம் நபி (ஸல்) அவர்கள் விட்டுக் கொடுப்பது என்று நபி (ஸல்) அவர்களுடன் பேரம் பேசிப் பார்க்கலாம் என முடிவெடுத்தனர். இதன்மூலம் நபி (ஸல்) அழைப்பது உண்மையானதாக இருந்தால் தாங்களும் அந்த உண்மையை அடைந்தவர்களாகலாம் என்று கருதினர்.
நபி (ஸல்) அவர்கள் கஅபாவை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும்போது அவர்களை அஸ்வத் இப்னு அல் முத்தலிப், வலீத் இப்னு முகீரா, உமைய்யா இப்னு கலஃப், ஆஸ் இப்னு வாயில் ஆகியோர் சந்தித்தனர். இவர்கள் தங்களது கோத்திரத்தில் மிக மதிப்பு மிக்கவர்களாக விளங்கினார்கள். இவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “முஹம்மதே! வாருங்கள்! நீங்கள் வணங்குவதை நாங்களும் வணங்குகிறோம்; நாங்கள் வணங்குவதை நீங்களும் வணங்குங்கள்; நாம் அனைவரும் இவ்விஷயத்தில் கூட்டாக இருப்போம். அதாவது, நீங்கள் வணங்குவது நாங்கள் வணங்குவதை விட நன்மையாக இருப்பின் எங்களுக்கும் அதில் ஒரு பங்கு கிடைத்துவிடும். நாங்கள் வணங்குவது நீங்கள் வணங்குவதை விட நன்மையானதாக இருப்பின் அதில் உங்களுக்கும் ஒரு பங்கு கிடைத்துவிடும்” என்று கூறினார்கள்.
இவர்களின் கூற்றுக்கு மறுப்பாக,
(நபியே! நிராகரிக்கும் மக்காவாசிகளை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: நிராகரிப்பவர்களே! நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர். உங்களுடைய (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என்னுடைய (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்). (அல்குர்ஆன் 109:1-6)
என்ற அத்தியாயம் அல் காஃபிரூனை முழுமையாக அல்லாஹு தஆலா இறக்கி வைத்தான். (இப்னு ஹிஷாம்)
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்: குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் எங்கள் கடவுள்களைத் தொட்டால் போதும், நாங்கள் உங்களது கடவுளை முழுமையாக வணங்குகிறோம்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் அத்தியாயம் அல் காஃபிரூனை இறக்கி வைத்தான். (அத்துர்ருல் மன்ஸுர்)
தஃப்ஸீர் இப்னு ஜரீல் வருவதாவது: குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “எங்களது கடவுளை நீங்கள் ஓர் ஆண்டு வணங்குங்கள். உங்களது கடவுளை நாங்கள் ஓர் ஆண்டு வணங்குகிறோம்” என்று கூறினார்கள். அப்போது,
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: மூடர்களே! அல்லாஹ் அல்லாதவற்றையா வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகின்றீர்கள்?
என்ற அத்தியாயம் ஜுமன் 64 வது வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.
இவ்வாறான அற்பத்தனமிக்க பேச்சுவார்த்தைகளைத் தீர்க்கமான முடிவைக்கொண்டு அல்லாஹ் முறியடித்தும் குறைஷிகள் முழுமையாக நிராசையாகவில்லை. மாறாக, மேலும் சற்று இறங்கி நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனின் போதனைகளில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்ற அடுத்த கோரிக்கையை முன்வைத்தனர். இதோ இவர்களின் கூற்றைப்பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
இவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உங்களை நோக்கி,) “இது அல்லாத வேறொரு குர்ஆனை நீங்கள் கொண்டுவாருங்கள். அல்லது (எங்கள் இஷ்டப்படி) இதனை மாற்றிவிடுங்கள்” என்று கூறுகின்றனர்.
அவர்களின் இக்கூற்றுக்கு என்ன பதில் சொல்லவேண்டுமோ அதை அல்லாஹ் தொடர்ந்து கூறுகிறான்:
(அதற்கு அவர்களை நோக்கி “உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதனை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹி மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என்னுடைய இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (அல்குர்ஆன் 10:15)
மேலும், இவ்வாறு செய்வது எவ்வளவு ஆபத்தானது என்றும் அல்லாஹ் மிகத் தெளிவாக எச்சரிக்கை செய்தான்.
நாம் உங்களுக்கு வஹி மூலம் அறிவித்ததை நீங்கள் விட்டு (விட்டு) அது அல்லாததை நம்மீது நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உங்களை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீங்கள் செய்திருந்தால்) உங்களை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். உங்களை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீங்கள் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடக் கூடுமாயிருந்தது. (அவ்வாறு நீங்கள் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீங்கள் உயிராக இருக்கும்போதும் நீங்கள் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.(அல்குர்ஆன் 17:73-75)
மறு ஆலோசனை
எல்லா பேச்சுவார்த்தைகளிலும், பேரங்களிலும், அனுசரித்தலிலும் குறைஷிகள் தோல்வியடைந்து என்னசெய்வது என்று புரியாமல் திகைத்திருந்தபோது அவர்களில் ஒரு ஷைத்தான் “நழ்ர் இப்னு அல் ஹாரிஸ்’ என்பவன் ஓர் ஆலோசனையைக் கூறினான். “குறைஷியர்களே! உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வையும் உங்களால் கொண்டுவர முடியவில்லை. முஹம்மது உங்களில் வாலிபராக இருந்தபோது உங்களின் அன்பிற்குரியவராகவும், பேச்சில் உங்களில் உண்மையாளராகவும், அமானிதத்தை அதிகம் பேணுபவராகவும் இருந்தார். ஆனால், அவர் முதிர்ச்சி அடைந்து இம்மார்க்கத்தை அவர் கொண்டு வந்தபோது நீங்கள் அவரை “சூனியக்காரர்” என்று கூறினீர்கள். ஆனால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் சூனியக்காரராக இருக்க முடியாது. சூனியக்காரர்களைப் பற்றியும் அவர்களின் ஊதுதல், முடிச்சுகளைப் பற்றியும் நாம் நன்கறிவோம். பிறகு அவரை “ஜோசியர்” என்று கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஜோசியரும் அல்லர். ஏனெனில் ஜோசியக்காரர்களையும் அவர்களது பொய்யாகப் புனையப்பட்ட புளுகுகளையும் நாம் நன்கறிவோம். அடுத்து அவரை “கவிஞர்” என்பதாகக் கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் கவிஞரும் அல்லர். ஏனெனில், கவியையும் அதன் பல வகைகளையும் நாம் பார்த்திருக்கிறோம். நீங்கள் அவரை “பைத்தியக்காரர்” என்று கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் பைத்தியக்காரரும் அல்லர். பைத்தியத்தை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இவருக்கு பைத்தியத்தின் எந்தக் குழப்பமும், ஊசலாட்டமும் இல்லை. குறைஷிகளே! உங்களது நிலையை நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கு ஏதோ மிகப்பெரியசிக்கல் ஏற்பட்டிருக்கிறது” என்று அவன் கூறி முடித்தான்.
எல்லா எதிர்ப்புகளுக்கும், சவால்களுக்கும் அசைந்து கொடுக்காமல் நபி (ஸல்) அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அனைத்து ஆசாபாசங்களையும் தூக்கி எறிந்தார்கள். எந்நிலையிலும் தடுமாறவில்லை. மேலும், அவர்களிடம் உண்மை, ஒழுக்கம், பேணுதல், சிறந்த நற்பண்புகள் ஆழமாகக் குடிகொண்டிருந்தன. இதைக் கண்ட இணைவைப்பவர்களுக்கு முஹம்மது உண்மையில் தூதராக இருப்பாரோ? என்ற சந்தேகம் வலுத்தது. எனவே, யூதர்களுடன் தொடர்பு கொண்டு முஹம்மதைப் பற்றி உறுதியாக தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். நழ்ர் இப்னு ஹாரிஸ் அவர்களுக்கு ஏற்கனவே மேற்கூறியவாறு உபதேசம் செய்திருந்தான். அவனையே மற்ற ஓருவருடன் சேர்த்து மதீனாவில் உள்ள யூதர்களிடம் அனுப்ப முடிவு செய்தனர்.
நழ்ர் இப்னு ஹாரிஸ் மதீனா சென்று அங்குள்ள யூத அறிஞர்களைச் சந்தித்து நபி (ஸல்) அவர்கள் குறித்து விவாதித்தான். அவர்கள், நீங்கள் அவரிடம்
“1) முன்னொரு காலத்தில் வாழ்ந்த குறிப்பிட்ட வாலிபர்களைப் பற்றி ஏதாவது செய்தி தெரியுமா? ஏனெனில் அவர்களைப் பற்றி ஓர் ஆச்சரியமான செய்தி இருக்கிறது. அவர்கள் என்னவானார்கள்?
2) பூமியின் கிழக்கு மேற்கு பகுதிகளையெல்லாம் சுற்றி வந்த ஒருத்தரைப் பற்றிய செய்தி தெரியுமா?
3) ரூஹ் (உயிர்) என்றால் என்ன?
இந்த மூன்று கேள்விகளைக் கேளுங்கள். அவர் இவற்றுக்கு சரியான பதில் கூறினால் அவர் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட (நபி) தூதராவார். அவ்வாறு கூறவில்லையெனில் அவர் தானாக கதை கட்டி பேசுபவரே என அறிந்துகொள்ளலாம்” என்றனர்.
நழ்ர் மக்காவிற்கு வந்து “குறைஷிகளே! உங்களுக்கும் முஹம்மதுக்கும் இடையிலுள்ள பிரச்சனைக்குச் சரியான தீர்வைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறி யூதர்கள் கூறியதை அவர்களுக்கு அறிவித்தான். குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அம்மூன்று கேள்விகளையும் கேட்டனர். அவர்கள் கேட்ட சில நாட்களுக்குப் பிறகு “கஹ்ஃப்’ என்ற அத்தியாயம் அருளப்பட்டது. அதில் குகைவாசிகளாகிய அவ்வாலிபர்களின் வரலாறும், பூமியை சுற்றி வந்த துல்கர்னைன் என்பவன் சத்திரமும் தெளிவாக விவரிக்கப்பட்டது. ரூஹைப் பற்றிய பதில் குர்ஆனில் “இஸ்ரா’ என்ற அத்தியாயத்தில் இறங்கியது. இதைத் தொடர்ந்து குறைஷிகள் நபி (ஸல்) அவர்கள் “உண்மையாளரே, சத்தியத்தில் உள்ளவரே’ என்பதையும் தெளிவாக தெரிந்து கொண்டனர். ஆனாலும் அநியாயக்காரர்கள் ஏற்க மறுத்தனர். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணிக்கு இணைவைப்பவர்கள் செய்த எதிர்ப்பின் ஒரு சிறு பகுதியே இதுவரை நாம் கூறியது. பல வகைகளில் முயன்றனர். படிப்படியாக பல வழிகளை இதுவல்லாமல் மாற்றிக் கொண்டே இருந்தனர். வன்மையை அடுத்து மென்மை, மென்மையை அடுத்து வன்மை; சர்ச்சையை அடுத்து சமரசம்; சமரசத்தை அடுத்து சர்ச்சை; எச்சரித்தல், பிறகு ஆசையூட்டுதல்; ஆசையூட்டுதல், பிறகு எச்சரித்தல்; ஊளையிடுதல், பிறகு அடங்குதல்; தர்க்கித்தல், பிறகு நயமாக பேசுதல்; நபி (ஸல்) அவர்களை விட்டுக் கொடுக்க வேண்டுதல்; பிறகு தாங்களே விட்டுக் கொடுத்தல்; இவ்வாறு கொஞ்சம் முன்னேறுதல்; உடனே பின்வாங்குதல் என்று என்ன செய்வதென்றே புரியாமல் நிலை தடுமாறி நின்றனர். ஆனால், நபி (ஸல்) அவர்களின் வழியில் குறுக்கிடாமல் ஒதுங்கிக் கொள்வதும் அவர்களுக்குக் கசப்பாக இருந்தது. அவர்களின் நோக்கமே இஸ்லாமிய அழைப்பை அழிப்பதும் இறைநிராகரிப்பை வளர்ப்பதும்தான். பல வழிகளில் இவர்கள் முயன்றும் பல தந்திரங்களைக் கையாண்டும் அனைத்திலும் இவர்கள் தோல்வியையே கண்டனர். இறுதியாக, வாளெடுப்பதைத் தவிர அவர்களுக்கு முன் வேறுவழி தோன்றவில்லை. ஆயினும், வாளேந்துவதால் பிரிவினை அதிகமாகலாம்; உயிர்ப்பலிகள் ஏற்படலாம் என்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் பெரும் குழப்பத்தில் தத்தளித்தனர்.
அபூதாலிபின் முன்னெச்சரிக்கை
குறைஷிகள் நபி (ஸல்) அவர்களைக் கொன்று விடுவதற்காக தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய அதே சமயத்தில் உக்பா, அபூஜஹ்ல், போன்றவர்களின் செயல்கள் மூலம் அந்த எண்ணம் அவர்களிடம் உறுதியாக இருக்கிறது என்பதை அபூதாலிப் நன்கு உணர்ந்து கொண்டார். எனவே, ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையினர்களை ஒன்று சேர்த்து அவர்களிடம் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவ்விரு கிளையிலுமுள்ள முஸ்லிம்கள் மற்றும் நிராகரிப்பவர்கள் என பாகுபாடின்றி அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். இதற்காக அனைவரும் கஅபாவில் ஒன்றுகூடி ஒப்பந்தம் செய்தனர். ஆனால், அபூதாலிபின் சகோதரன் அபூலஹப் இதற்கு உடன்படாமல் அவர்களை விட்டுப் பிரிந்து மற்ற குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டான். (இப்னு ஹிஷாம்)
முழுமையாக ஒதுக்கி வைத்தல்
தீய தீர்மானம்
மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போனதால் இணைவைப்பவர்களிடையே குழப்பம் மேன்மேலும் வலுத்தது. ஹாஷிம் கிளையாரும், முத்தலிப் கிளையாரும் நிலைமை எதுவாம்னும் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்ததைக் கண்ட இணைவைப்பவர்கள் அனைவரும் “முஹஸ்ஸப்’ என்ற பள்ளத்தாக்கிலுள்ள கினானா கிளையாரின் இடத்தில் ஒன்றுகூடி ஆலோசித்து, பல தீர்மானங்களைப் போட்டனர்.
அவையாவன: ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையாரிடம் திருமண உறவு, கொடுக்கல் வாங்கல், அவர்களுடன் அமர்வது, அவர்களுடன் பழகுவது, அவர்களது வீட்டுக்குச் செல்வது, அவர்களிடம் பேசுவது, அவர்களுக்குக் கருணை காட்டுவது, ஹாஷிம் கிளையார்களின் சமரச பேச்சை ஏற்பது போன்ற எந்த செயலும் செய்யக் கூடாது. முஹம்மதை அவர்கள் நம்மிடம் ஒப்படைக்கும் வரை நாம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் எழுதினர். இவ்வுடன்படிக்கையை “பகீழ் இப்னு ஆமிர் இப்னு ஹாஷிம்’ என்பவன் எழுதினான். நபி (ஸல்) அவர்களின் சாபத்திற்கு ஆளான இவனது கை சூம்பிவிட்டது. (ஸஹீஹுல் புகாரி)
இந்த உடன்படிக்கை எழுதப்பட்டு கஅபாவில் தொங்க விடப்பட்டது. ஹாஷிம், முத்தலிபின் கிளையால் அபூலஹபைத் தவிர ஏனைய நிராகரிப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் “அபூதாலிப் கணவாயில்’ ஒதுக்கி வைக்கப்பட்டனர். இது நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு முஹர்ரம் மாதம் தலைப்பிறையில் நடந்தது.
“கணவாய் அபூதாலிபில்’ மூன்று ஆண்டுகள்
இக்காலக்கட்டத்தில் அவர்களிடம் இருப்பிலிருந்த உணவுகளும், தானியங்களும் முடிந்து விட்டன. இணைவைப்பவர்கள் மக்காவுக்கு வரும் உணவுகளையெல்லாம் முந்திச் சென்று வாங்கிக் கொள்வார்கள். இவர்கள் உண்ணுவதற்கு ஏதுமின்றி இலைகளையும், தோல்களையும் சாப்பிடும் இக்கட்டுக்கு ஆளாயினர். பசியினால் பெண்களும், சிறுவர்களும் அழும் குரல்கள் கணவாய்க்கு வெளியிலும் கேட்கும். மிக இரகசியமாகவே தவிர எந்த உதவியும் அவர்களுக்குக் கிடைக்காது. மதிப்புமிக்க மாதங்களில்தான் தங்களின் தேவைகளுக்குரிய சாமான்களை வாங்கிக்கொள்ள முடிந்தது. மக்காவுக்கு வரும் வியாபாரக் கூட்டங்களிடமிருந்து மக்காவிற்கு வெளியில்தான் அவர்களால் பொருட்கள் வாங்க முடிந்தது. இருந்தும் இவர்களால் வாங்க முடியாத அளவிற்கு மக்காவாசிகள் அப்பொருட்களின் விலைகளை உயர்த்தினர்.
சில சமயம் ஹகீம் இப்னுஹிஸாம் தனது மாமி (தந்தையின் சகோதரி) கதீஜாவிற்காக கோதுமை மாவை எடுத்துச் செல்வார். ஒருமுறை அபூஜஹ்ல் வழிமறித்து, அவர் எடுத்துச் செல்வதைத் தடுத்துக் கொண்டிருந்தான், அபூபுக்த தலையிட்டு அபூஜஹ்லிடமிருந்து அவரைக் காப்பாற்றினார்.
நபி (ஸல்) அவர்களின் மீது அபூதாலிபுக்கு எப்போதும் எதிரிகளைப் பற்றிய அச்சம் இருந்தது. அதற்காக நபி (ஸல்) அவர்களைத் தனது விரிப்பில் தூங்கச் சொல்வார். அனைவரும் தூங்கியதற்குப் பின், தனது பிள்ளைகள் அல்லது சகோதரர்கள் அல்லது தனது சிறிய, பெரியதந்தையின் பிள்ளைகள் ஆகியோல் யாரையாவது ஒருவரை நபியவர்களைப் படுக்க வைத்த தனது விரிப்பில் மாற்றி உறங்க வைத்துவிட்டு, நபி (ஸல்) அவர்களை வேறு விரிப்பில் படுக்கவைத்து விடுவார்கள். மக்கள் தூங்குவதற்கு முன் கொலைகாரர் யாராவது நபி (ஸல்) அவர்களைக் கண்காணித்தால், அவர்களைத் திசை திருப்புவதற்காக இவ்வாறு செய்வார்கள்.
இந்நிலையிலும் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ஹஜ்ஜுடைய காலங்களில் வெளியே புறப்பட்டு, மக்களைச் சந்தித்து, அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைப்பார்கள். இந்நேரத்தில் அபூலஹப் செய்து வந்த செயல்கள் பற்றி முன்பே நாம் கூறியிருக்கின்றோம்.
கிழிக்கப்பட்டது தீர்மானம்!
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இப்படியே உருண்டோடின. குறைஷிகள் இந்த ஒப்பந்தத்தை எழுதினாலும் அவர்களில் சிலர் இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்து வெறுத்தே வந்தனர். இவ்வாறு வெறுத்தவர்கள்தான் இப்பத்திரத்தை கிழித்தெறிய முயற்சி எடுத்தனர். இம்முயற்சி நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடந்தேறியது.
ஹிஷாம் இப்னு அம்ர் என்பவர்தான் இதற்குக் காரணமாக இருந்தார். அவர் இரவில் மறைமுகமாக ஹாஷிம் கிளையாருக்கு உணவு வழங்கி வந்தார். ஒரு நாள் அவர் ஸுஹைர் இப்னு அபூ உமைய்யா மக்ஜூமீ என்பவரிடம் வந்தார். இவரது தாய் அப்துல் முத்தலிபின் மகள் ஆத்திகாவாகும். ஹிஷாம், “ஜுஹைரே! நீ சாப்பிடுகிறாய், குடிக்கிறாய். உனது தாய்மாமன்கள் எவ்வாறு கஷ்டத்திலிருக்கிறார்கள் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். இது உனக்கு சந்தோஷமாக இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு ஜுஹைர் “நான் ஒருவன் என்ன செய்ய?” என்று கூறினார். அதற்கு ஹிஷாம் “உனக்கு உதவ ஒருவர் இருக்கிறார்” என்று கூற, “யார் அவர்?” என்று வினவினார். “அது நான்தான்” என்று கூறினார். அதற்கு ஜுஹைர் “நீ மூன்றாவது ஒருவரைத் தேடு” என்று கூறினார்.
முத்இம் இப்னு அதீ என்பவரிடம் ஹிஷாம் சென்று அப்து மனாஃபின் மக்களான ஹாஷிம், முத்தலிப் இவ்விருவரின் குடும்ப உறவுகளை (இரத்த பந்தங்களை) நினைவூட்டி “இவர்களுக்கு அநியாயம் செய்யக் குறைஷிகளுக்கு நீ உடந்தையாக இருக்கிறாயே” என பழித்துக் கூறியவுடன் “நான் ஒருவனாக இருந்து என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். அதற்கு ஹிஷாம் “உன்னுடன் இரண்டாமவரும் இருக்கிறார்” என்று கூற, அதற்கு “அவர் யார்?” என்று கேட்டார். அதற்கு ஹிஷாம் “நான்தான்” என்று கூறினார். முத்இம் “மூன்றாவது ஒருவரும் நமக்கு வேண்டும்” என்று கூற, ஹிஷாம் “ஆம்! மூன்றாமவரும் இருக்கிறார். அவர்தான் ஜுஹைர் இப்னு அபூ உமைய்யா” என்று கூறினார். உடனே முத்இம் ஷாமிடம் “நான்காம் ஒருவரையும் தேடுங்கள்” என்றார்.
ஹிஷாம், அபுல் புக்தயிடம் வந்து முத்இமிடம் பேசியது போன்றே பேசவே “இதற்கு யாராவது உதவிக்கு இருக்கிறார்களா?” என்று அவர் வினவினார். அப்போது “ஹிஷாம் ஆம்! ஜுஹைர், முத்இம், நான் ஆகியோர் உம்முடன் இருக்கிறோம்” என்றார்.
ஹிஷாம், ஸம்ஆவிடம் வந்தார். அவருக்கும் ஹாஷிம் குடும்பத்திற்கும் உள்ள உறவுகளையும், உரிமைகளையும் பற்றி அவரிடம் கூறவே “நீர் அழைக்கும் இக்காரியத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்க, ஹிஷாம் “ஆம்!” என்ற கூறி அனைவரது பெயர்களையும் கூறினார்.
இவர்கள் அனைவரும் ஹஜுனுக்கு அருகில் ஒன்றுகூடினர். பிறகு, ஒப்பந்தப் பத்திரத்தை கிழிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது “இதை நானே முதலில் செய்வேன். இதைப் பற்றி நான்தான் முதலில் பேசுவேன்” என்றார் ஜுஹைர்.
காலையில் விடிந்தவுடன் அனைவரும் தங்களது சபைக்கு வந்தனர். ஜுஹைர் ஒரு முழு ஆடையை அணிந்து வந்திருந்தார். அவர் கஅபாவை ஏழு முறை வலம் வந்துவிட்டு மக்களை நோக்கி “மக்காவாசிகளே! நாம் சாப்பிடுகிறோம். ஆடைகளை அணிந்து கொள்கிறோம். ஹாஷிமின் குடும்பமோ அழிந்து கொண்டிருக்கிறது. அவர்களிடம் யாரும் விற்பதும் கிடையாது, வாங்குவதும் கிடையாது. இது தகுமான செயலா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உறவை துண்டிக்கும்படியான, அநியாயமான, இந்த ஒப்பந்தப் பத்திரம் கிழித்தெறியப்படும் வரை நான் உட்கார மாட்டேன்” என்று கூறினார். பள்ளியின் ஓரத்தில் அமர்ந்திருந்த அபூஜஹ்ல் “நீ பொய்யுரைக்கிறாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கிழிக்கப்படாது” என்றான். ஸம்ஆ, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீதான் மிகப்பெரியபொய்யன். நீ இதை எழுதியபோதே அதில் எங்களுக்கு விருப்பமில்லை” என்று கூறினார். அபுல் புக்த “ஆம்! ஸம்ஆ உண்மையைத்தான் கூறுகிறார். அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களும் எங்களுக்கு விருப்பமானதில்லை. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை” என்று கூறினார். முத்இம், “ஆம்! நீங்கள் இருவரும் உண்மையைத் தான் கூறுகிறீர்கள். இதைத் தவிர யார் என்ன கூறினாலும் அவர் பொய்யரே! இந்த ஒப்பந்தப் பத்திரத்திலிருந்தும் அதில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்தும் அல்லாஹ்வுக்காக நாங்கள் விலகிக் கொள்கிறோம்” என்று கூறினார். ஷாமும் இதுபோன்றே கூறி முடித்தார். இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக கூறியதும் இதைக் கேட்டுக் கொண்டிருந்த அபூஜஹ்ல் “இது இரவிலேயே பேசி முடிவு செய்யப்பட்டது. வேறு எங்கோ இதைப் பற்றி ஓர் ஆலோசனை நடந்திருக்கிறது” என்று கூறினான். பள்ளியின் ஓரத்தில் அபூதாலிப் அமர்ந்து இக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பத்திரத்தில் அல்லாஹ்வின் பெயரைத் தவிர அதில் எழுதப்பட்ட அனைத்தையும் கரையான் தின்று அழித்துவிட்டது. இதை அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்திருந்தான். நபி (ஸல்) அவர்களும் முன் கூட்டியே அதை அபூதாலிபிடம் கூறியிருந்தார்கள். அபூதாலிப் குறைஷிகளிடம் “எனது சகோதரனின் மகன் இப்படியெல்லாம் கூறியிருக்கிறார். அவர் பொய்யராக இருந்தால் அவருக்கும் உங்களுக்குமிடையில் நாங்கள் வழிவிட்டு விடுகிறோம். அவர் உண்மையாளராக இருந்தால் நீங்கள் எங்களுக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் எங்களது உறவுகளைத் துண்டிப்பதிலிருந்தும் விலகிட வேண்டும்” என்று கூறினார். அதற்கவர்கள், “நிச்சயமாக நீர் ஒரு நீதமான விஷயத்தை முன் வைத்தீர்” என்று கூறினர்.
அபூஜஹ்லுக்கும் மற்ற கூட்டத்தார்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை முடிந்தபோது முத்இம் கஅபாவிற்குள் அதைக் கிழிப்பதற்காகச் சென்று பார்த்தபோது “பிஸ்மிக்கல்லாஹும்ம’ என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்ததையும், “அல்லாஹ்’ என்று எழுதப்பட்ட இடங்களையும் தவிர மற்ற அனைத்தையும் கரையான் அத்துவிட்டிருந்தது.
பிறகு முழுவதுமாக அப்பத்திரம் கிழித்தெறியப்பட்டது. நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் கணவாயிலிருந்து வெளியேறி வந்தனர். இணைவைப்பவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தின் மிகப்பெரியஅத்தாட்சியைப் பார்த்தனர். ஆனால் அவர்களது இதயமோ...
அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதனைப்) புறக்கணித்து, “இது சகஜமான சூனியம் தான்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 54:2)
என்று அல்லாஹ் கூறியதைப் போன்றே இருந்தது. அதாவது, அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் புறக்கணித்து இவர்கள் நிராகரிப்பைத்தான் அதிகமாக்கிக் கொண்டனர். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆத்)
குறைஷிகளின் கடைசிக் குழு
தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கணவாயிலிருந்து வெளியேறிய நபி (ஸல்) முன்னர் போலவே அழைப்புப் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். குறைஷிகள் உறவுகளைத் துண்டிப்பதை விட்டுவிட்டாலும், முஸ்லிம்களுக்குத் தொந்தரவு தருவது, அல்லாஹ்வின் வழியை விட்டு மக்களைத் தடுப்பது என்ற தங்களது பழைய பாட்டையிலேயே நடந்து கொண்டிருந்தனர். அபூதாலிப் எண்பது வயதை கடந்தும் தன்னால் முடிந்த அளவு நபி (ஸல்) அவர்களை பாதுகாத்து வந்தார். கடினமான சோதனைகளால் குறிப்பாக, ஒதுக்கி வைக்கப்பட்ட காலத்தில் ஏற்பட்ட இன்னல்களால் மிகவும் வலுவிழந்து தளர்ந்திருந்தார். கணவாயிலிருந்து வெளியேறிய சில மாதங்களிலேயே கடினமான நோய்வாய்பட்டார்.
இதைக் கண்ட இணைவைப்பவர்கள், அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு அவரது சகோதரன் மகனான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஊறு விளைவிப்பது தங்களுக்கு அரபிகளின் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்று பயந்து தங்களுக்கு விருப்ப மில்லையெனினும் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளில் சிலவற்றை ஒப்புக்கொண்டு அபூதாலிபின் முன்னிலையில் நபி (ஸல்) அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பதற்காக ஒரு குழுவை தயார் செய்தனர். அபூதாலிபிடம் வந்த இறுதி குழு இதுதான்.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்கள்: அபூதாலிப் நோய்வாய்ப்பட்ட போது குறைஷிகள் தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொண்டனர்: “ஹம்ஜா, உமர் இஸ்லாமைத் தழுவிவிட்டனர். முஹம்மதைப் பற்றி அனைத்து குறைஷி குலத்தவருக்கும் தெரிந்துவிட்டது. நாம் அபூதாலிபிடம் செல்வோம்; தனது தம்பி மகனை அவர் கட்டுப்படுத்தட்டும்; நம்மிடமும் அவருக்காக ஏதாவது ஒப்பந்தத்தை வாங்கிக் கொள்ளட்டும். இல்லையெனில், மக்கள் நமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் இல்லாமல் மீறி விடுவார்கள் என நாம் அஞ்சவேண்டியுள்ளது”
மற்றொரு அறிவிப்பில் வருவதாவது: இந்தக் கிழவர் இறந்த பின் அவருக்கு (முஹம்மதுக்கு) ஏதாவது ஆகிவிட்டால் அரபுகள் “முஹம்மதுடைய பெரியதந்தை இறந்தப் பின் முஹம்மதுக்குக் கெடுதிகள் செய்கின்றனர். அவர் உயிருடன் இருக்கும்போது இவரை விட்டுவிட்டார்கள்” என்று குறை கூறுவார்களோ என நாம் அஞ்சவேண்டியுள்ளது என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
உத்பா, ஷைபா, அபூஜஹ்ல், உமைய்யா, அபூசுஃப்யான் இப்னு ஹர்ஃப் போன்ற குறைஷித் தலைவர்களில் சிலர் தங்களது கூட்டங்களில் உள்ள இருபத்தைந்து நபர்களைச் சேர்த்துக்கொண்டு அபூதாலிபிடம் பேசுவதற்காக வந்தனர். அவர்கள் “அபூதாலிபே! நீங்கள் எங்களிடம் மதிப்புமிக்கவர்; உங்களுக்கு ஏற்பட்டுள்ள (நோயின்) நிலை உங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என நாங்கள் பயப்படுகிறோம். மேலும், எங்களுக்கும், உங்களது சகோதரன் மகனுக்கும் மத்தியிலுள்ள நிலை உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆதலால், அவரை இப்போது அழைத்து அவரிடமிருந்து எங்களுக்குச் சில வாக்குறுதிகளை வாங்கிக் கொடுங்கள். எங்களிடமிருந்தும் அவருக்குச் சில வாக்குறுதிகளை வாங்கிக் கொடுங்கள். எங்களை எங்களது மார்க்கத்தில் விட்டு விடட்டும். அவரை அவரது மார்க்கத்தில் விட்டு விடுகிறோம். எங்களது மார்க்கத்தை அவர் குறை கூறாமல் இருக்கட்டும்” எனக் கூறினார்கள்.
அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச்செய்து “எனது சகோதரன் மகனே! இதோ இவர்கள் உனது கூட்டத்தில் சிறப்புமிக்கவர்கள். உனக்காகவே இங்கு ஒன்றுகூடி இருக்கிறார்கள். அவர்கள் உனக்கு சில வாக்குறுதிகளைத் தருவார்கள். உன்னிடம் சில வாக்குறுதிகளைக் கேட்கிறார்கள். உங்களில் யாரும் எவருக்கும் இடையூறு தரக்கூடாது” என்று அவர்கள் கூறியதை அப்படியே கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நான் இவர்களுக்கு ஒரு சொல்லை முன்வைக்கிறேன். அதை இவர்கள் மொழிந்தால் இவர்கள் அரபியர்களை ஆட்சி செய்யலாம். அரபி அல்லாதவர்களும் இவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்” என்று கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில்: அபூதாலிபை நோக்கி “நான் இவர்களை ஒரே வார்த்தையில் இணைக்க விரும்புகிறேன். அதை இவர்கள் கூறும்போது அரபிகள் இவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்; அரபி அல்லாதவர்கள் இவர்களுக்கு வரி செலுத்துவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில் வருவதாவது: “எனது தந்தையின் சகோதரரே! அவர்களுக்கு ஏற்றமான ஒன்றை நோக்கி அவர்களை நான் அழைக்க வேண்டாமா?” என்று நபி (ஸல்) கேட்க, “நீ அவர்களை எதன் பக்கம் அழைக்கிறாய்?” என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவர்கள் ஒரு வாக்கியத்தைச் சொல்ல வேண்டும் என்றுதான் அழைக்கிறேன். அந்த வாக்கியத்தால் அரபியர்கள் அவர்களுக்குப் பணிவார்கள்; அரபி அல்லாதவர்களையும் அவர்கள் ஆட்சி செய்யலாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் வருவதாவது: “ஒரே ஒரு சொல்லை அவர்கள் சொல்லட்டும். அதனால் அவர்கள் அரபியர்களை ஆட்சி செய்யலாம்; அரபி அல்லாதவர்களும் அவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். இதை கூறி முடித்தவுடன் இவ்வளவு பயன்தரும் சொல்லை எப்படி மறுப்பது? என்ன பதில் கூறுவது? என்று தெரியாமல் அனைவரும் திகைத்து அமைதி காத்தனர். பிறகு அபூஜஹ்ல் “அது என்ன சொல்? உமது தந்தையின் மீது சத்தியமாக! நாங்கள் அதையும் கூறுகிறோம். அதுபோன்று பத்து சொற்களையும் கூறுகிறோம்” என்று கூறினான். அப்போது நபி (ஸல்) அவர்கள் “லாயிலாஹஇல்லல்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் அனைத்தையும் விட்டு விலகிவிட வேண்டும்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் தங்கள் கைகளைத் தட்டிக் கொண்டு “முஹம்மதே! என்ன? கடவுள்களை எல்லாம் ஒரே கடவுளாக ஆக்கப் பார்க்கிறாயா? உனது பேச்சு மிக ஆச்சரியமாக இருக்கின்றதே!” என்றார்கள்.
பிறகு அவர்களில் சிலர் சிலரிடம் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயம் (வாக்குறுதிகளில்) நீங்கள் விரும்பும் எதையும் இவர் உங்களுக்குக் கொடுக்க மாட்டார்; நீங்கள் எழுந்து செல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கும் அவருக்கும் மத்தியில் தீர்ப்பு அளிக்கும் வரை உங்களது மூதாதையரின் மார்க்கத்திலேயே நிலைத்திருங்கள்” என்று கூறினார்கள். அதற்குப் பின் அனைவரும் பிரிந்து சென்றுவிட்டனர்.
இவர்கள் விஷயத்தில்தான் இந்த வசனங்கள் அருளப்பட்டன:
“ஸாத் - நல்லுபதேசங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனின் மீது சத்தியமாக! (இது நம்மால்தான் அருளப்பட்டது. இதனை) நிராகரிப்பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர்.
இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கின்றோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாக இருக்கவில்லை.
(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர் (ஆகிய நீங்கள்) அவர்களிலிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சயப்பட்டு, “இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உங்களைப் பற்றி) அந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.
“என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்” (என்று கூறி,) அவர்களிலுள்ள தலைவர்கள், (மற்றவர்களை நோக்கி, “இவரை விட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாக இருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இவ்விஷயத்தில் ஏதோ (சுயநலந்தான்) கருதப்படுகின்றது” என்று கூறிக் கொண்டே சென்றுவிட்டனர்.
“முன்னுள்ள வகுப்பாலும், இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே அன்றி வேறில்லை” என்றும், “நம்மைவிட்டு இவருக்கு மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டு விட்டது” என்றும் (கூறினார்கள்). (அல்குர்ஆன் 38:1-8) (இப்னு ஹிஷாம், திர்மிதி, முஸ்னது அபீ யஃலா, இப்னு ஜரீர்)
துயர ஆண்டு
அபூதாலிப் மரணம்
அபூதாலிப் நோய் அதிகமாகி நபித்துவத்தின் பத்தாவது வருடம் ரஜப் மாதத்தில் கணவாயிலிருந்து வெளியேறி சரியாக ஆறு மாதத்திற்குப் பின் மரணம் எய்தினார். (அல்முக்தஸர்)
சிலர் ரமழான் மாதத்தில் அன்னை கதீஜாவின் மரணத்திற்கு மூன்று நாள்களுக்கு முன் மரணமானார் என்றும் கூறுகின்றனர்.
அபூதாலிபுக்கு மரணம் சமீபமானபோது நபி (ஸல்) அவரிடம் சென்றார்கள். அப்போது அங்கு அபூஜஹ்லும் இருந்தான். அபூதாலிபிடம் நபி (ஸல்) அவர்கள் “எனது தந்தையின் சகோதரரே! நீங்கள் “லாஇலாஹஇல்லல்லாஹ்’ என்று கூறுங்கள். நான் அல்லாஹ்விடம் இவ்வார்த்தையின் பொருட்டால் உங்களுக்காக வாதிடுவேன்” என்று கூறினார்கள். ஆனால், அங்கிருந்த அபூஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபூ உமய்யாவும் “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா நீர் புறக்கணிக்கப் போகின்றீர்?” என்று தொடர்ந்து அவரிடம் இதையே கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில் அபூதாலிப் “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில்தான் (இருக்கிறேன்)” என்று கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எனக்கு தடை வராமல் இருக்கும்வரை அல்லாஹ்விடம் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள். ஆனால்,
“இணைவைத்து வணங்குபர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல் அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?) (அல்குர்ஆன் 9:113)
(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்!” (அல்குர்ஆன் 28:56) (ஸஹீஹுல் புகாரி)
என்ற இரு வசனங்களை அல்லாஹ் இறக்கி இணைவைப்பவர்களுக்காக பாவ மன்னிப்புக் கோருவதைத் தடை செய்துவிட்டான். (ஸஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்களுக்கு அபூதாலிப் கொடுத்து வந்த பாதுகாப்பு மற்றும் உதவியைப் பற்றி நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. காரணம், அவர் குறைஷித் தலைவர்கள் மற்றும் மூடர்களின் தாக்குதல்களிலிருந்து இஸ்லாமிய அழைப்புப் பணியைப் பாதுகாத்து, அதற்கு ஓர் அரணாக விளங்கினார். ஆனாலும் தங்களது மூதாதையரின் மார்க்கத்திலேயே அவர் நிலைத்திருந்து விட்டதால் மறுமையின் வெற்றியை அடையவில்லை.
ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்களது பெரியதந்தை அபூதாலிபிற்கு என்ன பயனளிப்பீர்கள். அவர் உங்களைப் பாதுகாத்தார். உங்களுக்காகக் கோபம் கொண்டார்” என்று அப்பாஸ் (ரழி) கேட்டபோது, “அவர் நரகத்தின் குறைந்த ஆழமுள்ள பகுதியில் இருப்பார். நான் இல்லை என்றால் நரகத்தின் அடித்தளத்தில் சென்றிருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) கூற தான் கேட்டதாக அபூ ஸஈது அல்குத் (ரழி) அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களிடம் அவர்களது பெரியதந்தை அபூதாலிபைப் பற்றி பேசப்பட்டபோது “மறுமையில் அவருக்கு எனது சிபாரிசு பலனளிக்கலாம். அதனால் அவரது கரண்டைக்கால் வரையுள்ள நெருப்பின் ஆழத்தில் அவர் வைக்கப்படுவார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
துணைவி கதீஜா மரணம்
அபூதாலிபின் மரணத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பின் துணைவி கதீஜா (ரழி) மரணமானார்கள். இவர்களது மரணம் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில், அவர்களின் 65வது வயதில் நிகழ்ந்தது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பது. (தல்கீஹ்)
அபூதாலிபின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்குப் பின் கதீஜா (ரழி) மரணமானார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மிகப்பெரியஅருளாக கதீஜா (ரழி) விளங்கினார்கள். நபி (ஸல்) அவர்களுடன் கால் நூற்றாண்டுக் காலம் வாழ்ந்த நமது அன்னை கதீஜா (ரழி), நபியவர்களின் துக்க நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலாக, சிரமமான நேரத்தில் உறுதுணையாக இருந்து, அவர்களின் தூதுத்துவத்தை எடுத்துக் கூறுவதற்கு பலவகையில் தியாகம் செய்தார்கள். மேலும், அறப்போரின் கஷ்டங்களில் பங்கெடுத்து தனது உம்ராலும் பொருளாலும் உதவி ஒத்தாசை செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: “மக்கள் என்னை நிராகரித்த போது, கதீஜா என்னை நம்பினார். மக்கள் என்னை பொய்ப்பித்த போது, அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் என்னை ஒதுக்கிய போது, அவர் என்னைத் தனது பொருளில் சேர்த்துக் கொண்டார். அல்லாஹ் அவர் மூலமாகத்தான் எனக்குக் குழந்தைகளைக் கொடுத்தான். அவரல்லாத மற்ற மனைவிகள் மூலம் குழந்தைகள் இல்லாமல் செய்துவிட்டான்.” (முஸ்னது அஹ்மது)
அபூஹுரைரா (ரழி) அறிவிப்பதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் உணவு எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் ஸலாம் கூறி சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காணமுடியாத முத்து மாளிகை ஒன்று அவருக்கு கிடைக்க இருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி)
அடுக்கடுக்கான துயரங்கள்
சில நாட்களுக்குள் துக்கம் தரும் இவ்விரு நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்தன. நபி (ஸல்) அவர்களின் உள்ளம் வேதனையால் துடிதுடித்தது. தொடர்ந்து சமுதாயத்தவர்களும் துன்பங்களைத் தந்தனர். அபூதாலிபின் மரணத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்களுக்குத் துயரத்திற்கு மேல் துயரம் அதிகரித்தது. முற்றிலும் நிராசையாகி “தாயிஃப்’ நகர மக்களாவது அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஆதரவு அளிப்பார்கள் என்று தாம்ஃபை நோக்கி பயணமானார்கள். ஆனால், அங்கு அவர்களுக்கு ஆதரவளிப்பவரோ உதவி செய்பவரோ இல்லை. மாறாக, அம்மக்கள் நபி (ஸல்) அவர்களின் கூட்டத்தார் கொடுக்காத நோவினைகளை அவர்களுக்குக் கொடுத்தனர். கல் நெஞ்சம் கொண்ட அம்மக்கள் நபியவர்களை அடித்து துன்புறுத்தினர்.
மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களைக் கொடுமைப்படுத்தியது போன்றே அவர்களது தோழர்களையும் கொடுமைப்படுத்தினர். நபி (ஸல்) அவர்களின் நெருக்கமான தோழரான அபூ பக்ருக்கும் இக்கொடுமைகள் நிகழ்ந்தன. இதனால் அவரும் மக்காவை விட்டு ஹபஷாவிற்கு செல்ல வேண்டுமென முடிவு செய்தார். மக்காவை விட்டு வெளியேறி “பர்குல் கிமாத்’ என்ற இடத்தை அடைந்த போது அவரை “இப்னு துகுன்னா’ என்பவர் சந்தித்து தனது பாதுகாப்பில் மீண்டும் அவரை மக்காவிற்கு அழைத்து வந்தார். (ஸஹீஹுல் புகாரி)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு அவன் வாழ்நாளில் கொடுக்க முடியாத வேதனைகளைக் குறைஷிகள் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து வந்தனர். ஒருமுறை குறைஷி மடையர்களில் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் தலை மீது மண்ணை வாரி இறைத்தான். வீட்டுக்குள் நுழைந்த நபியவர்களின் தலை மீது மண் இருப்பதைக் கண்ட அவர்களின் மகளால் ஒருவர் அழுதவராக அதனை அகற்றினார்கள். “எனது அருமை மகளே! அழாதே! நிச்சயமாக அல்லாஹ் உனது தந்தையைப் பாதுகாப்பான். அபூதாலிப் மரணிக்கும் வரை நான் அதிகம் வெறுக்கும் ஒன்றை குறைஷிகள் எனக்கு செய்ததில்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
இவ்வாறு இந்த ஆண்டில் துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருந்ததால் வரலாற்றில் “ஆமுல் ஹுஸ்ன்’ துயர ஆண்டு என்று இந்த ஆண்டைக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸவ்தா உடன் மறுமணம்
நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் நபி (ஸல்), ஸவ்தா (ரழி) அவர்களை திருமணம் செய்தார்கள். இவர் அழைப்புப் பணியின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாமைத் தழுவியவர். முஸ்லிம்கள் இரண்டாவது முறையாக ஹபஷாவிற்கு ஹிஜ்ரா சென்றபோது இவரும் தனது கணவருடன் சென்றிருந்தார். இவர் கணவர் ஹபஷாவில் மரணித்துவிட்டார். அதற்குப் பின் இவர் மக்கா வந்தவுடன் இவருடைய இத்தா”வுடைய காலம் முடிவுறவே நபி (ஸல்) அவர்கள் இவரை பெண் பேசி திருமணம் முடித்துக் கொண்டார்கள். கதீஜா (ரழி) அவர்களின் மரணத்திற்குப் பின் இவர்களைத்தான் முதலில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இறுதி காலத்தில் நபி (ஸல்) அவர்கள் தனக்கு ஒதுக்கியிருந்த நாட்களையும் ஆயிஷாவிற்குக் கொடுத்து விட்டார்கள்.
பொறுமை மற்றும் நிலைகுலையாமையின் தூண்டுகோல்கள்
1) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை
இவை அனைத்திற்கும் தலையாயக் காரணம், அல்லாஹ் ஒருவனையே நம்புவதும் அவனை முறையாக அறிந்துகொள்வதும் ஆகும். உறுதிமிக்க இறைநம்பிக்கை எவன் உள்ளத்தில் ஊடுருவி விட்டதோ அவர், உலகத்தின் சோதனைகள் எவ்வளவுதான் அதிகமாக, பெரியதாக, கடுமையாக இருப்பினும் அவற்றை தனது இறைநம்பிக்கைக்கு முன் மாபெரும் வெள்ளப் பெருக்கின்மேல் வரும் ஒன்றுமில்லா நுரையாகவே பார்ப்பார். தான் உணரும் இறைநம்பிக்கையின் சுவைக்கு முன்னால் உலகத்தின் எவ்வளவு பெரியகஷ்டமானாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்.
இறைநம்பிக்கை உறுதியாக உள்ளத்தில் ஊடுருவி விட்டால் அது மலைகளையும் எடை போட்டுவிடும் அளவுக்கு வலுமிக்கதாக இருக்கும். இதைத்தான் அல்லாஹ் அழகாக குறிப்பிடுகிறான்:
“அவன்தான் மேகத்திலிருந்து மழையைப் பொழிவிக்கிறான். (அது பொழிகின்ற) நீருக்குத் தக்கவாறு (சிறிய பெரிய) ஓடைகளாக ஓடுகிறது. (அவ்வோடைகளில்) வெள்ளம் நுரைகளை மேல் சுமந்து செல்கிறது. இவ்வாறே ஆபரணங்களுக் காகவோ அல்லது மற்ற சாமான்களுக்காகவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும்பொழுதும் அதைப்போன்ற (அழுக்கு) நுரை மிதக்கிறது. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் இதனை உதாரணமாகக் கூறுகிறான். ஏனெனில், (அழுக்கு) நுரையோ பயனற்றதாக (இருப்பதால்) அழிந்து (மறைந்து) விடுகிறது. மனிதனுக்குப் பயனளிக்கக் கூடியவையோ பூமியில் (சேர்த்து வைக்கப்பட்டு) நிலையாக இருக்கின்றன. இவ்வாறே (நம்பிக்கை அற்றவர்களை அழுக்கு நுரைக்கும், நம்பிக்கையாளர்களை பூமியில் சேர்த்து வைக்கப்படும் பயன்தரும் பொருள்களுக்கும் ஒப்பிட்டு) அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். (அல்குர்ஆன் 13:17)
இந்த ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டு நிலை குலையாமை, பொறுமை, சகிப்பு, மன அமைதி ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற மற்ற காரணங்கள் உருவாகின்றன.
2) உள்ளங்களை ஈர்க்கும் தலைமைத்துவம்
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல், முழு மனித குலத்திற்கும் மிக உயர்ந்த வழிகாட்டும் தலைவராக இருந்தார்கள். அழகிய குணங்களும், உயர்ந்த பண்புகளும், சிறந்த பழக்க வழக்கங்களும், பெருந்தன்மையும் அவர்களின் இயற்கைக் குணமாக இருந்தது. இதனால் அவர்களின் பக்கம் உள்ளங்கள் ஈர்க்கப்பட்டன. அவர்களுக்காக பல உயிர்கள் தியாகங்கள் செய்யத் துணிந்தன. அவர்களிடம் இருந்த உயர்ந்த நற்பண்புகளைப் போன்று வேறு எவரும் பெற்றிருக்கவில்லை. சிறப்பு, உயர்வு, கண்ணியம், மதிப்பு, பெருந்தன்மை, வாய்மை, நன்னடத்தை, பணிவு ஆகியவற்றில் எதிரிகள்கூட சந்தேகிக்க முடியவில்லை எனும்போது அவர்களது அன்பர்கள், நண்பர்கள் பற்றி என்ன கூற முடியும். நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு வார்த்தையை செவிமடுத்தாலும் அதை உண்மை என்றே அவர்கள் உறுதிகொள்வர்.
குறைஷிகளில் மூவர் ஓரிடத்தில் ஒன்று கூடினர். இவர்கள் ஒவ்வொருவரும் பிறருக்குத் தெரியாமல் இரகசியமாகக் குர்ஆனை செவிமடுத்து இருந்தார்கள். ஆனால், பிறகு இவர்களது இரகசியம் வெளியாகிவிட்டது. மூவரில் ஒருவன் அவர்களில் இரண்டாமவனான அபூஜஹ்லிடம் “முஹம்மதிடம் நீ கேட்பதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான். அதற்கவன் “நான் என்ன கேட்டு விட்டேன். எங்களுக்கும் அப்து மனாஃப் குடும்பத்திற்கும் சிறப்பு விஷயத்தில் போட்டி வந்தபோது அவர்கள் ஏழைகளுக்கு உணவளித்தார்கள்; நாங்களும் உணவளித்தோம்; அவர்கள் வாகனமற்றவர்களுக்கு வாகனங்களை வழங்கினார்கள்; நாங்களும் வழங்கினோம்; தர்மம் செய்தார்கள்; நாங்களும் தர்மம் செய்தோம். இவ்வாறு நாங்கள் நன்மையான விஷயத்தில் பந்தய குதிரைகளைப் போன்று ஆகிவிட்டோம். அப்போது அப்து மனாஃபின் குடும்பத்தார்கள் எங்களுக்கு இறைத்தூதர் இருக்கிறார், அவருக்கு வானத்திலிருந்து வஹி (இறைச்செய்தி) வருகிறது” என்று கூறினார்கள். அதற்கு அபூஜஹ்ல் “இந்தச் சிறப்பை எப்பொழுதும் நாங்கள் அடைந்து கொள்ளவே முடியாது” என்று பொறாமையுடன் கூறி, நீங்கள் கூறும் இந்த நபியை ஒருக்காலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது உண்மைப்படுத்தவும் முடியாது என்று கூறிவிட்டான். (இப்னு ஹிஷாம்)
“முஹம்மதே! நாங்கள் உம்மை பொய்ப்பிக்கவில்லை. நீ கொண்டு வந்த மார்க்கத்தைத்தான் பொய்ப்பிக்கின்றோம்” என்று அபூஜஹ்ல் எப்போதும் கூறி வந்தான். அதையே இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது: (ஸுனனுத் திர்மிதி)
(நபியே! உங்களைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உங்களுக்குக் கவலையைத் தருகின்றது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர். (அல்குர்ஆன் 6:33)
ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை நிராகரிப்பவர்கள் மும்முறை எல்லைமீறி குத்தலாகப் பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “குறைஷி கூட்டமே! திட்டவட்டமாக நான் உங்களிடத்தில் உங்களைப் பலியிட்டுவிடும் முடிவைக் கொண்டு வந்துள்ளேன். (இதே நிலையில் நீங்கள் நீடித்தால் அதிவிரைவில் உங்களது கதை முடிந்துவிடும்)” என்று எச்சரித்தார்கள். இவ்வார்த்தை அவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. நபி (ஸல்) அவர்களுக்கு கடும் எதிரியாக இருந்தவர் கூட அவர்களை மிக அழகிய முறையில் சமாதானப்படுத்தினார்.
ஒருமுறை அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் குடல்களை ஸஜ்தாவில் இருக்கும்போது நபி (ஸல்) அவர்களின் மீது அவர்கள் போட்டனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் நபியவர்கள் கையேந்திய போது எதிரிகளின் சிரிப்பு மறைந்து கவலையும், துக்கமும் அவர்களைப் பீடித்துக் கொண்டது. நிச்சயமாக தங்களுக்கு நாசம்தான் என்பதை உறுதியாக விளங்கிக் கொண்டனர்.
அபூலஹபின் மகன் உத்பாவிற்கு எதிராக நபி (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தனக்கு எதிராக செய்த பிரார்த்தனையின் பலனை சந்தித்தே ஆக வேண்டும் என்று அவன் உறுதியாக நம்பியிருந்தான். அவன் பயணத்தில் ஓரிடத்தில் தங்கியிருந்தபோது சிங்கத்தைப் பார்த்துவிட்டு, “மக்காவில் இருந்து கொண்டே முஹம்மது என்னைக் கொலை செய்துவிட்டார்” என்று கத்தினான்.
உபை இப்னு கலஃப், நபி (ஸல்) அவர்களை கொன்று விடுவேன் என்று மிரட்டி வந்தான். நபி (ஸல்) “இன்ஷா அல்லாஹ்! நான்தான் உன்னைக் கொல்வேன்” என்று கூறினார்கள். உஹுத் போரில் நபி (ஸல்) அவர்கள் அவன்மீது ஈட்டியை எய்து சிறிய காயத்தை ஏற்படுத்தியபோது, “இந்த முஹம்மது மக்காவில் இருக்கும்போதே என்னைக் கொல்வேன் என்று சொல்லியிருந்தார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்மீது துப்பியிருந்தாலும் அவர் என்னை கொன்றிருப்பார்” என்றான் உபை. (இதன் விவரம் பின்னால் வருகிறது). (இப்னு ஹிஷாம்)
மக்காவில் இருக்கும்போது ஸஅத் இப்னு முஆத் (ரழி) அவர்கள் உமய்யாவைப் பார்த்து “முஸ்லிம்கள் உன்னை நிச்சயம் கொலை செய்து விடுவார்கள் என்று நபி (ஸல்) கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள். இதைத் கேட்ட உமய்யாவுக்கு மரண பயம் ஏற்பட்டு மக்காவை விட்டு வெளியேறவே மாட்டேன் என்று தனக்குத் தானே உறுதி செய்து கொண்டான். பத்ர் போர் அன்று அபூஜஹ்ல் தன்னுடன் வந்தே ஆக வேண்டும் என்று அவனை நிர்ப்பந்தித்த போது போரிலிருந்து தப்பிப்பதற்கு வசதியாக மக்காவில் உள்ள ஒட்டகங்களில் மிகச் சிறந்ததை வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டான். அவனுடைய மனைவி “ஏ! அபூஸஃப்வான். மதீனாவில் உள்ள சகோதரர் உனக்கு கூறியதை நீ மறந்துவிட்டாயா?” என்று கேட்டாள். அவன் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவர்களுடன் சிறிது தூரம்தான் செல்ல நாடுகிறேன்” என்று கூறினான். (ஸஹீஹுல் புகாரி)
இவ்வாறே நபி (ஸல்) அவர்களது எதிரிகளின் நிலை இருந்தது. நபி (ஸல்) அவர்களது தோழர்களின் நிலை எவ்வாறு இருந்ததெனில், நபி (ஸல்) அவர்களைத் தங்களது உயிரினும் மேலாக அவர்கள் மதித்தார்கள். பள்ளத்தை நோக்கி தண்ணீர் விரைந்து வருவதுபோல நபி (ஸல்) அவர்களை நோக்கி அவர்களது உள்ளத்தில் உண்மையான பிரியம் விரைந்து வந்தது காந்தத்தை நோக்கி இரும்பு ஈர்க்கப்படுவதுபோல உள்ளங்கள் ஈர்க்கப்பட்டன.
நபி (ஸல்) அவர்கள் மீது தோழர்கள் உள்ளத்தில் இருந்த அர்ப்பணிக்கும் ஆசை அளவிட முடியாதது நபியவர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அன்பும் பிரியமும் அப்படித்தான். எனவே, அவர்களுக்காகத் தங்களது கழுத்து துண்டிக்கப்படுவதையும் அவர்கள் பொருட்படுத்தியதில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்களின் நகத்திற்கு ஒரு சேதம் ஏற்படுவதையோ, அவர்களுக்கு ஒரு முள் தைப்பதைக் கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
ஒருமுறை அபூபக்ர் (ரழி) கல் நெஞ்சக்காரர்களால் கடுமையாக மிதிக்கப்பட்டார்கள்; வன்மையாக அடிக்கப்பட்டார்கள். அந்நேரத்தில் அங்கு வந்த உத்பா, ஆபூபக்ரை செருப்பால் அடித்தது மட்டுமல்ல, அவர்களது முகத்தை செருப்பால் தேய்க்கவும் செய்தான். அவர்களது வயிற்றின் மீது ஏறி மிதித்தான். அவர்களது மூக்கு சிதைக்கப்பட்டதால் மூக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு ஆகிவிட்டது. “தைம்’ கிளையினர் அன்னாரை ஒரு துணியில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் வைத்தார்கள். அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்றே எண்ணி இருந்தார்கள்.
அன்று பகலின் இறுதியில் அவர்கள் பேசத் தொடங்கியபோது “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்” என்றுதான் கேட்டார்கள். இதைக் கேட்ட தைம் கிளையினர் அவரைக் குறை கூறிவிட்டு “அன்னாரது தாயார் உம்முல் கைடம் இவருக்கு உணவளியுங்கள்; ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; அவரை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு எழுந்துச் சென்றனர்.
அன்னாரது தாய் அனைவரும் சென்றபின் உணவு சாப்பிட அவரை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் அபூபக்ரோ “அல்லாஹ்வின் தூதர் என்னவானார்கள்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அன்னாரது தாய் “உனது தோழரைப் பற்றி அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒன்றுமே எனக்குத் தெரியாது” என்று கூறினார். “நீங்கள் கத்தாபின் மகள் உம்மு ஜமீல் (உமரின் சகோதரி) இடம் சென்று நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்து வாருங்கள்” என்று அபூபக்ர் (ரழி) கூறினார்கள். தாயார் உம்மு ஜமீலிடம் வந்து “அபூபக்ர் (ரழி) உன்னிடம் முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வைப் பற்றி விசாரித்து வர என்னை அனுப்பினார்” என்று கூற, அவர் “எனக்கு அபூபக்ரையும் தெரியாது, முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வையும் தெரியாது. நீங்கள் விரும்பினால் உங்களுடன் உங்கள் மகனைப் பார்க்க நான் வருகிறேன்” என்று கூறினார். அவர் “சரி” எனக் கூறவே, உம்மு ஜமீல் அவருடன் அபூபக்ரைப் பார்க்கப் புறப்பட்டார்.
உம்மு ஜமீல் அபூபக்ரை மயக்கமுற்று மரணித்தவரைப் போன்று பார்த்தவுடன் கூச்சலிட்டு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! கல் நெஞ்சம் கொண்ட இறைநிராகரிப்போரும் பாவிகளும் உங்களை இவ்வாறு செய்துவிட்டார்கள். அல்லாஹ் உங்களுக்காக அவர்களிடம் பழிவாங்க வேண்டுமென நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார். அவரிடம் அபூபக்ர் (ரழி), “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்” என்று கேட்டதற்கு “இதோ உமது தாய் (நமது பேச்சை) கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறவே அவரைப் பற்றி பரவாயில்லை என்று கூறியவுடன் “நபி (ஸல்) நல்ல விதமாக பாதுகாப்புடன் இருக்கிறார்கள்” என்று உம்மு ஜமீல் கூறினார். “அவர்கள் எங்கிருக்கிறார்” என்று அபூபக்ர் (ரழி) கேட்கவே “அவர்கள் தாருல் அர்கமில் இருக்கிறார்கள்” என்றவுடன் “அல்லாஹ்வின் தூதரைச் சென்று பார்க்காமல் நான் உண்ணவுமாட்டேன், குடிக்கவுமாட்டேன். இது அல்லாஹ்விற்காக என்மீது கடமையாகும்” என்று நேர்ச்சை செய்து கொண்டார்கள்.
அன்னாரது தாயாரும் உம்மு ஜமீலும் ஆள் நடமாட்டங்கள் குறைந்து மக்களின் ஆரவாரங்கள் அமைதியாகும் வரை சற்று தாமதித்து நபி (ஸல்) அவர்களிடம் அவரை அழைத்துச் சென்றார்கள். அபூபக்ர் (ரழி) நடக்க இயலாமல் அவர்கள் இருவர் மீதும் சாய்ந்து நடந்து சென்றார்கள். (அல்பிதாயா வந்நிஹாயா)
இந்த நூலின் பல இடங்களில் நபி (ஸல்) அவர்களின் மீது நபித்தோழர்கள் வைத்திருந்த அன்பை விவரிக்கும் அற்புதமான சம்பவங்களையெல்லாம் நாம் கூறுவோம். குறிப்பாக உஹுத் போரில் நடந்த நிகழ்ச்சிகள், “குபைப்“, இன்னும் அவர் போன்ற நபித்தோழர்கள் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நாம் பின்னால் பார்ப்போம்.
3) கடமை உணர்வு
நபித்தோழர்கள் தங்களின் மீது இறைவனால் சுமத்தப்பட்டுள்ள மாபெரும் பொறுப்பை முழுமையாக உணர்ந்திருந்தார்கள். “எந்த நிலையிலும் இப்பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. இப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் விலகிக்கொள்ளும் போது ஏற்படக்கூடிய மிக மோசமான முடிவை விட இவ்வுலகத்தின் சிரமங்களை தாங்கிக்கொள்வதே மேல். இப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லையெனில் தங்களுக்கும் மனித சமுதாயத்துக்கும் ஏற்படும் நஷ்டத்தை இப்பொறுப்பினை சுமந்துகொள்ளும் போது சந்திக்கும் சிரமங்களுடன் ஒருக்காலும் ஒப்பிட முடியாது” என்று நபித்தோழர்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர்.
4) மறுமையின் மீது நம்பிக்கை
மறுமையின் மீதுண்டான நம்பிக்கை, மேன்மேலும் கடமை உணர்வை பலப்படுத்தியது. அகிலத்தைப் படைத்து, வளர்த்து, காக்கும் இறைவனுக்கு முன்னால் நிற்க வேண்டும்; சிறிய பெரியஒவ்வொரு செயல்களுக்கும் அவனிடத்தில் விசாரணை உண்டு; அதற்குப் பின் நிரந்தர இன்பம் அல்லது நிரந்தர வேதனை நிச்சயம் உண்டு. இவ்வாறு உறுதியான நம்பிக்கையை நபித்தோழர்கள் கொண்டிருந்தனர். தங்களின் வாழ்க்கையை அச்சத்திலும் ஆதரவிலும் கழித்தனர். அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைப்பதுடன், அவனது வேதனையைப் பயந்தும் வந்தனர். அடுத்து வரும் வசனம் இதையே சுட்டிக்காட்டுகிறது.
அவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரையில் தானம் கொடுக்கின்றனர். அத்துடன், நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனிடம் செல்ல வேண்டும் என்பதை அவர்களது உள்ளங்கள் பயப்படுகின்றன... (அல்குர்ஆன் 23:60)
இவ்வுலகம், அதிலுள்ள இன்ப துன்பங்கள் யாவும் மறுமைக்கு முன் கொசுவின் இறக்கை அளவுக்குக் கூட சமமாகாது என்பதை நபித்தோழர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தனர். இதனால்தான் உலகத்தின் கஷ்டங்களும் சிரமங்களும் எவ்வளவுதான் பெரியதாக இருப்பினும் அதை அறவே பொருட்படுத்தாமல் துச்சமாக மதித்தனர்.
5) அல்குர்ஆன்
முஸ்லிம்கள் எந்த அடிப்படைக்கு மக்களை அழைக்கின்றார்களோ அந்த அடிப்படை, உண்மைதான் என்பதை குர்ஆன் வசனங்கள் தக்க சான்றுகளாலும், தெளிவான எடுத்துக் காட்டுகளாலும் மெய்ப்பித்துக் காட்டின. மேலும், மிக உயர்ந்த மனித சமூகமான இஸ்லாமிய சமூகம் அமைய வேண்டிய அடிப்படைகளை மேன்மைமிகு குர்ஆன் சுட்டிக்காட்டியது. இதில் நேரிடும் இன்னல்களைச் சகித்துக்கொள்ள வேண்டும். எதிர்ப்புகள் தலைதூக்கும் போது துணிவுடன் இருக்க வேண்டும்; என்பதை முன் சென்ற சமுதாயங்களை எடுத்துக்காட்டாக தந்து அவர்களை பற்றிய செய்திகளில் நல்ல படிப்பினைகளையும் ஞானங்களையும் வழங்கியது.
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) “அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)” என்று கேட்டதற்கு “அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது” என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 2:214)
அலிஃப்; லாம்; மீம். மனிதர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதனைப் பற்றி) அவர்கள் சோதிக்கப் படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?
இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கின்றோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறும்) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான். (அல்குர்ஆன் 29:1,2,3)
மேலும், குர்ஆன் வசனங்கள் அல்லாஹ்வை மறுத்தவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகத்திற்கும் முற்றிலும் தெளிவான பதில்களைத் தந்ததுடன், இதே வழிகேட்டில் அவர்கள் நிலைத்திருந்தால் அவர்களுக்கு ஏற்படும் கெட்ட முடிவைப் பற்றியும் எச்சரித்தன. இதற்கு ஆதாரமாக அல்லாஹ் தனது நேசர்கள் மற்றும் எதிரிகள் ஆகியோருடன் நடந்துகொண்ட வரலாற்று சம்பவங்களைத் தெளிவாகக் குர்ஆன் வசனங்கள் எடுத்துக் கூறின. சில நேரங்களில் மிகவும் மிருதுவாக அவர்கள் இருந்த வழிகேட்டை உணர்த்தி விளக்கமளிக்க வேண்டிய கடமையையும் குர்ஆன் வசனங்கள் செய்தன.
குர்ஆன் முஸ்லிம்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது. இப்பிரபஞ்சத்தில் உள்ள அல்லாஹ்வின் அற்புத படைப்புகளையும் அவன் அவற்றை அழகிய முறையில் நிர்வகிப்பதையும் அதன் மூலம் அவனே வணங்குவதற்குத் தகுதியானவன் என்பதையும் அவனை வணங்கும்போது அவன் பொழியும் அன்பு, அருள், பொருத்தம் எவ்வளவு மகத்துவமிக்கது, எவ்வளவு பாக்கியம் பெற்றது என்பதையும் குர்ஆன் முஸ்லிம்களுக்கு விளங்கவைத்தது. இதன் மூலம் முஸ்லிம்கள் அடைந்த மன திருப்திக்கும், மன அமைதிக்கும் எதுவும் சமமாக முடியாது.
இவ்வகையான வசனங்களில் முஸ்லிம்களிடம் நேரடியாக அழைத்துப் பேசிய வசனங்களும் உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாகும்:
அவர்களது இறைவன் தன்னுடைய அன்பையும், பொருத்தத்தையும் அளித்து சொர்க்கங்களையும் தருவதாக அவர்களுக்கு நற்செய்தி கூறுகின்றான். அவர்களுக்கு அவற்றில் என்றென்றும் நிலையான இன்பம் உண்டு. (அல்குர்ஆன் 9:21)
தங்களுக்கு அநீதமிழைத்து, தங்கள் மீது வரம்பு மீறி கொடுமை புரிந்த இறைமறுப்பாளர்களான தங்களின் எதிரிகளின் நிலை, நாளை மறுமையில் எவ்வாறு இருக்கும் என்று முஸ்லிம்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர்களுக்கு அதையும் குர்ஆன் தெளிவுபடுத்தியது.
இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி “(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் சுவைத்துப் பாருங்கள்” என்று கூறப்படும். (அல்குர்ஆன் 54:48)
அந்த நிராகரிப்பவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் விசாரணை செய்யப்பட்டு கைதிகளாக விலங்கிடப்பட்ட நிலையில் முகம் குப்புற நரகில் வீசி எறியப்படுவார்கள். இதோ (ஸகர்) நரகத்தின் வேதனையை சுவைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு கூறப்படும்.
6) வெற்றியின் நற்செய்திகள்
கொடுமைகளையும் துன்பங்களையும் சந்தித்த அன்றும் அதற்கு முன்பும் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதென்பது சோதனைகளையும், மரணங்களையும் சந்திப்பது மட்டுமல்ல என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருந்தனர். மாறாக, இஸ்லாமிய அழைப்பின் நோக்கம் முற்றிலும் அறியாமையால் நிரம்பிய கொள்கைகளையும் அதன் அநியாயமான சடங்குகளையும் அடியோடு ஒழித்துவிடுவதே ஆகும். இதன்மூலம் பூமி அனைத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உலகிலுள்ள அனைத்து அரசியல் அமைப்புகளையும் வெற்றிகண்டு முழு மனித சமுதாயத்திற்கும் அல்லாஹ்வின் பொருத்தத்தின்பால் வழிகாட்டுகிறது. மேலும், படைப்பினங்களை மனிதர்கள் வணங்குவதிலிருந்து வெளியேற்றி படைத்த அல்லாஹ்வை வணங்கும் வழிக்கு இஸ்லாம் அழைத்துச் செல்கிறது என்று அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
இதுபோன்ற நற்செய்திகளை சில நேரங்களில் மிகத் தெளிவாகவும் சில நேரங்களில் சூசகமாகவும் முஸ்லிம்களுக்கு குர்ஆன் விளக்கிக் கொண்டே இருந்தது. அக்காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருந்தார்கள். அவர்களது வாழ்க்கையே முற்றிலும் அழிந்துவிடும்படியான சோதனைகளும் நிகழ்ந்தன. அப்போது முன்சென்ற வசனங்கள் இறங்கின. அந்த வசனங்களின் கருத்துக்கள் முற்றிலும் மக்கா முஸ்லிம்களின் நிலைமைகளுக்கும் நிராகரிப்பவர்களின் நிலைமைகளுக்கும் மிகப் பொருத்தமாக இருந்தன. மேலும், அந்த வசனங்களில், நிராகரிப்பவர்கள் மற்றும் அநியாயக்காரர்களின் முடிவு அழிவுதான் என்றும் நல்லோர்கள்தான் இப்பூமியில் நிலைப்பார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆக, குர்ஆனில் கூறப்பட்ட சத்திரங்களில் “வெகு விரைவில் மக்காவாசிகள் தோல்வியுறுவார்கள். இஸ்லாமும் முஸ்லிம்களும் வெற்றி பெறுவார்கள்” என்று தெளிவான முன் அறிவிப்புகள் இருந்தன.
இறைநம்பிக்கையாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்ற நற்செய்தி கூறும் பல வசனங்களும் இக்கால கட்டத்தில்தான் இறங்கின. அல்லாஹ் கூறுகிறான்:
“நம்முடைய தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம்முடைய வாக்கு நிச்சயமாக முந்தி விட்டது. ஆதலால், நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள்.
நிச்சயமாக நம்முடைய படையினர்(களாகிய நம்பிக்கையாளர்கள்)தாம் வெற்றி பெறுவார்கள். ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரையில் (அல்லாஹ்வை நிராகரிக்கும்) இவர்களிலிருந்து நீங்கள் விலகி இருங்கள். (இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
அதிசீக்கிரத்தில் அவர்களும் அதனைக் கண்டு கொள்வார்கள். (என்னே!) நம்முடைய வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்? (நம்முடைய வேதனை) அவர்கள் மத்தியில் இறங்கும்போது, அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியற்காலை மகா கெட்டதாகிவிடும்.” (அல்குர்ஆன் 37:171-177)
“வெகு விரைவில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள்.” (அல்குர்ஆன் 54:45)
“இவர்களுடைய கூட்டத்தினர் (எம்மாத்திரம்?) மற்ற கூட்டத்தினர்களைப் போலவே இவர்களும் முறியடிக்கப்படுவார்கள்.” (அல்குர்ஆன் 38:11)
ஹபஷாவிற்குச் சென்று குடியேறிய முஸ்லிம்களைப் பற்றி இந்த வசனம் இறங்கியது:
(நம்பிக்கையாளர்களே! உங்களில்) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு பின்னர் அல்லாஹ்வுக்காக(த் தங்கள் ஊரைவிட்டு)ப் புறப்பட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகிலும் நல்ல இருப்பிடத்தையே தருவோம்; மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரிது. (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே? (அல்குர்ஆன் 16:41)
நபி யூசுஃப் (அலை) அவர்களின் வரலாற்றை விசாரித்த அந்த மக்களுக்கு பதில் கூறும்போது அதில்,
(நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சத்திரத்தைப் பற்றி வினவுகின்ற(இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 12:7)
என்றும் அல்லாஹ் கூறினான்.
அதாவது, நபி யூசுஃப் (அலை) அவர்களின் வரலாற்றை விசாரித்த மக்காவாசிகளே அவர்களின் சகோதரர்களுக்கு ஏற்பட்ட தோல்வியைப் போன்றே நீங்களும் தோல்வியை சந்திக்க இருக்கிறீர்கள். அவர்கள் அடிபணிந்தது போன்றே நீங்களும் வெகு விரைவில் அடிபணிவீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.
இறைத்தூதர்களை நினைவுகூர்ந்து அல்லாஹ் கூறுகிறான்:
“தங்களிடம் வந்த (நம்முடைய) தூதர்களை நிராகரித்தவர்கள் அவர்களை நோக்கி, “நிச்சயமாக நீங்கள் நம்முடைய மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்களுடைய ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர்களுடைய இறைவன் (அந்த தூதர்களை நோக்கி) “நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்” என்றும், “உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்” என்றும் வஹி மூலம் அறிவித்து “இது எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கின்றாரோ அவருக்கு ஒரு சன்மானமாகும்” என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.” (அல்குர்ஆன் 14:13,14)
பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் மிகக் கடுமையான போர் கொழுந்துவிட்டு எந்து கொண்டிருந்த நேரத்தில் மக்காவாசிகள் இணைவைப்பவர்களாகிய பாரசீகர்களே வெற்றிபெற வேண்டும் என்று விரும்பினர். ஆனால், முஸ்லிம்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்ற ரோமர்களே வெற்றிபெற வேண்டும் என்று விரும்பினர். அப்போது அப்போல் பாரசீகர்கள்தான் வலுப்பெற்று முன்னேறியும் வந்த நேரத்தில் இன்னும் சில ஆண்டுகளில் ரோமர்கள் பாரசீகர்களை வீழ்த்தி விடுவார்கள் என்ற நற்செய்தியை அல்லாஹ் இறக்கி வைத்தான். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மற்றொரு நற்செய்தியையும் கூறினான். அதுதான், முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் உதவி வெகு விரைவில் உண்டு என்பது!
(நமக்குச்) சமீபமான பூமியிலுள்ள “ரூம்“வாசிகள் தோல்வியடைந்தனர். அவர்கள் (இன்று) தோல்வி அடைந்துவிட்டபோதிலும் அதிசீக்கிரத்தில் வெற்றி அடைவார்கள். (அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (வெற்றி அடைவார்கள். வெற்றி தோல்வி என்ற) விஷயம் இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அவர்கள் வெற்றியடையும்) அந்நாளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு உதவி புரிகிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 30:2-5)
நபி (ஸல்) அவர்களும் அவ்வப்போது இதுபோன்று நற்செய்திகளை மக்களுக்குக் கூறி வந்தார்கள். ஹஜ்ஜுடைய காலங்களில் உக்காள், மஜன்னா, தில் மஜாஸ் என்ற இடங்களில் தூதுத்துவத்தை எடுத்து கூறுவதற்காக மக்களை சந்திக்கும்போது சொர்க்கத்தின் நற்செய்தி மட்டுமல்லாது இவ்வுலக வாழ்க்கையின் வெற்றியைக் கொண்டும் நற்செய்தி கூறி வந்தார்கள். “மக்களே! “லாஇலாஹஇல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை) என்று கூறுங்கள் வெற்றி அடைவீர்கள்! அதன் மூலம் அரபியர்களை நீங்கள் ஆட்சி செய்யலாம். அரபியல்லாதவர்களும் உங்களுக்கு பணிந்து நடப்பார்கள். நீங்கள் இறந்துவிட்டாலும் சொர்க்கத்தில் மன்னர்களாகவே இருப்பீர்கள்.” (இப்னு ஸஅது)
உத்பா இப்னு ரபிஆ உலக ஆசாபாசங்களைக் காட்டி நபி (ஸல்) அவர்களிடம் பேரம் பேசி, அவர்களை பணிய வைக்க முயன்றபோது, நபி (ஸல்) அவர்கள் அவனுக்குக் கூறிய பதிலையும், அந்த பதிலில் இருந்து இஸ்லாம் நிச்சயம் மிகைத்தே தீரும் என்று உத்பா விளங்கிக் கொண்டதையும் இதற்கு முன் நாம் கூறியிருக்கிறோம்.
இவ்வாறே அபூதாலிபிடம் வந்த கடைசி குழுவினருக்குக் கூறிய பதிலையும் நாம் முன்பே பார்த்திருக்கின்றோம். அந்த பதிலில் “ஒரே ஒரு வார்த்தையைத்தான் நான் உங்களிடத்தில் எதிர்பார்க்கிறேன். அவ்வார்த்தையினால் அரபியர் உங்களுக்குப் பணிவார்கள்; அரபியர் அல்லாதவர்களையும் நீங்கள் ஆட்சி செய்யலாம்” என்று மிகத் தெளிவாக அம்மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
கப்பாப் இப்னு அரத் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) கஅபாவின் நிழலில் தங்களது போர்வையைத் தலையணையாக வைத்து படுத்திருந்தபோது நான் அவர்களிடம் வந்தேன். அப்போது இணைவைப்பவர்கள் புறத்திலிருந்து பல சிரமங்களை நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்விடத்தில் அநியாயக்காரர்களுக்கு எதிராக பிரார்த்திக்க மாட்டீர்களா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்களின் முகம் சிவந்துவிட்டது. படுத்திருந்தவர்கள் எழுந்து அமர்ந்து “உங்களுக்கு முன்னிருந்த மக்களில் ஒருவர் (இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்காக) அவன் எலும்பு, சதை, நரம்புகளை ரம்பத்தால் அறுக்கப்பட்டன. ஆனால், அத்தகைய துன்பமும் கூட அவரை மார்க்கத்திலிருந்து திருப்பவில்லை. நிச்சயமாக அல்லாஹ் இம்மார்க்கத்தை முழுமையாக்கியேத் தீருவான். அப்போது (யமன் நாட்டில் உள்ள) ஸன்ஆ நகலிருந்து ஹளரமவுத் நகரம் வரை அல்லாஹ்வின் அச்சத்தைத் தவிர வேறு எந்த வித அச்சமுமின்றி பயணம் செய்பவர் பயணிக்கலாம். ஆனால், நீங்கள் (அல்லாஹ்வின் உதவி) விரைவாக கிடைக்க வேண்டும் என்று அவசரப்படுகிறீர்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இதுபோன்ற நற்செய்திகளை மறைமுகமாகவோ, அந்நியர்களுக்குத் தெரியாமல் இரகசியமாகவோ நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக, முஸ்லிம்கள் இந்த நற்செய்தியை தெரிந்து வைத்திருந்தது போலவே, நிராகரிப்பவர்களும் தெரிந்து வைத்திருந்தனர். அஸ்வத் இப்னு முத்தலிபும் அவனது கூட்டாளிகளும் நபித்தோழர்களை எப்போது பார்த்தாலும் இடித்துரைப்பதும் கிண்டல் செய்வதுமாகவே இருந்தனர். மேலும், இதோ பாருங்கள் “கிஸ்ரா கைஸன் நாடுகளுக்கு வாரிசுகளாக ஆகப்போகும் அரசர்கள் உங்களைக் கடந்து செல்கிறார்கள்” என்று நபித்தோழர்களைக் குத்திக் காண்பித்து, விசில் அடித்து கைதட்டி கேலி செய்வார்கள்.
இவ்வுலகில் அதிவிரைவில் ஒளிமயமான சிறப்புமிக்க எதிர்காலம் உண்டு என்று கூறப்பட்ட நற்செய்திகளால் எல்லாப் புறத்திலிருந்தும் தங்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளையும் அநியாயங்களையும் கோடை காலத்தில் வெகு விரைவில் களைந்துவிடும் மேகமூட்டமாகவே நபித்தோழர்கள் கருதினார்கள். மேலும், இந்த நற்செய்திகள் உலக வெற்றியை மட்டும் குறிப்பிடாமல் அழியாத மறுமையில் நிலையான சுவர்க்கம் முஸ்லிம்களுக்கு உண்டு என்று கூறியன. இது நபித்தோழர்களுக்கு மிகுந்த ஆறுதலையும் ஆதரவையும் கொடுத்தது.
இதுமட்டுமல்லாமல் முஸ்லிம்களின் ஆன்மாவிற்கு நபி (ஸல்) இறைநம்பிக்கை எனும் பயிற்சி மூலம் வலுவூட்டி வந்தார்கள். அவர்களைக் குர்ஆன் மற்றும் நல்லுபதேசங்களால் பரிசுத்தமாக்கினார்கள்; உலகப் பொருட்களுக்கும் அற்ப சுகங்களுக்கும் அடிமையாவதிலிருந்து விடுவித்து உளத்தூய்மை, நற்பண்பு, உயரிய குணங்கள் என மிக உயர்ந்த தரத்திற்கு தங்களது தோழர்களை மேம்படுத்தினார்கள். அகிலங்களைப் படைத்த அல்லாஹ்வின் பக்கம் அவர்களின் கவனங்களைத் திருப்பினார்கள். “வழிகேடு’ என்ற இருள் அகற்றி “இஸ்லாம்’ என்ற ஒளியில் அவர்களை நிறுத்தினார்கள். துன்பங்களையும் துயரங்களையும் பொறுத்து, சகித்து, துன்பம் இழைத்தவர்களைப் பழிவாங்காமல் உள்ளத்தை அடக்கி அழகிய முறையில் மன்னிக்கும் பண்பாட்டை நபி (ஸல்) தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதனால் நபித்தோழர்களிடம் மார்க்க உறுதி, ஆசாபாசங்களை விட்டு விலகி வாழ்வது, இறை திருப்திக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வது, சுவர்க்கத்தை விரும்புவது, மார்க்கக் கல்வியின் மீது பேராசை கொள்வது, மார்க்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்வது ஆகிய அனைத்தும் காணப்பட்டன. மேலும், மன ஊசலாட்டங்களுக்கு கடிவாளமிட்டு, அற்ப உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடாமல் மனக் குழப்பங்களைக் கட்டுப்படுத்தி பொறுமை, நிதானம், கண்ணியம் ஒழுக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து சிறந்த நன்மக்களாக விளங்கினார்கள்.
மூன்றாம் கால கட்டம்: மக்காவிற்கு வெளியே இஸ்லாமிய அழைப்பு
தாயிஃப் நகரில்
நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொலைவிலுள்ள தாம்ஃபிற்குச் சென்றார்கள். (இது கி.பி. 619 மே மாதம் இறுதி அல்லது ஜுன் மாத ஆரம்பத்தில் ஆகும்). நபி (ஸல்) அவர்கள் தங்களது அடிமை ஜைது இப்னு ஹாஸாவுடன் கால்நடையாகச் சென்றார்கள். திரும்பும்போதும் கால்நடையாகவே திரும்பினார்கள். வழியிலிருந்த ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் இஸ்லாமிய அழைப்பு கொடுக்கப்பட்டும், அக்கூட்டத்தால் எவரும் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தாம்ஃபிற்குச் சென்றடைந்தபோது அங்கு வசித்து வந்த ஸகீஃப் கூட்டத்தாரின் தலைவர்களும் ‘அம்ர் இப்னு உமைர் அஸ்ஸகபி’ என்பவனின் பிள்ளைகளுமான 1) அப்து யாலில், 2) மஸ்ஊது, 3) ஹபீப் என்ற மூன்று சகோதரர்களிடம் சென்றார்கள். அவர்களிடம் இஸ்லாமைப் பரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரினார்கள். ஆனால், அவர்களில் ஒருவன் “உன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியது உண்மையென்றால் நான் கஅபாவின் திரைகளைக் கிழித்து விடுவேன்” என்று கூறினான். மற்றொருவன் “அல்லாஹ்வுக்கு உன்னைத் தவிர நபியாக அனுப்ப வேறொருவர் கிடைக்கவில்லையா?” என்று கேட்டான்.
மூன்றாமவன், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன். நீ உண்மையில் தூதராக இருந்தால் உனது பேச்சை மறுப்பது எனக்கு மிக ஆபத்தானதாகும். நீ அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவராக இருந்தால் உன்னிடம் பேசுவதே எனக்குத் தகுதியல்ல” என்று கூறினான். அப்போது நபி (ஸல்) “இதுதான் உங்கள் முடிவாக இருந்தால் நமது இந்த சந்திப்பை (மக்களுக்கு வெளிப்படுத்தாமல்) மறைத்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) தாம்ஃபில் பத்து நாட்கள் தங்கி அங்குள்ள மற்ற எல்லா தலைவர்கள், பிரமுகர்களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். ஆனால், அவர்களில் எவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாததுடன் தங்களது ஊரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் கூறி, நபி (ஸல்) அவர்கள் மீது வம்பர்களை ஏவிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் ஊரைவிட்டு வெளியே செல்ல முயன்றபோது அங்குள்ள வம்பர்களும் அடிமைகளும் ஒன்றுகூடி அவர்களை ஏசிப்பேசினர்.
இறுதியில் மக்களின் கூட்டம் அதிகமாகி அவர்கள் அனைவரும் இரு அணிகளாக நின்று கொண்டு, நபி (ஸல்) அவர்களின் மீது கற்களை எறிந்தனர். அதிகமான கற்களை நபி (ஸல்) அவர்களின் குதிகால் நரம்பை நோக்கி எறியவே அவர்களது பாதணிகளும் இரத்தக் கறைகளாயின. நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களது அடிமை ஜைது இப்னு ஹாஸா நபியவர்களைக் காப்பதற்காக தங்களையே கேடயமாக்கிக் கொண்டார்கள். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தாம்ஃபிலிருந்து மூன்று மைல்கள் தொலைவிலுள்ள ரபிஆவுடைய மகன்களான உத்பா, ஷைபா என்ற இருவருக்குச் சொந்தமான தோட்டம் வரை நபி (ஸல்) அவர்களை அடித்துக் கொண்டே வந்தனர். நபி (ஸல்) அந்த தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள திராட்சை தோட்ட பந்தலின் நிழலில் அமர்ந்தார்கள். அப்போதுதான் மிகப் பிரபலமான அந்த பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். இதனால் நபி (ஸல்) அவர்களின் உள்ளம் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளினால் எவ்வளவு வேதனை அடைந்திருந்தது என்பதையும் தாயிஃப் மக்கள் இஸ்லாமை ஏற்காததினால் எவ்வளவு துக்கத்திற்கு ஆளானார்கள் என்பதையும் இந்த பிரார்த்தனையிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
இதோ நபி (ஸல்) கேட்ட பிரார்த்தனை:
“அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் எனது திறமைக் குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன். கருணையாளர்களிலெல்லாம் மிகப்பெரியகருணையாளனே! நீதான் எளியோர்களைக் காப்பவன் நீதான் என்னைக் காப்பவன். நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா? அல்லது என்னுடைய காயத்தை நீ உரிமையாக்கிக் கொடுத்திடும் பகைவனிடமா? உனக்கு என்மீது கோபம் இல்லையானால் (இந்த கஷ்டங்களையெல்லாம்) நான் பொருட்படுத்தவே மாட்டேன். எனினும், நீ வழங்கும் சுகத்தையே நான் எதிர்பார்க்கிறேன். அதுவே எனக்கு மிக விசாலமானது. உனது திருமுகத்தின் ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம் அடைந்தன் இம்மை மறுமையின் காரியங்கள் சீர்பெற்றன. அத்தகைய உனது திருமுகத்தின் ஒளியின் பொருட்டால் உனது கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது அதிருப்தி என்மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். அல்லாஹ்வே! நீயே பொருத்தத்திற்குரியவன். நீ பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருள் இல்லாமல் முடியாது.”
நபி (ஸல்) அவர்களை இந்த நிலைமையில் பார்த்ததும் ரபிஆவின் மகன்களுக்கு இரக்கம் வந்தது. தங்களது கிறிஸ்துவ அடிமை அத்தாஸை அழைத்துத் “திராட்சைக் குலையை அவருக்குச் சென்று கொடு” என்று கூறினர். திராட்சைக் குலைகளை அத்தாஸ் நபி (ஸல்) அவர்களுக்கு முன் வைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி சாப்பிட்டார்கள்.
இதைக் கண்ட அத்தாஸ் “இந்தப் பேச்சு இவ்வூர் மக்கள் பேசும் பேச்சல்லNவ் உங்களுக்கு இது எப்படித் தெரியும்?” என்று கேட்டார். அதற்கு, “உனக்கு எந்த ஊர்? உனது மார்க்கம் என்ன?” என்று அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, அதற்கு அவர் “நீனவாவைச் சேர்ந்த கிறிஸ்துவன் நான்” என்றார். “நல்லவரான யூனுஸ் இப்னு மத்தாவின் ஊரைச் சேர்ந்தவர்தானே?” என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டதற்கு அவர் ஆச்சயத்துடன் “யூனுஸ் இப்னு மத்தாவைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்” என்றார். “அவர் எனது சகோதரர் அவரும் ஓர் இறைத்தூதராக இருந்தார் நானும் இறைத்தூதர் தான்” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறியவுடன், அத்தாஸ் நபி (ஸல்) அவர்களின் தலை, கை மற்றும் கால்களை முத்தமிட்டார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரபிஆவின் மகன்களில் ஒருவர் மற்றவரிடம் “இதோ உனது அடிமையை அவர் குழப்பிவிட்டார்” என்று கூறினான். அத்தாஸ் திரும்பி வந்தவுடன் “உனக்கு என்ன கேடு நேர்ந்தது?” என்று அவ்விருவரும் இடித்துரைத்தனர். அதற்கு அத்தாஸ், “எனது எஜமானர்களே! இவரை விடச் சிறந்த எவரும் இப்பூமியில் இல்லை. இவர் எனக்கு ஒரு விஷயத்தை மிக உறுதியாகக் கூறினார். அதனை இறைத்தூதரைத் தவிர வேறெவரும் அறிந்திருக்க முடியாது” என்றார். அதற்கு அவ்விருவரும் “அத்தாஸே! உனக்கென்ன கேடு. இவர் உம்மை உமது மார்க்கத்திலிருந்து திருப்பிவிடாமல் இருக்கட்டும். உமது மார்க்கம்தான் இவன் மார்க்கத்தைவிட சிறந்தது” என்று கூறினர். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோட்டத்திலிருந்து வெளியேறி மிகவும் கவலையுடன் உள்ளம் உடைந்தவர்களாக மக்கா நோக்கி திரும்பும் வழியில் ‘கர்னுல் மனாஜில்’ என்ற இடத்தை அடைந்த போது அல்லாஹ் அவர்களிடம் ஜிப்ரீலையும், (மலைகளின் வானவர்) மலக்குல் ஜிபாலையும் அனுப்பினான். மலக்குல் ஜிபால் தாயிஃப்வாசிகளாகிய இம்மக்களை இரு மலைகளையும் ஒன்று சேர்த்து நசுக்கி அழித்துவிடவா”? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
ஆயிஷா (ரழி) இச்சம்பவத்தின் விவரத்தைக் கூறுகின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் “உஹுத் போரைவிடக் கடுமையான நாள் எதுவும் உங்களது வாழ்க்கையில் வந்துள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு “உனது கூட்டத்தாரின் மூலம் நான் பல துன்பங்களைச் சந்தித்துள்ளேன். அவற்றில் நான் சந்தித்த துன்பங்களில் மிகக் கடுமையானது ‘யவ்முல் அகபா’ என்ற தினத்தில் எனக்கு ஏற்பட்ட வேதனையே ஆகும். நான் அப்து யாலிலின் மகனிடம் என்னை அறிமுகப்படுத்தினேன். ஆனால், அவன் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் கவலையுடன் திரும்ப மக்காவை நோக்கி பயணமாகி ‘கர்னுல் மனாஜில்’ என்ற பெயருள்ள ‘கர்னு ஸஆலிப்’ என்ற இடத்தில் வந்து தங்கிய போதுதான் எனக்கு முழுமையான நினைவே திரும்பியது. நான் தலையைத் தூக்கிப் பார்த்தபோது என் தலைக்கு மேல் ஒரு மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அந்த மேகத்தில் ஜிப்ரீல் இருந்தார். அவர் என்னை அழைத்து ‘நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் உங்களது கூட்டத்தாரிடம் பேசியதையும் அவர்கள் உங்களுக்குக் கூறிய பதிலையும் கேட்டுக் கொண்டான். இம்மக்கள் விஷயத்தில் நீங்கள் விரும்பியதை மலக்குல் ஜிபாலுக்கு ஏவ வேண்டும் என்பதற்காக அவரை உங்களிடம் அனுப்பி இருக்கின்றான்’ என்று கூறினார். மலக்குல் ஜிபால் என்னை அழைத்து எனக்கு ஸலாம் கூறி “முஹம்மதே! ஜிப்ரீல் கூறியவாறே அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் இவர்களை இரண்டு மலைகளையும் கொண்டு நசுக்கி விடுகிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) “அதை ஒருக்காலும் நான் விரும்ப மாட்டேன். மாறாக, அவர்களிலிருந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு இணை வைக்காதவர்களை அவன் உருவாக்குவான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இந்த பதிலின் மூலம் நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மை தெரியவருவதுடன், அவர்கள் எத்தகைய மகத்தான பண்புள்ளவர்கள் என்பதையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
ஏழு வானங்களுக்கு மேலிருந்து அல்லாஹ் அருளிய இம்மறைவான உதவியைப் பார்த்து நபி (ஸல்) அவர்களின் மனம் மிகவும் நிம்மதியடைந்தது. தொடர்ந்து மக்காவை நோக்கி பயணமாகும்போது ‘நக்லா’ என்ற பள்ளத்தாக்கில் சில நாட்கள் தங்கினார்கள். வாதி நக்லாவில் தங்குவதற்கு வசதியான தண்ணீரும் செழிப்புமுள்ள அஸ்ஸய்லுல் கபீர், ஜைமா என்ற இரு இடங்கள் இருந்தன. இவ்விரு இடங்களில் குறிப்பாக எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கினார்கள் என்பதற்கு சரியான ஆதாரம் நமக்குக் கிடைக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் இவ்விடத்தில் தங்கியிருக்கும்போது சில ஜின்களை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தான். (ஸஹீஹுல் புகாரி)
இந்த ஜின்களைப் பற்றி குர்ஆனில் இரண்டு இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஒன்று ‘அஹ்காஃப்’ எனும் அத்தியாயத்தில்:
“(நபியே!) இந்தக் குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உங்களிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) “நீங்கள் வாய்பொத்தி (இதனைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்” என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.
(அவர்களை நோக்கி) “எங்களுடைய இனத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கின்றது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகின்றது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகின்றது. எங்களுடைய இனத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுடைய பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுவான்.” (அல்குர்ஆன் 46:29, 30, 31)
மற்றொன்று ‘ஜின்’ எனும் அத்தியாயத்தில்:
“(நபியே!) நீங்கள் கூறுங்கள்: “வஹி மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று(த் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி) “நிச்சயமாக, நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம் அது நேரான வழியை அறிவிக்கின்றது. ஆகவே, அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் இணையாக்க மாட்டோம்...” (அல்குர்ஆன் 72:1-15)
ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து குர்ஆனை கேட்டுச் சென்றன. இதனை இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ் அறிவித்தப் பிறகு தான் நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள். அதற்கு முன்பு இது அவர்களுக்குத் தெரியாது. இதுதான் ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்த முதல் முறையாகும் என்பது நமக்குத் தெரியவருகிறது. மேலும், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் பலமுறை வந்திருக்கிறார்கள் என்பதும் வேறு சில அறிவிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.
இது உண்மையில் அல்லாஹ்வின் மறைவான பொக்கிஷத்திலிருந்து அருளப்பட்ட மகத்தான உதவியாகும். தன்னைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ள முடியாத அவனுடைய படையைக் கொண்டு, அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு உதவி செய்தான். மேலும், இது தொடர்பாக இறங்கிய வசனங்களில் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி வெற்றியடையும் என்ற நற்செய்திகளும் இருந்தன. இப்பிரபஞ்சத்தின் எந்தவொரு சக்தியும் அவர்களின் அழைப்புப் பணி வெற்றியடைவதை தடுத்திட முடியாது என்று அவ்வசனங்கள் மிக உறுதியாக அறிவித்தன.
“எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடியபோதிலும் அல்லாஹ்வை தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வை அன்றி, பாதுகாப்பவர் அவனுக்கு ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இத்தகையவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருப்பர்”
“நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்துகொண்டோம்.” (அல்குர்ஆன் 72:12)
அல்லாஹ்வின் இந்த மாபெரும் உதவியாலும் மகத்தான நற்செய்திகளாலும் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்திலிருந்து கவலை நீங்கியது துக்கம் அகன்றது மக்காவிற்கு திரும்பச் சென்று இஸ்லாமைப் பரப்புவதிலும் நிரந்தரமான அல்லாஹ்வின் தூதுத்துவத்தை எடுத்துரைப்பதிலும் தனது முந்திய திட்டத்தையே புதிய உற்சாகத்துடனும், துணிவுடனும், வீரத்துடனும் செய்ய வேண்டும் என்று உறுதிகொண்டார்கள்.
அப்பொழுது ஜைது இப்னு ஹாஸா “நபியே! குறைஷிகள் உங்களை மக்காவிலிருந்து வெளியேற்றி இருக்க, நீங்கள் இப்பொழுது எப்படி அங்கு செல்ல முடியும்?” என்றார். அதற்கு “ஜைதே! நீங்கள் பார்க்கும் இந்த துன்பங்களுக்கு ஒரு முடிவையும் நல்ல மகிழ்ச்சி தரும் மாற்றத்தையும் நிச்சயம் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான். நிச்சயமாக, அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கு உதவி செய்வான் அவனது நபிக்கு வெற்றியைத் தருவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிறகு தனது பயணத்தைத் தொடர்ந்து மக்கா அருகே வந்தவுடன் “ரா குகையில் தங்கிக் கொண்டு குஜாஆ கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அக்னஸ் இப்னு ஷுரைக்கிடம் அவர் தனக்கு அடைக்கலம் தர வேண்டும்” எனக் கூறி தூது அனுப்பினார்கள். ஆனால், “தான் மக்காவாசிகளுடன் நட்பு கொண்டவராக இருப்பதால், அவர்கள் விரும்பாதவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது” என்று அக்னஸ் கூறிவிட்டார். பிறகு சுஹைல் இப்னு அயிடம் நபி (ஸல்) அவர்கள் தூதனுப்பினார்கள். அதற்கு “தான், ஆமிர் கிளையைச் சேர்ந்தவன். எனவே, கஅப் கிளையாருக்கு எதிராக என்னால் அடைக்கலம் கொடுக்க முடியாது” என்று அவர் மறுத்துவிட்டார்
அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் முத்இமிடம் தூது அனுப்பினார்கள். முத்இம் “ஆம்! நான் அடைக்கலம் தருவேன்” என்று கூறி, தானும் ஆயுதங்களை அணிந்துகொண்டு தனது ஆண் பிள்ளைகள் மற்றும் கூட்டத்தாரையும் ஆயுதம் அணியச் செய்து, கஅபாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நான்கு மூலைகளிலும் அவர்களை நிற்கவைத்து, “நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன். அதனால்தான் உங்களை இங்கு அழைத்து வந்தேன்” என்று அவர்களுக்கு அறிவித்தார்.
பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துவர ஒருவரை அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் ஜைது இப்னு ஹாஸாவுடன் மஸ்ஜிதுல் ஹராமிற்கு வந்தார்கள். முத்இம் தனது ஒட்டகத்தின் மீதேறி அமர்ந்துகொண்டு “குறைஷிகளே! நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன். உங்களில் எவரும் முஹம்மதை பழிக்கக் கூடாது” என்று அறிவிப்புச் செய்தார். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்டு, கஅபாவை வலம் வந்து, இரண்டு ரகஅத்துகள் தொழுதுவிட்டு தனது வீட்டிற்குச் சென்றார்கள். அது வரையிலும் முத்இமும் அவரது மக்களும் ஆயுதமேந்தி பாதுகாப்பிற்காக நபி (ஸல்) அவர்களைச் சுற்றி நின்று இருந்தனர்.
அபூஜஹ்ல் “நீ அடைக்கலம் (மட்டும்) அளித்துள்ளாயா? அல்லது முஸ்லிமாகி விட்டாயா?” என்று முத்இமிடம் கேட்டான். அதற்கு “இல்லை. நான் அடைக்கலம்தான் அளித்துள்ளேன்” என்று முத்இம் கூறவே, “சரி! நீ அடைக்கலம் கொடுத்தவருக்கு நாங்களும் அடைக்கலம் கொடுக்கிறோம்” என்று கூறினான். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
முத்இமின் இந்த செயலை நபி (ஸல்) நினைவு வைத்திருந்தார்கள். “பத்ர் போரில் எதிரிகள் பலர் கைதிகளாக்கப்பட்டபோது, முத்இம் உயிருடன் இருந்து, இந்த துர்நாற்றம் பிடித்தவர்களின் உரிமைக்காக என்னிடம் பேசியிருந்தால் அவருக்காக இவர்கள் அனைவரையுமே நான் விடுதலை செய்திருப்பேன்”
கோத்திரங்களுக்கும் தனி நபர்களுக்கும் இஸ்லாமை அறிமுகப்படுத்துதல்
நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு துல்காயிதா மாதத்தில் (ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கம் கி.பி. 619ல்) நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குத் திரும்பினார்கள். பல கோத்திரங்களுக்கும் தனி நபர்களுக்கும் இஸ்லாமை மீண்டும் புதிதாக அறிமுகப்படுத்தினார்கள். ஹஜ்ஜுடைய காலம் நெருங்கியபோது மக்கள் அனைவரும் பல திசைகளிலிருந்து ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்கு வந்த வண்ணமிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சென்று அவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தி, அதன்பக்கம் அழைப்புக் கொடுத்தார்கள். நபித்துவத்தின் நான்காவது ஆண்டிலிருந்து இப்படித்தான் அம்மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்து வந்தார்கள். ஆனால், இந்த பத்தாவது ஆண்டு மேலும் ஒரு கோரிக்கையையும் அவர்களுக்கு முன் வைத்தார்கள். அதாவது, நான் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து வைப்பதற்கு எனக்கு இடம் கொடுத்து உதவி செய்து எதிரிகளிடமிருந்து எனக்கு பாதுகாப்பு அளியுங்கள் என்று அம்மக்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.
இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட கோத்திரத்தினர்
இமாம் ஜுஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் பல கோத்திரத்தாரிடம் சென்று இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் பெயர்களாவன:
ஆமிர் இப்னு ஸஃஸஆ கிளையினர்: முஹாப்னு கஸ்ஃபஹ், ஃபஜாரா, கஸ்ஸான், முர்ரா, ஹனீஃபா, ஸுலைம், அப்ஸ், பனூ நஸ்ர், பனூ பக்கா, கிந்தா, கல்ப், ஹாரிஸ் இப்னு கஅப், உத்ரா, ஹழாமா ஆகிய கோத்திரத்தாருக்கு ஓரிறைக் கொள்கையை இதமாக எடுத்துரைத்தும் அவர்களில் எவரும் அழைப்பை ஏற்கவில்லை. (இப்னு ஸஅத்)
மேற்கண்ட அனைத்து கோத்திரத்தாரையும் ஒரே ஆண்டுக்குள் அல்லது ஒரே ஹஜ் காலத்திலேயே அழைத்திடவில்லை. நபித்துவத்தின் நான்காம் ஆண்டு மெல்ல மெல்லத் தொடங்கிய இந்த பகிரங்க அழைப்புப் பணி நபி (ஸல்) அவர்கள் மதீனா செல்லும்வரை நீடித்தது. எனவே, இன்ன கோத்திரத்தாரை இன்ன ஆண்டுதான் அழைத்தார்கள் என்று குறிப்பிட்டுக் கூறிட முடியாது. என்றாலும் பெரும்பாலான கோத்திரத்தாரை நபித்துவத்தின் பத்தாம் ஆண்டுதான் அழைத்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் அழைப்பை இந்த கோத்திரத்தார் எவ்வாறு எடுத்துக் கொண்டனர் என்பதைக் குறித்து இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதை சுருக்கமாகக் காண்போம்:
1) ‘கல்ப்’ கிளையினர்: நபி (ஸல்) அவர்கள் இவர்களின் உட்பிவான அப்துல்லாஹ் உடைய குடும்பத்தாரை, “அப்துல்லாஹ்வின் மக்களே! அல்லாஹ் உங்கள் தந்தைக்கு எத்துணை அழகிய பெயரை வழங்கியிருக்கின்றான்” என்றெல்லாம் நயமாக கூறி அழைத்துப் பார்த்தார்கள். எதற்கும் அவர்கள் அசையவில்லை.
2) ‘ஹனீஃபா’ கிளையினர்: இம்மக்களின் வீடு வீடாகச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அழைத்துப் பார்த்தார்கள். ஆனால், அவர்கள் அதை ஏற்காதது மட்டுமின்றி, நபி (ஸல்) அவர்களிடம் முரட்டுத்தனமாகவும் நடந்துகொண்டனர்.
3) ‘ஆமிர் இப்னு ஸஃஸஆ’ கிளையினர்: நபி (ஸல்) அவர்கள் இவர்களிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். அவர்களில் பைஹரா இப்னு ஃபிராஸ் என்பவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் இந்த குறைஷி வாலிபரை பிடித்து என்னிடம் வைத்துக் கொண்டால் இவர் மூலம் முழு அரபியர்களையும் நான் வெற்றி கொள்வேன்” என்று கூறினார். மேலும், நபி (ஸல்) அவர்களை சந்தித்து, “உங்களது மார்க்கத்தில் சேர்ந்து நாங்கள் உங்களிடம் ஒப்பந்தம் செய்து கொடுக்கிறோம். பிறகு உங்களுக்கு மாறு செய்யும் சமுதாயத்திற்கு எதிராக அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தந்தால், உங்களுடைய மறைவுக்குப் பின் எங்களுக்கு அதிகாரம் கிடைக்குமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியன. அவன் விரும்பிய கூட்டத்திற்கு அதைக் கொடுப்பான்” என்று பதிலளித்தார்கள். அதற்கு பைஹரா “உங்கள் முன்னிலையில் அரபியர்களுக்கு எதிராக நாங்கள் போரிட்டு அவர்களின் அம்புகளுக்கு எங்கள் கழுத்துக்களை இலக்காக்கிக் கொள்ள, அல்லாஹ் உங்களுக்கு வெற்றி கொடுத்தப்பின் நிர்வாக அதிகாரம் எங்களுக்கு இல்லாமல் மற்றவர்களுக்கா? இதெப்படி நேர்மையாகும்? அப்படிப்பட்ட உங்கள் மார்க்கம் எங்களுக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டான். அதற்குப்பின் அந்த கிளையினரும் இஸ்லாமை ஏற்க மறுத்துவிட்டனர். (இப்னு ஹிஷாம்)
ஆமிர் கிளையினர் ஹஜ்ஜை முடித்துக்கொண்டு தங்களது ஊருக்குத் திரும்பியபோது ஹஜ்ஜில் கலந்துகொள்ள இயலாத ஒரு முதியவரிடம் சென்று, “அப்துல் முத்தலிபின் கிளையிலுள்ள குறைஷி வாலிபர் ஒருவர் எங்களிடம் தன்னை ‘நபி’ என்று அறிமுகப்படுத்தினார். அவருக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் அவரை நமது ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று எங்களிடம் கூறினார்” என்றார்கள். இதைக் கேட்ட அந்த வயோதிகர் “கைவிட்டுப் போய்விட்டதே! அவரை விட்டுவிட்டீர்களே! எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் பொய் கூறமாட்டார்கள். நிச்சயம் அவர் கூறியது உண்மைதான். உங்களது அறிவு உங்களை விட்டு எங்கே போனது?” என்று கடிந்துரைத்து மிகுந்த கைசேதத்தை வெளிப்படுத்தினார்.
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமை பல குலத்தாருக்கும் கோத்திரத்தாருக்கும் குழுக்களுக்கும் அறிமுகப்படுத்தியது போன்றே தனி நபர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்கள். அவர்களில் சிலரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் நல்ல பதில்களை பெற்றார்கள். ஹஜ் முடிந்து சில காலங்களிலேயே அவர்களில் பலர் இஸ்லாமைத் தழுவினர். அவர்களில் சிலரை இங்கு பார்ப்போம்:
- 1) ஸுவைத் இப்னு ஸாமித்: இவர் மதீனாவாசிகளில் நுண்ணறிவு மிக்க பெரும் கவிஞராக விளங்கினார். இவன் வீரதீரம், கவியாற்றல், சிறப்பியல்பு, குடும்பப் பாரம்பரியம் ஆகிய சிறப்புகளால் இவரது சமுதாயம் இவரை ‘அல்காமில்’ (முழுமையானவர்) என்று அழைத்தனர். இவர் ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்காக மக்கா வந்தார். இஸ்லாமிய அழைப்புக்காக அவரிடம் நபி (ஸல்) அவர்கள் பேசியபோது அவர் “உங்களிடம் இருப்பதும் என்னிடம் இருப்பதும் ஒன்றாகத்தான் இருக்கும்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உங்களிடம் என்ன இருக்கிறது?” என்று கேட்டதற்கு “நான் லுக்மான் (அலை) வழங்கிய ஞானபோதனைகளைக் கற்று வைத்துள்ளேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “எனக்கு அதை சொல்லிக் காட்டுங்கள்” என்று கேட்கவே, அவர் அதை சொல்லிக் காண்பித்தார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக இது அழகிய பேச்சுதான். எனினும், என்னிடம் இருப்பதோ இதைவிட மிகச் சிறந்தது. அதுதான் அல்லாஹ் எனக்கு அருளிய குர்ஆன். அது ஒளிமிக்கது நேர்வழி காட்டக்கூடியது” என்று கூறி, குர்ஆனை அவருக்கு ஓதி காண்பித்து, அவரை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள். குர்ஆன் அவரது உள்ளத்தைக் கவர்ந்தது. “இது மிக அழகிய வசனங்கள் உடைய வேதமாக இருக்கிறதே” என வருணித்து இஸ்லாமைத் தழுவினார். பிறகு மதீனா வந்த சில காலத்திலேயே புஆஸ் போருக்கு முன்பாக அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரத்தாடையில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார். அநேகமாக நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் இஸ்லாமை தழுவியிருக்கலாம்.
- 2) இயாஸ் இப்னு முஆத்: மதீனாவைச் சேர்ந்த இளைஞரான இவர் ‘புஆஸ்’ யுத்தத்திற்கு முன் நபித்துவத்தின் 11வது ஆண்டு அவ்ஸ் கிளையினர் கஸ்ரஜ் கிளையாருக்கு எதிராக மக்காவிலுள்ள குறைஷிகளிடம் நட்பு ஒப்பந்தம் செய்ய வந்தபோது இவரும் அவ்ஸ் கிளையாருடன் மக்கா வந்தார். மதீனாவில் அவ்ஸ் கஜ்ரஜுக்கிடையில் பகைமைத் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த சமயம் அது. அவ்ஸ் கிளையினர் கஸ்ரஜ்ஜை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் குறைஷிகளின் நட்பை நாடி வந்தனர். இவர்களின் வருகையை அறிந்துகொண்ட. நபி (ஸல்), இவர்களிடம் சென்று “நீங்கள் எதற்காக வந்துள்ளீர்களோ அதைவிடச் சிறந்த ஒன்றை அறிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வமுள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “அது என்ன?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதராவேன். அவன் என்னை அவனது அடியார்களிடம் அனுப்பியுள்ளான். அவர்கள் அல்லாஹ்வை வணங்க வேண்டும் அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது அல்லாஹ் எனக்கு வேதத்தையும் இறக்கி வைத்திருக்கிறான்” என்று கூறி இஸ்லாமின் ஏனைய விஷயங்களையும் நினைவூட்டி, குர்ஆனையும் ஓதிக் காண்பித்தார்கள்.
- அப்போது இயாஸ் “எனது கூட்டத்தாரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் வந்திருக்கும் நோக்கத்தை விட இதுதான் மிகச் சிறந்தது” என்று கூறினார். உடனே அக்கூட்டத்தில் உள்ள அபுல் ஹைஸர் என்ற அனஸ் இப்னு ராஃபி, ஒருபிடி மண் எடுத்து இயாஸின் முகத்தில் வீசி எறிந்து, “இதோ பார்! எங்களை விட்டுவிடு. சத்தியமாக நாங்கள் வேறொரு நோக்கத்திற்கு வந்திருக்கிறோம்” என்று கூறினான். அதற்குப் பின் இயாஸ் வாய்மூடிக் கொள்ளவே நபி (ஸல்) அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்கள். அவ்ஸ் கிளையினர் குறைஷிகளுடன் நட்பு ஒப்பந்தம் செய்வதில் தோல்வி கண்டு மதீனா திரும்பினர். அடுத்த சில காலத்திலேயே, இயாஸ் இறந்துவிட்டார். அவர் மரணிக்கும்போது ‘லாஇலாஹஇல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் முஸ்லிமாகவே இறந்தார் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. (இப்னு ஹிஷாம், முஸ்னது அஹ்மது)
- 3) அபூதர் கிஃபா: இவர் மதீனாவின் சுற்றுப்புறத்தில் வசித்து வந்தார். ஸுவைத், இயாஸ் ஆகியோரின் மூலம் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவச் செய்தி மதீனாவை அடைந்தபோது அபூதருக்கும் அந்த செய்தி எட்டியிருக்கலாம். பிறகு அதுவே இஸ்லாமில் வர ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.
- அபூ ஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், “அபூதர் அவர்கள் இஸ்லாமைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள், நாங்கள் “அறிவியுங்கள்” என்றவுடன் இப்னு அப்பாஸ் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
- அபூதர் அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்: “நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒருவனாக இருந்தேன். அப்போது தம்மை நபி என்று சொல்லிக்கொண்டு ஒரு மனிதர் மக்காவில் திரிகிறார் என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரர் அனீஸிடம் “நீ இந்த மனிதரிடம் போய் பேசி அவரைப் பற்றிய செய்தியைத் தெரிந்து வா” என்று சொன்னேன். அவ்வாறே சென்று அவரைச் சந்தித்து திரும்பி வந்தார். நான், “உன்னிடம் என்ன செய்தி இருக்கிறது?” என்று கேட்டேன். “நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கின்ற ஒரு மனிதராக நான் அவரைக் கண்டேன்” என்றார். நான் அவரிடம் ‘அவரைப் பற்றிய முழுமையான செய்தியை எனக்கு நீ தரவில்லை’ என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன தண்ணீர் பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்கா நோக்கிப் புறப்பட்டேன்.
- அவரை நான் தேடி வந்திருப்பதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. வேறு உணவு இல்லாததால் ஜம்ஜம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் தங்கியிருந்தேன். அப்போது அலீ (ரழி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டதும் “ஆள் ஊருக்குப் புதியவர் போலத் தெரிகிறதே” என்று கேட்டார்கள், நான், “ஆம்!” என்றேன். உடனே அவர்கள், “அப்படியென்றால் நம் வீட்டிற்கு வாருங்கள் போகலாம்” என்று சொன்னார்கள். நான் அவர்களுடன் சென்றேன். ஆனால், எதைப் பற்றியும் அவர்களிடம் நான் கேட்கவுமில்லை எதையும் அவர்களுக்குத் தெரிவிக்கவுமில்லை.
- காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க கஅபாவிற்குச் சென்றேன். ஆனால், அங்கு ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ (ரழி) என்னைப் பார்த்தார்கள். “தாங்கள் தங்க வேண்டியுள்ள வீட்டை அடையாளம் தெரிந்துகொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?” என்று சாடையாகக் கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். உடனே அலீ (ரழி) “என்னுடன் வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, “விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் உங்களுக்கு அதை தெரிவிக்கிறேன்” என்றேன். அதற்கு அவர்கள் “அவ்வாறே செய்கிறேன்” என்றார்கள்.
- நான் அப்போது ‘இங்கே தம்மை இறைத்தூதர் என்று கூறிக்கொண்டு ஒரு மனிதர் புறப்பட்டிருக்கிறார்’ என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. நான் என் சகோதரரை அவரிடம் பேசி வரும்படி அனுப்பினேன். போதிய விவரத்தை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. ஆகவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். ஆகவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்களும் நுழையுங்கள். போகும்போது உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகின்ற ஒருவனைக் கண்டால், செருப்பைச் சரிசெய்பவனைப் போல் சுவரோரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் என்னைக் கடந்து போய்க் கொண்டிருங்கள்” என்று சொன்னார்கள்.
- இறுதியில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, நானும் அவர்களுடன் உள்ளே சென்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் “எனக்கு இஸ்லாமை எடுத்துரையுங்கள்” என்று சொல்ல அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் அதே இடத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “அபூதர்ரே! (நீங்கள் இஸ்லாமை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வையுங்கள். தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்லுங்கள். நாங்கள் மேலோங்கி பெரும்பான்மையாகி விட்ட செய்தி உங்களுக்கு எட்டும்போது எங்களிடம் வாருங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு நான் “உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு இறையில்லத்திற்கு வந்தேன்.
- குறைஷிகள் அங்கே கூடி இருந்தனர். நான், “குறைஷி குலத்தாரே! ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை’ என்று நான் சாட்சி கூறுகின்றேன். ‘முஹம்மது அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும் நான் சாட்சி கூறுகிறேன்” என்றேன். உடனே “மதம் மாறிய இவனை எழுந்து சென்று கவனியுங்கள்” என்ற கட்டளை பறந்தது. அவர்கள் எழுந்து வந்தார்கள். உயிர் போவது போல் நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ் அவர்கள் என்னை அடையாளம் கண்டு என்மீது கவிழ்ந்து அடிபடாமல் பார்த்துக் கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வியாபாரத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)” என்று கேட்டவுடனே அவர்கள் என்னைவிட்டு விலகி விட்டார்கள்.
- மறுநாள் காலை வந்தவுடன் நான் மீண்டும் கஅபா சென்று நேற்று சொன்னதைப் போலவே சொன்னேன். அவர்கள் “மதம் மாறிய இவனை கவனியுங்கள்” என்று சொன்னார்கள். நேற்று என்னைத் தாக்கியது போலவே இன்றும் தாக்கினார்கள். அப்பாஸ் (ரழி) அவர்கள் என்னைக் கண்டுகொண்டு என்மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதைப் போலவே (இன்றும்) சொன்னார்கள்.”
- (இதை அறிவித்த பிறகு) இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் “இது அபூதர் அவர்கள் இஸ்லாமை தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூதருக்கு கருணை காட்டுவானாக!” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி)
- 4) துஃபைல் இப்னு அம்ர் தவ்ஸி: இவர் தவ்ஸ் கூட்டத் தலைவர். சிறந்த பண்புள்ளவராகவும், நுண்ணறிவாளராகவும், கவிஞராகவும் இருந்தார். இவருடைய கோத்திரம் யமன் நாட்டில் வசித்து வந்தது. இவர்களுக்கென தனி ஆட்சி அதிகாரம் இருந்தது. இவர் நபித்துவத்தின் 11 வது ஆண்டு மக்கா வந்தபோது மக்காவாசிகள் இவரை மிகுந்த உற்சாகம் பொங்க மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவர்கள் “துஃபைலே! நீங்கள் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள் இதோ இந்த மனிதர் இருக்கிறாரே எங்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்துவிட்டார் எங்களது ஒற்றுமையைக் குலைத்து எங்கள் காரியங்களைச் சின்னபின்னமாக்கி விட்டார் இவரது பேச்சு சூனியம் போன்றது பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், கணவன், மனைவி ஆகியோடையே பிரிவினையை உண்டாக்கிவிட்டார் எங்களுக்கு ஏற்பட்ட இந்நிலை உமக்கோ உமது கூட்டத்தினருக்கோ ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் நாங்கள் பயப்படுகிறோம். நீங்கள் அவரிடம் எதுவும் பேசவும் வேண்டாம் எதையும் கேட்கவும் வேண்டாம்” என்று அவருக்கு அறிவுரைக் கூறினார்கள்.
- துஃபைல் கூறுகிறார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! தொடர்ந்து இவ்வாறே மக்காவாசிகள் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்ததால் நபி (ஸல்) அவர்களின் எந்தப் பேச்சையும் கேட்கக் கூடாது அவரிடம் அறவே பேசவும் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களின் பேச்சைக் கேட்டுவிடுவோமோ என்ற பயத்தில் பள்ளிக்குச் செல்லும்போது எனது காதில் துணியை வைத்து அடைத்துக் கொள்வேன்.
- நான் ஒருமுறை பள்ளிக்குச் சென்றபோது கஅபா அருகே நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நானும் சென்று நின்று கொண்டேன். அவர்களது சில பேச்சை நான் கேட்டே ஆகவேண்டுமென்று அல்லாஹ் நாடிவிட்டான் போலும். அவர்களிடமிருந்து மிக அழகிய பேச்சைக் கேட்ட நான், எனக்குள் “எனது தாய் என்னை இழக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் திறமைமிக்க புத்திசாலியான கவிஞன். நல்லது எது? கெட்டது எது? என்று எனக்கு மிகத் தெளிவாகவே தெரியும். அப்படியிருக்க அவர் கூறுவதைக் கேட்காமல் இருக்க எது என்னைத் தடை செய்ய முடியும்? அவர் நன்மையைக் கூறினால் நான் ஏற்றுக் கொள்வேன். அவர் கெட்டதைக் கூறினால் நான் விட்டுவிடுவேன்” என்று மனதிற்குள் சமாதானம் கூறிக் கொண்டேன்.
- சிறிது நேரத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்கு சென்றவுடன் நானும் அவர்களது வீட்டிற்குச் சென்றேன். நான் இந்த ஊருக்கு வந்தது, மக்கள் என்னிடம் எச்சரித்தது, காதில் துணியை வைத்து அடைத்துக் கொண்டது, பிறகு குர்ஆன் ஓதியதைக் கேட்டது என அனைத்துச் செய்திகளையும் விரிவாகக் கூறி, உங்கள் மார்க்கத்தைப் பற்றி எனக்கு எடுத்துக் கூறுங்கள். மேலும், நீங்கள் எனக்கு இஸ்லாமைப் பற்றி விளக்குங்கள் எனக் கூறினேன். அவர்கள் எனக்கு இஸ்லாமைப் பற்றி விளக்கி குர்ஆனையும் ஓதிக் காட்டினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டியதை விட அழகானதையோ, நீதமானதையோ நான் கேட்டதில்லை. உடனே நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். மேலும், “நபியே எனக்கு எனது கூட்டம் கட்டுப்படுவார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைப்பேன். எனவே, அல்லாஹ் எனக்கு ஒரு அத்தாட்சியைத் தரவேண்டும் என துஆ செய்யுங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக பிரார்த்தனையும் செய்தார்கள். பிறகு நான் மக்காவிலிருந்து புறப்பட்டேன்.
- நான் எனது கூட்டத்தாருக்கு அருகாமையில் சென்றபோது, அல்லாஹ் எனது முகத்தில் விளக்கைப் போன்று ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தினான். நான் “அல்லாஹ்வே! எனக்கு வேறு ஓர் இடத்தில் இதை ஏற்படுத்துவாயாக! மக்கள் இதைப் பார்த்து இது தண்டனையால் ஏற்பட்டது என்று கூறிவிடுவார்கள் என நான் பயப்படுகிறேன்” என்று வேண்டியவுடன் அந்த ஒளி எனது கைத்தடிக்கு மாறிவிட்டது. நான் எனது தந்தையையும், எனது மனைவியையும் இஸ்லாமின் பக்கம் அழைக்கவே அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள். சிறிது தாமதித்த எனது கூட்டத்தாரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள்.
- இவர் கந்தக் யுத்தம் (அகழ் போர்) நடந்து முடிந்தபின் தங்களது கூட்டத்தால் எழுபது அல்லது எண்பது குடும்பங்களுடன் மதீனாவிற்கு ஹிஜ்ரா செய்து வந்தார். இஸ்லாமிற்காக மாபெரும் தியாகங்களைச் செய்த அன்னார் யமாமா போரில் எதிரிகளால் கௌ;ளப்பட்டார். (இப்னு ஹிஷாம்)
- 5) ழிமாத் அஸ்தீ: இவர் யமனிலுள்ள அஜ்து ஷனாஆ கிளையைச் சேர்ந்தவர். இவர் மந்தித்துப் பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்தார். இவர் மக்காவிற்கு வந்தபோது அங்குள்ள மூடர்கள் “முஹம்மது பைத்தியக்காரர்” என்று கூறக் கேட்கவே நான் அவரைச் சந்தித்து அவருக்கு மந்தித்தால் அல்லாஹ் என் கையால் அவருக்கு சுகமளிக்கலாம் என்று தனக்குள் கூறிக்கொண்டு நபி (ஸல்) அவர்களை சந்தித்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் “முஹம்மதே! நான் ஷைத்தானின் சேட்டைகளிலிருந்து மந்திப்பவன். உனக்கு மந்தித்துப் பார்க்கவா?” என்று கேட்கவே, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
- “நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! நாங்கள் அல்லாஹ்வை புகழ்கிறோம். அவனிடமே உதவி தேடுகிறோம். அவன் நேர்வழி காட்டியோரை வழி கெடுப்பவர் யாரும் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டுவிட்டவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை. அவனுக்கு இணையானவர் எவருமில்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன். நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையும் அவனது தூதருமாவார் என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று மொழிந்தார்கள்.
- இதைக் கேட்ட ழிமாத் “நீங்கள் சொன்ன வாக்கியங்களை எனக்குத் திரும்பச் சொல்லுங்கள்” என்று கூறவே, நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அவருக்கு இதைக் கூறினார்கள். அதற்கு அவர் “நான் ஜோசியக்காரர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் பேச்சையெல்லாம் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கூறிய வாக்கியங்களைப் போன்று இதற்குமுன் நான் ஒருபோதும் கேட்டதில்லை இவை எவ்வளவு கருத்தாழமுள்ள வாக்கியங்களாக இருக்கின்றன் உங்களது கையைக் கொடுங்கள் நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு உங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறேன்” என்று கூறி, நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
ஆறு மேன்மக்கள்
நபித்துவத்தின் பதினோறாவது ஆண்டு கி.பி. 620 ஜூலை ஹஜ்ஜுடைய காலத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணி சில புதிய நல்ல இளஞ்செடிகளைக் கண்டது. அந்த இளஞ்செடிகள் வெகு விரைவில் நிழல் தரும் அடர்த்தியான மரங்களாக மாறின. அதன் நிழல்களின் கீழ் முஸ்லிம்கள் அநியாயம் மற்றும் கொடுமைகளின் அனலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இவ்வாறே சிறிது சிறிதாக வரலாற்றுப் பாட்டை மாறிக்கொண்டே சென்றது.
மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களை பொய்ப்பித்து வந்ததாலும் அல்லாஹ்வின் வழியிலிருந்து மக்களைத் தடுத்து வந்ததாலும் நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பகலில் சந்திக்காமல் இரவில் சந்தித்து வந்தார்கள்.
ஓரவு அபூபக்ர், அலீ (ரழி) ஆகியோருடன் மக்களை சந்திப்பதற்காக வெளியே சென்ற நபி (ஸல்) அவர்கள் துஹல், ஷைபான் ஆகியோர் தங்கியிருக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களிடத்தில் இஸ்லாமைப் பற்றி பேசினார்கள். அப்போது அபூபக்ருக்கும் துஹல் கிளையைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் மிக அழகிய உரையாடலும், அற்புதமான கேள்வி பதில்களும் நடைபெற்றன. ஷைபான் கிளையினர் நல்ல ஆதரவான பதில்களை கூறியபோதும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. (ஸீரத்துர் ரஸூல்)
அடுத்து நபி (ஸல்) மினாவில் ‘அகபா’ என்ற இடத்திற்கு சென்றபோது அங்கு சில ஆண்களின் பேச்சுக் குரல் கேட்டவுடன் அவர்களிடம் சென்று பேச விரும்பினார்கள். அவர்கள் கஸ்ரஜ் கிளையாரைச் சேர்ந்த மதீனாவில் உள்ள ஆறு இளைஞர்களாவர்.
அவர்கள்,
1) அஸ்அது இப்னு ஜுராரா (நஜ்ஜார் குடும்பம்)
2) அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (நஜ்ஜார் குடும்பம்)
3) ராஃபிஃ இப்னு மாலிக் (ஜுரைக் குடும்பம்)
4) குத்பா இப்னு ஆமிர் இப்னு ஹதீதா (ஸலமா குடும்பம்)
5) உக்பா இப்னு ஆமிர் இப்னு நாபி (ஹராம் இப்னு கஅப் குடும்பம்)
6) ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆப் (உபைத் இப்னு கனம் குடும்பம்)
மதீனாவாசிகளுக்கும் யூதர்களுக்கும் சண்டை மூளும்போது “கடைசி காலத்தில் ஒரு நபி வருவார். அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம்” என்று அந்த யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள். இவ்வாறு யூதர்கள் கூறுவதை பலமுறை மதீனாவாசிகள் கேட்டிருந்தனர். எனவே, இப்போது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தியபோது அவர்களை அறிந்து கொள்வது மதீனாவாசிகளுக்கு மிக எளிதாக இருந்தது. (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்கள் அந்த வாலிபர்களிடம் சென்று “நீங்கள் யார்?” என்று வினவ அவர்கள் “நாங்கள் கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “யூதர்களின் நண்பர்களா?” என்று கேட்க, அவர்கள் “ஆம்!” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் “என்னுடன் சற்று அமரமாட்டீர்களா? நான் உங்களிடம் பேச வேண்டும்” என்று கூற அவர்கள் “சரி! பேசலாம்” என்று கூறி, நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்தார்கள். அவர்களுக்கு இஸ்லாமின் உண்மையையும் அதன் அழைப்பையும் விரிவாக எடுத்துக் கூறி, அல்லாஹ்வின் பக்கம் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆனையும் ஓதிக் காண்பித்தார்கள். அதற்கு அவர்களில் சிலர் சிலரிடம் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த நபியை வைத்தே யூதர்கள் உங்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தனர். எனவே, அவர்களுக்கு முன்னதாக இவன் அழைப்பை ஏற்று நீங்கள் முஸ்லிமாகி விடுங்கள்” என்று கூறினார்கள்.
இஸ்லாமைத் தழுவிய இந்த வாலிபர்கள் மதீனாவின் அறிஞர்களாக விளங்கினர். பொதுவாக மதீனாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போர்களால் மதீனாவாசிகள் மிகவும் நலிந்து போயிருந்தனர். நபி (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று மனங்கள் ஒன்றிணைந்தால் ஒருக்கால் இப்போர் முடிவுக்கு வரலாம் என்று அவர்கள் ஆசைப்பட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் “எங்களது கூட்டங்களில் இருக்கும் பகைமை மற்றும் தீமையைப் போன்று வேறு எந்தக் கூட்டத்திலும் இருக்காது. அல்லாஹ் உங்கள் மூலமாக அவர்களை ஒன்று சேர்ப்பான். நாங்கள் அவர்களிடம் சென்று உங்கள் மார்க்கத்திற்கு அவர்களை அழைப்போம். நாங்கள் ஏற்றுக் கொண்ட உங்கள் மார்க்கத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவோம். அல்லாஹ் உங்கள் முன்னிலையில் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து விட்டால் அவர்களிடம் உங்களைவிட கண்ணியத்திற்குரியவர் எவரும் இருக்க முடியாது” என்றனர்.
இவர்கள் மதீனாவுக்கு இஸ்லாமிய அழைப்பை எடுத்துச் சென்றார்கள். அங்கு மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபி (ஸல்) அவர்கள் பற்றியே பேசப்பட்டது. (இப்னு ஹிஷாம்)
(இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மதீனாவாசிகளை அன்சாரிகள் (உதவியாளர்கள், ஆதரவாளர்கள்) என்று குர்ஆனிலும் நபிமொழியிலும் கூறப்படுகிறது.)
ஆயிஷாவை மணமுடித்தல்
மிஃராஜ்
மேற்கூறிய சூழ்நிலையில் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒருபுறம் வெற்றி, மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்று கொண்டிருந்தது. நம்பிக்கை நட்சத்திரங்கள் வெகு தூரத்தில் மின்னத் துவங்கின. அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயணம் நடைபெற்றது. இதையே இஸ்லாமிய வரலாற்றில் “மிஃராஜ்” என அறியப்படுகிறது.
மிஃராஜின் நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பதில் பல கருத்துகள் உள்ளன.
1) நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் தப்ரி ஆமோதிக்கிறார்கள்)
2) நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் நவவியும் இமாம் குர்துபீயும் உறுதிப்படுத்துகிறார்கள்)
3) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27வது இரவில் நடைபெற்றது.
4) ஹிஜ்ராவிற்கு 16 மாதங்களுக்கு முன், அதாவது நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்றது.
5) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டு, இரண்டரை மாதங்களுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.
6) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் நடைபெற்றது.
இந்த கருத்துகளில் முதல் மூன்று கருத்துகள் சரியல்ல. ஏனெனில், அன்னை கதீஜா (ரழி) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில்தான் இறந்தார்கள். அன்னார் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன் மரணித்து விட்டார்கள். தொழுகை மிஃராஜில்தான் கடமையாக்கப்பட்டது. ஆகவே, மேற்கூறப்பட்ட முதல் மூன்று கருத்துகள் சரியானவையாக இருக்க முடியாது. அடுத்த மூன்று கருத்துகளில் எந்த கருத்து மிக ஏற்றமானது என்பதற்குரிய சரியான சான்றுகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அத்தியாயம் “இஸ்ரா”வின் கருத்துகளை நன்கு ஆய்வு செய்யும்போது ‘மிஃராஜ்’ சம்பவம் மக்கா வாழ்க்கையின் மிக இறுதியில்தான் நடைபெற்றது என்பது தெரியவருகிறது.
இந்நிகழ்ச்சியின் விளக்கங்களை ஹதீஸ் (நபிமொழி) கலையின் வல்லுனர்கள் விரிவாகக் கூறியிருப்பதை இங்கு நாம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்:
இப்னுல் கய்” (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை “புராக்” என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். ‘புராக்’ எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.
பிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல்க தவைத் திறக்கக் கோரவே அவர்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார்கள். அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில் நல்லோர்களின் உயிர்களை நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பித்தான். அவ்வாறே கெட்டவர்களின் உயிர்களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான். பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.
அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி வரவேற்றார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார்கள். “நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவன் சமுதாயத்தில் சொர்க்கம் செல்பவர்கள் எனது உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு இப்றாஹீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
பிறகு ‘ஸித்ரதுல் முன்தஹா“”விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பழங்கள் ஹஜர் நாட்டு பானைகளைப் போன்றும், அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன. பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும், பிரகாசமும், பல நிறங்களும் சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது. அல்லாஹ்வின் படைப்பினங்களில் எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து பைத்துல் மஃமூருக்கும்” அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார்கள். ஒருமுறை நுழைந்தவர்கள் மீண்டும் அங்கு வருவதில்லை.
பிறகு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர்க்கத்தின் மண் கஸ்தூயாக இருந்தது. பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார்கள்.
பிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார்கள். (சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர்கள் நெருங்கினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குப் பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கினான்.
அவர்கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர்களை சந்தித்தார்கள். மூஸா (அலை) “தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்” என்று கேட்க நபி (ஸல்) “ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்” என்று கூறினார்கள். மூஸா (அலை) “நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார்த்தார்கள். ஜிப்ரீல் “நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார்கள். அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக் குறைத்தான்.
திரும்பும்போது மூஸா (அலை) அவர்களைச் சந்திக்கவே அவர்கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற, நபி (ஸல்), அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான். மூஸா (ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்) அவர்களுமோ “நான் எனது இறைவனிடம் திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன். என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்று விடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து “நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு இலகுவாகும் ஆக்கிவிட்டீர்கள்” என்று கூறினான். (ஜாதுல் மஆது)
மிஃராஜில் நபி (ஸல்) அல்லாஹ்வை பார்த்தார்களா? என்பதில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்று இப்னுல் கய்” (ரஹ்) கூறியபிறகு. இது விஷயத்தில் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் கருத்துகளையும் மற்ற அறிஞர்களின் கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார். இப்னுல் கய்” (ரஹ்) இது விஷயத்தில் செய்திருக்கும் ஆய்வின் சுருக்கமாவது:
“நபி (ஸல்) அல்லாஹ்வை கண்கூடாக பார்க்கவில்லை. அவ்வாறு எந்த நபித்தோழரும் கூறவுமில்லை” என்பதாகும். ஆனால், இப்னு அப்பாஸ் (ரழி) மூலம் இரு அறிவிப்புகள் வந்துள்ளன. ஒன்று நபி (ஸல்) அல்லாஹ்வைப் பார்த்தார்கள். இரண்டாவது, நபி (ஸல்) அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள். எனவே, மற்ற நபித்தோழர்களின் முடிவுக்கும் இப்னு அப்பாஸின் கருத்துக்குமிடையில் முரண்பாடு இல்லை. ஏனெனில், அல்லாஹ்வை நபி (ஸல்) பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவது உள்ளத்தால் பார்த்ததையே குறிப்பிடுகிறார்கள். மற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வை நபி (ஸல்) பார்க்கவில்லை என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை கண்ணால் பார்க்கவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகும்.
தொடர்ந்து இப்னுல் கய்” (ரஹ்) கூறுகிறார்: அத்தியாயம் நஜ்மில் ‘இறங்கினார், பின்னர் நெருங்கினார்’ என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கம் என்பது ஜிப்ரீல் நெருங்கியதையும் அவர் இறங்கியதையும் குறிக்கிறது. இவ்வாறுதான் ஆயிஷா, இப்னு மஸ்வூத் (ரழி) ஆகியோரும் கூறுகிறார்கள். குர்ஆனின் இவ்வசனத்தின் முன் பின் தொடரும் இக்கருத்தையே உறுதிபடுத்துகிறது. ‘மிஃராஜ்’ தொடர்பான ஹதீஸில் வந்துள்ள ‘தனா ஃபததல்லா’ என்பது அல்லாஹ் நெருங்கியதைக் குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பற்றி ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஸித்ரத்துல் முன்தஹாவிற்கு அருகில் அவர் அவரைப் பார்த்தார் என்று ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் உள்ள வசனம் நபி (ஸல்) வானவர் ஜிப்ரயீலை அங்கு பார்த்ததையே குறிப்பிடுகின்றது. நபி (ஸல்) ஜிப்ரயீலை அவரது முழு உருவத்தில் இருமுறை பார்த்தார்கள். ஒன்று பூமியிலும், மற்றொன்று ஸித்ரத்துல் முன்தஹாவிற்கு அருகிலுமாகும். (இத்துடன் இப்னுல் கய்ம்மின் கூற்று முடிகிறது.) (ஜாதுல் மஆது. மேலும் விவரங்களுக்கு பார்க்க, புகாரி 1:50, 455, 456, 470, 471, 481, 545, 550. 2:284. முஸ்லிம் 1:91-96)
நபி (ஸல்) அவர்களின் இருதயம் இப்பயணத்திலும் பிளக்கப்பட்டது என்று சில அறிவிப்புகளில் வந்துள்ளது. மேலும், இப்பயணத்தில் நபி (ஸல்) பலவற்றைக் கண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு பாலும், மதுவும் வழங்கப்பட்டது. நபி (ஸல்) பாலை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதற்கு “நீங்கள் இயற்கை நெறிக்கு வழிகாட்டப்பட்டீர்கள். நீங்கள் மதுவை எடுத்திருந்தால் உங்களது சமுதாயத்தினர் வழிகெட்டிருப்பார்கள்” என்று கூறப்பட்டது.
ஸித்ரத்துல் முன்தஹாவின் வேலிருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ளரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும். நீல், ஃபுராத் நதிகளை நபி (ஸல்) பார்த்தது, ‘இவ்விரு பகுதிகளிலும் இஸ்லாம் பரவும்’ என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாக இருக்கலாம். (இரகசியங்களை அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.)
நரகத்தின் காவலாளியைப் பார்த்தார்கள். அவர் சிரிப்பதே இல்லை. முகமலர்ச்சியும் புன்முறுவல் என்பதும் அவரிடம் காணமுடியாத ஒன்று. அவரது பெயர் மாலிக்.
மேலும், சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள்.
அனாதைகளின் சொத்துகளை அநியாயமாகப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய உதடுகள் ஒட்டகங்களின் உதடுகளைப் போன்று இருந்தது. அம்மிக் குழவிகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அவர்களது வாயில் தூக்கி எறியப்படவே அது அவர்களின் பின் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது.
வட்டி வாங்கி வந்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களது வயிறு மிகப் பெரியதாக இருந்ததால் அவர்கள் தங்களது இடங்களிலிருந்து எந்தப் பக்கமும் திரும்ப சக்தியற்றவர்களாக இருந்தனர். ஃபிர்அவ்னின் குடும்பத்தாரை நரகத்தில் கொண்டு வரப்படும்போது அவர்கள் இவர்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள் இவர்களை மிதித்தவர்களாகச் செல்வார்கள்.
விபசாரம் செய்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களுக்கு முன் கொழுத்த நல்ல இறைச்சித் துண்டும் இருந்தது. அதற்கருகில் துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான மெலிந்த இறைச்சித் துண்டும் இருந்தது. அவர்கள் இந்த துர்நாற்றம் வீசும் இறைச்சித் துண்டையே சாப்பிடுகின்றனர். நல்ல கொழுத்த இறைச்சித் துண்டை விட்டுவிடுகின்றனர்.
பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.
நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது. அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீரை அருந்திவிட்டு மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள். அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), காலையில் மக்களுக்கு இப்பிரயாணக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை என்பதற்குரிய மிகப்பெரியஆதாரமாக அமைந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
இப்னுல் கய்” (ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். “உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)
மக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக் கூறியபோது அபூபக்ர் (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களை ‘சித்தீக்’ (வாய்மையாளர்) என்று அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)
இந்த வானுலகப் பயணம் நடைபெற்றதற்குரிய மகத்தான காரணத்தைப் பற்றிக் கூறும்போது மிக சுருக்கமாக “நாம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே” என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன் அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறு பவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)
இது நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியாகும். பல இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்திருக்கிறான்.
இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம். (அல்குர்ஆன் 6:75)
நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றி,
(இவ்வாறு இன்னும்) நம்முடைய பெரியஅத்தாட்சிகளை உங்களுக்கு நாம் காண்பிப்போம். (அல்குர்ஆன் 20:23)
என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏன் அத்தாட்சிகளைக் காண்பித்தான் என்பதற்கு “அவர் நம்மை உறுதிகொண்டவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காக” என்ற காரணத்தைக் கூறுகிறான். இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்ததால் அவர்களது உள்ளத்திலிருந்த நம்பிக்கை மேன்மேலும் உறுதியடைந்தது. ஆகவே தான், அல்லாஹ்வின் பாதையில் பிறரால் சகித்துக்கொள்ள முடியாததை இறைத்தூதர்களால் சகித்துக்கொள்ள முடிந்தது. உலகத்தின் எவ்வளவு பெரியசக்தியாயினும் ச. அது கொசுவின் இறக்கைக்குச் சமமாகவே அவர்களிடம் இருந்தது. சிரமங்களும் துன்பங்களும் எவ்வளவுதான் அவர்களுக்கு ஏற்பட்டாலும், அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
இப்பயணத்தில் மறைந்திருக்கும் ஞானங்களையும் இரகசியங்களையும் மார்க்க சட்டங்களின் இரகசியங்களை பற்றி விவரிக்கும் நூல்களில் காணலாம். எனினும், இப்பயணத்தில் பல உண்மைகளும் யதார்த்தங்களும் நிறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்:
இந்த வானுலக பயண சம்பவத்தைப் பற்றி மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் 17:1-ல் மட்டும்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இந்த ஒரு வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்களில் யூதர்களின் கெட்ட செயல்கள் மற்றும் குற்றங்களைப் பற்றி அல்லாஹ் விரிவாகக் கூறுகிறான். அதன் இறுதியில் இந்தக் குர்ஆன்தான் மிகச் சரியான வழிகாட்டுகின்றது என்று கூறுகிறான். இவ்வசனங்களை ஓதுபவர் மிஃராஜ் சம்பவம், யூதர்களின் அநியாயங்கள், குர்ஆனைப் பற்றிய புகழ்ச்சி, இவற்றுக்கிடையில் என்ன தொடர்பிருக்கிறது என யோசிக்கலாம். ஆம்! உண்மையில் ஆழமான தொடர்பிருக்கிறது. அதன் விளக்கமாவது:
முஹம்மது (ஸல்) நபியாக அனுப்பப்படுவதற்கு முன் யூதர்கள்தான் மனித சமுதாயத்தை வழிநடத்தும் பொறுப்பை வகித்தனர். ஆனால், அவர்கள் செய்த அநியாயங்களின் காரணமாக அப்பொறுப்புக்கு தகுதியற்றவர்களாக ஆகிவிட்டனர்.
எனவே, அவர்களிடமிருந்து அந்தத் தகுதியை அல்லாஹ் தனது தூதருக்கு அதிவிரைவில் மாற்றப்போகின்றான். நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய இஸ்லாமிய அழைப்புப் பணியின் இரு மையங்களான மக்காவையும், ஃபலஸ்தீனையும் நபி (ஸல்) அவர்களுக்கு ஒருங்கே அருள இருக்கின்றான் மோசடி, குற்றம், வரம்பு மீறுதல் ஆகியவற்றையே தங்களது குலத்தொழிலாகக் கொண்ட சமூகத்திடமிருந்து ஆன்மிக வழிகாட்டலின் தலைமைத்துவத்தை பறித்து நன்மைகளையே நோக்கமாகக் கொண்ட சமுதாயத்திற்கு அல்லாஹ் அருள இருக்கின்றான் என்பதை நபி (ஸல்) அவர்களை மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்நிகழ்ச்சி உறுதி செய்தது.
மக்காவின் தெருக்களிலும் மலை ஓரங்களிலும் விரட்டியடிக்கப்பட்டு கண்ணியமிழந்து சுற்றி வரும் ஒருவருக்கு இந்தத் தலைமைத்துவம் எப்படிக் கிடைக்கும்? அதாவது, இஸ்லாமிய அழைப்புப் பணியின் முதல் கட்டமான இந்த சிரமமான காலம் வெகு விரைவில் முடிந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய காலக்கட்டம் தொடரப்போகிறது என்பதையே நபி (ஸல்) அவர்களின் இந்நிகழ்ச்சி குறிப்பிடுகிறது. இதையே பின்வரும் வசனங்களும் உறுதி செய்கின்றன. அவ்வசனங்களில் அல்லாஹ் இணைவைப்பவர்களை மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் எச்சரிக்கை செய்கிறான்.
ஓர் ஊரை (அவ்வூரான் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நாம் ஏவுகிறோம். அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம்முடைய வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.
நூஹுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவன் உதவியும் தேவையில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:16, 17)
இதுநாள்வரை நிராகரிப்போருக்கு அவகாசம் தரப்பட்டது. அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்த அநீதிகளை அல்லாஹ் பொறுத்து வந்தான். ஆனால், இனியும் அவர்கள் இத்தகைய தவறுகளிலிருந்து விலகாவிட்டால் அல்லாஹ் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பான் என்ற எச்சரிக்கை மேற்கூறிய வசனத்திலிருந்து தெரியவருகின்றது.
இதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்திற்கு அடிப்படையான கொள்கைகள், ஒழுக்கங்கள், கலாச்சாரங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறான். முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தனி நாட்டையும் அதிகாரத்தையும் கொடுக்கும்போது அவர்களது சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையெல்லாம் அல்லாஹ் கூறுவது போன்றே இருக்கின்றது. மேலும், வெகு விரைவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தையும், உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியை விரிவாக்குவதற்கு ஒரு மையத்தையும் அல்லாஹ் தர இருக்கிறான் என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது.
இந்தக் காரணங்களின் அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயண நிகழ்ச்சி மக்கா வாழ்க்கையின் இறுதியில் நடைபெற்றது. இதுவே ஏற்றமான, சரியான சொல் என்று நாம் கூறுகிறோம். அகபாவில் நடைபெற்ற முதல் ஒப்பந்தத்திற்கு முன் அல்லது முதலாவது இரண்டாவது ஒப்பந்தங்களுக்கிடையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பின்வரும் பக்கங்களில் அந்த ஒப்பந்தங்களின் விவரங்களைப் பார்ப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDelete